Saturday, November 20, 2010

கொஞ்ச தூரம்தான்....(திக் திக் திகில் கதை)

இரவு 11.48.

"சார்.. வீடு கொஞ்ச தூரம்தான் ” பிபிஓ கம்பெனி சுமோ டிரைவர்.

கீர்த்திவாசன் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்து மெதுவாக இறங்கினான்.காற்றுச் சில்லிட்டது.

டிரைவர் நமுட்டு சிரிப்பு சிரித்தபடி வண்டியை விர்ர்ரென்று ரிவர்ஸ் எடுத்துப் பறந்தான்.

கும்மிருட்டில் தட்டுதடுமாறி தெருவைப் பார்த்தான்.தவளைகளின் கோரஸ்.பெரிய பள்ளம்.ரொம்ப நீளத்திற்கு வெட்டி இருந்தார்கள். இரண்டு பக்கமும் வெட்டிய மண்.மழையில் சேரும் சகதியுமாக. தடுப்பு பலகைகள் தாறு மாறாக கிடந்தன. ஒரு பக்கம் ஜல்லி குவியல்கள்.தெருவின் முக்கால் கிலோ மீட்டர் இதே சேறும் சகதியுமாக சில இடங்களில் குப்பையும் சத்தையுமாக.

தெருவை மீண்டும் பார்த்தான். அடப்பாவி..! இது வழக்கமாக டிராப் செய்யும் இடம் அல்ல.வழக்கமான இடம் இங்கிருந்து சுற்றிப் போக வேண்டும். ஜனங்கள் இந்த வழியை அவ்வளவாக உபயோகப்படுத்துவது இல்லை.பயம் கவ்வியது.

டிரைவர் ஏன் இங்கே இறக்கிவிட்டான்?

பாக்கெட்டைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான்.ஏடிஎம்மில் எடுத்த ஆறாயிரம் ரூபாய்.பத்திரமாக இருந்தது. எடுக்கும்போது டிரைவர் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.இவன் மீது நிறைய கம்பளைண்ட் உண்டு.


அவனை சபித்துக்கொண்டே சுமாரான வெளிச்சம் தேடி காலை வைத்தான். இடது கால் பொத்தென்று சேறில் சிக்கி தடுமாறினான்.செல்போன் எகிறி பக்கத்தில் எங்கோ சொத்தென்று தண்ணீரில் விழும் சத்தம்.சே... கடவுளே என்ன கொடுமை.?இதயம் அடித்துக்கொண்டது.

ஆசுவாசுப்படுத்திக்கொண்டு வலது காலை பலமாக ஊணி இடதுகாலை இழுத்தான்.தண்ணீர் உள்ளே போய் ஷூ தொளதொளத்தது.ஒரு வழியாக காலை எடுத்து ஒரு ஒரமாக வந்தான்.

செல் போச்சே.எங்கே தேடுவது.அங்கு பெரிய பள்ளமோ?நொந்துபோனான்.டிரைவரை சும்மா விடக்கூடாது.ஆப்பு வைக்க வேண்டும்.பாஸ்டர்ட்.

ரோடின் ஓரத்தை காலால் தடவி உற்றுப்பார்த்தான்.மக்கி போன குப்பைச் சத்தைகளூம்,பீர்/விஸ்கி/ரம் பாட்டிகளும்,பிளாஸ்டிக் கப்புகளும்,பிளேட்டுகளும்,எலும்பு துண்டுகளும் நடுவே ஒரு ஆட்டின் தலையும் கிடந்தது.நாற்றம் தாங்க முடியவில்லை. அருகில் டாஸ்மாக்?

இது பாம்புகள் நடமாடும் இடம் என்று வேறு கேள்வி.நினைத்தவுடன் குலை நடுங்கியது.மெதுவாக அடிமேல் அடி வைத்து நகர பின்னால் ஒளிவட்டம் அடிக்க திரும்பிப் பார்த்தான்.தன்னை டிராப் செய்த இடத்தில் ஒரு சுமோ நின்றது. யாரோ இறங்கினார்கள். அடுத்த வினாடி ரிவர்ஸ் எடுத்து விர்ர்ரென்று பறந்தது.அதே சுமோவா?

குத்துமதிப்பாக மெதுவாக நகர்ந்தவாரே அந்த மரங்கள் சூழ்ந்த பெரிய விட்டைப்பார்த்தான்.டிம் விளக்கில் காம்பெளண்ட் அருகே ஆளின் தலை மாதிரி ஒன்று தெரிந்தது.சார்...சார்... என்று கூப்பிட்டு கையாட்டினான். உடனே அந்த தலை மறைந்தது.விளக்கும் அணைந்துவிட்டது.உண்மையிலேயே ஆளா?

டிபன் பையை கிராஸாக மாட்டிக்கொண்டான்.பாண்ட்பாக்கெட் பணத்தை கெட்டியாக பிடித்தவாறு மெதுவாக நகர்ந்தான்.

அந்த வீடும் அதை ஒட்டிய சின்ன வீடும் சொத்து தகராறில் மாட்டி பூட்டிக்கிடப்பதாக கேள்வி.”எவனுக்குமே இந்த வீடுகள் கிடையாது. பேய்க்குத்தான் பாக்கியம்” என்று இதன் உரிமையாளர் மகன்களை சபித்துவிட்டு இறந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறான்.இன்றைக்குத்தான் இதையெல்லாம் உற்றுப்பார்க்கிறான்.

சாதாரண நாளில் இதெல்லாம் என்றுமே நினைவுக்கு வந்ததில்லை.இப்போது சட் சட்டென்று வருகிறது.ஓ ஷிட்..

செல்போன் கவலை, பாம்பு பயம்,பேய் வீடு எல்லாம் போட்டு வாட்டி வதக்க பித்துப் பிடித்தாற்போல் சேற்றில் கால்வைத்து மெதுவாக அடுத்த அடி வைத்தான்.மெதுவாக தூற ஆரம்பித்து சிறிது நேரத்தில் வலுத்தது.

தட்டு தடுமாறி கொஞ்ச தூரம் நடந்ததில் கைகால்கள் விட்டுப்போய் இருந்தது.கால்கள் ஈர்ச்சிப்போய் மரக்க தொடங்கியது.நிதானித்து அடுத்த அடி வைக்க எதிரில் கருப்பாக பெரிய உருவம். அடி வயிறு கலக்கியபடி உற்றுப்பார்த்தான். எருமை மாடு படுத்திருந்தது வாலை ஆட்டியபடி.

அதை விட்டு தள்ளி மெதுவாக நடந்தபோது யாரோ கட்டையால் தட்டும் ஓசைக் கேட்டது.ரொம்ப ஈனஸ்வரத்தில் முனகும் ஓசையும் கூடவே வந்தது. தவளையின் கோரஸ்ஸில் இது அமுங்கிதான் கேட்க முடிந்தது.

சுற்றிப்பார்த்தான்.மீண்டும் அந்த வீட்டில் தலை தெரிந்தது.கற்குவியலில் மறைந்துகொண்டுப் பார்த்தான்.இப்போது இல்லை.ஆனால் ஒரு பெண் முக்காடுப் போட்டுக்கொண்டு வேகமாக உள்ளே ஓடினாள்.டிம் லைட் அணைந்தது.

மீண்டும் தட்டும் சத்தம்.ஆனால் ஓசை அங்கிருந்து வரவில்லை.மெதுவாக ஜல்லி குவியலில் ஏறி குத்து மதிப்பாக தடுப்பு கட்டையில் கால்வைத்து அந்தப்பக்கம் தாவினான்.இது கூட அந்த தலை தெரிந்த வீட்டின் டிம் லைட்டில்
பார்த்து வைத்துக்கொண்டது. மெதுவாக ஊர்ந்தான். மீண்டும் குரல்.பெண்ணின் குரல்தான்.கூடவே தண்ணீரில் கல் அல்லது சேறு விழும் சத்தம்.பயத்தில் உடம்பு உதறியது.தூரலில் தெப்பலாக நனைந்து குளிர் எடுக்க ஆரம்பித்தது.  மணி பார்த்தான். 12.45.சத்தம் நின்றிருந்தது.

வழுக்கி வழுக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.ஒரளவுக்கு பாதை சுமராக இருந்தது. அடுத்த அடி வைக்கையில் உற்றுப்பார்த்தான். பெரிய பள்ளம்.கட்டைகள்.ஜல்லி குவிப்பு. சேறு சகதி. மெதுவாக ஊர்ந்தான். மீண்டும் பெண்ணின் குரல். மீண்டும் தண்ணீரில் கல் விழும் சத்தம். இங்கு தவளைகளின் இரைச்சல் ஜாஸ்தியாக இருந்தது.

குரல் வரும் திசைப் பக்கம் போகாமல் எதிர் திசையில் கவனமாக அடிவைத்து ஜல்லி குவியிலின் மேல் நடக்க நடக்க பாதையின் போக்கு தெரிய ஆரம்பித்தது.சேறு அவ்வளவாக இல்லை. வேகமாக நடந்தான். கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஓட ஆரம்பித்தான்.பாதை சீராக இருந்தது.தன் வீட்டை நெருங்கி நின்று பின்னால் பார்த்தான்.அநத சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. ஒரே ஓட்டமாக தன் வீட்டிற்குள் ஓடினான்.

அந்த பெரிய வீட்டிற்கு எதிரே.....

மைத்ரேயி ஒரு கையால் பள்ளத்தில் தொங்கிக்கொண்டிருந்தாள். ஒரு கையால் கையில் கிடைத்த கற்களையும் சேற்றையும் குட்டையில் அடித்தும் யாரும் வர காணோம். குரல் எழுப்பியும் ஓன்றும் ஆகவில்லை.

சற்று ஆக்ரோஷத்தோடு துழாவியதில் ஒரு மக்கிப்போன கட்டைக் கிடைத்தது. கட்டையை சேற்றில் குத்தி பாலன்ஸ் செய்து மேலே எக்கினாள். வேறு ஒரு கட்டை பிடிமானம் கிடைத்தது. ஒரு எக்கு எக்கினாள்.வழுக்கியது. மீண்டும் எக்கினாள்.அப்படியே அந்தப் பக்கம் போய் விழுந்தாள். உடம்பு முழுவதும் சேறும் சகதியுமாய் அப்பி எழுந்து உட்கார முடியாமல வழுக்கியது.

சமாளித்து உட்காரும்போது காலில் தன் கைப்பைத் தட்டுப்பட்டது.மகிழ்ச்சியோடு ஜிப்பைத் திறந்து செல்லை எடுத்தாள். நிறைய மிஸ்டு கால்கள். போன் செய்தாள்.

பெரிய வீட்டின் டிம் லைட் எரிந்தது. ஒரு மத்திய வயதில் ஒரு ஆணும் பெண்ணும் ஓடி வந்தார்கள்.

“ஓ ....அப்பா... ஓ அம்மா... நா இங்க இருக்கேன். டார்ச் கொண்டாங்க..” மைத்ரேயி தொண்டை வறள கமறினாள்.குளிரில் உடம்பு வெடவெடத்தது.

கொண்டு வந்து டார்ச் அடித்தார்கள். அதே வெளிச்சத்தில் பாதையை தொடர்ந்து மெதுவாக தட்டுத் தடுமாறி வீட்டை அடைந்தாள்..அம்மாவைக்கட்டிக்கொண்டாள். அப்பா அவளைப் பார்த்து அதிர்ச்சியானர்.

”ஏண்டி கண்ணு இப்படி? என்னடா காணலயேன்னு நானும் இவளும்  மூணு நாலு தடவ வெளில வந்துப்பாத்துட்டு போயிட்டோம்.”உள்ளே போனார்கள்.

“கரெக்ட் டைம்முக்கு வந்துட்டேம்மா.சேறு வழுக்கி அந்த பள்ளத்துல விழுந்துட்டேன்.அதிலேயே தொங்கிட்டு கத்தினேன்.கல்ல தண்ணீர்ல போட்டுசத்தம் ஏற்படுத்தினேன். யாரோ கிட்ட வர மாதிரி இருந்துச்சு. ஆனா அப்புறம் ஒண்ணும் கேட்கல.ஒரு வழியா வெளிவந்துடேன்.தைரியமும் வில் பவரும்தான் ரீசன்.”

”முதல்ல இந்த பிபிஓ வேலய உட்டு வேற வேலய பாரு.அடிவயத்துல புலிய கரைக்குர டென்ஷன் தாங்க முடியல”  அம்மா.

                                  முற்றும்

6 comments:

  1. Nalla thikalaa irukku

    ReplyDelete
  2. நன்றி ஆதித்யா.

    ReplyDelete
  3. philosophy prabhakaran said...

    // கலக்கல்....//



    நன்றி

    ReplyDelete
  4. சார்... கதை நல்லா இருந்தது. ரசித்தேன்.

    ReplyDelete
  5. நன்றி தமிழ்ப்பறவை

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!