Sunday, February 20, 2011

எஸ்கலேட்டர்


தனக்கு முன்னமே சித்தார்த் வந்து காத்திருந்தது சந்தோஷமாக இருந்தது ஜன்யாவுக்கு.எஸ்கலேட்டர் முன்  புன்னகைத்தபடி ஸ்டைலாக நின்றிருந்தான்.நிச்சியதார்தத்தில் பார்த்த முகம் இல்லை.வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருந்தான்.தன் உடை அவனுடன் மாட்ச் ஆகிறதா என்று தன்னை ஒரு முறை முன்னும் பின்னும் வேகமாக ஸ்கேன் செய்துவிட்டு புன்னகைத்தப்படியே அவனை நெருங்கினாள்.

எஸ்கலேட்டர் முன் பயந்தபடி நின்றாள் ஜன்யா.சித்தார்த் அவளின் இடது கையைச் சட்டென்றுப் பிணைத்து இருவரும் ஒரே சமயத்தில் கால் வைத்ததும் மெதுவாக ஒரு படி முளைத்து நகர ஆரம்பித்ததும் அவளுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.

பயம் எங்கேப் போயிற்று என்று தெரியவில்லை.

சித்தார்த் முதல் முறையாக கைப்பிடிக்கிறான்.சிலிர்ப்பிற்கு உண்மையான காரணம் கைப்பிடித்த அடுத்த நிமிடம் ஜோடியாக எஸ்கலேட்டரில் மிதக்க ஆரம்பித்தது.

ஊர்ந்துக்கொண்டிருக்கும் ரொமாண்டிக் தருணம் ரொம்பப் பிடித்திருந்தது.பாதுகாப்பாக உணர்ந்தாள்.Janya weds Siddarth என்று எஸ்கலேட்டர் சொல்லியபடி தேர் ஊர ஆரம்பித்த மாதிரி கூட இருந்தது.மேலே சென்று சேரும் வரும் ஜன்யாவும் சித்தார்த் மட்டும்தான் அதில் ஊர்ந்தார்கள்.இதுவும் ஒரு காரணம்.

இன்னும் திருமணத்திற்கு நான்கு மாதம் இருந்தது.இது ஜன்யாவிற்கு மலைப்பாக இருந்தாலும் எஸ்கலேட்டரில் இந்தப் பக்கம் ஏறி அந்தப் பக்கம் இறங்குவதற்குள் ஓடிவிடும் என்று  இறங்கியவுடன் மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

கைப்பிடித்தப்படியே அடுத்தப் பக்கம் இறங்கினார்கள்.அப்படியே மாலில் சில கடைகளை பராக்குப் பார்த்தப்படி  நடந்தார்கள்.

”இந்தா உனக்காக வாஙகின கிப்ட்”

ஜன்யா மிதப்பிலிருந்து இறங்கி” என்ன சித்தார்த்?.”.

”இன்னும் பயம் போகலயா?” அவள் மணிகட்டை வலுவாகப்பிடித்து பிரேஸ்லெட்டை பரிசாக அணிவித்தான். ”வா இன்னும் பத்து தடவை ஏறி இறங்கலாம்” அவளை இழுத்தான்.

”அய்யோ வேணாம்...” வெட்கத்தோடு சிரித்தப்படி கையை உதறினாள்.

மீண்டும் சிரித்தப்படியே தன்னிச்சையாக கைக்கோர்த்தப்படி வழுவழு தரையில் நடக்க ஆரம்பித்தார்கள்.பிரேஸ்லெட் உறுத்தல் இருவரின் கவனத்திலும் அட்டைப்போல் ஒட்டியபடியே வந்தது.

மால் முழுவதும் சுற்றினார்கள்.எதைஎதையோ எல்லாம் குடித்தார்கள்.ஐஸ் கீரிம் சப்பியபடியே நடந்தார்கள். எதையோச் சாப்பிட்டார்கள்.காதலாக பேசினார்கள்.எதைஎதையோ வாங்கினார்கள்.ஆளுக்கொரு பளபளவென்ற பிளாஸ்டிக் பைகளை பிடித்தப்படி வீட்டிற்குப் புறப்பட்டார்கள். எஸ்கலேட்டர் முன் நின்றார்கள்.சித்தார்த் தள்ளி நின்று கொண்டான். 

”நீ போ முதல்ல” 

ஜன்யா வாயை மூடி கண்களை இடுக்கிச் சிரித்தப்படி அவனைப் பார்த்தாள்.பொய் கோபத்தை உணர்ந்த சித்தார்த்அவளின் பைகளை வாங்கிக்கொண்டு தன் இடதுகையால் அவள் கையைப் பிணைத்து இருவரும் ஒன்றாக கால் வைத்து நிற்க படி ஒன்று முளைத்து அவள்  மீண்டும் மிதக்க ஆரம்பித்தாள்.

சித்தார்த் பிணைத்திருந்த கையை உருவிக்கொண்டான்.ஜன்யாவும் அதைத்தான எதிர்பார்த்தாள்.இந்தப்பக்கம் ஏறி அந்தப்பக்கம் போவதற்குள்திருமணம் முறிந்துவிட்டது.எதுவும் ஒத்துப்போகவில்லை.சமரச ஏற்பாட்டின்படி பேசிப் பிரிந்தார்கள்.

ஜன்யா நினைவு கலைந்து சகஜ நிலைக்கு வந்தாள்.அதே மால்.

ஜன்யா எஸ்கலேட்டரின் இடதுப் பக்கமும் தன் புத்தம் புதுக் கணவன் சத்ய நாராயணன் வலதுப் பக்கமும் கால் வைக்க ஒரு படி முளைத்து இருவரும் ஊர்ந்தபடி  மேல் நோக்கிச் சென்றார்கள்.

முற்றும்
.

12 comments:

  1. இப்படியும் சொல்ல இயலுமா ??? இந்தத் தலைமுறையின் அவசர புத்தி வெளிப் படுகிறதோ

    ReplyDelete
  2. நன்றி எல் கே.

    நன்றி மிடில்கிளாஸ்மாதவி.

    ReplyDelete
  3. கதையின் ஆரம்பமும் முடிவும் அழகு!
    கதை ஆரம்பத்த இடத்திலேயே முடிவது கதையின் கனத்தை அதிகப்படுத்துகிறது.
    ஆனால், இடையில் கதையின் போக்கில் சிறுதொய்வு ஏற்படுகிறது,அவர்கள் மாலில் சுற்றுவதை தவிர்த்திருக்கலாம்

    ReplyDelete
  4. நன்றி லிவிங்ஸ்டோன் பாபா.

    muthu said...

    //அவர்கள் மாலில் சுற்றுவதை தவிர்த்திருக்கலாம் //

    இதுவே சின்னக் கதை.இதிலும் தொய்வா? மேலும் அவர்களின் நெருக்கத்தைக் காட்ட ஒரு சின்ன பாரா இயல்பா வந்தது.

    கருத்துக்கு நன்றி முத்து.

    ReplyDelete
  5. அருமையானக் கதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி மதுரை சரவணன்.

    ReplyDelete
  7. நல்லா இருந்தது கதை...ஆனால் உங்கள் டச் கம்மி...

    ReplyDelete
  8. நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  9. நன்றி அமைதிச்சாரல்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!