Monday, August 30, 2010

நாளைய இயக்குனர் - குறும்பட விமர்சனம்-29-8-10

இந்த வாரக் குறும்பட விமர்சனம்: 29-8-10 ( போனவாரம்-22-8-10 )

சிறப்பு நடுவர் டைரக்டர் சுசீந்திரன் (நான் மகான் அல்ல).முதன் முதலாகவெண்ணிலா என்கிற ஒரு பெண் இயக்குனர் இதில் கலந்துக்கொண்டுள்ளார்.


எல்லாமே காதல் கதைகள்(?).எல்லாம் சுமார் ரகம்.

படம்:தேவதை  இயக்குனர்: முருகப்பன்

காதலன் காதலி சந்திக்கிறார்கள்.பேச்சு இயல்பான நகைச்சுவையோடு ஆரம்பிக்கிறது.படிப்படியாக சீரியஸ்ஸாகி காதலியைச் சுட்டுக்கொல்கிறான் காதலன்.தேவதை "வதை" செய்யப்படுகிறாள்.காரணம் காதலி தன்னிடம் உண்மையாக இல்லை.கொஞ்சம் நேரம் கழித்து அவன்  நண்பன் அவனைப் பார்க்க  வருகிறான். “ஏண்டா இப்படி” பதறுகிறான். அவனையும்  தலையில் சுட்டுக்கொல்கிறான்.

நண்பன் அவளின் கள்ளக்காதலன்.இருவருரையும் அருகருகில் கிடத்தி விட்டுப்போய்விடுகிறான். மறு நாள் செய்தித்தாளில் “காதலன் காதலியை சுட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை” என்று தலைப்புச்செய்தி.

துரோகம் செய்யும் நண்பனையும் காதலியும் மாட்டாமல் எப்படி கொலைச்செய்வது என்று திரில்லர் வகையில்கொண்டுப் போய் இருக்கலாம். சம்திங் மிஸ்ஸிங்.தொழில் முறை கொலையாளிபோல் .....ஓவர் ஸ்டைல்.

படம்:இப்படியும் சொல்லலாம் இயக்குனர்:சந்திரன்

தன் காதலியை (பார்க்கில் உட்கார்ந்திருக்கும்) முதன் முதலில் எப்படி பிரபோஸ் செய்தேன் என்று நண்பனிடம் விவரிக்கும்போது  காட்சியாக விரிந்து காதலி ஓகே ஆவதுதான் கதை.

 குழந்தைகள் விளையாட்டுப் போல் “நான்தான் காதலனாம்.நீ பார்க்கில் புக்கு படிச்சிட்டு உட்கார்ந்திருப்பயாம். நான் உன்ன பிரபோஸ் செய்வேனாம்” என்பது போல் டிராமத்தனம். பாரதியார் கவிதைகள்(?) வேறு சொல்லி பிரபோஸ் செய்கிறார்.பழைய காலத்துப்படம் போல காதலி ரொம்பவும் தனியாக பார்க் பெஞ்சில் உட்கார்ந்து  புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார்.

பிரபோஸ் ஓகே ஆக   அவள் கழுத்தில் கேமராவை மாலையாகப் போடுவது நச்.ரசிக்க முடிந்தது.

படம்:அந்த மூன்று நாட்கள் இயக்குனர்:வெண்ணிலா

ஒரு இளைஞன் மூன்று நாட்கள் நண்பர்களோடு குட்டிச்சுவரில் உட்கார்ந்துக்கொண்டு ரோடில் போகும் பிகரை “கரெட்”(காதல்!)  செய்ய நம்பிக்கையோடு பாடுபடுகிறான்.கடைசியில் அந்த பிகர் நண்பனுக்கு ”கரெக்”டாகிறது இவனுக்கு ஆகவில்லை.யூகித்துவிடலாம்.

இளைஞர்களின் உருவத்தை முதலில் பார்க்கும்போது இங்கும் “மதுரை”யா? பகீர் என்றது.படம் ஒரு இடத்தில் முடிந்துவிடுகிறது.அதற்குப்பின்னும்  எதற்கு கோனார் நோட்ஸ்?

இளையராஜாவின் பாடல் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டுள்ளது. Self confidence தானே வேண்டும்? ஏன்  confidence என்கிறார் நாயகன்(?).வசனங்களில் உயிரே இல்லை.

படம்:WOO ...WOOOOO இயக்குனர்:பாலா

இதுவும் அதே ரகம்தான். ஆனால் கடைசியில் சற்று தேவலை.

___________________________

இயக்குனர்கள் தங்களுக்கு பிடித்த “பிகர்” சப்ஜெக்டயே இயக்குவதை முதலில் நிறுத்த வேண்டும்.அப்படி இயக்கினால் வித்தியாசமாக இருக்க வேண்டும்.

கிழ் வரும் குறும்படத்தில்(பழையது)நகைச்சுவை அருமையாக கையாளப்பட்டுள்ளது.எல்லா பாத்திரங்களும் அருமை.





Wednesday, August 25, 2010

குறும்படங்கள்-கலைஞர் டிவி

முடிந்தவரை வாரவாரம் கலைஞர் தொலைக்காட்சியில்
“நாளைய இயக்குனர்”நிகழ்ச்சியில் திரையிடப்படும் படங்களை பதிவில் விமர்சிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
 
ஒரு பாமரன் பார்வையில்தான் விமர்சனம்.டெக்னிகல் தெரியாது.

குறும்படங்கள் எனக்குப் பிடித்தமான ஒன்று. காரணம் சற்று வித்தியாசமாக  ஒரு மாதிரி “கு(து)று கு(து)று”வென்று இருக்கும்.முழு நீளப் படங்கள் போல் அரைத்த மாவையே அரைப்பது கிடையாது.

இதைப் பற்றிய முந்தைய பதிவு:குறும்படம் 

முந்திய பதிவில் விட்டுப்போனது. வசனங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.இங்கும் “சுடுதல்”உண்டு.வருத்தமான ஒன்று.

வாரம் 22-08-10:

தலைப்பு:ஆயுதம் -  இயக்குனர்: ராம்

கதை: பல பேருக்கு டென்ஷன் கொடுக்கும் கட்டப் பஞ்சாயத்து ரவுடி தலைவனுக்கு டென்ஷன் கொடுக்கும் ஆஸ்துமா வீசிங் படுத்துவதுதான்.இவனுக்கு  துப்பாக்கி எவ்வளவு அவசியமோ அவ்வளவு  அவசியம Nebulizer.ரவுடி கையில் எப்போதும் குவார்ட்டர் கட்டிங் இருக்கும். இதில் Nebulizer.

வித்தியாசமான  சூப்பர் கரு. முடிவை முதலிலேயே யூகித்து விடலாம்.

இசை  மற்றும் எடுத்த விதம் அற்புதம்.முடிவில் ஆஸ்துமா வந்த டென்ஷனில துப்பாக்கிக்குப் பதிலாக Nebulizer  வைத்து சுட்டுக்கொண்டுவிடுகிறார்.

எனக்கு ரொமப் பிடித்தது.

தலைப்பு:மகுடி- இயக்குனர்: பாலா

கதை:கார் திருடன்  ஒருவன் காரில் போகும் ஒருவரை பைக்கில் அடிக்கடி தொடர்ந்து போக்குக்காட்டி(மகுடி ஊதுவது மாதிரி) அவரின் காரைத் திருடுகிறான். 

நிறைய அவுட்டோர்.இன்னும் கூட விறுவிறுப்பு & லாஜிக் கொண்டு வந்திருக்கலாம்.கடைசியில் காரில் திருடன் பாட்டுப்போடுவது படத்தின் தீவிரத்தை நீர்க்க வைக்கிறது.

காட்டில் தொடரும் போது வரும் காட்சிகள் ஹாலிவுட் திகில் படத்தை நினைவூட்டுகின்றன.

தலைப்பு:Short Film - இயக்குனர்: மணிவண்ணன்

கதை:சிடியில்(நெட்டில்?) படம் பார்க்கும் ஒருவன் இறந்துவிடுகிறான்.அவனின் ஒரு கண் டீபாயில் விழுந்துக்கிடக்கிறது.போலீஸ் துப்பறிகிறது.துப்பறியும் போலீசும் ஒரு கண் வெளியே வந்து இறந்துவிடுகிறார்.

ஒரு முறைப் பார்த்தால் மறுமுறை பார்க்கக் கூடாத படமாம்.இப்படி ஆரம்பிக்கும்போது திகிலாக இருந்தது.(பார்த்தால் கண் வெளியே வந்துவிடுமாம்).திகில் ஏற்படுத்தியதே இயக்குனரின் வெற்றிதான்.

குறை ஒன்றும் இல்லை.எனக்குப் பிடித்திருந்தது.ஆனால் ஏதோ ஜப்பானியப் படம் பாதிப்பு என்று  நடுவர் பிரதாப் சொன்னார்.

தலைப்பு:அன்று ஜாலி.இன்று காலி - இயக்குனர்:ஷரத்

கதை:வீட்டில் கொடுத்த பணத்தை((EB கட்டணம்) ”ஜாலி” செய்துவிட்டுபோலீசுக்கு மாமூல் கொடுத்ததாக பொய் சொல்கிறான்.நம்பிய பெற்றோர்கள் மறுநாள்கொடுத்த பணம் உண்மையாக (இன்றும் ஜாலி செய்ய கிளம்பும் போது)டிராபிக் போலீசில் மாட்டி மாமூல் கொடுத்துக் ”காலி” ஆகிறான்.

அட... நம்ம கதை! பிடித்திருந்தது.

நகைச்சுவை படம்.பையன் விடியா மூஞ்சியாகவே இருப்பது அற்புதம்.ஆனால் அப்பா பொருத்தமாகவே இல்ல்லை.அதுவும் அம்மாவிற்கு ஏற்ற அப்பாவாக.
போலீஸ்-பையன் மோதல் யதார்த்தமாக இருந்தது.ஆனால் பணம் கிடைத்ததும் தன்  மனைவிக்கு போலீஸ் போன் செய்வது செயற்கை.

நடுவர்கள் ரசிக்காதது ஆச்சரியம்!

என்னிடம் குறும்படத்திற்குண்டான  இரண்டுகதைகள் உள்ளன. அவை:

1. பேய் வீட்டில் விழுந்த செல்போன்

2.சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி

என்னை அணுகலாம்.




Tuesday, August 24, 2010

1970 -மெட்ராஸ்-காதல் கம் சஸ்பென்ஸ் கதை

 (திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த விறுவிறுப்பான கதை.சம்பவங்கள் கற்பனையே)
 
அந்த வீட்டின் ஹாலில் இருந்த கனி அண்ட் சன்ஸ் மஞ்சள் பூத்த டயல்( பெரிய) கடியாரத்தில் ”டங்..டங்..டங்..டங்..” பெண்டுலம்  நான்கு முறை இப்படியும் அப்படியும் மெதுவாக தள்ளாடி நான்கு என்று காட்டியது. திலகவதி   தன் கொண்டையை சரி செய்து தலைப்புப் போர்த்தியபடி  கவலையோடு  வாசலுக்கு வந்தாள்.

கல்லூரியிலிருந்து மகள் வசந்தி இன்னும் வரவில்லை.இன்றோடு நான்காவது நாள் இப்படி வருவது.காரணம் கேட்டால் “ஸ்பெஷல் கிளாஸ்” என்பாள். எப்போதும் காலையில் சொல்ல மாட்டாள்.துளிர்விட்டு போய் விட்டது.

வசந்தி வரும்போது மணி 5.30.

“வெளக்கு வைக்கிற நேரம் தெரியுமில்ல?”திலகவதி முறைத்தாள்.



“இன்னிக்கு 5B பஸ்காரன் ஸ்டாப்புல் நிக்காத போயிட்டான்.அடுத்த ரெண்டும் பிரேக்டெளன். அதான் லேட்ம்மா.அப்பாகிட்ட சொல்லிடாதே.பொலி போட்டுவாரு”

வசந்தி லேட்டாக வருவதற்குக் காரணம் இருக்கிறது.



ஒரு வாரத்திற்கு முன் ........

காலேஜ் விட்டு வந்ததும் முதல் வேலையாக  பாட்டனி நோட்டிலிருந்து அந்தக் கடிதத்தை எடுத்தாள். பாத்ரூமுக்குச் சென்றாள்.படிக்க ஆரம்பித்தாள்.

அன்புள்ள வசந்தி,

உன் வீட்டு அடுத்த தெருவில்  இருக்கும் சீதாபதி காதலுடன் எழுதும் கடிதம்.நான் நந்தனம் ஜென்ட்ஸ் காலேஜில் B.A.(Arts)  மூன்றாம் ஆண்டு படிக்கிறேன்.

உன்னை போன மாதம் முதன்முதலாக  குமரன் பட்டாணிக் கடை வாசலில் பார்த்தேன். புத்தங்களை மார்போடு அணைத்தவாறு வேர்கடலை சாப்பிட்டுக்கொண்டே  பிரெண்டுடன் நடந்த அழகைக் கண்ணதாசன்தான் வர்ணிக்க வேண்டும்.அதுவும் பின்னலை முன்பக்கம்  ஸ்டைலாக விட்டபடி.

கண்டவுடன்  காதல் கொண்டுவிட்டேன்.அன்றிலிருந்து இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவிக்கிறேன்.எங்கு பார்த்தாலும் உன் முகமே தெரிகிறது.

என்னையும் ஓரக்கண்ணால் தினமும் பார்க்கிறாய்.ஆனால்  பார்க்காதது போல் பாசாங்கு செய்கிறாய்.உன் கூட பேச வேண்டும்.உன் சம்மதம் தெரிய வேண்டும்.உனக்காக “ஆட்டின்” போட்ட கர்சீப்பும் ஒரு மோதிரமும் வாங்கி பரிசாக கொடுக்க வாங்கி வைத்துள்ளேன்.அதுவும் உனக்குப் பிடித்த அலிமா  பேன்சி கவரிங்  கடையில்.

என் காதலை ஏற்றுக்கொண்டு பதில் கடிதம் எழுது வசந்தி(உச்சரிக்கும்போது நாக்கில் தேன் சொட்டுகிறது). கடிதம் எழுத பயமாக இருந்தால்  நாளை அல்லது மறு நாள்  என்னைக் கடக்கும் போது உன் பேனாவையோ அல்லது புத்தகத்தையோ கிழே தவற விட்டு பாசாங்கு செய்.நான் புரிந்துக்கொள்கிறேன்.

என்னை ஏமாற்றிவிடாதே வசந்தி.நீஇல்லாம என்னால் வாழ முடியாது.

என்றும் காதலுடன்
சீதாபதி

கடிதத்தைச் சுக்கு நூறாக கிழித்து  வென்னீர் பாய்லரில் போட்டாள்.

சீதாபதியை ஏமாற்றாமல் ஆர்வத்துடன் புத்தகத்தைத் தவற விட்டு காதலிக்க ஆரம்பித்தாள்.இவர்கள் காதல் இப்படித்தான் ஆரம்பித்து பல மாசம் தொடர்ந்தது.


                                               __________________

”சார்.. தந்தி” வாசலில் தந்தி சிப்பந்தி (காதில் பென்சில் சொருகியபடி)குரல் கொடுத்தான்.பரபரப்புடன் வாங்கி பிரித்தார் பூரணலிங்கம் (வசந்தியின் அப்பா).

”என்ன விஷயம்? யாராவது.....?”திலகவதி பதற்றமானாள்.

”நல்ல விஷயம். என் தங்கச்சி மவன் பூபதி மெட்ராசுக்கு நாளைக்கு வரானாம்.பின்னி மில்ஸ்ல அப்ரண்டிஸ்ஸா செலக்ட் ஆகி இருக்கானாம்.பழம் நழுவி பாலுல விழுந்த மாதிரிதான். வர தைல இவனுக்கும் வசந்திக்கும் தடபுடலா கல்யாணத்த முடிச்சிடலாம்”.

”முருகா...! பூபதியா? அவனோட கிருதாவும் மீசையும் ரவுடி போல.எப்ப பாரு இங்கிலீஷ்காரன் போல சிவிங்கம் மென்னுட்டு இருப்பன். ஊதாரி..ஊர்சுத்தின்னு வேற கேள்விப்பட்டேன்.”

”ஓடற பாம்ப நடு செண்டர்ல மிதிக்கற வயசு.அப்படி இப்படிதான் இருப்பான்.வசந்தி இவன இடுப்புல முடிஞ்சிடுவா.அவ அழகுல மயங்கி இவன் பொட்டிப்பாம்பா அடங்கிடுவான்”

“வேண்டாங்க...டெல்லிலே ஒரு வரன்.ஒரே பையன்.பிடிப்பு போக மாசம் 500 சம்பளம்.பிக்கல் பிடுங்கல் கிடையாது.சீர்வரிசையா ஆறு பவுன் நகை கைல மூவாயிரமும். மெட்ராசுல கல்யாணத்த பண்ணி வைக்க ஒன்னும் அப்ஜெக்‌ஷன் இல்லையாம்.”

“எனக்கு தெரியும்டி...நீ போய் வேலய பாரு” உருமினார்.

வசந்தி அடிவயிறு பகீரென்றது.கூடிய விரைவில் தன் காதலை தைரியமாக் அப்பாவிடம் சொல்லலாம் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தாள்.இப்போது சொன்னால்கொன்னே போட்டுவிடுவாரே?

மறு நாள் எல்லா விஷயத்தையும் சீதாபதியிடம் சொல்லி  திருநீர் மலையில் ரகசிய திருமணம் ஏற்பாடு செய்ய சொன்னாள்.தெய்வம் நம்மை கை விடாது என்றும் பொறுமை காக்குமாறு  வசந்திக்கு ஆறுதல் சொன்னான்.
                    __________________


ஒரு வாரம்  கழித்து  ஒரு நாள்......

பூரண லிங்கம் ஒரு நகைப்பெட்டியை திறந்து திலகவதியிடம் காட்டினார்.திலகவதி முகத்தில் வைரத்தின் ”டால்”அடித்தது. அது அதிக வேலைப்பாடுடன் கூடிய வைர நெக்லஸ்.

”இது என் பால்ய சினேகிதன் வையாபுரி கொடுத்தான்.அவனோட பரம்பரை சொத்து.அவன் குடும்பத்தோடு காசி ராமேஸ்வரம்னு பல ஊருக்கு தீர்த்த யாத்திர போறான்.ஒரு மாசம் ஆகும். அதுவர நம்ம பத்திரமா வச்சிட்டு திருப்பி கொடுக்கனும்.நம்ம மேல எவ்வளவு நம்பிக்கை”

”மதிப்பு என்ன இருக்கும்”

“ ஒரு லட்ச ரூபாய்”

திலகவதி வாய் பிளந்தாள்.

அதே சமயத்தில் பூபதியும் வாய் பிளந்தான் .பெட்ரூமின் பக்கத்தில் ஒளிந்து இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். மனதில் திட்டம் தீட்டினான். இதை அபகரித்து கிளப் டான்ஸர் காதலி ரீட்டாவுடன் சிங்கப்பூரில் செட்டில்ஆகி விட வேண்டும்.பின்னி மில்ஸ் லேத்தில் யார் மாரடிப்பது. போவதற்கு  முன் வசந்தியின் கற்பையும் சூறையாடி விட வேண்டும்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள்.....

எல்லோரும் குடும்பத்தோடு  ஹாலில் இருக்க பூபதி நமட்டு சிரிப்போடு வசந்தியை நோக்கி வந்தான்.

”மாமா.. உங்க பொண்ணு காலேஜிக்குத்தான் போறாளா? இல்லேன்னா ஊர் சுத்த போறாளா?எனக்கு மனைவிய வரவ பதிவிரதையா இருக்கனம்னு நான் ஆசப்படறேன் ” கள்ளத்தனமாகச் சிரித்தான்

“என்ன இது வாய் நீளுது.அடக்கிப்பேசு...” பூர்ண லிங்கம்

“ நேத்து இவ  ஒரு பையனோட இடுப்பல கைவச்சிட்டு லாம்பி ஸ்கூட்டர்ல வுட்லெண்ட்ஸ் டிரைவ் இன்லேந்து வரதப் பார்தேன். காலேஜ்ஜ அங்க மாத்திட்டாங்களா?”

”ஆமாம.அவரை நான் காதலிக்கிறேன்”

 கேட்டவுடன் பூரண லிங்கம் எரிமலையானார்.

”நம்ம பரம்பரைக்கே அவமானத்த உண்டுபண்ணிட்டியே”

வீடு கலவரமானது.வசந்தி அப்பா முன் நின்று பேசக்கூடாது என்று உள்ளே தள்ளப்பட்டாள்.

வசந்தியின் படிப்பு அன்றோடு நிறுத்தப்பட்டது.கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.
பூபதிதான் மணமகன்.இவனைக் கட்டிக்கொள்வதை விட தன்னை ஒரு பாழும் கிணற்றில் தள்ளச் சொல்லி கதறினாள் வசந்தி.யாரும் கேட்கவில்லை.

சீதாபதிக்கு  விஷயம் போயிற்று. ஆர்வத்தில் காதலித்து விட்டோம்.இப்போது என்ன செய்வது. அப்பா அம்மா இருவரும்  ஊரில் இல்லை.ஒன்றும் புரியாமல் கையைப் பிசைந்துக்கொண்டு நின்றான்.

அடுத்த இடி அவன் தலையில் விழுந்தது.

சீதாபதியின் “கெட்ட நடத்தை”யின் பேரில் காலேஜில்  டிசிப்பிளினரி ஆக்‌ஷன் எடுத்து அவனை சஸ்பெண்ட் செய்தார்கள். சோகத்தில் சீதாபதி தாடி வைத்து நடை பிணமானான்.வசந்தியை பார்க்க முடியாமல் தவித்தான்.

பூபதியை மணக்க வசந்தி சம்மதித்து விட்டதாக நண்பன் கோபால் மூலமாக தகவல் வந்தது.
சீதாபதி வாடிப்போனான்.


11-09-1970. திருமண நாள்.மண்டபம் நிரம்பி வழிந்தது.தாலி கட்ட இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.பூபதி மாலையும் கழுத்துமாக திருட்டு முழி முழித்துக்கொண்டிருந்தான்.

மண்டபத்தின் வாசலில் ஒரு கார் வந்து நின்றது.அதிலிருந்து பூர்ண லிங்கம் நண்பர் வையாபுரி இறங்கினார்.

நுழைந்ததும்  நுழையாததுமாக லிங்கத்திடம் வைர நெக்லஸ்ஸை அதிகார தோரணையுடன் கேட்டார்.

 ”முதல்ல டிபன் சாப்பிடு வையாபுரி. முகூர்த்தம் முடியட்டும் தரேன்”

”இல்ல இப்பவே வேணும்” அடம்பிடித்தார்.

”என்னாச்சு இவருக்கு” புரியாமல் பூரணலிங்கம் நெக்லஸை வரவழைத்துக் கொடுத்தார்.

வாங்கிப்பார்த்த அடுத்த நிமிடம்....

” கல்யாணத்த நிறுத்து..?இது போலி நெக்லஸ்.பொண்ணு கல்யாணத்துக்கு  பணம் வேணும்னு வித்துட்டு போலிய என் தலைல கட்டி டிராமா போடறயா லிங்கம்.அசல் எங்க?”

 மண்டபமே அதிரும்படி கத்தினார் வையாபுரி.அதே சமயத்தில் சீதாபதி 120 மைல் வேகத்தில் தன் ஸ்கூட்டரில் ஒரு ஹைவேஸ்ஸில் மண்டபத்தை நோக்கி வந்துக்கொண்டிருந்தான்.



”போலியா? ஆண்டவன் மேல சத்தியமா சொல்றேன். எனக்கு ஒண்ணும் தெரியாது.”  தன் மார்ப்பைப் பிடித்தபடி மண்டப தூணில் சாய்ந்தார் லிங்கம்.

கல்யாணத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் வாயடைத்துப்போய் அவரேயே  பார்த்தார்கள்.

“மறுபடியும் டிராமா போடறயா? இது போலிதான். இது என் பரம்பரை சொத்து. பணத்துக்கு ஈடு செய்ய முடியாது.இதுக்கு பிராயசித்தமா என் சகோதரி  மகன் கோபாலுக்கு உன் பொண்ண  இதே முகூர்த்தத்துல கட்டிக்கொடு. எனக்கு நெக்லஸ் வேணாம்”

”என்ன மாமா இது?யாரு இது கோபால்? என் மானம் போகுது” பூபதி கத்தினான்.

கோபாலா....?சீதாபதியின் உயிர் நண்பன்.வசந்தி விக்கித்து நின்றாள்.கண்கள் இருட்டி மயக்கம் வந்தது.

மண்டபம் அல்லோகல்லோகப்பட்டது.

“நீங்கதான் டிராமா போடறீங்க மிஸ்டர் வையாபுரி”மண்டப வாசலில் சீதாபதி இடுப்பில் ஸ்டைலாக கை வைத்தபடி.எல்லோரும் ஒரு நிமிடம் அதிர்ந்து  அமைதியானார்கள்.

“இங்க என்னப்பா நடக்குது. ஒண்ணும் புரியல”கையில் அட்சதையும் பூக்களுமாக(உள்ளங்கை வேர்வை ) ஒரு முதியவர் தலையை ஆட்டிக்கொண்டே சத்தம் போட்டார்.

”சொல்றேன்”. சீதாபதி சொல்ல ஆரம்பித்தான்.

 ”வசந்திய நான் உயிருக்கு உயிரா காதலிச்சேன்.என் நண்பன்...மன்னிக்கவும்  துரோகியும் நான் காதலிப்பது தெரிந்தும் அவள் மேல ஆசைப்பட்டான்.அவள எப்படியாவது அடையனும்னு துடிச்சான்.இவன் போற மூணு சீட்டாட்ட கிளப்புக்கு பூபதியும் வருவான்.
ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. ஒரு லட்ச ரூபா நெக்லஸ் பத்தியும் ரெண்டுபேருக்கும் தெரியும். வையாபுரி கோபால் அப்பா கிட்ட 3000 ரூபாய் வீடு கட்ட கடன் வாங்கி இருந்தாரு. திருப்பி தர வையாபுரிக்கு வருமானம் இல்ல.திட்டம் போட்டாங்க.பூபதி நெக்லஸ்ஸ திருடிட்டு போலிய வச்சுருவான்.கல்யாணத்த அன்னிக்கு வையாபுரி வந்து கேட்பறாரு.அப்ப இருக்காது. உடனே வசந்திய கட்டி வக்கச் சொல்வாரு.இக்கட்டான நிலமைல லிங்கம் கட்டி வச்சுடுவாரு.இவன் நெக்லஸ்ஸோட கள்ளக் காதலியுடன் சிங்கப்பூர் ஓடிடுவான்.இதுதான் திட்டம்” சொல்லிக்கொண்டிருக்கும் போது.......

”நண்பனாட நீ...ராஸ்கல்” லிங்கம் வையாபுரியின் சட்டையைப் பிடித்தார்.

“நில்லுங்க சார்.. இவன் உண்மையான வையாபுரி இல்ல.உண்மையான வையாபுரியை கோடெளன்ல கட்டிப்போட்டு வச்சிட்டாங்க” என்று சொல்லி வையாபுரியின் முகத்தில் இருந்த முகமூடியை உருவினான் சீதாபதி.

”இவன்  பழைய கேடி பைரவன்”

”டுமீல்” என்ற வானத்தை நோக்கி துப்பாக்கி சுடும் சத்தம்.”யாரும் அசையாதீங்க” சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் சத்தம்போட்டபடி உள்ளே வந்தார்.பின்னால் போலீஸ்காரர்கள்.

” ஏய்.... 502.ஏய்.... 405 இவங்க மூணு பேரையும் விலங்கு போட்டு அரெஸ்ட் பண்ணு”

ஏட்டுக்கள் மூவருக்கும் விலங்குப் போட்டு முட்டி தள்ளிக்கொண்டுப்போய் ஜீப்பில் ஏற்றினார்கள்

”சரியான சமயத்தில வந்து எங்கள காப்பாத்தினீங்க. இருந்து சாப்பிட்டு போங்க” என்றார் லிங்கம். அவசரமாக ஒரு பந்தோபஸ்து டூட்டி இருப்பதாக் சொல்லி வீரபாண்டியன்
கிளம்பினார்.

உண்மையான வையாபுரியும் லிங்கமும் ஆரத்தழுவிக்கொண்டார்கள்.பார்த்தவர்கள் கண்கள் பனித்தன.

“தம்பி உன்னப் போல உத்தமன் இந்த உலகத்துல பாத்தது இல்ல.”நெகிழ்ந்தார்

அதே மேடையில் கல்லூரி பிரின்சிபாலும் உண்மைத் தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

“முகூர்த்தத்திற்கு நாழியாரது... யாரு மாப்பிள்ள....?”அய்யர் விசிறிக்கொண்டே கேட்டார்.

 ”இந்த தங்க கம்பிதான்.. மாப்பிள....என்ன மன்னிச்சுடுங்க மாப்பிள..”  பட்டு வேட்டி சட்டையை தாம்பளத்தில்  வைத்துக் கொடுத்தார்.வசந்தியின் கன்னம் சிவந்தது.

“நீங்க வயசுல எவ்வளவு பெரியவரு. நீங்க போய் இதெல்லாம் சொல்லிகிட்டு”

சீதாபதியின் ஒண்ணுவிட்ட பெரியப்பா ராமலிங்கம் மாப்பிள்ளை சார்பில் நின்று தாம்பளத்தைத் தொட்டு ஆசிர்வதித்தார்.

கொட்டு மேளம் கொட்டியது.

’மாங்கல்யம் தந்துனானே மம” அய்யர்  மந்திரம் ஓத   தலை குனிந்த வசந்தியின் கழுத்தில் தாலிக் கட்டினான் சீதாபதி. எல்லோரும் அட்சதை மற்றும் பூத் தூவி ஆசிர்வதித்தார்கள்.

                                     சுபம்

Saturday, August 21, 2010

அஞ்சு “தல” தல..!

ஈமெயிலில் வந்த போட்டோக்கள்.பங்களுரூவில் ஒரு வீட்டில் எடுக்கப்பட்டதாக மெயில் சொல்கிறது.



இதுக்கு அஞ்சு “ஈகோ” இருக்குமா?



பஸ்ல போன  கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு சுலபமாக பிரயாணம் செய்யலாம்.


பேஸ் பால் விளையாடுதோ?

Friday, August 20, 2010

புது மாப்பிள்ளை இஸ்திரிக்காரர்

முடியை சீவிப் பார்த்தேன்
காஸ்ட்லி  பாரின் வர்ண சீப்பில்
ஒரு பல்லும் உடையவில்லை

வாஷிங்மிஷினும்
கண்டுகொள்ளவில்லை

பேண்டின் பின் பாக்கெட்டில்
குறுக்கு வாட்டில்
வைத்தது வைத்தப்படி
தோய்த்துவிட்டது

அதே  குறுக்கு வாட்டில்
வைத்தது வைத்தப்படி
உலர்த்தியாகியும் விட்டது

அதே குறுக்குவாட்டில்
இஸ்திரி செய்தும் வந்துவிட்டது

 வாரி முடித்து பின் பாக்கெட்டில்
 குறுக்காக வைக்கையில்
 இஸ்திரிக்காரார் சற்று உறுத்தினார்

இஸ்திரிக்காரரைப் பார்த்து
 ”பர்ஸ்ட் டைம் இது மாதிரி”
என்று சொல்ல நினைத்த நான்
திரும்பிவிட்டேன்

இஸ்திரிக்காரர் முடியை
அழகாக சீவி புது மாப்பிள்ளை
கணக்காக இருந்தார்

Tuesday, August 17, 2010

எந்திரன் (காதல் அணுக்கள்) இசை, ராஜாவின் தாக்கம் ????

ஆஸ்கர் தம்பி A.R.ரஹ்மான் எம்.எஸ்.விஸ்வநாதனின் பரம ரசிகர்.அவர் பாடல்களில் எம்.எஸ்.விஸ்வநாதனின் தாக்கத்தைப் பார்க்கலாம்.சமீபத்தில் ராவணன் படத்தில் வரும் “கள்வரே” பாடல் கூட இவரின் தாக்கம்தான்.

இளையராஜாவும் அவரைப் போட்டுத் தாக்கி இருக்கிறார். எப்படி? கிழே பார்க்கலாம்.

(....கபர்தார் ரஜினி.... ...கபர்தார் ரஜினி.... ...கபர்தார் ரஜினி....)

A.R.ரஹ்மான் இசையில் எந்திரன் படத்தில் “காதல் அணுக்கள்” என்ற பாடல் உள்ளது. விஜய் பிரகாஷும் ஷீரேயா கோஷாலும் பாடி இருக்கிறார்கள்.இது 5.46 நிமிடம் ஓடுகிறது.

ராஜா தாக்கிய தாக்கலில் ரஹமானின் மனதை விட்டு அகலவில்லை.இன்ஸ்பியரேஷனா?

ஆனந்தகும்மி:

படம்: ஆனந்தகும்மி(1983)(இளையராஜாவின் சொந்தத் தயாரிப்பு)பாடல்: ”தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி”




ஆரம்ப இசை(prelude).மிக முக்கியமான இடம் 0.20-0.25


எந்திரன்:

 “காதல் அணுக்கள்” எந்திரன் பாடல்.
  மிக முக்கியமான இடம் 0.12-0.24

 
 ____________________________________________________________

படம்: பாக்கிய தேவதா(மலையாளம்)-2009
பாட்டு: ”அல்லிப்பூவே மல்லிப்பூவே”
இசை: இளையராஜா




எந்திரன்:

அதே “காதல் அணுக்கள்”பாட்டு.





.

Wednesday, August 11, 2010

சில யதார்த்தங்களும் ஏர்டெல் சிங்கர்களும்

ஒளி வட்டம் மேல் விழ, கைத்தட்டல் விண்ணைப் பிளக்க, உள்ளங்கையில் மெடல்களை இருக்கிப்பிடித்தபடி இரு கைகளையும்  மேல் தூக்கி ”எல்லா புகழும் இறைவனுக்கே”  என்று  ஒரு நாள்  சொல்ல வேண்டும்  என்ற Inception கனவுடன் யுவதிகள்/யுவன்கள்  சூப்பர் சிங்கர் போட்டிகளில  அடைஅடையாக தேனீக்கள் போல் கலந்துக் கொள்(ல்)கிறார்கள்.

ஆனால் முக்கால்வாசி பேர் “கிர்ர்ர்ர்ர்ர்ர்”  ரெட் லைட் அடித்து “rejected".சில பேர் பாடுவதைக் கேட்கும்போது “போட்டுதள்ளுed" என்று நான்காவது ஆப்ஷன் வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

பாடுவது என்பது ஒரு நாள் கூத்திற்கு மீசை வைக்கும் வேலை இல்லை.பாடு பட வேண்டும்.பாடுவதற்கு முன் பாட்டைஆறு மாதம் ஆழ்ந்துக்கேட்க வேண்டும்.புதுசு/பழசு எல்லா பாடல்களயும் கேட்க வேண்டும்.முக்கியமாக பழைய பாடல்களைக் கேட்க வேண்டும்.

கேட்டால் மட்டும் போதுமா?

உள் வாங்க வேண்டும்.பிறகு பாட ஆரம்பிக்க வேண்டும். நிறைய பயிற்சி செய்ய வேண்டும்.முக்கியமாக தன்னுடைய குரலின் வகையை தெரிந்துக்கொள்ள வேண்டும்.மிகமுக்கியமாக தாளம் என்ற ஒன்று இருப்பதை கண்டுகொள்ள வேண்டும்.

மிகமிகமிக முக்கியமாக மேடை பயத்தை விட வேண்டும்.

இதையெல்லாம்  சிங்கர்கள் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை.

பெண்கள் எல்லோரும் “ வான்மேகம்” அல்லது “என் மேல் விழுந்த மழை” அல்லது “குழலூதும் கண்ணனுக்கு” அல்லது “வசீகரா” அல்லது “ஜீலை வந்தால்” போன்ற ஸ்டைல் பாடல்களையே பயிற்சி செய்து  பாட  விரும்புவதாக டிவி நண்பர் ஒருவர்  சொன்னார்.
  
நடுவர்கள்  இதை அனுமதிப்பதில்லை.வேறு பாடல்களைப் பாட சொல்லி டெஸ்ட் செய்கிறார்கள்.பாடும் போது சில அடிப்படைகளை கூர்ந்து கவனித்து தேர்வு செய்கிறார்கள.

சரி.. யதார்த்தத்திற்கு வருவோம்.

தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஆனவர் சினிமாவில் நம்பர் ஒன்  ஆக முடியுமா?ஆகவில்லை.

அதே டிவியில் மைக்கை வைத்துக்கொண்டு சீசன் -2/3/4 போட்டியாளர்களை பேட்டி எடுக்கிறார்கள் அல்லது அடிக்கடி(அதே டிவியில்) இசை நிகழ்ச்சிகளில்  தோன்றுகிறார்கள்.வேறு டிவிக்கு ஒப்பந்தம் முடிந்தவுடன்தான் போகலாம்.


ஏ.ஆர்.ரஹமான் இசையில் பாடும் கனவு நிறைவேறாமல் போகிறது.சரி..அவரின் பாடலை மெல்லிசை நிகழ்ச்சியிலும் பாட முடிகிறதா? பாடிய பிரபலங்களே மெல்லிசையிலும் பாடுகிறார்கள்.இவர்களுக்கு வாய்ப்பு அம்பேல்.
 
முன்னால்”சூப்பர் சிங்கர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள்?எவ்வளவு பாட்டு பாடி இருக்கிறார்கள்?

ஆனால் உடை ஹேர்  ஸ்டைல் எல்லாம் மாறி அழகாகிவிடுகிறார்கள்.
 

திரைப்படங்கள் மாறிவிட்டதால் திரைப்பட இசை சூழல் தலைகிழாக மாறிவிட்டது.ஒவ்வொரு படத்திற்கும் தினக்கூலி மாதிரி ஒவ்வொரு புது
இசையமைப்பாளர்கள்.கும்பல் கும்பலாக  புதுப் பாடகர்கள்.

இந்தப் பாடகர்கள் டிவியில் அடிக்கடித் தோன்றி பார்க்க முடிகிறது. பாடிய பாடலை கேட்க முடியவில்லை.

கிழே இருப்பவர்கள் சூப்பர் சிங்கர் ஆகாத பிரபலங்கள்.பாடிய பாடல்களைச் சொல்ல முடியுமா?

சைந்தவி,பிரசன்னா,ரோஷினி,ஹரினி சுதாகர்,மதுமிதா,மகாலஷ்மி ஐயர்,மாலதி
லக்‌ஷமண்,மாதங்கி,பிரஷாந்தி,ராதிகா,ராஜல‌ஷ்மி,ஸ்ரீவர்தினி,உஜ்ஜய்னி,வினயா,சுனிதா சாரதி,தன்வி,சங்கீதா ராஜேஸ்வரன்,காயத்ரி,ஜெயதேவ்,ஷில்பா ராவ் எவ்வளவு பாட்டு பாடி இருக்கிறார்கள்?
 

சூப்பர் சிங்கர்கள் இவர்களோடு முன்னணி சாதனா,ஷிரேயா கோஷால்,மதுஸ்ரீ,கிரிஷ்,ரஞ்சித், மற்றும் பலரோடு போட்டிப் போட வேண்டும்.

இங்கு ஆரம்பிப்பது........


இங்கு முடிந்து விடுகிறது.......


இந்தப் போதைக்குத்தான் நிறைய பேர் அடிமையாகி விடுகிறார்கள்.

Tuesday, August 10, 2010

குறும்படங்கள் -கலைஞர் டிவி-நான்--DUSTER

குறும்படங்கள்:
குறும்படம் என்றால்  ”ZIP File” உடனே எனக்கு ஞாபகம் வருகிறது.பெரிய அல்லது சின்ன கருவை 3 நிமிடம் முதல் 12 நிமிட அவகாசத்தில் அடைத்து  பார்வையாளனுக்கு புரியும் விதத்தில்,சுவராசியமாக  கதையின் ஆத்மா கெடாமல் கொடுக்க வேண்டும் என்பது சவாலான வேலைதான்.

கிட்டத்தட்ட ஒரு பக்க சிறுகதைதான். 20-25 நிமிடத்தில் எடுக்கப்படும் குறும் படங்களை என்னால அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.மாக்சிமம் 10 தான். கொசுறாக 2 நிமிடம் சேர்த்து 12 நிமிடம்.

குறும்படத்தைப் பார்க்கும்  பார்வையாளர் ஒரு வித stressஓடு பார்க்க வேண்டியுள்ளது.ரொம்ப ஷார்ப்பாக இருக்கவேண்டும். கண் காது இரண்டையும் இறுக்கமாக வைத்துக்கொண்டு கவனம் சிதறாமல் பார்க்க வேண்டியுள்ளது.

காராணம்?

நிறைய suggestive shots வரும்.Two minutes Noodles மாதிரி விரைவாக முடிந்துவிடும்.ஒவ்வொரு பிரேமும் முக்கியம்.முழு நீள திரைப்படத்தில் (Feature film) போடும் கோனார் நோட்ஸெல்லாம் இங்கு போட மாட்டார்கள்.
ஹாலிவுட் படம் மாதிரி படம் போகும் போக்கிலேயே புரிந்துக்கொள்ள வேண்டும். கேண்டிட் கேமராவை ஒத்த ஷோ.

முக்கியமாக இயக்குனரின் புத்திசாலித்தனத்தை படத்தில் கண்டுக்கொள்ள வேண்டும்.பார்த்துப் பார்த்து நிறைய பயிற்சி எடுக்கவேண்டும்.கலைஞர் டிவியில் வரும் நடுவர்களே சில சமயம் படம் முடிந்ததும் ஒன்றும் புரியாமல்”திரு திரு”வென விழிப்பதைப் பார்க்கலாம்.

குறும்படம் என்றாலே டாக்குமெண்டரி என்ற நினைப்பிலேயே பாதிபேர் இன்னும் இருக்கிறார்கள்.காரணம் பல குறும்படத்தின் முடிவில் நீதி/போதனை
இருக்கும். நான்  சுத்தமாக ரசிப்பத்தில்லை.

சங்கம் தியேட்டரில் ஹெல்மெட் பற்றியும் சிகரெட் பற்றியும் இரு நகைச்சுவை குறும்படங்கள் காட்டப்படும்போது தியேட்டரே அதிரும்.இதே ஹெல்மெட் பற்றி எடுக்கப்பட்ட  ஒரு குறும்படம் நெட்டில் ரசிக்கும்படியாக எடுக்கவில்லை.

இப்போது மீடியா வளர்ந்துவிட்டதால்  யூ டூப்பில் விதவிதமாக பூந்து விளையாடுகிறார்கள்.ஆனால் நிறைய நீதி போதனை படங்கள்.கொஞ்சகாலம்  முன்பு மாற்றுத் திறனாளிகளை கருவாக வைத்து   குறும்படம் எடுத்து அரைத்தமாவேயே அரைத்தார்கள்.

உதாரணம் 1: ஒருவர் கடையில்  கூலிங்கிளாஸ் நிறைய மாடல்கள் பார்த்து கடைசியில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்து எழுந்து தன் குச்சியில் தட்டி தட்டி நடந்துபோவார்.

உதாரணம் 2:டிவியில் ஒட்டப்பந்தயத்தை ஒருவர் ரொம்ப ஆரவாரமாக விசில் அடித்து ரசிப்பார்.அவரே ஒடுவதுபோல் பிரமிப்பார்.படம் முடிவில் கேமரா அவரை நோக்கித் திரும்போது அவர் வீல் சேரில் உட்கார்ந்தி்ருப்பார்.இது மாதிரி நிறைய தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன்.

சில விளம்பரப் படங்கள் பார்க்கும் போது இவை குறும்படங்கள்தான் என்று தோன்றும்.முடிவு முக்கால்வாசி நகைச்சுவையாக இருக்கும்.

குறும்படத்தில் எனக்குப் பிடித்தது யதார்த்தமான கதாபாத்திரங்கள்.Mood lighting.
வித்தியாசமான கருக்கள்.வளமான கற்பனைகள்.எடுக்கும் விதம்.எந்த வித சமரசங்களும் செய்துக்கொள்ளாமை.புது முகங்கள்.நம்பகத்தன்மை.புது காற்றைச் சுவாசித்தல்.Small is always beautiful.

இவற்றுக்குத்தானே குறும்படமே?

கலைஞர் டிவி:

கலைஞர் டிவியில் கருணைக் கொலை(அம்மா?) பற்றிய ஒரு குறும்படம் ரொம்ப அற்புதமாக இருந்தது. இதில் முக்கியமானது நடித்த நடிகர்கள்.படத்தின் ஆழம். பாரதிராஜா படங்களில் இந்த மாதிரி ஆழமான காட்சிகளைப் பார்க்கலாம்.இயக்குனர்: மகேஷ் பெரியசாமி.அடுத்து “கை” என்ற குறும்படம். இதில் சில குறைகள்இருந்தாலும் வித்தியாசமான கரு.பிறகு நிகழ்கதவு.

(ஒரு கொடுமை:மூன்று மாதம் முன் பார்த்த படங்களைப் பற்றிய draftபதிவு அழிந்துவிட்டது )

குறைகள் என்று பார்த்தால் இயக்குனரின் விடலைத்தனம் மற்றும் stylishஆக எடுக்கிறேன் என்று படத்தின் ஆழத்தைக் கோட்டை விடுவது.நகைச்சுவைக் குறும்படங்கள் எடுக்காமல் இருப்பது.நடிக்கும்  சில பெண்கள் தமிங்லிஷ் (“யேன்ன பாண்ணிட்டிருகீங்க”)பேசுவது.சினேகா பேசும் தமிழ் மாதிரி.உடைந்து உடைந்து வரும்.

சில குறும்படங்கள் quiz programme  மாதிரி எடுத்து ”என்ன சொன்னேன் கண்டுபிடியுங்கள்” ரகம்.மண்டையை கிர் அடிக்க வைக்கும்.
 
நான்:
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு ஒளிபரப்பாகும் குறும்படங்களைப் பார்க்கையில், ஒவ்வொரு முறையும் ஞாபகம் பல வருடங்கள்  பின்னோக்கிப் போகிறது.

நான் பார்த்த முதல் குறும்படம் (டாக்குமெண்டரி)குடும்பக்கட்டுப்பாடு பற்றிய 10 நிமிட அனிமேஷன்.அடுத்தது (இதுவும் அனிமேஷன்) புகை வண்டிதொடரில் அபாயச்சங்கலி அனவசியமாக இழுத்து நிறுத்தினால் ஏற்படும்தொல்லைகளை
விளக்குவது.

ஒரு கிராமத்தான் இழுத்து நிறுத்தும்போது இஞ்சின் பல பெருமூச்சுகளை புகையாக விட்டுக்கொண்டு முகத்தையும் சுருக்கிக்கொண்டு சடாரென்று நிற்கும்.கிராமத்தான் விசிலடித்துக்கொண்டே இறங்கிப்போவார்.இன்னொன்று பொது சொத்துக்களை நாசப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்.

இதெல்லாம் அப்போதைய தூரதர்ஷனில் அடுத்த நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் ஒரு filler ஆகப் போடுவார்கள்.

கிழே 'DUSTER"என்ற குறும்படம் (18 நிமி்டம்?) இரு பகுதிகளாக வருகிறது.பகுதி-2ம்பார்ககவும்.சின்ன குறைகள் இருக்கு.முக்கிய குறை நீளம்.

முதல் பகுதியிலேயே முடித்திருக்கலாம்.நீளத்தையும்
டாக்குமெண்ட்ரித்தனத்தையும் குறைத்திருக்கலாம்.

குழந்தைகள் யாரும் கேமராவைப் பார்க்கதது ஆச்சரியம்!

இரண்டு முக்கியமான விஷயங்களை கொண்டுவந்திருந்தால் படத்தில் எமோஷனல் எபெக்ட் வந்து இருக்கும்.

அது என்ன  இரண்டு விஷயங்கள்? சொல்லுங்கள் பதிவர்களே?


Wednesday, August 4, 2010

ரசித்த படம் - “கபில்தேவ்வின் தொப்பி”

ரொம்ப  ரொம்ப வருடத்திற்கு முன்  சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு 40 நிமிட படம் ஒன்று பார்த்தேன். அது இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.

குத்து மதிப்பாக எழுதி இருக்கிறேன்.கதையின் ஆத்மாவை விடவில்லை.

அந்த படத்தின் தலைப்பு “ கபில்தேவ்வின் தொப்பி”.

ஒரு பெரிய காலனி. அங்கு ஏழை, மத்தியதர, பணக்கார குடுமபங்கள் கலந்துக் கட்டியாக வாழும்  காலனி. அங்கு ஒரு பெரிய விளையாட்டு திடல்.அதில் இங்கு குடி இருக்கும் பள்ளி/கல்லூரி மாணவர்கள் தினமும் எந்த வேற்றுமையின்றி விளையாடுவார்கள்.முக்கியமாக கிரிக்கெட் விளையாடுவார்கள்.

அவர்களின் ரொம்ப கால கனவு நேரடியாக இந்தியா விளையாடும்  கிரிக்கெட் மாட்ச் (5 நாள் மேட்ச்) பார்ப்பது. எல்லோரும் காசு சேர்த்து ஒரு கிரிக்கெட் மாட்சிற்கு  டிக்கெட் வாங்கி உள்ளே போகிறார்கள். பிரமிப்புடன் எல்லாவற்றையும் ரசிக்கிறார்கள்.அன்று விளையாடும் மேட்சில் (நான்காவது நாள்)  இந்தியா ஜெயித்துவிடுகிறது.

மேட்ச் முடிந்தவுடன் இந்திய அணி கபில்தேவ்வின் தலைமையில் மைதானத்தை சுற்றி ஊர்வலம் வருகிறார்கள்.இவர்கள் பக்கம் வரும் போது கபில் தேவ் தன்னுடைய தொப்பியை  தூக்கி வீசுகிறார்.அதை காலனியில் வசிக்கும் பாஸ்கர்(கார்பெண்டரின் மகன்) பிடித்துவைத்துக்கொள்கிறான்.

(மேலுள்ள காட்சியெல்லாம் வசனத்தில் சொல்லப்படுகிறது)

வாழ்நாளில் தான் பிறநத பயனை அடைந்துவிட்டதாக கருதி்னான் பாஸ்கர்.

அன்றிலிருந்து பாஸ்கர் ரொம்ப பூரித்துப் போய் மேகத்தில் உலாவிக்கொண்டிருந்தான்.
தினமும் தன் தலையணை அடியில் வைத்துக்கொண்டுதான் தூங்குவான்.கனவு காணுவான்.அதைப் போட்டுக்கொண்டுதான் விளையாடுவான்.

நண்பர்கள் தொட்டுப்பார்க்கதான் அனுமதிப்பான்.நண்பர்கள் தினமும் பொறாமைத் தீயில் வெந்துகருகினார்கள்.

அதில் சீனு (பணக்கார குடும்பம்) என்பவனுக்கு தொப்பியின் மீ்து வெறி.சீனுவின் அப்பாவிற்கும் இது  தெரியும்.அவன் வீட்டில்தான் பாஸ்கரின் அப்பா வேலை செய்கிறார்.

ஒரு நாள் குடிப்பதற்கு காசு இல்லாத நிலையில் முதலாளியிடம் மருந்து வாங்க காசு கேட்கிறார்.”அந்த தொப்பியைத் தந்தா உனக்கு காசு தரேன்” என்கிறார்.அவனும் அதன் மதிப்பு தெரியாமல் கொடுத்து காசு வாங்கிக் குடிக்கிறார்.

பாஸ்கர் தொப்பியை காணாமல் பதறுகிறான்.மிகுந்த துக்கம் ஆகிறான்.ஸ்கூல் போகவில்லை.அடுத்த நாள் ஜூரம் வந்துப் படுத்துவிடுகிறான். தொப்பிக்கு பின்னால் இருக்கும் தீவிர உணர்ச்சிகளை பாஸ்கரின் தந்தை பிறகுதான் உணர்கிறார்.பாஸ்கர் நார்மல் நிலைக்கு வர வேண்டும் என்றால் தொப்பி மிக அவசியம் என்று உரைக்கிறது. தான் கண்டுபிடித்துத் தருவதாக சத்தியம் செய்கிறார்.உண்மையை சொல்லுகிறார்.

மறுநாள் நார்மல் நிலைக்கு வந்ததும் பாஸ்கரை அழைத்துக்கொண்டு சீனுவின் வீட்டிற்கு செல்கிறார்.சீனுவும் அவன் அப்பாவும் வாசலில்.தொப்பியைக் கேட்கிறார்.அவர்
மறுக்கிறார்.பணத்தை கொடுத்துவிடுவதாக சொல்லி கெஞ்சுகிறார்.இவன் நினைத்தே பார்க்க முடியாத அளவு பணம் கேட்கிறார்.தன்னால் முடியாது என்று மீண்டும் கெஞ்சுகி்றார்.சீனு சிரித்தபடி்யே பார்தது்க்கொண்டிருக்கிறான்.

கடைசியாக தன் பையன் தொப்பி மேல் கொண்டிருக்கும்
பக்தியைச் சொல்லி கெஞ்சுகெஞ்சென்று கெஞ்சுகிறார்.பாஸ்கருக்கு அப்பா கெஞ்சுவது என்னவோ போல் இருக்கிறது.மிகுந்த சோகமாகிறான்.கண்ணில் நீர் முட்டுகிறது.

”அப்பா.. தொப்பி வேண்டாம்ப்பா...அவங்களே வச்சுகிடட்டும்..” என்று கோபத்துடன் சொல்லி அப்பாவை அழைத்துக்கொண்டு விறுவிறுவென்று நடக்கிறான்.படம் முடிகிறது.

Tuesday, August 3, 2010

சைக்கிள் - சிறுகதை

விக்ரம் மாடியிலிருந்து புது சைக்கிளைப் பார்த்தான்.சின்ன அசைவில் சட்டென மிரண்டு தலை தூக்கி பார்க்கும் கலை மான் தோரணையில்  ஸ்டைலாக நின்றிருந்தது.பிராண்ட் நியூ.ரத்த சிவப்பு நிறம் பளபளத்தது.வாசனை கூட போகவில்லை.காம்பவுண்ட் சுவரை எட்டிப் பார்த்தபடி மகள் பூஜாவின் வரவை  எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

பூஜாவும் ஸ்கூலில்  இப்படிஆவலாக எட்டிப்பார்த்தப்படியேதான் இருப்பாள்.

ஜீவன் பீமா நகரின் குண்டும் குழியுமான கொடூரமான ரோட்டிற்கு இந்த  சைக்கிள் பொருத்தமாகவே இல்லை.ரோட்டின் இரண்டு பக்கமும் பூக்கள் உதிர்க்கும் Maple Treeகளுக்கு நடுவே அடர்கருப்பு நிறத்தில் வழுக்கிக்
கொண்டுபோகும்  தார் ரோட்டில்  இந்த சைக்கிளை ஓட்ட வேண்டும் பூஜா.

”வேன்ல போனா ரொம்ப childishஆ இருக்குப்பா” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள் மகள் பூஜா.

சைக்கிளை வாங்குவதற்காகவே  நேற்று ஆபிஸ் மட்டம் போட்டுவிட்டு பூஜா,  மனைவி அர்ச்சனாவுடன்  கடைக்குப்  போனான் விக்ரம். பூஜா தன் தோழிகள் வாங்கிய கடையிலேயே (கடையின் பெயரே ஸ்டைலாக இருந்தது) வாங்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அழைத்துக்கொண்டு போனாள்.

மிகவும் பூரிப்போடு எல்லா சைக்கிளையும் பார்த்த பூஜாவுக்கு  முடிவில் முகம் வாடியது.அவள் தோழிகள் வைத்திருக்கு்ம் பிராண்ட் ஸ்டாக் இல்லை.
மறு நாள்தான் கிடைக்கும் என்றார்கள்.மறுநாளும் லீவ் போட்டு தான் மட்டும் போய்  அதை டெலிவரி எடுதது வீட்டில் நிறுத்தி விட்டான்.

தான்தான் முதலில் ஓட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனாள்.

“சரி..! நீயே இனாகரேட் பண்ணு..நாங்க தொடல”.

 
பூஜா ஸ்கூல் விட்டு வரும் நேரம்.விக்ரமும்  அர்ச்சனாவும்  மாடியிலிருந்து வாசலுக்கு வந்தார்கள்.

“சந்தனம் குங்குமம்  எடுத்துண்டு வரட்டுமா?”

”வேண்டாம் விக்ரம்... அதெல்லாம் அவுட் ஆஃப பேஷன்ம்பா.அவளோடு பேவரைட் ஸ்வாமி அபிராமி.அந்த ஸ்வாமிய  பிராத்தனப் பண்ணிண்டுதான் ஓட்டுவா”

 ”கிரிங்ங்ங்ங்ங்ங்....” அர்ச்சனா  பெல் அடித்து செல்லமாக தொட்டுணர்ந்தாள்.

சின்ன வயதில்   நாட்டார் கடை  சைக்கிள் ஓட்டியது ஞாபகம் வந்தது. இது நாட்டார் கடை  பெல் போல் இல்லை.இது அடித்தவுடன்  தொடர்ந்து சிணுங்குகிறது.அடிக்கும்போது ஏதோ ஒரு இதமான உணர்ச்சி வருகிறது. ரொம்ப அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

 ரொம்ப காதலோடுப் பார்த்துக்கொண்டிருந்தவள் திடீரென்று.....

“விக்ரம்  கொஞ்சம் பக்கத்துல வாங்கோ..” ரொம்ப உற்சாகத்துடன் கூப்பிட்டாள்

பக்கத்தில போய்  நின்றான். அவள் செய்கைகளை புன்னகைத்தப்படி பார்க்க ஆரம்பித்தான்.

திருமாங்கல்யம் மற்றும் அதனோடு சேர்ந்த மற்ற செயின்களை எடுதது  கொத்தாக பிளவுசிற்குள் விட்டுக்கொண்டாள்.புடவையை இடுப்பில் சொருகிக்கொண்டாள். உள் பாவாடையின் பிரில்களுக்கு வெளியே செக்கச்செவேலன கால்கள் தெரிந்தது.முந்தானையை அடக்க ஒடுக்கமாக இடுப்பில் சொருகி கணவனின் தோளைப் பிடித்துக்கொண்டு “விட்ராதேங்கோ”   பேலன்ஸ் செய்து சைக்களிள் ஏறி  மெதுவாக பெடல் செய்ய ஆரம்பித்தாள்.
  
மனைவியின் கனத்தை மனதில் அசைப்போட்டுக்கொண்டே அவள் வீடடைச் சுற்றி ஓட்டுவதை பூரிப்போடு பார்த்தான்.ரொம்ப புதுசாக தெரிந்தாள்.

இரண்டு ரவுண்ட் ஓட்டினாள். மூன்றாவது ரவுண்டில்.....

“எப்படி.. இருக்கு நம்ம ரைடிங்? டபுல்ஸ் வரேளா?”ஏதோ பாட்டை ஹம் செய்தபடியே.

”சர்பர்ரைசிங்..!என்ன கான்பிடன்ஸோட ஓட்டற..!ஆனா சீட்டுக்கு ரெண்டு பககமும் “பம்ஸ்” பொங்கி வழியுது”

”சீ..போ...” என்று சொல்லி பிரேக் அடித்து கணவனின் பின்பக்கத்தில் மோதி  ஸ்டாண்ட் போட்டாள். ஓட்டின சுவடே தெரியாமல் நன்றாகத் துடைத்து
வைத்தாள். இருவரும் கேட்டிற்கு அருகே வர ஸ்கூல் வேன் வந்தது.

 வேன்  வீட்டு வாசலில் நிற்காத நிலையில்  கதவைத் திறந்த பூஜா  தொப்பென்று குதித்து ஓடி வந்தாள்.

”எஸ்... அபிராமி!. ஐ காட் இட்” சைக்கிளைக் கட்டிக்கொண்டாள்.ஹாண்டில் பார் எதேச்சையாக அவள் அசைவில் திரும்பியது.”சாரி....நாளைக்குத்தான் இனாகுரேஷன் .இன்னிக்கு கிடையாது..ஓகே..!.”

”தாங்க்ஸ் அப்பா! தாங்க்ஸ் அம்மா!”மாறி மாறி இருவருக்கும் முத்த மழைப்பொழி்ந்தாள்.
அப்பாவிடம் செல் போன் வாங்கி போட்டோ எடுத்தாள்.தோழிகளுக்குப் போன் செய்து சிரித்தபடி பேசினாள்.

”சரி... டிரெஸ்ஸெல்லாம் கழட்டிட்டு வா.சூடா ரவா உப்புமா பணணித்தரேன்..”

பூஜா சைக்கிளை பார்த்துக்கொண்டே பின் பக்கமாக ஸ்லோமோஷனில் படியேறினாள். அவளுக்கு இணையாக அதே ஸ்லோ மோஷனில் எதேச்சையாக சைக்கிளை ஓட்டிய பூரிப்பில் படியேறிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

மறுநாள காலை.........

சைக்கிளைக் காணவில்லை. பூஜா  மூச்சிரைக்க  படியேறி வந்து அலறினாள்.

விக்ரமும் அர்ச்சனாவும் கிழே ஓடினார்கள். பரக்க பரக்க எல்லா இடத்திலும் தேடினார்கள்.கண்ணில் படவே இல்லை. பூட்டித்தான் இருந்தது.ஆனாலும் திருடு போய்விட்டது.

பூஜா முகம் வாடிப் போய் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.

ஒரு பக்கம் தொலைந்துப் போனது  சொல்ல முடியாத வருத்தம்.இன்னொரு பக்கம்  சைக்கிள் ஓட்டியதை சொல்லாமல் மறைத்தது இப்போது விஸ்வரூபம் எடுத்து துக்கம் தொண்டையை அடைத்தது அர்ச்சனாவிற்கு.  பூஜாவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் குற்ற உணர்ச்சிப் படுத்தி எடுத்தியது.சொல்லிவிடலாமா?

”நான் ஓட்றதப் பார்த்து நீங்க திருஷ்டி போட்டுட்டேளா? அதான் சைக்கிள்  காணாம போயிடுத்தா?” சோகமாகக் கேட்டாள்.

”லூசு மாதிரி பேசாத.நம்ம வீட்டுக்குள்ள வச்சுருக்கணம். ஆறாயிரம் ரூபாய் பணால்.”

விக்ரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தான். அவர்களும் ஏனோதானாவென்று வாங்கிக்கொண்டார்கள்.கண்டுப்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை.கிடைக்கும் என்ற நம்பிக்கையும்  இல்லை.அடிக்கடி திருட்டு நடக்கும் ஏரியா.

பூஜாதான் உடைந்துப் போய் விட்டாள்.மறுபடியும் childishஆ வேன்தானா?

மூன்று பேரும் அடுத்த இரண்டு நாட்களையும்  ஜடமாக சுரத்தே இல்லாமல் நகர்த்தினார்கள்.புது சைக்கிள் வாங்க முடியுமா?
  
மூன்றாவது நாள் இரவு 8 மணி. கம்புயூட்டர் பார்த்துக்கொண்டிருந்த பூஜா திடீரென்று கிச்சனுக்கு ஒடி வந்து அர்ச்சனாவை கட்டிக்கொண்டு.....

”எப்பேர் பட்ட பொய்க்காரி நீ. நீயும் உங்க ஆத்துக்காரரும் என்ன மாதிரி சீன் போட்டீங்க ..” சந்தோஷம் பொங்க அம்மாவை உலுக்கிச் சிரித்தாள்.

”என்னடி பூஜ்..?” மகளின் பிரகாச முகத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தாள்.

”ரொம்ப குஷியா இருக்கேம்மா. ரெண்டு நாள் துக்கம் ஆவியா போயிடுத்து. ஐ ஆம் ஓகே நவ்..! வா.., காட்றேன்” அழைத்துக்கொண்டுப் போய் கம்புயூட்டர் முன் உட்கார வைத்தாள். எதையோ கிளிக் செய்தாள். ” பாரு ..உன்னோட லவ்விங் ஆத்துக்காரார்  எடுத்தத...!”

21 இன்ச் கம்புயூட்டர் திரையில் ....

”விக்ரம் கொஞ்சம் பக்கத்துல வாங்கோ”வில் ஆரம்பித்து   “”சீ..போ..” அர்ச்சனா கணவனை வீலால்  இடித்து ஸ்டாண்ட் போட்டு முடித்தவுடன் காட்சி ஓடி திரை பிளாங் ஆகியது.பூஜா திரையை மூட டெஸ்க் டாப்பில் புது சைக்கிள் படம் இருந்தது.

அர்ச்சனாவுக்கு  வருத்தம் இரண்டு மடங்கு ஆகியது.


                               முற்றும்

குறிப்பு:
(பக்கத்து காம்பவுண்டில்  குடி இருக்கும் விக்ரமின் அக்கா  தெரியாமல் வீடியோ எடுத்து பின்னர் விக்ரமிடம் கொடுத்தது)