Saturday, December 31, 2011

வாய்க்கரிசி,அவன் அவள் மற்றும் ஒரு புன்னகை

                                        வாய்க்கரிசி

”இதானே”

மார்ச்சுவரி அருகே ஸ்டெரச்சரில் பெண் பிணம் காலை விரித்தபடி சாம்பல் பூத்து கிடந்தது.நான்கு மாத கர்ப்பத்தில் வயிறு பூசி இருந்தது.பக்கத்தில் போலீஸ்காரர்.

“கைவுட்டுட்டு ஓடினனே.. அந்த பொறம்போக்கு என்ன ஜாதி?”

எதிரில் இருந்தவர் முகம் இறுகி எதுவும் பேசவில்லை.

”வாய்க்கரிசி தீர்த்தம்ன்னு சம்பிரதாயத்த முடிச்சிடுங்க “

“அதெல்லாம் வேண்டாமுங்க.களுத தொலைஞ்சா போதும்”கத்தையாக ரூபாய் நோட்டுக்களை போலீஸ் கையில் அழுத்தினார்.

“அட ரிக்கார்டலதான் அனாத பொணம்.உனுக்கு நீ பெத்த பொண்ணூ.” சொல்லி முடிப்பதற்குள் அவர் போய்விட்டிருந்தார்.

வார்டுபாயிடம் கால்கிலோ அரிசியும் தண்ணீர் பாக்கெட்டும் வரவழைத்து முகத்தில் தண்ணீர் பீச்சியடித்து கொத்தாக அரிசியை வாயில் போட்டார்.
                                        ------------------

                        அவன் அவள் மற்றும் ஒரு புன்னகை

சந்தியாவுடன் அவனும் சரிசமமாக கூடவே நடந்து வந்துக்கொண்டிருந்தான்.அவன் யாரோ? இவளுக்குத் தெரியாது.

இருவருக்கும் இடையே கால் இன்ஞ் இடைவெளிதான் இருக்கும்.அவள் செருப்பின் அடியும் அவன் ஷுவின் அடியும் பளிச்சென்ற hexagon வடிவ பிளாட்பார வில்லைகளில் மாறி மாறி வைக்கப்பட்டது. ஒவ்வொரு அடிக்கும் தன் செருப்பின் ”சரக்சரக்”கும் அவன் ஷுவின் ”டக்டக்கும்” ஒரு சினிமா பாட்டின் ரிதம் போல காற்றில் தொடர்ந்து வந்தது.

தெருவில் ஒரு திருப்பம் வந்து இருவரும் பிரிந்தார்கள்.

இணைபிரியாமல் நடந்து வந்தது எவ்வளவு நிமிடம் என்று யோசித்தாள். ஐந்து நிமிடம் என்று தெரிந்தது. அந்த hexagon பிளாட்பார கற்களைப் பார்த்தாள்.மெதுவாகப் புன்னகைத்துவிட்டு ஆபிசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

                                        ------------------                     

Saturday, December 24, 2011

முப்பொழுதும் உன் கற்பனைகள்..சித்தாரா சூப்பர்!

நேற்று டிவி ரிமோட்டில் சேனல்களை மாற்றிக்கொண்டே வரும்போது ஒரு பெண்ணின் குரலைக் கேட்டு சற்று அசந்துவிட்டேன். எனக்காகவே காத்திருந்தவர் போல் பாட ஆரம்பித்தார்.பாடி சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சி முடிந்துவிட்டது.

அந்த நிகழ்ச்சி “முப்பொழுதும் கற்பனைகள்” படத்தின் இசை வெளியிட்டு விழா. ஜெயா டிவி.

மேடையில் பாடிக்கொண்டிருந்தவர் சித்தாரா கிருஷ்ணகுமார் என்பது நெட்டில் பார்த்துத் தெரிந்துக்கொண்டேன்.அந்தப் பாடல் “கண்கள் நீயே... கடலும் நீயே”.இசை: ஜி.வி.பிரகாஷ்.படத்திலும் இவரேதான் பாடி இருக்கிறார்.

சித்தாரா
பாம்பேஜெயஸ்ரீ, சித்ரா குரலையும் மிக்சியில் போட்டு அடித்துக்
கலந்தாற் போல் இனிமையான ஜீவனுள்ள குரல்.ஹைபிட்ச்சில் மழலை/கீச் தட்டாமல் அற்புதமாக வழுக்கியபடி பாடுகிறார்.கிளாசிகல் டச்.நல்ல தமிழ் உச்சரிப்பு.


ரொம்ப நாளைக்குப் பிறகு தமிங்க்லிஷ் இல்லாமல் பாடும் பெண்ணின் மெலடியோடு உயிர்துடிப்பானப் பாட்டு கேட்டேன்.ரொம்ப சந்தோஷ் ஆனேன்.

தமிழில் இவருக்கு முதல் பாடல் என்று நினைக்கிறேன்.மலையாளத்தில் சாஜன் மாதவ் இசையில் ”யாக்‌ஷியும் நிஜனும்” படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளார்.இன்னும் நிறைய மலையாள படப் பாடல்கள் பாடி உள்ளதாக தெரிகிறது. இக்குட்டி கேரளாவின்னு வந்துன்னூ.

தாமரையின் வரிகள் பாடலுக்கு மிகப் பெரிய பலம்.இப்பாடல் தெய்வம் தந்த பூவேவின் சாயல் வருகிறது.அடுத்து ஹாரிஸ் ஜெயராஜின் வழக்கமான மெலடி வாசனை.

இவர் கேரளா ஜீவன் டிவியில் பாட்டுப் போட்டியில் இரண்டு கோடி ரூபாய் பரிசு வாங்கி உள்ளாராம். கிழ் உள்ள வீடியோவில் ஜானகி அம்மாவின் மலையாளப் பாட்டு ஒன்று பாடுகிறார்.


சித்தாரா என்றால் வட மொழியில் காலை நட்சத்திரம்.மின்னுங்கள் சித்தாரா.வாழ்த்துக்கள்!


Wednesday, December 21, 2011

ரொம்ப தூரத்து உறவு - கவிதை


எப்பவோ பார்த்திருந்த
தூரத்து உறவு அத்தைப் பாட்டி
இறந்துவிட்டதாக தகவல் வருகிறது

பண்டரிபாய் போல்
முகம் இருந்திருக்கிறது
நெய்வேத்தியம் செய்வதற்கு
முன்னமே ஒரு வடை கொடுத்திருக்கிறார்
சமத்தா படி என்று
வாஞ்சையாக கன்னத்தைக்
கிள்ளி இருக்கிறார்
ஈரத்தலையைத் துவட்டி விட்டிருக்கிறார்
சினிமாவுக்கு அழைத்துப் போயிருக்கிறார்
ரயில் ஜன்னல் ஒரத்தில்
உட்கார அனுமதித்திருக்கிறார்
அம்மா அடிக்கும்போது தடுத்திருக்கிறார்

இப்படியாக
அன்பு சுரந்து முடிகையில்
அவரே வீட்டிற்க்கு வருகிறார்

இறந்தது அவர் இல்லை
வேறு யாரோ ஒரு தூரத்து உறவு


பண்டரிபாய் போல்
முகம் இருக்கவில்லை
நெய்வேத்தியம் செய்வதற்கு
முன்னமே ஒரு வடை கொடுக்கவில்லை
அல்லது சமத்தா படி என்று
வாஞ்சையாக கன்னத்தைக்
கிள்ளி விடவில்லை
ஈரத்தலையைத் துவட்டி விடவில்லை
சினிமாவுக்கு அழைத்துப் போகவில்லை
ரயில் ஜன்னல் ஒரத்தில்
உட்கார அனுமதித்ததில்லை
அம்மா அடிக்கும்போது தடுக்கவில்லை

அந்த இறந்துப் போன
வேறு யாரோ ஒரு தூரத்து உறவின் மேல்
அன்பு சுரக்கிறது

அத்தைப் பாட்டிக்குச் சுரந்ததை விட
இரண்டு படி அதிகமாகவே சுரக்கிறது


Sunday, December 4, 2011

நன்றி

கடைசி தேர்வு எழுதி முடித்த உணர்வு.மண்டை குடைச்சல்கள் இனிமேல் இல்லை.நோ டென்ஷன்.ஏதேதோ யோசித்து பதிவுகள் போட்டு ஒரு வாரத்தை ஓட்டியாயிற்று.புது அனுபவம்.


புது மாப்பிள்ளை ஜோர் ஓவர்.அடுத்த புது மாப்பிள்ளை ரெடியாகிவிடுவார்.

என்னை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி. ஒரு வாரம் என்னை ஆதாரித்து படித்தவர்கள்,பின்னூட்டம் போட்டவர்கள் எல்லோருக்கும் நன்றி.

ஜொலித்து முடித்து சாதாவாக ஆன பிறகும் தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து ஆதரவு கொடுக்கவும்.

நன்றி வருகிறேன் வணக்கம்.


எம்.எஸ்.விஸ்வநாதன் -மெல்லிசை வித்தகர்

வலது கை விரல்களால் ஹார்மோனியப் பற்களை அழுத்தி இடது கை விரல்கள் இரண்டை உயர்த்திச் சொடுக்குப்போட்டு ரெடிமேடாக மேஜிக் மெட்டுக்கள் போட்டு திரையுலகத் தமிழ் இசையை மெல்லிசைத்து 50 வருடம் ஆண்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.முடி சூடா மெல்லிசை மன்னர்.

இவருடன் டி.கே.ராமமூர்த்தி இணைந்து பின்னால் பிரிந்தவர்.

இவரின் பல பாடல்களில் நடுநடுவே stunner(பிரமிப்பு) இசைத் துண்டு வந்து போகும்.லட்சணமாக இருக்கும்.

என்னால் மறக்க முடியாத பாட்டு “ அம்மம்மா கேள் ஒரு சேதி” ”பவள கொடியிலே”இதன் காட்சியும் நம்மை ஒன்ற வைக்கும்.தாளத்திற்கு “ஒரு பெண்ணைப் பார்த்து" " நீயேதான் என் மனவாட்டி” “அவளுக்கென்ன அழகிய” இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம.பல நாட்கள் ஆகும் முடிப்பதற்கு.

ரூமை(அதுவும் இரவில்) இருட்டாக்கி ஒரு திகிலுடன் “எங்கே நிம்மதி” பாட்டை ரசித்ததுண்டு.”ஆயிரம் கரங்கள்
போற்றி”(கர்ணன்),”நாம் ஒருவரை ஒருவர்(குமரிக்கோட்டம்),”நான் காற்று வாங்க”(கலங்கரை விளக்கம்) அடிக்கடி கேட்டு ரசிப்பதுண்டு.

இவரின் குரலில் பல அருமையான பாட்லகள்.”கண்டதை சொல்லுகிறேன்”
(சில நேரங்களில் சில மனிதர்கள்) ,”சொல்லத்தான் நினைக்கிறேன்””சிவ சம்போ” “இன்பத்திலும் துன்பத்திலும்” (சிவகாமியின் செல்வன்”""அல்லா அல்லா”(துக்ளக்)”பயணம்” (பயணம்).

பின் வரும் இசை பிரமிப்புக்களை கேளுங்கள்:-மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன்.பிறப்பு 24-06-1928.இன்றும் பல சேனல்களில் தன்னுடன் ஒட்டிப் பிறந்த தோரணையுடன் ஹார்மோனியத்தை செல்லமாக அணைத்தவாறு தன் இசையை சிலாகிப்பார்.

பன்முகத் திறமை இல்லாமல் இவ்வளவு வருடம் குப்பைக்
கொட்டமுடியாது.
பண்டித இசையை மெல்லிசையாக்கி அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திய முக்கியமான ஆளுமைகளில் முதன்மையானவர்.

அதுவும் சிவாஜியின் உதட்டுக்கும்/நடைக்கும் எம்ஜியாரின் கைஆட்டலுக்கும் கொள்கைக்கும் பாடல் எழுதப்படுகிறது.அதற்கு தன்னை உலுக்கிக்கொண்டு மெட்டுக்கள் போட்டு இளைத்துப்போனவர் மெல்லிசை மன்னர்.அவர்களுக்குத் தெரியாமல் நவீனத்தை மறைத்துக்கொடுத்தவர்.

இவர் காலத்தில் இசையமைப்பாளர்களுக்கு பொறுப்பு அதிகம். ஏன்? பல படங்களில் பாட்டிலேயே கதைச் சொல்ல வேண்டும்.வெயிட்டுஜாஸ்தி.சமூகம்,பக்தி,மாயஜாலம்,
சரித்திரம்,புராணம்,மேற்கத்திய நாட்டு கதை,திகில்,பேய்,கிரைம்,கர்நாடகம் என்று பல வித கூறுகளில் படத்திற்கு இசை அமைக்க வேண்டும்.

அயல் நாட்டு இசையை தமிழில் புகுத்தியவர். ”ஆட வரலாம்”(கறுப்புபணம்),”நினைத்தை நடத்தியே”(நம் நாடு),”மலரென்ற முகம்”(காதலிக்க நேரமில்லை)”என்னைத் தெரியுமா”(குடியிருந்த கோவில்).

அப்போது முக்கியமானது நேரலை இசை( live orchestra) அமைப்பு. எல்லா வாத்தியகாரர்களயும் கட்டி மேய்த்து இசை உருவாக்க வேண்டும். இடையில் தப்பு நேர்ந்தால் மீண்டும் இசைக்க வேண்டும்.

இவரின் தாக்கம் அவரின் சமகாலத்து இசையமையப்பாளர்களான வி.குமார்,சங்கர்கணேஷ்,
ஜி.கே.வெங்கடேஷ்,தேவராஜன்,விஜயபாஸ்கர்,ஆர்.கோவர்தன்,ஆர்.சுதர்ஸனம் இருந்தது.

இளையராஜா பாடல்களிலும்பார்க்கலாம்(நினைத்தால் போதும் பாடுவேன்(கலைக்கோவில்).ஆர்.ரஹ்மானுக்கு ரொம்ப செல்லமானவர்.தாக்கத்தில் ரிமிக்ஸ் போட்டதுண்டு.

பயணம் பாட்டைக் கேளுங்கள்.ஒல்டு இஸ் கோல்டு.

http://www.raaga.com/player4/?id=230558&mode=100&rand=0.031038899207487702

எம்.எஸ்.வி தமிழ்த் திரையுலகில் மாபெரும் தாக்கத்தை உண்டாக்கி விலகியவர்.


Saturday, December 3, 2011

டிஸ்கவரி சேனல் -இயற்கையின் பிரமிப்புகள்

டிஸ்கவரி சேனல் தமிழ் வந்த பிறகு நிறைய சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் குறைவதாக எங்கோ செய்திப் படித்தேன். உண்மைதான்.கலக்குகிறார்கள்.

அதே ஆங்கிலம்தான் இப்போது தமிழில்.

சினிமா போல ஆரம்பம்,நடு, கிளைமாக்ஸ் என்று பதப்படுத்திக் கொடுக்கிறார்கள்.சில பிராணிக்குச் செல்ல பெயர் வைத்து பின் தொடர்ந்து கதைச் சொல்கிறார்கள்.இது அம்மா,இது அப்பா,இது அதன் குட்டிகள் என்கிறார்கள்.

மாதங்கள் வருடங்கள் காத்திருந்து படம் எடுக்கிறார்கள்.

ஒரு தனி கிரகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது.வாழ்வா-சாவா போராட்டம் நித்தம் நித்தம் நடக்கிறது.

பாம்பு விஷத்தைக் கழுகின் மேல் பீச்சி அடிக்கிறது.ஆமை ஜோடி சேர்வதற்கு படாத பாடு படுகிறது.ஒரு குருவி
வெகுளித்தனமாக வேறொரு குருவி குஞ்சு இனத்திற்க்கு உணவு ஊட்டுகிறது.லட்சக்கணக்கான மீன்கள் அலுக்காமல் நீந்திக்கொண்டே இருக்கின்றன.

குரங்குகள் குளிரில் நடுங்குகின்றன.பூச்சி ஒன்று எதிரி மேல் குசு விட்டு தப்பிக்கிறது.சிங்கங்கள் பிரபஞ்சமே கிடுகிடுக்கும்படி மோதுகின்றன.புணர்ந்த பின் சிலிர்க்கின்றன.வித விதமான பூக்கள் கொத்துக்கொத்தாக பூத்து குலுங்கிக்கொண்டே இருக்கிறது.வெளவால்கள் கண்டம் விட்டு கண்டம் உணவுக்கு பறக்கின்றன.குளிர் போய் வெப்ப காலத்தில் நிறைய மடிகின்றன. கன்றுகள் தொலைந்துப்போய் அம்மாவைத் தேடுகின்றன.
உஷார்...!காவல்காக்கும் மீர்காட்டுகள்
இயற்கையின் வினோதங்களை இண்டு இடுக்குவிடாமல் படம்பிடித்துப் போடுகிறார்கள்.விதவிதமான நவீன தொலைத் தொடர்பு சாதனங்களுடன் உலகத்தை வலம் வருகிறார்கள்.

சாப்பாடு,தற்காப்பு,செக்ஸ் முக்கியமான மூன்று தளங்களில் கோடிகோடி ஜீவராசிகள் தங்களின் இருப்பை நிலை நிறுத்திக்கொள்கின்றன.

எல்லாமே உள்ளுணர்வு மூலம் உந்தப்படுகின்றன.

Survival of the fittest  என்பது நிதர்சனம்.இங்கும் பொறாமை,தகிடுதத்தம்,குழு மனப்பான்மை,பிலிம் காட்டுதல்,அலட்டுதல்(செக்ஸ்ஸுக்காக),திட்டம் போடுதல்,அன்பு,பிரிவு,துக்கம்,போட்டி,வருத்தம், எல்லாம் உண்டு.யூகிக்க முடியுமா. வெற்றி அல்லது தோல்வி அல்லது டை?

ஆனால் எல்லாம் இருப்புக்கான போராட்டம்தான்.எப்போதும் உயிர் பயம் என்ற டென்ஷனிலேயே இருக்கிறது.ஒரு புல்லைக் கடிப்பதற்க்குள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது.24 மணி நேர கண்காணிப்பு கேமராதான்.தாவரத்தை உண்ணும் பிராணிகள் தாவர பட்சிணி.இங்கு தாவரம் பூச்சியை வூடு கட்டி பிடித்து உண்கிறது. அதற்கு சத்துணவு தேவையாம்.

இயற்கையின் சீற்றங்கள்.மனிதனின் சாகசங்கள்.மருத்துவ உலகின் அதிசயங்கள் என்று உலகம் விரிகிறது.


மனிதன் இயற்கை மற்றும் பிராணிகளுடன் போராட்டம் நடத்தி பிரயாணம் செய்வதை ஒரு டிவி சீரியல் போல் சொல்கிறார்கள்.

ஒரு ஜீவராசிக்காவது, அதன் உள்ளுணர்வில் தெரியுமா, டிவியில் இதன் சொந்த விஷயங்களை நாம் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று. தெரிந்தாலும் அது கவலைப்படப் போவதில்லை.


சேனலின் மொழிப்பெயர்ப்புத் தமிழை இன்னும் எளிமைப் படுத்தலாம்.

Friday, December 2, 2011

எலுமிச்சம் பழம் - சிறுகதை

சாந்தகுமார் உடம்பு முழுவதும் திருநூறு அப்பிக்கொண்டு கைகட்டி பவ்யமாக சாமியாரின் முன் நின்றுக் கொண்டிருந்தான்.தொல்லை எல்லாம் நிவர்த்தி ஆகிவிடும் என்ற நம்பிக்கையில்.

“இன்னித்தோட கஸ்டல்லாம் ஓய்யிது.ஒன்னோட புது சலூனுக்கு எந்த திருஸ்டியும் அண்டாது” கையில் கொத்தாக இருந்த எலுமிச்சம் பழங்களை அப்படியும் இப்படியுமாக கசக்கிப் பிழிந்து தூர எறிந்தார் சாந்தகுமாரின் குடும்ப சாமியார்.

ஒரு பழம் மட்டும் எதுவும் ஆகாமல் கையில் இருந்து உருண்டு ஓடியது.சாமியார் அதைப் பார்த்து மிரண்டார்.அபசகுனமா?சாந்தகுமாரும் மிரண்டான்.

“ஏதோ ஒரு பீடை உன்ன உத்துப் பாக்குது.நீ திரும்பிப் பார்க்காத மெட்ராஸ் கிளம்பு.நான் அந்தப் பீடையைச் சுடுகாட்டுக்கு ஓட்றேன்”

சாந்தகுமார் பிடித்த ஓட்டத்தில் சென்னை வந்துதான் நின்றான்.திரும்பியே பார்க்கவில்லை.பீடை உற்றுப் பார்த்தால் எப்படி திரும்பிப்பார்க்க முடியும்.

சென்னை திருவல்லிக்கேணி.

அடுத்த இரண்டு நாளும் நசுங்காத எலுமிச்சம் பழம் இவனையே உற்றுப்பார்ப்பது போல் இருந்தது.மூன்றாவது நாள்தான் கடையைத் திறந்தான்.

”யாரு இப்படி பாக்கறாங்க நம்மள?”கையில் கத்திரிக்கோலும் சீப்புமாக வெளி வந்தான் சாந்தகுமார். இரைச்சலுடன் கடை எதிர் சைடில் நின்ற பஸ்ஸிலிருந்து ஒருவர் ஜன்னல் சீட் வழியாக சாந்தகுமாரின் பள பள ”தனுஷ் சலூனை” உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.அவரின் சிவப்புச் சட்டை எடுப்பாகத் தெரிந்தது.

யோசித்தவாறே சாந்தகுமார் உள்ளே போய் கஸ்டமருக்கு தலை முடியை வெட்டியவாறே குனிந்து மீண்டும் பார்த்தான்.பஸ்காரர் அதேபோல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.இப்போது பஸ்கார் (பஸ்காரர்)சலூனைத் துழாவிப் பார்ப்பது போல் இருந்தது.

சாந்தகுமார் சற்று டென்ஷன் ஆனான்.

எச்சைத் துப்புவது போல் வெளியே வந்து மீண்டும் ஜன்னலை உற்று நோக்கினான்.பதிலாக பஸ்காரும் உற்று நோக்குவது போல் இருந்தது.பஸ்ஸு ஏன் இவ்வளவு நேரம் இங்க நிக்குது.அதுவும் ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில் பஸ் நின்று ஒருவர் ரொம்ப நேரம் உற்று நோக்குகிறார் என்றால் ஏதோ தீய சக்திதான்.அதான் எலுமிச்சம் பழம் நசுங்கவில்லை.

 ரொம்ப விசனமாகி உள்ளே போய் விட்ட வேலையைத்
தொடர்ந்தபடி மீண்டும் குனிந்துப்பார்த்தான்.பஸ்காரரும் அப்படியேதான் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.


சாமியார் சொன்ன பீடையா?கலவரமாகி கையில் இருந்து கத்திரிக்கோல் நழுவ சுதாகரித்துப் பிடித்துக்கொண்டான்.

சாந்தகுமாரரின் நடவடிக்கையில் கவனம் ஈர்க்கப்பட்டு
கஸ்டமரும் சேரில் அமர்ந்தபடி சாந்தகுமாரனுடன் தலைக்
குனிந்துப் பார்த்தார்.ம்ம்ம் என்று பெருமூச்சுவிட்டபடி சாந்தகுமாரை விழித்துப் பார்த்தார்.கஸ்டமரின் விழி பீதியைக் கிளப்பியது.

சாந்தகுமார்அரண்டுபோய் ”பேய்” வேகத்தில் கட்டிங் மற்றும் சேவிங் செய்து முடித்து அவரை அனுப்பினான்.சலூன் புதுப்பித்து முதல் கஸ்டமர் இவர்தான்.

சேவிங் துணியை கையில் பிடித்து உதறுகையில் கையில் ஏதோ பிசுபிசுத்தது.ரத்தம்.ஷேவ் செய்யும்போது இது இல்லையே? மிகுந்த டென்ஷானகி இதயம் படபடத்தது.

வழுவழுப்பாக உருண்டையாக ஏதோ உள்ளங்காலில் தட்டுப்பட்டது.நல்ல குண்டுக்கட்டான எலுமிச்சம் பழம்.குனிந்துபார்த்தால் பாதத்தின் கிழ் ஒன்றும் தட்டுப்படவில்லை.சே! பிரமை.

சே! கடையை அப்படியே பழசாக விட்டுருக்கலாமோ? ஏன் லட்சம் செலவிட்டு புதுப்பித்தோம்.பழசு ஸ்ரீதேவி போய் புதுசு பீடை நம்மைப் பிடிக்கிறதோ.நம்மையே பிடிக்க உற்றுப் பார்க்கிறதோ.

பஸ் போய்விட்டதா?பீடை இருக்கிறதா?மீண்டும் ஏதோ அவனைப் படுத்தியது.

கண்ணாடியை வாசல் நோக்கிக் காட்டிப் பிடித்து கண்ணாடியைப் கவனமாக சற்று பயத்துடன் பார்த்தான்.பஸ் அங்கேயே இருந்தது.என்னாச்சு பஸ்ஸூக்கு.வெளியே போக பயமாக இருந்தது.

லைட் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு கதவை ஒருக்களித்து மீண்டும் பார்த்தான்.பீடை இங்கேயேதான் பார்த்துக்கொண்டிருந்தது.சற்றுத் தள்ளி பக்கத்துக் கடையில் எலுமிச்சம் மூன்று வாங்கினான்.கடைக்கு எதிரே நின்று சூடம் காட்டி கண்ணை மூடி ஏதோ வேண்டினான்,யார் யாரையோ சபித்தான்.

சூடம் அணைந்ததும் பழங்களை காலால் அமுக்கிப் பிய்த்து மூலைக்கொன்றாக மூன்று முறை சுத்தி இடது வலது பின் எறிந்தான்.ஒன்று பஸ்ஸின் அடியில் விழுந்தது.பரம திருப்தியானன்.பெரிய பழம் ஒன்று எடுத்து கிழே வைத்து காலால் அழுத்தி சப்பை ஆக்கினான்.பழம் சக்கைகள் தெரிய கிழிந்து சாறு பீச்சியது.மனம் ஒரு நிலைக்கு வந்தது.

விறுவிறுவென்று கடையை மூடினான்.பஸ்ஸில் ஏறி ”பீடை”யின் பக்கத்தில் நின்று அது பீடையா அல்லது சாதா பஸ் பிரயாண மனிதனா என்று கண்காணித்து ஏதாவது நிவர்த்திச் செய்ய வேண்டும் என்று எதிர்பக்கம் கிராஸ் செய்து பஸ்ஸில் ஏறினான்.

பஸ் ஏதோ கோளாறால் நின்றிருந்தது.உள்ளே வந்தான்.ஆனால் “பீடை” உட்கார்ந்திருந்த சீட் காலியாக இருந்தது.

பஸ்ஸின் உட்புறம் எல்லா இடத்திலும் தேடி குனிந்தவாறு எதிர் திசையைப் பார்த்தான்.அதே சிவப்புச்சட்டைகாரர் தன் கடையின் எதிரில் நின்றுக்கொண்டு கடையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு திடிரென்று பக்கத்து காய்கறி கடைக்கு விறுவிறு என்று நடந்தார்.

அங்கு அவர் ஒரு எலுமிச்சம் வாங்கிக்கொண்டு திரும்பும் தருணம்  பஸ் புறப்பட்டு அடுத்த சந்தில் திரும்பியது.”நல்ல வேளை மறக்காமல் எலுமிச்சம் பழம் வாங்கினோமே” வீட்டை நோக்கி நடந்தார் சிவப்புச்சட்டை.
                                 
                               முற்றும்Thursday, December 1, 2011

இளையராஜா - King of Musical Trills

இந்தப் பதிவில் Trill என்னும் இசையின் ஒரு கூறு பற்றிப் பார்க்கப் போகிறோம்.

ட்ரில் என்பது இசையை குட்டியாக அழகுப்படுத்த இயற்றப்படும் சின்ன இசைத் துண்டுதான்.முகத்தில் மெஹந்தி பொட்டு ஒற்றுகள் மாதிரி ஒரு குட்டி ஒப்பனை.அலங்காரம்.


வயலின்,கிடார்,கிளாரினெட்,பு.குழல்,பியானோ மற்றும் வேறு இசைக் கருவிகளால் இதற்குண்டான நோட்ஸ் பார்த்து வாசிக்கப்பட்டு அலங்கரிப்படுகிறது.

நாக்கு,உதடு,தொண்டை இவற்றால் கூட ட்ரில் இசைக்கிறார்கள்.வெண்ணிற ஆடை மூர்த்தி போல் பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ட்ரில்லும் உண்டு.பார்க்க யூ டியூப்.

வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களும் வயலினில் இது மாதிரி செய்வார்.

ட்ரில் பற்றி......

விக்கிப்பிடியா/ஆக்ஸ்போர்டு அகராதி:
1.(the effect achieved by)  the fast playing of a note and the note above or below it, one after another.

2.(bird song) Birds to sing a series of  quickly repeated high notes.

3.Singing two musical notes one after the other, repeatedly and very quickly


It was known from the 16th until the 19th century used in  French/German/Italy music compositions
 

பேஸ் புக்கில் Raja Fans Groupல் ராஜீவ் ஷங்கர் இதைப் பற்றி எழுதி எல்லோரும் தெரிந்துக் கொள்ள வைத்தார்.அவரும் தெரிந்துக்கொண்டார்.அவருக்கும் அங்கு கலந்துரையாடி ராஜாவின் ட்ரில் ஆடியோ பகுதிகளைப் பதித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றிகள் கோடி.

அங்கு பல மேஸ்ட்ரோவின் பல இசைக் கூறுகள் ஆரோக்கியமாக விவாதிக்கப்பட்டு தெரிந்துக்கொள்கிறோம்.

உன் எண்ணம்,ராஜபார்வை,தீபம், அடுக்கு மல்லி,16 வயதினிலே,அஞ்சலி ஆயிரம் நிலவே வா தவிர மீதி அங்குப் பகிரப்பட்டது.

டிஸ்கி:பொது அறிவில் உள்வாங்கி எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.பண்டித ஞானம் அல்ல.தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.

ட்ரில் பற்றி எளிமையாக புரிந்துக்கொள்ள: அதிவேக நாத அதிர்வுகள் அல்லது சிலிர்ப்புகள் அல்லது அலசல்கள்.

குளத்தின் மேற்பரப்பில் கல் எறிந்தால் எதிர்வினையாக ஏற்படும் அதிவேக அலை அதிர்வுகள்.

கேட்டால் செய்வது சுலபமாகத் தெரியும். ஆனால் இதற்கும் திறமை வேண்டும் என்று தெரிகிறது.

(Filedon floating audio பிரச்சனையால்(அங்கு பிரச்சனை) மற்றொரு ஆடியோ Divshare வைக்க வேண்டியதாயிற்று.நல்ல நட்சத்திர நாள் அதுவுமா ரொம்ப விசேஷம் போங்க பைல்டென்! பிரச்சனை எப்போது தீரும் என்று தெரியவில்லை)

இசைஞானி இளையராஜாவின் Trills?

 1. இளையராஜா இதைப் பன்முகமாக (versatile) இசைத்துக்காட்டுகிறார்
 2. பாட்டின் நுனி முதல் அடி வரை ஏதோ ஒரு பகுதியில் எதிர்பார்க்காத இடங்களில் வந்து சின்னதாக சிலிர்த்துவிட்டுப் போகிறது
 3. இசையின் ஓட்டத்தில் பொருந்தி இதுவும் ஓடுகிறது
 4. வண்ணமயமானது
 5. Grand and beautiful
 6. லூசுத்தனமாக (அமெச்சூர் நெடி?) இல்லாதது
 7. ஆத்மா உள்ளது
எதற்காக இது பாட்டின் நடுவே வருகிறது? பல காரணங்கள்.நான் சொல்வது யூகத்தின் அடிப்படையில்.

திகில்/பேய் எமோஷன்,பொழுது புலர்வது,குறும்பு/குறுகுறுப்பு,ஜஸ்ட் ஒப்பனை,தண்ணீர் பீச்சி அடித்தல்,கிராம காட்சிகள்,மெல்லிய சலனங்களோடு தொடங்குதல்,கனிவு, குழந்தைத்தனம்,திடீர் வேகம் etc.,etc.,.

பாட்டின் முழு சரத்தில் ஏதாவது இடத்தில் இதைப் பொருத்தி அழ்காகத் தொடுக்கிறார்.புல்லாங்குழல் நிறைய வருகிறது. காரணம் நிறைய கிராமீய மெட்டுக்கள்.Let"s get thrilled with his Trills!

கிழ் வரும் முதல்  நான்கு (ராஜா அல்ல) ஆடியோ
உதாரணங்கள் எளிமைப்படுத்தும்.இவைகள் நானே என் சொந்த ஆர்வத்தில் சேகரித்தது.

நன்றி: you tube


கிழ் வரும் ஆடியோக்கள் வேலை செய்யவில்லை, கடைசியில் செல்லவும்.அங்கு பிளே ஆகிறது.

Trills- Violin.mp3

Trills-Piano.mp3

Trills-Guitar.mp3

Trills-Clarinet.mp3


Trill-Nadodi Thendral-92-ManiyeManikuyile.mp3
0.15-0.22 சிந்தசைசரின்(சிந்த்தானா?)சிலுப்புகள்.

Trill-KelviumNaane Pathilum-88-Title.mp3
இது படத்தின் டைட்டில் இசையில் வருவது.
0.18-0.22  அன்ட் 0.38-.044 பியானோவில் ட்ரில்

Trills-Thambi Pondatti-92Unennam.mp3
0.08-0.24

Trill-Thalapathi-91-YamunaiAatrile.mp3
ஆரம்ப புல்லாங்குழல் ட்ரில் கிளாசிகல் டச்சோடு வருகிறது.

Trills-PallaviAnupallavi-83-.mp3
0.31-0.33(சிந்த்?) அண்ட் 0.47-1.04(பின்னணி வயலின்)

Trills-Mella Pesu-83-Uyire_Uravil.mp3
0.10-0.14 இதன் பின்னணியை கவனியுங்கள்.இதனுடன் வேறு ஒரு எமோஷன் வயலின்(double bass?) குறுக்கிட்டு இசைக்கப்படுகிறது.

RajaParvaiViolin.mp3
ட் ரில் எங்கு ?தமிழ்ப்பறவை அண்ட் கோபிநாத்

Trills-Alaigal Oivathillai-81-PuthamPuthu.mp3
ட்ரில் எங்கு?தமிழ்ப்பறவை அண்ட் கோபிநாத்
அதிகாலை உணர்வுக்குக்காக இந்த ட்ரில்?

Trill-Nenjathai Killathe-80 -Title.mp3
படத்தின் டைட்டில் இசை 0.37-0.40

Trill-Aavarampoo-91-AdukkuMalli.mp3
0.04-0.11 புல்லாங்குழல்

Trill-Athisiya Piravi-90-Annakilye.mp3
0.19-0.25 புல்லாங்குழல்(சின்னதாக)

Trill-Edhomogam-Kozhikovuthu.mp3
வயலின் 00.00-00.05, 0.19-0.22

Trill-NalamVaazha-Marupadiyum-93-.mp3
00.00-00.03 வயலின்

Trills-Gopurangal Saivathillai-83-Poovadaikatru.mp3
0.43-0.45 புல்லாங்குழல்

Trills-Ullasa Paravaigal-80-.mp3
00.19-0.26 சிந்த் அல்லது பு.குழல்

Trill-Time-99-NiramPirithu.mp3
பியானோ 0.00-0.11

Trill-Solla Marantha Kathai-02-Etho Onna.mp3
00.00-0.10 வயலின்

கிழ் வரும் ஆடியோவில் ட்ரில் எங்கு வருகிறது. பின்னூட்டத்தில் சொல்லவும்.
Trills-Sri Ramarajayam-11-Rama Rama Ane.mp3

Trills-Deepam-77-Poovizhivasalil Yaradi1.mp3
0.04-0.08

Trills-Kumbakarai Thankaiah-77-ThendralKaathe(duet).mp3
???????? சொல்லுங்கப்பா.

பேய்-1
Trills-Aayiram Nilave Vaa-83-DevathaiIllam.mp3
00.05-0.08

Trills-Thavani-Kanavugal-84-SengamalamSir.mp3
0.04-0.11,  0.41-0.47,1.03-1.04

பேய்-2
அஞ்சலி-90-ராத்திரி நேரத்து
0.13-0.20


மேலே உள்ள filedon floating audio வேலை செய்யாவிட்டால் கிழே divshare audioஎன் பழைய இளையராஜா பதிவுகள்:

1.இளையராஜாவின் மேஜிக் புல்லாங்குழல்கள்

2.ராஜாவின் மேஜிக் வயலின் நாதங்கள் -1

3.இளையராஜாவின் மேஜிக் வயலின் நாதங்கள் -2

ஏன்? ஏன்? ஏன்? ஏன்?ஏன்? அம்மா எமனை ஓடிப் பிடித்தார்?

வீடியோவில் நடந்த சாவிற்க்கு காரணம் ஆயிரம் சொல்லலாம். ஆனால் முக்கியமான காரணம் “முன் திட்டம் இல்லாமை”(planning).ஒரு ஆழ்துளை ஆராய்ச்சி(drill down analysis).


இடம்: மைசூர் ரயில்வே ஸ்டேஷன்.வண்டி:சாமுண்டி
எக்ஸ்பிரஸ்.அம்மா இறந்துவிட்டார்.பெண் படுகாயம்(?)

எந்த பிரச்சனைக்கும் Why-Why analysis?  ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் என்று ஐந்து கேள்விகள் கேட்டு பிரச்சனையில் வேருக்குச் சென்று அதைக் களைய வேண்டும்.மேலோட்டமாக பிரச்சனையை அணுகக் கூடாது.

நிகழ்வின்(effect)  உண்மையானக் காரணத்தை(cause) அறியவேண்டும்.”விதி” “அவன் செயல்” ”மங்கு சனி”எல்லாம் ஒரு நம்பிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள்.ஆனால் யதார்த்தம் வேறு.

மேற்கண்ட நிகழ்வு ஏன் நடந்தது.அதன் அடிவேர் என்ன?

ஐந்து ஏன்கள் கேட்டு அடிவேரைப் பிடிப்போம்.

இது சும்மா மொக்கையோ டமாஸ்ஸோ அல்ல.நிதர்சனம்.விஞ்ஞான பூர்வமானது.அந்த அம்மாவை நம் சொந்த அம்மா போல் கற்பனைச் செய்து பாருங்கள்.

 1.ஏன் இறந்து போனார்?
ஓடும் ரயிலில் ஏறினார்
2.ஏன் ஓடும் ரயிலில் ஏறினார்?
சரியான நேரத்திற்கு ஸ்டேஷனுக்கு போகவில்லை
3.ஏன் போகவில்லை?
வீட்டிலிருந்துப் புறப்பட தாமதம் ஆகிவிட்டது.
4.ஏன் தாமதம்?
அது இது என்று பல வேலைகள்
5. ஏன் அது இது என்று பல வேலைகள்?
எதுமே, முக்கியமாக பிரயாணம் உட்பட சரியாக திட்டமிடவில்லை. 

”அவசர எமர்ஜென்சி பிரயாணம்”என்று தப்பிக்க முடியாது.இதற்கும் ஒரு அவசர திட்டமிட்டுதான்(emergency plan) கிளம்ப வேண்டும்.

இந்த whyயை தலைகிழாக திட்டமிட்டு கிளம்புவதாக போட்டுப்பாருங்கள்.மகள் டாட்டா காட்ட அம்மா பதிலுக்கு சிரித்தபடி டாட்டா காட்டிக்கொண்டே போயிருப்பார்.

"பிளான் பண்ணா எதுவும் நடக்கிறதில்ல.டக்குன்னு திங்க் பண்ணுவேன் டக்குன்னு கிளம்பிடுவேன் “ இப்படி ஒரு கோஷ்டி எப்போதும் சொல்லிக்கொண்டு திரியும்.

திங்க் பண்ணிட்டு டக்குன்னு வாயு (திங்க் பண்ணாமலும்)விடலாம்.பாத்ரூம் போகலாம்.
சொறிந்துக்கொள்ளலாம்.கொட்டாவி விடலாம்.சாமுண்டி எக்ஸ்பிரஸ்ஸைப் பிடிக்க முடியாது.

(டக்குன்னு இப்படி ஒண்ணு ( நண்பர்) வண்டியில்
கிளம்பிப்போய் வாரிக்கொண்டு விழுந்தது.சைடு ஸ்டாண்டு மடக்கப்படவில்லை.இவரு “டக்குன்னு” திங்க் பண்ணிட்டாரு.அதான் காரணம்)
_____________________________________

கிழ் உள்ளவர் தப்பித்துவிட்டார்.ஆனால் பைக்.ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்? படம் வரைந்து பாகங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


பைக்கின் தலைவிதி அப்படி இருந்தா யாரால மாத்த முடியும்?

Wednesday, November 30, 2011

ஹாலில் பெய்த மழை -கவிதைநடு ஹாலில் கொட்டும் மழைக்கு
குடை விரித்த குழந்தை
விரித்துப்போட்டபடி தூங்கிவிடுகிறது

அம்மா அப்பா அண்ணன் தாத்தா பாட்டி
அத்தை மாமா சித்தி சித்தப்பா
பெரியம்மா பெரியப்பா பொம்மைகள்
எதிர்வீடு பக்கத்து வீட்டு குழந்தைகள்
கை நீட்டிப் பார்க்கிறார்கள்

மழை நின்று விட்டது

ஒருவர் பின் ஒருவராக
சத்தம் போடாமல்
குடைக்குள் இருந்து கிளம்புகிறார்கள்

குப்.. குப்.. குப்.. குப்.. குப்.. சென்னை மெட்ரோ ரயில்

வைகை மற்றும் பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விட்ட புதிதில் அதைப் பார்க்க ரயில்வே லைன் ஓரங்களில் மக்கள் காத்திருப்பார்கள்.”படக் படக் படக்..”புழுதி பறக்கக் கடக்கும் நம்மை.
மெட்ரோ ரயிலும் ”படக் படக் படக்” என்று புழுதி இல்லாமல் சென்னை வாசிகளை கடக்கப்போகிறது.

முதல் தடவையாக சிட்டிக்குள் பாம்பு மாதிரி ஊர்ந்து போகப்போகிறது பூமிக்கு மேலும் கிழும்.நிச்சியமாக அண்டர் கிரவுண்ட் ஓட்டத்தை ஆர்வமாக (பிரயாணம் செய்துக்கொண்டே(ஒரு “மண்ணாங்கட்டியும்”தெரியாது) பார்ப்பார்கள்.பூமிக்கு கிழே சைதாப்பேட்டையிலிருந்து நந்தனம்,அண்ணாசாலை,எல்.ஐ.சி,சென்ட்ரல் வழியாக வண்ணரப்பேட்டைக்கு ஒரு ரூட்டு போகிறது,

இரண்டு வருடமாக சென்னையில் அங்கங்கு மெட்ரோ
ரயிலுக்கு வேலைகள் ஜரூராக வேலை நடக்கிறது.போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
ஜவஹர்லால் ரோடு(100 feet Rd)

அது என்ன சென்னை மெட்ரோ ரயில்?

பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தக் காலத்திற்கு ஏற்றார்போல்(fast,reliable,convenient,economical,efficient and modern transport) விரைவான,சிக்கன,நம்பகமான,புகை இல்லாத,திறன் வாய்ந்த, வசதியான,நவீன வாகனம்தான் மெட்ரோ. அடுத்து இது மற்ற போக்குவரத்துக்களுடன் சார்ந்து மக்களுக்கு பயன் அளிக்கவேண்டும்.

இதுதான் இதன் லட்சியம்.விஷன்.
கொல்கொத்தா மெட்ரோ
மெட்ரோவின் மற்றும் பல சிறப்பு அம்சங்கள்:-
 1. மற்ற போக்குவரத்துக்களை ஒப்பிடும்போது இதற்கு பயணிகள் ஐந்தில் ஒரு பங்கு எனர்ஜி செலவிட்டால் போதும்
 2. சாலைகளை அவ்வளவாக ஆக்கிரமிப்பதில்லை
 3. பயண நேரத்தை குறைக்கிறது
 4. புகை, இரைச்சல் இல்லை
 5. பாதுகாப்பானது,நம்பகமானது
முக்கியமாக இந்தச் சென்னை மெட்ரோ அண்ணாசாலை,ஜவஹர்லால் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை மூன்றையும் இணைக்கிறது.

எங்கிருந்து எங்கு போகிறது? இரண்டு ரூட்கள்.
 1. முதல் ரூட் (corridor -1) வண்ணாரப்பேட்டை - விமான நிலையம்(23km)
 2. இரண்டாவது ரூட் ( corridor -2) செண்ட்ரல் - செயிண்ட்தாமஸ் மவுண்ட்(22km)
 3. இதில் 24km பூமிக்கு அடியிலும் மீதி மேலும் செல்கிறது
படத்தைப் பார்க்க.
 1. ரூட் -1 வண்ணாரப்பேட்டை -சைதை வரை பூமிக்கு அடியில் பிறகு மேல்
 2. ரூட் -2 செண்ட்ரல் - திருமங்கலம்(அண்ணா நகர்) பூமிக்கு அடியில் பிறகு  மேல்
கிழிருந்து மேல்,மேலிருந்து கிழ் நெருங்கும் பகுதிகளை எப்படி ஜெர்க் இல்லாமல் சரி(அலைன்) செய்வார்கள்?

மற்ற திட்டங்கள்:
 • 2-27 கிமீக்கு ரூ8 - 23 வரை வசூலிக்கப்படலாம்(தோராயமாக)
 • 30கிமீ வேகம்.ஆனால் 80கிமீ போவதற்குத் திறன் உள்ளது
 • 45 நிமிட பயணம் முதல் ரூட்டிற்கு 
 • 30 வினாடிகள் நின்று புறப்படும்
 • 5 நிமிடத்திற்கு ஒரு முறை நெருக்கடி நேரத்தில் மற்ற நேரத்தில் 15 நிமிடம் ஸ்டேஷனுக்கு வரும்
 • பேப்பர் இல்லாத டிக்கெட் மற்றும் தானியங்கி ஏறுதல்/இறங்குதல்
 • இதனால் 16 பேரூந்துகளும்,300 நான்கு சக்கர மற்றும் 600 இரண்டு சக்கர வாகனங்கள் சாலையில் குறையும்.ஆட்டோ?
 • ரூட் -1 அன்ட் 2 தலா, 17 ஸ்டேஷன்கள் 
 • தண்டவாள நடுவில் அதிக வோல்ட் மின்சாரம்.அதைத் தேய்த்துக்கொண்ட்டுதான் மெட்ரோ போகும்.தொட்டால் கரிக்கட்டைதான்.வாட்டர் பாட்டில் விழுந்தால் எடுக்காதீர்கள்
 • ஸ்டேஷனிலிருந்து இறங்கியவுடன் வேறு இடத்திற்குச் செல்ல feeder service உண்டு (????)
 • முதல் கட்டமாக ஒரு பகுதி (பூமிக்கு மேல்) 2015ல் பயணத்திற்கு விடப்படும்
 • அவசரத்திற்கு டிரைவரை தொடர்பு கொள்ள அழுத்த விசைகள் உண்டு
 • ஒரே சமயத்தில் 1200-1500 பிரயாணிகள் பிரயாணம் செய்யலாம்
 • ”பாஸ் டைம்” வேர்கடலை,கர்சீப்,ஊசி,பாக்கெட் காலண்ட்ர்,நெய் பிஸ்கட் இத்யாதிகள் தொல்லை இருக்காது
முதலீடு ஜப்பானிடம் இருந்து கடன் வாங்கப்பட்டுள்ளது.அதை 30 வருடங்களில் திருப்பிக்கொடுக்க வேண்டும்.

மறக்காம குடுத்துடங்க கடன் அன்பை முறிக்கும்.

பயணிகள் கவனத்திற்கு ...அடுத்த மெட்ரோ இன்னும் சில நிமிடங்களில் .....திருமங்கலம்(அண்ணா நகருக்கு)Tuesday, November 29, 2011

சாரகாத்து from ஹிந்தி?கேட்டதும் மயக்கம் என்ன?

ரொம்ப நாளைக்குப் பிறகு கடவுளைப் பற்றி சிம்பிளான இதமான வரிகள்.தபலா தாளத்தை அடிப்படையாகக் கொண்ட பாட்டுக்கள் எப்போதும் எனக்கு சுகம்தான்.அடுத்து சிதார்/வயோலா கருவிகளின் இன்பமான ஓலம்.

நான் சமீபத்தில் கேட்டு ரசித்தப் பாடல்.இதமான இசை.ஹரீஷ் ராகவேந்திரா அருமையாக பாடி உள்ளார்.


படம்:,மயக்கம் என்ன பாடல்:என்னென்ன செய்தோம் இங்கு இசை:ஜி.வி.பிரகாஷ்.


ராகம்:கல்யாணி?

என்னென்ன செய்தோம்

வாகை சூட வா
இதில் இரண்டு பாடல்கள் ஹிட்டாகிவிட்டன.இசை எம்.ஜிப்ரான்.

”போறானே போறானே பாட்டை நேகா பாசின் பாடி உள்ளார்.

அடுத்து “சார காத்து” பாட்டு by சின்மயி

எனக்கும் பிடித்திருக்கிறது.வித்தியாசமான கிராம மெலடி.இரண்டிலும் ஒரு மாதிரி “ஸ்டைலான மேற்கத்திய ” வாசனை வருகிறது.தவிர்த்திருக்கலாமோ?
நம்மூர் கிராமம் காணாமல் போகிறது.

Period film என்பதால் மெட்டைப் பழசாக்கப்போக அதில் மேற்கத்திய சாயல் வந்துவிட்டதோ? வாழ்த்துக்கள் எம்.ஜிப்ரான்.

”சார காத்து”  இந்திப்பாட்டு “inspiration"னா? சுட்டதா?

சார காத்து


படம்: ஆராதனா பாட்டு: Gun Guna Rahe Hai Bhanvare. சிறு வயதில் மிகவும் பாதித்த பாடல்.

கவுண்ட் 0.28 -0.54 முதல் கவனமாக கேட்கவேண்டும்.

ஆராதனா

__________________________________________________________

6.10.11 அன்று பாலிமர் டிவியில் “மைதானம்” படம் பார்த்தேன். நண்பனின் துரோகம் பற்றியது. இயக்கியவர் சக்திவேல். அருமை.உயிர் துடிப்போடு காட்சிகள். நிறைய இரவு காட்சிகள் படத்தை ஆழமாக்குகிறது.

கதாநாயகி நடிப்பு அருமை.”மைதானம்” என்ற தலைப்பு ஏன்?

குறிப்பாக படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரொம்ப நன்றாக இருந்தது.இசை சபேஷ் முரளி.இவரிடம் நேட்டிவிட்டி இருக்கிறது.ஆனால் ராஜாவின் தாக்கம்.

இதில் ஒரு பாடல் சின்மயி பாடிய ”கனவா நெசமா” பாடல் என் மனதை கவர்ந்தது.குறிப்பாக அதை உச்சரிக்கும்போது.ஷரேயா கோஷால்/சாதனா சர்க்கம் போல் மழுப்பிப்(அழுத்தம் திருத்தம் இல்லாமை) பாடாமல்அமர்க்களமாக பாடி உள்ளார். காரணம் தாய்மொழி தமிழ்.

கனவா நெசமாடியூஷன் எத்தனை டியூஷனடா(டி)!

டியூஷனில்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்.

ஒரு காலத்தில் டியூஷன் (தனி வகுப்பு) வைத்தால்
அது அவமானம்,மக்கு,பெயில் கேஸ்.இப்போது டியூஷன் போகாவிட்டால் மக்காகிவிடுவார்கள்.93%லிருந்து 98% அடைவதற்கும் டியூஷன் போகிறார்கள்.

காலம் அப்படி.போட்டின்னா போட்டி அப்படி ஒரு போட்டி.

குழந்தைகளின் மேல் பெற்றோர்களின் அவ நம்பிக்கை மற்றும் குழந்தைகளின் மேல் பேஷனைப் போல் டியூஷனை திணிக்கும் டிரெண்ட் வருத்தமளிக்கிறது.
காலையில் எழுந்து பல் துலக்க வேண்டும் என்பது மாதிரி டியூஷன் படிப்பில் ஒரு அங்கமாகிவிட்டது.It is a necessary evil."அந்தக் காலத்தில கிடையாது” என்று பெருசுகள் ஆரம்பித்தால் பருப்பு வேகாது.சுழ்நிலை எல்லாம் மாறிவிட்டது.

பெற்றோர்கள் ஒரு லெவலுக்கு மேல் குழந்தைகளின் படிப்பை மேற்பார்வை செய்ய முடியாததால் “நல்லா பாத்துகுங்க” என்று டியூஷனில்விட்டு விடுகிறார்கள்.குழந்தைகளும் எங்க ஆத்துக்காரரும் கச்சேரி போவது போல் போய் வருகிறார்கள்.scout தவிர எல்லா பாடங்களுக்கும் டியூஷன்.

இங்கும் நல்லா ”பாத்துக்கிறார்களா” என்பதையும் பார்க்க வேண்டும்.

டியூஷன் இப்போது இன்னொரு பள்ளிக்கூடம்.அங்கு விட்டதை இங்குப் பி(ப)டிப்பது.குடியிருக்க வீடு தேடும்போது பள்ளி மற்றும் முக்கியமாக டியூஷனுக்கு வசதியாக இருக்குமாறு பார்க்கிறார்கள்.காலையிலும் மாலையிலும் புத்தக மூட்டைகளை சுமந்தவாறு தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் பள்ளி மாணவ-மாணவிகளைப் பார்க்கலாம்.

இதில் பரிதாபம் பள்ளி முடிந்து அழுக்கு வடிந்தவாறு ரொட்டியோ அல்லது குர்குரே/பேல் பூரி எதையோ சாப்பிட்டுவிட்டு நேரடியாக டியூஷன் செல்பவர்கள்.ஆசிரியர் வீட்டு வாசலில் காத்திருப்பவர்கள்.

அம்மாக்களும் காத்திருப்பார்கள்.மாணவி/மாணவர்களும்
சிங்கிள் ஆட்டோ பேசி குரூப்பாக போகிறார்கள்.சிபிஎஸ்சியும் போகுது.மெட்ரிக்கும் போகுது.ஸ்டேட் போர்டும் போகுது. எல்லாம் போகுது.போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
இதில் ஏசி ரூம் போட்டு சிரிக்கும் அவலம், பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே மீண்டும் அதே சப்ஜெக்டை இங்கும் எடுப்பது.

ஏன் டியூஷன்? கற்றுக்கொடுத்தலுக்கும் கற்றுக்கொள்ளுதலுக்கும் உள்ள இடைவெளிதான் காரணம். இடைவெளி நீண்டுவிட்டது. இதற்கு பல காரணங்கள்.

முக்கியமானவை:

1.கற்றுக்கொடுத்தலைப் புரிந்துக் கொள்ளாமை 2.சரியாக கற்றுக்கொடுக்காமை 3.பயிற்சி 4.மீண்டும் பயிற்சி4.அறிவுத்திறன் 5.நேரம் 6.வகுப்பின் ஆசிரியர்-மாணவர் விகிதம் (1-30தான் சரியான விகிதம்) 6.பள்ளியின் நோக்கம்(vision).7.சேவை வியாபாரம் ஆகிவிட்டது.8.வலுவில்லாத அடித்தளம் (கணக்குப்பாடத்திற்கு முக்கியம்)
9.பெருகிவிட்ட கவனக் கலைப்புகள்.(செல்/நெட்/டிவி/திருட்டு சிடி/டிரைவிங்)
10.(சொல்லிக்கொடுக்க)அண்ணன் அக்கா தங்கை தம்பி என்று இல்லாமல் ஒண்ணே ஒண்ணு கண்ணே நிலமை சில குடும்பங்களில்
11. லட்சங்கள் கொடுக்காமல் இன்ஜினியரிங் சீட் வாங்க12.கடினமான பாடங்கள்
எல்லா ஆசிரியர்களும் அப்படி அல்ல. சில பள்ளிகளில் சிரத்தையோடு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.தன் கிழ் படிக்கும் மாணவி/மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.சேவை மனப்பான்மை இருக்கிறது.

கற்றுக்கொடுப்பது ஒரு கலை(teaching is an art).இது எவ்வளவு பேருக்கு வரும்.மேலும் ஆசிரியர்களின் பணி உன்னதமானது(noble profession).எதிர்கால சந்ததியை உருவாக்குகிறார்கள்.

பாடம் நடத்துவதைக் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பார்த்தால்:

1.கற்றுக்கொடுத்தல் அடுத்த நிமிடம் புரிந்துக்கொண்டு கற்றுக்கொள்ளும் திறன். இதில் இருப்பவர்கள் சூப்பர் டூப்பர்.எவ்வளவு பேர் இருப்பார்கள்?

2.கற்றுக்கொடுத்தல்-புரியாமை-விளக்கம் கேட்டல்-மீண்டும் கற்றுக்கொடுத்தல்-ஓரளவுக்குப் புரிந்துக்கொள்ளுதல்-பயிற்சி-பயிற்சியில் தெளிவாதல்-மீண்டும் பயிற்சி-மீண்டும் பயிற்சி-கடைசியில் அடித்தளம் வலுவாதல்.
இந்தச் சுழற்சி முக்கியமாக கணக்குப்பாடத்திற்கு வேண்டும்.

மேற்சொன்ன சுழற்சியில் பிரச்சனை என்றால் டியூஷன்.Practice makes the man perfect என்பார்கள்.டியூஷன் முடிந்தும் இந்த சுழற்சி அவசியம்.எவ்வளவு பேருக்குச் சிரத்தை இருக்கிறது.பயிற்சியை சிரத்தையாகச் செய்தால் எங்கேயோ போய்விடுகிறார்கள்.

31-12-11 அன்று நடக்கப்போகும் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் பரிசு வாங்க வேண்டும் என்றால். 1.1.11 அல்லது 1.7.11 அன்றே தினமும் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.அதேதான் படிப்பிற்க்கும்.தினமும் பயிற்சி.


இப்போது பயிற்சி? அவ்வளவு சிரத்தையாக இல்லை.சாதா விடுமுறை மற்றும் இலவசமாக கிடைக்கும் விடுமுறை நாட்களில் விடாமல் சிரத்தையாக செய்தால் டியூஷனே தேவை இல்லை.தூள் கிளப்பலாம்.மேற்பார்வைச் செய்வதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது பெற்றோர்களுக்கு.

டியூஷனை தவிர்க்க: சிறு வயதிலேயே அடித்தளத்தைப் பலமாக்குவது. முக்கியமாக கணக்கு பாடத்தை.இதற்கு பெற்றோர்கள் பல தியாகங்களைச் செய்ய வேண்டும்.

டியூஷன் வைப்பவர்கள் கவனிக்க வேண்டியது:-

1.கூலிக்கு மாரடிக்கும் டியூஷன்களை கண்டுக்கொள்ளுங்கள்.

2.பள்ளியில் கற்றுக்கொடுத்துவிட்டு பள்ளி முடிந்து “சோர்ந்து” வந்து டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களின் எனர்ஜி லெவல் எப்படி இருக்கும்?டியூஷன் செண்டர்களில் பார்ட்டைமாக வேலைப் பார்பவர்களும் இதில் அடங்குவார்கள்.

3.இது one to one குருகுலம் கிடையாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

4.கலந்து கட்டியாக சில இடங்களில் எடுக்கிறார்கள்.(state+Matri+cbse). 9+10+11+12
ஒரு இடத்தில் கண்ணால் பார்த்தேன்.ஜெஜெவென கூட்டம்.தினமும் பைனகுலர் வழியாக பார்த்து என் மகனை அழைத்து வருவேன்.விளக்கு பூஜை செய்வது போல் எல்லோரும் தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பார்கள்.

5.எதுவாக இருந்தாலும் கடைசியில் படிக்க வேண்டியது குழந்தைகள் கையில்தான் இருக்கிறது.நாம் திறந்து திணிக்க முடியாது.

6.டியூஷன் வைத்ததும் பள்ளியில் எடுக்கும் மார்க்கை மானிடர் செய்யுங்கள்.

7.டியூஷன் ஆசிரியர்களுடன் அவ்வப்போது உரையாடி feedback வாங்குங்கள்.இரண்டு(ஆசிரியர்+மாணவன்/வி) பேருக்கும் பொறுப்பு வரும

8.ஸ்கூல் விட்டு டியூஷனக்குப் போகும் குழந்தைகளின் எனர்ஜி லெவலயும் மானிட்டர் செய்யுங்கள்.

9.முகத்தைப் பார்த்து முடிவு எடுக்காதீர்கள்.

10.ஒரு டீச்சர் பெயரைச் சொல்லி அங்க டியூஷன் “சூப்பர்” என்பார்கள்.விசாரியுங்கள்.இப்படித்தான் எனக்கு சொன்னஅந்த சூப்பரிடம் டியூஷன் படிக்க 65 மாணவி/மாணவர்கள்.ஒரே ரூம்.வாசலில் ஒரு கோடி செருப்புக்கள்.எஸ்கேப்.

அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களை நினைத்துப்பாருங்கள்.


டெயில் பீஸ்:  

கேள்வி: டியூஷன் என்பதை தடை செய்துவிட்டால் என்ன ஆகும்?


Monday, November 28, 2011

பிளாக் அண்ட் ஒயிட் அம்மா -சிறுகதை

அம்மா வளையவரும் அரவம் வீட்டில் கேட்கவில்லை.
ஏதோ உள்ளுணர்வு உந்த விசுக்கென்று படுக்கையை விட்டு எழுந்தாள் ஜனனி.சுற்றும் முற்றும் பார்த்தாள்.அப்பாவின் குரல்தான் கேட்டது.வந்த நாளிலிருந்து அம்மாவின் அருகாமை தேவைப்படுகிறது.இந்த அருகாமை ஏக்கம் திருமணம் நிச்சயம் ஆன பின்புதான்.ஏன் இது?அவளுக்கே புரியவில்லை.திருமணத்திற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது.

இத்தனைக்கும் அம்மாவைப் பிரிந்து டெல்லியில்தான் கை நிறைய சம்பளத்தில் வேலை.பத்து நாள் லீவில் வந்திருக்கிறாள்.

”ஏய் அம்மா..!அம்மா...!”என்று கூப்பிட்டவாறே சமயலறைக்குப் போனாள்.
ஸ்டவ்வின் மேல் ”உஸ்ஸ்ஸ்ஸ்” என்று குக்கரின் சத்தம்.வெயிட்டை ஸ்பூனால் மென்மையாகத்தட்டி ”கீப் கொயட்” என்றாள்.

மற்ற அறைகளிலும் தேடிப் பார்த்துவிட்டு இல்லாமல் டிவி ஸ்டாண்டை நோக்கி வந்தாள்.டிவி ஸ்டாண்டின் மேல் இருந்த அம்மாவின் பிளாக் அண்ட் வொயிட் கல்யாண போட்டோவைப் பார்த்தாள்.இதை எப்போது வைத்தாள்.மனசு பரவசமாயிற்று.

அப்பாவித்தனமும் அழகும் முகத்தில் (கல்யாண)சந்தோஷமும் கொள்ளையாக இருந்தாள்.”ஏ பிளாக் அண்ட் ஒயிட் அம்மா ஒன்ன பாத்தா பொறாமையா இருக்கு” அம்மாவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்கவும் அம்மா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
”ஏய் அம்மா..! எங்க தொலஞ்சுப் போயிட்டா..” கத்தினாள்.

“என்னடி ஆச்சு ஒனக்கு.ரொம்ப கிறுக்குப் புடுச்சா போலத்தான் என் பின்னாடி சுத்தற”

சிரித்தாள் அம்மா.சிரிக்கும் போது மேல் உதடு சற்று பட்டையாகி பற்களோடு ஒட்டி வசீகரமாக இருக்கும்.யாராக இருந்தாலும் வசியப்பட்டு பதிலுக்கு புன்னகைக்காமல் இருக்க முடியாது.

“அம்மா.. நைட்டு டிஸ்கஸ் பண்ணினமே.!கல்யாணத்துக்கு அப்பறம் நீயும் அப்பாவும் என்னோட டெல்லில செட்டில் ஆவறதப் பத்தி... அது...!”

இடுப்பில் கைவத்தபடி ஜனனியை முறைத்தவாறு நின்றாள் அம்மா.
“அதெல்லாம் நடக்காத கத.கொழந்த பொறந்த பிறகு பாத்துகிடறத்துக்கு வேண ஒத்தாசயா ஒரு வருஷம் இல்லாட்டி ரெண்டு வருஷம் இருக்கலாம்.ஆனா பர்மனெண்டா நாட் பாசிபிள்.நீயே ஆள் வச்சு பாத்துகிட்டு ஆபிஸ் போக வேண்டிதான்"

”ப்ச்.. போம்மா”

“க்கும்.இங்க இருந்ததான் நான் பிளாக் அண்ட் வொயிட் அம்மாவா இருக்க முடியும்”

“ பின்னிட்ட மிஸஸ் விசாலாட்சிமுருகானந்தம்.சூப்பர் சிக்ஸ்”

ஜனனி வீடு அதிர சிரித்தாள்.

“இன்னும் குளிக்கலயா?சீக்கிரம் குளி.எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்டலாம் பின்னாடி பேசலாம்” பேச்சை மாற்றி செருப்பை ஸ்டாண்டில் உதறும்போது கணுக்காலில் கொலுசு சிணுங்கியது.

அம்மாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.புதுப் புடவை அம்மாவை தனியாக எடுத்துக் காட்டியது.

அம்மா ரொம்ப குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை.ஐம்பதை நெருங்கும் வயதிலும் கட்டு விடவில்லை.அளவான மார்பகங்களும் பின் பக்கமும் ரொம்ப புடைக்காமல் புடவைக்குள் கச்சிதமாக அடங்கி கவர்ச்சியாக இருந்தாள்.

ஜனனியை விட கூடுதல் நிறம். தலையில் ஒரு நரை கிடையாது.பூச்சரம் எப்போதும் இருக்கும்.உடுத்தும்உடைகள் அனாவசியமாக எங்கும் அசக்கு புசக்கு என்று தொங்காது.

பிளாக் அன்ட் வொயிட்டில் இருக்கும் அதே எளிமை நேரிலும் தெரியும்.
எப்போதும் புடவைதான்.ஜனனி வந்ததிலிருந்து புதுப் புடவைகள்தான் நிறைய உடுத்துகிறாள்.

மூன்று நாளாக அம்மாவை கவனிக்கிறாள்.

பளிச்சென்று வெளியே போகிறாள் வருகிறாள்.அம்மா இப்படி அடிக்கடி வெளியே போவது ரொம்ப குழந்தைத்தனமாகப்பட்டது.அதே சமயத்தில் பிடிக்கவும் செய்தது.

போகும்போது கையில் விதவிதமாக குட்டி பர்ஸ் அல்லது ஹேண்ட்பேக். செல்போன்.ஏதோ யோசித்தப்படி திரும்பி வருவாள்.மீண்டும் போவாள்.சில சமயம் அப்பாவுடனும் போவாள்.வெளியே போகாத தருணங்களில் இருவரும் ஏதோ அசட்டுத்தனமாகச் சிரித்துப் பேசியபடி புழங்குகிறார்கள்.விடிய விடிய தன்னுடன் அரட்டை.

ஒரு குறைச்சலும் இல்லை அம்மாவிற்கு.இதே அப்பாவித்தன முகத்துடன் மூத்த அக்காக்கள் இருவருக்கும் திருமணம் செய்து செட்டில் ஆக வைத்துவிட்டாள்.

அம்மாவைப் பார்க்கப் பார்க்க பொறாமைதான் தலையில் ஏறியது.

.“ ஏய்...பிளாக் அண்ட் வொயிட் அம்மா விசாலாட்சிமுருகானந்தம்! எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ல நாம ரெண்டு பேரும் மாத்திக்கலாமா?நீ இடத்துக்கு வா நா உன்னோட இடத்துக்குப் போறேன்”

”என்னாங்க எனக்கு திருஷ்டி சுத்திப்போடுங்க.உங்க பொண்ணு எம் மேல காண்டு வச்சிட்டா.குல தெய்வம் ராஜராஜேஸ்வரி எல்லாத்தையும் பொடிபொடியாக்குமா” மேல் நோக்கிக் கைகூப்பிவிட்டு “சீக்கிரம் குளிச்சிட்டு வா.. சூப்பர் சாப்பாடு இன்னிக்கு”.

ஜனனி குளித்துவிட்டு வந்தாள்.அப்பா, ஜனனி, அம்மா மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

”நானும் வேலைக்குப் போனாதான் சமாளிக்க முடியும்.ஒரு ஸ்டேட்டஸ்ஸோட இருக்க முடியும்.இவ்வளவு சம்பளத்த எப்படி விட்றது”கெஞ்சலாகக் கேட்டாள்.
” இதே பல்லவிதான் திருப்பி திருப்பிப் பாடற.ஒரு வருஷம் இல்லாட்டி ரெண்டு வருஷம் கூட இருந்து குழந்தையப் பாத்துக்கலாம்.அப்படியே கத்துக்கிட்டு நீ டேக் ஓவர் பண்ணிக்க அவ்வளதான்.இது ஒண்ணும் பிரம்ம வித்த இல்ல”

”நீனும் அதே பல்லவிதான் பாடறே”

“வேற எதுவும் மாத்திப் பாடமுடியாது.இதான் உண்மை.” அம்மா எழுந்து சமயலறைக்குப் போனாள்.

“புரியதும்மா.புரியாம இல்ல.கல்யாண நிச்சியம் ஆனதிலிருந்து என்னவோ ஒரு பயம்.ஒரு செண்டிமெண்ட்.சரிம்மா..நீயும் அப்பாவும் வந்து மூணு வருஷம் அப்படியே எக்ஸ்ட்ரா ஒரு அரை வருஷம் இருந்து கொழந்த பொறந்தா பாத்துக்கோ.ஓகே வா”

“ஓகே ...ஓகே டபிள் ஓகே” அம்மாவும் அப்பாவும் குரல் கொடுத்தார்கள்.
கல்யாணமும் நடந்தது.குழந்தையும் பிறந்தது. டெல்லியில் இப்போது அப்பாதான் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறார்.

அம்மா கல்யாணத்திற்கு முன்பே பிளட் கேன்சரில் இறந்து போனாள்.

                                           முற்றும்

டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..!


மன்னிப்பு:
என் தமிழ்மண வாரத்தில் வந்திருக்கும்முதல் மூன்று பதிவுகள்” ஓ கல்கத்தா” “பரத்வாஜின்” மற்றும் “இளையராஜா..ஹம்மிங்ஸ்” ஏற்கனவே போட்டதுதான்.
நேரம் பற்றிய தகவல் தொடர்பு இடைவெளி மற்றும் தொடர்ந்து ஏற்பட்ட மின் தடையால் தயாரித்த நட்சத்திர பதிவுகள் ஏற்றப்படவில்லை.

அதனால் தமிழ்மணம் ஏற்கனவே உள்ள பதிவுகளை ஏற்றி உள்ளனர்.

அடுத்து ஆடியோ (ஹம்மிங் பதிவு)பிரச்சனையும் உள்ளது.ஆடியோ வேலை செய்யவில்லை.

இனி டிவிங்கிள் டிவிங்கிள்.....

சுற்றுல மையங்களில் கயிற்றில் தொங்கிக்கொண்டு வரிசையாக ஊரும் ரோப் கார் போல் ஊர்ந்து போகும் பதிவுகள் திடீரென்று செர்வர் பிரச்சனையால் அங்கங்கு நின்று விடும்.அது போல் இரண்டு முறை என் பதிவு முகப்பில் நின்றுவிட்டது.

மூன்று நாள் கழித்துதான் ஊர ஆரம்பித்தது.

ஆக இந்த வார நட்சத்திரமாக என்னை அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுத்தாலும் unofficialஆக இரண்டு முறை தமிழ்மண நட்சத்திரமாக ஆகி இருக்கிறேன்.

திடீர் மாப்பிள்ளை ஆன உணர்வு.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஜொலிக்கச் சொல்லி இருக்கிறார்கள்.இதற்காக டியூஷன்,ஹோம்வொர்க்,ஸ்பெஷல் கிளாஸ்,சேகர் கைடு,கோச்சிங்,மனப்பாடம் என்று எதுவும் செய்யவில்லை.

ஜொலிப்பா அல்லது ஜல்லிப்பா என்பது படிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்.

அனுபவம்,கதை,கவிதை,கட்டுரை,இசை,பொது,ஆன்மீகம்,லொட்டு,லொசுக்கு இத்யாதிகள் மக்கா...எதையும் விட்டுவைப்பதில்லை.காரணம் சுதந்திரம்.
பிடிக்கவில்லை என்றால் பத்திரிக்கைகளைப் போல் திரும்ப வருவதில்லை.

கவிதைகள் 111 எழுதினாலும் 4 கவிதைகள்தான் பிடித்திருக்கிறது.எல்லா சிறுகதைகளும் எனக்கு திருப்தி அளித்தது.

நான் எழுதி எனக்குப் பிடித்த சிறுகதை:
சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி

இசைஞானி இளையராஜா பதிவுகள் எனக்கு நிறைய பாலோவர்ஸ் வாங்கித் தந்தது.நிறைய ஹிட்டுகளும் கொடுத்தது.இந்த வாரத்திலும் பதிவு உண்டு. ராஜா அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்.

நட்சத்திர பதிவிலும் என்ன புதிதாக எழுத முடிந்துவிடும்.வழக்கமான பதிவுகள்தான்.

எல்லோருக்கும் நன்றி.

Thursday, November 10, 2011

ஓ...கொல்கொத்தா! துர்கா காப்பாற்றுவாள்

ஒவ்வொரு தடவையும் கொல்கொத்தா(Kolkata) செல்லும்போது அது ஒவ்வொரு மாதிரி இன்னதென்று புரியாமல் என்னை வசீகரிக்கிறது.இந்த தடவை மனதின் ஒரு மூலையில் சொந்த சோகம் ஒன்று உறுத்தியபடிதான் ஊர் சுற்ற முடிந்தது.அது என்ன?கடைசி பாராவில்.

நாங்கள் பிரயாணம் செய்த கோரமண்டல் கம்பார்ட்மெண்ட்(ஏசி 2 டயர்) மட்டமான கண்டிஷன்.டமால் டிமீல் என்று இணைப்பில் அதிர்வு.குட்டி கரப்பான்கள்.அதே வழக்கமாக டிடிஇயை சுற்றி வளைத்தபடி அலையும் பிரயாணிகள்.திரும்பும்போது ஹெரா மெயில் பிரயாணம் நன்றாக இருந்தது.

அங்கு கால் வைத்தவுடன் முதல் உணர்வு “சுதந்திர இந்தியாவிற்கு முன்” இருப்பது போல்தான்.காரணம் இன்னும் மாறாத கிழக்கு இந்தியா கம்பெனி ஆட்சித் தோற்றங்கள்.ஹவுரா பாலம்,ஊரும் ட்ராம்கள்,மினி பஸகள்,மஞ்சள் பூத்த வீடுகள்,பச்சை ஷட்டர் ஜன்னல்கள்,கை ரிக்‌ஷாக்கள்,புழுதி,ஏழைகள்.

பூஜா கொண்டாட்டங்கள் முடிந்து உதரியாக அங்கும் இங்குமாக தெரு மூலைப் பந்தல்களில் கொள்ளை அழகாக துர்கா காட்சியளிக்கிறாள். ஒரு மாதிரி fancy dress பொம்மை அலங்காரங்கள்.அருமை.

நம்ம ஊர் மாதிரி வானாளவிய புத்தம் புது சாப்டுவேர்
கட்டிடங்கள்,தனி வீடை இடித்துவிட்டு பல அடுக்கு மாடி கட்டடங்களும் குறைவுதான்.

கொல்கொத்தா இந்தியாவின் தலை நகரமாய் இருந்தது ஒரு காலத்தில்.ஒரு முறை ராஜீவ் காந்தி “இறந்துகொண்டிருக்கும் நகரம்” என்று சொன்னார்.அவ்வளவு பிரச்சனைகள் அந்த ஊரில் முன்னொரு காலத்தில்.

மெளலி ஏதோ ஒரு படத்தில் சொல்லுவார் “உங்க ஊருக்கு கப்பலை தவிர எல்லா வாகனங்களிலும் பிரயாணம் செய்யனம்”.ஆனால் இங்கு கப்பலும் (ferry service)இருக்கிறது.எதிலும் எங்கும் எல்லோரும் பிரயாணம் செய்தபடி இருக்கிறார்கள்.அதனால் பைக், ஸ்கூட்டர்,கார் எல்லாம் ரொம்ப அரிதாக தென்படுகிறது.அடுத்து இங்கு வாங்கும் திறமை(purchasing power) குறைவு என்கிறார்கள்.

பெங்காலிகளில் நிறைய(90%) மிடில் கிளாஸ் மாதவன்கள்?

இப்போது கை ரிக்‌ஷாக்கள் மற்றும் மினி பஸ்கள் குறைந்துவிட்டன.ஆனால்ஆட்டோக்கள் அதிகமாகி விட்டன.இங்கு மாதிரி ஆட்டோ பகல் கொள்ளை கிடையாது. மெட்ரோ ரயில் ரொம்ப வருஷமாக ஓடுகிறது.அதிலும் பிரயாணம் செய்தாகிவிட்டது. டிக்கெட் கிடையாது. அதற்கு பதிலாக ஒரு கருப்பு கலர் கேரம்போர்ட் காயின் மாதிரி ஒன்றை கொடுக்கிறார்கள். ஸ்டேஷன் உள்ளே போகவும் வெளியே வரவும் இதைத்தான் பயன்படுத்த வேண்டும்.


பிரயாணிகள் தவிர நிறைய சுற்றலா பயணிகளும் இதில் பயணிக்கிறார்கள்.

நம்ம ஊர் போல் பளபளவென்று டியூப் லைட் போட்டு வசந்தா/சங்கீதா/சரவண போன்ற சைவம் மற்றும் அசைவ உணவகங்கள் ரொம்ப ரொம்ப குறைவு.

நிறைய ரோட் சைட் கையேந்தி அசைவ பவன்கள்தான்.விதவிதமான அசைவ உணவுகள் ரொமப ஸ்டைலாக கொடுக்கிறார்கள்.மூலைக்கு மூலை நிறைய இனிப்பு பலகாரக் கடைகள். வித விதமான இனிப்புகள்.

பெங்காலிகள் நம்மூர் மசால்தோசையும்,வடையையும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நான் சாப்பிட்டது மிஷ்டி தொய்,சந்தேஷ்,வர்த்தமான் வாழைப் பழம்,ரசகுல்லா,சிங்காரா,கச்சோரி,ராஜ்போக் மற்றும் பெயர் மறந்துபோன இனிப்புக்கள்.

அங்கு ஏதோ ஒரு தியேட்டரின் சினிமா போஸ்டர் சின்னதாக.உற்றுப் பார்த்தால் அதில் Seventh Sence morning show.

சந்துக்கு சந்து டாஸ்மாக் கடைகள் கிடையாது. ரொமப அபூர்வமாகத்தான் தென்படுகிறது.கிரில் போட்டு இடைவெளி வழியாகத்தான் எல்லாம் சப்ளை. கியூவில் நிற்க வேண்டும்.

காளி கோவில் (பூசாரி) பண்டாக்கள் கையில் 500,100,50 கை விரல்களில் சொருகிக்கொண்டு,(இது பிச்சைகாரர்கள் டெக்னிக்.மினிமம் இவ்வளவுதான் ஏற்றுக்கொள்வோம் என்று காட்டுவது)கையை மேல் நோக்கி நீட்டியபடி கியூவில் வரும் பகதர்களுக்கு பூஜை மற்றும் தொட்டு ஆசிர்வாதம் செய்து பணம் வாங்கிக்கொள்கிறார்கள்.காளி நாக்கை வெளியே நீளமாக துருத்தியபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

காளியிடம் வேண்டியபடி நானும் நகர எனக்கும் நெற்றியில் குங்கும் இட்டு ஆசிர்வதித்து பணத்திற்காக உள்ளங்கையை பண்டா சொரண்டினார்.”காளிட்ட வாங்கிக்கோ என்றேன்” அதற்கு அவர் “கீ போல்சா” என்றார்.

அங்கு சங்கு ஊதும் ஒலி கேட்டால் காளி. நம்மூரில் காலி.

டோவர் லேன் மார்க்கெட் அருகே லெதர் பேக் (travel bag) விலை 650/- என்றார். நான் 325/- கேட்டேன்.கடைசியில் 350க்கு கொடுத்தார்.”ஆப் தமில் ஹை” பேக்  செய்துக்கொண்டே கேட்டார்.பதிலுக்கு நான் "ஹான்”.
_________________________________________

சோகம்:

என் மைத்துனி (மனைவியின் தங்கை) கழுத்திற்கு கிழ் எந்த இயக்கமும் (அவ்வப்போது சுமாரான இயக்கம்) இல்லாமல் படுத்தப் படுக்கை.எல்லாம் படுக்கையில்தான்.சுவாசம் வெண்டிலேட்டர் மெஷின் வழியாகத்தான்.

கழுத்திற்கு மேல் எல்லாம் நார்மல்.பேசுகிறாள்.சாப்பிடுகிறாள். டிவி பார்க்கிறாள்.சிரிக்கிறாள்.எல்லோருடனும் கலந்து பேசுகிறாள்.எல்லாம் ஓகே.

ப்ளஸ் ஒன் படிக்கும் ஒரு பையன் மற்றும் கணவர் மொத்தம் மூன்று பேர்தான்.

1991ல் நடுமண்டையில் ஏற்பட்ட விபத்து(வாசல் நிலைப் படி இடித்து) சிகிச்சை எடுத்து 2005 வரை நன்றாக இருந்து மீண்டும் தடுக்கி விழுந்து கொல்கொத்தா மருத்துவமனை சிகிச்சையில் ஏதோ கோளாறாகி படுத்தப்படுக்கையாகிவிட்டாள்.

கொல்கத்தா துர்காவும் காளியும்தான் நம்பிக்கை.எங்கள் பிரார்த்தனை வீண் போகாது.


Monday, October 31, 2011

பரத்வாஜ்ஜின் நூதன இசை முயற்சி

தமிழ்த் திரைப்பட இசையமையப்பாளர் பரத்வாஜ் ஒரு நூதன
பின்னணி இசைக் கோர்ப்பை நடத்தி முடித்திருக்கிறார்.

இவர் தமிழ்ப் படங்களுக்கு நல்ல இசையைக் கொடுத்திருக்கிறார்.

1928 வருடம் பிரிட்டன்,ஜெர்மனி,இந்தியாவின் கூட்டுத்தயாரிப்பில் உருவான பேசாத படம்(silent movie) Taj Mahal, the Romance of India திரையில்(சிங்கப்பூர்) ஓடுகிறது.
2000 சிறப்பு விருந்தினர்கள் பார்வையிடுகிறார்கள்.அதற்கு பரத்வாஜ் உருவாக்கிய பின்னணி இசை,லலிதாவைத்தியநாதன் என்பவரின் மேற்பார்வையில்(conductor) லைவ்வாக இசைக்கப்படுகிறது.

ஒரே ஒரு வித்தியாசம். இசையமைப்பாளர்கள்(ஆர்கெஸ்டரா) முதுகிற்கு பின்னால் திரை.அவர்கள் லலிதா வைத்தியநாதனின் கை அசைவை பார்த்தபடி வாசிக்கவேண்டும். படம் ஒன்றரை மணி நேரம்.


இதற்கு கன்னபின்னாவென்று ஹோம் வொர்க் செய்திருக்க வேண்டும்.பரத்வாஜ்ஜின் முயற்ச்சிக்குப் பாராட்டுக்கள்.


Sunday, October 30, 2011

இளையராஜா - King of Heavenly Hummings-3

இந்தப் பதிவில் மீண்டும் இசைஞானி இளையராஜாவின் ரம்மியமான ஹம்மிங் பற்றிய பார்வை.இதில் 39 இசைத் துண்டுகள் உள்ளது.ப்ளே லிஸ்டை க்ளிக்கினால் பட்டியல் கிடைக்கும்.

ஹம்மிங்-1

ஹம்மிங்-2

மனது வருட ஹம்மிய முகம் தெரிந்த/தெரியாத தேவதைகள்/தேவர்களுக்கு.

ஒவ்வொரு ஹம்மிங்கையும் கண்களில் தொட்டு ஒற்றிக்கொள்ளலாம்.அவ்வளவு அழகு! முக்கியமாக full of soul...soul... soul...!

இளையராஜா ஹம்மிங்கை ஒரு fashion designer போல் வடிவமைக்கிறார்.சலித்துப் போன ஒரே மாதிரி பாடல்கள் நம் தமிழ் பட உலகில் தவிர்க்க முடியாது.அதில் முடிந்த அளவு சாயல் அடிக்காதபடி அமைக்கிறார்.

வண்ணமயமான கற்பனைத் திறன் இருப்பதால் நிறைய கலவைகளில்(பெர்மிட்டேஷன் அண்ட் காம்பினேஷன்) கொடுக்கிறார்.இல்லாவிட்டால் காபி அன்ட் பேஸ்ட் ஆகிவிடும்.

குறிப்பு:  மேலே என் பாடல் பற்றிய குறிப்பு வரும். கிழே ஆடியோ துண்டு.

கிழ் வரும் இரண்டு பாடல்களும் ஒரே மாதிரி ரொமாண்டிக் கோரஸ் டூயட். ஆரம்பம் மற்றும் 1.11 பிறகு வரும் ”தனதந்த”வைக் கவனியுங்கள்.வெவ்வேறு மெட்டில் வரும்.ராகங்கள் வேறுபடுகிறது.அதனால் ராஜாவுக்கு இதெல்லாம் சுலபம்.

Humm-3-Vaathiyar Veetu Pillai-89-Oru Pooncholai.mp3

Humm-3-Periya Veetu Pannakkaran-90-Malligaiye.mp3

ஹம்மிங் என்பது இயற்கையில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். காடுகளில் பறவைகளின் கூவல்கள்தான் அடிப்படை.இந்து மத நூல்கள்,பைபிள், குரான் போன்றவைகளில் வானத்திலிருந்து அமானுஷ்ய குரல்கள்(அசிரீரி) தேவதூதர்களுக்கு கட்டளைகள் இட்டதாகப் படித்திருக்கிறோம்.

வானத்து தேவதைகளின் ஆசிர்வாதங்களும் அழுகைகளும் ஹம்மிங் வடிவில் பாடல்களில் கொடுக்கப்படுகிறது.புது பரிமாணம் பெறுகிறது பாடல்கள்.

கிழ் வரும் ஹம்மிங் ஓலத்தில் ஒரு “மாபெரும் சோகம்” வெளிப்படுகிறது.வானத்து தேவதைகள் கசிந்துருகுகின்றன.
Humm-3-Devan Magan-92-Vaanam Thottu Pona.mp3

சில ஹம்மிங்கள் ”பிகர்”கள் கொடுக்கும் கிளுகிளுப்பாகிறது.(சொர்க்கம் மதுவிலே) .
Humm-3-Sattam En Kaiyil-78-SorgamMathuvile.mp3

1980/90 ஹம்மிங்குகள் slow motion (வெள்ளை உடை அல்லது சாதா உடை) காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.சின்னப்புறா ஒன்று பாட்டு.
Humm-3-Anbe Sangeetha -79- Chinna Pura Ondru.mp3
இது ஒரு பிரமிக்க வைக்கும் ஹம்மிங்.0.19ல் ஹம்மிங் போன்ற இசையும் மற்றும் கார்த்திக்கின் ஹம்மிங்கும் ஒன்றின் மேல் ஒன்று பின்னப்பட்டு நம்மை சிலிர்க்க வைத்தப்படி அமானுஷ்யமாகக் கடக்கிறது. Awesome maestro!
Humm-3-Azhagi-02-Oliyilae Therivadhu Devadhaya.mp3

“ஏரியிலே”  வெஸ்டர்ன் கிளாசிகல் அமைப்புப்படி ஒரு ஒழுங்குடன் அழகாக இனிமையாக இருக்கிறது.
Humm-3-Karaiyellam Sen-81-EriyileElandhaMaram.mp3

31 வருஷம் ஓடிவிட்டது.மெருகு அழியவில்லை.வெஸ்டர்ன் கிளாசிகல் கலவையில் வந்து அசத்துகிறது.
Humm-3-Nenjathe Killathe-80-UravenumPuthiya.mp3

உற்றுக் கேளுங்கள். கர்நாடாக மெலடியில் ஹம்மு(கொஞ்சு)கிறார்கள்.அதுவும் கடைசி 0.30-0.33 So sweet !(hear the echo when they hum)
Humm-3-Rajakumaran-94-SithakathiPookale.mp3

சம்பிரதாயமான “ஏலேலோ ஐலேசா”வை வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார்.முத்தம்மாவுக்கு எதிரொலியாக வரும் ஹம்மிங் heavenly.0.26-0.40அருமை.
Humm-3-Kattumarakaran-95-VetriVetri.mp3

ஹம்முவது யாரு? அட நம்ம...................? ஸ்டைலை கவனியுங்கள்.
Humm-3-Kalioonjal-97-Varna Vrindavanam.mp3

ஏய்... நான்சென்ஸ் மீசிக் டைரக்டர்ஸ்! மீசிக்னா அப்ப பறிச்ச ரோஜாப் போல சில்லுன்னு பிரஸ்ஸா இருக்கனும்.கீழ வர பிட்ட லிஸ்ஸன்யார்.
சும்மா ஜிகுஜிகுஜிகுன்னு போகும்.0.23 பைபாஸ்ல ஒரு கிடார் ரொமாண்டிக்கா கப்லிங்க் ஆவுது பாரு. கேட்டுட்டு திரும்பி பாக்காத ஓடுங்க! பிச்சுப்புடவன் படுவா!

ஞானி சார் ஸ்டார்ட் மீசிக்...! ஓ மை ஆல் கேர்ள்ஸ்.. ப்ளிஸ் ஹம்ஸ்ஸ!ஜஜம்ஜம்ஜம்....ஜஜம்ஜம்ஜம்.... ஜஜம்ஜம்ஜம்....
கவுண்டர் சொல்வதுபோல் என்னஒரு majestic flow!
Humm-3-Poonthotta Kavalkaran-88-ParamalPaartha.mp3

Humm-3-Mangalam Nerunnu-84-Rithubheda Kalpana.mp3

Humm-3-Ingeyum Oru Gangai-SolaiPushpangale.mp3
Humm-3-VellaiRoja-83-DevaninKovil.mp3


Oh.. Jency where are you(நீ எவ்விட போயி)?நான் பார்க்கும் தமிழக கிராமத்து வயல்களில் “லாலல்லல” இன்னும் ரீங்காரம் இடுகிறது. Stunning Jency!
Humm-3-Puthiyavaarpugal-79-Idhayampoguthey.mp3

Humm-3-Moodram Pirai-82-VaanengumVanna.mp3

Humm-3-Puthiya Raagam-91-Vaadumo Oviam.mp3

முழு பாட்டையும் கேட்டுப்பாருங்கள்.அள்ளிக்கொண்டு போகும் இசை.சித்ராவின் குரலில் என்ன கனிவு/பக்தி.Hats off Chithra!.
Humm-3-Kochu Kochu-00- Sivakaru.mp3

Humm-3-Thaipongal-80-Theerthakaraithanele.mp3

ராஜாவின் “பெல்பாட்டம்” கால குரல்.
Humm-3-ThaiPongal-80-KanMalargalinAlaipithal.mp3
Humm-3-Hey Ram-00-Isaiyil Thodanguthamma.mp3

என்ன ஒரு கர்வமான ஹம்மிங்(எல்லாம் எனக்கேதான்).தாளமும் மிகுந்த வீரியத்துடன் அடிக்கப்படுகிறது.அது ஒரு தனிமொழி பேசுகிறது.
Humm-3-Varusham Pathinaru-89-PazhamudhirCholai.mp3

Humm-3-Sollathudikathu Manasu-88-Yenathu Vizhivazhiyil.mp3

Humm-3-Sivappu Rojakkal-78-NinaivoOruParavai.mp3

Humm-3-KochuKochu Santo-00-Kodamanjin.mp3

ராஜாவின் மாஸ்டர் பீஸ்
அழகு+ஸ்டைல்+ஆத்மா+குரல்+வரிகள்+மேதமை இவ்வளவும் அடங்கிய ஒரு premium package.

ஹம்மிங் வியூகத்தில் நம்மை சுழலவிட்டு கிறங்கடிக்கிறார். என்ன ஒரு அரேஞ்மெண்ட்!இதில் கவுண்டர் பாயிண்டும் உண்டு. ஒரு சமயத்தில் இரண்டு மெட்டு.
Humm-3-Avatharam-95-Thendral.mp3

Humm-3-Agninatchthiram-88-Rojapoo.mp3

Humm-3-Eththnai Konam83Alaipayuthe Kanna.mp3

Humm-3-En Mana Vaanil-02-Vayasu Vandha Valibanukku.mp3

Humm-3-IdhayaKovil-85-OororamaAathuPakkam.mp3

எல்லா பதிவுகளிலும் வழக்கமாக சொல்வது. இதிலும் சொல்கிறேன். இசைகோர்ப்புக்களில் அசட்டுத்தனம் மற்றும் லூசுத்தனமாக அங்கும் இங்கும் கிழிந்து தொங்கும் அபத்தங்கள் இல்லாமல் நேர்த்தியாக கோர்ப்பது எப்பவுமே என்னை ஆச்சரியப்படுத்துகிறது.

Humm-3-Julie Ganapathy-03-Thani Konjam.mp3

Humm-3-Eramana Rojave-91-AthomegaOorvalam.mp3

Humm-3-Thendrale Ennai Thodu-86-KavithaiPaadu.mp3

Humm-3-Bharathi-00-NinnaiCharanadainthen.mp3

Humm-3-Aayiram Vasal Idhayam-Maharani Unai.mp3

அழகான கிராம பாடல் வரிகளும் அதன் எதிரொலி ஹம்மிங்களும் அற்புதம்.
Humm-3-Aathma-93-Velakku Vaippom.mp3

Humm-3-Selvi-85-YaaroYaaro.mp3

Humm-3-Raagangal Maaruvathillai-83-Vaan Meedhiley(new).mp3