Monday, April 27, 2009

குதிரைகள்-இறுதி பாகம்-மாய ஜால கதை




குதிரைகள்..பாகம் -1-




இனி...... குதிரைகள் - இறுதி பாகம்


”ஆம்..எங்கள் தலையை வெட்டினால் நாங்கள் ராஜகுமாரர்களாகி விடுவோம்.நாங்கள் மனிதர்களாவது உன் கையில்தான் உள்ளது.”

“சற்று விளக்குங்கள்”

“நாங்கள் குதிரைகள் அல்ல.இந்த தேச மன்னன் பாரி பாண்டியனின் ஏழு மகன்கள்.அண்ணன் தம்பிகள்.ஒரு சாபத்தால் குதிரைகளாகி விட்டோம்.எங்களின் தங்கைதான் உனக்காகக் காத்திருக்கும் சூரியகாந்தி.”

“யார் சாபத்திற்குள்ளானீர்கள்?”

“ஒரு சமயம் வேட்டையாடுவதற்கு புற நகர் காட்டிற்கு சென்றோம்.இளைப்பாறுவதற்கு ஒரிடத்திற்க்கு சென்றோம்.அங்குதான் அந்த கிழவியைப் பார்த்தோம்.எங்களை நன்றாக உபசரித்தாள்.ஆனால் அவளையே கேலி செய்து பேசினோம். அது எங்களின் வாய் கொழுப்பு.அவள் கோபம் கொண்டு எங்களை சபித்து குதிரைகளாக்கி விட்டாள்.”

கொஞ்சம் இடைவெளி விட்டு பேச ஆரம்பித்தது.

”அவள் ஒரு மந்திரக்காரி.சூன்யம் தெரிந்தவள். கெஞ்சினோம்.கதறினோம்.அவள் மசியவில்லை.இந்த புல்லையும் கொள்ளையுமா தின்பது..கடைசியில் எல்லோரும் அவள் காலில் வ்ழுந்தோம்.கிழவி கொஞ்சம் மசிந்தாள்.”

”நீங்கள் புல்லையும் கொள்ளையும் திங்க வேண்டாம்.நான் உங்களுக்கு மனிதர்கள் போல் அறுசுவை உணவு படைத்துப் போடுகிறேன்.உங்களுக்குப் பிடித்த தேனில் ஊறிய பலா பழம் மற்றும் நான்கு காய்கறிகளில் சமைத்த உணவு தினமும் இங்கு இருக்கும் மர வேலைப்படு செய்த குடுவைகளில் வைக்கிறேன்.தினமும் அரணமனையிலிருந்து வந்து சாப்பிட்டு விட்டு மாலையில் போய் விடுங்கள்.நாங்கள் எங்கள் விதியை நொந்துக் கொண்டு தலையாட்டினோம்.

ஆனால் ஒவ்வொரு நிமிடமும் எங்கள் உள்ளுணர்வு நாங்கள் மனிதர்கள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தது.”


”உங்கள் தந்தைக்கு தெரியுமா நீங்கள்தான் குதிரைகளாகிவிட்டீர்கள் என்று?”


”தெரியும்.அவரும் எங்களுக்காக எல்லாவற்றையும் செய்து பார்த்தார். பாதி ராஜ்ஜியத்தையே கிழவிக்கு கொடுக்கச் சம்மதித்தார்.ஆனால் கிழவி ஒப்புக்கொள்ளவில்லை. சாபத்தை எடுக்கவில்லை.உன் சொந்த முயற்சியால் எடு என்றாள். அப்பாவும் மனம் உடைந்து போனார்.இது ஏதோ மூதாதையர் செய்த பாவம் என்று எண்ணி வருந்தினார்.நாங்களும் யாராவது காப்பாற்ற வருவார்களா என்று தினமும் கடவுளைக் கேட்போம்.ஏமாந்து போவோம்.அடுத்து எங்களை காப்பாற்ற வரும் மனிதர்களை இந்த கிழவி ஏமாற்றி விரட்டி விடுவாள்.நீதான் எங்கள் ரட்சகன்.ஆபத் பாந்தவன்.உன் கையிலதான் எல்லாம் இருக்கிறது.”

“என்ன செய்ய வேண்டும்.”

“ எங்கள் தலைகளை வெட்டி எங்கள் நடு முதுகில் வைக்க வேண்டும்.தலைகள் கிழே விழுந்தவுடன் நாங்கள் ராஜகுமரார்களாகி விடுவோம்.”

“ஓ... இதுதான் அந்த கிழவி சொன்ன சொந்த முயற்சியா?”

“ஆமாம் சுட்டி..எங்கள் அப்பா காலில் விழுந்து அந்த கிழவியிடம்...கேட்டிறிந்தார்.” 

சுட்டி எல்லாம் மனதில் வாங்கிக்கொண்டு சிறிது நேரம் 
யோசித்தான்.

“நான் தலையை இங்கு வெட்டப் போவதில்லை.”

“ஐய்யோ...என்ன சுட்டி... இப்படிச் சொல்லி விட்டாய்..என்ன 
காரணம்”

“இங்கு நாம் எதையுமே செய்யக் கூடாது.சூன்யகாரி கிழவி பதிலுக்கு ஏதாவது செய்து ம்மை நாசம் செய்து விடுவாள்.நீங்கள் புசிக்கப் போகும் உணவு வகைகளில் சிலவற்றை
நான் இந்த குடுவையில் எடுத்து வைத்துக் கொள்கிறேன். மன்னரிடம் காண்பித்து நிருபிக்க வேண்டும் மீதி உணவை உங்களோடு நான் பகிர்ந்து மாலைவரை 
ஓய்வெடுக்கிறேன்..மாலை உங்களுடன் பிரயாணம் செய்து 
அரண்மனையை அடைந்து மன்னரிடம் பேசிவிட்டு விடிகாலையில் தலைகளை 
வெட்டுகிறேன்.”

“சுட்டி நீ ரொம்ப புத்திசாலி..நல்ல யோசனை..”

மாலை குதிரைகள் புறப்பட்டன.அவனும் ஒரு குதிரையின் மேல் ஏறிக் கொண்டான்.அரண்மனையை நெருங்கும்போது மன்னர் மேல் மாடத்திலிருந்து பார்த்தார். என்றுமில்லாத ஒரு மகிழ்ச்சி மனதில் கொள்ளை கொண்டது.

அவசரமாக அவையை கூட்டினார்.சுட்டியை வர வழித்தார்.எல்லோரும் ஆர்வமாக இருந்தார்கள்.குடுவையை காட்டினான்.அதில் தேனில் ஊறிய பலா பழம் மற்றும் நான்கு காய்கறிகளில் சமைத்த உணவு இருந்தது. மன்னன் நம்பினார்.எல்லோருக்கும் அவன் மேல் நம்பிக்கை வந்தது.”

“இதை எடுத்துக்கொண்டு போய் குதிரைகளுக்கு கொடுங்கள்” கட்டளையிட்டார் மன்னர்.

“வேண்டாம்.. மன்னா..வேண்டாம்...காரணத்தை நாளை காலையில் சொல்கிறேன். இன்றிரவு என்னை குதிரை லாயத்தில் தங்க அனுமதியுங்கள். லாயத்தை விடிகாலையில்தான் திறக்க வேண்டும்.உங்கள் புதல்வர்கள் “தந்தையே” என்று அழைப்பார்கள். அப்போதுதான் நீங்கள் எழ வேண்டும்.அப்போது லாயத்தைத் திறக்கலாம்.என்னை நம்புங்கள்.”

மன்னர் ரொம்ப குழம்பிப் போனார்.ஒரு பக்கம் சந்தோஷமும் மறு புறம் அவநம்பிக்கையும் மனதில் குடியேறியது. அமைச்சர் மன்னரின் ஆறுதல் கூறி காதில் ஏதோ சொன்னார்.மன்னர் மனம் நிம்மதியடைந்தது. லாயத்திற்க்கு பலத்த காவல் போட்டார்.

சுட்டி குடுவையை கட்டிக்க்கொண்டு தூங்குகையில் நடு இரவில் திடுக்கிட்டு எழுந்தான்.
குதிரைகள் அந்த குடுவையில் உள்ள உணவைச் சாப்பிட முயன்றது.

“நிறுத்துங்கள்...சாப்பிடாதீர்கள். இது விஷம்.”

குதிரைகள் அதிர்ந்தன்.அவன் பேச்சைக் கேட்டு சாப்பிடாமல் விட்டன.அவன் தூங்க ஆரம்பித்தான். 

விடிகாலை வானில் ஒரு நட்சத்திரம் உதயமாகியது. குதிரைகள் முடி சிலிர்க்க ஆரம்பித்தது. சுட்டி இதயம் அடித்துக்கொண்டது. ஐய்யோ குதிரைகள் கிளம்பி விடக் கூடாதே.மின்னல் வேகத்தில் தங்க வாளை எடுத்தான்.ஒவ்வொன்றின் தலையையும் வெட்டி அதனதன் நடு முதுகில் வைத்தான். குருதி கொட்ட ஆரம்பித்தது.ஏழு ராஜகுமாரர்களும் தங்களுடைய சுய ரூபத்தை அடைந்து சுட்டியை கட்டிக்கொண்டார்கள்.

“நன்றி...நன்றி...சுட்டி...வா போகலாம்.....”அரண்மனைக்கு விரைய ஆரம்பித்தார்கள்”

“பொறுங்கள்... ஒரு வேலை பாக்கியிருக்கிறது.அதை நீங்கள்தான் செய்ய வேண்டும்.ஓடும் குருதியில் இந்த குடுவையில் உள்ள உணவை தூக்கிப் போடுங்கள்”

அந்த குடுவையை எடுத்தான்.

உணவை எடுத்துப் போட்டார்கள்.”அய்யோ...அம்மா...அய்யோ... உடம்பெல்லாம் எரிகிறது செத்தேன்..செத்தேன்....”சூன்யகாரியின் குரல் நாராசாரமாக 
ஒலித்தது.கிழவி எரியும் நெருப்பினூடே தெரிந்து உருகி 
மறைந்தாள். லாயம் சுத்தம் ஆயிற்று.பொழுது புலர்ந்தது.அன்றைய பொழுது மக்களுக்கு ரொம்பவும் வித்தியாசமாக மனதில் பட்டது.

”சுட்டி....நீ எப்படி கண்டுப்பிடித்தாய்....அந்த குடுவையில் விஷம் இருக்கிறதென்று?”

”நாம் திரும்பும் வழியில் அந்த கிழவி ஒரு பாறையின் மேல் நின்று பார்த்து விட்டாள்.அவளுக்கு ரொம்ப அதிர்ச்சியாகப் போய் விட்டது.அவள் மனதிற்குள் கருவியது என் உள்ளுணர்வு உணர்ந்துக்கொண்டது. உடனே வெளியுணர்வு மூலமும் உறுதிப் பட்டது.”

“எப்படி..?”

”அந்த குடுவை திடீரென்று கொதித்தது.சிறிது புகை வந்தது.உங்களுக்கு சொல்ல கூடாதென்று வேண்டுமென்றே தவிர்த்தேன்.அடுத்து உங்களுக்குக் கொடுக்கக் கூடாது என்றும் அப்போதே முடிவெடுத்தேன்.”.

சுட்டியின் சிந்தனைத் திறனை வியந்து வாயடைத்துப் போனார்கள் அரசகுமாரர்கள்.அவ்னைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்தார்கள்.
வெளியே வந்து வரிசையாக நின்றார்கள்.ஒரு சேர “தந்தையே” என்று அழைத்தார்கள்.குடும்பம் சேர்ந்தது. மகிழ்ச்சி கரைப் புரண்டோடியது.

பாரி பாண்டியன் நாடு விழா கோலம் பூண்டது.தேவலோக ஊர்வசியை ஒத்த பேரழகி சூரிய காந்தி ஓவ்வொரு அங்கமும் மின்னலடிக்க கையில் மணமாலை ஏந்தி சுட்டி என்கிற சுந்தரவதனனுக்கு மாலையிட்டாள்.அவர்கள் மேல் பூமழை பொழிந்தது.

                                                      சுபம் 


மறக்காம ஓட்டுப் போடுங்க

படிக்க ஒரு சிறுகதை:- 





                               


Saturday, April 25, 2009

”அயன்” விமர்சனம் -ரொம்ப லேட்


“அயன்” என்ன அர்த்தம்? பிரம்மா என்று அர்த்தம். சுசீந்திரத்தில் 

தாணுமாலயன் சுவாமி என்ற கோவில் இருக்கிறது.தாணு +மால்+அயன்  தாணு =சிவன், மால்(திருமால்)=விஷ்ணு அயன் = பிரம்மா. பிரம்மா என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் வந்து விட்டது.தமிழ் பெயர் இல்லையே. சன் பிக்சர்ஸ் அதனால் பிரச்சனை இல்லை.இதில் சூர்யா பிரம்மாவா? தெரியாது ஆனால் தேவனாக வருகிறார்.





”பர்மா பஜார் பரமசிவம்” அல்லது ”ஒரு கடத்தல்காரனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்” என்று வைத்திருக்கலாம்.பட ஆரம்பத்தில் கேரக்டர் அறிமுகம்,சிறிது நேரத்தில் கதைக்கு உள்ளே வந்து ஒரு முடிச்சு விழுதல் ,இண்டர்வெல் அப்புறம் கதையை நகர்த்தி அந்த முடிச்சை அவிழ்த்தல் இல்லாமல் இந்த படம் சம்பவங்களாகப் போய்க்கொண்டிருக்கிறது.




அந்த சம்பவங்களை அசத்தல் கேமராவோடு லாஜிக்கோடு சொல்லியிருக்கிறார்கள்.படத்தில் காட்சிகள் விறு விறு.out and out action packed film.தெளிவு.காட்சிகள் நடக்கும் இடம்,கேமரா,லொகேஷன் சூப்பர்.ஆனால் கதை?விஜய் டீவியில் வெள்ளி இரவு சைனீஸ் அல்லது ஜப்பான் அதிரடிப் படங்கள் வரும்.அது ரொம்ப சீப்.அதேதான் அயன்.. ஆனால் சூப்பர் குவாலிடி.கதாபாத்திரங்கள் அதனதன் இயல்பு நிலையிலேயே காட்டப்படுகிறது. 


காங்கோ நாட்டில் நடைபெறும் சண்டை காட்சி சூப்பர்.கெளபாய் பட ஞாபகம் வருகிறது.


நடிப்பில் நிற்பவர் சூர்யாவின் நண்பனாக வரும் ஜெகன்.அடுத்து சூரியா.நாளுக்கு நாள் நடிப்பு மெருகேறுகிறது.அந்த தேவர் மகன் மீசை போலீஸ்...ஏதோ ஒரு படத்தில் போலீஸ் கெட்டப்பை போட்டவர்தான் இன்னும் கழட்டவில்லை. பிரபுவுக்கும் நல்ல ரோல்.வில்லன் ஒகே.அவர் பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் முக ஜாடை.


தமன்னா 45.5kg வாழைத்தண்டு உடம்பை வைத்துக்கொண்டுக் கொல்றாண்ணா!



சூரியா தமன்னா காதல் குறும்புகள் கலக்கல்.






படத்தில் காமெடி ஏர்போர்ட் கஸ்டம்ஸ் ஆபிசர் பொன்வண்ணன் சூர்யாவிடம் ”சொப்பு” வைத்து குழந்தை மாதிரி திருடன் போலீஸ்விளையாடுவது.அடுத்த காமெடி இவர்களெல்லாம் யாரிடமும் மாட்டாமல் இருப்பது.தொழிலில் இவ்வளவு சம்பாதிக்கும் சூர்யா ஏன் ஏழையாய் இருக்கிறார்.




இசை ஹாரிஸ்..”பல பல” பாட்டுக்கு தியேட்டர் அதிருகிறது.”நெஞ்சே நெஞ்சே” பாட்டு நல்லாருக்கு. ஆனால் அதில் வரும் prelude கிடார் இசை அப்பட்டமான காப்பி.ராஜாவின் பாட்டு “விடிய விடிய நடனம்”  படம் “இதயத்தை திருடாதே” மற்ற பாடல்கள் வழக்கமான ஊளை.சுமார்.படத்தின் பின்னணி இசை கொடுமை.




மொத்ததில் ”அயன்” கதையில்லாமல் சம்பவங்களை விறு விறுப்பாகச் சொன்ன படம்.




படிக்க திரில்லர் கதை:-














Thursday, April 23, 2009

குதிரைகள்.. பாகம் - 3 ..மாயா ஜால கதை





இனி குதிரைகள்.........  பாகம் -3-


கிழவியின் அருகே போனான்.தோற்றம் பீதியை கிளப்பிற்று.


“வா...மகனே....வா...மகனே... “இரு கையையும் தூக்கி பரிவாகக் கூப்பிட்டாள்.தலை நரைத்து கண்கள் இடுங்கி எலும்புக்  கூடாக காட்சியளித்தாள் கிழவி.கழுத்தில் ஒரு சங்கு மாலை அணிந்திருந்தாள்.

”மடியில் உட்காரு” குடுவையில் இருந்த தண்ணிரைத் தெளித்தாள்.தன் முந்தனையால் மட்டியின் முகத்தைத் துடைத்தாள்.தண்ணீர் குடித்தான்.பிறகு பழசாறு பருகினான்.கொஞ்சம் தெம்பு வந்தது. உடம்பு முழுவதும் குளிர் தண்ணீரால் துடைத்து விட்டாள்.தலை முடியை கோதிவிட்டு தன் கட்டைச் சீப்பால் வாரி விட்டாள்.தென்றல் காற்று வருட ஆரம்பித்தது.கண்கள் சொருக ஆரம்பித்தது.

“பூலோக ரம்பை சொப்பன செளந்திரி சூரியகாந்தி உன்னை தங்க தாம்பாளத்தில் பொற்காசுகளை ஏந்தி வந்து கைப்பிடிப்பாள்.”பாட்டி அவனை காது நுனியை வருடியபடி சொன்னாள்.

சூரியகாந்தி தங்க தாம்பாளத்தில் பொற்காசுகளை ஏந்தியபடி வர மட்டி சொர்க்கத்தின் நுனியில் மிதந்தப் படியே தூங்கிப் போனான்.

திடிரென்று குதிரையின் குளம்பொலி கேட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்தான்.புழுதிப் படலம் கண்ணை மறைத்தது.தூசி விலக்கிப் பார்த்தான். அந்த ஏழு குதிரைகள் ஒடிக்கொண்டிருந்தன.ஆனால் எதிர் திசையில் ஓடிக்கொண்டி
-ருந்தன.மட்டிக்குத்தெரியவில்லை.கிழவி சிரித்தாள்.

“போடா... போ மகனே பின் தொடர்ந்து ஓடு.. போ.. போனால் அரண்மனையை அடைந்து விடலாம்.”




”ஐய்யோ.... மாலை ஆகி விட்டதா?  குதிரைகள் திரும்பி விட்டதா?” மன்னரிடம் இருந்த பயத்தில் கொஞ்சம் புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது.

“ இப்ப ...என்ன செய்வது .... பாட்டி?”

”கவலைப் படாதே. மன்னரை ஏமாற்ற ஒரு தந்திரம் சொல்லித் தருகிறேன்.கொஞ்சம் மலைப் புல்லையும், குடுவையில் அருவி நீரையும் தருகிறேன்... இவை இரண்டும் வேறு எங்கும் கிடைக்காது.மன்னரிடம் காட்டு. இதை மேய்வதற்க்கும் பருகுவதற்க்கும்தான் இங்கு வருகின்றன் என்று சொல்... நம்பி விடுவான்”. கண்கள் இடுங்கி சிரித்தாள்.மட்டி பயந்தான்.

“அப்படியே செய்கிறேன் பாட்டி” கிளம்பினான். இருட்டி விட்டது.

அரண்மனையை நெருங்கும் போது ஓடியபடி மூச்சு வாங்குவது போல் நடித்துக்கொண்டே ஓடினான்.

“என்ன... கண்டு பிடித்து விட்டாயா?”மன்னர் கேட்டார்.

”கண்டு பிடித்து விட்டேன் மன்னா. அதன் மீது பரிதாபப்பட்டு காலை ஒடிக்காமல்... பின் ஓடி கண்டு பிடித்து விட்டேன். எனக்கு பிராணிகளிடம் அன்பு உண்டு”

”அதற்க்கு பதிலாக உன் கால் ஒடிந்தது போல் ஓடியிருக்கிறாய்...ரத்தக் கறைகள் இருக்கிறதே. சரி..அந்த ஏழு குதிரைகள் எங்கே போகின்றன?”

 புல்லையும் அருவித் தண்ணிரைக் காட்டினான். எல்லோரும் சிரித்தார்கள்.மன்னன் மந்திரி காதில் ஏதோ சொன்னான். உடனே மந்திரி வேலையாட்களிடம் கட்டளையிட்டான். சில நிமிடங்களில் இதே மாதிரி ஒரு 40 குடுவைகளும் புல் கட்டுகளும் ஒரு தள்ளு வண்டியில் வந்தது. 
மட்டி அதிர்ச்சியானான்.

”உன் காதலி ... அந்த சொப்பன சுந்தரி பாட்டி உனக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததா?  பார்த்தாயா...அவளுக்கு எவ்வளவு காதலர்கள்”

மன்னர் கண்கள் சிவந்தது.ஆணையிட்டார்.சவுக்கில் உப்பும் மிளகாயும் தடவி தாம்பாளத்தில் வேலையாட்கள் கொண்டு வந்தார்கள்.
                                                   _____________

மட்டியின் அண்ணன் வெட்டி அடுத்துப் புறப்பட்டான்.மட்டி சொன்னது எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.முதல் நாள் இரவே ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.


விடியற்காலை கண் விழித்தான்.அந்த ஏழு குதிரைகளும் காட்டாறு வேகத்தில் வந்து கொண்டிருந்தன.மரத்தை நெருங்கும் சமயம் தொப்பென்று குதித்து ஒரு குதிரையின் மேல் உட்கார்ந்து அதன் கழுத்தை இறுக கட்டிக்கொண்டு அட்டைப் போல் ஒட்டிக் கொண்டான்.காடு,மலை,அருவி,ஆறு என்று தலைத்தெறிக்க குதிரைகள் ஓடியது. குதிரைகள் தங்கள் இலக்கை நெருங்கும் சமயம்........

 ”தம்பி......” என்ற குரல் கேட்டு திரும்பினான்.கைப்பிடி தளர்ந்து வழுக்கி கிழே விழுந்தான். உடம்பெல்லாம் சிராய்ப்பு. “ஐய்யோ...அம்மா “ என்று வலியில் கத்தினான்.அங்கே அந்த கிழவி நின்றுகொண்டிருந்தாள்.

மட்டிக்கு செய்தாற் போல் எல்லா செயலகளும் அன்பாக அவனுக்கும் செய்தாள்.அவனுக்கு ஒரு குதிரை கொடுத்து, “இதில் சவாரி செய்து....அந்த ஏழு குதிரைகளைக் கண்டு பிடி.” என்றாள்.

அவள் சொன்னபடி அதில் வேகமாக சவாரி செய்தான்.பாதி வழியில் திடிரென்று கனைக்க ஆரம்பித்தது.உயரம் குறைந்து கழுதையாக மாறியது.அதற்குள் மாலையாகி குதிரைகள் அரண்மனையை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தன.கிழவி எதிரில் வந்து சிரித்தாள். 

மட்டிக்கு செய்த மாதிரியே இவனுக்கும் மலைப்புல்லும்,அருவி தண்ணீரும் கொடுத்து மன்னரைப் பார்க்கச் சொன்னாள்.அரண்மனையை அடைந்தான்.

“என்ன கண்டு பிடித்து விட்டாயா?”மன்னர் கேட்டார்.

புல்லையும், குடுவையில் உள்ள அருவி நீரையும் காட்டி “இதற்குத்தான் அங்கு வருகிறது” என்றான்.

“சரி...லாயத்தில் உள்ள அந்த ஏழு குதிரைகள் பசியோடு உள்ளன. போய் கொடு” 

இவன் அங்கே போய் வைத்ததும் குதிரைகள் முன்னங்கால்களை தூக்கி எட்டி உதைத்தது.

இவனுக்கும் சவுக்கில் உப்பும் மிளகாயும் தடவி தாம்பாளத்தில் வேலையாட்கள் கொண்டு வந்தார்கள்.

                                           ___________________

அடுத்து மூன்றாவது மகன் புத்திசாலி சுட்டி புறப்பட்டான்.இவன் ஒரு மாதமாகவே எல்லா விதமான உடற் பயிற்சிகளும் செய்து தயார் நிலையில் இருந்தான். அடுத்த நாள் விடியலில் குதிரைகள் புழுதிக்கிளப்பி பறந்தது.சுட்டியும் மின்னல் வேகத்தில் துரத்தினான்.அவன் கண்களுக்கு அந்த ஏழு குதிரைகள்தான் தெரிந்தது. 

அரண்மனையின் எல்லையை குதிரைகள் கடந்து வெகுதூரத்தில் போனதும்....”தம்பி...... இங்கே வர்...முகம் துடைத்து, கைகால்கள் கழுவி,இளைப்பாறி விட்டு போ...”
” மன்னிக்க வேண்டும் பாட்டி....எனக்கு நேரமில்லை....” விர்ர்ரென்று பறந்தபடியே பேசி மறைந்தான். மனம் தளராமல் துரத்திக்கொண்டேயிருந்தான்.


ஒரு திருப்பத்தில் சிங்கம் ஒன்று ஆக்ரோஷத்தோடு இவனை துரத்த ஆரம்பித்தது. இவன் கழுத்தை கவ்வுவதற்க்கு தோதாக இவனுடைய பக்கவாட்டில் ஒடி வந்து
நெருங்கியது.சிங்கத்தின் கால்களைப் பார்த்து ஒரு உதை விட்டான்.தடுமாறி சின்னபின்னமாகப் புறண்டு வெறியுடன் கர்ஜித்தது.”வா...மகனே..வா...மகனே’
இளைப்பாறி விட்டு போ.. விருந்தாளியை கவனிக்காமல் அனுப்பி விட்டனே” கர்ஜித்து முடித்து பாட்டியாக மாறி முடியாமல் படுத்துக் கொண்டாள்.

ஓடிக்கொண்டிருந்த வேகத்திலேயே ஒரு வெள்ளை குதிரை அவனை திரும்பிப் பார்த்து”போய் அந்த கிழவியிடம்...இளைப்பாறி விட்டு வா.... அவள் ஒரு தேவதை”

“முடியாது...எனக்கான தேவதை அரண்மனையில் இருக்கிறாள்...”துரத்தினான்.

”நீதான்....தேவ புருஷன்...எங்கள் தங்கைக்கு சரியான மணவாளன்....இலக்கை அடைந்து விட்டாய்....வா ...என் முதுகில் ஏறிக்கொள்” என்றது ஒரு சாம்பல் வர்ண குதிரை.

“தங்கையா?” வியந்துக்கொண்டே முதுகின் மேல் ஏறினான்.

”ஆம்...சொல்கிறேன். எங்களை சாபத்திலிருந்து காப்பாற்றப் போகிறாய்.. 

வெகுதூரம் ஓடி மற்ற ஆறுகுதிரைகளுடன் சேர்ந்துக்கொண்டது.ஆறு குதிரைகளையும் கிட்டத்தில் பார்த்தான்.தேவலோக குதிரைகள் போல் வீர்யமாக இருந்தது.ஒவ்வொன்றும் பிடரி முடி சிலிர்த்தபடி காற்றில் மிதந்தவாறு பயணித்தன. குளம்பொலி சத்தம் சங்கிதமாக ஒலித்தது.பார்க்க ரம்யமாக இருந்தது.

இதெல்லாம் மங்களகரமான நிமித்தமாகத் தோன்றி வெற்றி இலக்கை அடையும் நேரம் வந்து விட்டதாக மனதில் பட்டது.

எல்லா குதிரைகளும் ஒரு குகையின் முன் வந்து நின்றது.கலைந்து ஒரு வரிசை அமைத்தது.மீண்டும் கலைந்து வேறொரு வரிசை அமைத்தது.எல்லாம் முன்னாம் கால்களைத் தூக்கி கனைத்தன.முதல் குதிரை குகையில் நுழைய மற்ற குதிரைகளும் தொடர்ந்தது.சுட்டியும் பின் நடந்தான்.உள்ளே ஒரு வட்டமான பெரிய அறை இருந்தது.

அங்கும் குதிரைகள்  கலைந்து கலைந்து வரிசை அமைத்து கனைத்தபடி இருந்தது.ஒருமூத்த குதிரை “வருக...வருக என எங்கள் ராஜகுமாரனை வரவேற்கிறோம்" என்றது.

“சுட்டி...அதோ தெரியும் அந்த தேக்கால் செய்தப் பெட்டிக்குள் உள்ள தங்க வாளை எடு”

“நான் எழுப்பிய கேள்விக்கு இது வரை நீங்கள் யாரும் பதில் கூறவில்லை”

“என்ன கேள்வி?” 

“உங்கள் தங்கை”

“அந்த தங்க வாளால் எங்கள் தலையை வெட்டினால் எல்லா பூர்வகதையும் தெரிந்து விடும்”

“வெட்டுவதா?’
                                                  தொடரும்.............





மறக்காம ஓட்டுப் போடுங்க







Wednesday, April 22, 2009

ஹைக்கூக்கள்...ஹைக்கூக்கள்... கவிதை

தினசரிவாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightningஅனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப் படுத்துவதுதான் ஹைகூ.ஒரு நேரடி அனுபவம்.
          
                       அதிரும் கணினி திரை
                        செல் அழைப்பில்
மனைவி


                        மீன் பாடி வண்டி
ஐஸ் கட்டிகளிடையே
                        பிணம்

                        பிளாட் லிஃப்டில் பயணிக்கையில்
                        சிந்துஜாவின் (Door No.14)
                        வாசனை
                 
பிணத்தின் புது வேட்டி
                        சட்டையை உருவும்
                        வெட்டியான்


                         திடீர் மின்னல்
                         மேகத்தில் தெரிந்த
                         யானை
     
படிக்க பழைய ஹைகூக்கள்:-

Tuesday, April 21, 2009

அடுத்த சந்தில் திரும்பினேன் - கவிதை
















ஸ்கூட்டர்காரனை
பின் தொடர்ந்து
வரும் என்னை
நொடிக்கொருதரம்
விழி உருட்டி தொடர்ந்து
என் கண்களையே
உற்றுப் பார்க்கிறது
இந்த சுசிலா புரோட்டீன்ஸ்
கடை கோழிகள்
திரும்பி சடாரென்று
அடுத்த சந்தில்
நுழைந்து விட்டேன்
தெரிந்து விட்டது
இவைகளுக்கு 
சற்று முன் எடுதத
85வது தடவை சத்தியம்
சாப்பிடப்போவதில்லை
இனிமேல் அசைவம்

Monday, April 20, 2009

ஜானகி,சுசிலா,வாணிஜெயராம்...பேச்சு

தமிழ் திரைப் படங்களில் பல பாட்டுக்கள் பாடி ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர்கள் ஜானகி,சுசிலா,வாணி
ஜெயராம்...மூவர் குரலும் இனிமையானது. தேன். 
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டைப்பான குரல். 
மறக்க முடியாத பாடல்கள் பாடியுள்ளார்கள்.

இவ்வளவு இனிக்கும் இவர்களின் பாட்டுக் குரல், 
பேசும் போது அவ்வளவு நன்றாக இருக்காது. டீவி 
பேட்டிகளில் இவர்களின் பேச்சுக் குரல் இனிமையாக 
இல்லையே ஏன்? அதுவும் ஜானகியின் பேச்சுக் குரல்
கர்ண கடூரமாய் இருக்கும் ஏன்? அது தவிர ஜானகி, 
சுசிலா பேச்சில் ஆந்திர வாடை வீசும். (”MSVவீ சாரூஊ 
பாட்ட கேட்டு சபாஷ் அன்னாரு”) (”ஓர் வாட்டி ஹை 
பிட்ச்லோ ).வாணி ஜெயராம் & சித்ரா பேச்சுக் குரலும் 
சுமார்தான்.

(வயதாகிவிட்டது என்ற காரணம் இல்லை.இவர்களின் 
இளமைப் பருவ பேச்சுக்குரலும் அப்படித்தான்)

பாடும்போது(false voice) பொய் தொண்டையில் பாடு-
வார்களோ?

SPB யின் பேச்சு & பாட்டு இரண்டுமே நன்றாக இருக்கும்.
தெலுங்கில் மொழி மாற்ற படங்களுக்கு டப்பிங் குரல் 
கொடுக்கிறார்.

சினிமாவில் தமிழ் தெரியாத நடிகைகளுக்கு குரலாக 
அருமை + இனிமையான டப்பிங் குரல் கேட்டுள்ளோம். 
இந்த இனிமையான குரலுடைய டப்பிங் கலைஞர்களை 
பாடச்சொன்னால் எப்படி இருக்கும்?. 

இனிமையாக இருக்குமா? உல்டாவா?(நன்றாக இருக்காது?)

படிக்க கவிதை:-



குதிரைகள்.. பாகம் -2 - மாயஜால கதை





இனி பாகம் - 2

”எவ்வளவு சன்மானம்?” கேட்டான் ஒருவன்.


3000 பொற்காசுகள்.... பிறகு...ஊர்வசி, தேவதை..சூர்யகாந்தி 
கரம் பிடித்து.... சொர்க்கம்தான் ” சொன்னான் தமுக்கடிப்பவன்,.
எல்லோர் இளைஞர்கள் கனவிலும் சூர்யகாந்தி கையில் 
தாம்பளம் ஏந்தி இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க 
நடந்து வந்தாள்.

ஆனால் அடுத்த நிமிடம்அடிவயிற்றில் திகிலும்பிடித்தது.
குதிரையை எங்கு போய் தேடுவது?என்ன நடக்குமோ?.திரும்ப 
வருவோமா?ஏதாவது சாபத்தால் கல்லாய் மாறி விட்டால்?

அது ஒரு ஏழை தொழிலாளியின் வீடு.அவருக்கு. மூன்று 
மகன்கள்.மூத்தவன் மட்டி.சோம்பேறி.முட்டாள்.
இரண்டாமவன் வெட்டி.கொஞ்சம் புத்திசாலி,ஆனால் 
வெட்டியாக ஊர் சுற்றுவான். மீதி வேளையில் சாப்பிடுவான், 
தூங்குவான்.கடைக்குட்டிப் பெயர் சுட்டி.புத்திசாலி.வெட்டு 
என்றால் கட்டிக்கொண்டு வருவான். முன்யோசனை,தைரியம் 
உடையவன்.அழகன். இவர்களுக்கு உண்மையான பெயர்கள் 
இவைகள் அல்ல. இவர்களின் குணாசியத்தால் ஊரார் 
வைத்தப்பெயர்கள்..







காலையில் எழுந்தான் மட்டி.தொடையையும், தோள்களையும் தட்டியபடி அரண்மனைக்குப் போனான்..அவையில் போய்
நின்றான். எல்லோரும் சிரித்தார்கள். மன்னரும் சிரிப்பை 
அடக்க முடியாமல் அடக்கி

“குதிரைகள் எங்கு போகின்றன... என்ன செய்கின்றன... 
மர்மத்தை எப்படிக் கண்டுபிடிப்பாய்?”

“குதிரையின் கால்களை ஒடித்து விடுவேன்...பிறகு மெல்ல 
ஓடும்.பின் ஓடிக் கண்டுபிடித்து விடுவேன்.”

அவையில் “கொல்”என்ற சிரிப்பு.மன்னனுக்கு சிரிப்பால வயிறு வலித்தது.

’கண்டுப்பிடிக்க விட்டால். என்ன தண்டனைத் தெரியுமா?.உப்பும் மிளகாய் பொடியும் தடவிய சவுக்கால் 200 கசையடிகள்....”.

”மன்னா ...எப்படியும் கண்டுப்பிடித்துவிடுவேன் ....
திருமணத்திற்க்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யுங்கள்”

அவையில் மறுபடியும் சிரிப்பு.

”போ... போ....போய் தேடு. உன் தலை விதியை மாற்ற முடியாது”.

தொடையையும், தோள்களையும் தட்டியபடி வெளியேறினான். 

மறு நாள் விடிகாலையில் உடம்பு முழுவதும் எண்ணெய் 
தடவிக் கொண்டு குதிரை லாயத்தின் வாசலில் காத்திருந்தான்
மட்டி..

வானத்தில் விடியலில் சில நட்சத்திரங்கள் தோன்றின.உடனே 
குதிரைகள் கனைத்தன்.ஆக்ரோஷமாக கால்களால் நிலத்தைக் 
கீறின.சில குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கியபடி ஒரு 
வினோத ஊளையிட்டது.மட்டி மிரண்டான். கட்டுக்கள் 
அறுந்தது.லாய தடுப்பு இரும்புகளின் சங்கலிகள் தானகவே 
அவிழ்ந்தது.புழுதி பறக்க ஒட்டத்தைத் தொடங்கின.

மட்டியும் அவற்றின் பின் தலைத் தெறிக்க ஓடினான்.புழுதி 
உடம்பு முழுவதும் அப்பிக்கொண்டது. கண்களிலும் தூசி 
ஏற ஆரம்பித்து திசை தெரியவில்லை.வேறு திசையில் 
ஒடிக்கொண்டிருந்தான்.

அடிக்கடி தடுக்கி விழுந்தான் .முட்டிகளில் ரத்தம்.வியர்வை 
கொட்டியது.மூச்சு வாங்க ஆரம்பித்தது..ஓட முடியவில்லை.
நின்றபடி மேல் மூச்சு கிழ் மூச்சு வாங்கினான். உடம்பு எலும்புக் 
கூடு ஆகிவிட்ட மாதிரி இருந்தது. குதிரைகளைக் காணவில்லை 
எல்லாம் வெகுதூரம் ஓடி விட்டது. தண்ணி... தண்ணி... என்று 
கத்திக் கொண்டே கிழே விழுந்தான்..

”என்னாச்சு.. உனக்கு ஏன்... தம்பி இப்படி ஒடுற... தண்ணிதானே 
நான் தரேன்..”

ஒரு அசிரீரி குரல் வானத்திலிருந்து.

திரும்பிப் பார்த்தான். அங்கே ஒரு 102 வயது தொண்டு கிழவி 
கையில் ஒரடி நீள கட்டைச்சீப்புடன்.பெரிய பாறையின் மேல் 
நின்றிருந்தாள்.

தொடரும்.........



மறக்காம ஓட்டுப் போடுங்க


Friday, April 17, 2009

குதிரைகள்...குதிரைகள்.. மாயஜால கதை-பாகம் -1

எப்போதோ ஒரு புத்தகத்தில் படித்த மாயஜால கதை. மாயஜால கதைகள் பிடித்தமானது.ரொம்ப பிடித்துப் போய் மனசில் இன்னும் இருக்கிறது.நெடுநாள் மனசில் இருக்க வேண்டும் என்றால் நமக்குப் பிடித்திருக்க வேண்டும்.இது தொடர்கதையாகத்தான் எழுத வேண்டும்.கொஞ்சம் பெரிசு. என்னுடைய முதல் தொடர்கதை முயற்சி

தொடரலாமா? சொல்லுங்கள். Hello! Followers & others..... Please tell me....

இனி கதை.............




                                                           
ரொம்ப தூரத்தில் குதிரைகளின் குளம்பொலி சத்தம் கேட்டது.குதிரைகளின் காலடியில் எழுந்த புழுதிப் படலம் பெரிதாக எழுந்து வானத்தில் படர்ந்தது. குதிரைகள் பேய் வேகத்தில் ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு ஒடிக் கொண்டிருந்தது.எதையும் லட்சியம் செய்யாமல் ஒடின.உலகத்தின் கடைசி எல்லைதான் இதன் இலக்கு என்பது மாதிரி.எதிரில் தடுக்க வந்தால் பிரிந்துச் சிதறி ஒடுகின்றன.

மொத்தம் ஏழு குதிரைகள்.

இது பாரி பாண்டியன் ஆளுகைக்கு உட்பட்ட மக்களுக்கு தினமும் அதிகாலையில் தென்படும் காட்சி. அதே மாதிரி மாலையிலும் இந்த ஏழு குதிரைகள் திரும்பும் காட்சி.

இவை அரண்மனை லாயத்திலிருந்து அதிகாலையில் புறப்படுகிறது என்று தெரியும். எங்கு போகின்றன்,இடையில் எங்கு தங்குகின்றன,எதற்கு,ஏன் என்பது யாருக்கும் தெரியாது.சில பேர் கூடவே ஓடி களைத்துத் திரும்பி விட்டார்கள்.மேல் ஏறி உட்கார்ந்தவர்கள் கிழே தள்ளப்பட்டார்கள்.மரம், வீடு இவற்றின் மேல் ஏறி பார்த்தாலும் சிறிது தூரத்திற்க்குப் பிறகு கண்ணுக்கெட்டுவதில்லை.

இது மன்னன் பாரி பாண்டியனுக்குத் தெரியும் என்றும் தெரியாது என்றும் மக்கள் ஊகம். புரியாத புதிர்.


ஒரு நாள்...

”டம்டம்டம்...டம்டம்டம்... இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் தினமும் அதி காலையில் அரண்மனை லாயத்திலிருந்து ஒரு ஏழு குதிரைகள் கயிற்றை முரட்டுத்தனமாக அறுத்துக்கொண்டு அசுர வேகத்தில் பறந்து நம் இடத்தை விட்டு எங்கோ போகின்றன. மாலையானதும் திரும்பி சாதுவாக லாயத்தில் போய் நின்று விடுகின்றன.இடையில் என்ன நடக்கிறது?டம்டம்டம்..இது என்ன தெய்வச்செயலா?...டம்டம்டம்..சூன்யமா?....டம்டம்டம்..”

”இந்த மர்மத்தை கண்டுபிடித்தால், கண்டுபிடிப்பவருக்கு தக்க சன்மானமும் அதோடு பேரழிகியான தன் மகள் சூரியகாந்தியை திருமணம் செய்து வைப்பார் நமது மன்னர்  பாரி பாண்டியன்.டம்டம்டம்..” 

                                            தொடரும் ............