Tuesday, August 24, 2010

1970 -மெட்ராஸ்-காதல் கம் சஸ்பென்ஸ் கதை

 (திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த விறுவிறுப்பான கதை.சம்பவங்கள் கற்பனையே)
 
அந்த வீட்டின் ஹாலில் இருந்த கனி அண்ட் சன்ஸ் மஞ்சள் பூத்த டயல்( பெரிய) கடியாரத்தில் ”டங்..டங்..டங்..டங்..” பெண்டுலம்  நான்கு முறை இப்படியும் அப்படியும் மெதுவாக தள்ளாடி நான்கு என்று காட்டியது. திலகவதி   தன் கொண்டையை சரி செய்து தலைப்புப் போர்த்தியபடி  கவலையோடு  வாசலுக்கு வந்தாள்.

கல்லூரியிலிருந்து மகள் வசந்தி இன்னும் வரவில்லை.இன்றோடு நான்காவது நாள் இப்படி வருவது.காரணம் கேட்டால் “ஸ்பெஷல் கிளாஸ்” என்பாள். எப்போதும் காலையில் சொல்ல மாட்டாள்.துளிர்விட்டு போய் விட்டது.

வசந்தி வரும்போது மணி 5.30.

“வெளக்கு வைக்கிற நேரம் தெரியுமில்ல?”திலகவதி முறைத்தாள்.



“இன்னிக்கு 5B பஸ்காரன் ஸ்டாப்புல் நிக்காத போயிட்டான்.அடுத்த ரெண்டும் பிரேக்டெளன். அதான் லேட்ம்மா.அப்பாகிட்ட சொல்லிடாதே.பொலி போட்டுவாரு”

வசந்தி லேட்டாக வருவதற்குக் காரணம் இருக்கிறது.



ஒரு வாரத்திற்கு முன் ........

காலேஜ் விட்டு வந்ததும் முதல் வேலையாக  பாட்டனி நோட்டிலிருந்து அந்தக் கடிதத்தை எடுத்தாள். பாத்ரூமுக்குச் சென்றாள்.படிக்க ஆரம்பித்தாள்.

அன்புள்ள வசந்தி,

உன் வீட்டு அடுத்த தெருவில்  இருக்கும் சீதாபதி காதலுடன் எழுதும் கடிதம்.நான் நந்தனம் ஜென்ட்ஸ் காலேஜில் B.A.(Arts)  மூன்றாம் ஆண்டு படிக்கிறேன்.

உன்னை போன மாதம் முதன்முதலாக  குமரன் பட்டாணிக் கடை வாசலில் பார்த்தேன். புத்தங்களை மார்போடு அணைத்தவாறு வேர்கடலை சாப்பிட்டுக்கொண்டே  பிரெண்டுடன் நடந்த அழகைக் கண்ணதாசன்தான் வர்ணிக்க வேண்டும்.அதுவும் பின்னலை முன்பக்கம்  ஸ்டைலாக விட்டபடி.

கண்டவுடன்  காதல் கொண்டுவிட்டேன்.அன்றிலிருந்து இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவிக்கிறேன்.எங்கு பார்த்தாலும் உன் முகமே தெரிகிறது.

என்னையும் ஓரக்கண்ணால் தினமும் பார்க்கிறாய்.ஆனால்  பார்க்காதது போல் பாசாங்கு செய்கிறாய்.உன் கூட பேச வேண்டும்.உன் சம்மதம் தெரிய வேண்டும்.உனக்காக “ஆட்டின்” போட்ட கர்சீப்பும் ஒரு மோதிரமும் வாங்கி பரிசாக கொடுக்க வாங்கி வைத்துள்ளேன்.அதுவும் உனக்குப் பிடித்த அலிமா  பேன்சி கவரிங்  கடையில்.

என் காதலை ஏற்றுக்கொண்டு பதில் கடிதம் எழுது வசந்தி(உச்சரிக்கும்போது நாக்கில் தேன் சொட்டுகிறது). கடிதம் எழுத பயமாக இருந்தால்  நாளை அல்லது மறு நாள்  என்னைக் கடக்கும் போது உன் பேனாவையோ அல்லது புத்தகத்தையோ கிழே தவற விட்டு பாசாங்கு செய்.நான் புரிந்துக்கொள்கிறேன்.

என்னை ஏமாற்றிவிடாதே வசந்தி.நீஇல்லாம என்னால் வாழ முடியாது.

என்றும் காதலுடன்
சீதாபதி

கடிதத்தைச் சுக்கு நூறாக கிழித்து  வென்னீர் பாய்லரில் போட்டாள்.

சீதாபதியை ஏமாற்றாமல் ஆர்வத்துடன் புத்தகத்தைத் தவற விட்டு காதலிக்க ஆரம்பித்தாள்.இவர்கள் காதல் இப்படித்தான் ஆரம்பித்து பல மாசம் தொடர்ந்தது.


                                               __________________

”சார்.. தந்தி” வாசலில் தந்தி சிப்பந்தி (காதில் பென்சில் சொருகியபடி)குரல் கொடுத்தான்.பரபரப்புடன் வாங்கி பிரித்தார் பூரணலிங்கம் (வசந்தியின் அப்பா).

”என்ன விஷயம்? யாராவது.....?”திலகவதி பதற்றமானாள்.

”நல்ல விஷயம். என் தங்கச்சி மவன் பூபதி மெட்ராசுக்கு நாளைக்கு வரானாம்.பின்னி மில்ஸ்ல அப்ரண்டிஸ்ஸா செலக்ட் ஆகி இருக்கானாம்.பழம் நழுவி பாலுல விழுந்த மாதிரிதான். வர தைல இவனுக்கும் வசந்திக்கும் தடபுடலா கல்யாணத்த முடிச்சிடலாம்”.

”முருகா...! பூபதியா? அவனோட கிருதாவும் மீசையும் ரவுடி போல.எப்ப பாரு இங்கிலீஷ்காரன் போல சிவிங்கம் மென்னுட்டு இருப்பன். ஊதாரி..ஊர்சுத்தின்னு வேற கேள்விப்பட்டேன்.”

”ஓடற பாம்ப நடு செண்டர்ல மிதிக்கற வயசு.அப்படி இப்படிதான் இருப்பான்.வசந்தி இவன இடுப்புல முடிஞ்சிடுவா.அவ அழகுல மயங்கி இவன் பொட்டிப்பாம்பா அடங்கிடுவான்”

“வேண்டாங்க...டெல்லிலே ஒரு வரன்.ஒரே பையன்.பிடிப்பு போக மாசம் 500 சம்பளம்.பிக்கல் பிடுங்கல் கிடையாது.சீர்வரிசையா ஆறு பவுன் நகை கைல மூவாயிரமும். மெட்ராசுல கல்யாணத்த பண்ணி வைக்க ஒன்னும் அப்ஜெக்‌ஷன் இல்லையாம்.”

“எனக்கு தெரியும்டி...நீ போய் வேலய பாரு” உருமினார்.

வசந்தி அடிவயிறு பகீரென்றது.கூடிய விரைவில் தன் காதலை தைரியமாக் அப்பாவிடம் சொல்லலாம் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தாள்.இப்போது சொன்னால்கொன்னே போட்டுவிடுவாரே?

மறு நாள் எல்லா விஷயத்தையும் சீதாபதியிடம் சொல்லி  திருநீர் மலையில் ரகசிய திருமணம் ஏற்பாடு செய்ய சொன்னாள்.தெய்வம் நம்மை கை விடாது என்றும் பொறுமை காக்குமாறு  வசந்திக்கு ஆறுதல் சொன்னான்.
                    __________________


ஒரு வாரம்  கழித்து  ஒரு நாள்......

பூரண லிங்கம் ஒரு நகைப்பெட்டியை திறந்து திலகவதியிடம் காட்டினார்.திலகவதி முகத்தில் வைரத்தின் ”டால்”அடித்தது. அது அதிக வேலைப்பாடுடன் கூடிய வைர நெக்லஸ்.

”இது என் பால்ய சினேகிதன் வையாபுரி கொடுத்தான்.அவனோட பரம்பரை சொத்து.அவன் குடும்பத்தோடு காசி ராமேஸ்வரம்னு பல ஊருக்கு தீர்த்த யாத்திர போறான்.ஒரு மாசம் ஆகும். அதுவர நம்ம பத்திரமா வச்சிட்டு திருப்பி கொடுக்கனும்.நம்ம மேல எவ்வளவு நம்பிக்கை”

”மதிப்பு என்ன இருக்கும்”

“ ஒரு லட்ச ரூபாய்”

திலகவதி வாய் பிளந்தாள்.

அதே சமயத்தில் பூபதியும் வாய் பிளந்தான் .பெட்ரூமின் பக்கத்தில் ஒளிந்து இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். மனதில் திட்டம் தீட்டினான். இதை அபகரித்து கிளப் டான்ஸர் காதலி ரீட்டாவுடன் சிங்கப்பூரில் செட்டில்ஆகி விட வேண்டும்.பின்னி மில்ஸ் லேத்தில் யார் மாரடிப்பது. போவதற்கு  முன் வசந்தியின் கற்பையும் சூறையாடி விட வேண்டும்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள்.....

எல்லோரும் குடும்பத்தோடு  ஹாலில் இருக்க பூபதி நமட்டு சிரிப்போடு வசந்தியை நோக்கி வந்தான்.

”மாமா.. உங்க பொண்ணு காலேஜிக்குத்தான் போறாளா? இல்லேன்னா ஊர் சுத்த போறாளா?எனக்கு மனைவிய வரவ பதிவிரதையா இருக்கனம்னு நான் ஆசப்படறேன் ” கள்ளத்தனமாகச் சிரித்தான்

“என்ன இது வாய் நீளுது.அடக்கிப்பேசு...” பூர்ண லிங்கம்

“ நேத்து இவ  ஒரு பையனோட இடுப்பல கைவச்சிட்டு லாம்பி ஸ்கூட்டர்ல வுட்லெண்ட்ஸ் டிரைவ் இன்லேந்து வரதப் பார்தேன். காலேஜ்ஜ அங்க மாத்திட்டாங்களா?”

”ஆமாம.அவரை நான் காதலிக்கிறேன்”

 கேட்டவுடன் பூரண லிங்கம் எரிமலையானார்.

”நம்ம பரம்பரைக்கே அவமானத்த உண்டுபண்ணிட்டியே”

வீடு கலவரமானது.வசந்தி அப்பா முன் நின்று பேசக்கூடாது என்று உள்ளே தள்ளப்பட்டாள்.

வசந்தியின் படிப்பு அன்றோடு நிறுத்தப்பட்டது.கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.
பூபதிதான் மணமகன்.இவனைக் கட்டிக்கொள்வதை விட தன்னை ஒரு பாழும் கிணற்றில் தள்ளச் சொல்லி கதறினாள் வசந்தி.யாரும் கேட்கவில்லை.

சீதாபதிக்கு  விஷயம் போயிற்று. ஆர்வத்தில் காதலித்து விட்டோம்.இப்போது என்ன செய்வது. அப்பா அம்மா இருவரும்  ஊரில் இல்லை.ஒன்றும் புரியாமல் கையைப் பிசைந்துக்கொண்டு நின்றான்.

அடுத்த இடி அவன் தலையில் விழுந்தது.

சீதாபதியின் “கெட்ட நடத்தை”யின் பேரில் காலேஜில்  டிசிப்பிளினரி ஆக்‌ஷன் எடுத்து அவனை சஸ்பெண்ட் செய்தார்கள். சோகத்தில் சீதாபதி தாடி வைத்து நடை பிணமானான்.வசந்தியை பார்க்க முடியாமல் தவித்தான்.

பூபதியை மணக்க வசந்தி சம்மதித்து விட்டதாக நண்பன் கோபால் மூலமாக தகவல் வந்தது.
சீதாபதி வாடிப்போனான்.


11-09-1970. திருமண நாள்.மண்டபம் நிரம்பி வழிந்தது.தாலி கட்ட இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.பூபதி மாலையும் கழுத்துமாக திருட்டு முழி முழித்துக்கொண்டிருந்தான்.

மண்டபத்தின் வாசலில் ஒரு கார் வந்து நின்றது.அதிலிருந்து பூர்ண லிங்கம் நண்பர் வையாபுரி இறங்கினார்.

நுழைந்ததும்  நுழையாததுமாக லிங்கத்திடம் வைர நெக்லஸ்ஸை அதிகார தோரணையுடன் கேட்டார்.

 ”முதல்ல டிபன் சாப்பிடு வையாபுரி. முகூர்த்தம் முடியட்டும் தரேன்”

”இல்ல இப்பவே வேணும்” அடம்பிடித்தார்.

”என்னாச்சு இவருக்கு” புரியாமல் பூரணலிங்கம் நெக்லஸை வரவழைத்துக் கொடுத்தார்.

வாங்கிப்பார்த்த அடுத்த நிமிடம்....

” கல்யாணத்த நிறுத்து..?இது போலி நெக்லஸ்.பொண்ணு கல்யாணத்துக்கு  பணம் வேணும்னு வித்துட்டு போலிய என் தலைல கட்டி டிராமா போடறயா லிங்கம்.அசல் எங்க?”

 மண்டபமே அதிரும்படி கத்தினார் வையாபுரி.அதே சமயத்தில் சீதாபதி 120 மைல் வேகத்தில் தன் ஸ்கூட்டரில் ஒரு ஹைவேஸ்ஸில் மண்டபத்தை நோக்கி வந்துக்கொண்டிருந்தான்.



”போலியா? ஆண்டவன் மேல சத்தியமா சொல்றேன். எனக்கு ஒண்ணும் தெரியாது.”  தன் மார்ப்பைப் பிடித்தபடி மண்டப தூணில் சாய்ந்தார் லிங்கம்.

கல்யாணத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் வாயடைத்துப்போய் அவரேயே  பார்த்தார்கள்.

“மறுபடியும் டிராமா போடறயா? இது போலிதான். இது என் பரம்பரை சொத்து. பணத்துக்கு ஈடு செய்ய முடியாது.இதுக்கு பிராயசித்தமா என் சகோதரி  மகன் கோபாலுக்கு உன் பொண்ண  இதே முகூர்த்தத்துல கட்டிக்கொடு. எனக்கு நெக்லஸ் வேணாம்”

”என்ன மாமா இது?யாரு இது கோபால்? என் மானம் போகுது” பூபதி கத்தினான்.

கோபாலா....?சீதாபதியின் உயிர் நண்பன்.வசந்தி விக்கித்து நின்றாள்.கண்கள் இருட்டி மயக்கம் வந்தது.

மண்டபம் அல்லோகல்லோகப்பட்டது.

“நீங்கதான் டிராமா போடறீங்க மிஸ்டர் வையாபுரி”மண்டப வாசலில் சீதாபதி இடுப்பில் ஸ்டைலாக கை வைத்தபடி.எல்லோரும் ஒரு நிமிடம் அதிர்ந்து  அமைதியானார்கள்.

“இங்க என்னப்பா நடக்குது. ஒண்ணும் புரியல”கையில் அட்சதையும் பூக்களுமாக(உள்ளங்கை வேர்வை ) ஒரு முதியவர் தலையை ஆட்டிக்கொண்டே சத்தம் போட்டார்.

”சொல்றேன்”. சீதாபதி சொல்ல ஆரம்பித்தான்.

 ”வசந்திய நான் உயிருக்கு உயிரா காதலிச்சேன்.என் நண்பன்...மன்னிக்கவும்  துரோகியும் நான் காதலிப்பது தெரிந்தும் அவள் மேல ஆசைப்பட்டான்.அவள எப்படியாவது அடையனும்னு துடிச்சான்.இவன் போற மூணு சீட்டாட்ட கிளப்புக்கு பூபதியும் வருவான்.
ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. ஒரு லட்ச ரூபா நெக்லஸ் பத்தியும் ரெண்டுபேருக்கும் தெரியும். வையாபுரி கோபால் அப்பா கிட்ட 3000 ரூபாய் வீடு கட்ட கடன் வாங்கி இருந்தாரு. திருப்பி தர வையாபுரிக்கு வருமானம் இல்ல.திட்டம் போட்டாங்க.பூபதி நெக்லஸ்ஸ திருடிட்டு போலிய வச்சுருவான்.கல்யாணத்த அன்னிக்கு வையாபுரி வந்து கேட்பறாரு.அப்ப இருக்காது. உடனே வசந்திய கட்டி வக்கச் சொல்வாரு.இக்கட்டான நிலமைல லிங்கம் கட்டி வச்சுடுவாரு.இவன் நெக்லஸ்ஸோட கள்ளக் காதலியுடன் சிங்கப்பூர் ஓடிடுவான்.இதுதான் திட்டம்” சொல்லிக்கொண்டிருக்கும் போது.......

”நண்பனாட நீ...ராஸ்கல்” லிங்கம் வையாபுரியின் சட்டையைப் பிடித்தார்.

“நில்லுங்க சார்.. இவன் உண்மையான வையாபுரி இல்ல.உண்மையான வையாபுரியை கோடெளன்ல கட்டிப்போட்டு வச்சிட்டாங்க” என்று சொல்லி வையாபுரியின் முகத்தில் இருந்த முகமூடியை உருவினான் சீதாபதி.

”இவன்  பழைய கேடி பைரவன்”

”டுமீல்” என்ற வானத்தை நோக்கி துப்பாக்கி சுடும் சத்தம்.”யாரும் அசையாதீங்க” சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் சத்தம்போட்டபடி உள்ளே வந்தார்.பின்னால் போலீஸ்காரர்கள்.

” ஏய்.... 502.ஏய்.... 405 இவங்க மூணு பேரையும் விலங்கு போட்டு அரெஸ்ட் பண்ணு”

ஏட்டுக்கள் மூவருக்கும் விலங்குப் போட்டு முட்டி தள்ளிக்கொண்டுப்போய் ஜீப்பில் ஏற்றினார்கள்

”சரியான சமயத்தில வந்து எங்கள காப்பாத்தினீங்க. இருந்து சாப்பிட்டு போங்க” என்றார் லிங்கம். அவசரமாக ஒரு பந்தோபஸ்து டூட்டி இருப்பதாக் சொல்லி வீரபாண்டியன்
கிளம்பினார்.

உண்மையான வையாபுரியும் லிங்கமும் ஆரத்தழுவிக்கொண்டார்கள்.பார்த்தவர்கள் கண்கள் பனித்தன.

“தம்பி உன்னப் போல உத்தமன் இந்த உலகத்துல பாத்தது இல்ல.”நெகிழ்ந்தார்

அதே மேடையில் கல்லூரி பிரின்சிபாலும் உண்மைத் தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

“முகூர்த்தத்திற்கு நாழியாரது... யாரு மாப்பிள்ள....?”அய்யர் விசிறிக்கொண்டே கேட்டார்.

 ”இந்த தங்க கம்பிதான்.. மாப்பிள....என்ன மன்னிச்சுடுங்க மாப்பிள..”  பட்டு வேட்டி சட்டையை தாம்பளத்தில்  வைத்துக் கொடுத்தார்.வசந்தியின் கன்னம் சிவந்தது.

“நீங்க வயசுல எவ்வளவு பெரியவரு. நீங்க போய் இதெல்லாம் சொல்லிகிட்டு”

சீதாபதியின் ஒண்ணுவிட்ட பெரியப்பா ராமலிங்கம் மாப்பிள்ளை சார்பில் நின்று தாம்பளத்தைத் தொட்டு ஆசிர்வதித்தார்.

கொட்டு மேளம் கொட்டியது.

’மாங்கல்யம் தந்துனானே மம” அய்யர்  மந்திரம் ஓத   தலை குனிந்த வசந்தியின் கழுத்தில் தாலிக் கட்டினான் சீதாபதி. எல்லோரும் அட்சதை மற்றும் பூத் தூவி ஆசிர்வதித்தார்கள்.

                                     சுபம்

10 comments:

  1. //திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த விறுவிறுப்பான கதை//

    அதிரடி திருப்பங்களில் உண்மையிலேயே நான் காணாமல் போயிட்டேன். அப்படியே ஒரு பழைய தமிழ் படம் பார்த்த ஒரு உணர்வு. நீங்க கொஞ்சம் லேட்டு. முன்னமே சொல்லி இருந்தா யாரவது படமா எடுத்து இருப்பாங்க..

    ReplyDelete
  2. என்ன ஆச்சு சார் கதை இப்படி இருக்கு பழைய படம் பார்த்த மாதிரி

    ReplyDelete
  3. ரெண்டு said...

    // அதிரடி திருப்பங்களில் உண்மையிலேயே நான் காணாமல் போயிட்டேன். அப்படியே ஒரு பழைய தமிழ் படம் பார்த்த ஒரு உணர்வு. நீங்க கொஞ்சம் லேட்டு. முன்னமே சொல்லி இருந்தா யாரவது படமா எடுத்து இருப்பாங்க..//

    வாங்க ரெண்டு. இது மாதிரி பின்னூட்டம் போட்டு அடிக்கடி ஊக்கப்படுத்துங்க. நன்றி.

    ReplyDelete
  4. பாலாஜி சங்கர் said...

    // என்ன ஆச்சு சார் கதை இப்படி இருக்கு பழைய படம் பார்த்த மாதிரி //

    திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்தததாச்சே அதான். ந்ன்றி.

    ReplyDelete
  5. இதைப் படிச்சுட்டு ‘அட நல்லாருக்கே!’-ன்னுட்டு யாராவது சினிமாக்காரங்க கருப்பு வெள்ளை-ல பழைய படம் எடுத்துரப் போறாங்க. எதுக்கும் கதையை காப்பிரைட் செஞ்சு வெச்சுக்கங்க.

    ReplyDelete
  6. :-) :-)
    ஹா...ஹா.... கலக்கல்....

    ReplyDelete
  7. சித்ரன் said...

    // இதைப் படிச்சுட்டு ‘அட நல்லாருக்கே!’-ன்னுட்டு யாராவது சினிமாக்காரங்க கருப்பு வெள்ளை-ல பழைய படம் எடுத்துரப் போறாங்க. எதுக்கும் கதையை காப்பிரைட் செஞ்சு வெச்சுக்கங்க//

    அப்படியா? பண்ணிடறேன்.இப்ப நிறைய ரிமேக் & ரிமிக்ஸ் வருது.உஷாரா இருக்கனும்.

    ReplyDelete
  8. நன்றிங்க தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  9. ILA(@)இளா said..

    //கருப்பு வெள்ளைப் படங்களை பார்த்திருக்கீங்களா? அதுவும் சமீபத்துல. எப்படியும் நமக்கு கதை தெரிஞ்சிருக்கும், அடுத்த காட்சி கூட என்னன்னு சொல்ல முடியும்(விஜய் படங்கள் மாதிரி). இதுவும் அதுமாதிரி, சரியான முயற்சி. ரொம்ப நாளைக்கப்புறம் ஆச்சர்யப்படுத்தின பதிவுங்க இது. அதுக்கான சேர்த்த படங்களும் ஆஹா..ஒரு சின்ன ரிவர்ஸ் கியர் போட்ட மாதிரி இருக்கு.//

    நன்றி இளா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!