Monday, May 31, 2010

”சார்...கொஞ்சம் பாத்துக்குங்க” - அனுபவம்

ஒரு முறை கொல்கொத்தா போவதற்காகக் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வண்டியில்  என் குடும்பத்தாரோடு உட்கார்ந்திருந்தேன்.வண்டிப் புறப்பட ஒரு மணி நேரம் இருந்தது.

பத்து நிமிடம் கழித்து ஒருவர் தன் மனைவி மூன்று குழந்தைகளுடன் வந்தார். அவருக்கு இதைத் தவிர நிறைய லக்கேஜ் வேறு. அப்படியே எல்லாவற்றையும் அவருக்குண்டான சீட்டில் வைத்துவிட்டு ” சார்... கொஞ்சம் பாத்துக்குங்க...”என்று சொல்லிவிட்டு என் பதிலைக் கூட கேட்டுக்கொள்ளாமல் குடும்பத்தோடு மறைந்தார்.

எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்பதற்குள் மறைந்தார்.

என் லக்கேஜ்ஜுகளை சரி செய்துவிட்டு, குடுமபத்தாரோடு பேசியபடி அவரின் லக்கேஜ் மேல் நொடிக்கொருதரம் கண் வைத்தேன்.கஷ்டமான கூடுதல் வேண்டாத பொறுப்பு.சில லக்கேஜ்ஜூகள் வழுக்கிக்கொண்டு சீட்டின் நுனிக்கு வந்துவிட்டது.அதை வேறு சரி செய்து உட்கார வைத்தேன்.(என் மனைவி முகத்தில் நக்கல் புன்னகை)

கொஞ்ச நேரம் கழித்து ஆரம்பித்தது தொல்லை.வருவோர் போவோரெல்லாம் “இது யார் லக்கேஜ்?” என்று கேட்க ஆரம்பித்தார்கள்.தாங்கமுடியவில்லை.”இப்ப ஒத்தரு வச்சிட்டு...”என்று அப்படி இப்படி எல்லாம் ஜன்னல்களையும் பார்த்தபடி சமாளித்தேன்.கேட்ட சில பேர் என்னை முறைத்தார்கள்.சில பேர் என் கூடவே எல்லா ஜன்னலையும் நோக்கினார்கள்.
 
இப்படியே 40 நிமிஷம் ஓடிவிட்டது. ஆளைக் காணவில்லை.கூடுதல் பொறுப்பு விஸ்வரூபம்
எடுத்து இருப்புக் கொள்ளவில்லை.என் டூர் மூடு போய் ஆபிஸ் மூடு வந்து விட்டது.

என் விதியை நொந்தபடி என் மனைவியிடம் “ கொஞ்சம் பாத்துக்க” என்று அவள் வாய் திறப்பதற்க்குள் விடுவிடுவென மறைந்தேன்.பிளாடபாரத்தில் நின்றபடி நோட்டம் விட்டதில் எதிர்படும் எல்லோரும் ” சார்... கொஞ்சம் பாத்துக்குங்க...”ஆளின் ஜாடையில் இருந்தார்கள்.ஜாடை வேறு மறந்துவிட்டது.யாரும் என் கம்பார்ட்மெண்டில் ஏறாமல்நேராகப் போய்க்கொண்டிருந்தார்கள்.

போகும்போது ஏன் சளசளவெனப் பேசிக்கொண்டேப் போகிறார்கள்.

குனிந்து என் மனைவியை நோட்டம் விட்டேன். இப்போது அவள் ”இப்ப ஒத்தரு வச்சிட்டு...”என்று அப்படி இப்படி எல்லா ஜன்னல்களையும்  பார்த்தபடி (உலக மகா கடுப்புடன்) கேட்பவர்களைச் சமாளித்துக்கொண்டிருந்தாள்.இன்னும் பத்து நிமிடம்தான் இருந்தது.

”அப்பா...! அம்மா கூப்பிடறாங்க “ என்று என் மகன்  வாசலுக்கு வந்து அவசரமாக் கூப்பிட்டான்.”வந்துட்டாரு போல” என்று முணுமுணுத்தபடியே உள்ளே ஓடினேன். ஆனால் யாரும் இல்லை.” கொஞ்சம் பாத்துக்குங்க” வேலை இப்போது என் கைக்கு மாறிவிட்டது. மனைவி செல்லில் பாட்டுக்கேட்க ஆரம்பித்தாள்.என் பையன் சிரித்தான்.

ரயில் கிளம்பப்போகும் ஆறாவது நிமிடத்தில்” கொஞ்சம் பாத்துக்குங்க” நபர் ஓடி வந்தார்.பெரிய ஏப்பம் வேறு.(டிபன் புல் கட்டு கட்டியிருக்கிறார் போல)எல்லா லக்கேஜ்களையும் வாரிக்கொண்டார்.ஓடி விட்டார் வேறு கம்பார்மெண்டுக்கு.

உண்மையான சீட் ஓனர்கள் ” கொஞ்சம் பாத்துக்குங்க”நபரைச் சபித்தப்படி(எனக்கும் அந்த சாபம் சேரும்?)அந்த தங்கள் லக்கேஜ்ஜுகளை செட் செய்ய ஆரம்பித்தார்கள்.

ரயில் கிளம்பி கொஞ்ச நேரம் ஆனதும் மனைவி கேட்டாள்:

”லக்கேஜ்களை எடுத்துட்டுப் போனவரு உண்மையிலேயே முதல்ல வச்சுட்டுப் போனவர்தானா?”

Sunday, May 30, 2010

இளையராஜா - மயக்கும் Counterpoint

இளையராஜாவின்  இனிமையான பாடல்களை பாமரத்தனமாக ரசிக்கிறோம்.ஆனால் அவர் இந்த மெலடிக்காக சில மேற்கத்திய இசை நுணுக்கம் ஒன்றை தன் பாடல்களில் புகுத்துகிறார்.அது கவுண்டர் பாயிண்ட் (counter point) எனப்படும் ஒன்று.

அது என்ன?

பாடல்களில் பாடகி/பாடகர் பாடி முடிந்ததும் வரும் (முதல் இசையும் அடக்கம்) இடையிசையில்  ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று என ஒன்றுக்கு மேற்பட்ட மெலடிகளை /டுயூன்களை இசைக்கருவிகளில்வாசிப்பது அல்லது குரல்களில் பாடுவது. 
அவைகள் வெவ்வேறாகவும் ஒன்றை ஒன்று சார்ந்தும் அதே சமயத்தில் இவைகள் இசைந்தும்(harmonious) அழகாக போவது. இதுதான் counter point.
 

(counterpoint involves the writing of musical lines that sound very different and move independently from each other but sound harmonious when played simultaneously.)

ரொம்ப எளிதாகப் புரிந்துக்கொள்ள “புத்தம்புது காலை” (அலைகள் ஓய்வதில்லை-1981) பாட்டின்  கவுண்டர் பாயிண்டைக் கேட்டுவிட்டு போவோம்.

 புத்தம் புது காலை 
(அலைகள் ஓய்வதில்லை)
ஆரம்பத்தில்( 00.00 -0.41) ஒரு புல்லாங்குழல் ஒரு மெலடியும்(அ), கும்கும் என்று கிடாரில் வேறு ஒரு மெலடியும்(ஆ),கோரஸ் வயலின் ஒரு மெலடியும்  (இ)ஜானகி ஹம்மிங் ஒரு மெலடியும், (ஈ)

அ,ஆ,இ,ஈ எல்லாம்தனிதனித்தான் ஆனால் கேட்கும்போது(harmonious)இனிமையாகிறது.
அசட்டுத்தனம் இல்லை.கிடைத்த சந்தில் விதவிதமாக சிந்து பாடுகிறார் மேஸ்ட்ரோ.

 விரிவாக படிக்க:இளையராஜாவின் -கவுண்டர் பாயிண்ட்
 
எல்லாம் கேள்வி /படிப்பு ஞானம்தான்.தவறு இருந்தால் திருத்தலாம்.இசைக் கருவிகள் தெரிந்த மட்டிலும் எழுதியுள்ளேன் இதிலும் தவறு இருந்தால் திருத்தலாம்.


 பனிவிழும் மலர் வனம்  1982 - நினைவெல்லாம் நித்யா  
(கிடார் vs வயலின்- 0.29 - 0.40) 
இந்தப் பாடல் இசைக் கற்பனையின் உச்சம் என்று சொல்லாம். 
இதில் கர்நாடக ராகம்+மேற்கத்திய கிளாசிகல் இசை+அபரிதமான இசைக்கோர்ப்பு+ புதுமை+எஸ்பிபி குரல் என பலவித சமாசாரங்கள் காணலாம்.இன்னும் இளமையாக இருக்கிறது.

முன்னணியில்  கிடாரின் ஒரு  மெட்டும் பின்னணியில் ஒரு வயலினின்  வேறு ”கீச்” மெட்டும்இசைக்கப்படுகிறது.இந்த கிடார்-வயலின் அலசலின் நடுவே ஒரு குரூப் வயலின்வேறு சந்தில் சிந்து பாடிவிட்டுப்போகிறது.

அல்லிபபூவே மல்லிப்பூவே  - 2009 -பாக்யதேவதா(மலையாளம்)

(பியானோ-????-வயலின் 0.00 -0.20)
ரம்யமான மென்மையான பியானோ வாசிக்கப்பட அதன் எதிர்திசையில் ஒரு நாதம் மற்றும் 0.10இல் வயலின் இழைகள் வேறொரு நாதத்தில் உள்ளே நுழைகிறது.இந்த பியானோ இசையை ஒரு தடவையாவது கேளுங்கள்.

அட்டகாசம். Hats off Maestro! This is magical music maestro!

தேன் பூவே பூ  -1984 -அன்புள்ள ரஜனிகாந்த்
(கிடார் vs புல்லாங்குழல்- 2.33 - 2.45)   கிடாரும் புல்லாங்குழலும்  ஒன்றை ஒன்று எப்படி அதனதன்  தனி நாதத்தில் செல்லம் கொஞ்சுகின்றன.
 

பூந்தளிர் ஆட  - 1981 - பன்னீர்புஷ்பங்கள்
 (சிந்த்(?)-கிடார்-கிடார் 2.49-3.06)

இது ராஜாவின் மாஸ்டர் பீஸ்.சில இடங்களில் ஹம்மிங்கும் கிடாரோடு 0.31-0.42 & 1.44 -1.57 கவுண்டர்பாயிண்ட் உண்டு.1.44 -1.57 இரண்டுக்கும் நடக்கும் உரையாடல்களையும் கவனியுங்கள்.மயக்கும் நாதம்.

 தூரிகை இன்றி   - 2007 -அஜந்தா (பியானோ-புல்லாங்குழல்-வயலின்- 0.00 -0.17)கவுண்டர் பாயிண்டை ”ஒருகாட்டு”காட்டுகிறார்.மிரண்டுப்
போய்விட்டேன்.


 ஆரோ பாடுன்னு தூரே -2010-கதா தொடரன்னு(மலையாளம்)

 (0.28-0.45 பியானோ- வயலின்)

 ஓ.... சத்யன் அந்திகாடு சாரே.. இந்த பியானோவும் வயலினும் எத்தர சந்தோஷத்தோட பிரேமிச்சு....கேட்டோ

செம்பூவே  -1996 -சிறைச்சாலை
(செல்லோ-புல்லாங்குழல்-பெல்ஸ்-??????-0.00-0.17) 

ஆரம்பமே கவுண்டர்பாயிண்ட் கலக்கல்.பிரமிக்க வைக்கிறார்.Mindblowing counterpoint.


 கொடியிலே மல்லிகைப்பூ
 (1986 - கடலோரக்கவிதைகள்-1.01 -1.20)
 கிடார்-சிந்த்-பு.குழல்-வயலின்(?).அருமை
  
கண்ணன் வந்து - 1987- ரெட்டைவால் குருவி
(கிடார்-சாக்ஸ்+வயலின் 0.00 - 0.22)
மென்மையான கிடார் தீற்றல் ஒரு மெட்டில்ஆரம்பிக்க பின்னணியில் ஒரு கீச் வயலின் வேறொரு மெட்டில் உரையாட பிறகு சாக்ஸ்போன் சேர்த்துக்கொள்கிறது வேறொரு மெட்டில்.

தாமரைக்கொடி - 1983 -ஆனந்தகும்மி
(பியானோ(?)-கிடார்-சிந்த்-வயலின்- 0.17 - 0.45 )
அட்டகாசம். வயலின் பறக்கிறது.

 
உறவெனும்  - 1980-நெஞ்சத்தைக் கிள்ளாதே
(கிடார்-கிடார்-வயலின்-???? -0.00 -0.23 & 3.19-3.30)   
 
காதல் வானிலே  - 1995 - ராசய்யா
(1.34-1.41)

மேலே பார்த்தது இசை மெலடி வித்தைகள்.ராஜா இப்படித்தான் விதவிதமாகப் போட்டு பிடிக்கிறார் இந்த வீடியோவில் வருகிற மாதிரி.


    இந்த வீடியோவின் இசை அருமை
 

 

Saturday, May 29, 2010

பேன்சி பனியனும் நானும் ...மொக்கை

ஏழைகளின் படிப்புச்
செலவை ஏற்கிறார்
கிராமத்தைத் தத்தெடுத்துத்
தொண்டாற்றுகிறார்

சைக்கிள் கணினி
புத்தகங்கள் பென்சில் பேனா
ஏழை மாணவர்களுக்கு 
வாங்கிப் பரிசளிக்கும் இவர்

பனியன் கம்பெனி முதலாளி
என்று தொலைக்காட்சி சொல்கிறது

இவர்  செய்யும் பனியனுக்கும்
ஏதாவது செய்ய வேண்டும்
போர்கால அடிப்படையில்



பேய் வீட்டில் விழுந்த செல்போன் -திகில் கதை

இந்த ஏரியாவுக்கு வந்தது மகா மடத்தனம் என்று குடித்தனம் வந்த அடுத்த நாளே மனம் புழுங்கினார் உதயச்சந்திரன்.சொந்த வீட்டுக்காரர்கள்தான் இங்கு நெடுநாள் தாக்குப்பிடிப்பார்கள்.

அங்கும் இங்குமாக சில வீடுகள்.கட்டிமுடிக்காத பாதியில் நிற்கும் வீடுகள் சில.குறுகலானத் தெருக்கள்.மழை பெய்தால் ஏரியா ரொம்ப மோசமாகிவிடும்.அடுத்து இரவு 8 மணிக்கு ஏரியா அடங்கிவிடுகிறது.

                             12 A,சோலைமலை நிவாஸ்?


அந்த பெரிய  வீட்டைப் பார்த்தார். 12A,சோலைமலை நிவாஸ்.அதற்கு பிறகு ரோடு கிடையாது. Dead end. தெருவின் முனையில் தனியாக இருந்தது.தன் வீட்டிலிருந்து சற்றுத் தள்ளித்தான் இருந்தது.

ஆட்கள் புழங்காததால் முன்னும் பின்னும் செடிகொடிகள் காட்டுத்தனமாக வளர்ந்திருந்தது.வெளிச்சுவர்கள் பெயிண்ட்கள் உதிர்ந்து காறைப் படிந்திருந்தது.வீட்டின் வெளிஜன்னல் கதவுகள் இரண்டொன்று திறந்திருந்தன.உள்ளே ஒரே இருட்டு.கிரில்கள் துருப்பிடித்து இரும்புத் தெரிந்தது. வாசல் கிரில்கேட் துருபிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தது.ஷன்ஷேடுகளில் முழுவதும் புறா/காக்கை எச்சம்.

கிணறை நோக்கிப் போகும் சிமெண்ட் பாதை நிறைய இடத்தில் பெயர்ந்து புல் முளைத்திருந்தது.கிணறும் பாழடைந்து அதன் சுற்றுச் சுவர்களில் நிறைய காக்கை புறா எச்சங்கள்.




”என்ன சார்..! அந்த வீட்டையே பாக்குறீங்க? ஏரியாவுக்குப் புதுசா?”

”ஆமாம். எம் பேரு உதயச் சந்திரன்.அடுத்த தெருவுலதான்  குடி வந்துருக்கேன் ஒரு பிரைவேட் கம்பெனில ஜி.எம்..நீங்க”

“நானும் இதே ஏரியாதான்..ஐ ஆம் சுதாகர் ராவ்.ரொம்ப வருஷமா இருக்கேன்..”

“நேத்து  என் பொண்ணு  வாக்கிங் வரும் போது  என் செல்போன  இந்த வீட்டு உள்ள தூக்கிப்போட்டுட்டா.பிளாக் பெர்ரி.விலை  நாப்பாதியிரம் ரூபாய்.”

 ”நாப்பாதாயிரம் ரூபாய்யா? ஐய்யய்யோ... இந்த வீட்லயா?”மிரட்சியாக உதயச் சந்திரனைப் பார்த்தார்.

“அவ மூள வளர்ச்சி கம்மியான பொண்ணு.விளையாட்ட....! ஏன் உள்ளப் போய் எடுக்க முடியாதா?”

“சார்.. இது பேய் வீடு சார்.It is a haunted house. இந்த வீட்ல குடியிருந்த கீதா அப்பறம் வினோதினி அதுக்கு அப்புறம் லஷ்மி என்ற  பொண்ணுங்கெல்லாம் தூக்கு மாட்டிச் செத்துடிச்சுங்கோ. ராத்திரில பேய் நடமாட்டம் இருக்கு.அதற்கு பிறகு யாருமே
ரெண்ட்டுக்கு வரதில்லை.ஓனர் இந்தப் பக்கம் தல வச்சுப் படுக்கறது இல்ல. பயந்திட்டுப் பூட்டியே வச்சுட்டாரு”

”தூக்குப்போட்டுக்கிட்டாங்களா...? ஜனங்க கத வுடுவாங்க சார்...”

“ஏரியாக்காரங்கிறதனால கீதா,வினோதினி,டீச்சர் லஷ்மி மூணு பேர் சாவுக்கு சுடுகாடு வரை போனவன் சார்.கீதா என் தூரத்து உறவு சார்”

”இடிச்சுட்டு  ஒரு பூஜை பண்ணிட்டு வாஸ்து வச்சு திருப்பிக் கட்டலாமே?”

சுதாகர் ராவ் நமுட்டு சிரிப்போடு அவரைப் பார்த்தார்.

”ஒரு சின்ன  வயசு காண்ட்ராக்டர் தையரிமா டீல் பேசினாரு. அடுத்த வாரம் தூக்கு மாட்டி இறந்துட்டாரு.அதற்கு பிறகு ரெண்டு பேர் வந்து பிளாட் போடலாம்னு இறங்கினாங்க. ரெண்டு பேரும் ஆக்சிடெண்டல போயிட்டாங்க. ஒரு மாஜி எம் எல் ஏவும்  இத மாதிரியே போய்ட்டாரு.ஓனர் பயந்து அப்படியே வுட்டுட்டாரு.முனிசிபாலிடி ஆளுங்க குப்ப அள்ள திரும்பிக்கூட பார்க்கமாட்டாங்க”

”அதெல்லாம் தற்செயல்.இதுக்கும் அதுக்கும் கனெக்‌ஷன் இல்ல.ஜனங்க நெறைய ஸ்டோரி சொல்லுவாங்க..”

”நீஙக புதுசு.ஒண்ணும் தெரியல.உள்ளப் போன ஒரு பசுமாடு,ரெண்டு நாய் எல்லாம் செத்துடிச்சு.நீங்க செல்லெடுக்க உள்ள போய் ஏடாகூடமா எதுவாது ஆயிடப்போவுது.
போவாதீங்க”

”சார்..  செல்லோட வெல 40 ஆயிரம் ரூபாய்”

பேய்யைப் பார்ப்பதுப் போல் உதய சந்திரனைப் பார்த்து மிரண்டுவிட்டு “நைஸ் மீட்டிங்” என்று சொல்லிவிட்டு சுதாகர் ராவ் மறைந்தார்.

மணிபார்த்தார். மாலை 6.30. மெதுவாக இருட்ட ஆரம்பித்தது. சோலைமலை நிவாஸை நெருங்கினார்.நெருங்க நெருங்க இதயம் மெதுவாக படபடக்கஆரம்பித்துவேர்த்துக்கொட்டியது.
40 ஆயிரம் ரூபாய் செல்போன்! விட மனசில்லை.கேட்டில் கைவைத்த போது”ஜிவ்”வென்று உடம்பு முழுவதும் பரவி விறைத்துப்போனார்.

கீதா....வினோதினி.... டீச்சர் லஷ்மி...?

மீண்டும் படபடப்பு.வியர்வைக் குளியல்.போய் விடலாமா? ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிவிட்டது.தன் கையில் இருந்த இன்னோரு செல்(நோக்கியா) போனில் மணி பார்த்தார். 7.15.பயந்து பயந்து கேட்டை நெருங்க இவ்வளவு நேரம் ஆகிவிட்டதா?வீட்டில் கூட சொல்லவில்லையே?டார்ச் லைட்டாவது எடுத்து வந்திருக்கலாம்.

வியர்வையைத் துடைத்துக்கொண்டு ஆசுவாசமாகி ஒரு குண்டு தைரியத்துடன் கேட்டை தாண்டி எகிறி குதித்தார். முட்களும் புல் செடிகளும் காலில் நெருடியது.நாலாவது பெட்ரூமின் ஜன்னலை நெருங்கினார்.அதனுள்தான் செல்போன் விட்டெறிந்தாள் தன் பெண் பூர்ணிமா.கால்கள் படபடப்பில் ஒல்லிக்குச்சியாகி எலும்பு வலித்தது.

”வொய்ங்ங்”மேல் கதவைத் கஷ்டப்பட்டுத் திறந்தார்.நாய் இறந்த வாடை குடலைப் புடுங்கியது. முக்கை மூடியவாறுப் பார்த்தார்.  இருட்டு.தட்டு முட்டுச் சாமான்கள் நிழலாக தெரிந்தது. தன் செல்போனில் அந்த நம்பரைக் கூப்பிட்டார்.

”அனல் மேலே பனித்துளி...அலை பாயும் ஒரு கிளி..மரம் தேடும்.....”

உள்ளே டேபிள் மேல் சார்ஜ் வைக்கப்பட்டு செல் பளிச் பளிச் என்று ஒளிர்ந்தது.பாட்டு ஹாலில் எதிரொலித்து திகிலைக் கூட்டியது. ஒட்டிய உதடைப் பிரிக்க முடியாமல் படபடத்தார்.

ஐய்யோ...? இது என்  செல் டியூன் இல்லையே?நம்பரைப் பார்த்தார்.தன் நம்பர்தான்.ஏன் வேறு டியூன்?உள்ளங்கை ஈர பிசுபிசுப்புடன் நிறுத்திவிட்டு  மீண்டும் அடித்தார்.

 ”ஆயிரம்....! மலர்களே...! மலருங்கள்! அமுத கானம் பாடுங்கள்...நீங்களோ”

இதுவும் தன் செல் டியூன் அல்ல.

மீண்டும் செல்லில்தன் நம்பரை உறுதி செய்கையில்...உள்ளேகுரல் கேட்டது.

”ஏய்.... கீதா! ரெண்டாவது வாட்டி செல்லு ரிங்க் ஆகுது எடுடி..”

”என் கைல மருதாணி இட்டுட்டுருக்கேன்...லஷ்மிய எடுக்கச்சொல்லுடி வினோ...”

                                           முற்றும்

Thursday, May 27, 2010

ரிமோட்

நடிகை  ரேவதி
முதலிரவில் நுழைகையில்
புலி ஒன்று மான் குட்டியை கவ்வியபடிநோக்க
நன்னா பாடினேள் God bless you
கவுண்டமணி செந்திலைத் துரத்த
Breaking news ல் யாரோ ஒருவர் லஞ்சம் வாங்கி
ஆண்மை குறைவை சித்த வைத்தியர்
கார்த்தியும் தமன்னா பிம்பம்
தோன்றும்நொடியில்
”டிவி வால்யூம குறைங்க” என்று சொல்...
மல்லிகா பத்ரிநாத் எதையோ கிளறிக்கொண்டு..
ஈ...சாங்கு யாருக்கானும் டெடிகேட்
வசந்தபாலன் சார் சொன்னாரு
Sun Pictures Kalanithi Maran Pre..
பேரிரசைச்சல் பின்னணியில் புட்பால் ஒன்று
திருப்பதி பிரும்மோத்ச்வம் சாமி உலாவில்
மீண்டும் தலைப்பு செய்திகள்
3 ரோசஸ் டியை குடிக்க...
பரிசு பணத்த என்ன செய்வீங்க
புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி...

ஒரு ஊர்ல ஒரு புருசனும் பொண்டாட்டியும் இருந்திருக்காங்க.அந்த புருசனும் பொண்டாட்டியும் இருக்கயில அவ ஒரு ஆள சேர்த்துக்கரணும்னு நெனக்கிறா.அப்ப அவ ஒருத்தன சேத்துக்கிட்டா.ஊட்டுக்காரன் பத்து நாளைக்கு வெளிய போனாதான் அவன நாம வரவழைக்க முடியும்னு ஒரு ஐடியா போடறா.

“ஏ மச்சான் எனக்கு தலவலி வந்திருச்சு” அப்படின்னு சொல்லுவா.அவன் ”ஏன் தங்கப் பொண்டாட்டி! ஏன் செல்லப் பொண்டாட்டி! உனக்கு என்னம்மா செய்யுது” கேட்பான்.அதுக்கு அவ “எனக்கு தலவலி விடணுமுன்னா பல்லுக்கு மலிவான கல்லு கொண்டு வரணும்னு” செல்லமா அடம் புடிப்பா.

இவன் ஊரு உலகமெல்லாம் போயி, கல்லு கல்லா எடுத்து கடிச்சுப் பாக்கான்.இவனுக்கு பல்லுக்கு மலிவான கல்லு எங்க கிடைக்கும்? ஆனா ரொம்ப முனப்ப தேடிட்டு இருக்கான்.

அவன் பல்லுக்கு கல்லு எடுக்கப்போகயில இவ கூட்டிவந்தவனோட ”என் புருசன் பல்லுக்கு மலிவான கல்லுக்கு போயிருக்கான் அவன் அங்க சாவானோ நான் இங்க வாழ்வேனோ” கூத்தடிச்சிட்டு இருக்கா.பக்கத்துல மாமியாருகாரி இருக்கா.அவ “இவ  இங்க கூத்தடிச்சிட்டு இருக்கா.பயபுள்ள
பல்லுக்கு மலிவான கல்லு கொண்டு வரணும்னு பாக்கப் போயிருச்சு”ன்னு வருத்தப்படறா”

இவன் கல்லக் கல்ல  கடிச்சு எடுத்துக் கடிச்சு வாய் ரத்தமா இருக்கறத பாத்து “ என்னப்பா இப்படி கல்லக் கல்ல கடிக்கிறனு” கேட்டிருக்கான் ஒருத்தன்.”என் பொண்டாட்டி தலவலி விடணுமுன்னா பல்லுக்கு மலிவான கல்லு பாக்கச் சொன்னா.அதுதான் பாத்துகிட்டு இருக்கேன்னான்”  அடப்பாவிப்பயலே கடயில போயி உப்புக்கல்லு அள்ளி கடிச்சுப்பாரு அது நொறுக்குனு இருக்கும். அதுதான் பல்லுக்கு மலிவான கல்லு”ன்னு சொல்லிட்டு போயிடுறான்.

”அப்படியா இது தெரியாம ஊரு உலகமெல்லாம் சுத்திட்டேன்” சொல்லிட்டு உப்ப எடுத்துகிட்டு வீட்டுக்கு வரான். இவனப் பாத்துட்டு அவ கள்ள புருசன் (தெரியாம) ஒடிடறான்.”மச்சான் பல்லுக்கு மலிவான கல்லு கொண்டு வந்ததுக்கு அப்புறம், எனக்கு தலவலி உட்ருச்சு மச்சான். இப்ப நல்லா இருக்குது”ன்னு சொல்வா.

கல்லுக்கடிக்கிறதுல தப்பிச்சுகிட்டானே இவன எப்படி கொல்றதுன்னு யோசிச்சு மறுபடியும் மண்டயடின்னு படுத்துக்கிருவா. “என்னடா...ஏன் தங்கப் பொண்டாட்டி! ஏன் செல்லப் பொண்டாட்டி! உனக்கு என்னம்மா செய்யுது” கேட்டான். “ஏ மச்சான் எனக்கு யானப்பாலு குதிரப்பாலு எடுத்துட்டு வந்தா மண்டயடி விட்ரும்னா” இவன் அதுக்கு “ அப்டியா நான் எடுத்திட்டு வாரேன்.உனக்கு இல்லாததா” அப்படின்னுட்டு இவன் போவான்.

கெழடி  சொல்றா “என் புருசன் பல்லுக்கு மலிவான கல்லுக்கு போயிருக்கான் அவன் அங்க சாவானோ நான் இங்க வாழ்வேனோ” கூத்தடிச்சிட்டு இருக்கா... இப்பா ஆனப்பாலு குதிரப்பாலுன்னு எடுக்கப் போற...செத்துருவடா மகனே...”ங்கறா.அதுக்கு அவன் “ ஏ சிரிக்கி மகளே என் பொண்டாட்டிய நீ எப்படி இப்படி சொல்லுவ” அப்படிங்கறான். “ஏ மவனே..உன் பொண்டாடிய காட்டிக்கொடுக்கேண்டா” அப்படின்னு சொல்றா.

“நீ போயி ஒரு பெரிய சாக்கு கொண்டுவா”ன்னு சொல்றா.அவன் கொண்டுவரான்.ஆரானூரு கம்மா கூடனூரு கம்மா இருக்கு. அங்க அவன கூட்டிக்கிட்டு போயி, அந்த ஆரானூரு கம்மாயில வெள்ளரிக்கா வாங்கி கீழ காய போட்டு, அதுக்குமேல இவன உட்கார வச்சு, அதுக்கு மேல காயப் போட்டு,கண்ணுக்கு நேரா ரெண்டு ஓட்ட வச்சு சுத்தி காய வச்சு கட்டி வீட்டுக்கு மூட்டய தூக்கி செமந்துக்கிட்டு வாரா.

(இந்தக் கதையில் வரும் வெள்ளரிக்காய் விற்கும் கெழவிக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.)

இந்த கெழடிக்கிட்ட இவ(மருமவ) தெனமும் வெள்ளரிக்கா வாங்குவா.”வெள்ளரிக்கா.வெள்ளரிக்கா” ன்னு வித்திட்டு வந்திருக்கா.”ஏ மாமி வெள்ளரிக்கா கொடுங்கன்னு” அவ கேக்குறா.மூட்டய வச்சுட்டு “ஏம்மா மூட்டைய எல்லாம் துளைக்கக் கூடாது.மேலாப்புல பிஞ்சுக் காயா இருக்கு.அத எடுத்துக்கோ”ன்னு சொல்றா.அவ நல்ல பிஞ்சுக்காய எடுத்திட்டு உள்ள போறா”

கள்ள புருசன் கட்டுலுல படுத்திருக்கான். வெள்ளரிக்காய அவ ஒரு கடி  இவன் ஒரு கடி கடிச்சிட்டு “என் புருசன்  எனக்கு யானப்பாலு குதிரப்பாலு எடுத்துட்டு வர போயிருக்கான்...அவன் அங்க சாவானோ நான் இங்க வாழ்வேனோ” சொல்லி கடிச்சு கடிச்சு விளையாடிக்கிட்டு இருக்காக. அப்ப கொஞ்ச நேரம் பாத்துட்டு, இந்த கெழடி சொல்லிச்சாம்:

”ஏ ஆரணூரு வெள்ளரிக்கா கேட்டுக்கோ ரத்தினமே..ஏ கெழட்டுப்பொணமே...ஏ கெழட்டுப்பொணமே”ன்னு

மூட்டைய தட்டியிருக்கா.பிறகு சாக்க தட்டிவிட்டிருக்கா.இவன் அருவாளோட உள்ள இருந்தவன் எந்துச்சதும், வெட்ட ஓடியிருக்கான்.அவன் ஓடிட்டான்.இவள மட்டும் தலய வெட்டி அறுத்துக்கிட்டுப் போயி போலிசு டேசன்ல கொடுத்துட்டு,”இவ அப்படி செஞ்சா.நா இப்படி செஞ்சே”ன்னு சொல்லிப்புட்டு அவனும் அவன் அம்மாவும் நல்லா வாழுறாக.


நன்றி:”கிராமத்துக் கதைகள்”  முனைவர் ந.சந்திரன்.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட் .விலை ரூபாய் 60.00


படிக்க: நான் சொன்ன விக்னேஸ்வரி கதை

Tuesday, May 25, 2010

நான் சொன்ன விக்னேஸ்வரி கதை

வேற யாரும் இந்த கதய சொல்லக்கூடாது.நான் விக்னேஸ்வரிதான் இந்த கதய சொல்லுவேன்.எந்த விசயமும் விட்டுப்போவாது.இண்ட்ரெஸ்டிங்கா சொல்லுவேன்.

ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பா இருந்தாங்க.அந்த ஊர் ஏழு கெணறுன்னு வச்சுக்குவோம்.சிட்டிலதான் இருக்கு.நார்த் மெட்ராஸ்.வொர்க்கர்ஸ் ஏரியான்னு சொல்லுவாங்க.வள்ளலார் கூட அங்கதான் அடிக்கடி ரவுண்டிங் வந்தார்னு சொல்லுவாங்க.

இங்க பேசற லாங்குவேஜ்ஜூ மெட்ராஸ் லாங்குவேஜ்ஜூ.ஒரு தடவ “கத்தொந்துக்குது பாரு”ன்னு சித்திப் பொண்ணு ரம்யா கைல சொன்னப்போ திருதிருன்னு முழிச்சா.அவ கொயம்புத்தூர்காரி.”கதவு தொறந்திருக்குன்னு” விளக்கி சொன்னப்போ விழுந்து விழுந்து சிரிச்சா.

அவ ஊருக்கு கிளம்பசொல “நீ வரசொல....குமுதினியும் இட்டாந்துரு”ன்னு கலாச்சிட்டுப் போனா.

அவங்களுக்கு விக்னேஸ்வரின்னு ஒரு பொண்ணு அவ கூட பொறந்த ரெண்டு தங்கச்சி ரெண்டு அண்ணன்.சண்முகம் கவர்மெண்ட் காலேஜ்ல கிராசுவேசன் முடிச்சவ.(அது கம்ம நாயக்கருங்க மேனஜமெண்ட்.நாங்களும் கம்ம நாயக்கருங்க)

கிராசுவேசன்  முடிச்ச வுடனே  கிரேட் பேசன்ஸ் ரெடிமேட் கடைல சூப்பருவைசரா ஆயிட்டா.

அவ ஒரு நாளு யோசிச்சா.பொறக்கனும்,தவழனும்,நடக்கனும் அப்பால ஸ்கூலுக்குப் போவனும்.அதுக்குப்பிறவு காலேஜ் போவனும்.அது முடிஞ்சி வேல.அப்பால கல்யாணம்,
கொளந்தன்னு லைப்பு.டிபரெண்டா ஒண்ணும் இல்ல.

மறுபடியும் யோசிச்சா.ரொம்ப பெசலான யோசன.வாழப்போற 70 வருசத்த அஞ்சஞ்சு வருசமா பிரிச்சுக்கிட்டா.14 பார்ட்டா ஆயிடிச்சி. ஒவ்வொரு அஞ்சு வருசத்துக்கும் ஒரு ஆளா வாழனும்.

ஆனா இதுல பொறக்கனும்,தவழனும்,நடக்கனும் அப்பால ஸ்கூலுக்குப் போவனும்ன்ரது கெடையாது.டேரக்டா பிடிச்ச பெர்சனா மாறி வாழனும்.

முதல் அஞ்சு வருசம் Customer Relations Manager,  ICICI Bankங்கல வாழ்ந்தா.அவ பிரெண்டுகெல்லாம் லோன் கொடுத்தா.ஸ்டைல தப்பர்வேர்ல டிபன் எடுத்துட்டுப் போன.ரெண்டு செல்போனு.அடுத்த அஞ்சு வருஷம் நடிகை நயந்தாராவா ஜட்டி பிரா  டிரஸ் போட்டு  “பச்சக்குன்னு” ஸ்விம்மிங் பூல் தண்ணீர் தெறிக்க எழுந்து நடந்தா.கோவால ரூம் போட்டு சல்மான்கான
என்ஜாய் பண்ணினா.அஞ்சு வருசம் முடிஞ்சுப்போச்சு

அதுக்கு அடுத்த பார்டல  ஏகே பார்டிசெவன் கன்னு வாங்கி தமிழ்நாட்ல இருக்கிற பிராடுங்ககெல்லாத்தையும் சுட்டு தள்ளினா.ஐய்யோ அம்மான்னு எல்லாம் சவுண்டு வுட்டு செத்து போச்சு.எவ்வளவு பேரு. நாலர வருசம் ஆயி தமிழ்நாடு கிளினா ஆச்சு. ஒரு பார்டல பூக்காரியா இருந்து படிச்சு ஐஏஎஸ் எழுதி
முன்னேற்னா.சுனாமியப்போ எல்லாரையும் காப்பாத்தினா. குழந்தைகளா தத்து எடுத்துகிட்ட.

ஒரு அஞ்சு வருசம் டீச்சரா இருந்தா. அடுத்து திருநங்கையா இருந்தா.ஜெயலலிதா மேடம்.ஒரு பார்டல ரஞ்சிதாவுக்கு லாயார இருந்து பத்திரிக்கை டிவியெல்லாம் கிழிச்சு தொங்கவிட்டா.ஒரு தடவை ஏர்டெல் சூப்பர் சிங்கர்ல பர்ஸ்ட் வந்து விஜய் ஆண்டனி மியூசிக்ல பாடினா.

இப்படியே மொத்தம் 45(9*5) வருசம் ஓடிப்போச்சி. யோசனய நிறுத்தி்ன எடைல அவளுக்கு அதான் நம்ம விக்னேஸ்வரிக்கு ஒரு லவ் செட்டாயிடுச்சி.ஆனா வீட்ல ஒத்துகிடல.அந்த பையன் இருபத்திநாலு மன தெலுங்கு செட்டியாரு.இவங்க கம்ம நாயக்கருங்க.செட் ஆவாதுன்னுட்டாங்க.

ரெண்டுபேரும் வீட்ட விட்டு ஓடி மேரேஜ் பண்ணீட்டாங்க.அதே நார்த் மெட்ராஸ்ல கர்ணா முதலியார் தெருவுலதான் குடுத்தனம்.

அவ யோசிச்சதுல அஞ்சுபார்ட் இன்னும் பெண்டிங்கலதான் இருக்கு.

Sunday, May 23, 2010

என்னைக் கடந்து போகும் பிணங்கள்

 

நான் நுழையும் போதெல்லாம்
ஏதாவது ஒரு பிணம்
என்னைக் கடந்து விடுகிறது
லயோலா காலேஜ் சுரங்கப்பாதையில்

டொக்கு விழுந்த கிழட்டுப் பிணங்கள்
சொர்க்கமா நரகமா வாய் பிளந்து
மோட்டு வளையைப் பார்த்தபடி
வாய்க்கரிசியை விரயம் செய்தபடி

ரொம்ப அபூவர்மாக கடக்கும்
டீன் ஏஜ் பெண் பிணங்கள்

முக அழகைப் பார்ப்பதுண்டு
சைட் அடிக்க ஆசை
அடிப்பதில்லை
பயம்தான்  காரணம்

பித்ருக்களுக்கு ஏதாவது செய்தி உண்டா
கேட்கும்  சில பிணங்கள்

உலகமே தெரியாமல்
பூமஞ்சத்தில் தூங்கும் பிணங்கள்

போவோர் வருவோரை நாட்டாமைப் போல்
உட்கார்ந்தப்படியே பார்க்கும்
பிணங்கள்

சில பிணங்கள் மூக்குக் கண்ணாடியைக் கூட
அவிழ்ப்பதில்லை
அப்படியே கிளம்பிவிடுகிறது

செல்லில் பாட்டுக் கேட்டுக்கொண்டே
இப்படி பிணங்களை ரசிக்கையில்

ஒரு நாள் ஒரு மிடில் ஏஜட் பிணம்
 செம்மையாக முறைத்தது
முகம் சிவந்துவிட்டது

அன்றையிலிருந்து
ஹாரன் அடிப்பதில்லை
பூக்களைக் கூட மிதிக்காமல் ஓட்டுகிறேன்
பிணங்களைப் பார்த்தால்
stand at ease லிருந்து attentionக்கு
வந்துவிடுகிறேன்
புத்திப்போட்டுக்கொள்கிறேன்
”உச்சு”கொட்டுகிறேன்
ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
இதுதான் லாஸ்ட் என்கிறேன்

இனிமே யாருமே  சாகக் கூடாது

Saturday, May 22, 2010

சினிமா ஹம்மிங தேவதைகள்

தமிழ் சினிமாவில் ”ஹம்மிங்”(வாயசைப்பு இசை?) என்பது பாடலின் தவிர்க்க இயலாத ஒரு அங்கம் ஆகிவிட்டது.அதுவும் ஒரு இசைக்கருவியாய் பாடலுக்கு அழகைக்கூட்டுகிறது.படங்களின் பின்னணிக்கும் பல வித ஹம்மிங் கொடுக்கப்படுகிறது.
  

பழைய காலத்துப் பாடல்களில் ”ஹம்மிங்” கம்மி. ஆனால் ஆலாபணை (ராகத்தை மேல்/கிழ் இழுத்துப் பாடுதல்) என்பது ஹம்மிங் மாதிரிதான்.காரணம் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு இசைக்கப்பட்டது.

அடுத்து பாடும் இடத்திலேயே மைக் பிடித்து ரிகார்ட் செய்தார்கள்.பின்னணி இசைப்பவர்கள் பாடுபவர்கள் பின்னலேயே ஓட வேண்டும்.பின்னாளில்தான் தியேட்டர் ரிகார்டிங் வந்தது.

மெல்லிசை திரைக்கு வந்த பிறகு .ரவுண்டு கட்டி ஹம்மினார்கள்.எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் அதிகம் என்று சொல்லலாம்.

இது சோகம்/காதல்/வீரம்/மகிழ்ச்சி/விரகதாபம்/காமம்/மழலை போன்ற முக்கியமான உணர்ச்சிகளைப் பிரதிபலிக்க பெரும்பாலும் படங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பெணகள்/ஆண்கள் குழுக்களாக பாட்டில் தோன்றும்போது கோரஸ் கொடுக்கிறார்கள்.இதைத் தவிர்த்து பேய்/சுடுகாடு/நடுகாடு/நடுஇரவு/ என்று விதவித ஹம்மிங்.

தமிழ்ப் படங்களில் ”வெள்ளை உடை ஆவி ஹம்மிங்” ரொம்ப விசேஷமானது.(நெஞ்சம் மறப்பதில்லை,துணிவே துணை/யார் நீ,அதே கண்கள்)

பயங்கரத்திற்கும் (horror) (குரல்?) கொடுப்பதுண்டு.சிவப்பு ரோஜாக்கள் படத்தில் தோட்டத்தில் இருந்து ஒரு பிணத்தின் கை எழும்போது வரும் ஆணின் முரட்டு ஹம்மிங் பயமுறுத்தும்.

இந்த ஹம்மிங் 95% சதவீதம் பெண் குரல்கள்தான்.காரணம்? மனதை கொள்ளைக்கொள்ளும் உணர்ச்சி பொங்கி வழிவதுதான். காதல்/ஒரு வித உருக்கம்/சோகம் போன்ற பல ரசங்களும் தெறிக்கும்.தேவதைகளின் மொழி இந்த ஹம்மிங்.

நிறைய ஆங்கில படங்களிலும் இது உண்டு.அது ஒரு மாதிரி வெள்ளைக்காரி ஹம்மிங்.டைட்டானிக் படத்தில் கூட நம்ம மேஸ்ட்ரோவின் சாயலுடன்  பின்னணியில்   தேவதைகளின் ஹம்மிங்கை வீடியோவில் பார்க்க.காதல் உணர்வுகள்?

காட்சியில் வீசும் காற்றின் ஒலியே மனதில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.”Hello..Jack !". பிறகு 0.35 ஆரம்பிக்கும் soul strirring  ஹம்மிங்!



இளையராஜாவுக்கு முன் இருந்த இசை மேதைகள் ரொம்ப அழகாக இந்த ஹம்மிங்கைக் கொடுத்துள்ளார்கள்.எனக்குத் தெரிந்தவரை எல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங்கிற்கே அவதாரம் எடுத்தவர் என்று நினைக்கிறேன்.இவர் குரல் அப்படி வசீகரிக்கிறது.அடுத்து ஜானகி? இவர்களின் பழைய பாடல்களின் ஹம்மிங் மனதை வருடுகிறது.

பழைய பாடல்கள் நிறைய இருக்கிறது.சில வித்தியாசமானவற்றைப் பார்ப்போம்.உங்களுக்குப்பிடித்த பழைய/புது பாடல்கள் ஹம்மிங்கை பின்னூட்டத்தில் சொல்லலாம்.

சில பாடல்களில் கொஞ்சம்தான் ”ஹம்”மும்.பழைய பாடல்களில் இருக்கும் “பழசு” மற்றும் " வெகுளித்தனம் " மனதை கொள்ளையடிக்கிறது.


வழக்கமா இவரு ராஜாப் பத்தித்தானே எழுதுவாறு. இப்போ 1951க்கு போறாரு அப்படின்னு எண்ணம் வருது இல்ல. இவங்களை எல்லாம் கேட்டுவிட்டுதான் ராஜாவுக்குப் போனேங்க நானு.


கூவாத இன்ப குயில்  -(1951)- ஞானசெளந்தரி -எஸ்.வி.வெங்கடராமன்.எளிய  பி.பானுமதியின் ஹம்மிங். அடுத்து  நவீன இசையைக்  கேளுங்கள்.

மனமோகனாங்க அணங்கே   - (1951?)சகுந்தலை-எஸ்.வி.வெங்கடராமன்.முதல் 46 நொடிகள் இசைக்கோர்ப்பே ஒடுகிறது.1.54 ஹம்மிங்(ஆலாபனை)

அழைக்காதே (1957) மணாளனே மங்கையின் பாக்கியம் - ஆதி நாராயண ராவ்  அருமையான ஹிந்தோள ராக  குரூப் பெண்கள் ஹம்மிங்.

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே  -(1960) -அடுத்தவீட்டுப் பெண்-ஆதி நாராயண ராவ் - மேற்கத்திய சாயல் பாடல்.அருமையான கிடார் தீற்றல் ஆரம்பம்.P.B.ஸ்ரீனிவாஸின் மென்மையான ஹம்மிங்.அசத்தல்.

இதன் தாக்கத்தில்தான் ”ராஜராஜ சோழன் நான்” என்ற  பாடல் இளையராஜா  கம்போஸ் செய்ததாக சொல்லுவார்கள்.

 ஜி.ராமனாதன்
 










மாசிலா நிலவே  - (1957) - அம்பிகாபதி -ஜி.ராமனாதன் பானுமதியின் இனிமையான குரல்.நேரடித் தமிழ்ப்பாடல் என்பதால் குரலில் தெலுங்குவாடை இல்லை.அற்புதமான பாட்டு.முக்கியமாக இசைக்கருவிகளின் இரைச்சல் இல்லை.

இன்பம் பொங்கும் - (1959) -வீரபாண்டிய கட்டபொம்மன்-ஜி.ராமனாதன் பாட்டின் நடுவில் வரும் கண்ணியமான ஹம்மிங் அருமை.

நானே வருவேன்  -(1960) யார் நீ -எஸ்.வேதா-அட்டகாசமான ஆரம்ப இசை.வெள்ளை உடை”ஆவி” ஹம்மிங்.

அம்மம்மா... - (1966) - வல்லவன் ஒருவன் - எஸ்.வேதா
 எல்.ஆர்.ஈஸ்வரி குரல்/ஹம்மிங்  மனதை அள்ளுகிறது. ரொம்ப அபூர்வமான குரல்.அலட்சியமாகப் பாடுகிறார். Hats off L.R.Eswari.இவரைப் பற்றி ஒரு தனிப் பதிவே போட்டு இருக்கிறேன்.அற்புதமான இசை.

மேற்கத்திய இசைத் தாக்கம்(????) வேதாவுக்கு நிறைய  உண்டு.

எம் எஸ் வி
Kamal-Hassan-Honours-MS-Viswanathan kamal-stills-003.jpg

நாம ஒருவரை ஒருவர் - (1971)குமரிக்கோட்டம்-எம் எஸ் வி-  டிஎம்எஸ்-3.51ல் கொடுக்கும் ஹம்மிங் புதுசு/ஸ்டைல்.”நான் தொடர்ந்து போக” என்று டிஎம்எஸ் எடுக்கும் இடம் அருமை.அச்சு தமிழன் குரல்.இப்போது பாடும் இளைய தலைமுறை இந்தப் பாட்டை ஒரு நாளைக்கு பத்து தடவை கேட்க வேண்டும்.

 எல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங்கும் மயக்கும்.வித்தியாசமான கம்போசிங்.

கல்லெல்லாம மாணிக்க -(1962) ஆலயமணி -
விஸ்வநாதன்-ராமமூர்த்தி. இதில் முதலில் வரும் புல்லாங்குழல்/எல்.ஆர்.ஈஸ்வரியின ஹம்மிங் மனிதன் வாழ்நாளில் ஒரு நாளாவது கேட்க வேண்டும்.வசீகரம். லட்சணமான இசை.அருமையான பாடல் வரிகள்.


பவளக்கொடியிலே  -(1965) பணம் படைத்தவன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.
(இந்த ஹம்மிங்கும் மனிதன் வாழ்நாளில் ஒரு நாளாவது கேட்க வேண்டும்) 
Stunning!அருமையான பாடல் வரிகள்.

காற்றுக்கென்ன வேலி -(1977) அவர்கள்  - எம் எஸ் வி. Stunning  orchestration!
ஆரம்பமே ஹம்மிங்தான்.முதல் சரண இசை(interlude)  1.29 ல் நிறுத்தப்பட்டு 1.31ல் தொடரும் ஜதிகள் ஹம்மிங் பிறகு  அந்த ஹம்மிங்கில்  ஜானகி   தன் ஹம்மிங்கோடு சேருவது அருமை.
 
சிங்கார வேலனே தேவா (1964)  -- கொஞ்சும் சலங்கை -எஸ்.எம்.சுப்பையா நாயுடு.ஜானகியின் தேன் குரல்/தேன் குரலில் ஹம்மிங்.

கே.வி. மகாதேவன்









தட்டுத் தடுமாறி  (1962) - சாரதா -கே.வி. மகாதேவன்
 வித்தியாசமான விரக்தி ஹம்மிங்.சூப்பர்.கேட்கவேண்டியது.

வி.தக்க்ஷிணா மூர்த்தி



நந்தா என் நிலா- (1977)நந்தா என் நிலா - வி.தக்க்ஷிணா மூர்த்திஇந்தப் பாட்டு்க்கு நான் அடிமை.ஹம்மிங் கொஞ்சம்தான்.இதைப் பற்றி தனி பதிவே என் வலையில் இருக்கிறது.

ஜி.தேவராஜன்
deva


தேவ மைந்தன் போகின்றான்  -( 1971)-அன்னை வேளாங்கன்னி-ஜி.தேவராஜன்
ஏசுவின் கடைசிப் பயணம் பற்றியது.டிஎம்எஸ்ஸின் உருக்கமான பாட்டு.பின்னணி குரல்கள் பாட்டிற்கு உச்சக்கட்ட சோகத்தை சேர்கிறது.அட்டகாசம்.

ஸ்வாமி ஐயப்பன் படத்தில் “ஹரிவாரசனம்” பாட்டு இவருடையதுதான்.

"அந்தரங்கம்” என்ற கமல் நடித்த தமிழ்ப் படத்தில் கமலே இவர் இசையில் ”ஞாயிறு ஒளி மழையில்” என்ற பாட்டைப் பாடியுள்ளார்.


சங்கர் கணேஷ்( பேண்டில் இருப்பவர் சங்கர்)




மேகமே..மேகமே   -(1981)- பாலைவனச் சோலை -சங்கர் கணேஷ் வாணிஜெயராமனின் இனிமையான ஹம்மிங்.அருமையான ஹிந்துஸ்தானி மெட்டு. ஆனால் இது ஒரு ஹிந்தி கசல் பாடல்.

உன்னை நான் பார்த்தது - (1975) -பட்டிக்காட்டு ராஜா -சங்கர் கணேஷ் - வித்தியாசமான ”பப்பப...பப....ப்பா” மற்றும் ஹம்மிங்.அட்டகாசம்.

ஏ.எம்.ராஜா



காலையும் நீயே மாலையும் -(1960) -தேன் நிலவு -ஏ.எம்.ராஜா ஜானகியின் மயக்கும் ஹம்மிங். மயக்கும் ஹம்சாநந்தி ராக மெட்டு.ஏ.எம்.ராஜாவின் பெண்மை  பூசிய நளின குரல் சூப்பர்.


T.ராஜேந்தர்
 

 விழிகள் மேடையாம்  - (1981) கிளிஞ்சல்கள் -T.ராஜேந்தர் மெல்லிய (சிவரஞ்சனி ராகம்?) அழகான மெட்டு. 1981க்கு உரித்தான  மெல்லிசை ஹம்மிங்.இசையில் ராஜாவின் பாதிப்பு தெரியும்,இவருக்கு அப்போது நிறைய  ரசிகர்கள்.

எந்தன் பாடல்களில்-( 1984)- உறவைக் காத்த கிளி--T.ராஜேந்தர்-இது ஒரு கிளப் டான்ஸ் பாடல் ஹம்மிங்.

                                                   சந்திரபோஸ்



ரவிவர்மன் எழுதாத - (1988) - வசந்தி-சந்திரபோஸ்
இனிமையான பாட்டு. மென்மையான சிக்கல் இல்லாத எதிர்பார்த்தபடி வரும் ஹம்மிங்.இனிமைதான் பாட்டின் ஆயுளை கூட்டும் என்பதை தீவரமாக கடைப்பிடிப்பவர் என்பது இவர் பாடல்களில் தெரியும்.

கம்போசிங்குகளில் நிறைய அமெச்சூர் நெடி.

  தோடி ராகம் பாடவா -(1991)

மாநகர காவல் -சந்திரபோஸ்- ராஜாவின் தாக்கம் பாட்டில்.சித்ரா/யேசுதாஸ் இனிமையான குரலில் அருமையான மெலடி.-3.00 -2.50ல் ஹம்மிங் பாட்டை அருமையாக அழகுப்படுத்துகிறது.

சந்தோஷம் காணாத  - (1988) - வசந்தி-சந்திரபோஸ்
வழக்கமான ஹம்மிங் என்றாலும் பாடல் அருமை.யேசுதாஸ் குரலில் மென்மையான மெலடி.

இளமை நாட்டிய சாலை - (1974) கல்யாணமாம் கல்யாணம் -விஜய் பாஸ்கர்.முதலில் ஜானகியின் உயிர்துடிப்பான ஹம்மிங் அசத்தல்.என்னால மறக்க முடியாத பாடல்.
     
ரவி வர்மாகே அந்தானி  - (தெலுங்கு) - ராமுடே ராவணுடைதி-இசை ஜி.கே.வெங்கடேஷ்.மீண்டும் ஜானகியின் அற்புதமான ஹம்மிங்.இளையராஜா ஜி.கே.வெங்கடேஷின் “உதவியாளராக” இருந்தவர்.

ஜி.கே.வெங்கடேஷ்               


















ராஜா       ஆர்.டி.பர்மன்     ஜி.கே.வெங்கடேஷ்
Prathidwani-Sholay-Avar Enakke Sontham












வராக நதிக்கரை ஓரம் (1999)-  சங்கமம் -ரஹ்மான்
அருமையான ஹிந்துஸ்தானி கம்போசிங்.அட்டகாசமான ஹம்மிங்.சங்கர் மகாதேவன் பின்னிவிட்டார்.அபார தாளக்கட்டு.

                         ----------------------------------

விரைவில் ..........................இளையராஜா- Master of  heavenly hummings! ஒரு தனிப் பதிவு.



சுட்டியைக் கிளிக் செய்து  ஒரு சாம்பிள் கேளுங்கள்!!
லிங்க் வந்தவுடன் Annakkili(Annakkili) கிளிக் செய்யவும்.


செம்மொழி மாநாடு-தீம் சாங்க்- ஏ.ஆர்.ரஹ்மான்


செம்மொழி மாநாடு மைய நோக்கு (தீம் சாங்க்) பாட்டு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு சவால் சுவாசிக்க புது காற்று.40% வெற்றிப்பெற்று விட்டார் என்றுசொல்லலாம்.
இன்னும் கூட ஹோம் வொர்க் செய்திருந்தால் 100/100 வாங்கி இருக்கலாம்.


தமிழ்த்தாய் வாழ்த்தான ”நீராருங் கடலுடுத்த நில மடந்தை”போல ரொம்பவும் எளிதாக  இரண்டு பேரை வைத்துப் (டிஎம்எஸ்-சுசிலா?) பாடிய காலம் வேறு. இந்த காலம் வேறு. இந்தப் பாட்டில்  30 பேர் பாடி உள்ளதாக(நன்றி:” தி ஹிண்டு” ) சொல்கிறது.

உண்மையாக சவால்தான்.”மொளி” எங்கும் வந்துவிடக்கூடாது.திறமையாக கையாண்டிருக்கிறார்.ஆனால் சில இடங்களில் “”மொளி”  வருகிறது.

”நீராருங் கடலுடுத்த” பாட்டின் ராகம் மோகனம். ரஹ்மானும் இதேயே “பிறப்பொக்கும்” பாட்டிலும் பயன்படுத்தி உள்ளார் என்று நினைக்கிறேன்.(யூகம்தான்.தவறு இருந்தால் திருத்தலாம்). வேறு ஒரு ராகமும் வருகிறது.

கலைஞர்  தொலைக்காட்சியின் signature musicக்கும் மோகனம்?

மோகனம்  உலகெங்கிலும் உள்ள ராகம் என்று சொல்லுவார்கள்.எளிதாக மனதில் படியும்.catchy tune?மோகனமானது.

கலைஞர்  எழுதிய வரிகள் என்ற டென்ஷன் +உச்சரிப்பு+கருவி சத்தம் மிகாமை+மனதில் படிய எளிய மெட்டு+வீரத்தொனி+தமிழ் நாட்டின் மணம்+தமிழ் நாட்டு இசைக் கருவிகள்+30 பேர் சங்கிலித் தொடர் குரல்+ரஹ்மான் டச் என்று வித விதமான டென்ஷன் ரஹ்மானுக்கு.

பாடல் 5.50 நிமிடம் ஓடுகிறது.முதலில் டி.எம்.செளந்திரராஜன் “பிறப்பொக்கும்”எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர்“ தன் குரலில் ஆரம்பிக்க ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என ரஹ்மான் தொடர்கிறார்(கத்துகிறார்)
.பின்னார் கதம்பமாக குரல்கள் தொடுத்துக்கொண்டேப் போய்(நடு நடுவே இசைக் கதம்பம் வேறு)கத்தல் (கதறல்?) (ரஹ்மான டச்?)போல் கத்திக்கொண்டே முடிகிறது.
 
பல்லவி முடிந்து 0.42 ல் அற்புதமான இனிமையான  மெலிதான இசை பின்னணியில் “தீதும் நன்றும் பிறர்” என்று பாடும் ஹரிஹரன் குரல் அருமை.தொடரும் இசையும் குரல்களும் அருமை.

ஸ்ரீனிவாஸ்,பி.சுசிலா,சின்மயி,டி.எல்.மகராஜன்,ரஹ்மான், விஜய் யேசுதாஸ் என குரல்களை அடையாளம் காண முடிகிறது.2.55 - 3.29 வரை ரஹமான் ”செம்மொழியாம” என்று மேல் சுரத்தில் பாட பின்னணியில் பெண்களின் (ஜெயஸ்ரீ,செளமியா,நித்யஸ்ரீ)மோகன ஹம்மிங் அதைத் தொடரும் தவில்/நாகஸ்வரம் .இன்னும் கூட நீட்டி இருக்கலாம்.நடுவே drum pad  தட்டல் எதற்கு?

3.39 - 4.00 வரை தமிழ் தெரியாத மேல் நாட்டவர் பாடுவது போல் குரல்கள்.படு ஹிம்சை.மேற்கத்திய இசையை வித்தியாசமாகக் கொடுக்கலாமே?கடித்துக்கொதற வேண்டுமா?

பிறகு 4.11 -ல் ஒரு ஆலாபனையுடன் ஆரம்பித்து “அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து” என்று ஒருவர் ஆரம்பித்து பாடுகிறார்.அட்டகாசம்! யார் இவர்?(டி.எம்.கிருஷ்ணா?)இதுவரை கேட்டறியாத வித்தியாசமான குரல்.சூப்பர் ரஹ்மான்! பிறகு 4.41  வரை அருமையான பின்னணி இசை குரல்கள்.

இவ்வளவு நன்றாக வரும் பாட்டு  பல்டி அடித்து  crash  landed at 4.41.

காரணம்......4.41முதல் ஒரு அபஸ்வர பெண்(கள்) குரல்மேற்கத்திய சாயலில்  பாட்டைப் பாடாய் படுத்தி செம்மொழியைக் குத்திக்கொல்கிறது.அந்த பெண் குரல் ஹம்மிங்கை(இம்சையை) ஏன் இடையே கொண்டு வந்தார் ரஹ்மான்.

 இது ஸ்ருதி ஹாசன்? சுத்தமாக் சுருதியே இல்லை.அடம் பிடித்து விழுந்து விழுந்து கத்துகிறார்.

பாட்டின் இடையே வரும் ஹை பிட்ச் கத்தல்களையும் குறைத்திருக்கலாம்.

ஆரம்பத்திலும் ஒரு பெண் சுருதியே  இல்லாமல் பாடுகிறார்.

அந்த 30 பேர்.(நன்றி: The Hindu)
The singers include A.R. Rahman, Yuvan Shankar Raja, T.M. Soundararajan, P. Suseela, Aruna Sairam, Bombay Jayashri Ramnath, Karthik, Harini, Chinmayi, Hariharan, Swetha Mohan, G.V. Prakash, Benny Dayal, Srinivas, Vijay Yesudas, T.L. Maharajan, Nithyasree Mahadevan, S. Sowyma, M.Y Abdul Gani, M. Khaja Mohideen, S. Sabu Mohideen, P.L. Krishnan, Naresh Ayyar, Gunasekar, Sruti Hassan, Chinna Ponnu, Suseela Raman, Blaze, Kash and Rehana.

இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய:((நன்றி: The Hindu)

செம்மொழியாம தமிழ் மொழியாம்


 பாட்டின் வரிகள்:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர்
 யாதும் ஊரே  யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென

உரைத்து வாழ்ந்தோம் -
உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
  
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும் அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான  தமிழ் மொழியாம்
 செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்

 கம்பநாட்டாழ்வாரும் கவியரசி அவ்வவை நல்லாளும்
 எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்திற்க்கும்
வித்தாக விளங்கும் மொழி

செம்மொழியான  தமிழ் மொழியாம்
 செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம்மொழி நம் மொழி – அதுவே
செம்மொழி – செம்மொழி – நம் தமிழ் மொழியாம்
 தமிழ்மொழியாம

செம்மொழியான  தமிழ் மொழியாம்
 செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்

வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே…

Thursday, May 20, 2010

தூரதர்ஷன் அன்றும்.... இன்றும்


தூரதர்ஷன் ......................அன்று



தூரதர்ஷன் ......................இன்று




கருப்பு வெள்ளையில் இருக்கும் இடம் ஏதாவது சபா மேடை?

Friday, May 14, 2010

”பூக்கள் ”- எவ்வளவு சினிமா டைட்டில்கள்

எனது சினிமா நண்பர் (இப்போது சினிமாவில் இல்லை)ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன்.அவர் 1980 களில்  ஒரு ”பூ” சம்பந்தப்பட்ட படத்தில் வேலை செய்தவர்.

அவர் என்னுடைய பேச்சு தமிழில் வந்த படங்களைப் பற்றிய பதிவைப் பேச்சுத் தமிழில் சினிமா டைட்டில்கள்  பற்றி உரையாடும்போது அவர் “பூ”வை டைட்டிலாக வைத்து வெளி வந்த (வராத?) படங்களின் லிஸ்ட் தன்னிடம் இருப்பதாக சொல்லி அனுப்பினார்.

லிஸ்டைப் பார்த்தேன்.பூக்கள் பெயரை வைத்து எவ்வளவுசினிமா டைட்டில்கள்! மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன்.இதெல்லாம் 1975-2004க்குள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.”பூ” 2009 ?கிட்ட தட்ட 99 படங்கள்.
 
தாதா சாகேப் பால்கே காலத்திலிருந்து கணக்கு எடுத்தால் சுமார் 135 போகும்?

பழைய படம்? நான்குதான் ஞாபகம் வருகிறது. பூவும் பொட்டும். இரு மலர்கள்,பூஜைக்கு வந்த மலர்,பாசமலர்

என் நினைவை விட்டு போன படங்களின் (பார்த்த/பார்க்காத)பெயரைப் பார்த்தப்போது அதன் பின்னால் பழைய ஞாபகங்கள். தியேட்டரின் பெயர்கள்.சீட் வரிசை.யாருடன் பார்த்தேன்.படத்தின் போஸ்டர்.கொஞ்சம் பூ மணம்.கொஞ்சம் தூர்தர்ஷனின் ஒலியும் ஒளியும்.தியேட்டர் வரைப் போய் திரும்பி வந்தது.



எவ்வளவு படம் நான்  பார்த்திருக்கிறேன் என்று ”டிக்”(சிவப்பு) அடித்தேன்.

இதில் ”அடுக்குமல்லி” முதல் இருபது நிமிடத்தில் ஓடி வந்துவிட்டேன்.”சிவப்பு ரோஜாக்கள்”படத்தை எவ்வளவு முறைப் பார்த்தேன்?

அதை வேறு விதமாக தொகுத்துக்கொடுக்கச் சொன்னேன்.கொடுத்தார்.

 ஏன் ”பூ”வை வைத்து தலைப்பு. சில உளவியல் காரணங்கள்:

1.கவித்துவம் 2.அப்போதைய டிரெண்ட்3.பெண்களை கவருவது 4.காதலுக்கு நெருங்கிய தொடர்பு 4.ஹிட் ஆன பாடலின் வரிகள் 5.ரோஜாவின் மேல் ஒரு கவர்ச்சி 6.கிராமத்து டிரெண்ட்7.செண்டிமெண்ட்8.அப்போது வரும் பத்திரிக்கை கதைகளுக்கு ஏற்ற மாதிரி9.ஆண்களுக்கு ஏற்படும் கவர்ச்சி(பக்கத்து வீட்டு ரோசா)10.எல்லோரையும் தியேட்டருக்கு இழுப்பது 10.டீசெண்ட் படம் என்று உணர்த்துவது11.பாரதி ராஜா (வெள்ளை உடை+ பூ காட்சிகள்)

இதில் எவ்வளவு பூ  மணத்தது ? வாடியது?கருகியது?சில பூக்கள் பூஜை முடிந்த அன்றே வாடி இருக்கும.

பழைய டைட்டிலை வைத்து புது படங்கள் வருகிறது. ஆனால் ஆச்சரியமானது ஒரு  பழைய ”பூ” படம் கூட இப்போது  உபயோகப்படுத்தப்படவில்லை.

நண்பருக்கு நன்றி.  வலையில் இதை “சரி” பார்க்க முடியுமா? எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்.

 ரோஜா (18)
 ரோஜா
 பாலைவன ரோஜாக்கள்
 ஈரமான ரோஜாவே
ரோஜாவை கிள்ளாதே
சிவப்பு ரோஜாக்கள்
த்ரீ ரோஸஸ்
ரோஜா கூட்டம்
காஷ்மீர் ரோஜாக்கள்
காதல் ரோஜாவே
ரோஜாவனம்
ரோஜாவின் ராஜா
இளமை ரோஜாக்கள்
இரட்டை ரோஜா
உனக்காக ஒரு ரோஜா
வெள்ளை ரோஜா
முள் இல்லாத ரோஜா(1983)
பக்கத்து வீட்டு ரோஜா
புதுசா பூத்த ரோசா
 ____________________________

பூ(36)

பூ

பூ பூவா பூத்திருக்கு
பூவே இளம் பூவே
பூவிழி வாசலிலே
பூ மழை பொழியுது
பூந்தோட்ட காவல்காரன்
பூ பூத்த நந்தவனம்
பூவும் புயலும்
பூவிழி ராஜா
செந்தூரப் பூவே
புன்னகைப் பூவே
நெஞ்சில் ஆடும் பூ ஒன்று
சிகப்பு நிறத்தில் சின்ன பூ
மூக்குத்தி பூமேலே
நான் வளர்த்த பூவே
தை மாசம் பூ வாசம்
பூவே பெண் பூவே
பூவெல்லாம் உன் வாசம்
ஆவாரம்பூ
பூ ஒன்று புயலானது
கீதா ஒரு செண்பகப் பூ
பூவுக்குள் பூகம்பம்
பூ விலங்கு
பூக்கள் விடும் தூது
கரிசல் காட்டுப் பூவே
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
சிகப்பு நிறத்தில் சின்ன பூ
பூவாசம்
பூமனமே வா
பூப்பறிக்க வருகிறோம்
பூச்சூட வா
பூவெல்லாம் கேட்டுப் பார்
கரையெல்லாம் செண்பகப்பூ(1981)
மாப்பிள்ளை மனசு பூப்போலே
பூவே உனக்காக
சின்னப் பூவே மெல்ல பேசு
பூவே பூச்சூடவா
 ____________________________

தாமரை(3)
இதய தாமரை
ஆகாயத் தாமரை
தாமரை
________________

மலர்(17)
சிறையில் பூத்த சின்ன மலர்
வசந்த மலர்கள்
பாச மலர்கள்
மலர்களே மலருங்கள்(1980)
நான் சூட்டிய மலர்
ஒரு மலரின் பயணம்
மலரே குறிஞ்சி மலரே
இதய மலர் (1976)
முள்ளும் மலரும்
நீல மலர்கள்(1979)
அனிச்ச மலர்(1981)
அன்புள்ள மலரே
மதுமலர்(1981)
நெருப்பிலே பூத்த மலர்(1981)
பனிமலர்(1981)
மலர்கள் நனைகின்றன
மலர்களிலே அவள் மல்லிகை

____________________________________

மல்லி(5)
மல்லிகை மோகினி
சிவப்பு மல்லி
கற்பூர முல்லை
ஜாதி மல்லி
அடுக்கு மல்லி

 ____________________________
பன்னீர் புஷ்பங்கள்
 ____________________________
செம்பருத்தி
 ____________________________
அந்திமந்தாரை
 ____________________________

பூக்கள்(15)
கடல் பூக்கள்
நிறம் மாறாத பூக்கள்
உதிரி பூக்கள்
டிசம்பர் பூக்கள்
சித்திரை பூக்கள்
மெர்க்குரிப் பூக்கள்
இரும்பு பூக்கள்
வண்ண வண்ண பூக்கள்
ஆகாய பூக்கள்
கண்ணீர் பூக்கள்(1981)
அர்ச்சனைப் பூக்கள்(1982)
பூக்களைப் பறிக்காதீர்கள்
கள்வடியும் பூக்கள்
பூக்கள் விடும் தூது
வைகறை பூக்கள்

கடைசியா “காதுல பூ”(1984).

Thursday, May 13, 2010

வாரணம் ஆயிரம் போட்ட மாலை


அந்த ஐந்து நட்சித்திர ஓட்டலில் நுழைந்து தன் வண்டியை மிகவும் சந்தோஷத்துடன்  பார்க் செய்தான் குமார். அப்போதுதான் பக்கவாட்டில் அந்த யானையைப் பார்த்தான்.பார்க்க சகிக்கவில்லை.சே...!


யானைக்கு மக்கிப் போன பித்தளை முக அங்கியை புளி போட்டுத் தேய்த்து கழுவி அதன் முகத்தில் மாட்டியிருந்தான் மாவுத்தன்.சாயம் போன சிவப்பு கம்பளமா அல்லது சாதாரண ஷாமியான துணியா புரியவில்லை.முதுகில் ஏற்றலும் குறைச்சலுமாக தொங்கிக்கொண்டிருந்தது.

கழுத்தில் துருபிடித்த சங்கிலியால் இணைத்த மணி.கண்ணில் வழக்கத்திற்கு மீறிய புளிச்சை.தந்தமும் பழுப்பாகி மொக்கை.உடம்பில் நான்கு இடங்களில் புண் ஏற்பட்டு சிழ் கோர்ப்பு.அதை க்கள் மொய்த்துக் கொண்டிருந்தது.உடம்பு தொள தொளத்துத் தொங்கிப்போயிருந்தது
வழக்கமான லத்தி நாற்றம்.

பார்க்க பார்க்க அலுக்காத வஸ்துவில் ஒன்றா இது?

யானை ஐடியா உதித்தபொழுது சத்தியமாக இந்த மாதிரி யானையை கற்பனை செய்யவில்லை குமார்.அட்வான்ஸ் கொடுக்க ரூபாய் நோட்டுக்களை ண்ணும்போது கூட திரிச்சூர் பூரம் விழாவின் யானையின் அணிவகுப்பு தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு படத்தில் “நடராஜா....நடராஜா...என்ற பாட்டில் சைடு கண்ணால் பார்த்துக்கொண்டு துள்ளிக்கொண்டு வரும்.

இந்த யானைக்கு சுத்தமாக எந்த லட்சணமும் இல்லையே?

ஏமாற்றம் தாங்க முடியவில்லை.பெண்டாட்டி அமைவது போல யானை அமைவதற்கு கூட அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.மானம் போய்விடும் கம்பெனியில்.எவ்வளவு பெரிய எம்.என்.சி.

அகில உலக தலைமை அதிகாரி  ஸ்டாலின் வால்கேர் முதன் முறையாக இந்தியாவிற்கு அதுவும் சென்னைக்கு வருகிறார். ஸ்டாலின் வால்கேர் சென்னை வரவேற்பை மறக்கக் கூடாது. தமிழ்நாடு பண்பாடுப்படி மாலை போட்டு சிறப்பு வரவேற்பு கொடுக்கத்தான் இந்த யானை. எவ்வளவு தடவை அந்த காட்சியை ஒத்திகை பார்த்திருக்கிறான். சே...

இந்த மாலை போட்டு வரவேற்கும்  ஐடியா ரொம்ப ரகசியமாக தீட்டப்பட்டது. அவர் வரும் வரை யானையை ஒளித்து வைத்து இருக்க வேண்டும்.கண்டிப்பாக பிளிறக்கூடாது.லத்திப் போட கூடாது.திடீரென்று முன் நிறுத்தி ஆள் உயர மாலையை போட்டுப் புல்லரிக்க வைக்க வேண்டும் இதுதான் மில்லியன் டாலர் ஐடியா.

இந்த மில்லியன் டாலர் ஐடியா இப்பொழுது பைசா ப்ரயோஜனமில்லாமல் போய்விடுமாமதம் பிடிததது குமாருக்கு.

மாவுத்தன் அருகில் சென்றான்.

"என்னய்யா யானை இது...எங்க CEOவுக்கு மால போட்டு ஆசிர்வாதம் பண்ணும்போது நுரைத் தள்ளி,எச்சில் பட்டு,யானைக்கால் வந்துடும் போல இருக்கு”

"இன்ன சார் இப்படி பேசற.லாஸ்ட் டைமு பிரிட்டிஷ் துரைசானி வந்தப்போ இதுதான் ஆசிர்வாதம் செஞ்சுது. துரைசானி நம்ம தமிழ்நாடு சிஸ்டெம் தெரிஞ்சு அது கைல நூறு டாலர் பணம் வச்சாங்க.கல்யாணி எவ்வளவு பேரை தொட்டு ஆசிர்வாதம் பண்ணியிருக்கு தெரியுமா. அவங்கெல்லாம் ஓகோன்னு இருக்காங்க.

"பாரதியார் போய்ட்டாரே "சொன்னான்.மாவுத்தனுக்கு புரியவில்லை.

"வர போற தொர இது கைல டாலர் வப்பார... வச்சார்ன டபுள் ஆசிர்வாதம் பண்ணும்”

"வைப்பாறு... .புடிச்சுப்போச்சுன்ன அமெரிக்கா வெள்ளை மாளிகைக்கே அழைச்சிட்டுப்போய் அங்க செக்யுரிட்டிய போட்டிருவரு. அங்க இருக்கிற் வெள்ள யானையோட டூயட் பாடலாம்.

சார்..இன்ன பேசற சார்..!யானையை தடவிக் குடுத்தான்.
யானை எதுவும் புரியாமல் இரண்டு பேரையும் பார்த்துக்கொண்டிருந்தது.

அவருக்கு கொடுத்து வைக்கவில்லை.குமார் நொந்துக்கொண்டே போனான்.

வாட்சைப் பார்த்தான்.ஐயோ! டைம் ஆகி விட்டது.வாசலுக்கு ஓடினான். தன்னுடைய இரண்டு ஆபீஸ்காரர்களை யானையின் பக்கத்தில் இருக்க செய்தான்.ரிசப்ஷனில் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஸ்டாலின் வால்கேர் கொடுத்து வைத்தவர்தான்.ஆள் உயர மாலை மணக்க மணக்க கம்பிரமாக ஒரு ஓரம் இருந்தது.ஆனால் யானை?

இருபது நிமிடங்களுக்கு பிறகு ஸ்டாலின் வால்கேர் பள பள காரில் வர அவர் பின்னால் த்து கார்கள்.எல்லோரும் ஸ்டாலின் வால்கேரை புடை சுழ்ந்துக்கொண்டு ரிச்ப்ஷனுக்குள் நுழைந்தார்கள். 

ஸ்டாலின் வால்கேர் வாட்ட சாட்டமாக நல்ல உயரத்துடன் இருந்தார். மாலையைப் போட்டால் மாப்பிள்ளைதான். 

கை காட்டினேன் யானையை கொண்டு வரச் சொல்லி. ரமேஷ் கலவரத்துடன் ஓடி வந்து காதில் சொன்னான்.அதிர்ச்சியானேன். ஓடி போய் பார்த்தேன்.நிஜம்தான். 

"யானை இறந்து விட்டது"

மற்ற அதிகாரிகளிடம் சொன்னேன்.எல்லோரும் அரண்டு போய் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து விழித்துக்கொண்டு இருந்தார்கள்.என்ன செய்வது?

மாலைப் போட்டு ஆசிர்வதிக்க வேண்டுமே?

“What happened….? Anything wrong...?” ஸ்டாலின் வால்கேர் .

எல்லா விஷயத்தையும் சொன்னேன்.யானை இருந்த இடத்திற்கு வந்தார்.முகத்தில் சொல்ல முடியாத சோகம்.

வாங்கி வைத்திருந்த மாலையை யானைக்குப் போட்டார்.


                     
                முற்றும்