Sunday, May 31, 2009

வருக..வருக..வருக..என வரவேற்பு!


                                
                        


                                      
பெட்ரூம் பரணில் ஏறிய கிருஷ்ணசாமிக்கு அதைப் பார்த்தவுடன் குஷி. பொடியை எடுத்து  மூக்கில் வைத்து இழுத்தார்.எதற்கு ஏறினாரோ அதை மறந்தார்.குந்திக்கொண்டிருந்தவர் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்.மறந்தே போன விஷயம்.எதிரே பார்க்கவில்லை.பார்க்க பார்க்க குஷி அதிகமாயிற்று. 

ஆனால் அன்று?

மூச்சு முட்டி  வேர்த்து  விறுவிறுத்து விட்டார்.இப்போது ஒண்ணும் தெரியாத பாப்பா போல் படுத்திருந்தது.அந்த பிளேகார்டை (placard) கையில் எடுத்தார். அந்த ”வேர்த்து விறுத்து”  சம்பவம் பழசாகி விட்டாலும் பிளேகார்டு  புதுசாகவே இருக்கிறது.அதில் ஒட்டியிருந்த பேப்பர்தான் மக்கி போய்விட்டது.


”ராஜேஷ் அகர்வால்” என்ற பெயர் ஆங்கிலத்தில் அந்த கட்டையில் எழுதியிருந்தது.கருப்பு இங்க மார்க்கர் பேனாவால் . கையெழுத்தும் ரொம்ப அழகாக கொட்டை எழுத்துக்களில்.பெரிய மகள் ராஜேஸ்வரி கையெழுத்து. அந்த கட்டையை செல்லமாக அணைத்துக் கொண்டுச்சிரித்தார்.


”என்னப்பா... சிரிச்சுட்டு இருக்க.. மேல க்ரப்பான்பூச்சி ஜோக்கடிக்குதா?”


சின்னப் பெண் லட்சுமி கேட்டாள.கிருஷ்ணசாமி மேலிருந்து அந்த போர்டைத் தூக்கிப் பிடித்தார்.அது சிலுவை போல் ஆங்கில எழுத்து "T" வடிவத்தில் இருந்தது.மரம் நல்ல அகலத்தோடு பட்டையாக இருந்தது.”ராஜேஷ் அகர்வால்” என்று படித்து...


’இது என்னப்பா ?”


“இது பிளேகார்டு(placard) முன்ன பின்னத் தெரியாதவங்க ரயிலிலோ, ஏர்போர்டிலோ வந்தாங்கன்னா அங்கன போய் இது பிடிச்சிட்டு நிக்கனம்.வரவங்க இந்த் போர்டல இருக்கிற அவங்க பேரப் பாத்துட்டு அடையாளம் கண்டுகிட்டு கூட போவாஙக.நிறைய கார் டிரைவருங்க இது பிடிச்சுட்டு நிப்பாங்க.அடையாளம் கண்டுகிட்டவுடன் கார்ல அழைச்சுட்டு போவாங்க. ஹோட்டலோ ஆபிஸோ..கெஸ்ட் அவுஸோ”


பரணில் இருந்தபடியே பழைய நினைவுகளில் முழுகினார்.அப்போது செல்போன் கிடையாது. தகவல் தொடர்பு வளர்ச்சி கம்மிதான்.வீடுகளிலேயே டெலிபோன் அங்கொன்றும் இங்கொன்றுமாக.தன் வீட்டிலும் கிடையாது.இப்போது இருக்கும் அசுர வளர்ச்சி அப்போது இருந்திருந்தால்?பாடாய்ப் பட்டிருக்க மாட்டார். 
 

”அட்லாஸ்ட் வீ ஆர் மீட்டிங்”.....ஒரு நாள் போனில் திடீரென்று பேசினார் ஜெனரல் மேனஜர் ராஜேஷ் அகர்வால் . டெல்லியிலிருந்து போன்.அவர் ரயிலில் வருவதாகவும் சென்னை சென்டரலில் பிக் அப் செய்யச் சொன்னார். ஒப்புக் கொண்டார் கிருஷ்ணசாமி.செகண்ட் கிளாஸ்தான்.


வீட்டில் வந்ததும்தான் ஞாபகம் வந்தது. பெர்த் நம்பர் கோச் நம்பர் குறித்துக்கொண்ட பேப்பரைத் தேடினார்.காணவில்லை.தொலைந்து விட்டது.இன்னேரம் வண்டி ஏறியிருப்பார்.நாளை சண்டே.ஆபிஸ் லீவ்.
போனில்தான் பழக்கம்.மானம் போகுமே?தவிர சென்னை கம்பனி கிளையின் மானமும் போகும்.புவர் பிளானிங் என்று ஏய்த்துக்காட்டுவார்.இந்த கறை போக ரொம்ப நாளாகும்.


ஆள் நேரில் எப்படி இருப்பார்.எப்படி அவரைக் கண்டுப்பிடிப்பது?சிவப்பு நிறம், மார்பு நிறைய முடி, பான் பராக்,பைஜாமா குர்த்தா?நொந்து போய் டென்ஷன் ஆனார்.ஒன்றும் ஓடவில்லை.


கம்பெனி கார் டிரைவர்தான் பிளேகார்டைப் பற்றிச் சொன்னான்.பெயர் எழுதி ஸ்டேஷனில் போய்ப் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும் என்று.அவனைக் கட்டிக்கொண்டார். டென்ஷன் சற்று குறைந்தது.


இதை எப்படி தயார் செய்வது...?புது அனுபவம்.அடுத்த டென்ஷன்.


தேடியதில் மகள் லட்சுமியின் பரீட்சை அட்டைக் கிடைத்தது.கிளிப்பைப் பிய்த்துப் போட்டுவிட்டு சரிபாதியாக உடைத்தார்.சரிபாதியாகத்தான் பிடித்தார்.மனதிலும் நினைத்துக்கொண்டார். ஆனால் பாளபாளமாக உடைந்தது.கிடைத்து விட்டது என்ற ஆர்வத்தில் உடைத்திருக்க வேண்டாம்.


அடுத்து ஒன்று அட்டையில் தயார் செய்தார்.பார்க்கும்படியாக இல்லை.”இங்கு நீர் மோர் கிடைக்கும்” என்ற பெட்டிக் கடை போர்டு மாதிரி இருந்தது.தூரே நின்று பார்த்தால் ஒன்றுமே தெரியவில்லை.ஆள்தான் பெரிசாகத் தெரிகிறது.


கடைசியாக கண்டுப்பிடித்தார்.இதே பரணில்தான்.இரண்டு பட்டையான கட்டைகள்.சந்தனமா? தேக்கா? அல்லது வேறு ஏதாவதா? தெரியவில்லை.பார்க்க லட்சணமாக இருந்தது.அதை "T" வடிவத்தில் வைத்து ஆணி அடித்தார்.
பேப்பரை ஒட்டினார்.”ராஜேஷ் அகர்வால்”பெயர் மகள் எழுதினாள்.


சந்தோஷம் பிடிபடவில்லை.வாழ் நாள் சிற்பத்தை வடித்த சிற்பி போல் ஒரு மிதப்பு.பார்வீகமாக அமைந்து விட்டது.பிடித்துக் கொண்டு நின்றார்.பெரிய நிலைக் கண்ணாடியில் பார்த்தார்.தெளிவாக தெரிந்தது.ரொமப தூரத்திலிருந்தே ராஜேஷ் அகர்வால் கண்டுப் பிடித்து விடுவார். 


வீட்டிலும் எல்லோருக்கும் ரொம்ப பிடித்து போய் விட்டது.  ஆளாளுக்கு குழந்தை போல் வாங்கிக்கொண்டு நின்று ”ராஜேஷ் அகர்வாலை” வரவேற்றார்கள். 
செல்லம் கொஞ்சினார்கள்.மனைவி உள்ளங்கையில் தட்டிப் பார்த்து “ரொம்ப ஸ்ட்ராங்” என்றாள்.வேலைக்காரி கூட எல்லோரும் பார்த்தபிறகு அதை ஆசையுடன் வாங்கி அப்படியும் இப்படியும் பிடித்துப் பார்த்துச் சிரித்துக்
கொண்டாள்.


பிளேகார்டுக்கு மேட்சிங்காக பாண்ட் சட்டை போட்டுக்கொண்டார்.ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றிதான் எடுத்துக்கொண்டுப் போனார்.வாழ்கையில் என்ன மாதிரியான அனுபவங்கள் நேரிடுகிறது.

முதலில் கஷ்டத்தைக் கொடுத்து பின்னர் அனுபவி.இலவச அனுபவம் இல்லை.சிரித்தக்கொண்டார்.பிடித்துக்கொண்டு நிற்கும் போது ஏற்படப் போகும் குஷி சொல்லி மாளாப் போவதில்லை.


செண்ட்ரல் ஸ்டேஷன்.நான்காவது பிளாட்பாரம் .பக்கத்தில் இருந்த சரக்கு டிராலியில் பிளேகார்டை வைத்தார்.வண்டி வர இன்னும் அரை மணி நேரம் இருந்தது.தாகமாக இருந்ததால் பக்கத்தில் உள்ள ஸ்டாலில் ரோஸ் மில்க் குடிக்கப் போனார்.குடித்துவிட்டு வந்து பார்த்தப்போது டிராலி காணவில்லை. “பக்”கென்றது.அங்கும் இங்கும் தேடினார்.இரண்டொரு போர்டர்களிடம் விசாரித்தார்.எங்குபோயிருக்கும்?கையிலேயே வைத்துக்கொண்டிருக்கலாம்.
சே!


எப்படிஅதற்குள் மாயமாய் மறைந்தது?மெதுவாக மனசு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.லேசான நடுக்கம் இருந்தது.என்ன செயவது?புது அனுபவத்திற்கு இன்னொரு புது அனுபவம்.அங்கும் இங்கும் கண்ணால் தேடியபடி இருந்தார்.


கொஞ்சம் கொஞ்சமாக பிளாட்பாரத்தில் கூட்டம் சேர ஆரம்பித்தவுடன் கலக்கம் கூடியது ஓடிப்போய் அந்தப் பக்கம்  நின்று கொண்டிருக்கும் ரயில் அடியில் 
கூட குனிந்தும் பார்தது விட்டார். பெட்டிகளிலும் ஏறிப் பார்த்து தேடினார்.  


கிடைக்கவில்லை.

வண்டி வர இன்னும் பத்து நிமிடம் இருந்தது.யாரிடம் கேட்பது?
வண்டி லேட்டாக வரக்கூடாதா?இன்னிக்கென்று சரியான டைமுக்கு வருகிறது.டென்ஷன் அதிகரித்து படபடத்தது.வியர்த்துக்கொட்டியது.
பீடை எங்குப் போயிற்று.

பெர்த் நம்பர் கோச் நம்பர் பேப்பரை தொலைத்தது எவ்வளவு பெரிய முட்டாளதனம் என்று இப்போது பூதாகரமாக உறைத்தது.என்ன பொய் சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்.


பிளாட்பாரம் பரபரக்க ஆரம்பித்தது.வண்டி பெரும் சத்தத்துடன் பூதாகரமாக நுழைய ஆரம்பித்தது.ட்ராலி சத்தம் கேட்கும் திசையெல்லாம் ஓடிப் போய் பார்த்தார்.பெட்டியின் ரிசர்வேஷன் சார்ட்டெல்லாம் மழையில் நனைந்து கிழிந்து கிடந்தது.முக்கால்வாசி பெட்டியில் பிசிறு பிசிறாக கோந்து சுவடுதான் தெரிந்தது.சே..என்ன இப்படி ஆகிறது.தலையில் அடித்துக்கொண்டார்.
ஓடி ஓடி தேடிக்கொண்டே பெட்டிகள் உள்ளேப் பார்த்தார்.


பிரயாணிகள் பிளாட்பாரத்தில் நிற்பதும் போவதுமாக இருந்தார்கள்.எந்த வட இந்தியரைப் பார்த்தாலும் அவரைப் போலவே இருந்தார்கள்.கடைசி பெட்டிக்கு வந்தார். அங்கே ஒருவர் தன்னுடைய பிளேகார்டைப் பிடித்தபடி  நின்று கொண்டிருந்தார்.அதிர்ச்சி.இவரிடம் எப்படி இது? குழப்பத்துடன் அவரை நெருங்கினார்.


“சார்... உங்க கிட்ட எப்படி இந்த போர்ட்.....”


“நான் ராஜேஷ் அகர்வால்.மிஸ்டர் கிருஷ்ணசாமிக்கு வெயிட் பண்றேன்(ஆங்கிலத்தில் பேசினார்) “

அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒரு சேர தாக்கியது.நாந்தான் கிருஷ்ணசாமி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அசடு வழிய கைக்கொடுத்தார்.அடுத்து என்ன நடக்கப்போகிறதோ மனதில் பயம் பரவியது.

”சார்... உங்களிடம் இது எப்படி...?’(உரையாடல் ஆங்கிலத்தில் தொடர்ந்தது)


“நான் இறங்குற பெட்டிக்கு நேர ஒரு டிராலி இருந்தது.அதில் இந்த போர்டு கிடந்தது. அதன் விவரம் கேட்கறத்துக்குள்ள ஒரு ஆள் போர்டைக் கைல கொடுத்துட்டு ஓடிட்டான்.ஒண்ணும் புரியல.ஆள காணும்.நா பிடிச்சிட்டு நிப்பதற்க்குதான் இத கொடுத்தான் போலிருக்குன்னு...பிடிச்சிட்டு நின்னேன்.
நீங்க வந்துட்டிங்க.என்ன பாத்துட்டிங்க.ஓவர்”


கிருஷ்ணசாமி எல்லா விவரத்தையும் சொனனார்.சொல்லி முடிக்கும் வரை மன்னிப்பு கோரும் முக பாவம்தான்.... ”ரொம்ப ரொம்ப சாரி சார்” என்றார்.


”நோ பிராப்ளம் கிருஷ்ணசாமி.எதுவும் நம்ம கைல இல்ல.இது மாதிரி சில சமயம் நடக்கும்”

பரவசத்துடன் அவரைப் பார்த்தார். மனசு லேசாயிற்று.


”உங்களுக்கு அந்த யோகம் இருக்கு சார் .....ஆசைப்பட்டு  செஞ்சத பிடிச்சுட்டு நிக்க எனக்கு யோகம் இல்ல.”


ராஜேஷ் அகர்வால் “டேக் இட் ஈசி” என்று தோளில் தட்டினார்.
 
 
முற்றும்
14 comments:

 1. :-)

  நல்ல விறுவிறுப்பான கதை.. மனசுல டென்சனை உண்மையிலேயே ஏற வைக்குது!

  ReplyDelete
 2. sinna vishayam.athil oru story.well knit story.

  itha pootila poodalaiya.why?

  ReplyDelete
 3. கதை ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் போல..?

  முடிவு நல்லா இருக்கு..

  ReplyDelete
 4. பட்டிக்காட்டான்.. said...

  //கதை ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் போல..?//

  அப்படியா! திருத்திக்கொள்கிறேன்.

  //முடிவு நல்லா இருக்கு.//

  நன்றி

  ReplyDelete
 5. simple ஆன கதைக் கரு . அதை விவரித்த விதம் அருமை.

  ReplyDelete
 6. சின்ன கதை தளம், அதை அழகாக , ரசித்து எழ்திஇருக்கிறீர்கள்... வாழ்த்துகள்

  ReplyDelete
 7. ஸ்ரீதர் said...

  //simple ஆன கதைக் கரு . அதை விவரித்த விதம் அருமை//

  நன்றி ஸ்ரீதர்.பர்ராட்டு ஊக்கம் அளிக்கிறது.

  ReplyDelete
 8. அது ஒரு கனாக் காலம் said...
  //சின்ன கதை தளம், அதை அழகாக , ரசித்து எழ்திஇருக்கிறீர்கள்... வாழ்த்துகள்//

  நன்றி சுந்தர்ராமன்.

  ReplyDelete
 9. சார்... அழகான ஸ்டோரி... எப்படி எழுதணும்ன்னு சின்ன பயிற்சி கொடுத்த மாதிரி இருந்தது. ப்ளகார்டுக்குக்கூட ஒரு கதை பண்ணியிருக்கீங்க...உங்க லாங்வேஜ்ல சொன்னா எடுப்பு, தொடுப்பு, முடிப்பு அழகு...

  ReplyDelete
 10. தமிழ்ப்பறவை said...
  //சார்... அழகான ஸ்டோரி... எப்படி ப்ளகார்டுக்குக்கூட ஒரு கதை முடிப்பு அழகு//

  ரொம்ப நன்றி.எழுதி எழுதி அலுத்த அனுபவம்தான்.

  ReplyDelete
 11. அது ஒரு கனாக் காலம் said...

  //சின்ன கதை தளம், அதை அழகாக , ரசித்து எழ்திஇருக்கிறீர்கள்... வாழ்த்துகள்//

  நன்றி சார்.

  ReplyDelete
 12. உங்க குரு அதிஷா ஒரு கவிதை எழுதியிருக்கார் பாருங்க

  ReplyDelete
 13. 1500/ க்கு பட்ஜெட் ரெடியா தல?

  ReplyDelete
 14. Anonymous said...

  //உங்க குரு அதிஷா ஒரு கவிதை எழுதியிருக்கார் பாருங்க//

  இருக்கட்டும். அவரு சிஷ்யன் ரவிஷா ஒரு கதை எழுதியிருக்கேன் படிச்சாரா? அனானி நீங்க படிச்சீங்களா?

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!