ஸ்டேஷனில் இறங்கி விடுவிடுவென சுரங்கபாதையின் வழி கடந்து பஸ் டெர்மினஸைஅடைந்தான். அவன் செல்லும் பஸ் இன்னும் வரவில்லை.அது ஷெட்டிலிருந்து வந்து அங்கிருந்துதான் புறப்படும். எல்லாமே இன்றைக்கு லேட்.ஆபிஸ் இன்று லேட்டாகி விடுமா?மீண்டும் எரிச்சல் ஏற்பட்டு ஆபிஸ் கவலைகளில் ஆழ்ந்தான்.இன்று முக்கியமான மீட்டிங்.போர் அடிப்பார்கள்.பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.
“எக்ஸ்கியூஸ் மி .....”
முதுகின் பின்னால் ஒரு பெண் குரல் கேட்டது.இனிமையாக இருந்தது.திரும்பிப் பார்த்தான். சிநேக பாவத்துடன் சிரித்தாள் அந்தப் பெண்.
“ பஸ் போயிடிச்சா..?
“எந்த பஸ்....”
நம்பர் சொன்னாள். அருண்சுந்தர் பயணிக்கும் பஸ்தான்.
“இல்லையே...”
“தாங்கஸ்”
”நா யூஷுவலா வேற ரூட்லதான் போவேன். இன்னிக்கு இந்த ரூட்ல ட்ரை பண்ணலாம்னுதான் இங்க வந்தேன்”
“இது பெஸ்ட் ரூட்....பிராப்ளம் அவ்வளவா இல்ல”
”வெரி நைஸ்......”
”என் பேர் நித்யா. பஸ்ட் இயர் எம்.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்கிறேன்”
கல்லூரி பெயரையும் சொன்னாள்.
”ஐ ஆம் அருண்சுந்தர்...பிரைவேட் பேங்கல வொர்க் பண்றேன்”
முகத்தில் வடிந்த வேர்வையை துடைத்துக்கொண்டாள்.
துடைத்துவுடன் வில் போல் நீண்ட அடர்த்தியான கரு நிற புருவ முடிகள் வரிசையாக சிலிர்த்து மடங்கின.பவுடருடன் இருந்த செயற்கை அழகு போய் முகத்தில் ஒரு இயற்கை களை சொட்டியது.வேர்வை ஈரஙகள் நெற்றி மற்றும் காதோர முடிகளில் படிந்து சில கற்றை முடிகள் இரு காதருகிலும் கொக்கி மாதிரி விழுந்து மேலும் களையைக் கூட்டியது. காதில் தொங்கிய டிராப்ஸ் மெதுவாக ஆடியது.தன்னை உற்றுப் பார்க்கிறான் என்று தெரிந்தவுடன் தலை கவிழ்ந்தாள். அவனும் உணர்ந்து வேறு பக்கம் பார்வையை செலுத்தினான்.
பார்த்த மாதிரி இருக்கிறதே. யோசித்தவுடன் ஞாபகம் வந்து விட்டது.தான் வந்த மின்சார வண்டியில் இந்த முகத்தைத்தான் பார்த்தான்.அப்போது அவள் புரிந்த புன்னகையை ஏற்றுக்கொண்டு பதில் புன்னகை புரிந்தேனா?அவனுக்கு ஞாபகம் இல்லை.இந்த முகத்திற்க்கு சத்தியமாகப் புன்னகைத்திருக்க வேண்டும்.புரியாதது வன்முறையாகப் பட்டது .
அந்த மின்சார ரயில் காட்சியை மனதில் கொண்டு வந்து மீண்டும் புன்னகை புரிந்தான்.பதிலுக்கு அவளும் புன்னகைத்தாள்.
எதற்கு புரிந்தாள்? யாரோ அவள் பக்கத்தில் இருந்தவர் ரொம்ப சத்தமாக ரயில்வே டிபார்மெண்ட் இயங்கும் விதத்தை தப்பு தப்பான ஆங்கிலத்தில் திட்டியதுதான் காரணம்.அதுவும் ஞாபகம் வந்தது புன்னகைத்து முடித்தவுடன்.
பஸ்ஸிலும் என்றுமில்லாத அளவு கூட்டம் ஏறியது.அவள் முன்பக்கத்தில் முண்டியடித்து சாமர்த்தியமாக ஏறிவிட்டாள்.அவனும் தொடர்ந்து ஏறி பஸ்ஸின் நடுவில் வந்து நின்று கொண்டான்.
அவள் கூட்டத்தில் இடிபடுவது பார்க்க மனசு கஷ்டப்பட்டது.
அவளுக்கு பெண்கள சீட் அருகே கொஞ்சம் இடம் செய்து அவளை தன் முன்னே நிற்க செய்தான்.
”தேங்கஸ்” என்றாள்.”இட்ஸ் ஓகே” என்று புன்னகைத்தான் அருண்.
“நா இது பெஸ்ட் ரூட்ன்னு சொன்ன முகூர்த்தம்......”
அவள் வெகுளியாகச் சிரித்தாள். வெளிப்பட்ட அழகு அவளை மீண்டும் மீண்டும் பார்க்க இழுத்தது.இதெல்லாம் யாருக்கு கிடைக்கப் போகிறது. வருத்தப்பட்டுக் கொண்டே அப்படியும் இபபடியுமாக யோசனை ஓடியது.அவளைப் பார்பதை தவிர்க்க முடியவில்லை.
அவனுடைய முகவாய் கட்டையின் நேர் கிழேதான் அவள் நின்றிருந்தாள்.நல்ல சிவப்பு.இடது கை கைப்பிடியைப் பிடித்திருந்தது. மணிக்கட்டில் வாட்ச்.அதன் டயல் காப்பிக்கொட்டை வடிவத்தில்.ரொம்பவும் கலையம்சத்தோடு ஒரு பூச்சி மாதிரி மணிக்கட்டில் ஒட்டிக்கொண்டிருந்தது.வலது கைமணிக்கட்டில் கறுப்பு வண்ணத்தில் மிகவும் மெல்லிசான மந்திரித்த கயிறு. அலை அலையாக பூனை முடிகள்.தான் ரொம்பவும் சின்ன வயதில் பார்த்த நடிகை ஷோபா மாதிரி ஜாடை.குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் கச்சிதமாக இருந்தாள்.
முடிக்கற்றைகளைப் பக்க வாட்டில் ஒதுக்கும் பாவனையில் அவனை ஒரு முறை முழுவதும் பார்த்து சிநேக பாவத்துடன் புன்முறுவல் செய்தாள்.அவனும் செய்தான்.தான் பார்ப்பதை உள்ளுக்குள் உணர்கிறாளோ.நாகரிகமாகத்தான் அவளை ரசிக்கிறேன்.இதுவும் தெரிந்துதான் இருக்கும் அவளுக்கு.அவளும் தன்னை ரசிக்கிறாளோ?
இருவரும் எதுவும் பேசாமல் மெளனமாக நின்று கொண்டே பிரயாணம் செய்தார்கள்.அருண்சுந்தருக்கு பயணம் முழுவதும் ஒரு மாதிரி விர்ர்ரென்று மேகத்தினுள் பயணிப்பது போல் பிரமை.
கண்டக்டர் “டொப்.. டொப்” என்று தட்டியபடி “டிக்கெட்..டிக்கெட்...என்றார்.
அவன் பணத்தை எடுக்கும் அதே வேளையில் அவளும் எடுத்தாள்.அவள் பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு தன் பணத்தில் இருவருக்கும் டிக்கெட் எடுத்தான்.அவள் டிக்கெட்டையும் மீதி சில்லறையைஅவளின்
சிறிதான உள்ளங்கையில் திணித்தான்.தன் செய்கைக்கு அவள் முகபாவம் மாறினால் போல் தெரியவில்லை.சாந்தமான பாவம்தான்.
அவள் நிறுத்தம் வந்ததும் முகபாவத்திலேயே வரேன் என்றாள்.அவன் குனிந்து அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.அவளுடன் அவளுடைய கல்லூரி நண்பிகள் சேர்ந்து ரோடை கிராஸ்செய்துக்
கொண்டிருந்தார்கள்.திரும்பி குனிந்து பார்த்து
கையசைத்தாள்.அவனும் கையசைத்தான்.
நித்யா அருண்சுந்தர் மெலிதாக முணுமுணுத்தப்படி ஆபிஸில் நுழைந்தான்.
மறு நாள் இருவரும் சொல்லி வைத்தார்போல் டெர்மினஸ்ஸுக்குஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து விட்டார்கள்.இருவரும் மனதிலும் வெடகம் பிடிங்கி தின்றது.இரண்டு பேரும் இருப்பதிலேயே மிக சிறப்பான உடையைதேர்ந்தெடுத்து உடுத்தியிருந்தார்கள்.அவள் டிரெண்டியான சூடிதார் மற்றும் மாட்சிங் துப்பட்டா.அவன் கண்ணேப் பட்டுவிடும் போலிருந்தது. அருண் புது ஜீன்ஸும் டீ ஷ்ர்ட்டும் அணிந்திருந்தான். கச்சிதமாக ஷேவிங் மற்றும் ஹேர் கட் செய்திருந்தான்.
அடுத்த இரண்டு நாள் கிட்ட கவனித்ததில் அவளிடம் எல்லா விஷயத்திலும் ஒரு கலை நேர்த்தி தெரிந்தது. ஒரு ஒழுங்கும் இருந்தது.நாளுக்கு நாள் அவளைப் பிடித்துக் கொண்டேயிருந்தது.
”நேத்திக்கு ஆபிஸ் லேட்டா”
“ஆமாம்..”
“உங்களுக்கு காலேஜ்...”
“லேட்தான்...”
அடுத்து வரிசையாக வந்த நாட்களில் அழுது வடியும் அந்த பஸ் டெர்மினஸ் களை கட்ட அரம்பித்தது.அவன் முன் வந்தால் அவளுக்கு சீட் போட்டான்.அவள்முன் வந்தால் அவனுக்கு சீட் போட்டான். ஒரே (பொது)சீட்டில் பிரயாணித்தார்கள்.சில நாட்களில் ஸ்டேஷனில் காத்திருந்து உராசியபடி நடந்து பஸ் டெர்மினஸ் அடைந்தார்கள்..இளநீர் குடித்தார்கள்.வ்ழுக்கையை ஒரே மட்டையில் பகிர்ந்துக் கொண்டார்கள். கடைசி ஸ்டாப்பில் இறங்கி மறுபடியும் பஸ் ஏறி வழக்கமான ஸ்டாப்பில் இறங்கினார்கள்.
இது அது என்றில்லாமல் எல்லாவற்றையும் பேசினார்கள்.பேசிக் கொண்டே நடந்தார்கள். பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் மறக்காமல் கையசைத்தார்கள்.
சிரித்துக்கொண்டே கல்லூரிக்குள்ளும் ஆபிசிலும் நுழைந்தார்கள்.எதோ ஒரு இயக்கத்தில் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
அருண்சுந்தரை பிடித்துத்தான் இருந்தது நித்யாவுக்கு. பழகிய நாட்களில் நாகரிகமாகத்தான் தெரிந்தான்.அவனின் நிறம் குணம் எல்லாம் ஒத்துத்தான் போயிற்று.ஜீன்ஸ் உடுத்தும் நாட்களில் அவனின் தெறிக்கும் அபரிதமான மேன்லினெஸ்.ஹேர் ஸ்டைல்.ஆண் வாசனை.அழகான மீசை.அதிரும் குரல்.வேக நடை.
ஏன் இருவரின் நீள் உயர அகலங்களும் கூட. அன்று அந்த பாஸ்ட் புட் கடையின் ஆள் உயர கண்ணாடியில் பார்த்த போது பொருந்தித்தான் வந்தது.
பத்தாவது நாள் இரவு .......
எல்லாம் சரி.ஆனால் தனைப் பற்றிய விஷயம்?சுரீர் என்றது.நித்யா தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.
எல்லாம் சரியாக இருந்தாலும் கடைசியில் தான் சொல்லப் போகும் விஷயத்தில் முகம் சுருங்கி விடுவான்.வாய் கசக்கும்.“யூ” டேர்ன் எடுத்து அடுத்த நாள் காணாமல் போய் விடுவான்.அவனுக்கு வேறொருத்தி இருப்பாள்.
நித்யாவுக்கு அடுத்த பெரிய அடி.நித்யாவுக்கு அடி வயிறு கலங்கியது.பஸ் ரூட் மாற்றி விடலாமா?
சே... சொல்லிவிட்டு பழகியிருக்க வேண்டுமோ?ஒரே சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்த அடுத்த நாளே சொல்லியிருக்கலாம்.தப்பு பண்ணிவிட்டேன்.அவனும் நெருங்கத் தொடங்குகிறான் என்று தெரிந்த அன்றாவது சொல்லி இருக்கலாம்.
அவனும் காதலிக்கிறானா?கன்பார்ம் செய்து விட்டு சொல்லலாமா? தாங்குவானா?சும்மா நட்பாகத் தெரியவில்லை.நன்றாக தெரிகிறது காதல் என்று.. நடிக்கவில்லை.Look beyond what you see! பழமொழி ஞாபகம் வந்தது. தன் வீட்டைப் பொறுத்தவரை யாரும் தடை கிடையாது. காதல் பிறகு திருமணம்.எல்லாம் ஓகே. ஆனால் என் விஷயம்?
திரும்ப திரும்ப அவன் முகம் நினைவில் வந்து அலையடித்தது.”எனக்கு அவன பிடிச்சிருக்கு....ஆனா” என்று மெலிதாய் முணுமுணுத்து வாய் பிளந்தபடி தூங்கியே போனவள் திடுக்கிட்டு காலை 2மணிக்கு எழுந்தாள்.தீர்மானித்தாள் தன் விஷ்யத்தை அவனிடம் சொல்லி விட வேண்டுமென்று.மீண்டும் தூங்கினாள்.
அடுத்த நாள்...
நித்யா தினமும் ரயிலை விட்டு இறங்கும்போதே சந்தோஷத்துடந்தான் இறங்குவாள்.டெர்மினஸ்ஸை நெருங்கும் போது ஒரு வித குதூகலம் இறக்கைக் கட்டி ஆடும்.அவனைப் பார்த்தவுடன் பிய்த்துக் கொள்ளும்.
இன்று எல்லாம் தலை கிழ்.படபடத்தபடி நடந்தாள்.மினரல் வாட்டர் குடித்தாள்.அடிக்கடி வியர்வையை துடைத்துக் கொண்டாள்.அவளுக்கே தான் ரொமப ஓவர் ஆக்டிங் பண்ணுகிறோம் என்று புரிந்துதான் இருந்தது.தவிர்க்க முடியவில்லை.
வழியில் தினமும் தென்படும் பிள்ளையார் கோவில் விபூதியை சின்னதாக இட்டு வேண்டிக்கொண்டாள்.கொஞ்சம் தெளிவானாள்.
டெர்மினஸ்ஸில் நுழைந்தாள்.அங்கு அருண்சுந்தர் இல்லை.நித்யாவிற்கு உறுத்தியது.சிறிது நேரம் கழித்து நுழைந்தான்.நடையில் வழக்கமான ”விறு விறு” இல்லை.முகத்திலும் வழக்கமான களை இல்லை.ஒரு நாள் தாடி. பழைய சட்டை பாண்ட்.
அருண் தான் நிறைய பேச வேண்டும் என்றான்.நித்யாவும் சம்மதித்தாள்.படபடப்பு கொஞ்சம் கூடியது.லீவு போட்டுவிட்டு சினிமாவுக்குப் போனார்கள்.இருவரும் ரொம்ப பேசிக்கொள்ளவில்லை.நித்யா எப்போதுப் பேசப் போகிறான என்று காத்து காத்து ஏமாந்தாள்.எல்லா இடங்களையும் சுற்றி விட்டு ஒரு இருட்டு ரெஸ்டாரெண்டில் நுழைந்தார்கள்.
”ஏன் ... இன்னிக்கி ஒரு மாதிரி டல்லடிக்கிற? ஏதாவது மேட்டர்”
“மனசு அப்செட்”
“ஏன்?”
“எங்க ஊர்காரங்க நம்ம ரெண்டு பேரையும் ஒண்ண வச்சு ஒரு இடத்தில பாத்து வீட்ல சொல்லீட்டாஙக”
“நல்லதாப் போச்சு.வீட்டுக்கு தெரிஞ்சுதானே ஆகனும் ஒரு நாள்.அதுக்கு என்ன இப்ப?”
“நம்ம மேரேஜ் பண்ண முடியுமான்னு தெரியல...”
“ஏன்...” கலக்கத்துடன் கேடடாள்
“இல்ல ஜாதி...ஸ்டேட்டஸ்... குலம், கோத்ரம் அது இதுன்னு பார்ப்பாங்க....எங்க வீட்ல”
நித்யா உள்ளுக்குள் உடைந்து போனாள்.“யூ” டேர்னுக்கு உண்டான அறிகுறிகள் தெரிந்தன. மெளனமானாள்.
அருண் தொடர்ந்தான்.
“போன பத்து நாளும் ஒரே கிக்குதான். ரொம்ப சுகம்மா இருந்தது.ஐ ரியல்லி என்ஞாய்ட்...காதல அனுபவத்துல தெரிஞ்சுகிட்டேன்.அந்த கிக் நடுவிலும் இது ஒத்து வருமான்னு ஒரு அவநம்பிக்கை நூல் ஒடிட்டே இருந்தது.ஒண்ண ரொம்ப பிடிச்சிருந்தது.அதே சமயத்துல மேரேஜ் நடந்தா சூப்பரா இருக்கும்னு வேற ஆசை ஒரு பக்கம். ஒரே குழப்பம்.எங்க ஊர்காரங்க நம்ம ரெண்டு பேரையும் ஒண்ண வச்சுப் பார்த்ததும் நல்லதாப் போச்சு.”
நித்யாவுக்கு அவன் பேசுவது கசந்து வழிந்தது. அவனை யாரோ மாதிரி பார்த்துக்கொண்டிருந்தாள்.எதுவும் பதில்
பேசவில்லை.பேசவும் பிடிக்கவில்லை.
இரண்டு நிமிடம் ஓடியது.
”ரொம்ப ரொம்ப சாரி நித்யா ....ப்ளிஸ்.....சிட்சுவேஷன புரிஞ்சுகோம்மா..உன்ன ஹ்ண்ட்ரட் பர்செண்டு பிடிச்சிருக்கு..யூ வார் அ வெரி நைஸ் வித் குட் டெம்பரமெண்ட்.யாரா இருந்தாலும் கொடுத்து வச்சுருக்கனும்,, ஆனா நம்ம கல்யாணம் நடக்காது.எனக்கு கொடுத்து வைக்கல. எங்க ஊர்காரங்க பொண்ணு ஒகேயாடிச்சு. கொடுமை என்னென்னா.....”
“கொடுமையா?”
“அவள கல்யாணம் பண்ணிடுவேன்..ஆனா நம்பளோட லவ் மெம்ரீஸ் நாலைஞ்சு வருஷம் போட்டுப் படுத்தி எடுக்கப் போவுது. நினைச்ச பயமா இருக்கு...நித்யா..”
”அப்படியா..?” நித்யா விரக்தியாக சிரித்தாள்.
“ப்ச்” என்றான் அருண்.
“ஆனா எனக்கு இந்த மெம்ரீஸ் சுகமாக இருக்கப்போகிறது..
.வாழ்க்கைல வாங்கின முதல் அடிய இந்த ரெண்டாவது அடி மறக்கச் செய்யும் கொஞ்ச வருஷத்துக்கு...”
“ ஏற்கனவே ஏதாவது காதல் தோல்வியா நித்யா?”
”என்னோட முதல் பிட்டர் எக்ஸ்பீரியன்ஸ் உனக்கு யூஸ்புல்லா இருக்கும் அருண்”
நித்யா குரலில் சோகம் இழையோடியது.
“புரியல நித்யா”
”ஜாதி, பணம் இதெல்லாம் விட ஒரு சூப்பர் காரணம் இருக்கு என்ன வேண்டாம்னு சொல்றதுக்கு அருண்”
நித்யாவின் குரலில் ஒரு அழுத்தம் இருந்தது.
“என்ன காரணம்...நித்யா ”
”நா ஒரு டைவோர்சி. மேரேஜ் ஆகி ஆறாவது மாசத்திலேயே பிரிஞ்சுட்டோம்.கருத்து வேறுபாடு.பின்னாடி டைவோர்ஸ் ஆயிடிச்சி”
அருண் அதிர்ந்து போனான்.புருவங்கள் உயர்த்தி அவளைப் பார்த்தான்.
”உனக்கா....நம்பவே முடியல...ரொம்ப சாரி......நித்யா.உங்க கிட்டேயா கருத்து வேறுபாடு ...அவன் மெண்டலா இருப்பான் போல”
நித்யா அவனையே ஆழ்ந்து பார்த்தாள். கண்களில் நீர் முட்டியது
”நித்யா .. கவலப் படாத.......பேப்பர்ல இந்த விவரத்தெல்லாம் கொடுத்தா, அதே மாதிரி அந்த சைட்லயும் ஈக்குவல மாப்பள கிடைப்பாரு...கல்யாணம் நடக்கும்....”
வாழ்க்கையில் முதல் முதலாம ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது நித்யாவிற்கு.இதற்கு முன் இப்படி சீறியதில்லை.
”நா வெயிட் பண்றேன். கல்யாணம் முடிஞ்சு நீ ஒன்னோட அன்பு பொண்டாடிய டைவோர்ஸ் பண்ணிட்டு வா....ஈக்குவல ஆயிடுவே......கல்யாணம் பண்ணிக்கலாம்.ட்வெண்டி-ட்வெண்டி மாதிரி டைவர்சி-டைவர்சி”
முற்றும்