Monday, March 30, 2009

இரண்டு வார்த்தை கதைகள் -சுஜாதா-நான் - 2


சுஜாதா எப்பவோ இரண்டு வார்த்தைகளில் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.


சுஜாதா கொடுத்த உதாரணக் கதைகள் கிழே:-

1)தலைப்பு:  ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?

கதை:  முதலிரவில் கேள்வி

2)தலைப்பு:   சுவரில் ஆணியடிப்பவன் கேட்ட கடைசிக் கேள்வி

கதை:   கன்சீல்ட் ஒயரிங்க்ப்பா


நான் எழுதியது

1)தலைப்பு: மிகவும் சிக்கலான கேஸ்.பத்து  டாகடர்கள் பச்சை உடையில். டெல்லியிருந்து வந்த ஸ்பெஷலிஸ்டு ஆசன வாயின் வழியே ஸ்கோப்பை நுழைக்க நெருங்கிய பேஷண்டின் வயது......


கதை: மூன்று மாதம்

தலைப்பு:-
எக்ஸ்பிரஸ் ரயில் கூடுர்தாண்டியவுடன்தான் உறைத்தது பிரேமாவுக்கு.அடுப்பில் பால் பாத்திரம் வைத்தது.. 

கதை: என்ன செய்வது?

பழைய கதைகள் படிக்க:-   

Wednesday, March 25, 2009

பதிவர்களே “ஹைக்கூ” எழுதலாம்

நான் முதலில் ஹைக்கூ எழுதாமல் பொய்க்கூ எழுதினேன். இப்போது ஹைக்கூ
மாதிரி எழுதுகிறேன். எழுதி எழுதி பழகினால வந்து விடும்.

அதன் விதிகள்:

தினசரிவாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightningஅனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப் படுத்துவதுதான் ஹைகூ.ஒரு நேரடி அனுபவம்.

பதிவர்களே நன்றாக கவனிக்க:-

இதில் உருவகம்/உவமை/மிகை/வருணனை/பிரசாரம்/போதனை இருக்கக் கூடாது.சமூகச் சாடல்கள் இருக்கக் கூடாது.காட்சிகளை விளக்கக்கூடாது. அனுபவத்தின் பின் விளைவுகளைப் பற்றிச்சொல்லக் கூடாது.சுட்டிக் காட்டக் கூடாது.

அட.... அப்ப என்னத்ததான் சொல்றது?

ஒரு மின்னல் போல் காட்டி மறையும் ஒரு “சடக்’ என்ற அனுபவ உணர்ச்சி மூன்று வரிகளில் வெளிப்படுவது.


Haiku doesn't tell a story - it takes a still photograph of a flash of lightning, in all its beauty, terror and suddenness. It takes the time to notice a dead bird but doesn't speculate on cause and effect

நான் எழுதியது

மூச்சிறைக்க ஏறிய
காலி ரயில் பெட்டியில்
பிணங்கள்

(ரொம்ப வருடம் முன்பு தாம்பரம் ஸ்டேஷனில் கிளம்பிவிட்ட வண்டியில் காலியான “vendors compartment" மூச்சிறைக்க ஓடி ஏறினேன். உள்ளே மூன்று ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ஸிடெண்ட் பிணங்கள்.வேறு யாரும் இல்லை. போஸ்மர்ட்டத்திற்க்கு போகிறது.அந்த வய்தில் அந்த திகில் நிமிடங்கள் snapshot)

குழாயடிச் சண்டை
கொட்டும் வார்த்தைகள்
வழியும் குடம்


நான் எழுந்தபோது
நாங்களும் எழுந்தோம்
பார்பர் ஷாப் கண்ணாடி


மணமக்களை வாழ்த்தி
வீசிய பூக்கள் 
புரோகிதர் குடுமியில்

நடு நீசியில் 
ரயிலில் நின்றது
RPF பூட்ஸ் சத்தம்


தீடீர் மின்னலில்
ம்ரத்தில் தெரிந்த
தேன் கூடு


பத்திரமாக அனுப்பி
ஜன்னலை மூடினேன்
பதிவு காணவில்லை

(பதிவு போட்டு த.மணத்தில் இணைக்க, பதிவின் தலைபை கிளிக் செய்தால் “அனுப்பு”.“அனுப்பு” வை கிளிக் செய்தால் ”ஜன்னலை மூடு”.server down ஆகி
பதிவு காணவில்லை.)

நான் படித்தது

கடிக்கும் கொசு
தாயை எழுப்பும்
சின்னக் கொலுசு


மழை ஒய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழை


விபத்துக்குள்ளாகி நிற்கும்
பேருந்து முழுக்க
புளியம்பூக்கள்


உறுமும் இடியும்
நதியின் அடியில்
சிதறும் மீன்கள்


காட்டிலிருந்து வரும்
மாட்டின் கொம்பில்
முல்லைக் கொடி


பதிவர்களே கலக்குங்கள்

இன்னும் படிக்க:-


ஏப்ரல் பூல்(April Fool) - பள்ளி நினைவுகள்

ஏப்ரல் பூல் நாள் எப்படி வந்தது அந்த பருவத்தில் சுத்தமாகத் தெரியாது.தெரிந்துக் கொள்ளும் ஆர்வமும் இல்லை.பள்ளி ஆசிரியர்களும் தெரியாமல் மக்குகளாகத்தான் இருந்தார்கள்.

ஆனால் அதை வைத்துப் பண்ணிய குழந்தைத்தனமான வன்முறைகள்.தீபாவளி மாதிரி கொண்டாட்டம்தான்.இது ஹோலியின் cheapest version மாதிரி இப்போது
தெரிகிறது. விக்கல் ஸ்டாப் டெக்னிக்?

விக்கல் வந்தால் ஏப்ரல் பூல் டைப்பில் அதிர்ச்சியாக ஏதாவது சொல்லி விக்கலை
நிறுத்துவதுண்டு.ஆனால் ..விக்கலுக்குப் பதிலாக மூச்சை நிறுத்திவிடக் கூடாது.


காசு சேர்த்து Bril Ink பாட்டில் வாங்குவது. ஒரு வாரம் பேனாவில் தெளித்துப் trial பார்ப்பது.தூரத்திலிருந்தே திறமையாகதெளிக்க கற்றுக் கொள்வது.அடுத்து உருளைக் கிழ்ங்கை இரண்டாக பிளந்து அதில் AF என்று செதுக்கி, அதில் இங்க் தோய்த்து முதுகில் சாப்பா குத்துவது. அடுத்து மாட்டு வண்டி கருப்பு மை(கீல்) அச்சாணியில் இருக்கும். இதை சட்டையில் தேய்ப்பது.இந்த கறை போக 50 வருடம் ஆகும்.

இங்க் அடித்து அவன் திரும்பவதற்க்குள் “ஏப்ரல் பூல்” கத்தி சொல்லி விட்டால் பெரிய ஆள்.கைவசம் ஒரு மாற்று சட்டை எடுத்து வருவோம்.

இந்த ‘இங்க் அடி” டெக்னிக் ஒரு தடவை வேறு ஒரு விஷயத்திற்கு உதவியது. 

ஒரு மாணவன் தான் அணிந்துக் கொண்டு வரும் சட்டை(வெள்ளை) சிங்கப்பூரில் தைத்தது என்றும் இது மாதிரி மூன்று இருப்பதாகச் சொன்னான்.நம்ப வில்லை

காலர் உள் பட்டையில் (கேம்ஸ் பிரியடில்) இங்க் அடித்து மடித்து வைத்து மறு நாள் அவனைக் கேட்டோம். 

“இது புதுசா(2வது சர்ட்டா?)?” ஆமாம் என்றான். காலரைப் பிரித்துக் காட்டினோம்.
அசடு வழிந்தான். ஏன் அந்த வீண் டாம்பீகம் அந்த பருவத்தில்?புரியவில்லை. அப்போது சிங்கப்பூர் ஹாங்காங்தான் பாரின்.
 

இந்த இங்க் அடிப்பது பிரபஞ்சத்தில் தமிழ் நாட்டில் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.

அடுத்து ரொம்ப ஓவராக செய்து ,supply exceeded demand ஆனதால் திகட்டிப்போன லூட்டிகள்.எல்லோருக்கும் தெரிந்து போவதால் செய்பவர்தான் ஏப்ரல் பூல்.


1.பின்னாடி உன் தாத்தாடா
2.பின்னாடி ஹெச் எம் வரார்டா
3.இந்த மாதிரி நிறைய ”பின்னாடி” ஏப்ரல் பூல்கள்
4. நாளைக்கு உலகம் அழியப் போகுது
5.கதவு பின்னாடி மறைந்து நின்று “பே” என்பது
(இது எல்லா நாளிலும் செய்வார்கள்)
6.உன் தலையில் பல்லி,ஓணான்,காண்டா மிருகம் etc., etc.,
7. ஸ்கூல் மணியை அடிப்பது
8.டேய்...குமாரு பொம்பளயா மாறிட்டான்.
9.இன்னும் பல

ஒரு ஏப்ரல் பூல் தினத்தில் என் பாட்டியிடம் “நாளைக்கு உலகம் அழியப் போறது” என்று சொன்னவுடன் அதை நம்பி நார் முடி முந்தானையில் காசு முடிந்துக் கொண்டு ‘ஸ்வாமிக்கு விளக்கு” ஏற்றினார். 

அந்த காட்சி இன்னும் மனதை விட்டு அகலவில்லை.

இன்று இந்த இங்க் தெளிப்பிலிருந்து ...SMS,you tube,cell phone call,email, குமுதம்,ஆ.விகிடன் என்று வந்து விட்டோம். ஏப்ரல் பூல் பிராங்க் சாப்ட்வேர் வந்து விட்டது.

இன்று வரை என் மனதில் ரொமப ஆசையோடு ஒட்டிக் கொண்டிருக்கும் ஸ்கூலில் என்னை ஏப்ரல் பூல் ஆக்கிய வாசம்:-

”டேய்.....பின்னாடி உன் லவ்வர்டா !”
 
முட்டாளாக திரும்பி பார்க்காமல் ரொம்ப ஆர்வத்துடன் திரும்பிப் பார்த்தேன். பின்னால் என் லவ்வர் இல்லை.

படிக்க:-

சாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு - சிறுகதை 


Tuesday, March 24, 2009

பதிவர் எப்படி -நட்சத்திரம் ஆவது

              கவிதை

வாரத்திற்கு ஒரு முறைதான்
இந்த வார நட்சித்திரமாக
கெளரவிக்கிறது 
தமிழ் மணம் - சிலரை
ஒரு அல்லது அரை
நாள் நட்சத்திரமாக
இரண்டு நாளுக்கு 
ஒரு முறை
கெளரவிக்கிறது பலரை 
தமிழ் மணம் செர்வர்(server)


ஹைக்கூ கவிதைகள் படிக்க




Thursday, March 19, 2009

ஹைக்கூ கவிதைகள்...ஹைக்கூ கவிதைகள்...

கோதவரியைக் கடக்கும் ரயில்
தண்ணீர் பாட்டிலில் 
அலைகள்


டியூப் லைட்டை முட்டி முட்டி 
காதலிக்கும் விட்டில் பூச்சிகள்
பார்க்கும் பல்லி

 
அப்பர் பெர்த் பயணம்
அணக்காத விளக்கு
கொலுசு கால்கள்


கிருஷ்ண ஜெயந்தி கோலம்
பூட்டிய கிரில் 
கேட்


கொசுக் கடி
தூங்கும் அம்மா
பால் சப்பும் குழந்தை


மழைத் தூறல்
குடையுடன் வெளிவரும் 
காசி யாத்திரை மாப்பிள்ளை

திரில்லர் கதை படிக்க:-


சுமதியின் ராசி பலன் - திகில் கதை



Monday, March 16, 2009

அபார்ட்மெண்டில் செல்ல நாய் -தொல்லை

தனி விடுகளில் செல்ல நாய் வளர்ப்பதற்க்கும் அபார்ட்மெண்டில்  வளர்ப்பதற்க்கும் வித்தியாசம் இருக்கு.அபார்ட்மெண்டில் - வளர்ப்பவர்களுக்கும் மற்றும் வசிப்பவர்க்ளுக்கும் ,ஏன் நாய்க்கும் தொல்லைகள் ஜாஸ்தி. சில் அபர்ர்மெண்ட்களில் ரூல்ஸ் இருக்கு வளர்க்கக் கூடாது என்று. இருந்தாலும் பிடிவாதம் பிடித்து வளர்த்து தொல்லை தருகிறார்கள். திருந்தவே மாட்டார்களா?

 கோர்ட் வ்ரைக் கூடப் போய் இருக்கிறார்கள்.

நான் கண் கூடாக பார்த்தக் கொடுமைகள்:- 

நாயை பிளாட்டின் மொட்டை மாடியில் வாக்கிங் அழைத்துப் போய் “ஆய்” “மூச்சா” போக வைப்பது. அது அங்கிருக்கும் துணிகளை கடிப்பது.வத்தல் வடாம் மேல் போவது.வீட்டை திறந்தவுடன் துள்ளி குதித்து திறந்த வீட்டுக்குள் ஒடுவது.அந்த வீட்டில் இருப்பவர் அலறுவது.”மோந்து பார்க்கும்...கடிக்காதுங்க...” என்று சொல்லிவிட்டு “ ஏய்... பிங்கி... don"t be naughty"" என்று செல்லமாக க்டிந்துக் கொள்வது.  ஒவ்வொறு முறையும் எதிர் வீட்டுக்காரர் பயந்து பயந்து கதவை திறந்து வெளியே போக  வேண்டும். வயதானவர்களுக்கு நாய்னஅலர்ஜிதான்.

லிப்டில் அதுவும் வந்து மற்றவரிகளின் கை கால்களை நக்கி கலவரப் படுத்துவது. நாயை தனியாக போட்டு பூட்டி வைத்து விட்டு ஷாப்பிங் போவது. ஓயாமல் குறைத்து தொல்லைதான். வாக்கிங்கில் தெரு நாயகள் துரத்தி வந்து செல்ல நாயை குதறுவது. நாய் கூட இருக்கும் போது பேசுவதை தவிர்ப்பார்கள். பேசவிடாமல் நக்க ஆரம்பிக்கும். வளர்ப்பவர்கள் அதை சரியாக பராமரிப்பது கிடையாது.

கவிதை படிக்க:-

இவள் என் மனைவி - ஒரு கவிதை

Saturday, March 14, 2009

பாஸ்கியின் ஆஸ்கர் அவார்ட்ஸ்

பாஸ்கி எனபவர்  ”அரிகிரி அசெம்பளி” என்னும் ஒரு கடி நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் நடத்துபவர். அவர் எழுதிய ஒன்று.

அது “ Bosscar Awards (Just for fun, nothing else) ” என்ற தலைப்பில்


Best Director : ராமலிங்க ராஜூ

Best Dancer: ஸ்ரீசாந்த்

Best Stuntman: ஹர்பஜன் சிங். (பிட்சில் அடிக்கடி சண்டை) 

Best Human Being: George W. Bush for realising the value of a stranger"s "Sole" in a public meeting.

Best Economist: நமிதா.உடையைக் குறைத்து தயாரிப்புச் செலவையும் குறைப்பதால்

Best Ready Reckoner: அமீர் கான். “yellow pages"க்கே, தொலைந்து போன போன் நம்பர்களை கண்டுபிடிக்க தன் உடம்பு முழுவதும் எழுதி உதவியது

Best Cinematorgrapher: Anil Kumble, for always bowling with a ball in one hand and a video camera in other, in order to produce the best "shots"

Worst Critic: பாஸ்கி. நேரத்தை கொன்று, முட்டாள்தனமான ஐடியாக்களை வைத்து காமெடி பண்ணுவது 

Best Journalist: ?.........................? எதுவும் எழுத கிடைக்காமல் ,இந்த மாதிரி கடி அல்லது மொக்கையை reproduce செய்து போடுவது



திகில் கதைப் படிக்க இங்கே சொடுக்குக:-

சுமதியின் ராசி பலன் - திகில் கதை


Friday, March 13, 2009

A.R.ரஹ்மான்,யுவன்,விஜய் ஆண்டனி,ஹாரிஸ்

இப்போது வரும் படங்களுக்கு ஏற்றார் போல்தான் பாடல்களும் இருக்கிறது..இப்போது இருக்கும் இசை அமைப்பாளர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த வித்தியாசமான கதை அம்சம் உள்ள படங்கள் இல்லை. அவர்களும் நொந்து போய் காசுக்காக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லோரிடமும் திறமை இருக்கிறது. திறமைக்கு ஏற்றத் தீனி இல்லை. 


ஒரு காலத்தில் மசாலா, படங்களோடு புராண,சரித்திர,மாயாஜால,பக்தி மிருகங்களைப் பற்றி படங்கள் வந்துக் கொண்டிருந்தது. இசை அமைப்பார்களுக்கு இசையில் ஒரு வித்தியாசனமான இசையைக் கொடுக்கமுடிந்தது. அது தவிர வித விதமான் குடும்பப் படங்கள் வந்தன. அதற்கு ஏற்றார் இசை அமைப்பார்கள்,அரைத்த மாவையே அரைக்காமல், creative ஆக யோசித்து  நல்ல மெட்டுள்ள பாட்டுக்கள் போட்டு அசத்தினார்கள்.

ஆனால் இப்போது....... 90% அடிதடி மசாலா படங்கள். அதில் குத்துப் பாட்டு, டூயட்தான் போடமுடியும். அரைத்த மாவை அரைப்போமாதான்! இதில் எப்படி creativity யைக் காட்ட முடியும்.


உதாரணத்திற்க்கு வலைப் பதிவர்கள் அரைத்த மாவை அரைக்காமல் புளித்தமாவை புளிக்க வைக்காமல்  வித்தியாசமாக யோசித்து யோசித்து வித விதமான சப்ஜெட்களில் பதிவு போட வேண்டியிருக்கிறது. வழக்கமான குத்துப்பாட்டு,டூயட் போல பதிவுகளும் இருந்தால படிப்பவர்கள் அலுத்துப் போவார்கள். பதிவர்கள் மூளையும் மக்கிவிடும்.

வித்தியாசமான படங்கள் வருமா? மக்கள் ரசனை மாறுமா?
இசையமைப்பாளர்களுக்கு சரியான வாய்ப்பு வருமா?

திகில் கதைப் படிக்க இங்கே சொடுக்குக:-

சுமதியின் ராசி பலன் - திகில் கதை




Thursday, March 12, 2009

சுமதியின் ராசி பலன் - திகில் கதை




சுமதி அந்த மின்சார ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ரொம்ப நேரம் ஆயிற்று.ஒரு ரயிலையும் காணும். மணி மாலை ஆறு. எண்ணாயிற்று.கூட்டம் வேறு சேர்ந்துக் கொண்டிருந்தது.பசி வேறு எடுக்க ஆரம்பித்தது.  பொழுது போகவில்லை. அங்கும் இங்கும் உலாத்தினாள். அப்போதுதான் அவள் கண்ணில் பட்டது அது.தினமும் பார்ப்பதுதான். 


எடை பார்க்கும் இயந்திரம். ”உங்கள் எடை, அதிர்ஷ்டம் துல்லியமாக கணிக்கும்... வருக... வருக.இரண்டு கலர் பல்புகள் “மினுக்..மினுக்... என்று மாறி மாறி எரிந்து வா...வா என்று அழைத்தது. ஒரு ரோபோ மாதிரி இருந்தது.


இதில் ஒரு முறை கூட ஏறி எடைப் பார்த்ததில்லை. எடை பார்ப்பவர்களை பார்த்ததுண்டு. துல்லியமாக எடை பார்க்க வேண்டும் என்று சிலர் ஜட்டியை மட்டும் விட்டு மீதி எல்லாவெற்றையும் கழட்டி துல்லியமாக பிசிறுத் தட்டாமல் எடைப் பார்ப்பார்கள். எதோ எக்ஸ்ரே எடுப்பது போல்.சிரிப்பு வரும்.


சுமதிக்கு அன்றைய எடையை விட அன்றைய அதிர்ஷ்டம்தான் முக்கியமாகப் பட்டது. அந்த கலர் பல்புகள் அவளை கண் சிமிட்டி அழைத்துக் கொண்டிருந்தது சுமதிக்கு பொதுவாகவே ராசிபலன்,புத்தாண்டு பலன்,இன்று நாள் எப்படி போன்ற வற்றில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஆனால் இன்றைக்கு இனம் புரியாத ஆர்வம் ஒன்று அரித்துக் கொண்டே இருந்தது.


நேரம் ஆக ஆக் இன்றைய அதிர்ஷ்டம் தெரியவிட்டால் ம்ண்டை வெடித்து விடும் போல் ஒரு படபட்ப்பு வந்து விட்டது.எடுத்தே விடுவது என்று முடிவு செய்து அதன் அருகே சென்றாள்.இன்றைக்கு எனக்கு என்ன ராசி பலன்?  தன லாபம்? எதிர்பாராத வெளியூர் பயணம்?


நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே கனமான காய்கறிப் பையையும், ஆபிசில் கொடுத்த பிரேம் போட்ட மஹா லட்சுமிப் படத்தையும் கிழே வைத்து விட்டு எடை மெஷினில் ஏறினாள்.விர்ர்ர்ர்ர்ர் என்று சத்தம் போட்டு சுத்தி சக்கரம் நின்றது.காசைப் போட்டாள். படக் என்ற சத்தம் வந்து எடை டிக்கெட் பிரிண்ட் ஆகி கவுண்டரில் வந்து விழுந்தது. 


கை விட்டு எடுக்கப் போனாள் .. அப்போது ...காது பொளந்து போவது போல் ஒரு வெடி குண்டு சத்தம்.உடம்பு அதிர்ந்து வெல வெலத்தது.அடுத்த ..”பட பட பட வென ....துப்பாக்கி சுடும் சத்தமும்... பயணிகள் கத்தும் சத்தமும், ஒலமும்..அதிர்ச்சியில் உறைந்து பின் பக்கம் பார்த்தாள். யாரோ ஒரு சிறுவன் உடம்பெல்லாம் ரத்த சகதியாகி, கை ஒன்று தனியாகி தொங்கியபடி, ஒலமிட்டபடி இவள் அருகில் சொத்தென்று விழுந்தான் . மிரண்டுப் போய் முகத்தில் சவ களைத்தட்ட “அய்யோ கடவுளே” என்றபடி அந்த எடை கார்டை பார்க்கமல் தன் ஹாண்ட் பேக்கில் போட்டுக் கொண்டு எல்லாவெற்றையும் தூக்கிக் கொண்டு ஒட முடியாமல் ‘தத்தாக்கா பித்தாக்கா” மூச்சு வாங்க எதிரில் தெரிந்த படிக்கட்டை நோக்கி ஓடினாள்.


வழியில் ஒருவர் மிதிப் பட்டு இறந்துக் கிடந்தார். “பதுங்குங்க.... ஒளிஞ்சுகுங்க.... தீவிரவாதி சுடறான்.....” ஒரு ரயில்வே போலீஸ் கத்திக்கொண்டே எதிர் திசையில் ஓடினார். அவர் பின்னால் அடிப் பட்ட ஒருவரை நான்கு பேர் தூக்கிக் கொண்டு ஒடினார்கள்.


கேட்டவுடன் உடம்பு ஒரு குலுக்கு குலுக்கியது.துப்பாகி சுடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.. ஆண்,பெண்,முதியவர்கள்,பிச்சைக் கர்ரர்கள்,சிறுவர்கள் பிளாட்பார சிறு வியாபாரிகள் விழுந்தடித்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்தப் படிஅங்கும் இங்கும் சிதறி ஒடினார்கள். பல பேர் உடலில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.


படிக்கெட்டில் ஏறி மேல் தளத்தில் வந்து பக்கத்தில் இருந்த இரும்பு தடுப்பிற்குள் நுழைந்து மொட்டை மாடி போல் இருந்த இடத்தில் படுத்துக் கொண்டாள். அவள் மாதிரி நிறைய பேர் தரையோடு ஒட்டியபடி படுத்துக் கிடந்தார்கள்.வலது பக்கத்திலும் ஆண் ,பெண் ,முதியவர்கள் என தரையோடு ஒட்டிப் படுத்திருந்தார்கள்.இவள் அருகில் ஒரு குரங்காட்டியும் பக்கத்தில் சங்கலியில்
கட்டிய குரங்கும் படுத்திருந்தது.   அது அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.


தலையை கவிழ்த்துக் கொண்டாள். மூச்சு முட்டி வேர்த்து விறு விறுத்துப் தெப்பலாக நனைந்துப் போனாள்.பல இடங்களில் சிராய்த்து எரிந்தது. புடவை முழங்கால் வரை தூக்கி காலின் கிழ் காய்கறிப் பை சிதறிக் கிடந்தது.ஒரிரு தக்காளிகள் ந்சுங்கி கால் விரல்களில் பிசுபிசுத்தது. தீவிரவாதி எல்லோரையும் சுட்டு விடுவானா? சுடும் போது வலிக்குமா? துடி துடித்துச் சாவேனா?காலில் விழுந்து கெஞ்சித் தப்பிக்கலாமா? 


எனக்கு இன்றைய ராசி பலன் என்ன? உயிரோடு திரும்புவோமா?


தன் குழந்தைகள் ஞாபகம் வந்தது. அழுகை முட்டியது. சத்தம் வராமல் கேவினாள். செல் போன்னை எடுத்தாள். பக்கத்தில் உள்ளவர்கள் ஜாடைக் காட்டி உள்ளே வைக்கச் சொன்னார்கள்.Slient mode ல் வைத்தாள்.அப்படியே முனகியபடியே படுத்து இரண்டரை மணி நேரம் ஓடி விட்டது.இடையிடையே வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. 


எனக்கு இன்றைய ராசி பலன் என்ன? 

மெதுவாக பேச்சுக் குரல்கள் கேட்க ஆரம்பித்தது. தலையை தூக்கிப் பார்த்தாள். மணி பத்து. லவுட்ஸ்பீக்கரில் ”பயணிகள் கவனிக்க மேற்கு கேட் வழியாக போய்விடுங்கள். அங்கு போலீஸ் பாது காப்பு உள்ளது. இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டு விட்டோம்.”


படபடப்பு சற்று குறைந்தது.எழுந்தாள்.உடம்பு கனத்தது. மனது திகிலுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

எனக்கு இன்றைய ராசிபலன் என்ன?  


செல் போனில் விபரத்தை கணவனிடம் சொன்னாள்.அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. சில பயணிகள் கூடி பேசி ஒரு பிரைவேட் டாக்ஸியில் வேண்டிய இடங்களில் இறங்கி சுமதியும் வீடு வந்து சேரும் போது மணி இரவு 12.45 பிரேம் போட்டமஹா லஷ்மிப் படத்தை மார்போடு அணைத்தபடிதான் பிரயாணம் செய்தாள்.வீடு வரும் வரை உடம்பில் நடுக்கம் இருந்தது. 


எனக்கு நேற்றைய பலன் என்ன?  


வீட்டில் எல்லோரும் தூங்கி விட்டார்கள். இவளுக்குத் தூக்கம் வரவில்லை.அந்த ஸ்டேஷன் நிலவரத்தைப் பார்க்க வேண்டும்.ம்ணி காலை மூன்று மணி. எழுந்து டீவியைப் போட்டாள்.அந்த தீவிரவாதியைப் பார்த்து அதிர்ந்தாள். அட... பாவி..

நீயா...?

தான் எடை எடுக்கும் முன் இவன் தான் எடை மெஷினில் ஏறி எடை எடுத்தான். அப்போது அந்த துப்பாக்கி தெரியவில்லை.அந்த அதிர்ஷ்ட வாசகம் ஆங்கிலத்தில் இருந்ததால் இவளிடம் உருது கலந்த இந்தியில் அர்த்தம் கேட்டான். அவள் காடை வாங்கிப் பார்த்தாள் அதில்

" Have      a       nice    and  joyful   day  " என்று இருந்ததை மொழி பெயர்த்துச் சொன்னாள். சிரித்தப்படி மிகுந்த நன்றி என்று பதிலளித்தான்.


அவசரமாக தன் பேக்கை எடுத்தாள்.கை நடுங்க தன் எடை அட்டையை எடுத்தாள். எடை 60kg என்று போட்டிருந்தது. மறு பக்கம் திருப்பலாமா? மார்பு படபடக்க ஆரம்பித்தது.  பார்க்க வேண்டாம்...பார்க்கமலேயே அதை துண்டு துண்டாக கிழித்து ஜன்னல் வழியாக வெளியே விட்டெறிந்தாள்.

                                   முற்றும்

இவள் என் மனைவி - ஒரு கவிதை

ப்ளவுஸ் பட்டன்களை 
ஒவ்வொன்றாகப் போட்டு விட்டு
இழுத்துச் சரி பார்க்கிறான்
புதுப் புடவையை விரல்களால்
லாவகமாக அளைந்து அளைந்து
விசிறி போல் மடித்து
எடுத்தக் கொசுவத்தை 
பொம்மையின் இடுப்பில் 
சொருகி நீவி விடுகிறான்
மடிப்புக்கள் அழகாக விழுந்து
அவளுக்குப் பொருந்திவர
திருப்தியாகிப் புன்னகைக்கிறான் 
கடை சேல்ஸ்மேன் இளைஞன்
கடைக்கு வந்த நான்கு வயது
சுட்டிப் பெண்  வெட்கத்தில்
கன்னம் சிவந்து சிரிக்கிறாள்
இவங்க என் மனைவி மாதிரி
சொல்லிவிட்டு சுட்டிப் பெண்
கன்னத்தில் கிள்ளுகிறான் 
கணவன் அதோ என்று சொல்லி 
ஷோ கேஸில் இருக்கும்
ஆண் பொம்மை இளைஞனைக்
காட்டி வெளிவரும் போது
புன்னகைகிறாள் இரு கைக் கூப்பி
கண்ணாடிப் பெட்டிக்குள் நின்றபடி
அந்த புடவைப் பெண்

மேல் உள்ள கவிதை கிழே உள்ள கவிதையை
திருத்தி எழுதினது

சொடுக்குக:-

Tuesday, March 10, 2009

”அவர்கள் ”-ஜானகி, எம்.எஸ்.வி, கே.பாலச்சந்தர்,

"காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி" என்ற பாடல் எம்.எஸ்.வீ யின் இசையில் ஒரு மைல் கல். மாஸ்டர் பீஸ். படம் “அவர்கள்” .வருடம் 1977.டைரக் ஷன் கே.பாலசந்தர்.இசை எம்.எஸ்.வீ இயற்றியவர் கண்ணதாசன்.

எஸ்.ஜானகி+கண்ணதாசன் +எம்.எஸ்.வீ சேர்ந்து ஒரு கலக்கு கலக்கியிருப்பார்கள்.மூன்றும் பொருந்தி வருவது அபூர்வம்-(”ராத்திரியில் பூத்திருக்கும் “ பாட்டு ஒரு இனிமையான அர்த்தம் செரிந்த பாட்டு - ஆனால் காட்சி.கொடுமை? கையையும் காலையும் ஆட்டிக் கொண்டு  aerobics பண்ணுவார்கள்). 

ஒரு பெண்ணின் கரைப் புரண்டோடும் சுதந்திர உணர்வைச் சொல்லும்   பாடல்.கண்ணதாசன் எழுத்தில் வடித்ததை , ஜானகி தன் இனிய குரலால் ஒரு பெண்மையான ஹம்மிங்கில்,  கரை புரண்டு பிரவாகம் எடுத்து ஒட வைப்பார். லோகநாதன் (கேமிரா) துண்டு துண்டான விஷுவல்ஸ்ஸில் அதை கருப்பு வெள்ளையில் தீட்டியிருப்பார். மற்றொரு பக்கம் எம்.எஸ்.வீ யின் டொட்டுங்கு......டொட்டுங்டு என்ற குமுறல்..அட்டகாசம். சுஜாதா வாழ்ந்திருப்பார்.. 

முதல் மார்க் ஜானகிக்குதான்.சுசிலா பாடியிருந்தால் இந்த உணர்வு இருக்குமா? சந்தேகம்தான்.இந்த ஹை பிட்ச் சுசிலாவுக்கு வராது என்றுதான் ஜானகி பாடினார்.ஒரு இனிமையான கீச்சுத்தனம்அந்த வித விதமான ஹம்மிங் பட்டுப் புடவை சரிகை போல் அழகுப் படுத்திக் கொண்டே வரும்.(”தம் தன்னம் தம் தனனம்” பாட்டில் விடாமல் ஹ்ம்மிங் அழகு படுத்துவது போல்.)

ஒரு இடத்தில் ஒருஅரை செகண்ட் இசை நின்று,ஜானகி + chrous மட்டும் ”சரி க ரிசரிச ..சரி க ரிச ரிச  .சரி க ரிசரிச“ என்று ஆரம்பிப்பார். சூப்பர்.இனிமை + அழகு+ரம்யம். 

இந்த பாடல் ஒரு கஷ்டமான கம்போஸிங் என்று சொல்லலாம்.இது மாதிரி வித்தியாசமான படங்கள்
கதைகள்,காட்சி அமைப்புகள் இருந்தால்தான் இசையமைப்பாளரின் திறமை வெளிப்படும்.


நான் சின்ன வயதில் இந்த படம் பார்க்கும் போது கதை சுத்தமாகப் புரியவில்லை.ஆனால் இந்தப் பாடல் மனதில் பதிந்து விட்டது. காரணம்? இனிமையான இசை.



பாடல் வரிகள்

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது 
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது

நான் வானிலே மேகமாய்ப் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று
கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்னக் கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது 
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது

தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன் 
சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன்
பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் பேசிப் பேசி கிள்ளை ஆனேன் 
கோவில் விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்றுக் கொள்வேன்

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது
பாட்டை ரசிக்க :- (தியேட்டர் அல்லது ஒரு நல்ல DVD effect இந்த you tube'ல் கிடைக்கவில்லை.)

Monday, March 9, 2009

இவள் என் மனைவி - ஒரு கவிதை

ப்ளவுஸ் பட்டன்களை 
ஒவ்வொன்றாகப் போட்டு விட்டு
இழுத்துச் சரி பார்க்கிறான்
புதுப் புடவையில் விரல்களால்
லாவகமாக அளைந்து அளைந்து
விசிறி போல் மடித்து
எடுத்தக் கொசுவத்தை 
பொம்மையின் இடுப்பில் 
சொருகி நீவி விடுகிறான்
மடிப்புக்கள் அழகாக விழுந்து
அவளுக்குப் பொருந்திவர
திருப்தியாகிப் புன்னகைக்கிறான் 
கடை சேல்ஸ்மேன் இளைஞன்
கடைக்கு வந்த நான்கு வயது
சுட்டிப் பெண்  வெட்கத்தில்
கன்னம் சிவந்து சிரிக்கிறாள்
இவங்க என் மனைவி மாதிரி
சொல்லிவிட்டு சுட்டிப் பெண்
கன்னத்தில் கிள்ளுகிறான் 
கழுத்தில் தாலி இல்லை
இவனோ அட்டைக்கரி 
அவளோ சிவப்பு நிறம்
இவனோ ரொம்ப குள்ளம்
அவளோ ரொம்ப  உயரம் 
எப்படி மனைவியாக ஒப்பினாள்
யோசித்து வெளிவரும் போது
புன்னகைகிறாள் இரு கைக் கூப்பி
கண்ணாடிப் பெட்டிக்குள் நின்றபடி

Friday, March 6, 2009

மிடில் கிளாஸ் மொட்டை மாடி- சிறு கதை

வாழ்க்கையில் பல சுகங்களில் மொட்டை மாடி ஒரு சுகம்.மேலே நின்று கொண்டு எல்லோரையும் கடவுள் மாதிரி ”கவனி”க்கலாம்.ஒவ்வொறு தடவையும் படிகளில் ஏறும் போதும் ஒரு பரவசம். மாடிக்கு வந்தவுடன் சடாரென்று ஒரு வெட்ட வெளிச் சுதந்திரம்.சந்தோஷ அகண்ட வெளி.பல கோணங்களில் கிழ் உலகை பராக்குப் பார்க்கலாம்..

சுதந்திர பறவைகள்(free bird) என்று சொல்வதுண்டு.ஏன் அது உலகத்தை விட்டு மேலே தனியாக சுதந்திரமாக இருப்பதால்..அது மாதிரி மொட்டை மாடியும்?

வீட்டின் மேலே எதுவும் கட்டாமல் மொட்டையாக விட்டு விட்டால் அது மொட்டை மாடி என்பது ஒரு வசீகரமான சொல் வழக்கு.மொட்டை மாடிக்கென சில சாமுத்திரிகா லட்சணங்கள் உண்டு.எங்களது ஒரு மூணு போர்ஷன் மொட்டை மாடி.ஒருமிடில் கிளாஸ்த்தனமான மொட்டைமாடி. முக்கியமாக “நைட் ஷோ”வுக்கு ஏதுவானது. வீட்டின் உள்ளே போகமலேயே படிக்குள் எகிறி குதித்து,சன் ஷேடு தாவி மாடி போய் விடலாம். 

ஒரு தடவை என் பெரியக்காவையும் நைட் ஷோவுக்கு(புவனா ஒரு கேள்வி குறி)அழைத்துக் கொண்டு போய் விட்டு எகிறி குதிக்கத் தெரியாமல் நானும் என் அண்ணாவும் அவளுடைய பின் பக்கத்தில் கை வைத்து அவளை ஏற்ற , அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டி, சிரிப்பு வந்து அவள் எங்கள் மீது விழுந்து,நாங்களும் தொபுகடீர் என்று விழுந்து சிராய்த்துக் கொண்டோம்.

”இந்த கட்டைல போற கம்மனாட்டிகளுக்கு என்ன சினிமா வேண்டியிருக்கு?’
அம்மாவின் நடு தூக்கம் கலைந்த ஒரு எரிச்சல்.

மொட்டை மாடிக்கு அடுத்து அதற்கு கதவு என்ற ஒன்று உண்டு.எங்கள் வீட்டு மொட்டை மாடிக் கதவு “தொங்கிக்”கொண்டிருக்கும் கதவு.மொட்டை மாடி கதவு “படார்.. படார்” அடித்துக் கொள்ளும். சணல் போட்டுக் கட்டி வைத்தோம், கொஞ்சம் மெதுவாக “படார்..படார்” அடித்துக் கொண்டது.அதற்க்கென ஒரு கனமான செங்கல் உள்ளது. அதை ஒரு மாதிரி அட்டம் கொடுக்க வேண்டும். இல்லா விட்டால் , காற்றில் கதவோடு அதுவும் நகர்ந்து அடித்துக் கொள்ளும்(ல்லும்).இந்த டெக்னிக் பழகுவதற்கு கொஞ்ச காலம் ஆகும்.அந்த செங்கல் அடிக்கடி காணாமல் போகும்

மழை காலத்தில் பேய அடி அடிக்கும். அதுவும் நடு நிசி புயல் அடிக்கும் காலங்களில் ஒரு திகில் படம் மாதிரி அடித்துக் கொள்ளும்..


மாடியிலிருந்து பார்க்கும் பிண ஊர்வலங்களில் மல்லாக்காக படுத்திருக்கும் பிணங்கள் தொண்ணூரு டிகிரியில் நம்மளயே பார்பது மாதிரி இருக்கும். பிணம் தவிர சாமி ஊர்வல தரிசனம் பல கோணங்களில் பார்த்து அம்மா பரவசமடைவாள்.எங்கோ தொலை தூரத்தில் தெரியும் நீல நிற கடலும், அதில் மிதக்கும் குச்சி குச்சியான கப்பல்களும், லைட் அவுசும்,ஒரு பக்கத்தில் அடர்த்தியான தென்ன மரங்களும் அந்த தூரக் காட்சிகள் ஒரு கனவு மாதிரி இருக்கும்.


காக்கைக்கு சாதம் வைப்பத்தற்கு மொட்டை மாதிரி ஒரு இடம் அமையாது. அதே காக்கைகள் அவ்வபோது கொண்டு போடும் எலும்புத்துண்டுகள் பயமுறுத்தும். போஸ்டு மேன் எந்த தெருவில் இருக்கிறான,பஸ் புறப்பட்ட நிலவரம்,  காய்கறிக்காரன் திசை இவற்றை ஒரு ஏரியல் வியூவில் அறியலாம்.

ராத்திரி நேர மொட்டை மாடி ஒரு தனி உலகம். அதுவும் நடு நீசி மொட்டை மாடி? ஒரு தடவை மொட்டை மாடியில் படுக்கும் போது நடு நீசியில் விழிப்பு வந்து,வானில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களும், அமைதியான நிலவும் ,மிதக்கும் மேகங்களும்.எங்கோ ஓரத்தில் “பொய்ங்” என்று கத்திக் கொண்டு பயணிக்கும் விமானமும், அதன் மினுமினுக்கும் இறக்கை விளக்குகளும்...... ஆச்சிரியமும் பயமும் கலந்து, லுங்கியால் முகத்தை மூடி பில்டர் செய்து பார்த்தபடி......அன்று இரவு கழிந்தது.


மொட்டை மாடி ஏறும் எங்கள் வீட்டினர் ஒவ்வொறுவருக்கும் ஒரு பாணி உண்டு. சின்னக்கா பாவடையை தூக்கிக் கொண்டு விறு விறு என்று ஏறுவாள்.கைப்பிடி சுவரை தொடவே மாட்டாள். ஒரு ரிதம் இருக்கும்.ரெண்டாவது அக்கா தடுக்கி தடுக்கி ஒரு மாதிரி ஏறுவாள்.அம்மா ஏறும் போது பென்குயின் ஏறுவது மாதிரி இருக்கும். மாடிப்படிக் கட்டினவனை திட்டிக் கொண்டே ஏறுவாள்.

12வது படியில் ஒரு சின்ன ஒதுக்குப் புறம்.அதில் தலைகாணியுடன் பழைய புடவைச் சுற்றப்பட்டு ஒரு மூலையில்.அமுதசுரபி அல்லது கலைமகள் தரையில். அதன் மேல் ஒரு டம்ளர். 

சுழற்ச்சி முறையில் அங்கு ”பெண்டுகளை” பார்க்கலாம். சில சமயத்தில் மூன்று நானகு பெண்டுகளுக்கு ஒரே சமயத்தில் வாய்த்துவிடும். அரட்டை சத்தம் மாளாது.இது இயற்கை (அந்த காலத்துப்)பெண்களுக்கு கொடுத்த அடுத்த சுதந்திரம்.

முதல் அக்காவை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை இதே மொட்டைமாடியிலிருந்தே பார்த்து விட்டு “பிடிச்சருக்கு” என்றாள்.இதே அக்கா அப்பாவோ அம்மாவிடமோ திட்டு வாங்கிக்கொண்டு விசிக்கும் இடம் இதே மொட்டை மாடி.அதே அக்காக்கள் கிசு கிசுவென ரகசியம் பேசும் இடமும் இதுதான். அக்காக்கள் தலைக் குளித்து விட்டு அந்த வெட்ட வெளியில் தலை விரித்து தலை துவட்டுவதும் அங்கேதான்.

வடமும் வத்தல்களும் மொட்டை மாடியில் காய வைத்தால் தான் காயுமோ?.

பல வருடங்களுக்குப் பிறகு அங்கு போனேன். அந்த தெருவில எல்லா வீடுகளும் இடிக்கப்பட்டு விட்டது. “Iswarya Balamabica Apartments" என்று பெரிய போர்டு.200பிளாட்டுக்கள்.

ஏதாவது ஒரு பிளாட்டில் நுழைந்து நாங்கள் வாழ்ந்த மொட்டை மாடிக்கதையைச் சொல்ல விட்டால் மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது.


Wednesday, March 4, 2009

தமிழா..தமிழா..தமிழ் பேசலாமா?..

எனக்குத் தெரிந்து கிழ் உள்ளனவைற்றைக் குறிப்பதற்கு எந்த காலத்திலும் ஆங்கில சொற்களைத்தான் பயன்படுத்தியிருப்பார்கள் என்று தெரிகிறது.அப்படியே தமிழோ வடமொழியோ பயன்படுத்தியிருந்தாலும் அது 80/90 ஆண்டுகளுக்கு முன்னால் இருக்கலாம்.அடைப்புகுறியில்(பிராக்கெட்?) அந்த சொற்களை கொடுத்துள்ளேன். 


பஸ்(மோட்டார்),டெலிபோன்,பில்,டிக்கெட்(சீட்டு),வக்கீல்,லாயர்,ஜட்ஜ்,
கோர்ட்  (கச்சேரி),கார்(பிளசர்),ரயில்வே ஸ்டேஷன்,ஆபிஸ்,ரேடியோ,கலெகடர்,போலீஸ்  (டாணக்காரன்),வாட்ச்மேன்,பேங்க்,பிரவேட் அல்லது டூசன்,டீச்ச்ர்(வாத்தியார்),சினிமா(டாக்கீஸ்),நைட் சோ(ராவாட்டம்),கேட்,பஸ் ஸ்டாண்ட்,கலர் சோடா,பெட்டிஷன்(தாக்கீது),லெட்டர்(கடுதாசி/காயிதம்),சோப்,காலேஜ்,காமெடி(டமாஸ்,தமாஷ்),ஸ்வாமி தரிசனம்,ஹார்ட் ஆபரேஷன்,ஹாஸ்பிடல்,டாக்டர்(வைத்தியர்/மருத்தவச்சி(நர்ஸ்?))ஹோட்டல்,
பேண்ட்(கால் சராய்/குழயாய்),




சில் சொற்கள் ஆங்கிலம்தான் உபயோகபபடுத்த வேண்டிய கட்டாய்ம். ஏன்? அந்த பொருள்கள் வேறு நாட்டிலிருந்து வந்த காரணம்.  


உதாரணம்:ரேடியோ(வானெலி),டெலிபோன்(தொலை பேசி),சோப்,சினிமா(திரைப் படம்),பஸ்(பேரூந்து) போன்றவை.எனக்குத் தெரிந்து பேச்சு வழக்கில் இதற்கு ஈடான தமிழ் சொற்களை சத்தியமாக யூஸ் பண்ணிய மாதிரி தெரியவில்லை.



Monday, March 2, 2009

ஓஷோவின் ஞானக் கதைகள்-கவுண்டமணி

”ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காண்பிப்பாயாக என்று ஏசு நாதர் சொல்லியிருக்கிறார்” என்று ஒரு கிறிஸ்துவத்
துறவி போதனை செய்தார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் உண்மை தானா என்று அந்தத் துறவியையே பரிசோதிக்க விரும்பினான். அவர் இடது கன்னத்தில் பலமாக அறைந்தான். ஏசு நாதர் சொல்படி தன்னுடைய மறு (வலது) கன்னத்தையும் காட்டினார். அதிலும் சாத்து சாத்தினான்.

அறைந்து முடிந்தவுடன் அவனை போட்டு பின்னியெடுத்தார் துறவி.

அவன் கவுண்டமணி கணக்காக வலி தாங்க முடியாமல் “துறவி சார்..துறவி சார்..நீங்கதான சொன்னிங்க..துறவி சார். ஒரு கன்னத்தில் அறைஞ்சா இன்னொரு கன்னம் பீரின்னு...இந்த ஆபர நானு அவைல பண்ணி அடிச்சா என்னப் போட்டு இப்படிப் பின்றீங்களே துறவி சார்! இது ராங்க் இல்லையா துறவி சார்!

துறவி சார் சொன்னார்:- ”ஏசு மறு கன்னத்துடன் நிறுத்தி விட்டார்.மூன்றாவது கன்னம் இல்லை.அதற்குப் பிறகு நான் விரும்பியதைச் செய்து கொள்ளலாம். ஏசு இதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை”


நீதி:

நீ யாரையும் துன்புறுத்தாதே. ஒரு கன்னத்தில் அறைந்து துன்புறுத்துவோர் இந்த உலகத்தில் இல்லாதபட்சத்தில் மறு கன்னத்தை காட்ட வேண்டிய அவசியமில்லை.


என் வேறு ஞானக் கதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்: