Sunday, November 30, 2008

பதிவர்களே ...எல்லோரும் ஜோரா ஒரு வாட்டி கைத்தட்டுங்க

                   சிறுகதை

 எல்லோரும் ஜோரா ஒரு வாட்டி கைத்தட்டுங்க......

 

முதல் உலக யுத்தம், இரண்டாம் உலக யுத்தம் இதெல்லாம் உண்மையாக நடந்ததாக ஆதாரங்கள் உள்ளது. CNN/BBCயிலும் நேரலையாக சில நாடுகளின் சண்டைகளை பார்த்துள்ளோம்.அடுத்து நம்ம ஊர் அரசியல்வாதிகள், மாமியார்-மருமகள்  சண்டை மற்றும் WWF வரை பார்த்தாயிற்று. லேட்டஸ்டாக சட்டக்கல்லூரி சண்டை நேரலையாக....

ஆனால் இந்த பாம்பு-கீரிப்பிள்ளை சண்டையை யாரும் பார்த்ததாக தெரியவில்லை. பார்த்ததாக ஏதாவது வரலாற்று ஆவணங்கள் இருக்கிறதா? டிஸ்கவரி சானலில் கூட எலியின் பிரசவம் காட்டுகிறார்கள் இதை காட்டியதாக தெரியவில்லை.

செப்புடு வித்தைக்காரன் சொல்லுவான் ஆனால் விட மாட்டான் என்ற கர்ண பரம்பரையாக வந்த “பொது அறிவுஎல்லோருக்கும் இருக்கிறது.

இன்னிக்கும் சொல்லியிருப்பதால் எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.அந்த பாடம் செய்த பொம்மையில் பாம்பு கீரிப்பிள்ளையின் வயிற்றை  மூன்று முறுக்கு முறுக்கிக்கொண்டு கீரியின் முகத்தை உக்கிரமாக முறைக்க, பதிலுக்கு கீரியும் Rabies நாய் முக பாவத்துடன் பாம்பை முறைத்துக்கொண்டிருந்தது. நிஜமான கீரி, பாம்பு மூடி வைத்திருந்தான். உள்ளே இருக்குமா?

அங்கு  நின்ற பார்வையாளர் வைத்தி யோசிக்க ஆரம்பித்தார்.

இந்த மாதிரி பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை, லேகியம் விற்பது,மோடி வித்தைகள்/செக்ஸ் புக் சேல்ஸ்  எல்லாமே ஒரு மலையாள பிட் படம் ஒடுகிற, ஒரு ஈரத்தில் மக்கிப் போய் மூத்திரம் நாற்றம் அடிக்கிற தியேட்டர் எதிரேதான் நடப்பாதாக ஆணித்தரமாக நம்பினார். 

சண்டை விட்டதாக  ஒரு பேச்சுக்கு  வைத்துக்கொள்வோம்.இந்த மாதிரி கலை நயமான போஸில் சண்டை போடுமா? WWF மாதிரி ஒரு சும்மாவா?.அந்த வட்டத்திற்க்குள் உள்ளேதான் நின்று சண்டை போடுமா? எது ஜெயிக்கும்? மக்கள் யார் கட்சி?

கீரிபிள்ளை கட்சிதான் என்று நம்பினார்.. பாம்பு என்றால் படையும் நடுங்குமே?ஆனால்  பாம்பின் மேல் ஒரு செலக்டிவ் லைக்கிங்தான் மக்களுக்கு. நாகபஞ்சமி,நாகதோஷம், பாம்பு பஞ்சாங்கம்,ராகு,கேது என்று கடவுள் சம்பந்தப்பட்டிருந்து, ஒரு அந்தஸ்து இருந்தாலும், நடுங்கித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

வைத்தி ஊரில் நடந்த சம்பவம்.

பக்தியுடன் பக்தர்கள் பாம்பு புற்றிற்க்கு பல வருடம் பால் வார்க, அது ஒரு நாள் தன் பக்தர்களை பார்த்து அருள் பாலிக்க கம்பூயுட்டர் கர்சர் மாதிரி நாக்கைத் துறுத்திக் கொண்டு ஆவலுடன்  தலை நீட்ட, “ஐய்யோ! நாகராஜா என்று அலறியடித்துக்கொண்டு பால் சொம்பை போட்டுவிட்டு அலறி ஒடினார்கள்.

“நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே பாடி அவர்ஆசிர்வாதம் வாங்க ஆள் இல்லை.

“அல்லாரும்  ஜோரா ஒரு தடவ கைத்தட்டுங்கசெப்பிடு வித்தைக்காரன் சத்தம் போட்டான். கூட்டம் கைத்தட்டியது.

பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை விடப்போகிறானா? ஆர்வமுடன் வைத்தி  கூட்டத்தை விலக்கி முன்  வந்தார். இன்று இந்த காணக்கிடைக்காத காட்சியை பார்த்து விட வேண்டும். கை சொடுக்கெல்லாம் எடுத்து சுறுசுறுப்பானார்.

கிட்ட தட்ட ஒரு மணி நேரம்  தன்னுடைய லேகிய மருந்து மற்றும் வேர்களின் அருமை பெருமைகளைப் பற்றிபேசினான். ஏதோ ஒரு லேகியத்தை காட்டி, மாதத்தில் 25 நாட்க்ள் டூரில் இருக்கும் சேல்ஸ்மேன்கள் சாப்பிட்டுவிட்டு, மீதியிருக்கும் ஐந்து நாளில் ஏதாவது ஒரு நாள் அல்லது இரண்டு நாள் கூடியிருந்தால், மீதி 25 நாட்கள் மனைவியின் கற்பைப் பற்றி கவலை பட வேண்டாம் என்று சொன்னான்.

செப்பிடு வித்தைக்காரன் ஒடுக்கடித்துக்கொண்டே அவரை  நெருங்கினான். அவன் நாற்றம் குடலைப் பிடிங்கியது.பாம்பு-கீரிப்பிள்ளை சண்டைக்காக தாங்கிக்கொண்டார்.

“இந்த சாரு மனசுல ஏதோ சங்கடம் ரொம்ப நாளா கீது

கூட்டம் அவரை பார்த்தது.. அவர் Mr.Bean போல் அசட்டுப்புன்னகைப் புரிந்து கூட்டத்தைப் பதிலுக்குப்  பார்த்தார்..

“நீ வெளில காட்ட மாட்டீன்ர . உன் மனசுல ஆமான்றது எனக்கு மட்டும் கேக்குது. இந்த கயிர கட்டு. இந்த மைய தலகாணி கிழ வச்சு படு.  இதெல்லாம் வூட்டு வாசல்ல கட்டு. தன லாபம்,ஆயுள் விருத்தி, போஜன ச்வுக்கியம் வந்து கொட்டும். சங்கடம் பூடும்.200 ரூபாய் தட்ல போடு.

200 ரூபாய்யா? மனதிற்க்குள் திகிலடித்தது வைத்திக்கு.

தட்சிணை நேரம் வந்து விட்டது என்று கூட்டம் நழுவ ஆரம்பித்து வைத்தி மட்டும்தான் இருந்தார்..

பேக் செய்து அந்த பொட்டலத்தை அவர் கையில் கொடுத்தான் செப்பிடு வித்தைக்காரன்.

“பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை வுடலயே? அந்த சங்கடம்தான்  என் மனசில இருக்கு” 

பொட்டலத்திற்க்கு எதிர் மரியாதையாகக் கேட்டார்.

“ஏன் வுட்ல தெரியுமா? உனுக்கு கெட்ட நேரம் வரும்னுதான். நீ வாண்டேடு லிஸ்ட்ல இருக்கேன்னு தெரிஞ்சுப்போச்சு. பேஜார் ஆயிடுவ. மிருக தோசம் வரும். உன் கண்டிதான் வுட்ல.

வைத்தி ஈளித்துக்கொண்டே ஒரு பழைய இரண்டு ரூபாய் தாளைப்போட்டார்.

கீரிப்பிள்ளை பாம்பை முறைப்பது போல் உக்கிரமாக முறைத்தான்.

“ரொம்ப சேம் ஆக்கிட்ட என்ன. குட்டிச்சாத்தான் உன்ன புடிச்சுக்கும்.ரத்த வாந்தி, பேதி வரும். கை கால் முறுக்கி கொள்ளும்

இரண்டு ரூபாயை எடுத்து கடாசினான்.

ஆமாம் நீ வுடறேன்னு சொல்லிட்டு......ஒன்னையும் காணோம்

வைத்தி அந்த இரண்டு ரூபாயை எடுத்து வைத்துக்கொண்டார். மேலும் ஏதும் கொடுக்காமல் அவனேயே முறைத்தார்.

அவன் ஏதோ முணகினான். ஆத்திரமாக மண்டை ஒட்டின் மேல் ஏதோ பொடியை தூவினான். வைத்தி தன் பர்சில் உள்ள  ஆஞ்சுநேயர் படத்தை எடுத்து கண்களில் அவன் முன் ஒற்றிக் கொண்டு ஒரு மாதிரி  தைரியப்படுத்திக்கொண்டு கிளம்பினார்..

போகும் வ்ழியில் லேசாக பயம் தொற்றிக்கொண்டது. மேல் பாக்கெட் ரொம்ப கனத்துப்போய் தொங்கி குட்டிசாத்தான் எட்டிப் பார்பபது போல் இருந்தது. எச்சில் துப்பிப் பார்த்தார். ரத்தம் இல்லை. வயிறும் கலங்கவில்லை. 

இரவு தூக்கம் வர மறுத்தது. ”சங்க்ரன்குட்டிக்கு பொண்ணு வேனும் படம் பார்த்துவிட்டு நேர வீட்டுக்கு வந்திருக்கலாம்.  ஏண்டா அங்க போனோம்?. ஏன் அவன பாத்து தொலச்சோம்? நொந்து போனார். வாழ்க்கைல பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை முக்கியமா? சே...... 

கை கால் முறுக்கிகொள்ளாமல் இருக்க மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டு கால்களை அகல விரித்து கைகளை இறுக்கி நீட்டிக்கொண்டார். அவன் உடுக்கடித்து  அந்த கீரியையும் பாம்பயும் அவன் மேல் ஏவிக்கொண்டிருந்த மாதிரி பிரமை..வந்துக்கொண்டேயிருந்தது.அனுமார் படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டு, கடைசியாக ஒரு தீர்மானம் எடுத்தார்.

அவனை காலையில் பார்த்து 200 ரூபாய் கொடுத்து எல்லாவற்றையும் எடுத்து விட சொல்லி நிம்மதியாகி விட வேண்டும். பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை  கனவில் கூட போட வேண்டாம்.

இப்படியே யோசித்து..யோசித்து தூக்கம் வந்து தூங்கிப் போனார்.

மறு நாள்  அவன் வீட்டை அடைந்தார். வாசலில் ஒரே கூட்டம். விசாரித்தார்.

“செப்பிடு வித்தகாரன் நைட்டெல்லாம் தூங்கல. மோட்டு வளையை பார்த்துக்கொண்டு ஏதோ பயம் புடிச்ச மாதிரி இருந்தானாம். காலில காகக வலிப்பு வந்து, கை காலெல்லாம் முறுக்கி,வாயில ரத்தம் வந்து இறந்துட்டான்ஒருவர் சொன்னார்.

நேத்து வித்த காட்ட சொல  யாரோ ஒரு ரீஜண்டான் ஆள சொம்ம எங்கப்பா பயம் காட்டிருக்கிறாரு. அந்தாளு நெசம்னு நெனச்சு அனுமார படம் காட்டி ஜெபிச்சு எங்கப்பாவுக்கு வென வச்சுட்டான். அவன் கண்டி ஏங் கைல கெட்சா’  அவன் பையன்  உறுமினான்.

பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை ஆரம்பித்து விட்டதா?

                  முற்றும்

 

 

 

 

6 comments:

  1. ஆட்காட்டி1,

    என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    //?????// என்னணனா அர்த்தம்? பிரியலன சொல்லுங்கண்ணா.

    உங்க வலைக்குப் போனா ஆள் அரவமே காணோம். ???????????????

    ReplyDelete
  2. இதில் கதை இருக்கிறது. நடையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு வேணும். வார்த்தைகளை குறைத்து, நயத்தை கூட்ட வேண்டும்.

    செப்பிடு வித்தைக்காரன் சந்திப்பு, அதன் பின் மனக் குழப்பம், மறுநாள் ஆச்சர்ய நிகழ்வு என்று பிரித்து, வார்த்தை சிக்கனம், நயம் கொண்டு வந்தால், இது ஒரு நல்ல, தரமான கதை.

    இது எனது பார்வை மட்டுமே. அதுவே பொதுவானது/சரியானது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. எனது அனுபவத்தில் சொல்லியிருக்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    மெலட்டூர் இரா நடராஜன்.

    ReplyDelete
  3. மெலட்டூர் இரா.நடராஜன்,

    உங்கள் விமர்சனத்திற்க்கு நன்றி.

    ReplyDelete
  4. கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது ரவி சார். ஆனால் கிட்டத்தட்ட இதே போல் ஒருகதையை ஒருவருடம் முன்னால் விகடனிலோ, குங்குமத்திலோ படித்த ஞாபகம்.
    'கதை நாயகன் சாமியார்களை எடுத்தெறிந்து பேசுவான். அவனது ஊருக்கு ஒரு சக்திவாய்ந்த சாமியார் வருவார். அவனை இவன் தரக்குறைவாகப் பேச, அவர் இவனுக்கு சாபம் விடுவார், தீயில் அழிந்துவிட. இவன் வீட்டில் இவனைச் சமாதானப்படுத்தி அந்த சாமியாரிடம் மன்னிப்புக் கேட்க ,அவர் வீட்டிற்கு அழைட்துச் செல்வர். அங்கு சாமியார் நோய்வாய்ப்பட்டுக் கிடப்பார்.'
    கரு இதுதான். ஆனால் உங்கள் கதையில் களமும், சம்பவங்களும் நன்றாக இருந்தன. (கீரி‍ பாம்பு மேட்டர் பலே)...
    அதே சமயம் 'தவசி' படத்தில் வடிவேலு காமடியையும் நினைவூட்டியது.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!