Tuesday, August 10, 2010

குறும்படங்கள் -கலைஞர் டிவி-நான்--DUSTER

குறும்படங்கள்:
குறும்படம் என்றால்  ”ZIP File” உடனே எனக்கு ஞாபகம் வருகிறது.பெரிய அல்லது சின்ன கருவை 3 நிமிடம் முதல் 12 நிமிட அவகாசத்தில் அடைத்து  பார்வையாளனுக்கு புரியும் விதத்தில்,சுவராசியமாக  கதையின் ஆத்மா கெடாமல் கொடுக்க வேண்டும் என்பது சவாலான வேலைதான்.

கிட்டத்தட்ட ஒரு பக்க சிறுகதைதான். 20-25 நிமிடத்தில் எடுக்கப்படும் குறும் படங்களை என்னால அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.மாக்சிமம் 10 தான். கொசுறாக 2 நிமிடம் சேர்த்து 12 நிமிடம்.

குறும்படத்தைப் பார்க்கும்  பார்வையாளர் ஒரு வித stressஓடு பார்க்க வேண்டியுள்ளது.ரொம்ப ஷார்ப்பாக இருக்கவேண்டும். கண் காது இரண்டையும் இறுக்கமாக வைத்துக்கொண்டு கவனம் சிதறாமல் பார்க்க வேண்டியுள்ளது.

காராணம்?

நிறைய suggestive shots வரும்.Two minutes Noodles மாதிரி விரைவாக முடிந்துவிடும்.ஒவ்வொரு பிரேமும் முக்கியம்.முழு நீள திரைப்படத்தில் (Feature film) போடும் கோனார் நோட்ஸெல்லாம் இங்கு போட மாட்டார்கள்.
ஹாலிவுட் படம் மாதிரி படம் போகும் போக்கிலேயே புரிந்துக்கொள்ள வேண்டும். கேண்டிட் கேமராவை ஒத்த ஷோ.

முக்கியமாக இயக்குனரின் புத்திசாலித்தனத்தை படத்தில் கண்டுக்கொள்ள வேண்டும்.பார்த்துப் பார்த்து நிறைய பயிற்சி எடுக்கவேண்டும்.கலைஞர் டிவியில் வரும் நடுவர்களே சில சமயம் படம் முடிந்ததும் ஒன்றும் புரியாமல்”திரு திரு”வென விழிப்பதைப் பார்க்கலாம்.

குறும்படம் என்றாலே டாக்குமெண்டரி என்ற நினைப்பிலேயே பாதிபேர் இன்னும் இருக்கிறார்கள்.காரணம் பல குறும்படத்தின் முடிவில் நீதி/போதனை
இருக்கும். நான்  சுத்தமாக ரசிப்பத்தில்லை.

சங்கம் தியேட்டரில் ஹெல்மெட் பற்றியும் சிகரெட் பற்றியும் இரு நகைச்சுவை குறும்படங்கள் காட்டப்படும்போது தியேட்டரே அதிரும்.இதே ஹெல்மெட் பற்றி எடுக்கப்பட்ட  ஒரு குறும்படம் நெட்டில் ரசிக்கும்படியாக எடுக்கவில்லை.

இப்போது மீடியா வளர்ந்துவிட்டதால்  யூ டூப்பில் விதவிதமாக பூந்து விளையாடுகிறார்கள்.ஆனால் நிறைய நீதி போதனை படங்கள்.கொஞ்சகாலம்  முன்பு மாற்றுத் திறனாளிகளை கருவாக வைத்து   குறும்படம் எடுத்து அரைத்தமாவேயே அரைத்தார்கள்.

உதாரணம் 1: ஒருவர் கடையில்  கூலிங்கிளாஸ் நிறைய மாடல்கள் பார்த்து கடைசியில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்து எழுந்து தன் குச்சியில் தட்டி தட்டி நடந்துபோவார்.

உதாரணம் 2:டிவியில் ஒட்டப்பந்தயத்தை ஒருவர் ரொம்ப ஆரவாரமாக விசில் அடித்து ரசிப்பார்.அவரே ஒடுவதுபோல் பிரமிப்பார்.படம் முடிவில் கேமரா அவரை நோக்கித் திரும்போது அவர் வீல் சேரில் உட்கார்ந்தி்ருப்பார்.இது மாதிரி நிறைய தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன்.

சில விளம்பரப் படங்கள் பார்க்கும் போது இவை குறும்படங்கள்தான் என்று தோன்றும்.முடிவு முக்கால்வாசி நகைச்சுவையாக இருக்கும்.

குறும்படத்தில் எனக்குப் பிடித்தது யதார்த்தமான கதாபாத்திரங்கள்.Mood lighting.
வித்தியாசமான கருக்கள்.வளமான கற்பனைகள்.எடுக்கும் விதம்.எந்த வித சமரசங்களும் செய்துக்கொள்ளாமை.புது முகங்கள்.நம்பகத்தன்மை.புது காற்றைச் சுவாசித்தல்.Small is always beautiful.

இவற்றுக்குத்தானே குறும்படமே?

கலைஞர் டிவி:

கலைஞர் டிவியில் கருணைக் கொலை(அம்மா?) பற்றிய ஒரு குறும்படம் ரொம்ப அற்புதமாக இருந்தது. இதில் முக்கியமானது நடித்த நடிகர்கள்.படத்தின் ஆழம். பாரதிராஜா படங்களில் இந்த மாதிரி ஆழமான காட்சிகளைப் பார்க்கலாம்.இயக்குனர்: மகேஷ் பெரியசாமி.அடுத்து “கை” என்ற குறும்படம். இதில் சில குறைகள்இருந்தாலும் வித்தியாசமான கரு.பிறகு நிகழ்கதவு.

(ஒரு கொடுமை:மூன்று மாதம் முன் பார்த்த படங்களைப் பற்றிய draftபதிவு அழிந்துவிட்டது )

குறைகள் என்று பார்த்தால் இயக்குனரின் விடலைத்தனம் மற்றும் stylishஆக எடுக்கிறேன் என்று படத்தின் ஆழத்தைக் கோட்டை விடுவது.நகைச்சுவைக் குறும்படங்கள் எடுக்காமல் இருப்பது.நடிக்கும்  சில பெண்கள் தமிங்லிஷ் (“யேன்ன பாண்ணிட்டிருகீங்க”)பேசுவது.சினேகா பேசும் தமிழ் மாதிரி.உடைந்து உடைந்து வரும்.

சில குறும்படங்கள் quiz programme  மாதிரி எடுத்து ”என்ன சொன்னேன் கண்டுபிடியுங்கள்” ரகம்.மண்டையை கிர் அடிக்க வைக்கும்.
 
நான்:
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு ஒளிபரப்பாகும் குறும்படங்களைப் பார்க்கையில், ஒவ்வொரு முறையும் ஞாபகம் பல வருடங்கள்  பின்னோக்கிப் போகிறது.

நான் பார்த்த முதல் குறும்படம் (டாக்குமெண்டரி)குடும்பக்கட்டுப்பாடு பற்றிய 10 நிமிட அனிமேஷன்.அடுத்தது (இதுவும் அனிமேஷன்) புகை வண்டிதொடரில் அபாயச்சங்கலி அனவசியமாக இழுத்து நிறுத்தினால் ஏற்படும்தொல்லைகளை
விளக்குவது.

ஒரு கிராமத்தான் இழுத்து நிறுத்தும்போது இஞ்சின் பல பெருமூச்சுகளை புகையாக விட்டுக்கொண்டு முகத்தையும் சுருக்கிக்கொண்டு சடாரென்று நிற்கும்.கிராமத்தான் விசிலடித்துக்கொண்டே இறங்கிப்போவார்.இன்னொன்று பொது சொத்துக்களை நாசப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்.

இதெல்லாம் அப்போதைய தூரதர்ஷனில் அடுத்த நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் ஒரு filler ஆகப் போடுவார்கள்.

கிழே 'DUSTER"என்ற குறும்படம் (18 நிமி்டம்?) இரு பகுதிகளாக வருகிறது.பகுதி-2ம்பார்ககவும்.சின்ன குறைகள் இருக்கு.முக்கிய குறை நீளம்.

முதல் பகுதியிலேயே முடித்திருக்கலாம்.நீளத்தையும்
டாக்குமெண்ட்ரித்தனத்தையும் குறைத்திருக்கலாம்.

குழந்தைகள் யாரும் கேமராவைப் பார்க்கதது ஆச்சரியம்!

இரண்டு முக்கியமான விஷயங்களை கொண்டுவந்திருந்தால் படத்தில் எமோஷனல் எபெக்ட் வந்து இருக்கும்.

அது என்ன  இரண்டு விஷயங்கள்? சொல்லுங்கள் பதிவர்களே?


2 comments:

  1. நல்ல அலசல்.. ஆனால் உங்கள் ஸ்டைலில் இல்லாமல் கொஞ்சம் நீண்டு விட்டது சார்..
    கலைஞர் டிவி குறும்படங்கள்-எனக்குப் பிடித்த நிகழ்ச்சி...
    அவ்வப்போது பார்த்திருக்கிறேன்... பிடிக்க ஆரம்பிக்கக் காரணமான ஒரு குறும் படம் -செங்கோட மோகனின் ’கலரு’. பின்னரும் இவரின் ‘தபேலா வாசித்த கழுதை’ பிடித்திருந்தது. நகைச்சுவையாக, ஒரு முழுநீளப் படம் பார்த்த எஃபெக்ட் கிடைத்தது.
    ‘பெட்டி கேஸ்’ என்றொரு குறும்படம் பார்த்தேன். நன்றா க இருந்தது.
    நீங்கள் குறிப்பிட்டதில் ‘கை’ பார்த்தேன். அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
    இப்போதிருக்கும் தமிழ்த் திரையுலக இயக்குனர்களை விட இவர்கள் மேல் என எண்ணும் வகையில் சிலரது படங்கள் இருக்கின்றன என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
    ‘டஸ்டர்’ குறும்படம் எளிமையாக, மெனக்கிடாமல், அழகாக இருந்தது. மொட்டைப்பையனின் நடிப்பு , பின்னிட்டான்..
    நீங்கள் எதிர்பார்த்த இரு விசய்ங்களையும் நீங்களே கூறி விடுங்கள் சார்...

    ReplyDelete
  2. அப்பாடி...!பதிவு போட்டு ரெண்டு நாள் கழித்து முதல் கமெண்ட்.

    தமிழ்ப்பறவை said...

    // ‘டஸ்டர்’ குறும்படம் எளிமையாக, மெனக்கிடாமல், அழகாக இருந்தது. மொட்டைப்பையனின் நடிப்பு , பின்னிட்டான்..
    நீங்கள் எதிர்பார்த்த இரு விசய்ங்களையும் நீங்களே கூறி விடுங்கள் சார்...//

    1.ஊசியில் நூல் கோக்க நொந்துபோவது மாதிரி காட்டி இருக்கலாம்.

    2.ரொம்ப நேரம் டஸ்டர் தைப்பதை காட்டி(நிறைய டஸ்டர் தைப்பதை மறைத்து)டீச்சரிடம் கொடுக்கும்போது மட்டும் நிறைய டஸ்டர் கொடுக்கும் ஷாட்டைக் காட்ட வேண்டும்.

    காட்சிகளில் வரும் இடங்களே கதா பாத்திரங்களாக வருகிறது.

    ”டஸ்டர்” என்ற பேரை உச்சரிக்கும்போது நம் மேல்
    சாக்பீஸ் தூசி தெறிக்கிறது.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!