Wednesday, July 8, 2009

போட்டிச் சிறுகதைகளைப் பற்றி...

ஒரு எழுத்தாளன் தன்னால் எழுதப்படாத ஒரு கதையை விமரிசிக்கும்போது பல அம்சங்கள் விமரிசனத்தின் நேர்மையைக் கலைக்க முற்படுகின்றன.சிறுகதை படிக்கும்போது கதையின் ஆதாரமான செய்தியையும் அமைப்பையும், ஒரு வாசகனைப்போல் கவனிக்காமல், “ இந்த வாக்கியத்தை இப்படி எழுதியிருக்கலாமே, இந்த பாராவை அங்கு அமைத்திருக்கலாமே,கதையை இந்த இடத்தில் முடித்திருக்கலாமே” என்று அடிக்கடி அவன் பாண்டித்யம் குறுக்கிடும்.



நான் சந்தித்த பல எழுத்தாளர்கள் மற்றவர்கள் கதையை யோக்கியமாகப் படிக்கிற ஜாதி இல்லை என்பதை அவர்களுடன் பேச்சில் தெரிந்துகொண்டிருக்கிறேன்.
அவர்கள் பொழுது போக்குக்கு தத்தம் சொந்தக் கதைகளையே படித்துக்
கொண்டிருப்பார்கள் என்று தோன்றியது.



ஒரு நல்ல எழுத்தாளனாவதற்கு சில சொந்தத் தியாகங்களும் பலிகளும் தவிர்க்க முடியாதவை.அவைகளில் ஒன்று சில துல்யமான வாசகத் தன்மைகளை இழப்பது. நானும் இழந்திருக்கிறேன். இருந்தும் இன்றும் சில நல்ல சிறுகதைகளை என்னை அந்தப்பூர்ணமான வாசக நிலைக்குத் திருப்பி அனுப்புகின்றன.



எனவே எழுத்தாளன் என்கிற ரீதியில் எனக்குள்ள பிடிவாதங்களின் கறை இந்தக்கட்டுரையில் பட்டிருக்கலாம். அதைத் தவிர்க்க நான் நிச்சயம் முயற்சித்திருக்கிறேன். என்னை ஒரு வாசகனாகவே ஆக்கிக்கொண்டு இந்தக் கட்டுரையை அமைக்க முற்பட்டிருக்கிறேன். அது பல கதைகளில் சற்று கஷ்டமாகவே இருந்தது. அவை பற்றி அப்புறம்.



முதலில் சிறுகதைகளைப் பற்றிக் கொஞ்சம் பொதுவாகச் சொல்கிறேன்.பிறகு இந்தத் தொகுதியின் கதைகளை என் கோணத்திலிருந்து ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துகிறேன்.நான் கடைசியில் அறிமுகப்படுத்தும் கதை இந்தத் தொகுதியில் சிறந்த கதை.



சிறுகதை அளவில் சிறியதாக இருக்கவேண்டுமா? இல்லை.அதில் கதை இருக்க வேண்டுமா? தேவை இல்லை. எனவே “சிறுகதை” என்னும் அடையாளப் பெயரை அதன் சரித்திர மதிப்புடன் விட்டுவிடுவோம்.எப்போதோ கதைகளைச் சிறியதாகவும் கதைகளாகவும் எழுதிக் கொண்டிருந்தார்கள்.இப்போது அவ்வண்ணமே விசுவாசமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.



ஆனால் நவீன படைப்பிலக்கியத்தில் சிறுகதைகள் இந்த ஆதார அமைப்பிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டன.நவீன வாழ்க்கையின் மனச் சிக்கல்கள் நவீன சிறுகதையிலும் பிரதிபலிக்க அது ஒரு பிரத்தியோக வெளிப்பாட்டுச் சாதனமாக மாறி “இதுதான் சிறுகதை” என்று அறுதியிடுவது கஷ்டமாகிறது. முயன்று பார்க்கிறேன்.

சிறுகதை என்பது என்ன? அபிப்ராய பேதம் வேண்டாம் எனில் உரைநடையில் சில பக்கங்கள் எழுதப்பட்ட வார்த்தைகளின் அமைப்பு என்று சொல்லலாம்.அப்படியென்றால் செய்தித்தாள் முழுவதும் சிறுகதைகளே! சிறுகதையின் உரைநடை தனிப்பட்டது என்று சொல்லலாமா?உருவம் உள்ளடக்கம் என்று சிலர் ஜல்லியடிப்பதைப் கேட்டிருக்கிறேன்.டெண்டர் நோட்டிசுக்கும் உருவம் உள்ளடக்கம் உண்டு.



பின் சிறுகதை என்பது என்னதான்? கூர்ந்து கவனியுங்கள்.சிறுகதை ஒரு முரண் பாட்டை சித்தரிக்கும் உரைநடை இலக்கியம்.முரண்படுதல் என்பது என்ன? இரண்டு மாறுபட்ட அமைப்புகள் குறுக்கிடும் போது - ஏன் சந்திக்கும் போதுகூட, ஏற்படுவது முரண்பாடு. இந்தப் பொது அர்த்தத்தில் இந்தக் கட்டுரை முழுவதும் இவ்வார்த்தை உபயோகப்பட்டிருக்கிறது. சச்சரவு மோதல் சண்டை போன்ற அர்த்தங்களில் இல்லை.



சிறுகதை அதன் நவீன தொனியில் இரண்டு அல்லது மேற்பட்ட நிலைகள் முரண்படும்போது நிகழ்வதை தனிப்பட்ட உரைநடையில் சொல்லும் இலக்கியம் என்று சொல்லலாம்.குழப்பமாக இருக்கிறதா? எனக்கும் அப்படியே! அடுத்த மூன்று பாராக்களில் தெளிவாகிவிடும்.வாக்கியத்தைக் கழற்றிப் பார்க்கலாம்.



முரண்பாடு (முரண்பாடு என்பதை ஆர்தர் கோஸ்லர்”ஆக்ட் ஆப் கிரியேஷன்” என்கிற புத்தகத்தில் எல்லா மனித சாதனைகளும் முரண்பாடு ஒரு ஆதார காரணம் என்கிறார்.) ஒரு தனி மனிதனின் மனத்திலேயே இருக்கலாம். அல்லது மனிதனுக்கும் அவன் விதிக்கும் முரண்பாடு இருக்கலாம்.அதனுடைய ஆதர்ச்ங்களுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இருக்கலாம். இரண்டு சமூக மட்டங்களுக்குள் இருக்கலாம். இருவர் அல்லது மேற்பட்டவருள் இருக்கலாம்.

இந்த இருவர் முரண்பாடுகள் கொள்கை வித்தியாசங்களால், வளர்ந்த சூழ்நிலை வித்தியாசங்களால் இருக்கலாம்.

ஒரு சாதாரண குழாய்ச் சண்டையை இலக்கிய நிலைக்கு உயர்த்துவது அதை எழுதுபவனின் நடை, சொல்லும் விதம்,காட்சிகளை வாசிப்பவர்க்கு அறிமுகப்படுத்தும் திற்மை.நியாய அநியாயங்களை கணிக்கும் சுதந்திரம் வாசகனுக்கு தரப்பட வேண்டும்.வாசகன் இரண்டு கட்சிக்களுக்கும் இடம் இருக்கிற்து என்பதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.


இதில்தான் பல சிறு கதைகளின் தரம் போய் விடுகிறது நல்ல சிறுகதையில் பிரச்சாரம் போதனை.கிடையாது.நம் வாழ்கையில் நல்லவை கெட்டவைகள் இரண்டும் கலந்து உள்ளது.ஆதாரமாகவே மனித மன அமைப்பில் முரண்பாடு இருக்கின்றது. வாசகன் ஒரு நல்ல சிறு கதையில் ஒன்றும் போது அவன் தன் மனத்தின் ஆதாரமான முரண்பாடுகளிலேயே மறுபடி வாழ்கிறான்.


எல்லோரிடமும் ஆபாசங்களும்உன்னதங்களும் கலந்தே உள்ளது.


நல்ல சிறுகதை இது நல்லது இது கெட்டது இது கருப்பு இது வெளுப்பு என்று அடாவடித்தனமாகப் பிரிக்காது.வாசகன் மனத்தில் ஞாபக பிம்பங்கள் தோன்றலாம். பச்சாதாபம் எழலாம்.வாழ்வின் அபத்தங்கள் தெரியலாம்.அவலங்கள் அதன் சந்தோஷங்கள் தெரியலாம்.ஆனால் இவைகளைக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டியவன் எழுத்தாளன் அல்ல.

”இதோ பார் வாழ்வின் அபத்தம் இதோ பார் வாழ்வின் சந்தோஷம்” என்று விரல் நீட்டும்போது சிறுகதை தரத்தில் சரிந்துவிடுகிறது.கூடாது.


வாழ்க்கையின் தீர்ப்புகள் அவ்வளவு சுலபமானது அல்ல.


நன்றி:

”மிஸ் தமிழ்தாயே! நமஸ்காரம்!” என்ற புத்தகத்தில் எழுத்தாளர் சுஜாதா எழுதினது. “1974 ஆண்டின் சிறந்த கதைகளைப் பற்றி” என்ற கட்டுரையில்.

அந்த வருடம் அவர் தேர்ந்தெடுத்த சிறந்த சிறுகதை “தனுமை” by வண்ணதாசன்.



26 comments:

  1. இந்தக் கட்டுரையைப் படித்த ஞாபகமிருக்கிறது. இரண்டாவதாக வண்ண நிலவனின் கதையையும், மூன்றாவதாக ஜெயகாந்தனின் கதையையும் தேர்ந்தெடுத்திருபார் இல்லையா?

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான கட்டுரை..

    //”இதோ பார் வாழ்வின் அபத்தம் இதோ பார் வாழ்வின் சந்தோஷம்” என்று விரல் நீட்டும்போது சிறுகதை தரத்தில் சரிந்துவிடுகிறது.கூடாது.//

    :-))

    கதை என்ற தளத்துல நடக்கத்தொடங்கும்போது வேணும்னா இப்படித்தான் நடக்கணும்னு மத்தவங்க சொல்லி கைப்பிடிச்சு கூட்டி காட்டுறது ஓக்கே..

    ஆனா பல மொழிபெயர்ப்பு கதைகள் பரவலா தமிழ்ல கிடைக்கும் சாத்தியத்துல கதைங்கற தன்மையை உடைக்கற ஒரு தன்மைதான் அதிகமாகும்ன்னு எனக்கு தோணுது.

    ReplyDelete
  3. அப்போ வாசகன் விமர்சனம் செய்யலாம் இல்லையா ?

    ReplyDelete
  4. /*எதுவும் சொல்லாத போகாதீங்க! */

    I am a complan Boy..!!! நான் வளர்கிறேனே மம்மி..

    ReplyDelete
  5. வாழ்க்கையின் தீர்ப்புகள் அவ்வளவு சுலபமானது அல்ல. - சரியா சொல்லி இருக்காரு...
    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  6. புரிந்தும் புரியாத மாதிரி ஒரு நிலை..

    ReplyDelete
  7. ஜ்யோவ்ராம் சுந்தர் said...

    // இந்தக் கட்டுரையைப் படித்த ஞாபகமிருக்கிறது. இரண்டாவதாக வண்ண நிலவனின் கதையையும், மூன்றாவதாக ஜெயகாந்தனின் கதையையும் தேர்ந்தெடுத்திருபார் இல்லையா?//

    அவரிடம் 12 கதைகள் கொடுத்து ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கச்சொன்னார்கள்.வண்ண நிலவன்(கரையும் உருவங்கள்),ஜெயகாந்தன்
    (சக்கரங்கள் நிற்பதில்லை)இருக்கிறது.

    இரண்டாவது மூன்றாவது பற்றி குறிப்பு இல்லை.

    ReplyDelete
  8. //ஆனா பல மொழிபெயர்ப்பு கதைகள் பரவலா தமிழ்ல கிடைக்கும் சாத்தியத்துல கதைங்கற தன்மையை உடைக்கற ஒரு தன்மைதான் அதிகமாகும்ன்னு எனக்கு தோணுது//

    சென்ஷி உடன்படுகிறேன்.நன்றி.பெரும்பாலன வாசகர்கள் முதன் முறை மொழிப்பெயர்ப்பு க்தைகளைப் படிக்கும் போது அந்நியத்தனம் தாக்கி கொஞ்சம் திணறுவார்கள்.

    ReplyDelete
  9. செந்தழல் ரவி said...

    //அப்போ வாசகன் விமர்சனம் செய்யலாம் இல்லையா?//

    தாரளமாக வாசகன் செய்யலாம்.ஆனால் பரந்த வாசிப்பு அனுபவம் மிக மிக அவசியம்.பிடிக்கும் பிடிக்காது என்ற அளவுகோல் இல்லாமல் படிப்பது
    அவசியம்.போட்டி கதைகளில் 62 படித்து விட்டேன்.

    அசோகமித்திரனை புறம் தள்ளியது அதிர்ச்சி!

    ReplyDelete
  10. இலக்கிய உலகில் விமர்சனம் குழு மனப்பான்மையுடனே அனுகப்படுகிறது இங்கையும் அது நடக்காம இருக்கனும் பார்க்கலாம்

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  12. சோம்பேறி சொன்னமாதிரி வீ ஆர் காம்ப்ளான் பாய்ஸ்.

    இன்னும் வளரணும்.

    பகிர்வுக்கு நன்றி. ( நீங்க எழுதினதோனு நினைச்சிட்டே படிச்சிட்டேன்.. நல்ல வேளை நீங்க எழுதல )

    ;-)

    ReplyDelete
  13. ♫சோம்பேறி♫ said...

    //I am a complan Boy..!!! நான் வளர்கிறேனே மம்மி..//

    வளர்ந்ததற்கு நன்றி சோம்பேறி!

    ReplyDelete
  14. கயல்விழி நடனம்
    நன்றி.

    வினோத்கெளதம் said...

    //புரிந்தும் புரியாத மாதிரி ஒரு நிலை//

    கொஞ்ச நாள் கழிச்சுப் படிங்க.

    ReplyDelete
  15. கடைசியிலிருந்து வரிசைப் படுத்துவது போல் எழுதியிருப்பார் - 12, 11, 10 என்று. அதை அவர் குறிப்பிடவும் செய்திருப்பார். அந்தச் சிறுகதைத் தொகுப்பிலோ அல்லது வேறு எங்கோ படித்த ஞாபகம்தான் - ஒருவேளை நான் சொல்வது தவறாகக்கூட இருக்கலாம்.

    ReplyDelete
  16. அதிஷா said...
    //சோம்பேறி சொன்னமாதிரி வீ ஆர் காம்ப்ளான் பாய்ஸ்.//

    வாங்க குரு.ரொம்ப நாளாச்சு.கூப்பி்டறேன் சொல்லி காணாமப் போய்டுறீங்க.

    //இன்னும் வளரணும்.//

    உங்க ரேஞ்சே தனி.ரொம்ப பெரிசா வளர்ந்துதான்
    யாக்கை எழுதறீங்க.

    //பகிர்வுக்கு நன்றி. ( நீங்க எழுதினதோனு நினைச்சிட்டே படிச்சிட்டேன்.. நல்ல வேளை நீங்க எழுதல //

    "நல்ல வேளை நீங்க எழுதல" அண்ணே திகில் அடிக்கிற மாதிரி பேசுறீங்க.ஆட்டோ,டாட்டா சுமோ.... ஏதோ சத்தம் கேட்குது.

    எஸ்கேப்!

    ReplyDelete
  17. இது எனக்குச் சம்பந்தமில்லாத ஏரியான்னு நினைக்கிறேன்...
    ////”இதோ பார் வாழ்வின் அபத்தம் இதோ பார் வாழ்வின் சந்தோஷம்” என்று விரல் நீட்டும்போது சிறுகதை தரத்தில் சரிந்துவிடுகிறது.கூடாது.////
    இது எனக்குப் பிடிச்சிருந்தது. இது பாயிண்ட்...

    ReplyDelete
  18. தமிழ்ப்பறவை said...

    //இது எனக்குச் சம்பந்தமில்லாத ஏரியான்னு நினைக்கிறேன்.//

    எல்லோருக்கும் சம்பந்தம் உண்டு.மொத்தத்தில் சுவராஸ்யமாக எழுத வேண்டும்.

    ReplyDelete
  19. நல்ல பதிவு. சிறுகதைகளைப் பற்றி வித்தியாசமான ஒரு வரைமுறையைக் கொடுத்திருக்கிறார். சிறுகதை என்பது முடிவதற்குச் சற்று முன் ஆரம்பிக்கிறது என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார் சுஜாதா. அதுவும் மிகவும் உண்மையே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  20. சேரல் said...

    //நல்ல பதிவு. சிறுகதைகளைப் பற்றி வித்தியாசமான ஒரு வரைமுறையைக் கொடுத்திருக்கிறார்//

    நன்றி சேரல்.

    ReplyDelete
  21. "எல்லோரிடமும் ஆபாசங்களும்உன்னதங்களும் கலந்தே உள்ளது."

    மிக சரி!
    தொடக்கத்தில் ஆன்மிகம் கலந்த தத்துவங்களை படிக்கும்போது, அதிகபிரசங்கித்தனமா இப்படி அல்ல அப்படி இருந்திருக்கனும், அப்படி அல்ல இப்படி இருந்திருக்கனும்னு நினைத்ததுண்டு!
    ஆனால் இப்போதெல்லாம் ஒரு வெறுமையான மனதோடு தான் படிக்கிறேன். பளுவில் பெறுத்தது அறிவுபாரம்தான்!

    www.sugumar.com

    ReplyDelete
  22. சுகுமார்,

    நன்றி.இன்னும் தமிழ் மணத்தில் இணைக்கவில்லையா?

    ReplyDelete
  23. //நான் சந்தித்த பல எழுத்தாளர்கள் மற்றவர்கள் கதையை யோக்கியமாகப் படிக்கிற ஜாதி இல்லை என்பதை அவர்களுடன் பேச்சில் தெரிந்துகொண்டிருக்கிறேன்.

    நான் நூற்று ஐம்பது சிறுக்தைகள் படித்தேன். எங்கே செல்லும் இந்த பாதையென்று இப்போது பாடிக்கொண்டிருக்கிறேன் சேது போல

    ReplyDelete
  24. திரு. ரவி ஆதித்யா அவரகளுக்கு,
    இந்த முக்கியமான கட்டுரையின் முழுமையான பிரதி ஒன்று வேண்டும். நான் தேடிப் பார்த்து எங்கும் சிக்க வில்லை. அயராத தேடலில் கூகுள் உங்களது வலைப் பக்கத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது. PDF ஆக மாற்றி மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்தால் மிக்க நன்றி உடையவனாவேன். அல்லது இக்கட்டுரை இணையத்தில் வேறு எங்கும் கிடைக்கிறதா? தகவல் தந்து உதவ வேண்டுகிறேன்.

    அன்புடன்,
    ரவிச்சந்திரன்
    vadakarairavi@yahoo.co.in

    ReplyDelete
  25. ரவிச்சந்திரன்,

    //இந்த முக்கியமான கட்டுரையின் முழுமையான பிரதி //
    இது என் டைரியில் இருந்து எழுதப்பட்டது.
    முழுமையான வடிவம் ”மிஸ் தமிழ்தாயே! நமஸ்காரம்!” புத்தகத்தில்தான் இருக்கும். புத்தகம் என்னிடம் இல்லை.என் பதிவில் சிறுகதையைப் பற்றி சுஜாதா சொன்னது 90% கவர் ஆகிவிட்டது.

    இது முடிந்து அடுத்து அவர் எழுதியது 12 கதைகளின் விமர்சனம் அதில் வரும்.இது தவிர வேறு விஷயங்களும் நிறைய உள்ளது புத்தகத்தில்.

    நன்றி.

    ReplyDelete
  26. ரவிசங்கர் அவர்களுக்கு,

    பதில் தந்தமைக்கு மிக்க நன்றி.
    சுஜாதாவின் அந்த புத்தகம் நானும் பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்திருக்கிறேன்.

    எனக்கு அந்த 1974 ம் ஆண்டு இலக்கியச்சிந்தனை பரிசு பெற்ற சிறு கதைகளின் தொகுப்பிற்கான சுஜாதாவின் முன்னுரை மிக முக்கியமான கட்டுரை.

    தகவல்களுக்கு நன்றி.

    ரவிச்சந்திரன்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!