Monday, January 31, 2011

சவம் தர மறுத்த மோதிரங்கள் - சிறுகதை

தங்கராசு வருவதற்கு அரைமணி நேரம் முன்புதான் வேலாயுதம் இறந்திருந்தார்.மிகுந்த துக்கத்தோடு அப்பாவைப் பார்த்தான்.மூன்று நாள் தாடி மீசை குச்சி குச்சியாய் துளிர்த்து அவர் சவம் என்றது.அப்பா இனி இல்லை.மனசு கொள்ளவில்லை.கண்களில் நீர் முட்டியது.

அடுத்து வந்த அக்கா தங்கைகளும் வீட்டில் நுழையும் போதே
கேவியபடிதான் நுழைந்தார்கள்.

இரண்டாவது மகன் சுதர்சனம் பார்த்ததும் மனதில் பொருமிக் கொண்டான்.குடும்பத்தின் மசமசப்பும் அசட்டுத்தனமும் விட்டப்பாடில்லை.பெரிய அண்ணன் மேல் எரிச்சலாயிற்று.

காரணம் அப்பாவின் கோலம்தான்.கால் கட்டை விரல் கட்டும் மூக்கில் பஞ்சும் இன்னும் வைத்தபாடு இல்லை.வியாதி வெக்கை பிடித்துத் தின்ன உடம்பை இப்படியா வைத்திருப்பது.கையும் காலும் விரித்து ஒரு மாதிரி கிடந்தார்.எல்லா விரல்களிலும் ஏதேதோ மோதிரங்கள்.என்ன ருசியோ?

அம்மா அண்ணன் அக்கா   தம்பிகள் மட்டுமாக  ஏழு பேர்தான் சவத்தின் பக்கத்தில் இருந்தார்கள்.எல்லோருக்குமே துக்கம் இறங்கி  அடுத்து உறைத்தது  அப்பா விரலில் இருந்த மோதிரங்கள்தான்.

பெரிய அண்ணன் உள்ளே இருந்து வந்தார். கையில் சோப்பு டப்பா.அப்பாவின் பக்கத்தில் உட்கார்ந்தார்.தங்கராசுவைப் பார்த்து சோகமாக புன்னகைத்தார்.வலது கை விரல் தங்க மோதிரங்களை கழட்ட முயற்சித்தார்.வழுக்கியபடி இருந்தது.எவ்வளவு பிரயத்தனப்பட்டும் கழட்ட முடியவில்லை.அப்பாவின் தொடையருகில் சோப்புத் தண்ணி நுரைத்தபடி குளம் கட்டி இருந்தது.

அண்ணன் கழட்டும்போது அப்பாவின் தலை ஆட்டலைப் மிரட்சியாகப் பார்த்தாள் பெரியக்கா. அண்ணனுக்கு உதவியாக  இடது விரல் மோதிரங்களை கழட்டலாமா என்று தோன்றிய எண்ணத்தை உடனே கைவிட்டாள்.

மோதிரங்கள்  உப்பிப்போன விரல்களில் சதைப் பிதுங்கி இறுக்கமாய்  பற்றி இருந்தது. குழந்தைத்தன உருவலில் அது விட்டுக்கொடுக்குமா? இந்த ஜன்மத்தில் அதை எடுப்பது கஷ்டம் என்று தங்கராசுவிற்கு தோன்றியது.

” அப்படியே இருக்கட்டும்.அவரு ஆசைப்பட்டு போட்டுக்னாரு” பெரியக்கா.

“ஒரு வாரம் மின்ன கூட சொன்னேன் இவராண்ட. எதுக்கு இத்தினி மோதிரம்னு. கேட்டதானே.....ராசி வாஸ்து அது இதுன்னு  டிவில பாத்து பிடிச்சிப்போய்  இப்ப இறுக்கிப் பிடிச்சிட்டு இருக்க மாதிரி அப்ப மனசுல பிடிவாதம் பிடிச்சிட்டுருந்தாரு. படுக்கைல கெடக்கசொல டாக்டர் கூட சொன்னாரு.முடியவே முடியாதுன்னுட்டாரு.நேத்துக் கூட சொன்னாரு.கேட்டாதானே. தங்கம் ரத்தத்துல கலந்து ஓடற மாதிரி பாவன ” மூக்கை உறிஞ்சியவாறே அம்மா .

”கட்டிங் பிளேயர் இருக்கா... ஈசியா எடுத்துடலாம்..”சுதர்சனம்

”அதெல்லாம் அவசரத்துக்கு எங்க கிடைக்கும்.அத வச்சு மெக்கானிக் மாதிரி குந்திகினு  எடுக்கற நேரமா இது. அவரே அத எடுத்திட்டு போவட்டும்.அத வுட்டுட்டு எல்லாருக்கும் துட்டி சொல்ற வழிய பாருங்க”.

“எங்க போய் இதெல்லாம் வாங்கினாரு” அம்மாவின் காதருகில் வாய்வைத்து தங்கராசு கேட்டான்

”யாரு கண்டா பணம் எடுத்திட்டு எங்கேயோ போவாரு.வரும்போது தினுசு தினுசா மாட்டிக்கினு வருவாரு.ஆனா நேத்து ஒண்ணு சொன்னாரு.”

’என்ன சொன்னாரு?”

“நா  பூட்ட கூட  அப்படியே விட்ருங்க. பித்ருவா போய் மோதிரல்லாம் நட்சத்தரமா  வானத்துல ஜொலிக்கும்னாரு”

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேரஆரம்பித்தது.வெட்டியானிடம் கழட்டச்சொல்லி பார்க்கலாம் என்று பெரியண்ணன் சொன்னார்.”அவன் விரல வெட்டுவான். கம்னு கெட” அம்மா கிசுகிசுத்தாள்.

பிணத்தைக் குளிப்பாட்டும்போது அரைக் கயிற்றிலும் தங்கப் படங்கள் கோர்த்திருப்பது கண்ணில் பட்டது.அம்மா அதையும் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.தன்னோடு கொண்டு செல்வது பெருமையாகத்தான் இருந்தது அம்மாவுக்கு.

பதிமூன்று நாள் கிரியைகளுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் ஆகும்.இந்தப் பக்கமும் அந்த பக்கமும் வச வசவென்று சொந்தபந்தங்கள்.எதிலும் குறை வைக்க கூடாது.அப்பாவின் உடம்பில் இருக்கும் தங்கங்கள் இந்த விலைக்கு வரும்.

இப்போது கைகாசு போட்டுதான் செய்யவேண்டும்.அப்படியேதான் செய்தார்கள்.யாருக்கும் இதைப்பற்றி மனதாங்கல் எதுவும் இல்லை.இந்த குடும்பத்தில் எதற்கும் யாரும் சண்டைப் போட்டதில்லை.ரொம்ப நல்ல விஷயம்.

யாருக்கும் எந்தவித குறையில்லாமல் காரியங்கள் நடந்து முடிந்தது.

அடுத்த நாள் வானத்தில் ஜொலித்த  புது நட்சத்திரங்களை அப்பாவின்  மோதிரங்களாகப்  பாவித்து  சந்தோஷப்பட்டார்கள் குடும்பத்தினர்.

வெட்டியானால்தான் தங்கமாக பாவிக்க முடியவில்லை.பந்தாவிற்காக போட்டுக்கொண்ட போலி தங்க மூலாம் பூசிய கவரிங் மோதிரங்களை பிணத்தில் வாயில் போட்டு உள்ளே தள்ளிக் குத்தி எரித்தான்.

                                   முற்றும்


.

6 comments:

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!