சீப்பு,கத்திரிக்கோல்,கட்டிங் மெஷின்,பிளேடு,கண்ணாடி,பிரஷ் இவைகளோடு”தினத்தந்தி”யும் பார்பர் ஷாப்பில் அத்தியாவசியமான பொருளாக இருக்கிறது.வீணையும் நாதமும், நகமும் சதையும் போல பார்பர் ஷாப்பும் தினத்தந்தியும் என்று சொல்லலாம்.ஒரு காலத்தில் தினத்தந்தி இல்லாத பார்பர்ஷாப்பை கற்பனை செய்து பார்ப்பது கஷ்டம் .இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது.
தினத்தந்தியின் செல்லப் பெண் “ராணி” வாராந்தரி.தினத்தந்தியோடு ஒட்டிக்கொண்டு பிறந்த மாதிரி பார்பர்ஷாப்பில் கிடக்கும்.குடும்பப் பத்திரிக்கை என்று போட்டிருக்கும்.ஆனால் இதைப் படிப்பவர்கள் விளிம்பு நிலைப் பெண்கள்தான் அதிகம்அப்போது.”எக்ஸ்போர்ட்டு கம்பேனி” யில் வேலைச் செய்யும் பெண்கள் தோளில் ஹாண்ட் பாக்கும் கையில் ராணியைச் சுருட்டி வைத்துக்கொண்டு போவதை சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.இல்லாவிட்டால் வட்ட டிபன்பாக்ஸ் with சுருட்டிய ராணி.இவர்கள் “ஹைகிரேடு” என்று மற்றப் பத்திரிக்கைகளைப் (ஆ.வி./குமுதம்/கல்கி)படிக்க மாட்டார்கள்.
இப்போது இவர்கள் BPO. ஆனால் கையில் செல்.
இப்போது இவர்கள் BPO. ஆனால் கையில் செல்.
பள்ளி பருவத்தில் ரொம்ப நாள் வரை கருப்பு நிறம் உடையவர்கள் படிக்கும் பத்திரிக்கை என்று என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.மேல் தட்டு குடும்பப் பெண்கள் இதைப் படிப்பதை கெளரவக் குறைச்சலாக அப்போது நினைப்பார்கள்.
லோ கிளாஸ் பத்திரிக்கை என்று ஒரு எண்ணம் அப்போது.ஆனால் நான் ரொம்ப விரும்பி படிப்பேன். வீட்டில் வாங்கமாட்டார்கள்.குமுதம்தான் வாங்குவார்கள்.
இது நகைமுரண் அல்லது சூப்பர் காமெடி என்று அப்போது தெரியாது.
முடி வெட்டக் காத்திருக்கும் நேரத்தில் எல்லாம் படித்து விடுவேன்.இல்லாவிட்டால் முடிவெட்டி முடிந்தவுடன் இதற்காகவே உட்கார்ந்துப் படிப்பது வழக்கம்.இந்த படிப்பு அனுபவம் பல சமயங்களில் ‘down to earth" ஆக என்னால் சிறுகதைகளில் எழுத முடிகிறது.இதற்காகவே முடிவெட்டாத நாளிலும் போவதுண்டு. வெளிவரும்போது சட்டையை நன்றாக உதறிவிட்டு வரவேண்டும். இது ஒன்றுதான் பிரச்சனை.இல்லாவிட்டால் வீட்டில் கண்டுப்பிடித்து விடுவார்க்ள்.
அட்டையில் வழக்கமான குமுதம் பாணி பெண் படம்.உள்ளே குரங்கு குசலா,(அன்புள்ள) அல்லி பதில்கள்,பி.டி.சாமி பேய்க் கதை,படக் கதை,சமையல் குறிப்பு,பெண்கள் வெள்ளைப் படுதல்,சிறுவர் பகுதி,கருத்துப் படம்,குடும்பத்தில் சுவையான நிகழ்ச்சி.குறுக்கெழுத்துப் போட்டி,சிரிப்பு,லேகியம் மற்றும் “கடல் கன்னி” கட் பாடி விளம்பரம், பாட்டி வைத்தியம் போன்றவை சாணித்தாளில், கருப்பு மைப் பூசிய எழுத்துக்களில்,கெமிகல் நாற்றம் அடிக்க இருக்கும்.சில படங்கள் தெளிவாகத் தெரியாது.
பாட்டி வைத்தியம் படத்தில் ஒரு பாட்டி காலை நீட்டிக்கொண்டு குட்டி உரலில் மருந்து இடித்துக்கொண்டிருப்பார்.பி.டி.சாமி பேய்க் கதைகள் ரொம்ப விருப்பம்.
”அன்புள்ள அல்லி நான் நடிகை ஜெயசித்ராவுடன் ஸ்கூட்டரில் செல்வதுப் போல கனவு கண்டேன்! பலிக்குமா?”என்று அல்லி கேள்வி பதிலில் ஒருவர் கேட்டிருப்பார்.
அன்புள்ள அல்லி பதில்: ”உங்களோடு போனால் ஜெய்சங்கர் கோபித்துக் கொள்வார்!”
ஒரு ஸ்கூட்டர் படம் போட்டிருக்கும் அதில் ஜெயசித்ரா(சல்வார் கமீஸ் உடை!) ஸ்கூட்டரை ஓட்டுவார். உண்மையான பெரிய முகமும் ஆனால் கைகால்கள் குச்சியாக வ்ரைந்திருக்கும்.பில்லியனில் ஜெயசித்ராவின் இடுப்பைப் பிடித்துக்கொண்டு கேள்வி கேட்ட வாசகர்.அவர் மண்டைக்கு மேலே ஆட்டின் (காதல்)சின்னங்கள்.காதல் மயக்கத்தில் இருப்பார்.
“பக்கத்துவீட்டு ரோஜாவை பறிக்கலாம் என்று இருக்கிறேன்.செய்யலாமா?”
அன்புள்ள அல்லி பதில்: “ பாத்து..நேயரே .. முள் குத்திடும்”
எல்லா கேள்விகளிலும் “அன்புள்ள அல்லி” என்ற prefix இருக்கும்.இப்போது யோசிக்கிறேன்.இந்த கேள்வி பதிலகளைப் படிக்கும் போது என்ன மாதிரி உணர்வுகள் உள்ளத்தில் அப்போது இருந்திருக்கும்.முக பாவம்?ரசித்திருப்பேனா?
”பக்கத்துவீட்டு ரோஜா”என்று நேயர் சூசகமாக குறிப்பட்டது தெரிந்து் விட்டது என்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் அப்போது.
(இந்த மாதிரி கேள்விகளுக்கு இப்போது இருக்கும் தலைமுறையிடமிருந்து என்ன பதில் வரும் என்று டெஸ்ட் செய்வதற்காக என் பையனிடம் (13) நான் சொன்னேன்.
“டேய்... நேத்து நைட் கனவுல நடிகை அசினோட பைக்ல போற மாதிரி கனவு கண்டேன்டா!”
முதலில் பையன் முகத்தில் வெட்கம் நிழலாடியது. ”சே..லூசுப்பா...ஏதாவது கிராபிக்ஸ்ஸா இருக்கும்!” )
மீண்டும் ராணி.......
ஆண்டிப் பண்டாரம் பாடுகிறார் மாதிரி குரங்கு குசலா பகுதி ஒன்றும் புரியாது.இது கருத்துப் படம் ?.பி.டி.சாமியின் பேய் கதைகள்(பக்கத்துணையுடன் படிக்க)ரொம்ப பிடிக்கும்.இவருக்கு லட்சக்கணக்கில் வாசகர்கள்!குரும்பூர் குப்புசாமி என்பவர் கதைகள் எழுதுவார். எல்லாத் தொடர்கதைகளுக்கும் முன்கதைச் சுருக்கம் உண்டு.முடியும் கடைசிவாரத்தில் கூட முன்கதை சுருக்கம் படித்து புஃல் கதையை தெரிந்துக்கொள்ளலாம். அவ்வளவு செழிப்பானக் கதை!
சினிமா விமர்சனம் வரும்.விமர்சனத்தின் கடைசி வரியில்தான் படம் எப்படி என்று சொல்லுவார்கள். படம் பேர் தெரியவில்லை,அந்த படத்திற்கு கடைசி வரி ”ஒரு முறைப் பார்க்கலாம்” என்பது. சிவாஜி கணேசன் படங்களுக்கு ”சிவாஜியின் நடிப்புக்காக ஒரு முறை பார்க்கலாம்” என்று கட்டாயம் இருக்கும்.
அடுத்து துணுக்குப் பகுதி. வீட்டில் சுவையான சம்பவம் .சுவையாக இருந்தால் பரிசு ரூபாய் பத்து.ஒரு சம்பவம் படித்த ஞாபகம். ஒரு வீட்டில் எல்லோரும் ஊருக்கு கிளம்பும்போது மறந்துப் போய தாத்தாவை வீட்டில் வைத்து பூட்டி விட்டு தெரு முனையில் ஞாபகம் வரும்.தலையில் அடித்துக்கொண்டு திரும்பி வந்து திறப்பதாக.அந்த சம்பவம் இன்னும் மறக்க முடியவில்லை என்று எழுதியிருப்பார்கள்.படித்தவுடன் மனதிற்குள் சந்தேகம் வரும் உண்மையா என்று.
படித்து முடிந்ததும் சம்பவமும் படமும் பொருந்துகிறதா என்று பார்ப்பேன்.படத்தில் பூட்டிய விடும் ஜன்னல் ஊடே தாத்தா ஈசிச் சேரில் தூங்குகிற மாதிரி படம் இருக்கும்.
ரொம்ப வருடங்களுக்குப் பிறகு நேற்று ”ராணி வாரந்திரி” பார்பர்ஷாப்பில் படித்தேன். அதன் ஷேப் ஒரு மாதிரி செவ்வக வடிவத்தில் இருக்கிறது.இப்போது high profile தோற்றம்.
உள்ளே விஷயங்களும் குமுதம்/குங்குமம ரேஞ்ச்.
இப்போது பெரியவனாகி குடியும் குடித்தனமுமாக இருக்கிறேன்.எனக்கு வாங்குவதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது .ஆனால் வாங்குவதில்லை. பெரும்பாலான வீட்டில் இதை இப்போதும் நான் பார்த்ததில்லை. இன்னும் அதை வாங்குவதற்கு தீண்டாமைத் தயக்கம் இருக்கிறது.நடிகர் ராமராஜன் போல் ஒரு இமேஜ்? ஒரு வேளை பெயர் காரணம்.
இப்போதும் அது குடும்பப் பத்திரிக்கை tag உடன்தான் வருகிறது.ராணியின் அக்கா ராணி
முத்துவும் வந்துக்கொண்டிருக்கிறது.நெடுங்கதை எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் சளைக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறார்.
இப்போது அதன் வயது மகுடம்:48 மணி:12.அதன் லோகோ ராணித் தலையில் உள்ள கிரீடம். அது இப்போது காணவில்லை.முன்னெல்லாம் முதல் பக்கத்தில் இருக்கும்.
கால ஓட்டத்தில் குரங்கு குசலா,பி.டி.சாமி,நாஞ்சில்,குரும்பூர் குப்புசாமி,அமுதா கணேசன் எல்லோரும் காலாவதியாகி விட்டார்கள்.உள்ளே பல பழைய விஷயங்கள் போய் புது விஷயங்கள் வந்துவிட்டன.
கால ஓட்டத்தில் குரங்கு குசலா,பி.டி.சாமி,நாஞ்சில்,குரும்பூர் குப்புசாமி,அமுதா கணேசன் எல்லோரும் காலாவதியாகி விட்டார்கள்.உள்ளே பல பழைய விஷயங்கள் போய் புது விஷயங்கள் வந்துவிட்டன.
அப்போது முதல் இப்போதுவரை ராணியில் மகுடமாக மணியாக வந்துக்கொண்டிருப்பவர் சித்தவைத்தியர் சேலம் சிவராஜ்.
என் ”அன்புள்ள அல்லி” இப்போது இல்லை வெறும் அல்லிதான்.
மலரும் நினைவுகள்... அழகு!
ReplyDelete(டெஸ்ட்டிங்க்ல அசின் கூட பைக்ல போனது ஓக்கே. பைக்க ஓட்டுனது யாரு? :) )
அண்ணே! உங்களுக்கு ஒரு விருது காத்திருக்குது இங்க..http://senshe-kathalan.blogspot.com/2009/07/blog-post_15.html
ReplyDeleteவெகு சுவாரஸ்யமான பதிவு தலை....
ReplyDeleteஅல்லி பதில்கள் அட்டகாசம்...
அப்படியே தினத்தந்தியும் ஞாபகம் வந்துட்டுப் போகுது...
நானும் பார்பர் ஷாப்பில் தான் ராணியைப் பார்த்து, (படித்து) பழகினேன்...
அல்லி பதில்களில் பல அர்த்தங்கள் வரும்,,
நான் வாங்குகிறேன். இப்போது சுபாவின் தொடர்கதை, மற்றும் அனுராதா ரமணனின் தொடர் கட்டுரையும் வெளியாகின்றன.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
சென்ஷி said...
ReplyDelete//மலரும் நினைவுகள்... அழகு!//
நன்றி
//(டெஸ்ட்டிங்க்ல அசின் கூட பைக்ல போனது ஓக்கே. பைக்க ஓட்டுனது யாரு?//
அசின்தான்.பின்னால் பிசின்போல் ராணி வாசகர்!
தமிழ்ப்பறவை said...
ReplyDelete//வெகு சுவாரஸ்யமான பதிவு தலை...//
நன்றி தமிழ்ப்பறவை.
dondu(#11168674346665545885) said...
ReplyDelete//நான் வாங்குகிறேன். இப்போது சுபாவின் தொடர்கதை, மற்றும் அனுராதா ரமணனின் தொடர் கட்டுரையும் வெளியாகின்றன//
நன்றி சார். இப்போது ரொம்ப மாறிவிட்டது.காலம் மாறிவிட்டது.தினத்தந்தி/ராணி மேல் இன்னும் stigma இருக்கிறது.
சுவராசியமான மலரும் நினைவுகள். இதே போல் தேவி பத்திரிக்கையும் பலரால் வாங்கப்படவதில்லை. (தென் மாவட்ட செய்திகளையே அதிகம் கொண்டிருக்கும் குறிப்பாக நெல்லை,கன்னியாகுமரி,தூத்துக்குடி)
ReplyDeleteஅதுவும் காரணமாய் இருக்கலாம்
முரளிகண்ணன் said...
ReplyDelete//சுவராசியமான மலரும் நினைவுகள்//
நன்றி முரளி.தேவியும் படித்திருக்கிறேன்.
எங்கள் அலுவலகத்தில் அனைத்து வராந்திரிகளும் வருவதால் அவ்வப்போது படிப்பதுண்டு. சிறுவயதில் ராணி, தேவி, குமுதம், விகடன் நீங்க சொன்ன அதே பார்பர்ஷாப்பில் பள்ளிவிட்டு வரும்போது படிப்பேன்.
ReplyDeleteபக்கத்து வீட்டுக்கு மாமிக்கு நாந்தான் ராணி வாங்கி தருவேன்..நான் முதலில் படித்து விட்டுதான் ..சுவாரசியம்..
ReplyDeleteகுடந்தை அன்புமணி said...
ReplyDelete// நீங்க சொன்ன அதே பார்பர்ஷாப்பில் பள்ளிவிட்டு வரும்போது படிப்பேன்//
கருத்துக்கு நன்றி அன்புமணி.
தண்டோரா said...
ReplyDelete//பக்கத்து வீட்டுக்கு மாமிக்கு நாந்தான் ராணி வாங்கி தருவேன்..நான் முதலில் படித்து விட்டுதான் ..சுவாரசியம்..//
நன்றி.
//அப்போது முதல் இப்போதுவரை ராணியில் மகுடமாக மணியாக வந்துக்கொண்டிருப்பவர் சித்தவைத்தியர் சேலம் சிவராஜ்.//
ReplyDeletecorrect.you have a sharp memory .
தல அப்படியே 'ராணி' படிக்கிறப்ப இருக்கிற மனநிலையை அழகாக விவரித்து உள்ளிர்கள்..
ReplyDeleteஎனக்கும் அப்படியே..
ஆனால் வீட்டில் அப்பொழுது வந்த வாரமலரில் துணுக்கு மூட்டை , அன்புடன் அந்தரங்கம் போன்ற பகுதிகளை ஒளிந்து ஒளிந்து படித்து இருக்கிறேன்..
ஸ்ரீதர்
ReplyDeleteரொம்ப நன்றி.
வினோத்கெளதம்
ReplyDeleteகருத்துக்கு நன்றி வினோத்.
அட ஆமா, நானும் ராணி நிறைய படித்திருக்கிறேன், எங்கள் வீட்டில் குமுதம், ஆ, வீ, கலை மகள் இன்னும் இதர பிற இதழ்கள் வரும், பேசும் படம், பொம்மை, பிலிமாலயா கூட உண்டு, ஆனால் ராணி பார்த்ததில்லை ..சில நண்பர்கள் வீட்டில் உண்டு, ... உங்கள் பதிவில் , அப்படியே எல்லா விவரங்களும் அழகாக /ரசிக்கும் படி உள்ளது ... ரொம்ப நாளைக்கு அப்பறம், இதயம் பேசுகிறது ... ஒரு படம் மாத்திரம் கொஞ்சம் கவர்ச்சியா இருக்கும் , கையில் கிடைச்சவுடன் திருப்பி பார்த்டுவோம்
ReplyDeleteஅது ஒரு கனாக் காலம் said..
ReplyDelete//அப்படியே எல்லா விவரங்களும் அழகாக /ரசிக்கும் படி உள்ளது //
நன்றி.
அருமையான மலரும் நினைவுகள்!. தினத்தந்தி குருவியாரும், ராணி அன்புள்ள அல்லி பதில்களும் ஒரே மாதிரி இருக்கும்ல!, ராணி, தேவில்லாம் இன்னொரு ஜான்ரே?
ReplyDeleteஆனந்த விகடன் குமுதம்லாங்கூட மாறிப் போச்சுல்ல?! ஆனந்தவிகடன் இப்போ பழைய குமுதம் ஸ்டைல் மாதிரி இருக்கு. குமுதம் இப்போதைய ஆனந்த விகடன ஃபாலோ பண்ற முயற்சி பண்ற மாதிரி எனக்குத் தோணுது.
இந்த அன்புள்ள அல்லி கேள்வி பதில பத்தி எங்க வீட்டுல கேட்ட ஒரு கமெண்ட்டும் என் மனதில் ஆழமாகப் பதிந்து உள்ளது.எழுதலாமா வேண்டாமான்னு யோசிக்கணும்.
சங்கா said...
ReplyDelete//அருமையான மலரும் நினைவுகள்//
வருகைக்கு நன்றி. கருத்துக்கு நன்றி.
//இந்த அன்புள்ள அல்லி கேள்வி பதில பத்தி எங்க வீட்டுல கேட்ட ஒரு கமெண்ட்டும் என் மனதில் ஆழமாகப் பதிந்து உள்ளது.எழுதலாமா வேண்டாமான்னு யோசிக்கணும்//
பகிரலாம்.
சொல்லப்போனால் தற்போதைய தமிழ் ஜனரஞ்சக சஞ்சிகைகள் எல்லாமே சினிமாப் பத்திரிகைகள் மாதிரி ஆகிவிட்டன.குமுதம், குங்குமம் போன்றவையில் சினிமா செய்திகள் ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் வருகின்றன.இந்தப் பத்திரிகைளோடு ஒப்பிடும்போது ராணியில் இப்போதும் சிறுகதைகள் தொடர்கள் என்பன கூடுதலாக வருகின்றன.
ReplyDeleteதரம் என்று வரும்போது இன்று எல்லா ஜனரஞ்சகப் பத்திரிகைகளுமே ஒரே மாதிரித்தான் .நிறைய சினிமா ,கொஞ்சம் அரசியல், சில கால்பக்க அரைப்பக்க கதைகள் ,சில துணுக்குகள், ஒன்றிரண்டு நுகர்வோர் தகவல்கள் அவ்வளவே!.
--வானதி
vanathy said...
ReplyDelete//தரம் என்று வரும்போது இன்று எல்லா ஜனரஞ்சகப் பத்திரிகைகளுமே ஒரே மாதிரித்தான் .நிறைய சினிமா ,கொஞ்சம் அரசியல், சில கால்பக்க அரைப்பக்க கதைகள்//
நூறு சதவீதம் உடன்படுகிறேன் வானதி.
அட்டைகளை கிழித்து விட்டால் எல்லாம் ஒரே ரகம்.கனமான விஷயங்களை மக்கள் ரசிப்பதில்லை.சுஜாதா ஒரு முறை சொன்னார்
“குமுதஆனந்தவிகடகுங்குமகல்கி” படித்தேன்.
அன்றைய தேதியில் வித்தியாசமான கெட்டப்பிலும் மற்றவர்களில் இருந்து மாறுபட்ட விஷயங்களுடனும் வந்து கொண்டிருந்த ஒரே பத்திரிகை அது தான். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது ஒருமுறை தமிழ் வார இதழ்களின் சர்க்குலேஷன் பற்றி அதில் போட்டிருந்தார்கள். முதலிடத்தில் குமுதம், இரண்டாவது ராணி, மூன்றாவது விகடன், நான்காவது குங்குமம், ஐந்தாவது இதயம் பேசுகிறது.
ReplyDeleteரத்னேஷ்,
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
//அன்றைய தேதியில் வித்தியாசமான கெட்டப்பிலும் மற்றவர்களில் இருந்து மாறுபட்ட விஷயங்களுடனும் வந்து கொண்டிருந்த ஒரே பத்திரிகை//
எளிய எழுத்துக்கள் மற்றும் விலை என்று சொல்லலாம்.