மழை, தென்றல்,சாரல் போன்ற சொற்களுக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதைப் போல “ஈரம்”என்று சொல்லுக்கும் நிறையவே உண்டு.உச்சரிக்கும் போதே சற்று நனைவது போல ஒரு ஈர்ப்பு.
இந்த ஈரத்தை சொதசொதக்க வைக்காமல் ஒரு வசீகரமான பய ஈர்ப்பை அட்டகாசமாக கொண்டுவந்திருக்கிறார்கள். பொருத்தமானத் தலைப்பு.
அசட்டுத்தனமான ராத்திரி 12மணி,பேய்,எலும்புக்கூடு,முக்காடு,வெள்ளை உடை,’ஊஊ” என்ற ஊளையிட்டு பயமுறுத்தாமல் ரொம்ப நாளைக்குப் பிறகு பார்த்த புத்திசாலித்தனமான “சஸ்பென்ஸ் திரில்லர்”படம் ”ஈரம்”.(eeram).ஓமன், எக்ஸார்சிட் போல பேயில்லாமல் தண்ணீரை வைத்து ஒரு திகில் படம்.
உண்மையாகவே ”அடுத்தது என்ன” ”சீட் முனை” ”நகம் கடிக்க வைக்கும்”சஸ்பென்ஸ் என்று ஒவ்வொரு காட்சியிலும் உணர வைக்கும் படம்.
”அவிங்க” “இவிங்க”மதுரை அறுவை இல்லாத வித்தியாசமான கதை.
ஒரு பிளாட்டில் புதிதாகத் திருமணமான பெண். கடிதம் எழுதிவிட்டு நிறைய தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு குளியலறைத் தொட்டியில் பைப்பை திறந்து விட்டபடி தற்கொலைச் செய்துக்கொண்டு தண்ணீரில் முழ்கி இறக்கிறாள்.கொலையா? தற்கொலையா? துப்புத் துலக்குகிறான் அந்த பெண்ணின் முன்னாள் காதலன் அசிஸ்டெண்ட் கமிஷனர்.
அதைத் தொடர்ந்து அந்த பிளாட்டில் வசிக்கும் இரண்டு பேர்,வாட்ச்மேன்,வேறொருபெண்ணின் பாய் பிரெண்ட் அடுத்தடுத்து ஈரம்(தண்ணீர்) சம்பந்தப்பட்டே சாகிறார்கள்.மற்றும் இரண்டு பேர் ஈரத்தால் மிரட்டப்படுகிறார்கள்.சாவுகளுக்கு காரணம் யார்? ஈரம் என்ற அமானுஷ்யமா? வேறு ஆளா?இதுதான் கதை.படத்தைப் பாருங்கள்.
ஆரம்ப காட்சியே அட்டகாச மேகமூட்ட நீல மூட் லைட்டிங்கில்தான் பிரம்மாண்டமான பிளாட்டில் ஆரம்பிக்கிறது.பிளாட் கொலை முடிந்து பிணத்தை எடுத்து முடித்தவுடன் அந்த பாத் டப்பின் அவுட்லெட்
”பச்சக்” என்று மூடப்பட படம் விறுவிறு.
அப்போது ஆரம்பித்ததுதான் மெதுவான தூரல் படம் முழுவதும் முக்கால் வாசி சிரபுஞ்சிதான்.
காட்சிகள் ப்ளாஷ் பேக்கிற்கும் நடப்பு காட்சிகளுக்கும் உறுத்தாமல் அற்புதமாக முன்னும் பின்னும்(cascade) வழுக்கிக்கொண்டுப்போகிறது.
நடிப்பில் முதல் மார்க் புதுமணப்பெண்ணாக வந்து இறக்கும் சிந்து மேனன். ஒரு இஞ்ச் கூட சிதறாமல் உருவாக்கியிருக்கிறார்கள்.நம்பகத்தன்மை.
அடுத்து நந்தா.அதுக்குப்பிறகுதான் மற்றவர்கள்.ஹீரோ ஆதி அனிமேஷன் ஹீரோ உணர்ச்சிகளாக் காட்டுகிறார்.தனுஷ் ஜாடை.
கேமராமேன் மனோஜ் பரமஹம்சா தண்ணீரையே நடிக்க வைத்திருக்கிறார்.படம் முழுவதும் மேக மூட்டம்.பக்கத்து பிளாட்டின் நடக்கிற மாதிரி இருக்கிறது.சில காட்சிகளில் நம்மேல் சாரல் அடிக்கிறது.
நிறைய க்ளோசப் காட்சிகள் அருமை.இசை பாய்ஸ் படத்தில் நடித்த “தமன்”.இவரும பின்னணி இசையில் தண்ணி காட்டுகிறார்.காதல் காட்சி பின்னணியில் ராஜா சாயல்.பாட்டு ரஹ்மாரிஸ்.நல்ல தியேட்டர். நல்ல சவுண்ட் எபெக்ட்..
எல்லா சாவுகளுமே ஒரு சாதாரண ஆக்சிடெண்ட் என்றாலும் அதற்கு வேறொரு பரிமாணத்தைக் காட்டியது, அடுத்து தியேட்டர் சாவு சாதாரண ஆக்சிடெண்ட் என்றாலும் அதில் ஒரு அமானுஷ்யதனம் காட்டியதற்கு டைரக்டர் அறிவழகனுக்கு பாராட்டுக்கள்.
தியேட்டர் சாவு மற்றும் இரண்டு மூன்று இடங்களில் “லாஜிக்” மீறி அமானுஷ்ய காட்சிகள் உள்ளன. இது ஒரு திசைத் திருப்பும் உத்தி.இந்த சுதந்திரம் டைரகடருக்குக் கொடுக்கலாம். நன்றாகத்தான் இருக்கிறது.திரில்லர் படங்களுக்கு சற்று தேவைதான்.
குறைகள்:
முதல் பாதி விறு விறு இரண்டாவது பாதியில் இல்லை.படத்தின் நீளம்.கடைசி 25நிமிடங்கள் ஒரு திருஷ்டி.யதார்த்தமாக முடிக்க வேண்டியதை “சொத சொதவென சேறாக்கி ஒரே சொதப்பல்”.கதாநாயகிக்கு துரோகம் செய்ததால் அவன் கதாநாயகன் கையில் உதை வாங்க வேண்டும் என்ற ஃபார்முலாவின்
-படி உதைப்படவைப்பது.
அவ்வளவு பெரிய அபார்ட்மெண்டுக்கு ஒரே வாட்ச்மேனா? ஏன் கொலை ஸ்பாட்டுக்கு நாய் வரவில்லை.
அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆன பிறகும் காலேஜ் ஸ்டூண்ட் மாதிரியேதான் இருக்கிறார்.அடுத்து அவர் விசாரணனையும் யதார்த்தமாக இல்லை. போலீசும் சற்று ஹாலிவுட் ஸ்டைலில் இருக்கிறார்கள்.
மேலுள்ள சிறிய குறைகளை ஒதுக்கிவிட்டு கட்டாயம் பார்க்கலாம்.
சவுண்ட் எபெக்ட் முக்கியமானதால் நல்ல தியேட்டரில் பார்க்கவும்.
கதாநாயகி மனதை கனக்க வைக்கிறார் வீடு திரும்பிய பின்னரும்.
தயாரிப்பாளர் சங்கருக்குப் பாராட்டுக்கள்.