Sunday, January 31, 2010

தமிழ்”ப்”படம் - துரைதயா on cloud nine

சின்னத்திரை விஜய் டீவி “லொள்ளுசபா” வின் தமிழ்ப்பட கிண்டல் லொள்ளுகளை சற்று பெரிதாக பெரிய திரையில் எடுத்துள்ளார்கள். ”தமிழ்ப்பட” கருவை வைத்தே ”தமிழ்ப்பட”த்தின்” சிக்னேச்சர் இசையான “விஷ் புஷ்” கொண்டு “தமிழ்ப்பட”த்தைநக்கல் அடித்துள்ளார்கள்.சத்தியமாக ”லொள்ளுசபா” மற்றும் "சூப்பர் டென்"(சன் டீவி) இவற்றிற்கு நன்றி சொல்ல வேண்டும்.அதில் நக்கல் ஒன்று விடாமல் படத்திற்குப் படம் புல் கவரேஜ்.அதில் ஜீவா என்பவர் தூள் கிளப்புவார்.

2606jeeva.jpg (302×265)

லொள்ளுசபா ஜீவா

சின்னத்திரை கொஞ்சம் அமெச்சூர்.ஆனால். இது professtional spoof..”ஓம் சாந்தி ஓம்” என்ற ஹிந்திப் பட டைப் என்றும் கூட சொல்லலாம்.லொள்ளுசபாவில் பாகவதர் முதல் இன்றைய சிவா(சென்னை-28) வரை நக்கல் அடிப்பார்கள்.
சதயராஜும் சில படங்களீல் நக்கல் அடித்திருக்கிறார்..

புளிச்சுப்போன வடிவேலுவின் மூணாம் கிளாஸ் மற்றும் விவேக் காமெடிக்கு ஒரு மாற்று.இவர்களின் தாங்க முடியாத விஷயம் காமெடி நேரடியாக புரிந்துக்கொண்டிருக்கும்போதே அதை விளக்கிச்சொல்லி காமடிச் செய்வார்கள்.

ஆனால் இது ரொம்ப slapstick ஆக இல்லாமல் ஒரு மாதிரி புத்திசாலித்தனமான காமெடி.காட்சிகளுக்கு கோனார் நோட்ஸ் போடாத காமெடி.திகட்டத் தொடங்கும்இடங்களில் சமாளித்து வேறு காட்சிகள்.மொத்தத்தில் செம்ம ரகளை.

படத்தின் மிக பெரிய பலம் கதாநாயகன் ஷிவா.அடுத்த வீட்டு பையன் லுக்.அதே சமயத்தில் திராவிடன்+ஆரியன் கலந்த ஒரு கலவை முகம்.அந்த வெகுளி முகம் இவருக்கு ஒரு பெரிய ப்ளஸ்.அசத்துகிறார்.அவர் திரையில் தோன்றும்போதெல்லாம் விசில் பறக்கிறது.ரசிகர்களின் செல்லம்மாகி விட்டார்.

பறவை முனியம்மா. இதில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் வருகிறார்.தூள் கிளப்புகிறார்.

கதை என்ன?சினிமா பட்டி கிராமத்தில் ஆண் குழந்தப்பிறந்தால் கள்ளிப்பால் வைத்து சிசுக்கொலைச் செய்கிறார்கள்.ஏன்? ஆண்கள் கிராமத்தை விட்டுப் போய் நகரத்தில் சினிமாவில் பெரிய ஸ்டாராகி அரசியலில் ஈடுபட்டு 2011 முதலமைச்சர் ஆக முயற்சிக்கிறார்கள். அதனால அந்த கிராமத்திறகு நல திட்டங்கள் எதுவும் அரசு அளிப்பதில்லை. கள்ளிப்பாலில் இருந்து அப்படித் தப்பித்த ஒரு ஆண் பெரியஆளாகி “தமிழப்பட” ஹீரோ சாகசங்கள் செய்வதுதான் கதை.

படத்தின் டைட்டில் கார்டே பழைய படத்தை (பாலாஜி படங்கள்)ஒத்து இருக்கிறது.நடுவில் ‘கிர்கிர்” ரீல் சுத்தும் சத்தம்.கட்டிளம் காளைகள் பாஸ்கர், வெ.ஆ.மூர்த்தி,மனோபாலா காலேஜ் ஸ்டூடண்டாக வருகிறார்கள்.படம் தவிர பாட்டுக்களும் கிண்டல்.கதாநாயகியை விட தோழி அழகாக இருப்பது.

நக்கல்கள் பாரதி ராஜா காலத்திலிருந்து தனுஷ் வரை.ஆனால் ஜேம்ஸ்பாண்ட் படம்,(கையில் பூனை வைத்துக்கொண்டு) நக்கல் எதற்கு? அதெல்லாம் காலாவதி ஆகி ரொமப வருஷம் ஆயிற்றே.இப்பொழுது இல்லையே!அடுத்து மதுரை பாஷை(அவிங்க..இவிங்க) படஙகளை ஏன் விட்டுவிட்டார்கள்?கிராமத்துப்படங்களும்(அதுவே நொந்துப் போய்) காலாவதி ஆகி ரொம்ப நாளாகி விட்டதே?

சில சாம்பிள் சிரிப்பு:
டூயட் பாட்டில் ஒரு ஸ்வெட்டரில் குலவல்,ஒரே போர்வையில் சல்லாபம் ஆனால் நிச்சியதார்த்தம்(வழக்கம்போல ஸ்கிரீன் நிறைய நிச்சியதார்த்த கூட்டம்) அன்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க வெட்கப்படுகிறார்கள்.

கோர்ட் காட்சியில் நீதிபதியின் தீர்ப்பு.

தமிழினத்தின் ஒரே தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேரன் துரைதயாநிதி Cloud Nine Movies எடுக்கும் படத்தின் விளம்பரங்களில் படத்தின் தலைப்பில் சந்திப்பிழை(”ப்”)இருக்கிறதே என்று பல பேர் கவலையானர்கள்.ஆனால் இப்போது வரும் விளம்பரங்களில் “ப்”பை சொருகிவிட்டார்கள்.

வேண்டுமென்றே இதுவும் நக்கலா?




தமிழ்ப்படத்தின் விதிகளைப் பார்க்க படத்தைச் சொடுக்கவும்.

வழக்கமாக காமெடிப் பட போஸ்டர்கள் வேறு மாதிரி இருக்கும்.நடிப்பவர்கள் மண்டை பெரிதாகப் போடப்பட்டு கைகால்கள் குச்சி குச்சியாக போட்டுப் பார்த்தவுடனே”ஹிஹிஹிஹி” வரவேண்டும் என்ற ஒரு இன்ஸ்டண்ட் பில்ட் அப் கொடுப்பார்கள்.இதன் டைரக்டர் சி.எஸ்.அமுதன் ஒரு விளம்பரக் கம்பெனியைச் சேர்ந்தவர் என்பதால் இதன் விளம்பரங்கள் சற்று professtionalஆக இருக்கிறது.இவர்தான் தினமலர் “சண்டேன்னா ரெண்டு” விளம்பரம் எடுத்தவர் என்று கேள்வி.

இந்த படத்தின் பாடல் பற்றிய பதிவு:

தமிழ்ப்படம் பாடல்கள்

குடும்பத்தோடு பார்த்து சிரித்துவிட்டு வரலாம்.


Saturday, January 30, 2010

மயிலிறகு - கவிதை





















வருடா வருடம் ஆசையுடன்
பிரிப்பதுண்டு குட்டியைக் காண 

இந்த வருடமும்
புத்தகத்தைப் பிரிக்கையில்
வைத்த மயில் இறகு
அப்படியே இருக்கிறது
குட்டி எதுவும் போடவில்லை

வெண்மையாகவே விட்டுவைத்திருந்தாள்
இறகு பக்கம் எதுவும் எழுதாமல்

மையினால் எழுதினால்
பிரசவத்திற்கு இடையூறாகி
குட்டிப் போடாமலாகிவிடும் என
என் மகள்

அப்படியும் குட்டிப்போடவில்லை

குட்டிப்போட்டு விட்டதாகவும்
குட்டிப் பெரிசாகி அதன் குட்டிதான்
இது என்றேன் நான்

மகள் முகத்தில் வருத்தம்தான்

ஒரு வார்த்தைத் தன்னிடம்
சொல்லாமல் இது நிகழ்த்திய
மயிலிறகு மேல்

Friday, January 29, 2010

ஹைகூக்கள்...!ஹைகூக்கள்....!

உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில் எறியப்படும் சிறிய கல் ஹைக்கூ- சுஜாதா

நான் முயற்சித்த ஹைக்கூக்கள்

காலி பிரியாணி தட்டை
முகர்ந்துப் பார்த்து
வாலாட்டும் நாய்

முதலையின் வாயில் வரிக்குதிரை
பிதுங்கிய வயிற்றில்
குட்டி

 மொட்டை மாடியில்
 அவளுக்குத் துணையாக
 நிலவு
 
உதிர்ந்தப் பூக்களை
புழுதிப் பறக்க பெருக்கும்
பூந்துடைப்பம்

யேசு மட்டும்
சிலுவையில்தொங்கியபடி
சிதிலமடைந்த மாதாகோவில்


தினசரி வாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightning அனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும்உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப்படுத்துவதுதான் ஹைகூ.மற்றும் வேறு விதிகள் உண்டு.இது ஒரு நேரடி அனுபவம்.சமுதாய சாடல்/நீதி தவிர்க்க வேண்டும்.

Haiku only describes, does not prescribe or tell or preach.



படிக்க: ஹைக்கூக்கள்!
 

Thursday, January 28, 2010

கியூயூயூயூயூயூயூயூயூயூயூயூயூயூயூயூயூ

கியூ இல்லாத நாடு இருக்கா? ”கியூபான்னு” ஒரு நாடு இருக்கு.கியூவில் நிற்காத மனிதர்கள் யாராவது உண்டா?

சமீபத்தில் ஒரு கியூ வரிசையில்(ரெண்டும் ஒண்ணுதானே!) ரொம்ப நேரம் நின்று நொந்துப்போனேன்.”கருவறை முதல் கல்லறைவரை லஞ்சம்” என்று  பல வருடங்களுக்கு முன்பு ஆட்டோ பின்னால் எழுதிய வாசகம் ஒன்று இப்போது ஞாபகம் வருகிறது.அது போல் கருவறை முதல் கல்லறை வரை உள்ள பல விஷயங்களுக்கும் கியூவில் நின்ற அனுபவம் பல பேருக்கு வாய்த்திருக்கும்.




கல்லறைக்குப்பின்னும் கியூ உண்டு என்று புராணங்கள் சொல்கிறது. மேல் உலகத்தில்  எமன் ஆபிஸ் கவுண்டர் கியூவில் நின்றுதான் சொர்க்கமா அல்லது நரகமா கன்பார்ம் செய்துக்கொண்டு பிரிய வேண்டுமாம்.


இதுவரை என்னென்ன மாதிரியான கியூக்களில் நின்று இருக்கிறேன்.விதவிதமான வரிசைகள் வயதுக்கேற்றார்போல் குழாய்தண்ணி, பால்கார்டு,ரேஷன்,பள்ளி பீஸ், டிரெயின் பாஸ்.பஸ் பாஸ்,கோவில்,வோட்டு,தியேட்டர்,திருப்பதி, ஏடிஎம்,வங்கி,சூப்பர் மார்க்கெட்,,EB ஆபிஸ், ஆபிஸ் லிப்ட்,கண்காட்சி,விசா,பாஸ்போர்ட்,அக்‌ஷயதிரிதி,சாப்பாடு,buffet lunch என்று வழக்கமான வரிசைகள்.

வீட்டில் கூட கியூ உண்டு.ஒரு கல்யாணம் முடிந்து லைன் கிளியராகும் வரை அடுத்தவர் (தம்பியோ அல்லது தங்கையோ)கியூவில் நிற்பார்.

ஒருவர் எந்த கியூவில் நிற்காவிட்டாலும் “மூச்சா” போக தியேட்டரில் யார் முதுகின் பின் நின்றோ“......” எட்டிப்பார்த்துக்கொண்டு நின்றிருப்பார்.

கனவிலும் எதிர்பார்க்காத சில”பின்நவீனத்துவ” வரிசையில் நின்றதுதான் சூப்பர்.அது கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் வந்த போது அது ஹெல்மெட் கியூ.ஒன்றரை மணி நேரம் நின்றேன் அதுவும் ஐஎஸஐ ஹெல்மெட்டுக்காக.

அடுத்த “பின்நவீனத்துவ”  டூ வீலர் நம்பர் பிளேட்பெயிண்ட் கியூ.இதற்கு ஒரு சட்டம் வந்தது.வெள்ளைப்பின்னணியில் கருப்பு எழுத்துக்கள் என்று.பெயிண்டர் முன்னால் நீள( 35 பேர்) வரிசை. அதுவும் கடைசி நாள்.பெயிண்டர் அதிர்ச்சியாகி கோமாவில் விழுந்துவிட்டார்.

என் சொந்தக்காரார் பிணத்தை வைத்துக்கொண்டு கியூவில் ஒரு நாள்.பெசண்ட் நகர் மின் மயானம்.உள்ளே ஒரு பிணம் எரிந்துக்கொண்டிருந்தது. அடுத்து வெயிட்டிங்கில் ஒன்று.அதற்கடுத்து என் பிணம்.

நாம் காலில் நிற்காமலேயே கையில் நிற்கும் கியூ ஒன்று உண்டு.அது  BSNLலில் ஏதாவது  என்கொயரிக்கு டயல் செய்தால் "நீங்கள் வரிசையில் உள்ளீர்கள்” என ஒரு பெண் குரல் வரும்.

சில மக்குகள் கியூவில் ரொம்ப நின்று கவுண்டரை நெருங்கியதும்தான் தெரியும் அது தன் சம்பந்தமான கியூ இல்லை என்பது. இது வேஸ்ட் கியூ.

கியூவைப் பற்றி ஒரு பிளே பாய் ஜோக். ஒரு ஊர்சுற்றும் சேல்ஸ்மென் வீட்டு வாசலில் நீள கியூ.சேல்ஸ்மென் தன் டூர் முடிந்து வந்துப்பார்த்து குழப்பமாகி ”இது என்ன கியூ” என்று கியூவில் இருக்கும் ஒருவரிடம் கேட்கிறார். அதற்கு அவர் “இந்த வீட்டில் இருக்கும் பிகரிடம் உல்லாசமாக இருப்பதற்கு” என்கிறார்.”அட பாவி...! அது என் மனைவிடா” என்று கத்தியபடி விட்டிற்குள் ஒடுகிறார்.

பின்னாடி இருந்து ஒரு குரல்” ஏன்யா...முன்னாடி ஒடுற! கியூல வாய்யா!”.



Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்

 ரொம்ப வருஷத்திற்கு முன் தாலி செண்டிமெண்ட், பண்ணையார், துண்டுப்போடுத் தாண்டுதல்,அம்மன் கோவில், தூண் மறைவில் நின்று எட்டிப்பார்த்துக் காதல்,வயல், கற்பழிப்பு, வில்லன் குடோன்,மலை அடிவாரம், அம்பாசிடர் கார் என அரைத்தமாவையே அரைத்தோம்.பிறகு அதிலிருந்து வெளிவந்தோம்.

வெளிவந்து இப்போது மீண்டும் காதல்,எதிர்ப்பு,காட்டும் கதாநாயகி,பில்ட்அப்ஏய்..ஏய்..பஞ்ச்டயலாக்,டாடா சுமோ, காதில்கடுக்கன்,எனவேறுமாதிரிகிரைண்டரில் அரைத்துக்கொண்டிருக்கிறோம்.நடுநடுவே நல்ல படங்களும்வருகிறது.அதிலும் சில படங்கள் வன்முறையை அழகுப் படுத்தலாக இருக்கிறது.

இப்போது ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு படம்.
ஒரு வித்தியாசமான முயற்சிக்கு செல்வராகவனுக்குப் பாராட்டுக்கள்.அடுத்தக்கட்டத்திற்கான முயற்சி என்று பாராட்டலாம்.

பிரம்மாண்டம் என்றாலே பலமான கதைக்களம் வேண்டும்.அதிலும் நம்ம சேர,சோழ,பாண்டிய, பல்லவ,களப்பிர,ஆர்ய வழி வந்த நம் தமிழ் மக்களுக்கு
எல்லாவிதமான ரசமும் இருக்கவேண்டும். அதனால் நம் டைரக்டர் செல்வராகவப்பெருந்தகை ”ரா”வாகக்கொடுக்காமல்  சரித்திரம்+மாயாஜாலம் சரித்திரம்+மாயஜாலம்+திரில்லார்+அமானுஷ்யம்+குழப்பம்+குத்தாட்டம் என மிக்சிங்கில் கொடுத்திருக்கிறார்.இது உண்மை கிடையாது.ஆனால் உண்மை மாதிரி ஒரு பாவனை பில்ட அப் வேறு கொடுக்கவேண்டும்.செம்ம செம்ம பொறுப்பு டைரக்டருக்கு.

இதில் ஜெயித்தாரா? பார்ப்போம் பின்னால்.

10ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களோடு நடந்த போரில் சோழர்கள் தங்கள் மன்னர் வாரிசு ஒருவரையும்,குலதெய்வ சிலையையும் எடுத்துக்கொண்டு கண்காணாத ஒரு தேசத்தில் போய் ஒளிந்துக்கொள்கிறார்கள்.ரொம்ப வருடத்திற்குப் பிறகு இதைத்தேடிப்போன ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்(பிரதாப் போத்தன்) காணாமல் போகிறார்.

அவரைத் தேடிக்கொண்டு அவள் மகள் லாவண்யா (ஆண்ட்ரியா)தொல்பொருள் ஆராய்ச்சியாளர்/டாக்டர்,மற்றும் இன்னோரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வனிதா பாண்டியன்(ரீமா சென்), கூலி கார்த்திக் என்று இவர்களோடு ஒருபட்டாளம் புறப்படுகிறது அந்த தீவை நோக்கி.ஆனால் அங்கு வேறு ஒரு கதை நடக்கிறது.

கூட வந்தவர்கள் எல்லோரும் இறந்து  மற்றும் காணாமல் போய்விட இவர்கள் மூவரும்(கார்த்திக்,ஆண்ட்ரியா,ரீமா) சளைக்காமல் எஸ்.ராமகிருஷ்ணன் போல் அந்த இடத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என நடக்கிறார்கள்.

முதல் பாதி விறுவிறுவென போகிறது.கேமரா,லொகேஷன்,
இசை என அசத்துகிறார்கள்.தெளிவான கதை சொல்லல்.ஆர்ட்,மூட் லைட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது. போகும் வழியில் சந்திக்கும் ஆபத்துகளும் அதை எதிர்ப்பதும் பல ஹாலிவுட் படங்களை நினைவுப்படுத்துகிறது.

கார்த்திக் பருத்திவீரன் கணக்காக வந்து பின் நவீனத்துமாக கட்டுடைக்கிறார்.ஆண்டிரியா,ரீமாவைப்பார்தது பாலியல் கமெண்டுகளை அடிக்கிறார். பின்னால் நீங்க அக்கா மாதிரி என்கிறார்.கட்டிங் போடுகிறார்.ஆயிரத்தில் ஒருவன் பெயர் வைத்ததின் காரணமாகவே எல்லா கூலி இளைஞ்ர்களும் எம்ஜியார் ரசிகரர்களாக (சங்க கால இளைஞ்ர்கள்?)ஆக்கப்பட்டு “அதோ அந்த பறவைப்போல”பாட்டுப் பாடுகிறார்கள். மேதகு தொல்பொருள் ஆராய்ச்சியாளரும்(ரீமா சென்) இவர்களுடன் கட்டிங்ப் போட்டு குத்தாட்டம் போடுகிறார்.முதல் பாதியில் இவர்கள்தான் கதையை நகர்த்திக்கொண்டுப் போகிறார்கள்.ஆண்ட்ரியாவும் சிடுசிடுவென ஒரு பாத்திரம்.இவர்தான் இந்த டீம்மின் லீட்.





போகும் வழியில் ரீமாவுக்கும்,ஆண்ட்ரியாவுக்கும் ஒருவித பாலியல் ஈர்ப்பு அல்லது ஒரு வித love & hate கார்த்திக் மேல் ஏற்படுவது நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது.இது சம்பந்தமாக மூவரும் சண்டைப்போடுகிறார்கள் போகும் வழியெல்லாம். கார்த்திக் ரெண்டு பொண்டாட்டி கதையாய் டார்ச்சாரகிறார்.அதனால் கட்சி உடைகிறது.ஆண்ட்ரியாவும்,
கார்த்திக்கும் ஒரு கட்சியும்  ரீமா சென் ஒரு கட்சியுமாக பிரிகிறார்கள். இங்கேயே சோழர் vs பாண்டியர்களாக பிரிகிறார்கள்  என கோடிட்டுக்காட்டப்படுகிறது.





Reema Sen  is bold and beautiful. அவருக்கு ஒரு வாழ் நாள் ரோல்.கத்தாழைக்கண்ணாலே(அவருக்கு இருக்கா?) கார்த்திக்கை  மட்டும் இல்லாமல் எல்லோரையும் குத்துகிறார்.சூப்பர்.அவரின் டப்பிங் அருமையான் குரல்.ஆண்டிரியாவும் நன்றாக செய்திருக்கிறார்.ஓலைச்சுவடிகள் படிக்கும்போது நல்ல தமிழிலும், பேசும்போது ஆங்கிலோ இந்திய தமிழ் ஏன்?கார்த்திக்கும் அச்சு அசலாக சால்ட் குவார்ட்டர்ஸ் கூலியாக.நல்ல பாத்திரம்.அருமையாக செய்திருக்கிறார்.

இருவரின் தோரணையை (ஆன் & ரீமா) பார்க்கும்போது ஹாலிவுட் படம் பார்ப்பது போல்வே ஒரு உணர்வு.அடுத்து கட்டுடைத்தல் செய்கிறார்கள். இருவரும் கட்டிங் போட்டுகிறார்கள்.ஒட்டகக் கறி (10 நாள் பட்டினி)
சாப்பிடுகிறார்கள்.கார்த்திக் மேல் உப்புமூட்டை ஏறி சுமக்க வைக்கிறார்கள்.அவர் சுமை கூலிதானே! தூக்குகிறார்.குளிருக்குக் கட்டிக்கொள்கிறார்கள்.”fuck you " "fuck you" என்று சண்டைப் போடுகிறார்கள்.

இப்படிக் கட்டுடையும்போது  நம்ம சேர,சோழ,பாண்டிய, பல்லவ,களப்பிர,ஆர்ய வழி பொதுப் புத்தி ரசிகர்கள் விசில் அடித்து வெறியாகிறார்கள்.


படத்தில் வரும் புதைகுழிப்போல் படத்தின் பின்பாதியில் ரசிகர்களும் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.பின் பாதியை செல்வராகவன் சரியாக ஹோம் செய்யவில்லை.முன்பாதி போல் தெளிவாக இல்லை.குழப்பம்

ஆனா குழப்பம் இல்லாமல் எடுத்திருக்கலாம்.அங்கிருக்கும் மக்கள் சோழ மன்னரின் அடிமைகளா? எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள்? ஏன் அடிமை? அல்லது பாண்டியர்களா? ஏன் நரமாமிசம்? என்று வேறு ஆங்கிளில் சிந்தனைப் போகிறது.நானே சிறிது நேரம் கழித்துதான் விளங்கிக்
கொண்டேன் இவர்கள் எல்லாம் ஒன்றுதான் என்று.


(அடுத்து அவர்கள் அதை எடுத்து விடுவார்கள்.எடுக்கப்போகும்போது ஏற்படும் இன்னல்கள்தான் இனி என்று எல்லோரும் எதிர்ப்பார்க்க,ஆனால் அங்கு வேறு கதை நடக்கிறது)

சோழனாக வரும் பார்த்திபன் ஒகே.கருப்பு நிறத்தால் அவர் செட்டாகிறார்.ஆனால்சோழன் ஹிட்லராக காட்சியளிப்பது அபத்தம்.சீமா திடீர் பாண்டிய பாசம் வந்து திடீரென உக்கிரமாகிறார்.கட்சி மாறுகிறார்கள்.கார்த்திக் விபூதி பூசி திடீரென தேவர்மகனாகிறார்.ஆட்சிப்பொறுப்பேர்க்கிறார்.சண்டை நடக்கிறது. நான் எந்த கட்சி என்றே புரியவில்லை.(ரீமா சென் கட்சி?)

தனித்தீவில் இருக்கும் சோழர்களுக்கு உலகத்தொடர்பு இல்லாததால் பஞ்சம் என்று ஒத்துக்கொள்ளலாம் ஆனால் எல்லோரும் “குணா கமல்” போல் கருப்பாக எதையோ பூசிக்கொண்டு மெண்டலாக இருக்கிறார்கள்.நர மாமிசம் சாப்பிடுகிறார்கள்.Kingkong படம் ஞாபகம் வருகிறது.

பெண்டசி/சர்ரியலிசம்/யதார்த்தம் என ஒரே கிறுக்கல் பாண்டியாக இருக்கிறது.அழுகிறார்கள்/சிரிக்கிறார்கள்/ரத்தம் தெறிக்கிறார்கள்.எவ்வளவு ரசிகர்களுக்குப் புரிந்ததோ?இதன் நடுவே மிருகத்தனமான sports வேறு.எது உண்மை எது பெண்டசி எனப் புரியாமல் தலைச்சுற்றுகிறது.இவர்கள் இப்படி இருப்பது கதைக்கு வசதியாக இருப்பதற்காகவா?

 Operation success but patient died என்ற கதையாகிவிட்டது பின்பாதி.

இசை உறுத்தாமல் நன்றாக இருக்கிறது.பின்னணி ராஜாவின் சாயல்.பாட்டில் ரஹமானின் சாயல்.ஜி.வீ.பிரகாஷ்க்கு இந்த படம் ஒரு புல் மீல்ஸ்.நன்றாக செய்திருக்கிறார்.கப்பலில் ஆடும் நடனமும் ,(இந்தப் பாட்டிற்கு விசில் பறக்கிறது தியேட்டரில்)கோவிந்த கோவிந்த என்ற பாட்டின் நடனமும் வித்தியசமாக அற்புதமாக செய்யப்பட்டிருக்கிறது.Here also Reema Sen  is bold and beautiful.

ஹாலிவுட் படங்களில் தொடர்ச்சியாக பரபரப்பு காட்சி வந்து முடியும்போது “பச்சக்” என ஒரு "frozen shot" ஏதாவது ஒரு ஆங்கிளில் அட்டகாசமாக அமைதியாக காட்டப்படு்ம்.உறுத்தாமல் படத்தோடு ஒட்டி இருக்கும். இதிலும் வருகிறது.ஆனால் ஒரு pattern தெரிந்து உறுத்துகிறது.

அடுத்தக் களத்திற்கு சினிமாவை நகர்த்தியதற்கு செல்வராகவனுக்குப் பாராட்டுக்கள்.அடுத்த தடவை நிறைய ஹோம் வொர்க் செய்யுங்கள்.

.

Wednesday, January 20, 2010

தமிழ்ப்படம் -”நக்கல்” மெலடி பாட்டு

”தமிழ்ப்படம்” என்று ஒரு படம் 29-1-10 ரிலீஸ் ஆகப்போகிறது. அதில் பாடல்கள் கேட்டேன்.பொங்கல் தினம் டீவியில் இதன் விளம்பர வீடியோக்களையும் (பில்ட் அப்?)பார்த்தேன்.இது தமிழ்ப்படங்களின் புளிச்சுப்போன/வழக்கமான “பில்ட் அப்” பற்றிய நக்கல் படம் என்று தெரிகிறது.அந்த விளம்பர வீடியோக்களும் “நக்கல்” தொனிதான்.ஆவலைத் தூண்டுகிறது.

ஆங்கிலத்தில் spoof என்று சொல்லுவார்கள்.ஹாலிவுட் படங்களை நக்கல் அடித்தும் படங்கள் வந்திருக்கிறது.டீவியிலும் “லொள்ளு சபா” “சூப்பர் டென்” என்று  தமிழ்சினிமா படங்களை நக்கல் அடித்து வரும் நிகழ்ச்சிகள் வருவதுண்டு.நான் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சி.”தங்கப்பதக்கம்” “நாளை நமதே” பட நக்கல்களை என்னால் மறக்கவே முடியாது.நடிகர் கார்த்திக்கின் “மெளன ராகம்” நக்கலுக்கு, பார்சலில் வெடிகுண்டு அனுப்பப்பட்டது லொள்ளுசபா சுவாமிநாதனுக்கு.

ஆனால் இந்த படம் வித்தியாசமான நக்கலாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.சொன்ன மாதிரி பாட்டு அப்படித்தான் இருக்கிறது.

நடக்கப்போகும் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆராய்ச்சிக்கு உண்டான தமிழ் சொற்களில் புனைந்த தமிழ்ப்பட பாட்டின் வார்த்தைகளை வைத்து "ஓ! மஹா சியா”)ஒரு பாட்டுப்போட்டிருக்கிறார்கள்.(நாக்கமுக்க,ஓ ஷகலக்க,ரண்டக்க,டோல்டப்பி,பல்லேலக்கா,
உல்லாஹி,அசிலி பிசிலி,டைலாமோ)அதுவும் சிவரஞ்ஜனிராகத்தில்.ஆனால்
“நக்கலாக”நல்ல மெலடியில் கம்போஸ் செய்யப்பட்டிருக்கிறது.ரசிக்க முடிகிறது.(ஹரிஹரன்+ஸ்வேதா)தலைகிழாக பாடல் பாடுவது மாதிரி இருக்கிறது.அதாவது கேசட்டை ரிவர்ஸ்ஸில் போட்டுக்கேட்பது மாதிரி.(இப்போது ஏது கேசட்?)அடுத்து (ராஜா+ரஹ்மான்+வித்யா+விஜய்+ஹாரிஸ்) என்று கிண்டல் அவியல் படைப்பு இசைக்கோர்ப்புகள்.


அடுத்த கிண்டல் ஒரு பெப்பி செக்ஸி பாட்டு.முதலில் வீணையில் தர்பாரி கானடாவில் ஒரு prelude".பாட்டின் ஆரம்ப வரி ”குத்துவிளக்கு, சத்தியமாய் நான் குத்துவிளக்கு”
”அப்பளமாய் என்னை நொறுக்கு”.ஆடுபவர் நடிகை கஸ்தூரி.இது “ஏக் தோ தீன்” பாட்டின் சாயல் அடிக்கிறது.அடுத்து “பச்ச,மஞ்ச,பிங்க், வொய்ட்,ரோஸ் தமிழன் நான்” என்ற பாட்டு. 2011 குறிவைத்துப் பாடுவது.ஆங்கிலம்,தமிழைக் கடித்துக்குதறிப் பாடுவது.

தலைப்பில் “ப்” இல்லாமல் தமிழ்படம் என்றுதான் விளம்பரம் இருக்கிறது.ஏழு எழுத்து ராசி இல்லாமல் ஆகிவிடுமோ?

இதன் ஹீரோ சிவா அழகான அப்பாவி லுக் எனக்குப் பிடித்திருக்கிறது.ரேடியோ மிர்ச்சியில் இருக்கிறார்.இவர் ஆறாவது அல்லது ஏழாது வரைத்தான் படித்திருக்கிறார்.இவரே இதை ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.ஒரு முறை என் கம்பனி விஷயமாக இவரைச் சந்தித்தப்போது பேச்சிலும் இந்த அப்பாவித்தனம் வெளிப்பட்டது.



தமிழ்ப்படத்தை கிண்டல் அடிப்பதால் தயாரிப்பாளர் வீட்டிற்கு “ஆட்டோ” அனுப்ப முடியாது.அனுப்பினால் அனுப்பியவர் வீட்டிற்கே போகும். காரணம் தயாரிப்பாளர் அழகிரி மகன், தயாநிதி அழகிரி.

படிக்க:இளையராஜாவின் -கவுண்டர் பாயிண்ட்

Monday, January 18, 2010

புத்தக கண்காட்சி - தெரிந்தவர் -கவிதை

 புத்தக கண்காட்சி

பயமாய் இருக்கிறது
வாங்கிய புத்தகங்களை
புரட்டுவதற்கு
வாங்காதப் புத்தகங்கள்
கண்களை உருட்டி
மிரட்டுகிறது


தெரிந்தவர்

சட்டென்று பின்பக்கம்
மறைக்கிறேன்
புகைந்துக்கொண்டிருக்கும்
சிகரெட்டை
சற்று முன் பஸ் ஸ்டாண்டுக்கு
”கண்ணா” என்று அழைத்து
வழி கேட்ட
ஒரு வயதான பெண்மணி
எதிர்படுகையில்

Saturday, January 16, 2010

கனிமொழி கவிதை - சிகரங்களில் உறைகிறது காலம்



                           கனிமொழியுடன் பம்பாய் ஜெயஸ்ரீ


மேசை விளிம்பில்
வைக்கப்பட்டிருக்கும்
மெல்லிய கண்ணாடிக்
குவளையைப் போல உள்ளது
நம்பிக்கை

விபரீதமான ஒரு தருணத்தை
எதிர்நோக்கிக் காத்திருக்கிறது
திரவம்

எங்கு வைத்தாலும் நகர்ந்து
விளிம்பில் உட்கார்ந்திருக்கிறது
குவளை
அவசரத்தில் எறியப்படும்
வார்த்தைகளையும்
நழுவி விழும் உண்மைகளையும்
அறியப்படாதுபோகும் ஸ்பரிசங்களையும்
எதிர்நோக்கி
சிதறிப்போதலை வேண்டியபடி
ஆனால்
என்றுமே
காலியாய் இருப்பதில்லை மேசை

நன்றி: ”சிகரங்களில் உறைகிறது காலம்” -கனிமொழி


படிக்க:ராஜிவ் கொலை வழக்கு - புத்தகம்

Friday, January 15, 2010

இளையராஜாவின் -கவுண்டர் பாயிண்ட்

மேற்கத்திய இசையில் கவுண்டர் பாயிண்ட்(counterpoint) எனபது ஒரு இசை நுணுக்க சமாசாரம். மேஸ்ட்ரோ இளையராஜா இந்தக் கவுண்டர் பாயிண்ட் சமாசாரத்தை பல பாடல்களில்  எப்படி பிரமிக்க வைக்கும் (ஒரு மாஜிக் நிபுணர் போல்)முறையில் கையாண்டிருக்கிறார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.


                                 (தல! சிஷ்யன் உங்களயே மிஞ்சிட்டாரு)
இந்த படத்தில் இருக்கும் ஜே.எஸ்.பாக் (Johann Sebastian Bach)என்னும் ஜெர்மன் இசை கம்போசருக்கு இளையராஜா ஆத்மார்த்தமான ரசிகர்.இவரின் காலம் 1685-1750. இவர் (Johann Sebastian Bach) இதை(counterpoint)அதிக அளவில் பயன்படுத்தி இசைக் குறிப்புகளை எழுதுவார்.அதன் தாக்கம்தான் ராஜாவுக்கும்.

டிஸ்கி:இந்த கவுண்டர் பாயிண்ட்(counter point)என்னுடைய கேள்விஞானம்.புத்தகம்,நெட்,நண்பர்கள்,பாடல்கள் என  கேட்டு புரிந்துக்கொண்டு இந்த அறிவை வளர்த்துக்கொண்டேன்.இதுவே முழு விளக்கம் ஆகாது. தவறு இருந்தால் திருத்தலாம்.

கவுண்டர் பாயிண்ட்(counter point) என்றால் என்ன? (சின்ன கவுண்டருக்கும் இந்தக் கவுண்டருக்கும் ஸ்நானப்பிராப்தி கூட இல்லை.)


ஒரு சாதாரண சினிமா பாட்டு என்று எடுத்துக்கொண்டால்:-

1.பாட்டு ஆரம்பிக்கும் முன் குட்டியாக ஒரு இசை வரும்.  
அது (prelude)

2.இது முடிந்தவுடன்  ஒரு பாடகரோ அல்லது  பாடகியோ ஏதோ ஒரு மெட்டில் இரண்டு வரிகளைப்பாடி விட்டு விடுவார். 
இது பல்லவி.

3.பல்லவி முடிந்தவுடன் ஒரு இடையிசை வரும்.  
இது ( interlude -1 ).

4.interlude -1  முடிந்தவுடன் அடுத்து நான்கு அல்லது ஐந்து வரிகள் பாடி மீண்டும் பல்லவி வரிகளை பாடி விடுவார்கள்.
இது சரணம்-1 .

5.இந்த சரணம்-1  முடிந்தவுடன் மீண்டும் ஒரு இடையிசை. 
இது ( interlude -2 ) 

6. interlude -2 முடிந்தவுடன் மீண்டும் நான்கு அல்லது ஐந்து வரிகள் பாடி மீண்டும் பல்லவி வரிகளை பாடி பாட்டை முடிப்பார்கள். 
இது சரணம்-2.

பெரும்பாலும் சினிமா  பாட்டில் வரும் prelude, interlude-1,interlude-2 ன்களின் இசைக்கோர்ப்புகள் இசைக்கருவிகளால் அடுத்தடுத்து இசைக்கப்படும்.அதில் எழும் இனிமை/சத்தம்  முழுவதும்  படர்ந்திருப்பது ஒரே மெட்டு/மெலடி/டுயூன்கள்தான். அதாவது மெயின் பாட்டின் மெட்டுக்கு இசைவாக.எல்லாம் ஒரேதான்.

ஆனால் அப்படி இல்லாமல் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று என பல மெலடிகளை /டுயூன்களை இசைக்கருவிகளில்வாசிப்பது அல்லது குரல்களில் பாடுவது . அவைகளும் வெவ்வேறாகவும்  ஒன்றை ஒன்று சார்ந்தும் அதே சமயத்தில் இவைகள் இசைந்தும்(harmonious) அழகாக போவது. இதுதான் counter point.இதற்கு இதில்  பயிற்சி இருக்க வேண்டும்.

(counterpoint involves the writing of musical lines that sound very different and move independently from each other but sound harmonious when played simultaneously.)

சரி, இது எதற்கு?

1.பாட்டின் அழகை மெருகூட்டுவதற்கு.Romanticization
2.இசையை அடுத்தத் தளத்திற்கு நகர்த்துதல்
3.புது முயற்சி
4.புது உருவாக்கம்(creativity)
5.இசைக்கருவிகளின் நாதத்தை வைத்து சிலம்பாட்டம்
6.கருவிகளின் உரையாடல்
 7.இசைக்கருவிகளின் குட்டி குட்டியான நாதங்களை பயன்படுத்துதல்
8.point,counterpoint,point  என்று தனிதனியாக  நாதங்களை உருவாக்கி அதை எல்லாவற்றையும்  ஒன்றுபடுத்தும் அழகில் எழும் நாதம்

உதாரணமாக கிழ் உள்ள புடவையின் நூல் வேலைப்பாடைப் பாருங்கள். அதே மாதிரிதான் பாட்டின் உள்ளே மேஸ்ட்ரோவின் நேர்த்தியான கவுண்டர் பாயிண்ட் என்னும் இசைக்கோர்வைகளும்.


இந்த கவுண்டர் பாயிண்டுகளைத்தான் முக்கியமாக prelude,  interlude -1 , interlude -2 போன்ற முதல  இடையிசைகளில் வாசித்து பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ.இதில் கர்நாடக இசை ஸ்வரங்களும் மற்றும் ஹம்மிங்களும் ஊடுபாவாக  நெய்திருப்பார்.


 
                    மேஸ்ட்ரோவின் பெண் ரசிகர்கள்  (கவுண்டர் பாயிண்டுகள்?)



இனி மேஸ்ட்ரோவின்  riot of   counterpoints நிறைய பாடல்கள் உள்ளன.சிலவற்றைப் பார்ப்போம்.

ஒரு வேண்டுகோள்! சற்று உன்னிப்பாகக் கேளுங்கள்!

1:அலைகள் ஓய்வதில்லை (புத்தம் புது காலை)
C.PointPuthamPuthu.mp3

ஆரம்பத்தில் ஒரு புல்லாங்குழல் ஒரு மெலடியும்(அ), கும்கும் என்று கிடாரில் வேறு ஒரு மெலடியும்(ஆ),கோரஸ் ஹம்மிங் ஒரு மெலடியும்(இ), கோரஸ் வயலின் ஒரு மெலடியும்(ஈ) எல்லாம் கலந்து இந்த அ,ஆ,இ,ஈ க்களுக்குள் நடக்கும் உரையாடலைக் கவனியுங்கள்.இனிமை!இனிமை!இனிமை!

அட்டகாசம்.

1A.அவதாரம் (தென்றல் வந்து தீண்டும்போது

அவதாரம்

இந்தப் பாட்டின் prelude 00.00 இருந்து 00.08 வரை ஒரு ”தானத்தந்தம்” என்று ஒரு பெண் குரலும் அதற்கு கவுண்டராக வேறு ஒரு “தானத்தந்தம்”பெண்குரலும் விதவிதமாக பின்னிக்கொண்டே வரும். 00.09ல் இசைக்கருவி இழைகள் (bells,synth,violin,humming)  இதோடுப் பின்னிக்கொள்ளும்.ராஜா 00.17ல் “தந்த தந்த தான” என்று இவைகளுடன் சேர்ந்துக்கொள்வார்.முதல் அடுக்கில் ராஜா ஒரு மெலடியும்,இரண்டாவது அடுக்கில் பெண்குரல் இதற்கு கவுண்டராக வேறு மெலடியும், மூன்றாவது அடுக்கில் பெண் குரல்  முற்றிலும் வேறாக ஹம்மிங்குகள் நெய்யப்பட்டிக்கும். இது தவிர இதனூடே இசைக்கருவிகளும் பின்னிக்கொண்டே வரும்.ஆனால் எல்லாம்  harmonyஆக இசைந்து வரும்.


மெதுவாக ஊர்ந்து வரும் இவைகள்   ”தென்றல் வந்து தீண்டும்” என்று பல்லவி யை ராஜா ஆரம்பிக்க 0.32ல் டிரம்ஸ்ஸால் அறைந்து அறைந்து பாட்டின் டெம்போ மெதுவாக  உயர்ந்துக்கொண்டே வர  0.38 to 0.39ல் ஒரு இசை இழை (என்ன கருவி?) மெலிதாக தழுவி விட்டுப் போகும்.அசத்தல்!

இதுதான் கவுண்டர் பாயிண்ட்.

பார்வையற்றவர்கள் பாடுகிறார்கள் என்பதைக் கற்பனைச் செயதுக்கொள்ளுஙகள்.Hats of Maestro!

2. திருவாசகம் சிம்போனி:பூவேறு கோனும் புரந்தரனும்
   (கவுண்ட் 0.06 to .24)
CpointPooverukonum-Thiruvasagam.mp3

இதில் உண்மையாக வயலின்/சாரங்கி,புல்லாங்குழல்/கிடார் எனநெய்திருப்பார்.என்ன உச்சரிப்பு.
3.பன்னீர் புஷ்பங்கள்(ஆனந்தராகம்)(கவுண்ட் 0.06 to .26)
 ஆரம்பம் வயலின் ரகளை.cello,flute,synth,violin என்று பின்னல்.இதனிடையே சிம்மேந்திர மத்யமம் என்கிற ராகம் கசியும்.

CpointAnandaRaagamKetkum.mp3
 
4.கோழிகூவுது (ஏதோ மோகம்): 0.01 - 0.15

 CpointYethoMoham.mp3
 

இது நமக்கானப் பாட்டா?அவருக்கா?

5.மண் வாசனை (பொத்திவச்ச)1.24 - 1.33

 MCpointPotthiVecha.mp3

6.அரங்கேற்ற வேளை(ஆகாய வெண்ணிலாவே) (0.58 - 1.18)
  CpointAgayavennilave.mp3


என்ன ஒரு மங்களகரமான ஆரம்பம்.
இந்த கவுண்டின் லீடில் ஒரு வயலின் மெலிதாக தர்பாரி கானடாவை தீற்றிக்கொண்டே வர பின்னணியில் அண்ணன் வயலின்மார்கள் துரத்திக்கொண்டே வர..... மேஸ்ட்ரோவின் பிரமிக்க வைக்கும் கற்பனை.

 7.வைதேகி காத்திருந்தாள்(மேகம் கருக்கயிலே)0.00 -0.22
மேகம் கருக்கயிலே

8.பதினாறு வயதினிலே(செந்தூரப்பூவே)1.13 -1.20
  CpointSenthooraPoove.mp3


9.சத்ரியன்(மாலையில் யாரோ மனதோடு)
 (0.05-0.17)

CpointMaalayil.mp3

 இது பூமிக்காகப் போடப்பட்ட பாட்டல்ல.காதல் கிரகம் வீனஸ்ஸூக்குப் போடப்பட்டது.முதலில் வரும் interlude கற்பனையின் உச்சக்கட்டம்.It is a stunner.

நான் பேசுவதை விட  என் ரசிகர்களோடு என் இசை மூலம்தான் பேசகிறேன் - இளையராஜா

படிக்க:
இளையராஜா-பாலுவை கேளடி கண்மணி

Monday, January 11, 2010

ஒரு மூனு பேரு - கிராமத்துக் கதை

ஒரு மூனு பேரு. அந்த மூனு பேருல ஒருத்தனுக்கு கை எல்லாம் சிறங்கு. ஒருத்தனுக்கு ஊள மூக்கு. ஒருத்தனுக்கு பூள தள்ளி கண்ணு. மூனு பேரும் ஒரு போட்டி போடுறாங்க.நாம ஒரு பத்து நிமிசமாவது எதும் செய்யாம இருக்கணுமுன்னு சொல்லவுமெ போட்டி ஆரம்பமாயிருச்சு.


சிறங்கு வத்திக்காரன் கைய சொறியக் கூடாது. ஊள முக்குக்காரன் மூக்கச் சீந்தக் கூடாது. பூளதள்ளி கண்ணுல ஒட்டுற கொசுவ அவன் பத்தக்கூடாது. இதுதான் போட்டி.மூனு பேரும் போட்டி பத்து நிமிசங்கறதால ஊள முக்குக்காரனுக்கு வாய் வர மூக்கு வடிஞ்சிருச்சு. பூள தள்ளிகாரனுக்கு கண்ணெல்லாம் கொசுவா அப்புது. சிறங்குக்காரனுக்கு கையெல்லாம் நமநமன்னு அரிக்குது. அப்ப மூனு பேரும் யோசன பண்றாங்க.

அதுல சிறங்குவத்திக்காரன்  சொல்றான் எங்க வீட்ல எங்க ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் இப்படித்தான் சண்டை வரும்.இப்படித்தான் சண்டை வரும்னு சொல்லி கைய பிணஞ்சு காட்டி அரிப்ப தீத்துக்கிட்டான்.

ஊள முக்குக்காரன் யோசன பண்ணி எங்க அப்பா வீட்ல ஒரு செம்மறிக்கடா வளத்துகிட்டு இருக்கு. அந்த கிடாவுக்கு இங்கிட்டாம ஒரு கொம்பு.இங்கிட்டாம ஒரு கொம்புன்னு சொல்லி ரெண்டு கையயும் வச்சு ரெண்டு புறத்துலயும் ஒரு இழு இழுத்து மூக்கத் துடச்சுக்கிட்டானாம்.

 பூள தள்ளகாரன் சொன்னானாம்  இப்படி ரெண்டு கையால முகத்துக்கு நேர அடிச்சு அம்புட்டும் பொய்.அம்புட்டும் பொய்யின்னு சொல்ற மாதிரி சொல்லி கொசுவ பத்திட்டானாம்.


நன்றி: கிராமத்துக் கதைகள் - முனைவர் ந.சந்திரன்.

படிக்க:ராஜிவ் கொலை வழக்கு - புத்தகம்

பெற்றோர் - ஆசிரியர் --பின்னூட்டம்

பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு என்னும் சம்பிரதாயம். இது வருடத்திற்கு இரண்டு முறையோ நான்கு முறையோ பள்ளியில் படிக்கும் தம் குழந்தைகளின் ”எப்படி படித்துக் கிழிக்கிறார்கள்” பற்றிய பின்னூட்டத்தை(feed back) நேரடியாக ஆசிரியர்களிடம் பெறுவதுதான்.பெற்றுக்கொண்டு சீர்படுத்துவது.இங்கு அனானி பின்னூட்டம் இல்லை.பிள்ளைகளின் ”ஓபன் சீக்ரெட்”

இது எவ்வளவு பள்ளிகளில் இருக்கிறது என்பது தெரியாது.

இதில் “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை _________ “எனக்கேட்க அம்மாவும் “ மகன் தந்தைக்கு _____________இவன் தந்தை  என்னோற்றன் கொல்லொனுஞ் சொல்”லை கேட்க அப்பாவும் வருவதுண்டு. கடந்த நான்கு வருடங்களாக நிறைய அப்பாக்கள் தென்படுகிறார்கள்.

என் வீட்டில் மாறிமாறிப் போவதுண்டு.நான் போவதற்கு முன் எனக்கும் ஒரு கலந்தாய்வு (கவுன்சிலிங்) நடக்கும்.அங்கு போய் இதைப் பற்றி பதிவுப் போடுவதற்கு மண்டையில் யோசித்துக்கொண்டிருக்காமல் ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதை கவனமாக காதில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்பதாக."படிப்பு முக்கியம்...பதிவு அல்ல.understand?" "Yes.... mam!"
 
புத்தகத்திருவிழாவில் ஸ்டால் ஸ்டாலாகப் போவது போல் இங்கு வகுப்பு வகுப்பாகப்  போக வேண்டும்.முக்கால்வாசி கவலைத் தோய்ந்த முகங்களைப் பார்த்தாலும் இங்கு நடக்கும்  இந்த சந்திப்புகள் பார்த்தால்  நன்றாக பொழுதுபோகும்.

ஆசிரியரைக் கும்பலாக சூழ்ந்துக்கொண்டு மற்ற குழந்தைகளின் மார்க்கை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு அவர்களின் “ஓபன் சீக்ரெட்டை”காதில் கேட்டுக்கொண்டுதான் நடக்கும்.அடுத்து அழுவது.ஒரு முறை ஒரு மாணவனின் தாயார் (விசும்பி விசும்பி) அழுதைப் பார்த்தேன்.(இது கண்டிப்பாகத்  தவிர்க்க வேண்டிய செயல்.)பிறகு மாணவ/வியின் காதைத் திருகி அங்கேயே கண்டிப்பது.அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் குழந்தைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது.
  
ஒரு ஆசிரியர் ஒரு நாளில் கிட்டத்தட்ட 200 பெற்றோர்களைச் சந்தித்து பின்னூட்டம் கொடுக்கிறார்.பரிதாபம்.முப்பது அல்லது நாப்பதாவது பின்னூட்டத்திலேயே சலிப்பு வந்து ரோபோவாகி “டெம்பிளேட் பின்னூட்டம்” ஆகிவிடுகிறது. ”நிறைய பிராக்டீஸ் பண்ணனும்” “கான்செப்ட்ட தெரிஞ்சிகிடனும்””சில்லி மிஸ்டேக்ஸ்””வாய்விட்டு படிக்கணும்” “She/He can still do better"”lacking concentration".
 
( Lacking concentration எனும்போது இப்போது இருக்கும் தலைமுறைக்கு கவனக்கலைப்புகள் அதிகம்.இதிலிருந்து மீண்டு படிப்பில் பாடம் செலுத்துவது இமாலய சாதனை.)இது பெற்றோர்களுக்கும் ஒரு சவால்.இதில் பல பெற்றோர்கள் சலித்துப்போய் அலுத்து நொந்து விடுகிறார்கள்.

இங்கும் ஒரு பக்கப் பார்வைதான்(one sided view) பார்க்கப்படுகிறது.அதாவது ஆசிரியர்களிடம் குற்றமே இல்லாத மாதிரியும் மாணவ/விகள்தான் முழு பொறுப்பு என்பதாக.பெற்றோர் மற்றும் குழந்தைகளிடமும்  பதிலுக்கு உண்மையான “டெம்பிளேட் பின்னூட்டங்கள்”தொண்டையில் உண்டு.ஆனால் சொல்வதில்லை. அவை” போர்ஷ்ன்களை மின்னல் வேகத்தில் நடத்திக்கொண்டுப் போவது” “பாடத்தை எழுதுவதற்குள் அழித்துவிடுவது””எப்படி இருந்தாலும் மாணவ/விகள் டுயூஷன் வைத்துவிடுவதால் மேலோட்டமாக சொல்லிக்கொடுப்பது”” மார்க் குறைந்தாலும் பணம் இருப்பதால் இன்ஜினியரிங் கல்லூரி சேர்த்துவிடலாம்”

வகுப்பில் ஆசிரியர்களின் கண்டிப்பில் வீரியம்  குறைவாகத்தான் இருக்கிறது.காரணம் மாணவ/விகள் தற்கொலை.மனித உரிமைக் கழகம்.ஏதாவது நடந்தால் ரெடியாகக் காத்திருக்கும் புலானய்வு ஊடகங்கள்.

நான பார்க்கும்  உலக மகா அபத்தம் கம் குற்றம்  ஒரு வகுப்புக்கு 65 மாணவ/விகள் மேல் இருப்பது.இருக்க வேண்டியது 30.எவ்வளவு சொல்லியும் இந்த டெம்பிளேட் பின்னூட்டத்தை யாரும் காதில் போட்டுக்கொள்வதில்லை.

குறைவாக மதிப்பெண் பெறும் மாணவ/மாணவிகளின் பெற்றோர்களுக்கு எங்கு தவறு என்று நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது.தெரியவில்லை என்றால் முட்டாள் பெற்றோர் என்றுதான் சொல்வேன்.

சில படித்தப் பெற்றோர்கள் டுயூஷன் வைக்காமல் சொல்லிக்கொடுக்கிறார்கள்.ஆனால் இதற்கு.எல்லையில்லா பொறுமையும் எனர்ஜியும் வேண்டும்.அதுவும் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கும் வீடு? அம்மாடியோவ்!


பெரும்பாலும் கணக்குப்பாடத்தில் சறுக்குவது சகஜம்.காரணம் இதில் கதை விட முடியாது. அடிப்படைத் தெரியவேண்டும்.கவனம் குறைந்தால் காலிதான்.

அடுத்து ஆங்கிலம்.இலக்கணம் மிக முக்கியமானது.ஆசிரியர்/மாணவர் இரண்டுமே இங்கு சொதப்பல். மூன்றாம் நான்காம் வகுப்பிலேயே அடித்தளம் பலமாக போட வேண்டும்.இல்லாவிட்டால் காலி.தமிழ்(2nd language) இங்கும் சொதப்பல்.காரணம் மற்ற பாடங்களை ஆங்கிலத்தில் படிப்பதால்.இதை இரு தரப்பும் அவ்வளவாக கண்டுக்கொள்வதில்லை.காரணம் இது சோறுப் போடப்
போவதில்லை என்பதால்.பிளாக் எழுத உதவும்(????).

என் மகன் 2nd language தமிழ்தான். ”ஐனூத்தி என்பத்தி நாலு ரூபாய்” என்பதை மார்வாடி போல் தட்டுத்தடுமாறி உச்சரிப்பான்.


இந்த சந்திப்பில் வெளி வரும் விஷயங்கள்:

  • பாடத்தின் அடைப்படையை மண்டையில் ஏற்றுதல்
  • மாணவ/விகளின் சோம்பேறித்தனம்
  • கணக்கில் பயிற்சி நிறைய செய்யவேண்டும்.அசுர சாதகம்.போட போட கணக்கு, பாடபாட பாட்டு.....
  • அடித்தளம் பலமாக இருக்கவேண்டும்.இது ஆரம்ப நிலையிலேயே
  • பொறுமையின்மை(பெற்றோர்/குழந்தைகள்)
  • கவனக்கலைப்புகளை கண்டறிதல்
  • டீச்சர்களுக்கும் கவனக்கலைப்புகள்
  • பாடச் சுமை
  • வாய்விட்டுப் படித்தல்
  • தனி கவனம் இல்லாமை
  • கூலிக்கு மாரடைப்பது

கவனக்கலைப்பு: டிவி,ரேடியோ,டிவிடி,நண்பர்கள்,வீட்டு உறுப்பினர்கள்,ஷாப்பிங்,குர்குரே இத்யாதிகள்

Thursday, January 7, 2010

கி.வா.ஜா.பதில்கள்-புத்தகம்

கேள்வி:அண்ணாச்சி என்று தமையானரைக் குறிக்கத் தமிழ் நாட்டில் சில பகுதிகளில் சொல்கிறார்கள். இந்திப் பெயர்களில் “ஜி” என்பது மரியாதையைக் குறிக்க வரும் விகுதி.அண்ணாஜி என்பதே அண்ணாச்சியா?

பதில்: உறவின்முறைப் பெயர்களுக்குச் “சி” என்பதை சேர்த்து வழங்குவது தமிழ் நாட்டில் ஒரு வழக்கு.ஆய் என்பது ஆய்ச்சி(ஆச்சி) அப்பன் என்பது அப்பிச்சி என்றும் அக்கா என்பது அக்கைச்சி என்றும் தங்கை என்பது தங்கச்சி என்றும் வழங்குவதைக் காணலாம்.”சி” என்பதைச் சேர்த்து வழங்கும் முறை தமிழ் வழக்கே என்று கொள்ள வேண்டும்.

கேள்வி: சும்மா என்பது சுகமாக என்றதன் சிதைவா?

பதில்:வாளாது என்ற சொல் வாளா என்று வருவது போலச் சும்மாது என்பது சும்மா என்று வந்தது..உலக்கையினால் குத்தும்போது”சும்சும்” என்று மூச்சு விடுவார்கள்.அப்போது “சும்மேலோ சும்முலக்காய்” என்று பாடுவதாக பரணி நூல்களில் வருகிறது.”சும்முதல்”என்பதை மூச்சு விடுதல் என்று பொருள் கொண்டு,மூச்சு விடாமல் இருப்பதைச் சும்மாது இருத்தல் என்று கொள்ள வேண்டும். பின்னால் இது சும்மா,பேச்சற்று,செயலற்று என்ற பொருள்கள் வந்திருக்க வேண்டும்.

 கேள்வி: புத்தகங்களை ஏன் நூல் என்று குறிப்பிடுகிறார்கள்?

பதில்:இது உவம பெயர் ஆகும்.பஞ்சினை ஒரு பெண் ராட்டையில் கதிரின் முனை வழியாக நூற்றுக் கையால் நூலை உண்டாக்குவது போல, சொல்லால் புலவன் தன் மதிநுட்பம் கொண்டு வாயால் நுவல்வதால் நூலாயிற்று (உவமையாயிற்று).

 கேள்வி:பிலாக்கணம் என்ற பெயர் எப்படி வந்தது?

பதில்:பிணக்கானம் என்பதே பிலாக்கணம்

கேள்வி: கொள்ளுப்பேரன்,எள்ளுப்பேரன் எப்படி வந்தது?

பதில்:கொள்ளைவிட எள் சிறியது.உறவு சிறுத்தவன் என்பதனால் அப்பெயர் வந்தது.A,B,C,D,E, என்றவர்கள் உறவு முறை Aயின் மகன்B, B யின் மகன்C, C யின் மகன்D, D யின் மகன்E என்று கொண்டால் Aக்கு பேரன்C, கொள்ளுபேரன்D, எள்ளு பேரன்E.

 கேள்வி:  ”எங்கும் செத்து நாக்குச் சாகவில்லை” இதன் கருத்து?

பதில்:மனிதனுக்கு முதுமை வரவர அவனுடைய புலன்கள் மங்கிடும்.ஆனால் நாக்கு சபலம் மட்டும் விடாமல் நிற்கும்.

 கேள்வி: அத்திம்பேர் என்பது எந்த உறவைக்குறிக்கும்?

பதில்:இது அந்தணர்கள் சொல் வழக்கு.அத்தையின் கணவரையும்,தமக்கையின் கணவரையும் அத்திம்பேர் என்பர்.அத்தையின் அன்பர் அத்திம்பேர்.தமக்கையின் கணவர் அத்தான் என்பது ஒரு வழக்கு.அத்தானின் அன்பர் அத்திம்பேர் ஆகியிருக்கலாம்.

நன்றி: கி.வா.ஜா. பதில்கள்-1 - அல்லயன்ஸ் பதிப்பகம்.(இதில் மூன்று பாகம்(1,2,3 ) உள்ளது.வாங்கினால் மூன்றும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும்.தனியாக வாங்க முடியாது)


படிக்க:ராஜிவ் கொலை வழக்கு - ரகோத்தமன்

Wednesday, January 6, 2010

ராஜிவ் கொலை வழக்கு - புத்தகம்




                           பட்டுக்கோட்டை பிரபாகரின் க்ரைம் திரில்லர் நாவல் மாதிரி விறுவிறுப்பான சம்பவங்கள் கொண்டது ராஜிவ் படுகொலை.Facts are stranger than fiction.நாவலையே மிஞ்சும் அளவுக்குநாட்டுப்பற்று,வீரம்,காதல்,சோகம்,
காமெடி,தற்கொலை,மரணம்,வருத்தம்,துரோகம்,பக்தி,மெத்தனம்,அரசியல்,குழந்தை பிரசவம்(நளினி)  எல்லாமும் கலந்த ஒரு நிகழ்வு.


இந்த ஸ்கூல் பெண்ணும் பச்சைப் புடவையும் கோடியில் நிறகும் அந்த பெண் இன்ஸ்பெக்டரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் .தணுவோடு சேர்ந்து...................................?

இதன் லொகேஷன்கள் ஸ்ரீபெரும்பதூர்,முனியாண்டி விலாஸ்,ராயப்பேட்டை,மேற்கு மாம்பலம்,நாதமுனி மற்றும் ராயல் தியேட்டர்கள்,விஜிபி கோல்டன் பீச்,நாதமுனி பிள்ளையார் கோவில்(ராஜீவை கொல்லப்போவதற்கு முன் தணு பிராத்தனைச்செய்த இடம்)பாண்டிபஜார்,வில்லிவாக்கம்,
வடபழனி என நான் புழங்கிய இடங்கள் வருவது திகில் கலந்த ஆச்சரியம்.கடைசியில் கோனான குண்டேயில் முடிகிறது.


இதற்கு பின்னணி இசைதான் இல்லை.
ராமாயண மகாபாரதம் போல் குறுக்கும் நெடுக்கும் வந்து போகும் எவ்வளவு கதாபாத்திரங்கள்?ஒருவர் பெயர் தேள்கடி ராமமூர்த்தி.ஒரு கதாபாத்திரத்திற்கே பல பெயர்கள்.பாக்கிய சந்திரன் என்கிற ரகுவரன் என்கிற சிவராசன்   என்கிறவர் கொலைக்குப் பிறகு “ஒற்றைக்கண்” சிவராசன்.அதே மாதிரி முருகனுக்கும்.ரவிசங்கரன் (??)எனபவர் கூட வருகிறார்.ஒரு கேமரா.மற்றும் சஸ்பென்ஸ் கதைகளில் வரும் ஒரு விசிட்டிங் கார்ட் இதிலும் பாத்திரமாக வருகிறது.


சுபா மற்றும் நளினி


நமக்கு திரில்லர்.சோனியாவுக்கு மாபெரும் இழவு.ராஜிவின் கூட இறந்தவர்களுக்கும் தாங்க மாட்டாத சோகம்.பிரபாகரனுக்கு ராஜிவின் துரோகத்திற்கு ஒரு பாடம். துன்பவியல் சம்பவம். இதற்கான விலையைக் கொடுத்து விட்டார் போராளி பிரபாகரன். .

1983ல் ஈழத்தில் நடந்த படு கொலைக்காக  ஒரு நாள் பந்த் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.அப்போது தமிழ் நாடே இதய பூர்வமாக சகோதர தமிழருக்காக அதைஅனுசரித்தார்கள். வெகுளித்தனமான  பொது புத்தியில் எல்லாம் நல்லா படியாக நடந்து  ஹீரோ பிரபாகரன் ஈழத்தைப் பெற்று சூப்பராக ஆள்வார் என ஒரு எண்ண ஓட்டத்தோடு இருந்தார்கள். ஆனால் 1991ல் நடந்த ராஜிவ் படுகொலை எல்லாவற்றையும் தலைகிழாகப் புரட்டிப்போட்டுவிட்டது.அதே வெகுளித்தனமா பொதுபுத்தியில் “அடக்கடவுளே! நீங்களா இப்படி?” என்றும் எண்ணவும் வைத்துவிட்டது.


அடுத்த இரண்டு அல்லது மூன்று செகண்டுகளில்...............?


வழக்கமாக முன்னாள்/இன்னாள் இந்திய பிரதமர்கள்,குடியரசு தலைவர்கள்,அமைச்சர்கள் மாரடைப்பு,தூக்கத்தில் இறப்பார்கள்.ஒரு நாள் விடுமுறை விடப்படும்.ஒரு வாரம் ஷெனாயில் துக்கம் கொண்டாடுவார்கள்.


Rajiv gandhi assassination Photos














ஆனால் ராஜிவ் இறந்த விதம் பார்த்து தமிழ்நாடே வெலவெலத்துப்போனது. கொடூரத்தின் உச்சம்.


இனி புத்தகத்திறகு வருவோம்.

ஓய்வு பெற்ற  தலைமைப் புலனாய்வு அதிகாரி கே.ரகோத்தமன் என்பவரால் எழுதப்பட்டு கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.எளிய நடை.பரபரப்பு இல்லை.அரசியல் இல்லை. தன் மத்திய அரசு பணி நோக்கில் மெல்லிய குரலில் (softer tone) எழுதி இருக்கிறார்.பக்கத்தில் உட்கார்ந்துப் கதைக் கேட்பது போல் உள்ளது.(சில விஷயங்கள் பத்திரிக்கைகளில் படித்த விஷயம்தான்)

இந்தியாவிற்கே உரித்தான புரையோடிப்போன அரசாங்க இயந்திரத்தின் மெத்தனத்தைப் பற்றி வருத்தப்படுகிறார் நிறைய இடங்களில்.இதனால வெளி வரவேண்டிய நிறைய விஷயங்கள் ஆழமாகப் புதைந்துப் போய்விட்டது என்கிறார்.தமிழ்நாட்டில் நிறைய பேருக்கு இப்படி நடக்கப் போகிறது என்பது முன்னமே தெரிந்தும் இது நடந்துவிட்டது குறித்தும் வருத்தப்படுகிறார்.நடக்காமல் இருந்தால் தனி ஈழம் கிடைத்திருக்கலாமோ என்கிறது மீண்டும் பொது புத்தி.

சுவராஸ்யமான சில விஷயங்கள்:

(கொலை நடந்த இரவு ரகோத்தமன் பெங்களூருவிலிருந்து சென்னை வந்துக்கொண்டிருந்தார்.சென்னையில் விடிகாலையில் இறங்கியதும்தான் தெரிந்தது.சொந்த கார், ஆட்டோ எதுவும் கிடைக்காமல் எக்மோர் வரை நடந்தே சென்று இருக்கிறார்.வீட்டுக்குப் போனால் விசாரணை அஸைன்மெண்ட் காத்திருந்தது.)

  • நளினி நன்றாக ஆங்கிலம் பேசுவார்.எம்.ஏ.படித்தவர்.
  • ஒரு கட்டத்தில் நளினி-முருகன் தீவர காதலால் இந்த அஸைன்மெண்டுக்கு தொய்வு வந்து முருகன் ஈழத்திறகு திரும்பி அழைக்கப்பட்டார்.ஆனால் இதே காதலால்தான் படுகொலையும் சாத்தியமாகும் என்பது தெரிந்து  மீண்டும் சென்னைக்கே அனுப்பிவைக்கப்படுகிறார்.
  • தி.நகர் பாண்டிபஜாருக்கு ஷாப்பிங் போன சுபா ஒரு சர்தார்ஜியைப் பார்த்து ”இவனங்க பண்ண அட்டகாசம்” என்று ரொம்ப ஆவேசமாகி இருக்கிறார்.நளினி அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார்.
  • இதில் ஒரு கேமரா முக்கியமான பாத்திரம்.இதில் உள்ள நெகட்டீவ் பிர்ண்ட் போடுவதறகு நல்ல கடைகள் அங்கு இல்லாமல் ஹிண்டு ஆபிசில் பிரிண்ட்ப் போடப்பட்டது.
  • பத்திரிக்கையாளர்கள் தகவல் தொடர்புக்காக ஒரு போலீஸ் ஸ்டேஷன் போய் போன் செய்து தகவல் தெரிவித்து உள்ளார்கள் கொலைப் பற்றி.
  • (ஆங்கிலத்தில் spill the beans என்று சொல்வார்கள்.தெரியாமல் செய்து மாட்டிக்கொள்வது.)இதுதான் கொலைக்கான முக்கியமான லீட்.அந்த குடிசை வீட்டுக்கு,ஹரிபாபுவின் வீட்டிற்கு,விசாரணைக்குப் போன ரகோத்தமனுக்கு(இந்த புத்தகத்தை எழுதியவர்) டீ வாங்க ஹரிபாபுவின் அம்மா பணம் எடுக்க பிளவுசுக்குள் கைவிட்டு எடுக்கும்போது கத்தை கத்தையாக 100 ரூபாய் நோட்டுக்கள்.சொதப்பல்.
  •  கொலைக்கு சில நேரங்களுக்கு முன் ஸ்ரீபெரும்பதூரில் தணு கனகாம்பரம் பூவும்,சுபா மற்றும் நளினி மல்லிகைப்பூ வாங்கிவைத்துக்கொண்டார்கள். 
  • ராஜிவுக்குப் போட்ட சந்தன மாலை விலை 65/-வாங்கிய நாள் 21.5.91.இடம் மவுண்ட் ரோட் பூம்புகார் எம்போரியம்.இங்குதான் குவாலிட்டி கிடைக்கும் (கம கமவென்று மணக்க வேண்டும்)என்று சிவராசன் கண்டிப்பாகச் சொல்லி வாங்கப்பட்டிருக்கிறது.இதன் போட்டோ காபி இந்த புத்தகத்தில் உள்ளது.முக்கியமான சாட்சியம்
  • கொலைக்கு முன் பிள்ளையாரை(நாதமுனி தியேட்டர் அருகே) பிராத்தனைச் செய்ய கோவிலுக்குப் போனார் தணு. மாலை நான்கு மணி என்பதால் கோவில் மூடி இருந்தது. வெளியில் நின்றபடியே பிராத்தனைச் செய்து விட்டு கிளம்பினார்.
  • தாமதம் இல்லாமல் ராஜீவ் மேடைக்கு வந்திருந்தால் போட்டோகிரபர் ஹரிபாபு உயிர் பிழைத்திருப்பார்.தணு அவசரப்பட்டு விசையை,ராஜிவின் சிவப்பு கம்பள் விரிப்பு நடப்பில், இயக்கிவிட்டார்.
  • “பாபு,நீ வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டுக்கு வரும்வரை”தாலியை காப்பாற்று” என்று கடவுளிடம் கண்ணீர் விட்டு வாழ என்னால் முடியாது” இது ஹரிபாபுவின் காதலி சுந்தரி எழுதியது.
  • ”இது LTTE செய்திருக்க மாட்டார்கள். I have mole in LTTE.அவர் கிட்டு.இவர் சொன்னார்.இவர் சொன்னால் சரியாத்தான் இருக்கும்”  சொன்னவர் இந்திய “ரா” அமைப்பின் தலைவர் பாஜ்பாய்.
 அன்றும் சரி இன்றும் சரி நான் பிரமிக்கும் ஒரு விஷயம் இந்த போராளிகளின் நாட்டுப்பற்று மற்றும் உயிர்தியாகம்.மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த அடுத்த நிமிடத்தில் “குப்பி” கடித்து இறப்பது.

இதில் இறந்த போன ஈழவிடுதலை ஆதரவாளர் டிக்ஸன் எழுதியகடிதத்தில்”திரு.கார்த்திகேயன் (புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி)அவர்களே,தங்கள் திறமைக்கு எங்கள் பாராட்டுக்கள்.”என்று இருந்ததாம்.