Friday, September 21, 2012

சற்று முன்பு பார்த்த மினி கதைகள்

ஐந்து மினி கதைகள்


அர்த்தராத்திரில யாருக்குடீ டெடிகேஷன்?-1
டிஸ்கி: படத்திற்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை

நடுநிசியில்(22.40hrs) திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து எழுந்தார் சுப்ரமணியன்.உடம்பு முழுவதும் வியர்த்திருந்தது.டிவியை ஆன் செய்தார்.

ஏதோ ஒரு சேனலில் ஒரு டீன் ஏஜ் பெண்(ரொம்ப ஓவராக இளித்தவிட்டு):”இவ்வளவு நேரம் கலாச்சிட்டேன்.சரி... பாட்ட யாருக்கு டெடிகேட் பண்றேங்க” செல்லமாக கேட்டாள்.

பட்டென்று  டிவியை அணைத்தார்.“சனியன்... நேரம் காலம் கிடையாது.டெடிகேஷனாம்...வெட்டி முண்ட” ஆழ்ந்து தூங்க ஆரம்பித்தார்.” ஏய்..சொட்டை கெழ பாடு! இது ரீபிட் புரோகிராம்.. லைவ் இல்ல.செத்துப்போன உனக்குதான்  டெடிகேஷன்.”மார்பில் குந்தி உட்கார்ந்தபடி கலாய்த்தாள்.

காலையில்  அவர் இறந்திருந்தார்.அவர் வேட்டியில் அங்கங்கு திட்டு திட்டாக ஈரத்துடன் அவரின் ஆண்மை வீர்யம்.


தெரியும் ஆனா தெரியாது -2

மிகமிக பரபரப்பான சிக்னல்.பச்சை விழ இன்னும் 9 வினாடிகள் இருக்கிறது.”இந்த அட்ரஸ் எங்க இருக்கு”.பக்கத்தில் நிற்கும் இரணடு சக்கர ஓட்டுனர்  இவனைக் கேட்கிறார்.பதிலுக்கு இவ்வளவு நீளமான அசட்டுப் புன்னகையை பச்சை விழும்வரை சிக்னலில் காட்டியவன்  இவனாகத்தான் இருக்கும்.

Rear View Mirror - 3

அது ஒரு ரோட் சைட் கார் பார்க்கிங்.அந்த ஏரியா கல்லூரி மாணவன் ஒருவன் ஒரு காரை நோக்கி வருகிறான்.அது அகலமான  Rear View Mirror உள்ள கார்.அதை நேராக்கி குனிந்து அவசர அவசரமாக தலைசீவி மிகமிகமிகமிக அழகாகிக் காத்திருக்க தொடங்குகிறான்.

எதிர்பார்த்தபடி  புன்னகையுடன் அந்த டுயூஷன் போகும் பெண் அந்தக் காரை நெருங்குகிறாள்.கிட்ட வரவர தன் இயல்பான உடல்மொழி செயற்கையாகிறது.செல்போனில் ஏதோ கவனம் செலுத்துவது மாதிரி நடித்து அவனைக் கடக்கிறாள்.அதே புன்னகை ஆனால் செல்லமும் வெட்கமும் கோபமும் கலந்துக்கட்டியாக.

மாணவன் பூரிப்படைந்து மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து தலைசீவி அழகாக்கி கண்ணாடியை மடித்துவிட்டு கிளம்புகிறான்.

அந்தப் பெண் டுயூஷன் முடிந்து திரும்பி அந்த காரை நோக்கி ஒரு புன்னகையுடன் வருகிறாள்.கண்ணாடியை நேராக்கி குனிந்து “வெவ்வவ்வேவே” முகத்தைக் அஷ்ட கோணாலாக்கி அழகுகாட்டிவிட்டு கண்ணாடியை மடித்துவிட்டு நடக்க ஆரம்பிக்கிறாள்.


சொதப்பல் - 4

மேலே உள்ள இரு சிறுகதைகளயும் முதலில் கவிதையாக முயற்சி செய்துவிட்டு கவிதை ஆகாமல் எங்கேயும் எப்போதும் சிறுகதையாகவே ரொம்ப நாள் (40) தோற்றம் கொண்டு பெண்டிங் பைலில் இருந்தது.

எவ்வளவு அடித்தும் கவிதையாக கனியவில்லை.ஒரு உரைநடையை பத்துவாட்டி திருப்பி திருப்பி திருப்பி எழுதினால் அது கவிதையாகிவிடும் என்பது இதற்குப் பொருந்தாது.

பின் குறிப்பு -1:

”Objects in mirror are closer than they appear" என்ற வரியை மனதில் வைத்துக்கொண்டு எப்படியாவது ஒரு கவிதை எழுத வேண்டும் என்கிற பிடிவாதம்தான் காரணம்.

பின் குறிப்பு -2:
”Objects in mirror are closer than they appear"  இந்த வரியை “Rear View..." கதைக்கு கடைசி வரியாக வைத்தால் அப்படியே ஒரு தூக்குதூக்கிவிடும் என்று நண்பர் சொன்னதை  நான் ஏற்கவில்லை.

பிரசாதம் -5

ராதிகா  ரொம்ப டென்ஷனாள்.காரணம் எதிர்வீட்டு தெலுங்குமாமி கொடுத்த பலவித ஷேத்ர சாமி (தெற்கு+வடக்கு) பிரசாதங்கள் கலவையாக.பிரசாதமாக தரப்படவில்லை.மீந்துப் போனது தரப்பட்டிருக்கிறது.பிரிஜ்ஜில் வைக்கப்பட்டது.உள் சாப்பிட உகந்தது அல்ல.

ஒரே ஒரு துளி குங்குமம் மட்டும்  குத்துமதிப்பாக ஒரு சாமியை நினைத்துக்கொண்டு நெற்றியில் இட்டுக்கொண்டாள்.எப்படி டிஸ்போஸ் செய்வது?அஃறினண அல்லது உயர்தினணகளுக்கு தள்ளிவிட மனசாட்சி அனுமதிக்கவில்லை.திருப்பிக்கொடுக்க முடியாது.

ஒரு சுலப வழி இருக்கிறது.ராதிகா என்ன செய்யப்போகிறாள்???தெலுங்கு மாமி கும்பிட்ட எல்லா ஷேத்ரசாமிகளும் ரொம்ப ஆர்வமாக ராதிகாவைக் நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

ரெண்டு வேளையாக பய பக்தியுடன் வாயில் வைத்து முழுங்கினாள்.கடவுள்கள் அதிர்ந்தார்கள்.அடி.. மக்கே! இதற்கும் காலாவதி தேதி உண்டு அதன்படி இது குப்பைத்தொட்டிக்குதான் போகவேண்டும்.தெலுங்கு மாமி சாமிகள் ராதிகாவைத் திட்டினார்கள்.

குங்குமம் இட்டுக்கொள்ளும்போது கூட க்ளூ கொடுத்தேனே என்று
திருப்பாச்சூர் தங்காதளி அம்மன் தன்னை ரொம்ப நொந்துகொண்டாள்.

Thursday, September 6, 2012

நீதானே என் பொன் வசந்தம்-பாடல்கள் ஒரு பார்வை



"நீதானே என் பொன் வசந்தம்" 1982ல் வெளிவந்த "நினைவெல்லாம் நித்யா"படத்தின் ஒரு சூப்பர் மெலடி.இப்படத்தின் பாடல்கள்புது விதமான கிளாசிகல் பரிமாணத்தில் போடப்பட்டு இசை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது.தமிழ்த் திரை இசையில் ஒரு மைல் கல்.

அப்போதேல்லாம் காத்திருந்து காத்திருந்து ரேடியோவில்தான்  என்னால் கேட்க முடியும்.



முப்பது வருடம் கழித்து  இதே பாடலின் டைட்டிலில் கெளதம் இயக்கத்தில் ஒரு படம்.இசை இளையராஜா.கெளதமிடம் ஏன் ராஜா என்றால்“ "My music was defined by Raja Sir" என்கிறார்." I missed the bus ...I could have joined Raja  much earlier but I was very shy of approaching him... I don"t know why" என்றும் சொல்கிறார்.

வாரணம் ஆயிரம் படத்திலேயே ராஜாவின் பாடல்கள் பாடப்பட்டது.


இளைஞர்களின்  கனவு டைரக்டர் ராஜாவுடன் இணைவது எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதுவும் புடபெஸ்ட் இசைக்கலைஞர்களை வைத்து லண்டன் ஸ்டியோவில் ராஜா சூட்டுடன் லைவ் ரிகார்டிங் என்றதும் இன்னும் எதிர்பார்ப்பு எகிறியது.


கடந்த 12 வருடமாக புதிய தலைமுறை(new generation) இயக்குனர்களுடன் சேர்ந்து வேலை செய்வதில்லை.நல்ல கதையோடு வரும் புது  இயக்குனர்களை ஊக்குவிப்பதாக அய்யன்,தாண்டவகோனே,செங்காத்து பூமியிலே,மயிலு,அழகர் மலை போன்ற படங்களும் “ஒன்லைன் ஸ்டோரி யோசிக்கறதுக்கு முன்னமே நீங்கதான் இசைன்னு என் கைல பச்சைக் குத்திக்கிட்டேன்” என்று வரும் இயக்குனர்களுக்கும், இவரை விட்டால் வேற ஆளே கிடையாது என்கிற படங்களுக்கும் (விருமாண்டி,பழசி,நான் கடவுள்,பிதாமகன் நந்தலாலா,ஸ்ரீராமஜெயம்,இவன்,பாரதி)இசையமைத்து வந்தார்.

முதன்முதலாக,  இளையதலைமுறையை கையில் வைத்திருக்கும் மற்றும் ஒரு காதல்கதை அதுவும் ராஜாவின் பழைய படத்தின் டைட்டில் மற்றும் கதாநாயகி பெயர் (நித்யா வாசுதேவன்) தொடர்புடைய கதையின் இசைக்கு ராஜா பொறுப்பேற்கிறார் என்பது ஒரு புது விஷயம்.

எதிர்பார்ப்பு மற்றும் எகிறுவது இருந்தாலும் சில லாஜிக்கான கேள்விகள் இருக்கு.

இசைஞானி இதுவரை போட்டது 5500 மேற்பட்ட பாடல்கள். எவ்வளவு வகையான உணர்ச்சிகள் அதிலும் அரைத்தமாவையே அரைத்த உணர்ச்சிகள்.2000-2012 வரையிலுமே கிட்டதட்ட 65 படங்கள்.கார் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் மாதிரி பலவித கலவைகளில் எல்லா உணர்ச்சிகளுக்கும் பாட்டு போட்டாகிவிட்டது.கட்டம் கட்டமாக தாண்டி வந்து ஒரு காட்டு காட்டியாகிவிட்டது.

இப்போது மீண்டும் ஒரு காதல்கதை.பழையபாடல்களின் சாயல் இருக்காதா? அதே குறுக்கும் நெடுக்கும் பின்னணியிலும் பலவித இசைக்கருவிகளின் பின்னல்களா? அதே  பல்லவிகளா?சரணங்களா?மிச்ச மீதி ஸ்டாக் இருக்கா?

சாயல் வராமல் இருப்பது உலக மகா கஷ்டம்.அதை நிறைய தவிர்க்கிறார் தன் திறமையால்.ஆனாலும் அங்கங்குத் தலைக்காட்டும்.

பாடல்களுக்கு வருவோம்...

”நீதானே என் பொன்வசந்தம்” பாடல்களுக்காக லண்டன் போவதற்கு முன் ஹோம்வொர்க் செய்துவிட்டுதான் போய் இருக்கிறார்.யோசித்தபோது என் கவனத்தில் உதித்தவை:

1.மூன்று பாடல்களில் ராஜா ராஜாவை விட்டு விலகி இசைஅமைத்திருக்கிறார்.ஒரு அன்னியத்தனம் (alien)ஆனாலும் ராஜா மின்னல் அடித்துப் போகிறார்.

2.இது எந்த இசையும் கிடையாது இது உங்கள் இசை என்றபடி இருக்கிறது

4.சிம்பனியை மேக்சிமம் பின்னணியில் தோய்த்துக்கொடுப்பது.

5.துல்லியமான  பளிச் பளிச் சவுண்ட் ரிகார்டிங்.

மற்ற இசை அமைப்பாளர்களின் அடுத்த தலைமுறை பாடல்களாக கடந்த 10-15 வருடங்களாக ஆண் அல்லது பெண் பாடும் பாடல்கள் ஸ்டைல் டச் அல்லது பாப் டச்சோடு வருகிறது.ஆனால் 95% பாடல்கள் ஆத்மா இல்லாமல் பிளாஸ்டிக் உணர்ச்சிகளோடு வந்து பயமுறுத்துகிறது.இசையும் தோதாக இல்லாமல் உறுத்துகிறது.

பின் வரும் ராஜாவின் மெட்டுக்களில் வளைவு நெளிவு மற்றும் ஆத்மா எங்கு வெளிப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளேன்.

மொத்தம் எட்டு பாடல்கள். பாடல்களை பார்க்கலாம்.நா.முத்துக்குமாரின் வரிகள் எனக்குப் பிடித்துவிட்டது.

ராஜாவின் பாடல்களை கேட்கும்போது படிப்படியாக உள்ளே இறங்கி  வாழ்ந்துவிட்டு வெளியே வரவேண்டும்.இசையில் நிறைய புத்திசாலித்தனம் இருப்பதால் அனுபவித்துக் கேட்கவேண்டும்.


முதல் முறை பார்த்த ஞாபகம்:


Hey Goutham!This is new generation  romantic singing...! Have it ! என்கிறது பாடல்கள்.

பாடியவர் சுனிதி செளகான்.என்னை ஆகார்ஷித்து அள்ளிக்கொண்ட பாடல்.மேடம் குரல் அட்டகாசம்.soulful stylish singing! Real stunner from Maestro Raja.

ஒரு விதமான தேவதை பாடல்!பின்னணி இசை விறுவிறு என்று மிளகு குத்தலுடன் திகிலாக போகிறது?காதல் வயப்படுவது மாதிரி உணர்வு.”நீதானே என் பொன் வசந்தம்”  கோரஸ் அழகு சேர்க்கிறது பாட்டிற்க்கு.ஒரே ஒரு நீண்ட சரணம்.முழுமூச்சில் பாடி அசத்துகிறார்.அதுவும் இதற்கு காட்சி எப்படி இருக்கும். இது மேடையில் பாடும் பாடல்?

1980லும் இதே புலம்பல் ஆனால் அடக்கஒடுக்க ஹோம்லி புலம்பல்”தூரத்தில் நான் கண்ட உன் முகம்” (நிழல்கள்).உருமாற்றம்.

எங்கு ஆத்மாவை  (எனக்கு)  வருடுகிறது?

“இதயத்தில் ஏனோஓஓஓஓஓஓஓஓ பாரம்.... விழியினில் ஏனோ ஓஓஓஓஒ ஒரு ஈரம்....”
“ஊடலில் போனது காலங்கள்...தேடலில்.......இல்லையே......அடையாளங்களா”வரிகள் முடிந்து “நீதானே என் பொன் வசந்தம்” கோரஸ் அட்டகாசம்.

பாடல் சடக்கென்று முடிந்துவிடுகிறது.

சற்று முன்பு பார்த்த: பாடியவர் NSK Ramya

சற்று முன்பு பார்த்த ஞாபகம்
காதல் பிரிவு/ஏமாற்றம் அல்லது தொலைந்துபோன காதலை மீட்பது மாதிரி பாடலில் உணர்வு.இதுவும் ஒரு தேவதை பாட்டு(angel singing.) சுனிதியை விட நல்ல உச்சரிப்பு.பழைய சிரிப்பு நடிகர் என் எஸ் கிருஷ்ணனின் பேத்தியாச்சே.

பாடல் சிம்பனியில் பின்னப்பட்டிருக்கிறது.கனவுலகில் மிதக்க வைக்கிறது.போதையான குரல்.படுத்துகிறது.

ஆத்மாவை வருடும் இடங்கள்:

திடுக்கென்று பின்னணி தாளத்துடன்” நெஞ்சம் துடிப்பதும்... மின்னல் அடிப்பதும்”

’தன்னந்தனி காஆஆஆஆஆட்டில் இன்ன்ன்பம் காஆஆஆஆன  வாஆஆஆடா....ஆஆஆ....”

”தொட்டுத் தொட்டுப்பேஏஏஏஏஏஏசும் உந்ந்ந்.......தன் கைஇ இ இ இகள் எங்ங்ங்ங் கேஏஏஏஏஏஏ...” வேறு உலகத்திற்குக் கொண்டுபோய் தொப்பென்று கிழே போடுகிறார்.இரண்டு இடங்களிலும் இசை பின்னிப்பிணைகிறது.

ஷ்ரேயா கோஷால்/சாதன சர்க்கம் இருவரையும் தவிர்த்தது ரொம்ப சந்தோஷம். இந்த பீல் சத்தியமாக வராது.

இரண்டு பாடல்களிலிருந்தும் மீண்டு வருவதற்கு கொஞ்ச நேரம் ஆகிறது.

காற்றைக் கொஞ்சம்:
ஆரம்ப ஹம்மிங்கே காற்றோடு பிரயாணம் செய்யும் உணர்வு.தாமரைக்கொடி மற்றும் மலையாள கரையோரம் பாடல்களின் தென்றலும் விசுகிறது.ராஜாவின் அட்டகாசமான இசைக்கோர்வை

ஆத்மா:

(முதல் சரணம்) சாத்தி வைத்த வீட்டில் ..தீபம் ஏற்றி வைக்க நீ வா வா ..மீதி வைத்த .......... பேசி தீர்க்கலாம்.. ” (இரண்டாவது சரணம்)என்னை இன்று மீட்கத்தான் ...உன்னை...”

இரண்டாவது இடைஇசையில் வரும் ஹம்மிங்கும் புல்லாங்குழலும்...ரம்யம்.

என்னோடு வா வா:
இந்தப்பாட்டு யூத்துகளின் செல்லப்பாட்டு ஆகிவிட்டது.கார்திக்கின் மென்மையான ஸ்கூல் பையன் குரலில் ரொம்ப சிநேகமாக இருக்கிறது. ராஜாவிற்கு இதெல்லாம சர்வ சாதாரணம்.”என்னோடு .... வா வா என்று....போகமாட்டேன் “ என்று முடித்தவுடன் புறப்படும் கோரஸ் வயலின்/சிந்த் மற்றும் முதல் சரணம் வரும் வரை இசை சூப்பர்.

ஆத்மா:

”சின்னப் பிள்ளை போல நீயும் ,... என்னைவிட யாரும்.... செல்ல கேட்டுக்கொண்டால்”

சொல்லி அடித்திருக்கிறார் மேஸ்ட்ரோ!

சாய்ந்து ...சாய்ந்து:

இதுவும் சிம்பனியில் தோய்க்கப்பட்ட இனிமையான சிம்பிள் மெலடி.யுவன் பாடுவதை என்னால் ரசிக்க முடியவில்லை.அதனால் மனவாடு பாட்டான ஏதி ஏதி (Yeto Vellipoyindi Manasu)(ஷான் - ரம்யா) கேட்டேன்.அதில்மோகனம் கிளாசிகல் டச் இருக்கிறது.தமிழில் வேறு டச் வருகிறது.இரண்டாவது இடையிசை வெஸ்டர்ன் கிளாசிகள் அட்டகாசம்.


கேட்க கேட்க மனதிற்கு நெருக்கமாகிறது.


பெண்கள் என்றால்:
என்னப்பா இது ரஹ்மான் பாட்டை ஏன் யுவன் பாடுகிறார் என்று திடுக்கிட செய்கிறது.இது நம்ம ஏரியா இல்லையே.”என்னடி மீனாட்சி”பாட்டின் 2012 வெர்ஷன்??.ரஹ்மானை யுவன் இமிடேட் செய்வதை விடவேண்டும்.எவ்வளவு பாடகர்கள் இருக்கிறார்களே. ஏன் யுவன்?

வானம் மெல்ல:
வித்தியாசமான மிகவும் மென்மையான மெலடி.அற்புதம்.ராஜா பாடுவதால் ஏறகனவே கேட்ட மாதிரி இருக்கு.பின்னணி இசை மாய உலகத்திற்கு கொண்டு போகிறது.Bela Shindeவும் நன்றாக பாடி இருக்கிறார். ஆனால் குரல் சில இடங்களில் கீச்சிடுகிறது.

“தென்றல் வந்து தீண்டும் போது” பாட்டை வேறு மெட்டில் பாடுவது மாதிரி ஒரு பீலிங்?


கேட்க கேட்க மனதிற்கு நெருக்கமாகிறது.

புடிக்கல மாமு:

ராக் அண்ட் ரோல் பாணியில் அமர்க்களமாக ஆரம்பம்.சுரஜ் ஜகன் குரல் அற்புதமாக இருக்கிறது.குத்துப்பாட்டு ஸ்பெஷலிஸ்ட்???இவருடன் கார்த்திக்கும் பாடுகிறார். முதல் பாதி ஒரு மாதிரி மெலடி& ரிதம் அடுத்த பாதி வேறு மாதிரி மெலடி&ரிதம்

டெயில் பீஸ்: எந்த படம் பாட்டு ரிலீஸ் ஆனாலும்  ”எண்பதுகள்  பாடல் பீலிங் மாதிரி வராதுங்க.ராஜா அதை மீட்க வேண்டும்” என்று ஒரு கோஷ்டி சொல்லிக்கொண்டிருக்கிறது.

இப்படி பேசுவது வன்முறை.எப்படி முடியும்? 1980க்கு வயது இன்று 32.அதெல்லாம் ராஜாவின் பொக்கிஷங்கள்.

நான்  பதிலுக்கு 1960 பீலிங்கை மீட்டு எடுக்க வேண்டும் என்கிறேன் ."தன்னிலவு தேன் இறைக்க”(படித்தால் மட்டும் போதுமா) ,”அன்பாலே தேடிய செல்வம் “(தெய்வப்பிறவி),"கலையே என் வாழ்கையின்”(மீண்ட சொர்க்கம்).1960 பீலிங்தான் 1980 மீட்டெடுக்கப்பட்டது.மெலடி எங்கும் கைவிடப்படவில்லை.