Saturday, February 28, 2009

பதிவர்களே வாழ்த்துக்கள்!

தமிழ் மண போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு
என் உளம் கனிந்த வாழ்த்துக்கள். மேலும் மேலும் நல்ல படைப்புகளை படைக்க.

பரிசு பெறாதவர்கள் அடுத்த முறை பரிசு பெற நல்ல படைப்புக்களை
படைக்க ஆரம்பிக்கலாம்.

ஒரு பெண்ணின் கர்சீப் - கவிதை







ஒரு உதிர்ந்த பவழ மல்லி
மலர் போல் கிடக்கிறது 
சாலையின் ஒரத்தில்
நாலாக மடிக்கப்பட்டு 
சலவை வெண்மையுடன்
எந்த வித கசங்களும்
இல்லாமல் அழகான
ஒரு பெண் கர்சிப்
எடுத்துப் பார்க்கிறேன்
ஓரங்களில் வண்ண நூல் 
கொண்டு அழகுப் படுத்தப்பட்டதை
உள்ளங்கையில் வைக்கையில்
கைக்கடக்கமாகி 
ஒரு இறகு போல் மிதக்கிறது 
தைரியமில்லை விரித்து
உள்ளே பார்க்க - பத்திரமாக
பாக்கெட்டில் இருக்கும்
அதன் உரிமையாளர்
வந்து கேட்கும் வரை
 

Thursday, February 26, 2009

சின்னத்திரை நட்சத்திரங்கள் -துரதிரஷ்டம்

சினிமாவில் நடித்துப் புகழ் கிடைப்பது மாதிரி சின்னத்திரையில் (T.V.) நடித்துப் புகழ் கிடைப்பது இல்லை. சின்னத்திரையில் மானவாரியான சீரியல் வருகிறது. பல சீரியல்களிலும் பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.பல சேனல்களிலும் வருகிறது.சினிமாவை தியேட்டரில் பார்க்க விட்டாலும் சீடியில் பார்க்கலாம்.

எல்லா சேனல்களிலும் பல இடைவெளிகளில் எந்த டப்பா சினிமா படமும் ஒளிபரப்பப் படுகிறது.ஆனால் சிரியல்கள் டப்பாவில் முடங்கிவிடுகின்றன.  

சரி, இந்த பதிவில் என்ன சொல்ல வருகிறேன்? 

அதாவது சினிமா நட்சத்திரங்களுக்கு தங்களுடைய பழய (இளமை கால)படங்களை T.V.யில்  பார்த்து ஆறுதல்/சந்தோஷம்/புல்லரிப்பு அடையலாம். இந்த அதிருஷ்டம் சின்னத்திரை நடிகைகளுக்கு இல்லை.

வீட்டில் DVDயில்தான் தங்களுடைய இளமை கால நடிப்புக்களை பார்த்து சந்தோஷம் அடைய வேண்டும்.

இவர்கள் நடித்த பழய சீரியல்களை டீவியில் மறு ஒலிபரப்பு செய்வது சந்தேகம்தான்.



நான் கடவுள் - படம் - நிறைகள் - குறைகள்


பாலா, ரசிகர்களை விசா கொடுத்து ஒரு பாக்கெஜ் டூரில் வேறொரு உலகத்திற்க்கு அழைத்துக் கொண்டுபோய் காட்டி மிரட்டியுள்ளார்(பிரமிக்கவும் வைத்து). படம் முடிந்து வழக்கமான உலகத்திற்க்கு வரும் போது மனது சாம்பல் பூசி ஜெட்லாக் (jetlock)  ஆகி ஒரு மாதிரி ஆகிறது.




மகனால் குடும்பத்திற்கு நிறைய கெட்டவிஷயங்கள் நடப்பதால் சின்ன வயதிலேயே அவனை காசியில் விட்டு விடுகிறார்கள். பல வருடங்களுக்குப்
பிறகு அம்மா அவனைப் பார்க்க வேண்டும் என்று துடிக்க அப்பா மகளுடன் காசிவந்து ஆர்யாவை சந்திக்கிறார்.


அங்கு அவன் அஹம் பிரம்மாஸ்மியாகிய,ஒரு உக்கிர சிவ பக்தனாக(அகோரி) சாமியார்களுடன் வாழக்கை நடத்துகிறான்.அவன் குருவிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு தன் ஊருக்கு அழைத்து வருகிறார் அப்பா.ஒட்டு உறவு இல்லாமல் ”சித்தம் போக்கு சிவம் போக்காக” நாட்களை கடத்துகிறான்.அம்மாவும் அப்பாவும் அவன் போக்கில் விட்டு விடுகிறார்கள். 


இவனோடு அங்கஹீனம் உள்ள பிச்சைகாரர்களை வைத்து (இவர்களுக்கு ஒரு godown வைத்து)பிசினஸ் செய்யும் தாண்டவன் & கோவோடு கதைப் பிண்ணப் பட்டுள்ளது.இந்தக் கூட்டத்தில் குருட்டுப் பிச்சைக்காரியாக பூஜா வருகிறார்.




அட்டகாசமான ஆரம்பம்.காசியின் சாமுத்திரிகா லட்சணம் கங்கையும் எரியும் பிணங்களும்தான்.பின்னணியில் “ஓம் சிவோகம்” பாடலோடு காமிரா எரியும் பிணங்களிடையே ஊர்ந்து சுடலை மாடனை(ஆர்யாவை)தலைகீழாக அறிமுகப்படுத்துகிறது.. மூட் லைட்டிங்கும் ,காமிராவும்,இசையும் பிண்ணி எடுக்கிறார்க்ள்.இந்த உலகம் மிரள வைக்கிறது. காசியில் பிணத்தை வைத்து
”அரசியல்” கிடையாது “கருமாதி” அல்லது “இழுத்து (கங்கையில்)விடுதல்” தான். 


ஆரியா, நானே கடவுள் நிலைக்கு(அஹம் பிரம்மாஸ்மி) வந்து விட்டதாக உக்கிரமாக இருக்கிறார். அஹம் பிரம்மாஸ்மி என்பதை “நான் கடவுள்” என்று சொல்வது பாமரத்தனம். கடவுள் நிலையை கடந்து “நானே பிரம்மம்” என்னும் நிலை. இந்த நிலை எதுவும் இல்லாத நிலை.இது ”அதை” உணர்ந்த நிலை.
"தத்வமஸி” அதுதான் இது.


சிவனுக்கு மூன்று முகங்கள் என்று சொல்வதுண்டு. 1.மென்மையான பெண் முகம் (வல்து)-படைத்தல் 2. சாந்தமான முகம்(நடு) -ஞானம் 3. உக்கிரமான முகம்(இடது) ருத்ரன். இது அழித்தல் .இந்த முகத்தை வணங்குபவர்கள் “அகோரிகள்” என்னும் பிணம் தின்பவர்கள்.




நிறைகள்:
பூஜா வாழ்ந்து விட்டார். அவார்டு நிச்சியம்.ஒரு உயரமான கருப்பின basket ball player  போல வில்லன் தாண்டவன் அட்டகாசம்.ஒரு விதமான கருப்பு பாம்பு முகம்.அடுத்து ஏஜண்ட் கிருஷ்ண மூர்த்தீ.இந்து சாமிகள் கைவிட்டதால் பூஜா கிறிஸ்துவ சாமியிடம் வேண்டுவது.


சுற்றி நடக்கும் அநியாயங்களைப் பார்த்து மிரளும் “சிவன்” ”முருகன்””ஆண்டாள்” “அனுமான்”.அதுவும் "சிவன்" மிரளுவது நகைமுரண் (irony?) .ஆர்யா /காசி பாத்திர வசனங்களும் வட இந்தியா வாடையோ வருவது. ஆர்யாவும் நல்ல ந்டிப்பு.கஞ்சா கண்கள்.ஆர்யா பிணம் தின்னும் காட்சிகள் மறைமுகமாக(suggestive) ஆகக் காட்டப்பட்டுள்ளது.


கலை இயக்கம் (கிருஷ்ணமூர்த்தி)பிரமாதம். காட்சிகளோடு கதை யதார்த்தமாக
நகருகிறது.எல்லாம் live வாகப் பார்ப்பது போல் உள்ளது.


ஒவ்வொரு பாத்திரங்களும் செதுக்கப்பட்டுள்ளது. பிச்சைகாரர்Exchange offer க்காக வரும் மலையாளி பாத்திரம் நல்ல திருப்பம்.




குறைகள்:
கடைசிக் காட்சி பூஜா வசனங்கள் சற்று செயற்கை.காசியில் தன் காணாமல் போனப் பையனை விசாரிக்கும் போது, பதில் சொல்லும் காசி பண்டிட் மொழி அதட்டல் தொனியில் இருக்கிறது. அனுதாப மொழியில் இருக்க வேண்டும். 
கோர்ட் சீன் ரொம்ப ஓவர். போலீஸ் ஸ்டேஷன் ஆட்டமும் “கலெக்‌ஷ்ன்” உத்தி?
”கோர முக” பிச்சைக்காரர் ஒரு திணிப்பு. shock value க்காக? ஆர்யாவின் சிஸ்டராக
வருபவருக்கும் பிச்சைகார பாவாடை சட்டை ஏன்? பழைய சூடிதார் அணியலாமே?


காசி காட்சிகள் ரொம்ப குறைவு.மெயின் கதையோடு ஆர்யா ஒட்டாமல் சில நேரம் தடுமாறுகிறது.


மகன் வேத மந்திரங்களைக் கத்துக் கொள்ள காசி போனான் என்று அம்மா(அப்பா?)சொல் கிறார்.வேத மந்திரங்கள் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்குதான் காசியில் சொல்லிக்கொடுக்கப்படும். ஆனால் ஆர்யா பேமிலி அந்த வகுப்பைச் சேர்ந்தார் போல் நடை உடை பேச்சு பாவனைகள் சொல்லவில்லை. 




மொத்தத்தில் “நான் கடவுள்” தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல். 


Saturday, February 21, 2009

காக்கைச் சிறகினிலே........... ஒரு கவிதை

      பித்ரு
 
இடைவிடாத ஓலக்குரலில்
சிறகடித்துப் படபடத்துத்
தன் முகம் பார்த்துக் கொத்துகிறது
ஸ்கூட்டர் கண்ணாடியை காக்கை
இது திரும்பினால் 
அதுவும் திரும்புகிறது
வெளிபறந்தால் 
உள்நோக்கி பறக்கிறது
தலைச் சாய்த்தால் 
அதுவும் சாய்க்கிறது
உற்று நோக்கினால்
அதும் நோக்குகிறது
பீச்சியடிக்கப்பட்ட எச்சத்தில்
முகம் நனைந்த உள் காக்கைக்கு
தெரியவில்லை வெளிக்காக்கையின்
முகம்

Tuesday, February 10, 2009

ரிவால்வர் ரீட்டா- கன் பைட் காஞ்சனா

இப்போதெல்லாம்  நிறைய தமிழில் ஆக்‌ஷன் படங்கள் வருகிறது.டெக்னிக்கலாகவும் எங்கோ போய் விட்டோம்.குடும்ப படங்களிலும் ஆக்‌ஷன் கலந்தே வருகிறது. 

நான் ஸ்கூல் படிக்கும் போது ஆக்‌ஷன் படங்கள் கம்மி. ஒரு பக்கம் சிவாஜியின் ”அப்பவே...சொல்லிடேனே.......என்னம்மா.......” என்ற கன்னக் கதுப்பில் வசனம் பேசும் மிகை நடிப்புப் படங்கள்.A.P.நாகராஜனின் பக்தி படஙகள்.எம்ஜியாரின் நிறுத்தி நிறுத்தி “டிஷூம் டிஷூம்” போடும் படங்கள் மற்றும் நிறையக் குடும்பக் கதைகள்.குலமா குணமா, சுடரும் சுறாவளியும், தேனும் பாலும்,என்ன முதலாளி செளக்கியமா?புகுந்த வீடு..... 

முகத்தில் பவுடர் அப்பிக்கொண்டு,தலையில் குருவிக்கூடு விக்,பட்டாப்பட்டி சட்டை, கூர் கருப்பு ஷு போட்டுக்கொண்டு பெரியப்பா அல்லது சித்தப்பாக் களை.அப்போதிருந்த “கட்டிளம் காளை” ஜெய் சங்கர்தான் பிடித்தமான ஆக்‌ஷன் ஹீரோ.சுடரும் சுறாவளியும் படம் பார்த்து விட்டு சுத்தமாகப் பிடிக்கவிட்டாலும் ஆர்ட் பிலிம் பார்த்தோம் என்று பெருமைப் பட்டுக்கொண்டோம். 


அப்போது மூன்றாவது பரிமாணத்தில் ஆகஷன்,மாயா ஜாலப் படங்கள் தெலுங்கிலிருந்து தமிழில் “டப்” செய்யப்பட்டு தியேட்டரில் வந்து தூள் பறக்க ஆரம்பித்தது.அந்த சமயத்தில் எங்களுக்கு அது விறு விறுப்பான படங்கள். ரிவால்வர் ரீட்டா, கன் பைட் காஞ்சனா,கெளபாய் குள்ளன்,மாய மோதிரம்,
பாட்டி சொன்ன கதை,கதவைத் தட்டிய மோகினி பேய்,ஜேம்ஸ் பாண்ட் 777,கப்பல் தீவு காதல் ராணிகள்ஆபாசம் கம்மி.கண்டிப்பாக “பிட்” இணப்புக் கிடையாது.

ஒரு வித்தியாசமான ஜாதியாக இருந்தது."இதுதாண்டா போலீஸ்’ “வைஜயந்தி IPS" போன்ற டப்பிங் படங்களின் முன்னோர் என்று சொல்லலாம்.இந்த படங்கள் ரீலிஸ் ஆகும் தியேட்டர்களுக்கென்றே சில சாமுத்ரிகா லஷ்ணங்கள் உண்டு.தாம்பரம் M.R. தியேட்டர்,பல்லாவரம் ஜனதா, பட்ரோட் ஜெயந்தி,ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி போன்றவை.மூச்சா நாத்தம் அடிக்கும்.சிகரெட்/பீடி பிடிக்கலாம்.விசில் அடிக்கலாம். எங்கு வேண்டுமானலும் உட்காரலாம். பனம் கிழங்கு,கமர் கட்,
ஜவ்வு,முசுண்டை,சமோசா drive in theatre மாதிரி உள்ளேயே விற்பார்கள்.படம் முடியும் தருவாயில் கூட டிக்கெட் கிடைக்கும்.  அடுத்த ஆட்டம்(ஷோ) நிற்பவர்கள் கடைசி சீன்களை பார்க்கலாம்.

ஷோ முடிவதற்க்குள் முன்னேமே ஓடி விடுவோம். “தெரிந்தவர்கள்” யாராவது பார்த்துவிடுவார்கள் என்று.

முதல் நாளே பார்த்து விட வேண்டும். இல்லாவிட்டால் பின்னால் உட்கார்ந்துங்கொண்டு ..த்தா பாரேன்.. இப்ப இன்னா பண்ணுவான்” என்று கதையை சொல்லி “அல்டி”க் கொள்வார்கள்.

போஸ்டரில் கண்டிப்பாக விஜயலலிதா கன் வைத்துக் கொண்டு இருப்பார்.வில்லன் சத்திய நாரயணா கையை விரித்து க் கொண்டு அடி வாங்கும் போஸ். குதிரை ஓட்டும்  மற்றும் சண்டைக் காட்சிகளில் வி.லலிதாவின் “டூப்” தெரியும். “டூப்” சவுரி முடி வைத்துக் கொண்டு குனிந்து குனிந்து முகம் காட்டாமல் ஓட்டுவார்/அடி வாங்குவார்/அடிப்பார். காமெடியன் காலர் வரை பட்டன் போட்டுக் கொண்டு வெத்திலை + சிக்ரெட் கறை தெரிய “நா...நா...” (தெலுங்கில் நேனு நேனு)குதிரையிடம் வசனம் பேசி கமெடிப் பண்ணுவார். நாங்களும் ஏதோ சிரித்து வைப்போம்.

வாய் அசைத்து முடித்தவுடன் வசனம் வரும். அடிக்கடி”புஸ் புஸ் ...” என்ற சத்தத்துடன் end of reel no.  என்று ஏதோ காண்பிக்கும். ரீலை சரியாக வெட்ட வில்லை என்று நினைப்போம்.

கிருஷ்ணா,நரசிம்ம ராஜு,சத்திய நாராயாணா(வில்லன்).ஷோபன் பாபு,காந்தாராவ்,ரேலங்கி,விஜய நிர்மலா,விஜய லலிதா,ஜோதிலட்சுமி,ராஜ நளா மற்றும் பலர் வழக்கமான நடிகர்கள்

விஜய லலிதா படங்கள் ஓடி டப்பிங் இல்லாத நேரடிப்படங்கள் வர ஆரம்பித்தது. இவர் பாலச்சந்தரின்
“நூற்றுக்கு நூறு” படத்தில் கேரக்டர் ரோலில் வருவார்.

கல்லூரியில் படிக்கும் போது கேமரா மன்னன் கர்ணன் ஒரு காட்டு காட்ட ஆரம்பித்தார். அது ஒரு தனிகதை.   

நான் ஸ்கூல் கட் அடித்து முதலில் பார்த்தப் படம் “ரீவால்வர் ரீட்டா”. 

வாழ் நாள் சாதனை?


Monday, February 9, 2009

ஸ்பேம் மெயில் கவிதைகள்

மற்றவை நேரில்

என் பெயர் ஸ்டாலினா லக்டினைல்

வயது  19

சொந்த ஊர் Coasta-de-reef-uch

அழகாக இருப்பேன்.

நான் ஒரு அனாதை

அப்பாவை விஷம் வைத்து கொன்றார்கள்

அம்மா அப்பாவின் பிரிவால்

கேன்சர் வந்து மரித்து விட்டாள்

100 மில்லியன் டாலருக்கு(420 கோடி) ஒரே வாரிசு

மாமியின் கொடுமை மற்றும்

எனது சிததாப்பாக்களின் சதிகள்

ண்பது வயது மாமாவிற்கு

நான்காம் தாரமாக வற்புறுத்தல்

பிரபஞ்சத்தில் பலகோடி பேர்களில்

நிங்கள் ஒருவர்தான் உத்தமர்

இங்கு வாழ பிடிக்க வில்லை

என்னைத் திருமணம் செய்தால்

நம் இருவர்க்குதான் எல்லா பணமும்

உங்கள் இந்திய முறைப்படி நான் இருப்பேன்

காப்பாற்றுங்கள்  ப்ளீஸ்

கவலை படாதே ஸ்டாலினா 

தைரியமாக இரு மனதை தளர விடாதே

ரேஷன் கார்டில் உன் பெயர் பதித்து

என் குடும்பத்தில் ஒருத்தியாக 

இதோ வந்து விடுகிறேன் 

TVS 50 டிக்கு  "பஞ்சர்" போட்டு விட்டு................

  கே .ரவிஷங்கர்


ஸ்பாம் மெயிலும் - ஒரு பதில் கடிதமும்

நாங்கள் ...HDFC ..வங்கியிலிருந்து

வாடிக்கையாளர் வலை கணக்கு

பாதுகாப்பு மைய அதிகாரிகள்

உங்கள் இணைய வங்கி கணக்கை

யாரோ மூன்றாம் பேர்

உங்களுக்கு தெரியாமல்

உங்கள் கணக்கில் நுழைந்து

வேவு பார்ப்பதை கண்டு பிடித்துவிட்டோம்

உங்கள் பாதுகாப்பை முன்னிட்டு

தங்கள் இணைய கணக்கு சம்பந்தப்பட்ட

எல்லா விவரங்களை உடனே கொடுக்கவும்

உங்கள வலை விலாசத்தை  பலபடுத்துவோம்

எல்லாம் ரகசியமாக் வைககப்படும்

உங்கள் மெயிலுக்கு  நன்றி!

நான் "கோட்டகயச்சி பாளையம்

கிராம விவசாய அபிவிரித்தி

கூட்டுறவு சங்க வங்கி "யில்

தான் கணக்கு வைத்துள்ளேன்

உங்கள் வங்கியில் அல்ல.

என் இருப்பு  Rs.64. 65 உறுதி செய்யப்பட்டது.

மேலும் என்னிடம் இணைய கணக்கு கிடையாது

                 என்னை "உஷார்செய்ததர்க்கு நன்றி

கே .ரவிஷங்கர்

 ............................XXXXXXXX.......................

மேல் இரண்டு கவிதைகளும் மறு பிரசுரம் (அக்டோபரில் வெளியிட்டது.)

Saturday, February 7, 2009

ஊசி முனைத் தவம் - ஒரு கவிதை

          ஊசி முனைத் தவம் - ஒரு கவிதை        

           ரத்தம் எடுப்பதற்கு ஊசியோடு 
         
           வந்தவள் அழகான இளம் 
         
           கோதுமை நிற மலையாளி நர்ஸ்
      
           Head & Shoulder ஷாம்பு மணத்தோடு
  
           ஹமாம் சோப்பு மணமும் அத்தோடு
 
           டிங்ச்ர் மணமும் கலந்து நாசியில் ஏற 
  
           பஞ்சில் தோய்த்த டிங்சர் தடவி
    
           நரம்பு தேட ஆரம்பித்தாள் கைஅழுத்தி
    
           மென்மையான கை விரல் ஸ்பரிசங்களும் 
   
           கை அழுத்தல்களிலும் தட்டல்களிலும்
    
           வெளிப்படவில்லை நரம்பு நெடுநேரம்
   
           வெளிப்பட்டுக் கொண்டிருந்தது 
    
           மெலிதான காமம் படர்ந்த 
  
           காதல்தான் 
  



        

Tuesday, February 3, 2009

ஞானக்கதைகள் - 2 - முல்லா நசுருதீன்

முல்லா நசுருதீன் என்பவர் சுபி(sufi) ஞானி. இவர் ஒரு mystic என்றும் சொல்லுவார்கள். அதாவது சித்தர்கள் போல் மறை பொருள் உணர்த்திப்பேசுவார். ஆன்மிக அறிவு விரவிக்கிடக்கும்.இவரைப் பற்றிய கதைகள் ஏராளம். 


எனக்கு மிகவும் பிடித்த கதை.

முல்லாவுக்கு திடீரென்று எதையாவது மறந்து விடுவார். சில நாள் அவருக்கு வித்தியாசமான மறதி வரும். 

ஒரு நாள் எங்கோ போய் விட்டு வரும் வழியில் “ தான் யார்” என்பதை மறந்து விட்டார். எதிரே வந்த தனக்கு அறிமுகமான ஒருவரிடம் “நான் யார் ”தெரியவில்லை. தயவு செய்து சொல்லுங்கள் என்றார். எதிரில் வந்தவர் “அவர்க்கு அவரையே” ஞாபகப் படுத்தி அறிமுகப்படுத்தினார். “ஓகோ அது நான்தானா” என்று கன்பார்ம் செய்துக்கொண்டார்.

மற்றொறு நாளும் இவ்வாறு தன்னை மறந்து விட்டார். கன்பார்ம் செய்துக்கொள்ள, யாரும் தெரிந்தவர் கண்ணில் படவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு இரும்புக் கடையில் நுழைந்தார். கடைக்காரர் “என்ன வேண்டும் உங்களுக்கு?
கேட்டார்.

முல்லா: “நான் கடைக்குள் வந்ததைப் பார்த்தீர்களா?”

கடைக்காரர்: ”ஆமாம்...நீர் வருவதைப் பார்த்தேன்”

முல்லா:  “ இதற்கு முன் என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?”

கடைக்காரர்: “இல்லை”

முல்லா: “அப்படியானல், நான்தான் உங்கள் கடைக்குள் வந்தேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’

கடைக்காரர்:???????????????


உன்னையே நீ அறிவாய்


Monday, February 2, 2009

ஞானகக்தைகள் - முல்லா நசுருதீன்



முல்லா நசுருதீன் என்பவர் சுபி(sufi) ஞானி. இவர் ஒரு mystic என்றும் சொல்லுவார்கள். அதாவது சித்தர்கள் போல் மறை பொருள் உணர்த்திப்பேசுவார். ஆன்மிக அறிவு விரவிக்கிடக்கும்.இவரைப் பற்றிய கதைகள் ஏராளம். 

1. ஒரு நாள் இரவு முல்லா விளக்குக் கம்பத்தின் கிழே ஏதோ தேடிக் கொண்டிருந்தார். 

அங்கு வந்த அவர் நண்பர் என்ன தேடுகிறீகள் என்று கேட்டார். அதற்கு அவர் ஒரு வெள்ளி நாணயத்தைத் தொலைத்துவிட்டதாக சொன்னார். எந்த இடம் என்று சரியாகச் சொன்னால் தான் உதவுவதாகச் சொன்னார் நண்பர்.

அதோ அந்த இடம் என்று கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு இருட்டு இடத்தைக் காட்டினார். அந்த இடத்தில் தேடாமல் இங்கு ஏன் தேடுகிறீர்கள் என்று நண்பர் கேட்டதற்கு ,”இங்குதான் வெளிச்சம் இருக்கு” என்று பதிலளித்தார்.

பிரச்சனை ஒரு இடத்தில் இருக்கும். ஆனால் அதற்கானத் தீர்வை வேறு இடத்தில் தேடுவோம்




நம்ப முடியாத திகில் கதை



”ஆக்சிடெண்டல... மூளைக்கு நிறைய டேமேஜ்.உங்க பையன் brain dead ஆயிட்டான். உயிர்தான் இருக்கும்.ஆனா பிரயோசனமில்லை. எந்த இயக்கமும்இருக்காது. வருசக் கணக்கா இப்படியேத்தான் இருப்பான்.பிரிஜ்ல வைச்சக் காய் மாதிரிதான். ஒரு யோசனை சொல்றேன்.அவனோட உறுப்புகள தானம் அதாவது கிட்னி,லிவர்,இதயம், கண்ணு... அது பிறருக்கு உதவும்.இந்த பையன் சாவுலயும் ஒரு நல்ல காரியம் நடந்த மாதிரி. ஒரு கோடிப் புண்ணியம். யாருக்கும் கிடைக்காது.”

20 வயதில் இறந்துப் போன மகன் கணேஷ் பாபுவின் தாயும் தந்தையும் துக்கம் பொங்க டாக்டரேயே பார்த்தார்கள்.என்ன சொல்வதென்றே தெரியவில்லை.கடைசியாக தானம் செய்வதற்கு ஒத்துக்கொண்டு கையெழுத்திட்டார்கள்.

அடுத்த மூன்றாவது நாள் கணேஷ் பாபு ஆபரேஷன் டேபிளில் கிடத்தப்பட்டு டாகடர் குழு தன் வேலையை ஆரம்பிக்க தொடங்கியது .சீப் டாக்டர் மார்பில் மற்ற சில இடங்களில் பசைத் தடவி கீற ஆரம்பிக்க தொடங்கியதும்......

”சார்.. செத்துத் தொலைச்சாலும் என்ன நிம்மதியா இருக்க விட மாட்டீங்களே! எல்லா உறுப்பும் இருந்தாதான் மேல் உலகத்தில மதிப்பாங்க. அங்க ஆள் பாதி உறுப்பு பாதி”. கணேஷ் பாபு படுத்துக்கொண்டேப் புலம்பினான். 

 

சொகுசு பேருந்து இருக்கை எண் -9&10 - கவிதை

                          கவிதை

         சொகுசு பேருந்து இருக்கை எண் -9&10

          படித்துக்கொண்டிருந்தவளை
          வலிய நிறுத்திப் பேச ஆரம்பித்தாள்
          பக்கத்து இருக்கை முகம் 
          தெரியாத பெண்மணி
          தன் பேச்சைக் கேட்பதில்லையாம் மகள்
          மருந்துக்கும் வீட்டுப் பொறுப்பு
          ஏற்காமல் இருக்கும் கணவன்
          பிறந்த வீடே கதியாக
          கிடக்கும் அழகான மருமகள்
          கெட்ட பழக்கங்களோடு தறிகெட்ட மகன்
          தலை முதல் கால் வரை
          சேவகம் எதிர்பார்க்கும் மாமியார்
          எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருக்கும்
          வயதான நோயாளி மாமனார் 
          வந்தோமா வாழ்ந்தோமா   என்றில்லாமல் 
          பல்லைக் கடித்துக் கொண்டு
          40 வருட தாம்பயத்தை தாங்குவது
          என் தலையெழுத்து  -   50 கிலோமீட்டர்
          தூரம் ஓடி விட்டது பேருந்து 
          சொல்லிமுடிக்கையில்                           
          சரிதான் என்று சொன்னேன்
          ஆறுதல் வார்த்தை எதிர்பார்த்தவளிடம்
          அவள் வீட்டுக்காரர்களை நான்
          நன்றாகப் புரிந்து வைத்திருப்பதாகச்
          சொல்லி தூங்கிப் போனாள்
          புது மினரல் வாட்டர் பாட்டில்
          திறந்துக் குடித்து விட்டு