Tuesday, June 12, 2012

நித்தியானந்தா,மகான்,சாமியார்,பீடாதிபதி,பாபா,குருஜி பின்னே துறவும்

பல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துறவி என்றால் எல்லாவற்றையும் துறந்து தன்னைத்தானே அறிந்து (இதுதான் அது. அதுதான் இது) உடம்புலிருந்து விடுபட்டு மக்களிடமிருந்து விலகி பிரபஞ்சத்தில் ஐக்கியமாதல்தான்.இது ஒரு நிலை.முக்கியமாக “நான் யார்” என்பதை அறிந்தவர்கள்.

(”நானார்? என் உள்ளமார்? ஞானங்களார்? என்னை யாரறிவார் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்”) - திருவாசகம்

இப்படி விடுபடுவன் “சீன்” அல்லது “பில்ட் அப்” கொடுத்து பிரபஞ்சத்தில் ஐக்கியமாவதில்லை.அதைப் பற்றியும் கவலைப்பட்டதும் இல்லை.ஊர் பேர் தெரியாமல் தன்னை அறிந்தார்கள்.

18ஆம் நூற்றாண்டில் வந்த அருட்பெருஞ் ஜோதி வள்ளலார் சம்பிராதாயத்திலிருந்து சற்று விலகி காவி தவிர்த்து எளிமையான வெள்ளுடை உடுத்தி மனதில் துறவு பூண்டு மக்களை சாதி,சமய பேதங்களற்ற மற்றும் புலால் தவிர்த்து உயிர்களிடத்து அன்பு செலுத்தும் “சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை” பாதையில் ”என் வழி தனி வழி” என்று கவுன்சிலிங் செய்து அழைத்துச்செல்ல முயற்சித்தார்.

மக்கள் ” மன்னிக்கவும் வள்ளளார் ஸ்வாமிகளே! உங்களின் புதுக் கடையில் எல்லாம் புதுசா இருக்கு.செட் ஆக மாட்டேங்குது.அலர்ஜியா இருக்கு” என்று முகம் சுருக்கினார்கள்.

வள்ளளார் பதிலுக்கு “ கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்று வருத்தப்பட்டு கடையை மூடினார்.மக்கள் சந்தோஷமானார்கள்.

இப்படி தன்னைத்தானே அறிந்த துறவிகள்/யோகிகள் ஆண்டுகள் கடந்து சாமியார்,மகான்,பீடாதிபதி,ஜகத்குரு,சன்னிதானம்,அருட் தந்தை,பாபா,குருஜி, சத்குருஎன்று பலவித ரூபங்களில் போலிகள் நிறைந்து அசல்கள் குறைந்து “தன்னைத் தானே அறிதலை” ரிஜிஸ்டர்டு ஆபிஸ்,பிரான்ச் ஆபிஸ்,மார்க்கெட்டிங் ஆபிஸ், வெப் சைட்,டிவிட்டர்,ஈமெயில்,கூகுள்பிளஸ் என்று விரிவுபடுத்தினார்கள். ஆபிசில் தவறாமல் 2 டன் ஸ்பிலிட் ஏசி வைத்துக்கொண்டார்கள்.

ஜாதிக்கொரு சாமியார் அவதாரம் எடுத்து உலகத்தை உய்விக்கப் போவதாக அருள்வாக்கு கொடுத்தார்கள்.

பலவித கெட் அப்புகளில் வந்து பிரபஞ்சத்தில் “போஸ்” கொடுத்து ஐக்கியம் செய்துகொண்டார்கள். மக்கள் “ இவர்களை அறிந்துக்கொண்டார்கள்”.

மக்களுக்கு எளிதான ஆன்மிகப்பாதையை காட்டி அழைத்துச்செல்லாமல் லூசுத்தனமாக ஏதேதோ செய்து“லூசுப் பையன்” ஆனார்கள்.

சின்ன வயதில் நான் பார்த்து ஆச்சரியப்பட்ட மகான்/சித்தர்/யோகி பெயர் தெரியாத ஒருவர்.பிரம்மச்சாரியான அவர் திடீரென்று ஒரு நாள் துறவு பூண்டு காணாமல் போனார்.ஏன்? தான் இருக்கும் இடம் மக்கள் அறிந்தால் தன்னை வைத்து பிசினஸ் செய்வார்கள் என்றுதான்.

ஆனால் திடீரென்று தோன்றுவார் சாலையில் பல்லாவரம் மலைக்கருகில்.புன்னகைத்தவாறே யாரையும் சட்டை செய்யாமல் நடப்பார்.”அருள் வாக்கிற்காக” மக்கள் துரத்துவார்கள்.மேலே கை காட்டுவார்.அவ்வளவுதான்.

சில வருடங்கள் கழித்து அவரின் உடல் தாம்பரம்/சிட்லபாக்கம் அருகே காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இறந்துபோய் 4-5 நாள் ஆகியும் அழுகாமல் இருந்தது. ஆச்சரியம்!

ஒரு வேளை ஸ்பிலிட் ஏசியில் இருந்திருந்தார் அழுகி இருக்குமோ?

 இப்படி “அறியாமை”யில் முழுகிக் கிடக்கும் சாமியார்களை மக்கள்தான் சரியான பாதைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.