Thursday, January 1, 2009

2008 காலண்டர் படுத்திய பாடு - சிறு கதை


   2008 காலண்டர் படுத்திய பாடு - சிறு கதை

வாழ்க்கையில் மனனவி,வீடு அமைவது போல காலண்டரும் சரியாக அமைய வேண்டும். 2008 இன் நிகழ்வுகளில் அருண் குமார் வீட்டு காலண்டர் பற்றிய நிகழ்வு முக்கியமான நிகழ்வு.இதைப் பதிவு செய்யவிட்டால் 2008 வருடம் குறைப்பட்டுப் போகும். 


அந்த பேப்பர் கம்பெனி காலண்டர்தான் அருண் வீட்டில் உள்ள எல்லோருக்கும் பொருந்தி வரும்.ஆஸ்திரேலிய பழங்குடி நாள் கிழமையிலிருந்து எல்லா நாள் கிழமைகளும் சிவப்பு கலரில் இருக்கும்.கிட்டதட்ட பஞ்சாங்கம் கம் காலண்டர்.கொட்டை எழுத்தில் போட்டிருக்கும்.ரோட்டில் செல்பவர் கூட பார்க்க வசதியாக இருக்கும்.


சாமி பட காலண்டர் ஒத்து வருவதில்லை. நல்ல பளபளப்பு இருந்தாலும் அதில் தேதி வசதி இலலை. வீட்டில் நடக்கும் சண்டைகளுக்கு நேரடிச் சாட்சி அந்த காலண்டர் கடவுள்.வருடம் முடிந்ததும் கட் செய்து பிரேம் போடத்தான் முடியும்.வருட முடிவில் குப்பையில் போடமுடியாது. அப்பா பரணில் போட்டு விடுவார்.அங்கு அது தூசு படிந்து குப்பையாகக் கிடக்கும்.


2007 டிசம்பரில்தான் புது வீடு கட்டி மாறினார்கள். வழக்கமான அந்த கம்பனி காலண்டரை அருண் தான் போய் வாங்கி வந்தான்.இந்த தடவை முருங்கைக்காய் போல ஒரு மாதிரி ஒல்லியாக சுருட்டப்பட்டிருந்தது. பேசிக்கொண்டே ரப்பர் பேண்டை மானவரியாகச் சுற்றிவிட்டான் அந்த கம்பெனி சேல்ஸ்மென்.



போகும் வழியில் ரப்பர்பேண்டின் சுற்றுகளை விடுவித்து 
முருங்கைக்காயிலிருந்து புடலங்காய் சயிஸுக்கு மாற்றினான் அருண்.


வீட்டில் வந்து ரப்பர் பேண்டை எடுத்தான்.ஏகப்பட்ட சுருட்டல்களால் யானை துதிக்கை நீட்டுவது போல் நீட்டிக்கொண்டிருந்தது.முள்ளை முள்ளால் எடுப்பது போல் முன் பக்க சுருட்டலை பின் பக்கம் சுருட்டி நேராக்கினான் அருண். ஆனால் காலண்டர் தண்டவாளம் போல் பாளம் பாளமாக கோடு விழுந்து அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் மடங்கி,கசங்கி உப்பிக் கொண்டு கந்தல் ஆகி விட்டது.

அயர்ன் பாக்ஸ் வைத்துத் தேய்த்து நேராக்கினான் அருண்.ஆனால் காலண்டரின் ஒரிஜினல் “சாமுத்திரிகா லட்சணம்” போய் விட்டது. 2008 இப்படியா ஆரம்பிக்க வேண்டும்.


அடுத்த பிரச்னை அதை எங்கு மாட்டுவது என்று.அது 360 டிகிரி பார்வையில் எல்லார் கண்ணிலும் பட்டு ஒரு “நாள்” கூட தப்பக் கூடாது.இல்லாவிட்டால் அப்பா கோபிப்பார்.ஷூ ரேக் அருகில் உட்கார்ந்து பாலிஷ் போடும்போதும் கண்டிப்பாக கண்ணில் படவேண்டும்.அமமா அக்கா பெருக்கிக்கொண்டே பார்க்க வசதியாகவும்.


ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டு"Plasto Press"வாங்கி காலண்டரை மாட்டினான்.ஆணிக்குப் பதிலாகத்தான் Plasto Press.“எல்லோர் கண்ணும்”
படும் படியாக அமைந்தது சந்தோஷம்.சந்தோஷம் கொஞ்ச நேரம்தான் நீடித்தது.புது பேன் ஓட்டத்தில் பட படவென அடித்துக்கொண்டு தஞ்சாவூர் பொம்மைப் போல் இரண்டு பக்கமும் ஆடி காலண்டர் கம்பி சுவற்றில் இரு பக்கமும் கோடு போட்டு சுவற்றின் அழகில் ஒரு திருஷ்டி. யார் “கண்” பட்டதோ?


அப்பா நூலில் ஒரு கூழாங்கல்லைக் கட்டி தொங்க விட்டு காலண்டரின் ஆட்டத்தைக் குறைத்தார். கடைசி தங்கை பூர்ணிமாவிற்கு மதம் பிடித்த்து.


“என்ன அசிங்கமா ...கல்ல கட்டி... இது என்ன புடலங்கா கொடியா?இல்லேன்னா குருக்கள் வீடா”?


இரும்பு கிளிப் எடுத்து கிழ் பகுதியில் பறக்காமல் கிளிப் செய்தாள்.அதுவும் மெதுவாக “டப்..டப்..” என்றுஅடித்துக்கொண்டது. பூர்ணிமா அசடு வழிந்தாள்.அடுத்துப் பெரிய கிளிப்பாகப் போட்டாள்.கிழே தாள்கள் மடங்கி அந்த கிளிப் ஒரு மாதிரி லூசுத்தனமாக பிடித்துக்கொண்டிருந்தது.


அடுத்த பல மாதங்களில் பல நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டது.அடிக்கடி கிளிப்பை எடுத்து பின் மாதங்களைப் பார்ப்பதால் கிளிப் போடும் இடம் கிழிந்து தொங்கியது.சுவற்றில் காலண்டர் கம்பி கோடுகள் பலமாகி பெயிண்ட்கள் உதிர ஆரம்பித்து விட்டன.


ஏப்ரல் மாதத்தாள் காணவில்லை.அடுத்த மாதத்தின் நாட்கள் முன் மாதத்தாளின் பின் பக்கம் இருப்பது தெரியாமல் யர்ரோ கிழித்துப் போட்டுவிட்டார்கள்.இதே மாதிரி ஜுலை மாதமும் நடந்தது.இதற்கிடையில் காலண்டர் மாட்டும் நூல் அறுந்து விட்டது.நூலுக்குப் பதிலாக,தாள்களில் ஓட்டைப் போட்டு PlastoPress கொக்கியிலேயே மாட்டினார்கள்.


ஒரு நாள் Plasto Pressம் பிடிப்பு இழந்து சுவரிலிருந்து தொப்பென்று காலண்டரோடு கிழே விழுந்து விட்டது.

              முற்றும்


6 comments:

  1. தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்பதிவுகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
    தமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை வரவேற்கிறது.

    ReplyDelete
  2. அச்சச்சோ என்னப்பா இது காலெண்டருக்கு வந்த சோதனை????
    அன்புடன் அருணா

    ReplyDelete
  3. காலெண்டர் கருவில் ஒரு சிறுகதை..நல்லாருக்கு..

    ReplyDelete
  4. :))))))) ரொம்ப அனுபவிச்சுப் படிச்சேன். சிரிச்சேன். அழகாய் இழையோடும் ஹாஸ்யம். கலக்கறீங்க. too good :thumbsup:


    //ஆஸ்திரேலிய பழங்குடி நாள் கிழமையிலிருந்து எல்லா நாள் கிழமைகளும் //

    :)))))))))


    //இந்த தடவை முருங்கைக்காய் போல ஒரு மாதிரி ஒல்லியாக சுருட்டப்பட்டிருந்தது.

    போகும் வழியில் ரப்பர்பேண்டின் சுற்றுகளை விடுவித்து முருங்கைக்காயிலிருந்து புடலங்காய் சயிஸுக்கு மாற்றினான் அருண்.//

    :)))))))))

    //ஆனால் காலண்டர் தண்டவாளம் போல் பாளம் பாளமாக கோடு விழுந்து அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் மடங்கி,கசங்கி உப்பிக் கொண்டு கந்தல் ஆகி விட்டது.//

    :))))))))))

    ரொம்ப அருமை :D
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  5. //ஒரு நாள் Plasto Pressம் பிடிப்பு இழந்து சுவரிலிருந்து தொப்பென்று காலண்டரோடு கிழே விழுந்து விட்டது.//

    இதில் இன்னொரு எரிச்சலூட்டும் விஷயம், காலெண்டரோடு ப்ளாஸ்டோ ப்ரேஸ் சேர்ந்து கீழே விழுந்து விடும். சுவரில் பிய்த்தெடுத்த அடையாளம் வேறு. மஹா கோபம் வரும். ரூமின் ஏஸ்தெடிக் லுக் காணாமல் போய்விடும்.

    இதற்குப் பயந்தே, சாமி ரூமில், படுக்க மல்லாக்க வைத்து விட்டு, தினம் தினம் எடுத்து பார்க்க வேண்டியுள்ளது. முக்யமான பண்டிகைகள் பார்க்க தவறிவிட்டு, அவசரமாய் அம்மா அல்லது மாமியார் தெரிவித்தவுடன், pre-arrangements நடக்கும். இதனால் நிறைய வாங்கி கட்டிக்கொண்டது நிறைய. :D

    ReplyDelete
  6. ஷக்திப் ப்ரபா,

    உங்கள் வீட்டு காலண்டரை ஞாபகப் படுத்தி விட்டேன்.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!