Monday, January 5, 2009

தீர்த்த யாத்திரையும் கல்யாணிப் பாட்டியும் - சிறுகதை

                                   சிறு கதை


            தீர்த்த யாத்திரையும் ஒரு கணக்கும்   

ஷேத்திரங்களையும், தீர்த்தங்களையும்   திவ்யமாக தரிசித்து கடைசியாக  ராமேஸ்வரத்தில் மிகவும் திருப்தியுடன் ரயில் ஏறினார்கள் குமாரசாமியும் அவர் மனைவியும். அம்பத்தூரில் இருக்கும் தன் மகனுக்கு பிரசாதம் எடுத்து வைக்க லெதர் பேக்கைத் திறந்தாள் மரகதம்.

“அட..கடவுளே... ! நம்ம எதிர்வூட்டு கல்யாணி பாட்டி கொடுத்த வெள்ளிக் காசும் பத்து ரூபா பணமும் உண்டியல்ல போட மறந்திட்டோம்.”  மரகதம்

“சரி..வூடு...யாராவது ராமேஸ்வரம் போறவங்க கிட்ட கொடுத்து போடச் சொல்லாம்...” குமாரசாமி

மரகதத்திற்க்கு மனசு சமாதானம் ஆகவில்லை. கல்யாணி பாட்டி அதை உண்டியலில் போடும் போது “புவனா... என்ன மன்னிச்சுடுன்னு” சொல்லிபோடச் சொன்னாள்.எதற்கு நேர்த்திக் கடன் என்று பாட்டிச் சொல்லவில்லை. மரகதமும் கேட்கவில்லை.ஆனால் ”இதுக்குத்தான் பல்ல கடிச்சிட்டு உயிரோட இருக்கேன். என் கட்ட நிம்மதியா வேகும்” என்று வேறு முணு முணுத்துக்கொண்டே போனாள். 

இது ஞாபகம் வ்ந்து நொந்து போனாள். கணவனிடம் சொல்ல அவரும் ரொம்ப விசனமானார். இந்த மறதி விஷயம், தீர்த்த யாத்திரை பலனெல்லாம் கரைக்க வைத்து வெறும் ஆபிஸ் டூர் ஆகி விட்டமாதிரி பிராணனை வாங்க ஆரம்பித்தது. மூக்கு புடைக்க கோபம் வந்தது.

“ இவ்வளவு சொல்லியிருக்கு ...அது. ஆனா ஒம் பொண்ணுக்கு மறக்காம ,எழுதி வைச்சு அது இதுன்னு கண்டதெல்லாம் வாங்கின....இது மட்டும் மறந்துப் போச்சி.
வள வள வென்னு வெட்டிப் பேச்சுதான் ... பொறுப்பு வேனாம். உன்னத்தான் பாவம் சுத்தியடிக்கும். எனக்கென்ன வந்தது”

இந்த மாதிரி கணவனின் குழந்தைப் பேச்சு அருவருப்பை தந்து மரகதத்தின் முகம் ரத்த்ம் சுண்டி தொங்கிப் போயிற்று. அவ்வளவுதான் வீடு போய்சேரும் வரை வாய் திறக்க முடியாது. கணவர் ஒரு பக்கம் கல்யாணிப் பாட்டி என்று இம்சை ஆரம்பித்தது.  

குமாரசாமிக்கும் ஒன்றும் ஒடவில்லை.”கல்யாணி சமாசாரம்” மனதில் மறுபடியும் அட்டையாக ஒட்டிக்கொண்டு பாடாய் படுத்தியது.காளை அடக்கும்
போட்டியில், அதைப் பிடித்து அடக்க அடக்க காளைத் துள்ளித் துள்ளி ஒடும்.அதன் மேலேயே தொங்கிக் கொண்டு ஓடுவான் அடக்குபவன். அது மாதிரி எவ்வளவு அடக்க நினைத்தாலும் துள்ளித் துள்ளித் துன்புறுத்தியது.

எழுந்து நின்று கை கால்களை உதறினார். “ராம நாதா” என்று மனமுருக வேண்டிக் கொண்டே வீபுதியை எடுத்துப் பூசிக் கொண்டார். மனசு கொஞ்சம் நிம்மதி ஆயிற்று.

“மரகதம்.. ரொம்ப டென்ஷன் ஆவத... கல்யாணி கிழவி ஏதோ திரிசமன் பண்ணியிருக்கு.அதுக்குப் பிராய்ச்சித்தமாதான் இந்த வேண்டுதல்..கடவுள் வேறு
ஏதோ முடிச்சிப் போட்டு நம்மள மறக்க வச்சுட்டான். எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்கு.தோளைப்பிடித்து ரொம்பவும் மனம் இளகி வாஞ்சையாகச் சொன்னார்.

மரகதம் கணவனின் பேச்சை சுத்தமாக ரசிக்காமல் முறைத்தாள்.

“இப்போ பாம்பன் பாலம் வரும்.அதுல போட்டிரலாம். இது ராமனாதர் சன்னதிக்குச் சமம்.தர்மராஜன் “அசுவத்தாம அத குஞ்சரக” பொய் சொன்ன பாவத்துக்கு இங்க வந்துதான் ஸ்நானம் பண்ணி பாவம் போக்கிட்டார்.உண்டியல
விட சேதுவுக்கு கடாட்சம் ஜாஸ்தி.”

“என்னத்தையோ செய்யுங்க....”வெறுப்புடன் பெர்த்தில் படுத்து கண்ணை மூடிக்கொண்டாள்.

பாட்டிக் கொடுத்தப் பொட்டலத்தை பிரித்தார்.”இந்த மங்கி இத்துப்போன வெள்ளிக் காசயும்,கசங்கி மடங்கி அழுக்காயிருந்த நோட்ட உண்டியல்லப் போட்டு பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடப் பாக்கற கல்யாணி கிழவி”. ஒரு பெரிய எலுமிச்சைப் பழத்தை பொட்டலத்தில் வைத்து சுருட்டினார். கண்களில் ஓற்றிக்கொண்டு பாட்டியின் நேர்த்திக் கடனை பவ்யமாக சேதுக் கடலில் விட்டெறிந்தார்.
ஊர் போய் சேர்ந்து அடுத்த நாள் கல்யாணி பாட்டி வீட்டிற்க்கு மரகதம் சென்றாள். மனதில் ஒரு மாதிரி ஏதோ நெருடிக் கொண்டிருந்தது.”போட்டாச்சு” என்று மொட்டையாகச் சொல்லி பிரசாதங்களை கொடுத்து நமஸ்காரம் செய்தாள்.

“பாவம் எவ்வளவு சிரமம்.  நாத்தனார் வேண்டிக்கிட்டாளே.நேர்ல போய் போட்றதுக்கு அவளுக்கு முடியல. பத்து வருஷத்துக்கு மிந்தி நான் ராமேஸ்வரம் போகும் போது என் கைல குடுத்து போடச் சொன்னா. நா மறந்துட்டேன். உங்க மூலமா அது நிறவேறிடுச்சி. நாத்தனார் இந்த நேர்த்திக் கடன போடச் சொன்ன இடம் கடல்.ராமேஸ்வரம் கடல்ல ஒரு எலுமிச்சைப் பழத்தை சுத்திப் போடச் சொன்னாள். நா மறந்துப் போய் உண்டியல்ன்னு சொல்லிட்டேன். சேர்ர இடத்துக்கு போய் சேர்ந்திடுச்சி. எல்லாத்துக்கும் கடவுள் ஒரு கணக்கு வச்சுருக்கான் ”


                                     முற்றும்

1 comment:

  1. கல்யாணிப் பாட்டி படுத்திட்டாளோ.

    கத சார்ப்பா இருக்கு.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!