Monday, May 31, 2010

”சார்...கொஞ்சம் பாத்துக்குங்க” - அனுபவம்

ஒரு முறை கொல்கொத்தா போவதற்காகக் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வண்டியில்  என் குடும்பத்தாரோடு உட்கார்ந்திருந்தேன்.வண்டிப் புறப்பட ஒரு மணி நேரம் இருந்தது.

பத்து நிமிடம் கழித்து ஒருவர் தன் மனைவி மூன்று குழந்தைகளுடன் வந்தார். அவருக்கு இதைத் தவிர நிறைய லக்கேஜ் வேறு. அப்படியே எல்லாவற்றையும் அவருக்குண்டான சீட்டில் வைத்துவிட்டு ” சார்... கொஞ்சம் பாத்துக்குங்க...”என்று சொல்லிவிட்டு என் பதிலைக் கூட கேட்டுக்கொள்ளாமல் குடும்பத்தோடு மறைந்தார்.

எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்பதற்குள் மறைந்தார்.

என் லக்கேஜ்ஜுகளை சரி செய்துவிட்டு, குடுமபத்தாரோடு பேசியபடி அவரின் லக்கேஜ் மேல் நொடிக்கொருதரம் கண் வைத்தேன்.கஷ்டமான கூடுதல் வேண்டாத பொறுப்பு.சில லக்கேஜ்ஜூகள் வழுக்கிக்கொண்டு சீட்டின் நுனிக்கு வந்துவிட்டது.அதை வேறு சரி செய்து உட்கார வைத்தேன்.(என் மனைவி முகத்தில் நக்கல் புன்னகை)

கொஞ்ச நேரம் கழித்து ஆரம்பித்தது தொல்லை.வருவோர் போவோரெல்லாம் “இது யார் லக்கேஜ்?” என்று கேட்க ஆரம்பித்தார்கள்.தாங்கமுடியவில்லை.”இப்ப ஒத்தரு வச்சிட்டு...”என்று அப்படி இப்படி எல்லாம் ஜன்னல்களையும் பார்த்தபடி சமாளித்தேன்.கேட்ட சில பேர் என்னை முறைத்தார்கள்.சில பேர் என் கூடவே எல்லா ஜன்னலையும் நோக்கினார்கள்.
 
இப்படியே 40 நிமிஷம் ஓடிவிட்டது. ஆளைக் காணவில்லை.கூடுதல் பொறுப்பு விஸ்வரூபம்
எடுத்து இருப்புக் கொள்ளவில்லை.என் டூர் மூடு போய் ஆபிஸ் மூடு வந்து விட்டது.

என் விதியை நொந்தபடி என் மனைவியிடம் “ கொஞ்சம் பாத்துக்க” என்று அவள் வாய் திறப்பதற்க்குள் விடுவிடுவென மறைந்தேன்.பிளாடபாரத்தில் நின்றபடி நோட்டம் விட்டதில் எதிர்படும் எல்லோரும் ” சார்... கொஞ்சம் பாத்துக்குங்க...”ஆளின் ஜாடையில் இருந்தார்கள்.ஜாடை வேறு மறந்துவிட்டது.யாரும் என் கம்பார்ட்மெண்டில் ஏறாமல்நேராகப் போய்க்கொண்டிருந்தார்கள்.

போகும்போது ஏன் சளசளவெனப் பேசிக்கொண்டேப் போகிறார்கள்.

குனிந்து என் மனைவியை நோட்டம் விட்டேன். இப்போது அவள் ”இப்ப ஒத்தரு வச்சிட்டு...”என்று அப்படி இப்படி எல்லா ஜன்னல்களையும்  பார்த்தபடி (உலக மகா கடுப்புடன்) கேட்பவர்களைச் சமாளித்துக்கொண்டிருந்தாள்.இன்னும் பத்து நிமிடம்தான் இருந்தது.

”அப்பா...! அம்மா கூப்பிடறாங்க “ என்று என் மகன்  வாசலுக்கு வந்து அவசரமாக் கூப்பிட்டான்.”வந்துட்டாரு போல” என்று முணுமுணுத்தபடியே உள்ளே ஓடினேன். ஆனால் யாரும் இல்லை.” கொஞ்சம் பாத்துக்குங்க” வேலை இப்போது என் கைக்கு மாறிவிட்டது. மனைவி செல்லில் பாட்டுக்கேட்க ஆரம்பித்தாள்.என் பையன் சிரித்தான்.

ரயில் கிளம்பப்போகும் ஆறாவது நிமிடத்தில்” கொஞ்சம் பாத்துக்குங்க” நபர் ஓடி வந்தார்.பெரிய ஏப்பம் வேறு.(டிபன் புல் கட்டு கட்டியிருக்கிறார் போல)எல்லா லக்கேஜ்களையும் வாரிக்கொண்டார்.ஓடி விட்டார் வேறு கம்பார்மெண்டுக்கு.

உண்மையான சீட் ஓனர்கள் ” கொஞ்சம் பாத்துக்குங்க”நபரைச் சபித்தப்படி(எனக்கும் அந்த சாபம் சேரும்?)அந்த தங்கள் லக்கேஜ்ஜுகளை செட் செய்ய ஆரம்பித்தார்கள்.

ரயில் கிளம்பி கொஞ்ச நேரம் ஆனதும் மனைவி கேட்டாள்:

”லக்கேஜ்களை எடுத்துட்டுப் போனவரு உண்மையிலேயே முதல்ல வச்சுட்டுப் போனவர்தானா?”

9 comments:

  1. நல்லா கேட்டாங்க
    நன்றக இருந்தது

    ReplyDelete
  2. நன்றி பாலாஜி.

    ReplyDelete
  3. உங்க மனைவி கேட்ட கேள்வி ரொம்ப பொருத்தம்.

    ReplyDelete
  4. நல்லா இருக்கு!
    ”லக்கேஜ்களை எடுத்துட்டுப் போனவரு உண்மையிலேயே முதல்ல வச்சுட்டுப் போனவர்தானா?”
    :):):)

    ReplyDelete
  5. Blogger Dr.P.Kandaswamy said...

    //உங்க மனைவி கேட்ட கேள்வி ரொம்ப பொருத்தம்//

    வருகைக்கு நன்றி. கருத்துக்கு நன்றி சார்.

    ReplyDelete
  6. Blogger HVL said...

    // நல்லா இருக்கு //

    ரொம்ப நன்றி சார்.

    ReplyDelete
  7. Ilaiyaraja Bday special post yedhir paarthen innum varalaiye

    ReplyDelete
  8. Blogger Prithvi said...

    // Ilaiyaraja Bday special post yedhir paarthen innum varalaiye//

    டைம் இல்ல.போடவில்லை.நம்ம போன பதிவு கவுண்டர் பாயிண்ட் படிச்சீங்களா?

    ReplyDelete
  9. rasiththaen sir..climax ha.. ha...

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!