Friday, September 27, 2013

ராஜா ராணி - விமர்சனம்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  இளையராஜாவின் பிஜிஎம்மும் நொந்த ரெவிசெங்கரும் பின்னே ராஜா ராணியும்......


ரொம்ப ஆர்வமாக ஓ-ஆயும் படத்திற்கு முதல்நாள் முதல் ஷோ(12.00 Noon) சங்கம் தியேட்டரில் நெட்டில் புக் செய்து வைத்திருந்தேன்.தானைத் தலைவரின் பிஜிஎம் இந்தத் த்ரில்லர் படத்திற்கு எப்படி செட் ஆகிறது என்று மிக ஆர்வமாக  நுழைந்தால் “ சார்.... பொட்டி வரல..! க்யூப் எண்டர்டெயின்
மெண்டுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏதோ பிரச்சனை.ரீபண்ட் கொடுக்குறோம் இல்லேன்னா “ராஜாராணி”(இன்றுதான் ரிலீஸ்(27-09-13) படம் போடறோம் பாருங்க”.


படம் இல்லையா? நொந்தே போனேன்.ஓநாய் மாதிரி உள்ளுக்குள் ஓலமிட்டு ஆட்டுகுட்டி மாதிரி ம்ம்ம்மேமே என்று முடித்தேன். பின்னணியில் ஓ-ஆகுட்டியின் பிஜிஎம் “I Killed an angel" சோகமாக.அந்தக்காலத்தில்தான் “இதயவிணை” “அடிமைப்பெண்” ”உலகம் சுற்றும் வாலிபன்” போன்ற படங்களின் பொட்டி வராது.வரும் ஆனால் மூணு மணி என்றால் ஆறுமணிக்கு வரும்.

மிஸ்கினுக்கும் ராஜாவிற்கும் எட்டாம் பொருத்தம்.நந்தலாலா படம் ரெண்டு வருஷமா வரல.இது தியேட்டருக்கு வந்துவிட்டது. ஆனால் பொட்டி வரல.போஸ்டர்தான் வந்திருக்கு.


ஓநாய் இல்லை. ஆட்டுக்குட்டி இல்லை. ராஜாராணி? பார்ப்பதா வேண்டாமா? இதுமாதிரி வழக்கமான படங்களை பார்ப்பதை நிறுத்தி ரொம்ப நாள் ஆயிற்று. இப்போதெல்லாம் ரசிக்கமுடியவில்லை.ஏன்? என் எண்ணத்தை அப்படியே சுகாசினி சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

 //Unless we get out of these mindless comedies and a good-for-nothing fellow trying to win over the heroine kind of films,Tamil cinema will not be taken seriously//

இந்தப் படம் அதை அப்படியே அச்சுஅசலாக பின்பற்றுகிறது.

ஏதாவது வித்தியாசமாக இருந்ததால்தான் சினிமாவுக்கு போவது என்ற முடிவு எடுத்து ரொம்ப நாள் ஆச்சு.மனதை சமாதானப்படுத்திக்கொண்டு ஓநாய் -ஆட்டுக்குட்டி  பதிலாக ராஜா-ராணி.நல்ல காம்பினேஷன்.எதிர்பாராத ரிலீசால் ஆர்யா ரசிகர்களின் விசில் கத்தல் சத்தம் இல்லை.


விமர்சனம்

மெளனராகம்  படத்தை  கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாமல் வெட்டித்தனமாக எடுத்தால் எப்படி இருக்கும்.அதுதான் ராஜா ராணி.காதல் தோல்விக்கு பிறகும் காதல் உண்டு. வாழ்கை உண்டு.இதுதான் படத்தின் ஆங்கில டைட்டில் கார்டு மெஸ்ஸேஜ். ஆர்யா-நயன் திருமணம்.இருவருக்கும் இதில் இஷ்டமில்லை.இருவரும் ஒட்டாமல் டாம் அண்ட் ஜெர்ரி கணக்காக இருக்கிறார்கள்.படம் விழுகிறது. ரொம்ப சீரியஸ்ஸாக ஓட்டாமல் மெளனமாக இருப்பதாகக்  காட்டினால  மெளன ராகம் சாயல் வந்துவிடும் என்று டாம் அண்ட் ஜெர்ரி.

ஏன் ஒட்டவில்லை? இருவருக்கும் திருமணத்திற்கு முன் காதல் தோல்வி.பிளாஷ்பேக்.கட்டுடல் ஸ்மார்ட்டான ஆர்யா.லட்டான  அழகான நயன்.”சீக்கிரம் சேர்ந்து வாழுங்கப்பா.என்ஜாய் லைப்” என்றாலும் பொறுமையை சோதித்துவிட்டு சேருகிறார்கள்.

ஆரம்பிக்கும்போது ரொம்ப பிரமாதமாய் ஆரம்பிக்கிறார்கள்.ஆகா என்று நிமிர்ந்தால் கொஞ்ச நேரத்தில் படம் தொய்கிறது.


கதாநாயகன் - நாயகி-பிரெண்ட்(சரக்கு சந்தானம் அல்லது டாஸ்மேக் சந்தானம்)-அப்பா-கோபி எல்லோரும் ஜாலியாக இருக்கிறார்கள்.நன்றாக நடிக்கிறார்கள்.குடிக்கிறார்கள்.பெண்களை கலாய்க்கிறார்கள்.காதலிக்கிறார்கள்.குடிக்கிறார்கள்.சைட் டிஷ் சாப்பிடுகிறார்கள். மக்காக லாஜிக் சுயசிந்தனை ஒன்றும் இல்லாமல் இருக்கிறார்கள் அழுகிறார்கள்.செல் பேசுகிறார்கள். காதலிகளைப் பிரிகிறார்கள்.பின்னால் மீண்டும் அழுகிறார்கள்.

சந்தானம் வந்தால் தியேட்டர் அதிர்கிறது. வழக்கமான அவரின் “மச்சான் பொண்ணுன்ன” என்கிற prefixஓடு ஆரம்பிக்கும் வசனங்களை பேசி கைத்தட்டல் பெறுகிறார்.படத்தின் டைட்டில்தான் மாறுகிறது சந்தானம் மாறவில்லை.

கானா பாலா காதில் தோடுகளோடு வருகிறார். நல்ல வேளை பாடவில்லை. ஸ்டிரியோ டைப் ஆகிவிடும் என்று விட்டுவிட்டர்கள் என்று நினைக்கிறேன்.

நூறு ஆண்டு ஆன சினிமாவில் இன்னும் காமெடியன் கதாநாயனுக்கு பிரெண்ட் ஆக இருக்க வேண்டிய கட்டாயம்.கடந்து பத்துவருடமாக add-on ஆக சரக்கு அடிக்க வேண்டும்.அதுதான புதுமை.



ஜெய் இதில் மிகவும் “வித்தியாசமான” ரோல் பயந்தாங்கொள்ளி.நன்றாக செய்திருக்கிறார்.மனதில் நிற்கிறார்.படம் ரொம்ப ரிச்சாக இருக்கிறது.அட்டகாசமான கேமரா காட்சிகள்.பாடல்களில் அருமையான விஷுவல்ஸ் பாடல் காட்சிகள். ஆனால் இசை பொருத்தமில்லாத ஜி வி பிரகாஷ்குமாரின்  ஹை டெசிபல் இசை.கத்தல் பாடல்கள்.

ஆர்யா-நயன்-ஜெய் ரசிகர்களுக்குப் பிடித்த படம்.பொழுதுபோகிறது.