Wednesday, December 31, 2008

பிரகாஷ் ராஜ்,ரஜினி,கமல்..மிமிக்ரி

                                   
          எங்கேயோ கேட்ட மிமிக்ரி குரல்கள்
                                               
கடந்த சில வருடங்களாக டீவிக்கள்,ரேடியோக்கள்,சினிமாக்கள் 
போன்ற ஊடகங்களிலும் மற்றும் பொது மேடைகள் இவற்றில் பொழுதுபோக்கு அம்சமாக “மிமிக்ரி”(குரல் மாற்றி பேசுதல்) இருக்கிறது.

இது அந்த நாட்களிலும் உண்டு. அந்த காலத்தில் 
“ராக்கெட் ராமனாதன்” ப்ல குரல் மன்னன் சேதுராமன்,
சதன் மற்றும் பலர் இருந்தார்கள்.

விஷயத்திற்கு வருவோம். அந்த காலத்திலும்சரி
இந்த காலத்திலும் சரி ஜெய்சங்கர்,
முத்துராமன்,நாகேஷ்,ஸ்ரீகாந்த்,ரவிசந்திரன்,விஜயகுமார்
போன்றவர்களை யாரும் மிமிக்ரி செய்ததாக தெரியவில்லை.செய்தாலும் மிக சொற்பம்.

ஏன் அது? சொல்லுங்களேன். என்னுடைய காரணங்களோடு ஒத்துப்போகிறதா என்று பார்க்கலாம்.

Tuesday, December 30, 2008

தொலைந்து போனவர்கள் - 2

               
       தொலைந்து போனவர்கள் - 2

காணவில்லை.சென்னை மற்றும் அதன் சுற்றுப் 
புறத்தில் பல வருடங்களுக்கு என் முன் கண்ணில் பட்டவர்கள்.

1.”கொசுறு” கொடுத்த பால்காரர்/பழக்காரர்

2.”பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விட்ட” செப்பிடு
வித்தைக்காரன்(ஆனால் விட்டதாக சரித்திரம் இல்லை)

3.பாடையில் பிணத்தை தூக்கிக்கொண்டுச் சென்ற நாலு பேர்

4.நார்மடி கட்டிய விதவை அய்யர்/அய்யங்கார் 
மொட்டைப் பாட்டிகள்
(தசாவதாரத்தில் அசின் பாட்டியாக வரும் கமல் பாட்டி மாதிரி)

5.”பேமிலி ரூம்” உள்ள ஹோட்டல்

6.ஸ்டூலில் உட்கார்ந்து “காஜா” எடுத்த டெயிலர் கடைப் பையன்

7.ராப்பிச்சைக்காரர்

8.ஆபிஸ் ஆபிஸாக படியேறி டெலிபோன் துடைத்து
செண்ட் போட்டுவிட்டு சென்ற பெண்கள்

9.மஞ்சள் துணி உடுத்தி”கோவிந்தோ கோவிந்தோ”
என்று சொல்லி புழுதியோடு ரோடில் உருண்டு கொண்டே
பிச்சை எடுத்தவர்

10.தாவணிப் பெண்களை ”சைட்” அடித்த வேட்டி கட்டிய இளைஞ்சர்கள்

11.டிரான்ஸிஸ்டர் கையில் பிடித்து பாடல்
கேட்டுக்கொண்டே சென்ற நரி குறவர்கள்

12.குழந்தைகளை கைப்பிடித்து ஸ்கூலில் கொண்டுபோய் விட்ட ஆயாக்கள்

அன்றும் இன்றும் மாறாத காட்சி: காஸ் சிலிண்டரை ட்ரை ஸைக்கிள் அல்லது சாத ஸைக்கிளில் வைத்துத் தள்ளி வரும் டெலிவரி பாய்

Sunday, December 28, 2008

இளையராஜாவின் பிரபலமாகாதப் பாடல்கள்-2

                  பாகம்-2

இளையராஜாவின் பிரபலமாகாத அற்புத 
இசையமைப்புப் பாடல்கள் - 2

படம் பாட்டு
மணிப்பூர் மாமியார் ஆனந்தத் தேன்காற்று தாலட்டுதே

பாட்டின் சிறப்பு
ஹிந்தோளம் ராகத்தில் அமைந்த பாட்டு.
ராஜா இந்த ராகத்தை அதிகமாக 
பயன்படுத்தியது இல்லை. S.P.ஷைலஜா
/மலேசியா வாசு,(C.S.ஜெயராமன் 
குரலில் பாடுவார்...ஆஷை காதலிலே).இனிமையான 
ஆரம்ப ஹம்மிங் by SPS,”மான்கள் தேடும் பூவை
அவளோ...”ஹை பிச்சில்.by .MV. சூப்பர்....



படம் பாட்டு
மணமகளே வா கன்னிமனம் கெட்டுப்போச்சு

பாட்டின் சிறப்பு

இதில் ஜானகிக்கு 100 மார்க்.அட்டகாசம்.
ஏக்கத்தோடு(மஞ்ச தேச்சு குளிக்கியல..) 
பாடியிருக்கிறார்.பாடலை எழுதியவர்க்கு 
100 மார்க்.ஆபாசம் இல்லாத எழுத்துக்கள்.
கிராம பாட்டு.ஆனால் western beats.
ராஜாவின் வழக்கமான வயலின் உரசல்கள்/தபேலா தட்டல்கள்


படம் பாட்டு
மஞ்சள் நிலா இளம் மனதினில் எழும் 
கனவினில் விழி மலர்கிறதே

பாட்டின் சிறப்பு
பெரிய்ய்ய்.........ய பாட்டு.பாட்டில் கவிநயம்.
KJY/Sasi Rekha.சசிரேகா ஹை பிட்சில் தடுமாறுவது
தெரியும்.உமா ரமணனை பாட வைத்திருக்கலாம்.
சிறப்பு மிருதங்கம். இதில் பின்னணி முழுவதும் 
மிருதங்கத்தில் குமறு குமறு என்று ராஜாவின்
குமுறல்தான்.ராகம்...மாயா மாளவ கெளள?
(பூங்கதவே தாழ்/மதுர மரிக்கொழுந்து)



படம் பாட்டு
பூந்தோட்டம் மீட்டாத வீணை

பாட்டின் சிறப்பு
ராகம் - ரீத கெளள(சின்ன கணணன்)
ஹரிஹரன்/மஹாலஷ்மி.ஆரம்பமுதல் கடைசி வரை 
ராஜாவின் மேற்கத்திய இசை கிடார் (மற்றும் வீணை?)
ரகளை.முதல் சரண ஆரம்பத்தில் ரீத 
கெளளயின்(ஸ்வரங்கள்?)கிடாரில் fireworks. 
Highly romantic music.


என்னுடைய இளையராஜாவின் பிரபலமாகாத அற்புத 
இசையமைப்புப் பாடல்கள் -1 க்குப் போக.
(அந்த பதிவில்பாட்டைக் கேட்க இப்போது லிங்க்
கொடுத்துவிட்டேன்.அப்போது மறந்து விட்டேன்.)





Saturday, December 27, 2008

சாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு - சிறுகதை


 சாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு - சிறுகதை                  

தொலைந்துப் போனால் அபசகுனம் என்று மனசு வாடி வதைந்து விடுவோம் என்று காசியில் ரயில் ஏறியதிலிருந்து அந்த புனித கங்கை ஜலம் அடைத்த சொம்புள்ள பையை தன் மடியில்தான் வைத்து இருந்தார் அப்பா. யாரிடமும் கொடுக்காமல் பத்திரமாக வீடு சேர்த்தார்.  

குடும்பத்தோடு போன காசி யாத்திரை எந்த வித இடையூறும் இல்லாமல் இனிதாக முடிந்தது. அப்பாவிற்கு பரம திருப்தி. இந்த காசி யாத்திரை எவ்வளவு நாள் கனவு. அதுவும் இந்த கங்கை புனித நீர் அடைத்த சொம்பு வாங்குவது. கடைசி தருணம் இதுதான் என்று எப்படி அறிந்து காசியில் போய் உயிர் விட முடியும்? இறந்தவுடன் கங்கையும் இங்கு நமக்காக வரப்போவதில்லை. கங்கையையே அடைத்து இங்கு எடுத்து வந்தாயிற்று. ஷாம்பு போல. இறந்ததும் பிள்ளைகள் உடைத்து தெளித்து விடுவார்கள். மோட்சம்தான். 


"நா பிராணன விட்டதும் ...நீங்க என்ன செய்யனனுன்ன " என்று ஆரம்பித்ததும் வீட்டில் எல்லோரும் காதை பொத்திக் கொள்வார்கள். உடனே நிறுத்தி விடுவார். இந்த சொம்பை எப்படி உடைக்க வேண்டும்,ஜலத்தை எப்படி தெளிக்க வேண்டும் என்னென்ன மந்திரங்கள் எப்படி சொல்ல வேண்டும் என்று அக்கு வேறு ஆணி வேராக சொல்ல ஒவ்வொறு தடவையும் முயற்சிப்பார். இந்த பேச்சை எடுத்தாலே,முழுதாக முடிக்க விட மாட்டார்கள் குடும்ப உறுப்பினர்கள். அப்பாவின் சாவு பேச்சு காதுக்கு அமங்கலம். அபத்தம். 

பூஜை ரூம் ஷெல்பில் தன் கண்ணில் தினமும் படுகிற மாதிரி வைத்தார். சொம்பு ஒரு வாழ் நாள் சாதனை போல் அதை தினமும் பார்ப்பார். ஒரு நாள் மொட்டை மாடியில் எல்லோரும் கூடியிருந்தார்கள். போன வாரம் இறந்துப் போன தன் நண்பன் சாவைப் பற்றி பேச ஆரம்பித்தார். 

"அது கல்யாண சாவு.என்ன கூட்டம். பொண்ணு பையன் எல்லோரும் அமெரிக்கா,ஆஸ்திரேலியான்னு வந்துட்டாங்க. பேரன் பேத்தின்னு வீடு நெறைய மனுஷா. பாடிய நடு ஹால்ல வைச்சு, அந்த கங்க சொம்ப நேக்க பிசிறு இல்லாம உடைச்சு, தலையில் ஆரம்பிச்சு ஒவ்வொறு இடமா மந்தரம் சொல்லி பாந்தமா தெளிச்சு கால்ல வந்து முடிச்சாங்க. ஒரு சொட்டுக்கூட மிச்சம் இல்ல. அவர் மேல பட்டதும் அவரு கண் திறந்து சிலித்துக்கிட்ட போல ஒரு பிரமை எல்லார் மனசுலேயும். கண் கொள்ளாக் காட்சி.இதே மாதிரித்தான் எனக்கும் நீங்க பண்ணனும் என்று கண் மூடி திறப்பத்தற்க்குள் "டக்" என்று சொல்லி முடித்தார்.குடும்ப உறுப்பினர்கள் திகைத்துப்போய் அசடு வழிந்தார்கள்.

அந்த மொட்டை மாடி பேச்சு முடிந்த அடுத்த வருடத்தில் அப்பா இறந்து போனார்.

இறந்த அன்று அந்த சொம்பு காண வில்லை.வழக்கமாக இருக்கும் இடத்திலும் இல்லை.வீட்டில் ஒரு இடம் இல்லாமல் தேடி ஆகிவிட்டது.எங்க போச்சு? "என்ன இவ்வளவு நேரமா தேடறிங்க " ஹாலில் படுத்திருந்த அப்பாவின் பிணம் கேட்பது போல் ஒரு பிரமை எல்லோருக்கும் இருந்துக்கொண்டேயிருந்தது.

பிணத்தை நடு ஹாலில் வைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் தேடுவது.கடந்த ஒரு ஆறு மாதமாகவே அம்மாவின் கண்ணில் பட்டாற்போல் தெரியவில்லை. ஏன் கண்ணில் படவில்லை. அம்மாவுக்கு பிடிபடவில்லை.கடைசியில் கிடைக்கவே இல்லை. 

கங்கை சொம்பு தொலைந்த துக்கம் யாருக்கும் தாங்க முடியவில்லை.அதுவும் அம்மாவிற்கு எது சொல்லியும் மனதை சமாதானப்படுத்த முடியவில்லை. எல்லோரிடையும் சொல்லி சொல்லி மாளாமல் புலம்பினாள். அவர் நண்பர் சாவு போலவே வீடு கொள்ளாமல் நண்பர்கள்,உறவினர்கள் , மகன்கள்,மகள்கள்,.பேரன் பேத்தின்னு வீடு நெறைய கூட்டம். கங்கை ஜல சொம்புதான் இல்லை. இல்லாதது ஒரு பெரிய குறைதான். மாற்று சொம்பும் எங்கும் கிடைக்கவில்லை. கடைசியில் கிணற்று நீர்தான். எல்லாம் முடிந்து பிணத்தை கடைசியில் எடுக்கும்போது அம்மா பீரிட்டு விட்டாள். குறை வைத்துவிட்டோமே என்று. சமாதானம் ஆக ரொம்ப நாள் ஆயிற்று.

பதினைந்து நாள் கழித்து துக்கம் கேட்க குடும்ப நண்பர் பேங்க் மேனேஜர் விஷ்ணு பிரசாத் வந்திருந்தார்.அப்பாவுடன் நெருங்கிப் பழகியவர். அப்பா இறக்கும் போது வெளியூரில் இருந்தார். அம்மா அவரிடமும் கங்கை ஜல சொம்பைப் பற்றிச்சொல்லி ஒரு பாட்டம் அழுதாள்.

”பேங்க் லாக்கர்ல பாத்தீங்களா?” பேங்க் மேனேஜர் கேட்டார்.

“லாக்கர்லயா? இல்லையே...உங்களுக்கு எப்படித் தெரியும்?” அம்மா

“இல்ல...” மேனேஜர் சற்று தயங்கினார்.

“சொல்லுங்க”

அப்பா சொன்னதை அப்படியே சொன்னார்.


“நானும் அந்த கங்கை சொம்ப ஒரு விவேகத்தோடுதான் வாங்கினேன்.ஆனா தினமும் அத பாக்கும் போது அடி வயத்துல “மரண பயம்” வந்து நாளாக நாளாக சங்கடப்பட்டேன்.ராத்திரி தூக்கம் போயிடுச்சு. எதிர்பாத்ததவிட சிக்கிரமே பிராணன் போய்டும்னு ஒரு பீலிங் வந்து வதைக்க ஆரம்பிச்சிது. விவேகம் போயிடுச்சு. வீட்ல இருந்தா நெலம மோசம் ஆயிடும்னுதான் இத லாக்கர்ல வைக்கறேன் விஷ்ணு. யாருக்கும் தெரிய வேணாம்.மனசு நிம்மதிதான் முக்கியம்.பின்னாடி பாத்துக்கலாம்”

முற்றும்


 

Wednesday, December 24, 2008

இளையராஜாவின் பிரபலமாகாதப் பாடல்கள்


இளையராஜாவின் பிரபலமாகாத அற்புத 
இசையமைபுப் பாடல்கள்

படம் பாட்டு
1.ஆராதனை குங்கும செங்கமலம்

பாட்டின் சிறப்பு
SPB/தபலா - Flute combination இசை/பாடல் வரிகள்


2.மெட்டி சந்தகவிகள் பாடிடும்

பாட்டின் சிறப்பு
பிரம்மானந்தம்/ ஆரம்பத்தில் வயலின் ஆரபி ராகத்தில் இழைக்க ஆரம்பித்து பல்லவி முடிந்து ராஜாவின் ரகளைதான் அட்டகாசம் பாடல் முழுவதும்.ஆரபியை ராஜாவால்தான் இப்படி கொடுக்க முடியும். இதே ஆரபியை “மன்னவனே மன்னவனே மனசு” படம்:”தந்துவிட்டேன் என்னை” வேறு விதத்தில் வரும்.


3.ஆயிரம் நிலவே வா அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால்

பாட்டின் சிறப்பு
SPB/மேற்க்கத்திய இசையின் இனிமையான சிதறல்கள்


4. ஆனந்த கும்மி தாமரைக்கொடி

பாட்டின் சிறப்பு
SPB/ஆச்சிரியமான மேற்க்கத்திய இசை பின்னணி


5. உல்லாச பறவைகள் தெய்வீக ராகம்
பாட்டின் சிறப்பு
Jency/ பாடல் ஜென்சியின் மூக்கு ஹம்மிங்கோடு ஆரம்பிக்க.flute வருட பிறகு தபேலா சேர்ந்துக் கொள்ளும்.ஹம்மிங்/கோரஸ் வித்தியாசம்.


6.அந்த ஒரு நிமிடம் சிறிய பறவை சிறகை

பாட்டின் சிறப்பு
சாருகேசி ராகம்.. மேற்க்கத்திய கர்நாடக இசை ஒரு 
காக்டெயில்
 

7.மோகமுள் சொல்லாயோ வாய் திறந்து

பாட்டின் சிறப்பு
ஷண்முகபிரியா ராகம். ஜான்கியின் உருக்கும் குரல்.இசையின் உருக்கம் ....ராஜா.  


8.கண்ணே கலை மானே நீர் விழிச்சி தீமூட்டுதே

பாட்டின் சிறப்பு
இந்த பாட்டு,தமிழ்,மலையாளம்,தெலுங்கு,வெறும் இசை என்று பல ரூபத்தில் உள்ளது.தபேலா,கிடார் ஜானகி மூன்று பேரையும் வழி நடத்துவார் ராஜா காபி ராகத்தில்.”தென்மாங்கு மழை வந்து”கவிஞர் அறிவுமதியின் வரிகளை முதல் சரணத்தில்.....ஜானகி.. அட்டகாசம். மலையாளத்திலும் ஜானகிதான். “தும்பி வா தும்பக்குடத்தில்”


Tuesday, December 23, 2008

சிதைக்கப்படும் குழந்தைப் பெயர்கள்

       வைப்பது ஒன்று கூப்பிடுவது வேறு

சின்ன வயதில் என் பாட்டியை யாராவது சுலோச்(சி)சு அல்லது ரங்கி(சுலோச்சனா ரங்கநாயகி)என்று சுருக்கிக் கூப்பிட்டால் கோபம் பொத்துக்கொண்டு வருமாம்.முழுப் பெயரோடுதான் கூப்பிட வேண்டும் என்று ஒரு standing instruction இருந்ததாக என் அம்மா சொல்லுவாள். செல்லமா கூப்பிட்டு அம்பாள நொண்டியாக்கிடாதங்கடி என்று கத்துவாளாம். 

பெயர்களை ஏன் சுருக்கி கூப்பிட்டு சிதைக்கக்கூடாது என்று பாட்டி சொல்லி அம்மாவிடம் கேட்டு எழுதினது.

குழந்தைக்கு பெயர் வைக்கும் போது ஒரு அர்த்தம் தொனிக்க இந்து மதத்தில் பெயர்வைக்கும் வழக்கம் உண்டு. 1.மங்களகரம் 2.கடவுள் பெயர் 3.காதுக்கு ரம்யம் 4.முன்னோர்கள் ஞாபகம் 5.வீர்யம் 6.குல தெய்வம் 7.தேசத்தலைவர்கள்8.நியூமராலஜி என காரணங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம்.


 
ஆனால் கூப்பிடும்போதுகீது(கீதா),அச்சு(அர்ச்சனா)கெளச்சி(கெளசிகா)சீனு(ஸ்ரீனிவாசன்) தீனு (தீனதயாளன்)என்று நாய்க்குட்டியை கூப்பிடுவது போல் சிதைக்கிறோம்.அதன் உண்மையான வீர்யம் அல்லது மங்களகரம் இழந்து போய் முடமாகிவிடுகிறது. பெயர் வைக்கும் பலன நீர்த்துப்போய் விடுகிறது என்பது முன்னோர்கள் வாக்கு. புராண்ங்களில் கூட கதா பாத்திரங்கள் பெயர்களை விளிக்கும்போது சுருக்குவதில்லை.கடவுள் பெயரை அடிக்கடி உச்சரிக்கும் புண்ணியம் கிடைக்கும்.

ஜோதிட சாஸ்த்திரத்தில் ஏதோ ஒரு பலனுக்காக நம் பெயரை பல தடவை எழுதிப் பார்ப்பதும் உண்டு.


“முழுச கூப்பிட என்ன வெட்கம்? வக்கும் போது உலகத்தயே பொரட்டி ஒரு பேரத் தேடறோம். இது என்ன சினிமா பேர ..ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி   ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது(பாட்டி அப்போது இருந்தார்) சார்ட் பண்றத்துக்கு.” என்று பாட்டி கொதிப்பாளாம்.


“இவுங்க கோயில்ல போய் ”அச்சு” பன்னுங்கன்னு சொல்றாங்க..இல்லையே அர்ச்சனை பண்ணுஙகன்னுதான்னே சொல்றாங்க.கோவில் குருக்கள் “ஐஸூ(ஐஸ்வர்ய்ய)நமக,காமு(காமாட்சி) நமக, சுப்பு (சுப்ரமண்ய) நமகன்னு சொல்லி பூவ போட்ட எப்படியிருக்கும். முகத்த சுளிக்க மாட்டமாக்கும்.நிறைய பேர் அவங்கள அறியாம பண்றாங்க.” என்று ஒரு போடு போடுவாளாம். 

(அன்றிலிந்து பாட்டியை தொடர்ந்து அம்மாவும் நாங்களும் பெயர்களை சிதைப்பதில்லை. உண்மையிலேயே முழுப் பெயர் கூப்பிட்டால் ரம்யமாகத்தான் இருக்கிறது.(அலர் மேல் வள்ளி?) 
 

சிதைக்கப்படும் பெயர் பட்டியல்:- 

பத்மா-பத்து, லலிதா(லல்லி), ஜானகி(ஜானு),  சரஸ்வதி(சச்சு/சரசு),தீபா(தீபூ), பவானி(பவ்வு), வைஷ்ணவி(வைஷி) ஐஸ்வர்யா(Ash)(Ash.....இது ரொமப கொடுமை சரவணன். இந்த காலத்தை விட பாட்டி காலத்துப் பெயர்கள் நிறைய சுருக்கிக் கூப்பிட தோதுவாக இருக்கிறது. உம்: ருக்மணி(ருக்கு) ,காமாட்சி(காமு).


பார்த்தசாரதி (பாச்சா),  கிருஷ்ணமூர்த்தி(கிச்சு/கிட்டு) வெங்கட்(வெங்கு)
நரசிம்மன்(நச்சு)இங்கும் தாத்தா காலத்துப் பெயர்கள் நிறைய சுருக்கிக் கூப்பிட தோதுவாக இருக்கிறது.

அபிலாஷ், கார்த்திக், ஆதித்யா, அனிருத், ஷ்ருதி, ஸ்வேதா, அஷ்மிதா, வர்ஷா,
ஜானவி அரவிந்த்,etc., etc., போன்ற(அபார்ட்மெண்ட்)லேட்டஸ்டு பெயர்கள் சிதைக்கப்படுகிற மாதிரி தெரியவில்லை. 

இரண்டு எழுத்துப்பெயர்களையே சுருக்குவது (அத விட இது ரொமப கொடுமை சரவணன்) 
மாலா(மாலு) etc., etc., 


பெயரை சிதைக்காமலும் வைத்த பெயரை பயன்படுத்தாமலும் வேறு சில செல்ல பெயர்கள் உண்டு. அவை: ஜில்லு,பேபி,அச்சு,மல்லு,சம்பு,பப்பு,சன்னு,பப்பி,குட்டி,டால்லி,பிங்கி.


நமது முதலமைச்சரிடம் “நீங்க ஏன் வட மொழி (கருணா நிதி) பெயர் வைத்துள்ளீர்கள்” என்று கேட்டதற்கு “என் பெற்றோர்கள் பத்து மாதம் சுமந்து பாராட்டி சீராட்டி வைத்தப் பெயர். அத இழக்க மனசு வரல”  என்று சொன்னாராம்.

நம்து முழு பெயரையும் காது குளிர கேட்கும் இடங்கள் சில:-

1.ஆஸ்பத்திரி 2.ரேஷன் ஆபிஸ் 3.பேங்க் கவுண்டர்.4.நீதிமன்றம்
(கனேஷ்வெங்கடகிருஷ்ணராமசாமி..ஒரு தரம்..கனேஷ்வெங்கடகிருஷ்ணராமசாமி..ரெண்டு தரம்..கனேஷ்வெங்கடகிருஷ்ணராமசாமி.. மூணு தரம்)etc., etc., 
 

Monday, December 22, 2008

சர்தார்ஜி ஜோக்ஸ்...சர்தார்ஜி ஜோக்ஸ்..

ஒரு சர்தார்ஜி சென்னையிலிருந்து டெல்லிக்கு போகும் ரயிலில் மேல் பர்த்தில் பிரயாணம் செய்துக்கொண்டிருந்தான். நான்கு மணி நேரம் கழித்து வண்டி ஒரு ஸ்டேஷன் னில் நின்றது. சர்தார்ஜி இறங்கிப்போய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு வருவதற்குள் வண்டி கிளம்பி போய் விட்டது. இது சர்தார்ஜிக்கு தெரியாது. எதிர் திசையில் நின்று கொண்டிருந்த வண்டியில் ஏறி காலியாக இருந்த கிழ் பர்த்தில் படுத்துக்கொண்டான்.

அது டெல்லியிலிருந்து சென்னைக்கு போகும் ரயில்.

ஜன்னல் வழியாக பார்க்கும் போது முன்பு பார்த்த ஸ்டேஷன்களே வந்து கொண்டிருந்தது . பகத்திலிருந்தவர்களை கேட்டான் . அவர்கள் சென்னைக்கு போகும் ரயில் என்றார்கள்.

சர்தார்ஜி புல்லரித்துப்போய் " என்ன ஒரு அற்புதமான ரயில்வே சிஸ்டம் நம்முடையது . மேல் பெர்த் டெல்லிக்கு போகிறது . கிழ் பெர்த் சென்னைக்கு போகிறது

__________________


சர்தார்ஜி ஒருவர் லைப்ரரியில் ரொம்ப நேரம் தேடி ஒரு தடிமனான புத்தகத்தை எடுத்து வந்து வீட்டில் நான்கு மணி நேரம் படித்துக்கொண்டிருந்தார். அது ரத்தம் பற்றியது. மனைவி ஏன் விழுந்து விழுந்து இதை படிக்கிறிர்கள் என்றாள்.

"நாளைக்கு எனக்கு Blood Test. நிறைய மார்க் வாங்கனும்” என்றார்.
.