Friday, April 3, 2009

சாலமனுக்கு ஒரு கடிதம் - தொடர்

சாலமனுக்கு ஒரு கடிதம்

பதிவர் நர்சிம் சாலமனுக்கு ஒரு கடிதம் எழுத என்னை கேட்டுள்ளார். 

விளையாட்டின் விதிகள் என்ன?சாலமன் என்றுதான் இருக்கவேண்டுமா?மன்னிக்கவும் இந்த பெயர் எனக்கு ஒட்டவில்லை. வேறு காரணம் இல்லை. ஒட்டாமல் எழுதினால் கடிதம் நீர்த்துப் போய் விடுமோ என்ற அச்சம்.


என் கல்லூரி நண்பன் ஸ்ரீதருக்கு எழுதலாமா?


அன்பு நண்பன் ஸ்ரீதருக்கு,

கதை,கவிதை,கட்டுரை,இத்யாதிகள் தமிழில் எழுதியிருக்கிறேன்.திடுதிப்பென ஒரு கடிதம், நம் “மால்குடி டேஸ்” அல்லது ”குரோம்பேட்டை தினங்கள்” பற்றி தமிழில் எழுதுவது ஒரு மாதிரி வெட்கமாக இருக்கிறது.அதுவும் பல வருடம் கழித்து ஒரு பழைய நண்பனுக்கு.


இதை கதை,கவிதைகளில் எழுதும் போது லஜ்ஜை இல்லை.கடிதத்தில்? அதே அலை வரிசையில் நீ புரிந்துக் கொள்வாயா என்பது காரணம்?


Alumini meet of Don Bosco,Alumini  meet  of IIT,Alumini  meet  of QMC...என்று பேப்பரில் பார்த்து,அதீத ஆசையுடன் நானும் பல வருடங்களாக நாம் (பள்ளி/கல்லூரி வரை ஒன்றாக இருந்தவர்கள்)ஒரு நாள் கூடி பேசலாம் கொண்டாடலாம் என்று பலமுறை முயற்சிஎடுத்தும் தோல்விதான்.

ஒருவன் “வேற வேல இல்ல இவனுக்கு”.முத்து “எங்கடா டைம் இருக்கு”. ஜாகீர் “இன்னும் கதகிதெல்லாம் படிச்சிட்டு மெண்டலாத்தான் இருக்கியா”. அய்யன் மற்றும் வெங்கட்டை பயந்துக் கொண்டு கேட்கவே இல்லை. நீ மட்டும்தான் ஓகே என்றாய். அவர்கள் அதை ஏனோ அகெளரவமாக நினைக்கிறார்கள். அல்லது என் மாதிரி ரத்ததில் நினைவுகள் கலந்து ஓட வில்லையோ என்னவோ?


இரண்டு மூன்று கதைகளில் இவர்கள் வருவதைச் சொல்லி, படிக்கச் சொன்னேன்.டைம் இருந்தா படிக்கிறேன் என்று சொல்லி விட்டார்கள்.குரலில் ஆர்வம் இல்லை.


நம் இருவரைத் தவிர பழைய நினவுகள் மேல் யாருக்கும் தீராக் காதல் இல்லை.இதிலும் மிதவாதி,தீவிரவாதி என்று பிரிவுகள் இருக்குமோ?நீயும் ஒரு கட்டத்தில் தப்பித்துச் சென்ற மாதிரி பட்டது. பரவாயில்லை.

குரோம்பேட்டை என்றதும் CLC ground, ஹோட்டல் பாலஸ்,வைஷ்ணவா காலேஜ்,மின்சர்ர ரயிலில் மோஷனில் ஏறுவது,வெண்டார்ஸ் கம்பார்ட்மெண்டில் சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொண்டது. புகையை “இன்” செய்து இருமியது.Plain Wills,Passing Show,Gnat,Panama,Cool.,சாது பீடி.இதே கம்பார்ட்மெண்டில் எவ்வளவு ஆக்ஸிடெண்ட்பிணங்களைப் பார்த்திருக்கிறோம். இதெல்லாம் நினைப்பதுண்டா ஸ்ரீதர்? சுஜாதா சினி ஆர்ட்ஸ் பட ஆரம்ப டைட்டில் போல் பின்னணி இசையோடு பள பளவென ஒடுகிறது.


இப்போதெல்லாம் “பிகர்” என்கிறார்கள்.அப்போது “டாவ்”. “லட்டு முழுங்கி” மீனாவை ஞாபகம் இருக்கிறதா? பஸ் ஸ்டாண்ட் காதல் இன்னும் இருக்கிறதா?  B.A.,BSc..,B.Com., இவைகள் கொடி கட்டி பறந்த போது பஸ் ஸ்டாண்ட் காதலும் கொடி கட்டிப் பறந்தது. 12A பஸ் தி.நகர் To  பட்டினப்பாக்கம்



நம் வாழ்வில் மறக்கமுடியாத இடம் Drive -in - Woodlands.ஒரு காபி குடித்து விட்டு மூன்று மணி நேரம் உட்கார்ந்திருப்போம்.அழுகை வருகிறது ஸ்ரீதர். எவ்வளவு சினிமாக்கள். ஞாபம வருகிறதா? இதைப் பற்றி பேசி கொண்டாடுவதற்கு நம் மக்களுக்கு என்ன தயக்கம்?. 

ஷோலே? 

என் மகள் மகனிடம் நான் ஷோலேவை சத்யம் தியேட்டரில் ரூபாய் 2.90 கொடுத்துப் பார்த்தேன் என்று சொன்னேன். ஆச்சரியப்பட்டார்கள். கிரிக்கெட்டில் field placement 
விளக்கும் போது, four slips, a cover,gully,mid off ,mid-on என்று விள்க்க்வது போல் என் பையனுக்கு ,சத்யமில் இங்குதான் மல்லிகை பூ விற்கும் பெண்,இங்குதான் லுங்கியில் பிளாக் டிக்கெட் விற்பவர்,கோன் ஐஸ்கீரிம்,நீயூ காலேஜ் மாணவர்கள் உட்காருமிடம்,ஜீன்ஸில் வரும் மார்வாடி பெண்கள், ஸ்டில்ஸ் வைக்கும் இடம்,கிர்ர்ர்ர்ர்ர்ர் என்று டிக்கெட் கொடுக்க அடிக்கும் மணி டிக்கெட் வைக்கும் அலுமினிய டப்பா என்று சொன்னேன். 

எல்லாம் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது அவர்களுக்கு.சத்யமில் பாப்கார்ன் விலை 50 ரூபாய் ,டிக்கெட் 110 ரூபாய் இன்று. 



எல்லா நிகழ்வுகளும் ஒரு விடியோவில் பதிக்கப்பட்டிருந்தால்
எப்படி இருக்கும்.


இலக்கியமெல்லாம் இப்போது எங்கோ போய் விட்டது.கதைகளும்,கவிதைகளும் மாறி விட்டது.உனக்குப் பிடித்த ”பூங்கொத்தோடு காதலியை சம்மதம் கேட்கப் போக அவள் வேறு ஒருவனை காதலிப்பது தெரிந்ததும்,பூங்கொத்தை அவர்கள் காதலுக்கு பரிசாக அங்கேயே (டீஸண்டாக) வைத்து விடுவது” எல்லாம் இப்போது கிடையாது. உன்னுடைய(நான்?) அ.ரமணன்,இந்துமதி,சிவசங்கரி,வாஸந்தி, ப.கோ.பிரபாகர்,ராஜேஷ் குமார்.சவீதா,பாலகுமாரன்,சுப்ரமணிய ராஜூ, மாலன்,சுஜாதா.ஜோதிர் லதா கிரிஜா,ஹேமா ஆனந்ததீர்த்தன் கிடையாது.


இப்போது இவர்களை ஒரு ரவுண்ட் படிக்கும் போது கதைகளின் ஊடே நம் பழைய நினைவுகள் வந்து போகிறது.ஆமாம் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் ஞாபகம் இருக்கிறதா?ஜெயகாந்தனைப் பார்க்க ஒரு முறை பார்க்கப் போனோம்.மொட்டை மாடி.ஜிப்பா. பஞ்ச கச்சம் .கையில் கஞ்சா சிலம் அவரை சுற்றி ஆடகள்.மிரண்டு போய் விட்டோம்.

இந்தக் கோலத்தில் (கஞ்சா)ஜெயகாந்தனை பார்த்தது மனம் சமாதானம் ஆகவில்லை.கஞ்சா சுற்றி வரும் போது அதை சாஸ்திரத்திற்க்கு தொட்டு விட்டு அடுத்தவரிடம் பாஸ் செய்தோம்.ஜெயகாந்தன் ஏதோ ஒரு கர்நாடக பாட்லைப் பாடினார்.பக்கத்தில் இருந்தவரிடம் ஜெயகாந்தன் பிராமிணா என்று கேட்டேன்.அவர் ஒன்றும் சொல்லவில்லை.வேறு ஏதும் பேசாமல் கிளம்பி விட்டோம்.

 தி.ஜா,கு.ப.ரா,பு.பித்தன்,கி.ரா.ஆதவன்,ஜெயந்தன்,பாலகுமாரன்,சி.சு.செ மெளனி,அ.மித்திரன் என்று நிறைய பேரின் கதைகளை அலசியிருக்கிறோம். அசோகமித்திரனின் “எலி” கதையை மறக்கவே முடியாது.நம் நண்பர்கள் பக்கத்தில் உட்கார்ந்து இதை ரசித்தபடி இருப்பார்கள்.அவர்களும் நம் தூண்டுதலால் படிக்க ஆரம்பித்தார்கள்.இலக்கிய சிந்தனை அமைப்பு என்ன ஆயிற்று ஏதாவது தெரியுமா?

சினிமா....?

அப்போது பாலைவனச் சோலை,குடிசை,தாகம்,பசி,தண்ணீர் தண்ணீர்,உறவு சொல்ல ஒருவன்,என்னைப் போல் ஒருவன்....பாதை தெரியுது பார்,அவள் அப்படித்தான், சாவித்திரி என்று offbeat சினிமா என்று சொல்லுவார்கள்அப்போது பாலசந்தர்தான் ஒரு புரட்சிகரமான டைரக்டர். யூனிபார்மில் போனால் கண்டு பிடித்து விடுவார்கள் என ஒரு செட் “அன்யூனிபார்ம்” கொண்டுவந்து மாற்றிப் போட்டு படம் பார்ப்போம். அந்த சட்டைகளின் கலர்கள் நிழலாடுகிறது.

அவள் அப்படித்தான் நம்மை ரொம்ப பாதித்தது என்று சொல்லலாம்.பாலு மகேந்திரா மகேந்திரன் இவர்களும் தான். அடுத்து Maestro இளையராஜா. அவரின் “காற்றின் எந்தன் கீதம்” பாடலை, prelude, First prelude,Second prelude அக்கு வேறு ஆணி வேறாக R&D செய்தோம்.Stereoவில் கேட்டு ஆடிப்போனோம்.அடுத்து ”பனி விழும் மலர் வனம்”

இப்படி மாத கணக்கில் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜாகீர்,அய்யன்,வெங்கட்,முத்துவெல்லாம் ஒவ்வொரு நிகழ்விலும் ரத்தம் சதையுமாக இருந்தார்கள்.இந்த நினைவுகளைப் பகிர்வதில் என்ன அகெளரவம்? தயக்கம்?

நல்ல வேளை பகிர்ந்துக் கொள்வதற்க்கு உண்மையாகவே நீ இருக்கிறாய்.இல்லா விட்டால்? கதைகள் கவிதைகள்தான்.

ரொம்ப வருத்தமாக இருக்கிறது ஸ்ரீதர்.

அன்புடன்

கே.ரவிஷங்கர்


அடுத்து இந்த கடிதத் தொடருக்கு லக்கி லுக்கை அழைக்கிறேன்.


படிக்க:

கவுண்டமணி-செந்தில்-எலெக்‌ஷன் டைம்



34 comments:

  1. நீங்கள் அடுத்து ஒருவரை எழுதச் சொல்ல வேண்டும் :)

    ReplyDelete
  2. அட்டகாசமான நோஸ்டால்ஜியா!

    ReplyDelete
  3. அட்டகாசமான நோஸ்டால்ஜியா!

    ReplyDelete
  4. இயல்பா இருக்கு ரவி. கையோட அடுத்ததா யாரு கடிதம் எழுதணும்னு சொல்லீடுங்க.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  5. நன்றி சுந்தர்,

    அடுத்து லக்கி லுக்கை அழைக்கிறேன்.
    பதிவிலும் போட்டு விட்டேன்.
    பதிவு பற்றி ஒன்றும் சொல்ல-
    வில்லையே?

    ReplyDelete
  6. நன்றி பைத்தியக்காரன்!

    அடுத்து லக்கி லுக்கை அழைக்கிறேன்.
    பதிவிலும் போட்டு விட்டேன்.

    ReplyDelete
  7. நன்றி லக்கிலுக்!

    அடுத்து லக்கி லுக்கை அழைக்கிறேன்.
    பதிவிலும் போட்டு விட்டேன்.

    ReplyDelete
  8. அடடா..

    இந்தக் கடிதத்தொடரை இப்படி முடித்து விட்டீர்களே..?

    (தல லக்கி இந்த மாதிரி தொடர் விளையாட்டுன்னா போங்காட்டம் ஆடி தொடராம விடுவாரு. அதைத்தான் சொன்னேன்!! :-) )

    கடிதம் - அருமை!

    ReplyDelete
  9. இபோதைய இளைஞர்கள் என்ன படிக்கிறார்கள் என்ற ஆர்வத்தை உங்கள் கடிதம் தூண்டிவிடுகிறது. நீங்கள் 80களின் வடிவத்தைப் பூரணமாக செதுக்கி இருக்கிறீர்கள். அருமை.

    ReplyDelete
  10. நன்றி பரிசல்காரன்.

    ReplyDelete
  11. நன்றி வல்லிசிம்ஹன்.

    ReplyDelete
  12. http://www.luckylookonline.com/2009/04/blog-post_104.html - சார் எப்படியோ எழுதி ஆட்டைய முடிச்சிட்டேன்..

    ReplyDelete
  13. http://www.luckylookonline.com/2009/04/blog-post_104.html - சார் எப்படியோ எழுதி ஆட்டைய முடிச்சிட்டேன்..

    ReplyDelete
  14. எங்கள் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வருகிறது திரு ரவி ஷங்கர். அருமையான பதிவு. இவ்வளவு அழகாக நினைவுகளை எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்களே! பாராட்டுக்கள்

    ReplyDelete
  15. எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது ரவி. துளிக் கூட பாசாங்கு இல்லாத Reminiscences!
    அதே சென்னை வாசியாக இருந்ததால் could relate to it easily. 'அன்யூனிபாரம்' - :))

    அனுஜன்யா

    ReplyDelete
  16. இயல்பாய் இருக்கிறது ரவிஷங்கர்!!!

    நீங்கள் சொல்லிய படி தெரிந்தே பழைய நினைவுகளில் அமிழ்ந்து போவதை சற்றே கவுரவக் குறைச்சலாகத்தான் பலர் நினைக்கிறார்கள்!!!

    நல்ல பதிவு!

    ReplyDelete
  17. நல்லா இருந்ததுங்க நினைவலைகள்..
    குரோம்பேட்டை... நானும் இரு வருடங்களுக்கு முன் இரு வருடங்கள் அங்குதான் குப்பை கொட்டினேன்.
    ஜெயகாந்தன் கஞ்சா...?! அதிர்ச்சி+ஆச்சரியம்...

    ReplyDelete
  18. முதல் வருகை கருத்துக்கு நன்றி புவனா.

    //எங்கள் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வருகிறது திரு ரவி ஷங்கர்//

    நீங்களும் எழுதலாமே.

    ReplyDelete
  19. கருத்துக்கு நன்றி அனுஜன்யா.

    நீங்க எப்ப எழுதப்போறீங்க?

    ReplyDelete
  20. கருத்துக்கு நன்றி நரேஷ்.

    ReplyDelete
  21. தமிழ்ப்பறவை நன்றி.

    //குரோம்பேட்டை... நானும் இரு வருடங்களுக்கு முன் இரு வருடங்கள் அங்குதான் குப்பை கொட்டினேன்.//

    அட!எந்த இடம்?இப்போ எவ்வளவோ மாறிப்போச்சு.

    //ஜெயகாந்தன் கஞ்சா...?! அதிர்ச்சி+ஆச்சரியம்//

    தெரியாதுங்களா?

    எனக்கும் அதிர்ச்சிதான்.பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் “கஞ்ச
    சுகத்திற்காக” வந்தவர்கள்.யாரும் அவரைப் படித்தவர்கள் மாதிரி தெரியவில்லை.

    ReplyDelete
  22. எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது..

    Please do come today eve. for blogrs meet.

    ReplyDelete
  23. நர்சிம்,
    கருத்துக்கு நன்றி.அடுத்து அழைப்புக்கும் நன்றி. அதிஷாவும் முதல் பதிவர் சந்திப்புக்கு அழைத்தார்.
    தவிர்க்க முடியாத காரணங்களால் வர
    முடியவில்லை.

    இன்று மனைவியின் பிறந்த நாள்.
    அதனால தவிர்க்க முடியவில்லை.
    ஒரு நாள் தனியாகவாவது அதிஷாவுடன் சந்திப்போம்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க, பகிர்வுகள் மனசுக்கு நெருக்கமா இருக்கு

    ReplyDelete
  25. கருத்துக்கு நன்றி யாத்ரா.

    ReplyDelete
  26. நானும் கொஞ்சம் நிணைவலைகளில் நீந்த நேர்ந்தது... அகவுரவம் என்று சொல்ல முடியாது, ஒரு வேளை நிகழ்காலத்தில் ஊரி கடந்த காலம் ஒரு கனவு போல மீண்டும் உணர, உரையாட சிரமமாகக்கூட இருக்கலாம். எனக்கு சில விஷயங்கள் அப்படி இருக்கு. ஒரு வேளை இன்னும் பல வருஷங்களுக்கு அப்புரம் அந்த பக்குவமும் ரசனையும் வரலாம். யார் மேலேயமும் கோபம் வேண்டாமே :)

    நானும் ஒரு கடிதம் எழுத முயல்கிறேன்

    நல்ல பதிவு, எனக்கு மிக பிடித்தது

    ReplyDelete
  27. கருத்துக்கு நன்றி சுகுமார்!

    //யார் மேலேயமும் கோபம் வேண்டாமே//

    பாஸ்.. கோபம் இல்ல.ஆதங்கம்.

    //நானும் ஒரு கடிதம் எழுத முயல்கிறேன்//

    எழுதுங்க.தமிழ் மணத்துல இணைங்க.

    ReplyDelete
  28. நிறைவாய் யில்லை.அடுத்த எபிசோடு போடுங்கள்.தனி தனி பதிவுகள் வேண்டும்.

    “டாவ்”.
    "12A பஸ் "
    "சத்யம் தியேட்டர் அனுபவம்"
    "ஜெயகாந்தனைப் பார்க்க போனது"
    "வெண்டார்ஸ் கம்பார்ட்மெண்டில் சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொண்டது."
    "ஆக்ஸிடெண்ட்பிணங்கள்"


    ஒவொன்றும் ஒரு குறுநாவல்.
    ஒரு நாவலுக்குரிய விஷயஙளை சிறுகதையாய் இல்லை..இலலை ஒரு பக்க கதையாய் பதிந்ததில் எனக்கு உடன்பாடில்லை.

    ReplyDelete
  29. கடிதம் கிடைத்தது..

    உங்களுக்கு ஸ்ரீதர் போல எனக்கு இதுவரை யாரும் அமையவில்லை..

    சில சமயம் தனிமை என்னை கொல்லும்..

    நீங்கள் கொடுத்துவைத்தவர் தான்..

    ReplyDelete
  30. ஞாபகம் வருதே,

    நன்றி.

    //அடுத்த எபிசோடு போடுங்கள்.தனி தனி பதிவுகள் வேண்டும்//

    சொல்றது ஈசி சார்! அதுக்கு மூடு வரணும்.சோம்பறித்தனம் இருக்கக்கூடாது.

    ReplyDelete
  31. //கடிதம் கிடைத்தது.//

    சூப்பர்.கருத்துக்கு நன்றி.இல்லாத நண்பனுக்குக் கூட எழுதலாம்.

    ReplyDelete
  32. கண்டிப்பா எழுதுகிறேன்..

    எழுதி உங்களுக்கும் அனுப்புகிறேன்..

    ReplyDelete
  33. அண்ணே பட்டிகாட்டான்! எழுதி தமிழ் மணத்துல இணைங்க.எனக்கு அனுப்பாதீங்க.நான் படிக்கிறேன்.

    ReplyDelete
  34. கண்டிப்பா நான் உங்களுக்கு தம்பியாக தான் இருப்பேன்..
    தமிழ் மணத்துல இணையரதுக்கு ஒரு நல்ல நேரம் வர வேண்டாமா..!!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!