Showing posts with label திகில் கதை. Show all posts
Showing posts with label திகில் கதை. Show all posts

Tuesday, October 9, 2012

கிரவுண்ட் ப்ளோரில் கேண்டிட் பேய் -திகில் கதை


அது ஒரு பெரிய மால்.மேற்குப் பகுதியில் ஆள் நடமாட்டம் சுத்தமாக இல்லை.ஒவ்வொரு தளத்திலும் அந்த லிப்ட் நின்று நின்று இறங்கிக் கொண்டிருந்தது.அதில் புதிதான திருமணமான இளம் தம்பதியர் மட்டும் கொஞ்சி குலாவியபடி.

...........9

...........8

...........7

...........6

...........5

...........4

...........3

...........2

...........1

...........G

கதவு திறந்ததும் யாரோ ஒரு இளைஞன் கொடூரமான கருப்புக் கலர் பேய் மாஸ்க்  அணிந்து “பே...பே....பே..பே....ஹா ஹ்ஹாஹா ஹா ஹ்ஹாஹா ஹா ஹ்ஹாஹா.... ஹிஹிஹிஹிஹி பே பே பே பே பே....”கொடூரமாக கத்தி பயமுறுத்திவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தான்.


மனைவி நடுநடுங்கி கைகால் உதறி  வயிற்றைப் பிடித்தபடி (இரண்டு மாதம் கர்ப்பம்) மயங்கி லிப்டில் சரிந்தாள்.கணவன் வேர்த்து வெடவெடத்துப்போய் (பேய் அறைந்தால் போல்???) ஒன்றும் புரியாமல் அவளைப் பிடித்தபடி இருக்க லிப்ட் கதவு மீண்டும் மூட இடது கையால்  தவறுதலாக நான் - ஸ்டாப் பட்டனை அமுக்க,

.........1

.........2

.........3

.........4

.........5 (ஒருவாறு  இருவரும் சகஜ நிலைக்கு வந்தார்கள்.ஆனால் லேசனா நடுக்கம் இருந்தது)

.........6

.........7

.........8

.........9

கதவு திறந்தது.கணவனின் செல்போன் அடித்தது.ஆன் செய்தான்.

“டேய்.... நாயே.. பொறம்போக்கு...எப்படி இருந்தது என்னோட கேண்டிட்  ஷாக் ஷோ? ஞாபகம் இருக்கா.ஆறுமாசம் முன்னாடி ரோட்ல போற எங்க அப்பாவ மலர் டிவி கேண்டிட் ஷோன்னு திடீர்ன்னு நடுரோட்ல  நாதாரி நீ பயமுறுத்தி..அவரு பயந்து போய் ஹார்ட் அட்டாக் வந்து நாலாவது நாள் இறந்துப் போனார்.அவரை நம்பி இருந்த எங்க குடும்பம் தெருவுக்கு வந்தது.”

போன் கட் ஆகியது.


Saturday, November 20, 2010

கொஞ்ச தூரம்தான்....(திக் திக் திகில் கதை)

இரவு 11.48.

"சார்.. வீடு கொஞ்ச தூரம்தான் ” பிபிஓ கம்பெனி சுமோ டிரைவர்.

கீர்த்திவாசன் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்து மெதுவாக இறங்கினான்.காற்றுச் சில்லிட்டது.

டிரைவர் நமுட்டு சிரிப்பு சிரித்தபடி வண்டியை விர்ர்ரென்று ரிவர்ஸ் எடுத்துப் பறந்தான்.

கும்மிருட்டில் தட்டுதடுமாறி தெருவைப் பார்த்தான்.தவளைகளின் கோரஸ்.பெரிய பள்ளம்.ரொம்ப நீளத்திற்கு வெட்டி இருந்தார்கள். இரண்டு பக்கமும் வெட்டிய மண்.மழையில் சேரும் சகதியுமாக. தடுப்பு பலகைகள் தாறு மாறாக கிடந்தன. ஒரு பக்கம் ஜல்லி குவியல்கள்.தெருவின் முக்கால் கிலோ மீட்டர் இதே சேறும் சகதியுமாக சில இடங்களில் குப்பையும் சத்தையுமாக.

தெருவை மீண்டும் பார்த்தான். அடப்பாவி..! இது வழக்கமாக டிராப் செய்யும் இடம் அல்ல.வழக்கமான இடம் இங்கிருந்து சுற்றிப் போக வேண்டும். ஜனங்கள் இந்த வழியை அவ்வளவாக உபயோகப்படுத்துவது இல்லை.பயம் கவ்வியது.

டிரைவர் ஏன் இங்கே இறக்கிவிட்டான்?

பாக்கெட்டைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான்.ஏடிஎம்மில் எடுத்த ஆறாயிரம் ரூபாய்.பத்திரமாக இருந்தது. எடுக்கும்போது டிரைவர் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.இவன் மீது நிறைய கம்பளைண்ட் உண்டு.


அவனை சபித்துக்கொண்டே சுமாரான வெளிச்சம் தேடி காலை வைத்தான். இடது கால் பொத்தென்று சேறில் சிக்கி தடுமாறினான்.செல்போன் எகிறி பக்கத்தில் எங்கோ சொத்தென்று தண்ணீரில் விழும் சத்தம்.சே... கடவுளே என்ன கொடுமை.?இதயம் அடித்துக்கொண்டது.

ஆசுவாசுப்படுத்திக்கொண்டு வலது காலை பலமாக ஊணி இடதுகாலை இழுத்தான்.தண்ணீர் உள்ளே போய் ஷூ தொளதொளத்தது.ஒரு வழியாக காலை எடுத்து ஒரு ஒரமாக வந்தான்.

செல் போச்சே.எங்கே தேடுவது.அங்கு பெரிய பள்ளமோ?நொந்துபோனான்.டிரைவரை சும்மா விடக்கூடாது.ஆப்பு வைக்க வேண்டும்.பாஸ்டர்ட்.

ரோடின் ஓரத்தை காலால் தடவி உற்றுப்பார்த்தான்.மக்கி போன குப்பைச் சத்தைகளூம்,பீர்/விஸ்கி/ரம் பாட்டிகளும்,பிளாஸ்டிக் கப்புகளும்,பிளேட்டுகளும்,எலும்பு துண்டுகளும் நடுவே ஒரு ஆட்டின் தலையும் கிடந்தது.நாற்றம் தாங்க முடியவில்லை. அருகில் டாஸ்மாக்?

இது பாம்புகள் நடமாடும் இடம் என்று வேறு கேள்வி.நினைத்தவுடன் குலை நடுங்கியது.மெதுவாக அடிமேல் அடி வைத்து நகர பின்னால் ஒளிவட்டம் அடிக்க திரும்பிப் பார்த்தான்.தன்னை டிராப் செய்த இடத்தில் ஒரு சுமோ நின்றது. யாரோ இறங்கினார்கள். அடுத்த வினாடி ரிவர்ஸ் எடுத்து விர்ர்ரென்று பறந்தது.அதே சுமோவா?

குத்துமதிப்பாக மெதுவாக நகர்ந்தவாரே அந்த மரங்கள் சூழ்ந்த பெரிய விட்டைப்பார்த்தான்.டிம் விளக்கில் காம்பெளண்ட் அருகே ஆளின் தலை மாதிரி ஒன்று தெரிந்தது.சார்...சார்... என்று கூப்பிட்டு கையாட்டினான். உடனே அந்த தலை மறைந்தது.விளக்கும் அணைந்துவிட்டது.உண்மையிலேயே ஆளா?

டிபன் பையை கிராஸாக மாட்டிக்கொண்டான்.பாண்ட்பாக்கெட் பணத்தை கெட்டியாக பிடித்தவாறு மெதுவாக நகர்ந்தான்.

அந்த வீடும் அதை ஒட்டிய சின்ன வீடும் சொத்து தகராறில் மாட்டி பூட்டிக்கிடப்பதாக கேள்வி.”எவனுக்குமே இந்த வீடுகள் கிடையாது. பேய்க்குத்தான் பாக்கியம்” என்று இதன் உரிமையாளர் மகன்களை சபித்துவிட்டு இறந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறான்.இன்றைக்குத்தான் இதையெல்லாம் உற்றுப்பார்க்கிறான்.

சாதாரண நாளில் இதெல்லாம் என்றுமே நினைவுக்கு வந்ததில்லை.இப்போது சட் சட்டென்று வருகிறது.ஓ ஷிட்..

செல்போன் கவலை, பாம்பு பயம்,பேய் வீடு எல்லாம் போட்டு வாட்டி வதக்க பித்துப் பிடித்தாற்போல் சேற்றில் கால்வைத்து மெதுவாக அடுத்த அடி வைத்தான்.மெதுவாக தூற ஆரம்பித்து சிறிது நேரத்தில் வலுத்தது.

தட்டு தடுமாறி கொஞ்ச தூரம் நடந்ததில் கைகால்கள் விட்டுப்போய் இருந்தது.கால்கள் ஈர்ச்சிப்போய் மரக்க தொடங்கியது.நிதானித்து அடுத்த அடி வைக்க எதிரில் கருப்பாக பெரிய உருவம். அடி வயிறு கலக்கியபடி உற்றுப்பார்த்தான். எருமை மாடு படுத்திருந்தது வாலை ஆட்டியபடி.

அதை விட்டு தள்ளி மெதுவாக நடந்தபோது யாரோ கட்டையால் தட்டும் ஓசைக் கேட்டது.ரொம்ப ஈனஸ்வரத்தில் முனகும் ஓசையும் கூடவே வந்தது. தவளையின் கோரஸ்ஸில் இது அமுங்கிதான் கேட்க முடிந்தது.

சுற்றிப்பார்த்தான்.மீண்டும் அந்த வீட்டில் தலை தெரிந்தது.கற்குவியலில் மறைந்துகொண்டுப் பார்த்தான்.இப்போது இல்லை.ஆனால் ஒரு பெண் முக்காடுப் போட்டுக்கொண்டு வேகமாக உள்ளே ஓடினாள்.டிம் லைட் அணைந்தது.

மீண்டும் தட்டும் சத்தம்.ஆனால் ஓசை அங்கிருந்து வரவில்லை.மெதுவாக ஜல்லி குவியலில் ஏறி குத்து மதிப்பாக தடுப்பு கட்டையில் கால்வைத்து அந்தப்பக்கம் தாவினான்.இது கூட அந்த தலை தெரிந்த வீட்டின் டிம் லைட்டில்
பார்த்து வைத்துக்கொண்டது. மெதுவாக ஊர்ந்தான். மீண்டும் குரல்.பெண்ணின் குரல்தான்.கூடவே தண்ணீரில் கல் அல்லது சேறு விழும் சத்தம்.பயத்தில் உடம்பு உதறியது.தூரலில் தெப்பலாக நனைந்து குளிர் எடுக்க ஆரம்பித்தது.  மணி பார்த்தான். 12.45.சத்தம் நின்றிருந்தது.

வழுக்கி வழுக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.ஒரளவுக்கு பாதை சுமராக இருந்தது. அடுத்த அடி வைக்கையில் உற்றுப்பார்த்தான். பெரிய பள்ளம்.கட்டைகள்.ஜல்லி குவிப்பு. சேறு சகதி. மெதுவாக ஊர்ந்தான். மீண்டும் பெண்ணின் குரல். மீண்டும் தண்ணீரில் கல் விழும் சத்தம். இங்கு தவளைகளின் இரைச்சல் ஜாஸ்தியாக இருந்தது.

குரல் வரும் திசைப் பக்கம் போகாமல் எதிர் திசையில் கவனமாக அடிவைத்து ஜல்லி குவியிலின் மேல் நடக்க நடக்க பாதையின் போக்கு தெரிய ஆரம்பித்தது.சேறு அவ்வளவாக இல்லை. வேகமாக நடந்தான். கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஓட ஆரம்பித்தான்.பாதை சீராக இருந்தது.தன் வீட்டை நெருங்கி நின்று பின்னால் பார்த்தான்.அநத சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. ஒரே ஓட்டமாக தன் வீட்டிற்குள் ஓடினான்.

அந்த பெரிய வீட்டிற்கு எதிரே.....

மைத்ரேயி ஒரு கையால் பள்ளத்தில் தொங்கிக்கொண்டிருந்தாள். ஒரு கையால் கையில் கிடைத்த கற்களையும் சேற்றையும் குட்டையில் அடித்தும் யாரும் வர காணோம். குரல் எழுப்பியும் ஓன்றும் ஆகவில்லை.

சற்று ஆக்ரோஷத்தோடு துழாவியதில் ஒரு மக்கிப்போன கட்டைக் கிடைத்தது. கட்டையை சேற்றில் குத்தி பாலன்ஸ் செய்து மேலே எக்கினாள். வேறு ஒரு கட்டை பிடிமானம் கிடைத்தது. ஒரு எக்கு எக்கினாள்.வழுக்கியது. மீண்டும் எக்கினாள்.அப்படியே அந்தப் பக்கம் போய் விழுந்தாள். உடம்பு முழுவதும் சேறும் சகதியுமாய் அப்பி எழுந்து உட்கார முடியாமல வழுக்கியது.

சமாளித்து உட்காரும்போது காலில் தன் கைப்பைத் தட்டுப்பட்டது.மகிழ்ச்சியோடு ஜிப்பைத் திறந்து செல்லை எடுத்தாள். நிறைய மிஸ்டு கால்கள். போன் செய்தாள்.

பெரிய வீட்டின் டிம் லைட் எரிந்தது. ஒரு மத்திய வயதில் ஒரு ஆணும் பெண்ணும் ஓடி வந்தார்கள்.

“ஓ ....அப்பா... ஓ அம்மா... நா இங்க இருக்கேன். டார்ச் கொண்டாங்க..” மைத்ரேயி தொண்டை வறள கமறினாள்.குளிரில் உடம்பு வெடவெடத்தது.

கொண்டு வந்து டார்ச் அடித்தார்கள். அதே வெளிச்சத்தில் பாதையை தொடர்ந்து மெதுவாக தட்டுத் தடுமாறி வீட்டை அடைந்தாள்..அம்மாவைக்கட்டிக்கொண்டாள். அப்பா அவளைப் பார்த்து அதிர்ச்சியானர்.

”ஏண்டி கண்ணு இப்படி? என்னடா காணலயேன்னு நானும் இவளும்  மூணு நாலு தடவ வெளில வந்துப்பாத்துட்டு போயிட்டோம்.”உள்ளே போனார்கள்.

“கரெக்ட் டைம்முக்கு வந்துட்டேம்மா.சேறு வழுக்கி அந்த பள்ளத்துல விழுந்துட்டேன்.அதிலேயே தொங்கிட்டு கத்தினேன்.கல்ல தண்ணீர்ல போட்டுசத்தம் ஏற்படுத்தினேன். யாரோ கிட்ட வர மாதிரி இருந்துச்சு. ஆனா அப்புறம் ஒண்ணும் கேட்கல.ஒரு வழியா வெளிவந்துடேன்.தைரியமும் வில் பவரும்தான் ரீசன்.”

”முதல்ல இந்த பிபிஓ வேலய உட்டு வேற வேலய பாரு.அடிவயத்துல புலிய கரைக்குர டென்ஷன் தாங்க முடியல”  அம்மா.

                                  முற்றும்

Monday, July 26, 2010

குலதெய்வம் - திக் திக் திகில்கதை

ஈஸ்வரியின் காதல் கல்யாணம் வெகு விமர்சையாக  நடந்தது.குறை எதுவும் யாருக்கும் இல்லை. இவள் குலதெய்வத்திற்க்குதான் குறை ஏற்பட்டு விடுகிறது.

கல்யாணம் என்றாலே அடுத்தது சாவு என்று மாற்றிவிட்டது குல தெய்வம்.

நினைத்தவுடன் குலை நடுங்கியது ஈஸ்வரியின் அம்மா சீதாவுக்கு.

இதற்கு முன் நடந்த கல்யாணங்களின் தொடர்ச்சியாக சீதா தன் கணவனை இழந்தது.முதல் பெண்ணின் கணவன் விபத்தில் இறந்தது.அவளின் இரண்டாவது கணவனும் மகா கோரமாக இறந்தது.இரண்டாவது பையனுக்கு பிறந்த குழந்தைகள் இறந்தது. இரண்டாவது பெண்ணின் தொட்ட காரியங்கள் எல்லாம் தடங்கல்.

திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்தப்போது மிகப் பெரிய விபரீதம் நடக்கும். இந்த கல்யாணம் வேண்டாம் என்று ஜோசியர் சொன்னார்.சீதாவும் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.ஈஸ்வரிதான் பிடிவாதமாக நின்றாள். காதலித்தவனயே கைப்பிடித்தாள்.

”மாப்பிள.... என் பொண்ணு கொடுத்து வச்சவ..ரெண்டு பேரும் சீரும் சிறப்புமும எந்த குறையும் இல்லாம வாழனும்”

”எல்லா நல்லா நடக்கும்ங்க....கடவுளோட ஆசிர்வாதம் இருக்கு..”

”நம்ம தெய்வம்தான் குத்திக் கொல்லுதே.கல்யாணம் ஆன கையோட
பிரார்த்தனய முடிக்கனும். அதுவும் ஈஸ்வரியோட முதல் தீட்டு முடிஞ்ச பிறகு ஏழாவது நாள்ல முடிக்கனும்”

”எந்த ஊர்ல இருக்கு உங்க குல தெய்வம்?”

”மாயவரத்துக்கிட்ட ஏதோ ஒரு குக்கிராமம்.பேரு பட்டினம்காப்பு. அங்க அரிசாமின்னு ஒரு ஆம்பள சாமி... ஆனா..” சீதா கேவினாள்.

“என்னம்மா  ஆச்சு...” ஈஸ்வரி அம்மாவின் கையை ஆறுதலாகப் பிடித்தாள்.

”எங்களுக்கு வந்து வாச்ச சாபம் மாப்பிள.பிரார்த்தனைய வீர்யமா முடிச்சாலும் அவல்ங்கள் நடக்கும்.பிரார்த்தனைய. ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்..! போ..சனியனேன்னு விடரதுக்கும் பயமா இருக்கு.யாரோ நடுவுல ஏதோ தப்புப் பண்ணிட்டாங்க.”

”பிராத்தனைய முடிச்சுட்டு  அந்த ஊர் பெரியவங்க கிட்ட கேட்டுப் பார்த்து முடிவு எடுப்போம்..”மகாதேவன் ஆறுதல் சொன்னான்

“முக்கியமா ஈஸ்வரியோட முதல் தீட்டு முடிஞ்ச பிறகு ஏழாவது நாள்ல.....”
 
மாமியார் சாமி விவரங்கள அடங்கிய பெட்டியை கொடுத்தாள்.வாங்கும் போது திகிலாகத்தான் இருந்தது மகாதேவனுக்கு.இடது கையால் வேறு வாங்கினோமே.

உள்ளே துரு ஏறின தகட்டில் முட்டிக்கால் போட்டபடி நிற்கும் சாமிதான் அரிசாமி பட்டினம்காப்பு. அது தவிர உளுத்துப் போன காகிதங்களும் அதில் மந்தரங்களும் அப்புறம் சில ருத்திராட்ச மாலைகளும்.

பட்டினம்காப்பு பூசாரிக்கு லெட்டர் போட்டுப் பத்து நாள் ஆகியும் பதில் இல்லை.ஆரம்பமே அபசகுனமாக மகாவுக்கும் ஈஸ்வரிக்கும் கவலை வாட்டியது. சீதா சுரத்தே இல்லாமல் வீட்டிற்க்குள் நடமாடிக்கொண்டிருந்தாள்.

இருவரும்  கிளம்பி போய்  அங்கேயே பூசாரியை பார்த்துப் பிராத்தனையை  நிறைவேற்றுவதாக  கிளம்பினார்கள்.

அங்கு(மாயவரம்) பெரிய ஹோட்டலில் ரூம் எடுத்தார்கள்.குளிக்கப்போன அடுத்த நிமிடம் கெய்சரில் ஷாக் அடிப்பதாக மகாதேவன் கவலையோடு வெளியே வந்தான்.ஈஸ்வரி பதறிப் போய் உட்கார்ந்துவிட்டாள்.

பச்சைத் தண்ணீரில் குளித்து முடித்தார்கள்.பதறுவாள் என்று அம்மாவிடம் சொல்லவில்லை.

"நம்ம பிராத்தனைய முடிப்போம் முதல்ல...யாரு சாமின்னு அப்புறம் பாக்கலாம் .” பயத்துடன் சொன்னாள் ஈஸ்வரி.மகா தலையாட்டினான்.

சாப்பிட்டு விட்டு அந்த குக்கிராமத்தைப் பற்றி ரூம் பாயிடம் விசாரித்தார்கள்.

”அந்த ஊரா.....? அரிசாமியா? டிராவல்ஸ் அரேஞ் பண்ணித் தரேன். ஆனா எல்லைல விட்டுட்டு போய்டுவான் டிரைவர். உள்ள வரமாட்டான்..!  சரியா...?”

இருவரும் சுரத்தில்லாமல் தலையாட்டினார்கள்.கேட்காமலே இருந்திருக்கலாமோ?

”நீங்க சொல்ற பூசாரி எங்க சொந்தகாரர்தான்.இருபது நாளுக்கு முன்னாடி  இறந்துட்டாரே? ”கார் டிரைவர் வண்டியை ஓட்டியபடி பேசினான்.

கேட்டதும் இருவரும் அதிர்ந்தார்கள்.

”இறந்த நாள் சொல்ல முடியுமா?”

“ஆக்சிடெண்ட்டு.ஏதோ லெட்டர் வந்திருக்குன்னு போஸ்ட் ஆபிசுக்கு போகும்போது லாரிகாரன் அடிச்சுட்டான். ஒரு 12 மணி இருக்கும்..!”தேதியும் சொன்னான்.

ஈஸ்வரிக்கு திக்கென்றது.என் லெட்டரை வாங்கப் போனாரா?நடப்பதெல்லாம் தற்செயலா? ஒரே போடாகப் போடப்போகிறது இந்த சாமி.

கந்தசஷ்டி கவசத்தை முணுமுணுத்தாள்.

மாதந்திர பிரியட் எப்படியும் ஹோட்டலில் கழிந்து புறப்படலாம் என்பது நடக்கவில்லை.அது வேறு கவலையை வாட்டியது.என்ன தைரியத்தில் புறப்பட்டோம்.  இனம் புரியாத பயத்தோடு ஜன்னல் வழியே  விர் விர்ரென்று ஓடும் காட்சியையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நாலு மணி நேர பயணத்தில் நாலு தடவை வண்டி  ரிப்பேர் ஆகி நின்றது. எதிர்படும் கோவிலில் எல்லாம்  டிரைவர் நின்று சாமிக்கும்பிட்டு  பிரயாணத்தைத்  தொடர்ந்தான்.

மாலை நேரம்.ஊரைத் தொட இன்னும்  ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

”பசுமாடு ஒண்ணு செத்துக்கிடக்குது. இனிமே வண்டி எடுக்க மாட்டேன். திரும்பி போய்டலாம்.இல்லேன்னா நீங்க இறங்கி நடந்துபோங்க. செல்லுல என் நம்பரை கூப்பிடுங்க. வரும்போது இங்க பிக்-அப் பண்றேன்.”

”என்னங்க இப்படி சொல்றீங்க...? உங்கள நம்பிதானே வந்தோம்.இது எல்லை மாதிரி தெரியலையே?”

“வண்டிய எடுக்கும்போதே சொன்னேன்.எல்லைவரைதான்னு.வாக்க காப்பாத்திட்டேன்.இதுதான் எல்லை”
”இது சரி இல்லீங்க....” ஈஸ்வரி கோபத்துடன் சொன்னாள்.

“பயப்படாதீங்க.எல்லாம் நல்ல படியாய் நடக்கும்.உங்க முகத்துல ஏதோ கடாட்சம் தெரியுது. சார்தான் டல்லா இருக்கார்..அதோ தெரியுது பாருங்க பெரிய வீடு.அங்க  மாசானம் பிள்ளைன்னு ஒத்தரு இருப்பாரு.அவரு எல்லாம் ஏற்பாடும் செய்வாரு..”

இறக்கிவிட்டு அவன் பாட்டிற்கு போய்விட்டான்.

”மாடு லாரில அடிப்பட்டு செத்துருக்கு..” மகாதேவன் சொல்ல ஈஸ்வரி தலையாட்டினாள்.

லேசாக இருட்ட ஆரம்பித்தது. கிராமம் ” ஹோ” என்று வெறிச்சோடி அங்கும் இங்குமாக சில கூரை வீடுகள். வயல்கள்.தோப்புகள்.எங்கோ ஒரு வீட்டில் புகை வந்துக்கொண்டிருந்தது.

நடக்கையில்  குலதெய்வத்தின் மண்டிப் போட்ட உருவம்  ஈஸ்வரியின் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது.போகும் வழியில் தற்செயலாகப் கண்ணில் பட்டுவிடுமோ? பயத்துடன் துப்பட்டாவை எடுத்து முகத்தில் போர்த்திக்கொண்டாள்.ஆராய்ச்சியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.பிராத்தனையை முடித்துவிட்டு கிளம்ப வேண்டியதுதான்.

காதல் வாழ்க்கை எவ்வளவு ஜாலியாக இருந்தது.ஹனிமூன் போய் அனுபவிக்க வேண்டிய பொழுதில் இக்கிராமத்தில்...?   சே.. ! இது என்ன  வாழ்க்கை?.இருவரும் ஒட்டியபடி முன்னும் பின்னும் பார்த்தபடியே தொடர்ந்தார்கள்.மகாவின் முகம் இறுகி இருந்தது.

எங்கோ டூரிங்  டாக்கீசில் “மாரியம்மா” என்று பாட்டு காற்றில் அலைந்து வந்தது.

வழியில் ஒரு உருவத்தைப் பார்த்து மிரண்டு ஈஸ்வரிக்கு வயிற்றை வலிக்க ஆரம்பித்தது. அது சோளக் கொல்லை பொம்மை என்று மகாதேவன் தேற்றினான்.

மாசானம் பிள்ளை வீட்டை அடைந்தார்கள்.இவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார் மாசானம்.விவரம் சொன்னார்கள்.

“வர வழில சாமி எதுவும் பாக்கல.. இல்ல?”

இருவரும் பயத்துடன் இல்லை தலையாட்டினார்கள்.

“நல்லது.. முதல்ல சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க”
 
வீட்டுப் பெண்கள் முகமலர்ச்சியோடு வரவேற்றார்கள்.வயிற்று வலியைப் பற்றிச் சொன்னதும் அதிர்ந்தார்கள்.

”உங்க சொந்த பூமில முடிச்சிட்டு வந்திருக்கலாமே. சரி! எல்லாம் நல்ல படியா நடக்கும். இங்கதான் பிராத்தனைக்கு வரவங்க தங்கி நேர்த்திக்கடன நிறவேத்துவாங்க. சுத்துபத்திய நிறைய சாமிங்க இருக்கு.” அவளுக்கு தனி அறை ஒன்றைக் கொடுத்து உபசரித்தார்கள்.

சாப்பிடுகையில் எல்லா விவரங்களையும் ஒரு வரிவிடாமல் மகாதேவன்  அவரிடம் சொன்னான்.கவலையுடன் கேட்டுக்கொண்டார்.மூன்று நாள் வெளியில் எங்கும் போகாமால் வீட்டிலேயே கழித்தார்கள்.

நாலாவது நாள்...

” பூசாரி செத்துட்டதால.... புது பூசாரிக்கு பட்டம் கட்டல.இவங்க வேற தீட்ட இருக்காங்க.எப்படி பட்டம் கட்டறது.உங்க குடும்பத்துல வேற நிறைய துர் சம்பங்கள் நடக்குது.இங்க நாங்க மதிக்கிற  கிராமப் பெரிசு. ஒருத்தரு... வயசு 99.அவருகிட்ட கேட்டு செய்வோம்.ஆனா திடீர்ன்னு நெனவு இல்லாத போய்டுவாரு.நெனவு வர சமயத்தில புடிக்கனும்.சொன்னார்ன்னா...! அதான் வேத வாக்கு! வேத வாக்கு கேட்டு கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆச்சு”

கேட்டதும் ஈஸ்வரி ரொமப கவலையானாள்.வழக்கமான பிராத்தனையைக் கூட முடிக்க முடியாதுப் போல இருக்கே.இன்னும் ஒரு நாள்தான்இருக்கிறது.
அம்மாவிடம் எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருப்பதாக செல்லில் தகவல் சொல்லிக்கொண்டிருந்தாள்.

காலை 12 மணி.மகா தேவனும் ஈஸ்வரியும் டென்ஷனோடு வாசலையேப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது மாசானம் பிள்ளை ஓடிவந்தார்.

”வாங்க... வாங்க... நீங்க அதிர்ஷடம் செஞ்சவங்க...ஊர் வேத வாக்கு பெரிசு நினவு வந்து பேசறாரு. குல தெய்வப்பெட்டியை ஈஸ்வரி எடுத்துக்கொண்டாள்.

மாட்டு வண்டி குலுங்கி குலுங்கி மெயின் ரோடு வந்ததும் வேகம் பிடித்தது. பெட்டிக்குள் ஏதோ ஊர்வது போல் நினைப்பு வந்து திகிலுடன் அழுத்திப் பிடித்து அதயேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.அரை மணி நேரத்தில் வேதவாக்கு பெரியவரின் வீடு வந்தது. வெளியில் ஸ்ரீகண்ட முதலியார் அவர்கள் இல்லம் என்று போட்டிருந்தது.

கிராமத்து சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.ஈஸ்வரியைப் பார்த்து மெலிதாக சிரித்து பக்கத்தில் உட்காரச்சொன்னார்.

இருவரும் நமஸ்கரித்து பொட்டியை அவர் கையில் கொடுத்தாள்.விவரங்களைச் சொன்னார்கள்.

பழுத்துப்போன காகிதத்தை கண்ணாடிப்போட்டபடி படித்தார்.அரிசாமி தகடையும் பார்த்தார். மீண்டும் படித்துவிட்டு பார்த்தார். தகடைத் தள்ளி வைத்து விட்டு ஈஸ்வரியைப் பார்த்துப் புன்னகைப் புரிந்தார்.

“புது பூசாரிய வச்சு பிரார்த்தனய நிறவேத்திடலாமா... டைம் ஷார்டா இருக்கு” ஆர்வத்துடன் கேட்டாள்.

”உங்களுக்கு குல சாமியும் கிடையாது,பிரார்த்தனயும் கிடையாது.உங்களுக்கு நீங்கதான் சாமி. உங்கள நீங்களே கும்பிட்டுக்கனும்.புதுச கல்யாணம் ஆனா அர்த்த நாரி சாமின்ற பாவனை. பொண்டாட்டியும் புருசனும் சரி சமம்.புள்ளயார் படத்துக்கு முன்னாடி பெரிய கோலத்துப்போட்டுட்டு முன்னால நின்னு மாலைய மாத்திட்டு நமஸ்காரம் செஞ்சிட்டு வாழ்க்கைய தொடங்குங்க” சிரித்தார்.

”அப்போ பட்டினம் காப்பு அரிசாமி?” மாசானம்  கேட்டார்.

”இனிமே அரிசாமிக்கு ஒண்ணும் கிடைக்காது.கிடைக்கனும்னா குலதெய்....”
முடிக்காமல் நினைவிழந்தார்,

Saturday, May 29, 2010

பேய் வீட்டில் விழுந்த செல்போன் -திகில் கதை

இந்த ஏரியாவுக்கு வந்தது மகா மடத்தனம் என்று குடித்தனம் வந்த அடுத்த நாளே மனம் புழுங்கினார் உதயச்சந்திரன்.சொந்த வீட்டுக்காரர்கள்தான் இங்கு நெடுநாள் தாக்குப்பிடிப்பார்கள்.

அங்கும் இங்குமாக சில வீடுகள்.கட்டிமுடிக்காத பாதியில் நிற்கும் வீடுகள் சில.குறுகலானத் தெருக்கள்.மழை பெய்தால் ஏரியா ரொம்ப மோசமாகிவிடும்.அடுத்து இரவு 8 மணிக்கு ஏரியா அடங்கிவிடுகிறது.

                             12 A,சோலைமலை நிவாஸ்?


அந்த பெரிய  வீட்டைப் பார்த்தார். 12A,சோலைமலை நிவாஸ்.அதற்கு பிறகு ரோடு கிடையாது. Dead end. தெருவின் முனையில் தனியாக இருந்தது.தன் வீட்டிலிருந்து சற்றுத் தள்ளித்தான் இருந்தது.

ஆட்கள் புழங்காததால் முன்னும் பின்னும் செடிகொடிகள் காட்டுத்தனமாக வளர்ந்திருந்தது.வெளிச்சுவர்கள் பெயிண்ட்கள் உதிர்ந்து காறைப் படிந்திருந்தது.வீட்டின் வெளிஜன்னல் கதவுகள் இரண்டொன்று திறந்திருந்தன.உள்ளே ஒரே இருட்டு.கிரில்கள் துருப்பிடித்து இரும்புத் தெரிந்தது. வாசல் கிரில்கேட் துருபிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தது.ஷன்ஷேடுகளில் முழுவதும் புறா/காக்கை எச்சம்.

கிணறை நோக்கிப் போகும் சிமெண்ட் பாதை நிறைய இடத்தில் பெயர்ந்து புல் முளைத்திருந்தது.கிணறும் பாழடைந்து அதன் சுற்றுச் சுவர்களில் நிறைய காக்கை புறா எச்சங்கள்.




”என்ன சார்..! அந்த வீட்டையே பாக்குறீங்க? ஏரியாவுக்குப் புதுசா?”

”ஆமாம். எம் பேரு உதயச் சந்திரன்.அடுத்த தெருவுலதான்  குடி வந்துருக்கேன் ஒரு பிரைவேட் கம்பெனில ஜி.எம்..நீங்க”

“நானும் இதே ஏரியாதான்..ஐ ஆம் சுதாகர் ராவ்.ரொம்ப வருஷமா இருக்கேன்..”

“நேத்து  என் பொண்ணு  வாக்கிங் வரும் போது  என் செல்போன  இந்த வீட்டு உள்ள தூக்கிப்போட்டுட்டா.பிளாக் பெர்ரி.விலை  நாப்பாதியிரம் ரூபாய்.”

 ”நாப்பாதாயிரம் ரூபாய்யா? ஐய்யய்யோ... இந்த வீட்லயா?”மிரட்சியாக உதயச் சந்திரனைப் பார்த்தார்.

“அவ மூள வளர்ச்சி கம்மியான பொண்ணு.விளையாட்ட....! ஏன் உள்ளப் போய் எடுக்க முடியாதா?”

“சார்.. இது பேய் வீடு சார்.It is a haunted house. இந்த வீட்ல குடியிருந்த கீதா அப்பறம் வினோதினி அதுக்கு அப்புறம் லஷ்மி என்ற  பொண்ணுங்கெல்லாம் தூக்கு மாட்டிச் செத்துடிச்சுங்கோ. ராத்திரில பேய் நடமாட்டம் இருக்கு.அதற்கு பிறகு யாருமே
ரெண்ட்டுக்கு வரதில்லை.ஓனர் இந்தப் பக்கம் தல வச்சுப் படுக்கறது இல்ல. பயந்திட்டுப் பூட்டியே வச்சுட்டாரு”

”தூக்குப்போட்டுக்கிட்டாங்களா...? ஜனங்க கத வுடுவாங்க சார்...”

“ஏரியாக்காரங்கிறதனால கீதா,வினோதினி,டீச்சர் லஷ்மி மூணு பேர் சாவுக்கு சுடுகாடு வரை போனவன் சார்.கீதா என் தூரத்து உறவு சார்”

”இடிச்சுட்டு  ஒரு பூஜை பண்ணிட்டு வாஸ்து வச்சு திருப்பிக் கட்டலாமே?”

சுதாகர் ராவ் நமுட்டு சிரிப்போடு அவரைப் பார்த்தார்.

”ஒரு சின்ன  வயசு காண்ட்ராக்டர் தையரிமா டீல் பேசினாரு. அடுத்த வாரம் தூக்கு மாட்டி இறந்துட்டாரு.அதற்கு பிறகு ரெண்டு பேர் வந்து பிளாட் போடலாம்னு இறங்கினாங்க. ரெண்டு பேரும் ஆக்சிடெண்டல போயிட்டாங்க. ஒரு மாஜி எம் எல் ஏவும்  இத மாதிரியே போய்ட்டாரு.ஓனர் பயந்து அப்படியே வுட்டுட்டாரு.முனிசிபாலிடி ஆளுங்க குப்ப அள்ள திரும்பிக்கூட பார்க்கமாட்டாங்க”

”அதெல்லாம் தற்செயல்.இதுக்கும் அதுக்கும் கனெக்‌ஷன் இல்ல.ஜனங்க நெறைய ஸ்டோரி சொல்லுவாங்க..”

”நீஙக புதுசு.ஒண்ணும் தெரியல.உள்ளப் போன ஒரு பசுமாடு,ரெண்டு நாய் எல்லாம் செத்துடிச்சு.நீங்க செல்லெடுக்க உள்ள போய் ஏடாகூடமா எதுவாது ஆயிடப்போவுது.
போவாதீங்க”

”சார்..  செல்லோட வெல 40 ஆயிரம் ரூபாய்”

பேய்யைப் பார்ப்பதுப் போல் உதய சந்திரனைப் பார்த்து மிரண்டுவிட்டு “நைஸ் மீட்டிங்” என்று சொல்லிவிட்டு சுதாகர் ராவ் மறைந்தார்.

மணிபார்த்தார். மாலை 6.30. மெதுவாக இருட்ட ஆரம்பித்தது. சோலைமலை நிவாஸை நெருங்கினார்.நெருங்க நெருங்க இதயம் மெதுவாக படபடக்கஆரம்பித்துவேர்த்துக்கொட்டியது.
40 ஆயிரம் ரூபாய் செல்போன்! விட மனசில்லை.கேட்டில் கைவைத்த போது”ஜிவ்”வென்று உடம்பு முழுவதும் பரவி விறைத்துப்போனார்.

கீதா....வினோதினி.... டீச்சர் லஷ்மி...?

மீண்டும் படபடப்பு.வியர்வைக் குளியல்.போய் விடலாமா? ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிவிட்டது.தன் கையில் இருந்த இன்னோரு செல்(நோக்கியா) போனில் மணி பார்த்தார். 7.15.பயந்து பயந்து கேட்டை நெருங்க இவ்வளவு நேரம் ஆகிவிட்டதா?வீட்டில் கூட சொல்லவில்லையே?டார்ச் லைட்டாவது எடுத்து வந்திருக்கலாம்.

வியர்வையைத் துடைத்துக்கொண்டு ஆசுவாசமாகி ஒரு குண்டு தைரியத்துடன் கேட்டை தாண்டி எகிறி குதித்தார். முட்களும் புல் செடிகளும் காலில் நெருடியது.நாலாவது பெட்ரூமின் ஜன்னலை நெருங்கினார்.அதனுள்தான் செல்போன் விட்டெறிந்தாள் தன் பெண் பூர்ணிமா.கால்கள் படபடப்பில் ஒல்லிக்குச்சியாகி எலும்பு வலித்தது.

”வொய்ங்ங்”மேல் கதவைத் கஷ்டப்பட்டுத் திறந்தார்.நாய் இறந்த வாடை குடலைப் புடுங்கியது. முக்கை மூடியவாறுப் பார்த்தார்.  இருட்டு.தட்டு முட்டுச் சாமான்கள் நிழலாக தெரிந்தது. தன் செல்போனில் அந்த நம்பரைக் கூப்பிட்டார்.

”அனல் மேலே பனித்துளி...அலை பாயும் ஒரு கிளி..மரம் தேடும்.....”

உள்ளே டேபிள் மேல் சார்ஜ் வைக்கப்பட்டு செல் பளிச் பளிச் என்று ஒளிர்ந்தது.பாட்டு ஹாலில் எதிரொலித்து திகிலைக் கூட்டியது. ஒட்டிய உதடைப் பிரிக்க முடியாமல் படபடத்தார்.

ஐய்யோ...? இது என்  செல் டியூன் இல்லையே?நம்பரைப் பார்த்தார்.தன் நம்பர்தான்.ஏன் வேறு டியூன்?உள்ளங்கை ஈர பிசுபிசுப்புடன் நிறுத்திவிட்டு  மீண்டும் அடித்தார்.

 ”ஆயிரம்....! மலர்களே...! மலருங்கள்! அமுத கானம் பாடுங்கள்...நீங்களோ”

இதுவும் தன் செல் டியூன் அல்ல.

மீண்டும் செல்லில்தன் நம்பரை உறுதி செய்கையில்...உள்ளேகுரல் கேட்டது.

”ஏய்.... கீதா! ரெண்டாவது வாட்டி செல்லு ரிங்க் ஆகுது எடுடி..”

”என் கைல மருதாணி இட்டுட்டுருக்கேன்...லஷ்மிய எடுக்கச்சொல்லுடி வினோ...”

                                           முற்றும்

Thursday, March 12, 2009

சுமதியின் ராசி பலன் - திகில் கதை




சுமதி அந்த மின்சார ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ரொம்ப நேரம் ஆயிற்று.ஒரு ரயிலையும் காணும். மணி மாலை ஆறு. எண்ணாயிற்று.கூட்டம் வேறு சேர்ந்துக் கொண்டிருந்தது.பசி வேறு எடுக்க ஆரம்பித்தது.  பொழுது போகவில்லை. அங்கும் இங்கும் உலாத்தினாள். அப்போதுதான் அவள் கண்ணில் பட்டது அது.தினமும் பார்ப்பதுதான். 


எடை பார்க்கும் இயந்திரம். ”உங்கள் எடை, அதிர்ஷ்டம் துல்லியமாக கணிக்கும்... வருக... வருக.இரண்டு கலர் பல்புகள் “மினுக்..மினுக்... என்று மாறி மாறி எரிந்து வா...வா என்று அழைத்தது. ஒரு ரோபோ மாதிரி இருந்தது.


இதில் ஒரு முறை கூட ஏறி எடைப் பார்த்ததில்லை. எடை பார்ப்பவர்களை பார்த்ததுண்டு. துல்லியமாக எடை பார்க்க வேண்டும் என்று சிலர் ஜட்டியை மட்டும் விட்டு மீதி எல்லாவெற்றையும் கழட்டி துல்லியமாக பிசிறுத் தட்டாமல் எடைப் பார்ப்பார்கள். எதோ எக்ஸ்ரே எடுப்பது போல்.சிரிப்பு வரும்.


சுமதிக்கு அன்றைய எடையை விட அன்றைய அதிர்ஷ்டம்தான் முக்கியமாகப் பட்டது. அந்த கலர் பல்புகள் அவளை கண் சிமிட்டி அழைத்துக் கொண்டிருந்தது சுமதிக்கு பொதுவாகவே ராசிபலன்,புத்தாண்டு பலன்,இன்று நாள் எப்படி போன்ற வற்றில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஆனால் இன்றைக்கு இனம் புரியாத ஆர்வம் ஒன்று அரித்துக் கொண்டே இருந்தது.


நேரம் ஆக ஆக் இன்றைய அதிர்ஷ்டம் தெரியவிட்டால் ம்ண்டை வெடித்து விடும் போல் ஒரு படபட்ப்பு வந்து விட்டது.எடுத்தே விடுவது என்று முடிவு செய்து அதன் அருகே சென்றாள்.இன்றைக்கு எனக்கு என்ன ராசி பலன்?  தன லாபம்? எதிர்பாராத வெளியூர் பயணம்?


நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே கனமான காய்கறிப் பையையும், ஆபிசில் கொடுத்த பிரேம் போட்ட மஹா லட்சுமிப் படத்தையும் கிழே வைத்து விட்டு எடை மெஷினில் ஏறினாள்.விர்ர்ர்ர்ர்ர் என்று சத்தம் போட்டு சுத்தி சக்கரம் நின்றது.காசைப் போட்டாள். படக் என்ற சத்தம் வந்து எடை டிக்கெட் பிரிண்ட் ஆகி கவுண்டரில் வந்து விழுந்தது. 


கை விட்டு எடுக்கப் போனாள் .. அப்போது ...காது பொளந்து போவது போல் ஒரு வெடி குண்டு சத்தம்.உடம்பு அதிர்ந்து வெல வெலத்தது.அடுத்த ..”பட பட பட வென ....துப்பாக்கி சுடும் சத்தமும்... பயணிகள் கத்தும் சத்தமும், ஒலமும்..அதிர்ச்சியில் உறைந்து பின் பக்கம் பார்த்தாள். யாரோ ஒரு சிறுவன் உடம்பெல்லாம் ரத்த சகதியாகி, கை ஒன்று தனியாகி தொங்கியபடி, ஒலமிட்டபடி இவள் அருகில் சொத்தென்று விழுந்தான் . மிரண்டுப் போய் முகத்தில் சவ களைத்தட்ட “அய்யோ கடவுளே” என்றபடி அந்த எடை கார்டை பார்க்கமல் தன் ஹாண்ட் பேக்கில் போட்டுக் கொண்டு எல்லாவெற்றையும் தூக்கிக் கொண்டு ஒட முடியாமல் ‘தத்தாக்கா பித்தாக்கா” மூச்சு வாங்க எதிரில் தெரிந்த படிக்கட்டை நோக்கி ஓடினாள்.


வழியில் ஒருவர் மிதிப் பட்டு இறந்துக் கிடந்தார். “பதுங்குங்க.... ஒளிஞ்சுகுங்க.... தீவிரவாதி சுடறான்.....” ஒரு ரயில்வே போலீஸ் கத்திக்கொண்டே எதிர் திசையில் ஓடினார். அவர் பின்னால் அடிப் பட்ட ஒருவரை நான்கு பேர் தூக்கிக் கொண்டு ஒடினார்கள்.


கேட்டவுடன் உடம்பு ஒரு குலுக்கு குலுக்கியது.துப்பாகி சுடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.. ஆண்,பெண்,முதியவர்கள்,பிச்சைக் கர்ரர்கள்,சிறுவர்கள் பிளாட்பார சிறு வியாபாரிகள் விழுந்தடித்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்தப் படிஅங்கும் இங்கும் சிதறி ஒடினார்கள். பல பேர் உடலில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.


படிக்கெட்டில் ஏறி மேல் தளத்தில் வந்து பக்கத்தில் இருந்த இரும்பு தடுப்பிற்குள் நுழைந்து மொட்டை மாடி போல் இருந்த இடத்தில் படுத்துக் கொண்டாள். அவள் மாதிரி நிறைய பேர் தரையோடு ஒட்டியபடி படுத்துக் கிடந்தார்கள்.வலது பக்கத்திலும் ஆண் ,பெண் ,முதியவர்கள் என தரையோடு ஒட்டிப் படுத்திருந்தார்கள்.இவள் அருகில் ஒரு குரங்காட்டியும் பக்கத்தில் சங்கலியில்
கட்டிய குரங்கும் படுத்திருந்தது.   அது அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.


தலையை கவிழ்த்துக் கொண்டாள். மூச்சு முட்டி வேர்த்து விறு விறுத்துப் தெப்பலாக நனைந்துப் போனாள்.பல இடங்களில் சிராய்த்து எரிந்தது. புடவை முழங்கால் வரை தூக்கி காலின் கிழ் காய்கறிப் பை சிதறிக் கிடந்தது.ஒரிரு தக்காளிகள் ந்சுங்கி கால் விரல்களில் பிசுபிசுத்தது. தீவிரவாதி எல்லோரையும் சுட்டு விடுவானா? சுடும் போது வலிக்குமா? துடி துடித்துச் சாவேனா?காலில் விழுந்து கெஞ்சித் தப்பிக்கலாமா? 


எனக்கு இன்றைய ராசி பலன் என்ன? உயிரோடு திரும்புவோமா?


தன் குழந்தைகள் ஞாபகம் வந்தது. அழுகை முட்டியது. சத்தம் வராமல் கேவினாள். செல் போன்னை எடுத்தாள். பக்கத்தில் உள்ளவர்கள் ஜாடைக் காட்டி உள்ளே வைக்கச் சொன்னார்கள்.Slient mode ல் வைத்தாள்.அப்படியே முனகியபடியே படுத்து இரண்டரை மணி நேரம் ஓடி விட்டது.இடையிடையே வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. 


எனக்கு இன்றைய ராசி பலன் என்ன? 

மெதுவாக பேச்சுக் குரல்கள் கேட்க ஆரம்பித்தது. தலையை தூக்கிப் பார்த்தாள். மணி பத்து. லவுட்ஸ்பீக்கரில் ”பயணிகள் கவனிக்க மேற்கு கேட் வழியாக போய்விடுங்கள். அங்கு போலீஸ் பாது காப்பு உள்ளது. இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டு விட்டோம்.”


படபடப்பு சற்று குறைந்தது.எழுந்தாள்.உடம்பு கனத்தது. மனது திகிலுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

எனக்கு இன்றைய ராசிபலன் என்ன?  


செல் போனில் விபரத்தை கணவனிடம் சொன்னாள்.அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. சில பயணிகள் கூடி பேசி ஒரு பிரைவேட் டாக்ஸியில் வேண்டிய இடங்களில் இறங்கி சுமதியும் வீடு வந்து சேரும் போது மணி இரவு 12.45 பிரேம் போட்டமஹா லஷ்மிப் படத்தை மார்போடு அணைத்தபடிதான் பிரயாணம் செய்தாள்.வீடு வரும் வரை உடம்பில் நடுக்கம் இருந்தது. 


எனக்கு நேற்றைய பலன் என்ன?  


வீட்டில் எல்லோரும் தூங்கி விட்டார்கள். இவளுக்குத் தூக்கம் வரவில்லை.அந்த ஸ்டேஷன் நிலவரத்தைப் பார்க்க வேண்டும்.ம்ணி காலை மூன்று மணி. எழுந்து டீவியைப் போட்டாள்.அந்த தீவிரவாதியைப் பார்த்து அதிர்ந்தாள். அட... பாவி..

நீயா...?

தான் எடை எடுக்கும் முன் இவன் தான் எடை மெஷினில் ஏறி எடை எடுத்தான். அப்போது அந்த துப்பாக்கி தெரியவில்லை.அந்த அதிர்ஷ்ட வாசகம் ஆங்கிலத்தில் இருந்ததால் இவளிடம் உருது கலந்த இந்தியில் அர்த்தம் கேட்டான். அவள் காடை வாங்கிப் பார்த்தாள் அதில்

" Have      a       nice    and  joyful   day  " என்று இருந்ததை மொழி பெயர்த்துச் சொன்னாள். சிரித்தப்படி மிகுந்த நன்றி என்று பதிலளித்தான்.


அவசரமாக தன் பேக்கை எடுத்தாள்.கை நடுங்க தன் எடை அட்டையை எடுத்தாள். எடை 60kg என்று போட்டிருந்தது. மறு பக்கம் திருப்பலாமா? மார்பு படபடக்க ஆரம்பித்தது.  பார்க்க வேண்டாம்...பார்க்கமலேயே அதை துண்டு துண்டாக கிழித்து ஜன்னல் வழியாக வெளியே விட்டெறிந்தாள்.

                                   முற்றும்