Sunday, June 16, 2013

ஆறாவது பூதம்


ஆறாவது பூதம்

ஆகாயத்திலிருந்து
தொப்பென்று விழுந்து
புழுதி கிளப்பி
தொடுவானத்தைக் குத்தியபடி
படுத்திருக்கிறது ஒரு தண்டவாளம்


கூர் முனையில் பிரம்மராட்சஸ்
தலைவிரிக்கோலத்துடன் தோன்றக்கூடும்
கோளங்கள்  தீப்பிடித்து உருண்டு வரலாம்
கடல் கொந்தளித்து ஊழி தாண்டவம்
ஆடலாம்

இது சீரியஸ் கவிதையாகையால்
தமிழ்ப் படகாதலர்கள்
பின்னணி கோரஸ் ஹம்மிங்கூடன்
கைகோத்து வர சாத்தியமில்லை

பலபேர் கண்சுருக்கி
எல்லைவரை பார்த்தார்கள்
சில பேர் தண்டவாளத்தில்
காதுவைத்துப்பார்த்தார்கள்

நெட்டுக்குத்தாக ஏணியாக்கி
சொர்க்கத்திற்கு போகலாமா
யோசித்தார்கள்

இரண்டொருவர்
ஜல்லி கற்களை விட்டெறிந்தார்கள்
கற்கள் திரும்பி வரவே இல்லை

நாட்கள் நகருகிறது
பருவங்கள் மாறுகிறது
யுகங்கள் பிரம்மாண்டமாய் பெரிய நிழல்களுடன்
கடக்கிறது

எதுவும் நடக்கவில்லை

அப்படியே உறைந்துபோய்
ஆறாவது பூதமாகிறது
என் டெஸ்க்டாப்பில்