Wednesday, April 4, 2012

மெல்லிசை ஹிம்சைகள்/கேர்ள் பிரெண்ட் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்

மெல்லிசைக் கச்சேரிகளுக்கு நான் செல்லுவது இல்லை.திறந்த அல்லது மூடிய (Closed hall)அரங்கு எல்லா கச்சேரிகளும் இதில் அடக்கம். முக்கியமாக மூடிய சின்ன கல்யாண மண்டபங்களில் ரிசப்ஷனில் வைக்கப்படும் கச்சேரிகள்.அதுவும் லோக்கல் இசைக் குழுக்கள் இசைக்கும் இசை?பட்டீஸ் டிட்டீஸ் என்று ட்ரம்ஸ்ஸூம் கொய்ங் என்ற கீபோர்ட்டு ஒலியும்.இதில் பாடுபவர்கள் அமுங்கிப்போய் ஈன ஸ்வரத்தில் கேட்கும்.

முக்கிய காரணம் இசை இரைச்சல் ஹிம்சை.ஒலி அமைப்புகள் சரியாக இல்லாமை.அதற்கேற்றார் போல் மண்டபங்கள் வடிவமைப்பதில்லை.மேடையில் உட்காரும் ஆர்கெஸ்ட்ரா குழு ஷேர் ஆட்டோவில் உட்காருவது மாதிரி நெருக்கி அடித்து உட்கார்ந்து இசைப்பது.மறுஉருவாக்கத்தில் சுத்தமாக லட்சணம் இல்லாமல் இருப்பது.

அதன் நடுவில் பாடகி-பாடகர்கள்(பின்னணியில் ஓவர் சவுண்டு)பாடுவது சோகம்.சத்தியமாக ரசித்துப் பாடுவது மாதிரி தெரியவில்லை.இசைக் குழுக்களுக்கும் வேறு வழியில்லை.வயிற்றுப் பிழைப்பு.

இப்படி கேட்பது கண்டிப்பாக ஆரோக்கியமும் இல்லை.

அடுத்து அசல் அசல்தான் அது பழசோ புதுசோ நாம் ரசித்து அனுபவித்து வாழ்ந்த பாடல்களை அதன் ஒரிஜனல் இசைக்கருவிகளுடன் இசைக்கப்படாமல் கேட்டால் என்னவோ மாதிரி இருக்கிறது.அதுவும் ராஜாவின் பாடல்கள் சத்தியமாக அவராலேயே மீண்டும் உருவாக்க முடியாது.

ஏதோ வைக்கவேண்டுமே என்று திருமணங்களில் இசைக்கச்சேரி வைக்கப்படுகிறது.இதில் மாப்பிள்ளை-பெண் வீட்டுக்காரர்களின் பந்தாதான் இசை மேல் காதல் இல்லை.

தவிர்க்க முடியாவிட்டால் வெளியே வெகு தூரத்தில் நின்றுகொள்வேன்.இரைச்சல் குறைந்து ஒரளவுக்கு ரசிக்கலாம்.

எப்படி இருக்க வேண்டும்?பின்னணியில் ரம்யமாக மெல்லிசை ”மெலிதாக”இசைத்தபடி இருக்க பார்வையாளர்கள் கல்யாண குஷி காட்சிகளை ரசித்தவாறு இருக்க வேண்டும்.ரசித்தவாறே உறவுகளிடம் உரையாடலாம்.

வீணை வித்தகி ரேவதி கிருஷ்ணா
 

பாடல்: காலையும் நீயே மாலையும் நீயே படம்: தேன் நிலவு

இதே வீணையில் இவர் "மன்மதா ராசா” பாட்டும் வாசித்துள்ளார்.”உன் சமயலறையில்” பாட்டும் அருமை.

நான் விரும்பும் உண்மையான மெல்லிசை “ மெலிதான இசை”. சினிமா அல்லது கர்நாடக கீர்த்தனைகளை ஒற்றை இசைக் கருவிகளில் (புல்லாங்குழல்/வயலின்/சிந்த்,வீணை) வாசிப்பது.முக்கியமாக பின்னணியில் தாளக் கருவிகள் தபேலா,டோலக்,மிருதங்கம்.ஓவர் சவுண்டு இல்லாமல் மற்ற இசைக் கருவிகள் இருக்கலாம்.

இதுதான் மூடிய கல்யாண மண்டபங்களுக்குத் தோதுபட்டு வரும்.இல்லாவிட்டால் சத்தம்தான்.மார்பு கூடு அதிரும்.இல்லாவிட்டால் 1965க்கு முன் உள்ள பாடல்களை இசைக்கலாம். இசைக் கருவிகள் குறைவு.

சமீபத்தில் கலந்துக்கொண்ட திருமணத்தில் மெல்லிசைக் கச்சேரி.ஆச்சர்யம் பிளஸ் அதிர்ச்சி.(திருமண பத்திரிக்கையில் இதைப் பற்றி இல்லை) காரணம் இதை ஒட்டிய (annexe) இன்னொரு மண்டபம் தியான மண்டபம் கம் கோவில்.
அதில் பக்தி பஜனை நடக்கிறது.இதில் மெல்லிசை.சபாஷ் சரியான போட்டி.ஸ்டார்ட் மியூசிக்!

எஸ்கேப்...! எங்க? அவுட் சைட் டிஸ்டென்ஸ் ஸ்டாண்டிங்தான்.

கேர்ள் பிரெண்ட் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்


தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் தன்னுடைய 75 வருடத்தைக் கொண்டாட இருக்கிறது.இப்போது பொறியியல் கல்லூரிகளுக்கு மவுசு கூடி கலைக் கல்லூரிகள் மங்கிவிட்டன.அப்போது கலைக் கல்லூரிகளிலேயே இது தனித்தன்மை கொண்டது.

ஒன்று கோ-எஜூகேஷன் சிஸ்டம்.இரண்டு இதன் இயற்கை சூழல்.


இப்போது தெரியாது ஆனால் அதன் அன்றைய தோற்றத்தை நினைக்கும்போது சிலிர்க்கிறது.இருபுறமும் மரங்கள் அடர்ந்து பொதிந்த இயற்கையின் ஊடே கல்லூரி வளாகம்.... சர்வகலாசாலை?உள்ளே நுழைந்து ஒரு முறை பார்த்து வருவதே பெரிய பாக்கியம்.ஆறு மாதம் (???)படித்த அனுபவம் உண்டு.ஈஸ்ட் இண்டியா காலத்தில் கட்டப்பட்ட கல்லூரி.

ஒரே மாதிரி தோற்றத்தில் சேலையூர்,செயிண்ட் தாமஸ், பிஷப் ஹீபர் என்று மூன்று ஹாஸ்டல்கள்.கண்ணைக் கட்டி விட்டால் அடையாளம் காண்பது கஷ்டம்.

மாணவ மாணவிகள் ஜோடி ஜோடியாக சுதந்திரமாக உள்ளே வளைய வருவார்கள்.கண்டிப்பு கிடையாது.படிப்பதை விட கேர்ள்பிரண்ட்ஸ் கிடைக்கும் என்று சேர்வதில் நிறைய பையன்கள் துடிப்பார்கள்.அப்போது கேர்ள் பிரெண்ட்ஸ் இப்போது “பிகர உசார் பண்ணுவது”.

கோ எஜூகேஷன் என்பதால் பெற்றோர்கள் சேர்ப்பதற்கு தயங்குவார்கள்.  இங்கு படித்துப் பட்டம் பெற்ற மிடில்கிளாஸ் பெண்களுக்கு மாப்பிள்ளை சற்று தயக்கத்துடன்தான் கிடைப்பார்கள்.

பாவாடை தாவணி(half saree) பெண்களுடன் மார்டன் உடை பெண்களும் சேர்ந்து படித்த அபூர்வ காலேஜ். ஜீன்ஸ் அணிந்த பெண்களை முதன் முதலில் பார்த்தது இங்குதான்.வெளி நாட்டு மாணவி/மாணவர்கள் இங்கு பார்க்கலாம். புத்த பிட்சுக்கள் நிறைய பார்த்திருக்கிறேன்.


கலைக் கல்லூரிதான் ஆனால் இதில் படித்து பட்டம் பெற்ற ஜாம்பவான்கள் பலர் பெரிய லெவலில் இருக்கிறார்கள்.சிபிஎம் கட்சி பிரகாஷ் கரத் முன்னாள் மாணவர்.மறைமலையடிகள் மற்றும் பரிதிமாற்கலைஞர் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றினார்கள்.

இங்கு நிதி நிர்வாகம் செய்பவரை “Bursar" என்பார்கள். இது bursa(purse) என்கிற லத்தீன் சொல்லின் மூலம். முதன் முதலில் காண்டீன் என்பதை கேப்டீரியா என்றுதான்(cafeteria) இங்கு மாணவர்கள் ஸ்டைலாக சொல்வார்கள்.