Saturday, February 6, 2010

”கழுதையாவாரிகள்”- கோணங்கி-கனக்கிறது

நகரவாழ்க்கையில் ”செல்லத்திற்காக” புசுபுசுவென பூனைகளும் நாய்களும் வளர்ப்பார்கள்.மேலை நாட்டில் குழந்தைகள் (இங்கும்தான்)”டெட்டி பியர்”என்னும் டெட்பாடி புசுபுசுவை இரவில் கட்டிக்கொண்டு உறங்குவார்கள்.இயற்கையாகக் கிடைக்காத தொப்புள் கொடி உறவுகளை “அவுட் சோர்ஸ்” செய்து கட்டிக்கொள்ளுவது மானுட்டத்தின் அவலம்.


ஆனால் கோணங்கிக் கதையில் ஒரு வண்ணார் தன் கழுதை செல்லங்களைப் பிரிந்துவாடுவதுதான் கதை.

”என்னைப்பார் யோகம் வரும்” என்று வீடுகளில் இரண்டு கழுதைச் சாமிப்படம் மாட்டி யோகத்தை எதிர்பார்த்து தினமும் பார்த்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் ஒரு பக்கம்.தன் தொப்புள்கொடி உறவாகப் பிணைந்துவிட்ட தினமும் நேரடியாகவே பார்த்துக்கொண்டிருக்கும் பொதிசுமக்கும் கழுதைகளை எந்த யோகமும் வராமல் ”அடிமாட்டு” விலைக்கு,தன் மகனின் படிப்புக்காக விற்றுவிட்டு அதன் நினைவு சுழலில் மாட்டிக்கொண்டு பொதி சுமக்கிறான் அய்யன் என்கிற கிராமத்து வண்ணான் இது மற்றொரு பக்கம்.

கழுதைவிற்றப் பணத்தில் படித்து,”தபால்” பொதி சுமக்கும் வேலைக்குப் போகிறான் அய்யன் மகன்.

அவன் அப்பாவாவது தேவலை நினைவில் பொதி சுமக்கிறார். ஒரு நாள் இவன் ராசப்பன் தோளில் தபால் பொதியை சுமந்தப்படி நேரலையாக தன் வீட்டுக் கழுதைகளை ரோட்டில் பார்த்து மனது கனக்கிறான்.அவைகள் இப்போது சுமப்பது ரொம்ப வெயிட்டான “மணல் பொதிகள்”.

ஒரு குறும்படத்திற்க்குண்டான எல்லா விஷயங்களும் இதில் “பொதி”ந்துள்ளன.எடுப்பவர் நன்றாக உள்வாங்கி எடுக்க வேண்டும்.

கதைச்சொல்லி அப்பன், மகன் என்று இரு பார்வைகளில்
பாவப்பட்ட ஜென்மங்களைச் சொல்கிறார்.கதைச்சொல்லி உணர்ச்சிகளைப் பின்னிய பின்னலில் கதைப்பூராவும் கழுதைகள் நம்மை உற்றுப்பார்த்து வலிக்க வைக்கிறது.விற்ற கழுதைகள்(நாய் பூனைப் போல) வீட்டிற்க்கு திரும்பி விடாதா என்று மனம் ஏங்குகிறது.

படிக்கும்போது ரததமும் சதையுமாக கண்முன் ஓடி பிராண்டிய காட்சிகள்:-
(ஹாலிவுட் படங்களில்தான் இது (கணவன்-மனைவி) மாதிரி உணர்வு பூர்வமான காட்சிகளை மூட் லைட்டிங்கில் அசத்துவார்கள்)

”ஏத்தா...சுந்தரீ..என்று அய்யன் பெஞ்சாதியைக் கட்டிக்கொள்ள ”அய்யனே உனக்கு ஆங்காரம் ஆகாது.உம்ம மனசு குளுந்திரனும்.எப்பவும் போல இருக்கனும்.” என்று சுந்தரி அவனைத்தேத்தி,அவளின் குளுந்த வார்த்தைக்குக் கிறங்கிப்போய் தூங்கி விடுகிறான். soul stirring!(இந்த மாதிரி கதை கணங்களில்,அதுவும் கிழ் மட்டத்தில், கணவன் மனவி உணர்ச்சிகள் ஒரு அலைவரிசையில் இருப்பது அபூர்வம்) 

கழுதைகளின் முகத்தில் கவிந்த சோகபாவத்தைப் பார்த்ததுமே ஈரக்குலை நடுங்கியது..................கண் தூரத்தில் மணல் பொதிகளுடன் அவற்றின் குள்ம்பொலிகள் தார் ரோட்டில் ஒலித்துக்கொண்டிருந்தன.

.........கழுதைகள் போகிற இடத்தைக் கண்டுபிடிக்கும் ஆசை உந்தித்தள்ள(sadistic pleasure அல்லது நகை முரண்?).....ராசப்பன் அவற்றைப் பின் தொடர்ந்தான்...

....அய்யன் வானத்தை அண்ணாந்துப் பார்த்தான்.வெளுத்த உருப்படிகளாய் மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தன.வானத்து உயரத்தில்..........மேகங்களுக்கு இடுவலில் இருந்து ராசப்பன் இறங்கி.......”

.”..தெருக்களும் காரைச் சுவர்களும் கழுதைகளைப்போல் தலை அசைத்து நடந்துக்கொண்டிருந்தன.........”

இது மாதிரி நிறைய வரிகள்.

கதைக்கு திருஷ்டிப்போல “மனித அவமதிப்பின் மொத்த”என்ற கடைசிப்பாரா கதைச்சொல்லியின் குரல் ஏன்? கதை எழுதி முடிக்கும்போது வெடித்துவிட்டரா?

சற்று உற்று நோக்கினால் மட்டுறுத்தப்பட்ட தி.ஜானகிராமன் உணர்ச்சி நடைகாணலாம்.

நன்றி: ”முத்துக்கள் பத்து -கோணங்கி கதைகள்”-அம்ருதா பதிப்பகம்

4 comments:

  1. அன்பின் ரவிஷங்கர்,

    தமிழில் ஏராளமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், கதை சொல்லிகள் குறைவு.

    கோணங்கி அழுத்தமான கதை சொல்லி. இவரது 'மதினிமார்கள் கதைகள்', 'கொல்லனின் ஆறு பெண்மக்கள்' ஆகிய இரு சிறுகதை தொகுப்புகளும் தமிழ்ச் சூழலில் முக்கியமானவை.

    'கொல்லனின் ஆறு பெண்மக்கள்' தொகுப்பின் பின்பகுதியிலுள்ள கதைகளை முழுமையாக வாசிக்கும்போதே இவரது அடுத்தடுத்த தொகுப்புகளில் பயணப்பட முடியும்.

    நல்ல இடுகை.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  2. விரைவில் வாங்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்.

    ReplyDelete
  3. நன்றி பைத்தியக்காரன். எனக்கு ஒரு நல்ல (கெட்ட?)பழக்கம் கதை வாசிக்கும்போது காட்சிகள் மனதில் ஓடும்.ஓடும் காட்சிகள் மனதைத் தொட்டால் கதை பாஸ் ஆகிவிட்டது என்று அர்த்தம்.

    இவரின் புரிய கதைகளிலும் ஏதோ ஒரு வசீகரம் இருக்கிறது.

    ReplyDelete
  4. நன்றி மஞ்சூர் ராசா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!