Wednesday, January 28, 2009

இரண்டு வார்த்தை கதைகள் - சுஜாதா - நான்

சுஜாதா எப்பவோ இரண்டு வார்த்தைகளில் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.

சுஜாதா கொடுத்த உதாரணக் கதைகள் கிழே:-
1)
தலைப்பு:  ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?

கதை:  முதலிரவில் கேள்வி

2)
தலைப்பு:   சுவரில் ஆணியடிப்பவன் கேட்ட கடைசிக் கேள்வி

கதை:   கன்சீல்ட் ஒயரிங்க்ப்பா

3)

தலைப்பு:   விடுமுறைக்கு ஊருக்கு வந்த கார்கில் வீரனும் அவன் நண்பர்களும்

கதை:   ரம் கொண்டாந்திருக்கியா?

4)


தலைப்பு:   ஆராய்ச்சிச் சாலையில் இருந்து ரோபோ வெளியே வந்தது.

கதை:  விஞ்ஞானி க்ளோஸ்


      நான் எழுதிய இரண்டு வார்த்தை கதைகள்

1)

தலைப்பு:   இன்று ரயிலில் டெல்லியை நோக்கி குடும்பத்தோடு உல்லாசப் பயணத்தில்  டிக்கெட்டை எடுத்துப் பார்க்கிறேன்.

கதை:          நாளைய  டிக்கெட்

2)


தலைப்பு: 

மூன்று மணி நேரம் புத்தக கண்காட்சியை சுற்றிப் பார்த்து விட்டு எதுவும் வாங்கவில்லை

கதை:       பால்கோவா  சூப்பர்

3)
 
தலைப்பு: 

இந்த பத்துப் பேரின் ஜனவரி மாத  Housing Loan EMI  அக்கெள்வுண்டில் பாஸ் ஆகுமா   பேங்க் மனேஜர் கவலை 

கதை:        சத்யம்  ஊழியர்கள்


4)
தலைப்பு: 
மும்பாய்த் தீவிரவாத தாக்குதலில் ஹோட்டல் பாத்ரூமில் 70 மணி நேரம் அடைந்து கிடைந்து வெளியே வந்தவன் சொன்ன முதல் வார்த்தை


கதை: செல் காணவில்லை        


எண்ணப் படாத குக்கர் விசில்கள் - கவிதை   
  
                  
  எண்ணப் படாத குக்கர் விசில்கள் - கவிதை

     குக்கரில் இவ்வளவு
     பெரிய விசில் சத்தம் 
     வந்தவுடன் அடுப்பை
     சிறியதாக்கி  இவ்வளவு
     சிறிய விசில் சத்தம் வந்தவுடன்
     அடுப்பை அணைக்க வேண்டும் 
     என்று ஒரு கணக்கைச் சொல்லி
     என்னிடமும் என் மகளிடமும்
     ஆணையிட்டு அவசரமாக
     பாத்ரூம் சென்றாள் 
     அன்பு மனைவி சீதா லஷ்மி
     சொல்லிக் கிளம்பியவுடன்
     சுயம்புவாக விசிலடிக்க ஆரம்பிக்க 
     இரண்டா அல்லது மூன்றா
     என்பதாக ஒரு குழப்பம்
     NDTV News ஐ ரீமோட்டில்
     ஊமையாக்கிவிட்டு   கேட்டேன் 
     விசிலடிக்க ஆரம்பித்து விட்டதா
     என்று  - திருப்பிக் கேட்டாள்
     கைப் பேசியை hold இல் போட்டு
     என் செல்ல மகள் நித்யா
     எத்தனை விசில் ஆயிற்று 
     கணக்குக்கு ஒரு தடயமும்
     கிடைக்கவில்லை     திரும்பினேன் 
     சமயலறையிலிருந்து ஏமாற்றத்தோடு 
     அரையும் குறையுமாக
     ஈரம் சொட்டச் சொட்ட
     சற்று கவர்ச்சியாகக் கூட 
     திடீரென்று வெளிப்பட்டு
     சமையலறைச் சென்று
     பொறுப்பாக அணைத்துச்
     சென்றவளைப் பாராட்டி விட்டு  -     மகள்   
     என் முகம் பார்த்துச் சொன்னாள்
     இவ்வளவு பொறுப்பாக
     இருக்க வேண்டும் 
     விசிலடித்துக் கொண்டே
     ஆங்கிலத்தில்
          

Sunday, January 25, 2009

மகன் தந்தைக்காற்றும் உதவி - கவிதை

      
      
     வீட்டில் அடைந்து
     கதவு அடைத்து
     பார்க்கும் தொலைக்காட்சிச்
     சத்தத்தையும் மீறிக் கேட்கிறது
     காலனி விழாவில்
     பரிசு வாங்கும் 
     குழந்தைகளுக்கான
     கைத்தட்டல்கள்
     எனக்கு மட்டும் இல்லாமல்
     என் பத்து வயது 
     மகனுக்கும் கூட
  

நான் - நடிகை ஸ்ரீப்ரியா - அவள் அப்படித்தான்

                                               நடிகை ஸ்ரீபிரியா


நடிகை ஸ்ரீப்ரியா.கன்னத்தில் குழி விழுந்த அழகான முகம். வசீகரமான கண்கள்.வட இந்திய முகம்.மூக்குத்திக் 
காரணம்? என் சின்ன வயதில் என்னை மிகவும் பாதித்த
நடிகை.1970/80 களில் இளைஞர்களை கொள்ளைக் 
கொண்டவர்.தமிழ் திரைப் பட உலகத்திற்கு கிடைத்த 
அதிர்ஷ்டம்.திறமையான நடிகை.நடிப்பில் அசட்டுதனம் 
இல்லாமல் ஒருபுத்திசாலித்தனம் இருக்கும்.முதல் படம் 
“முருகன் காட்டிய வழி”. 1974.நூறாவதுப் படம்:நட்சித்திரம்.
300 படங்களுக்கு மேல் நடித்தவர்.

இவர் ஒரு unique நடிகை என்று சொல்லலாம். இவர் எல்லா வேடங்களுக்கும் பொருந்தி வருபவர்.துடுக்கான கிராமத்துப் பெண்/நகரத்துப் பெண்/வில்லி/பிக்பாக்கெட் அடிப்பவள்/விதவை/புராண கதாப் பாத்திரம்/நடிகைப் பாத்திரம்/காமெடி. “அவள் அப்படித்தான்” படத்தில் மஞ்சுவாகவே வாழ்ந்திருப்பார்.stylish walk.இவரின் சிறப்பு காதல் டுயட்களில் சிறந்து விளங்குவது. இவர் காலத்தில் இருந்த சுஜாதா திறமையான நடிகைதான்.
ஆனால் எல்லா ரோல்களுக்கும் பொருந்தி வர மாட்டார்.”இளமை உஞ்சலாடுகிறது” படத்தில் ராஜாவின் ”ஒரே நாள் உன்னை நான்” பாட்டிற்க்கு காதல் உணர்வோடு நடித்திருப்பார்.Graceful and elegant. நம்ம கமல்தான் “பலராம் நாயுடு” சபாரிப் போட்டுக்கொண்டு ஸ்பிரிங்க் மாதிரி அபத்தமாக குதித்து காதலிப்பார்.நல்ல தமிழ் உச்சரிப்பு.வசனங்களை பேசும் முறை.அதே மாதிரி ஆங்கிலமும்.
இன்று வரையிலும் அவருக்கு இணையாக யாரும் இல்லை. ஒரு 20 சதவீதம் சிநேகாவைச் சொல்லலாம். எல்லாம் கிளாமர்தான்.


இவர் சர்ச் பார்க் கான்வெண்டில் படித்தவர்.கணவர் ராஜ் 
குமார் ஒரு நடிகர்.கமல் மாதிரியே இருப்பார். இவர் நடிகை லதாவின் சகோதரர்.ஸ்ரீபிரியா சமஸ்கிருதம் படித்தவர்.
டீவி சிரியல்கள் நிறைய டைரக்ட் செய்துள்ளார்.

Thursday, January 22, 2009

சைக்கிள் கடையின் உள்ளே அப்பா வாங்கப் போகும் சைக்கிள் இல்லை

   
               கவிதை

சைக்கிள் கடையின் உள்ளே அப்பாவாங்கப் போகும்
சைக்கிள் இல்லை


சைக்கிள் கடையின் உள்ளே

அப்பா வாங்கப் போகும்

சைக்கிள் இல்லை இரண்டு

சக்கரங்களை உருட்டிக் கொண்டு வந்தான்

எலும்புக் கூடின் உள்ளே

நுழைத்து ஒட்டவைத்து முடிக்கினான்

இரண்டு கைகள் மாதிரி

ஏதோ இரண்டு தொங்கியது

அம்மா உட்காரப் போகும் தட்டில்

வைத்து இறுக்கி முடிக்கினான்

அப்பா விசிலடித்துக் கொண்டே

உட்கார்ந்து ஓட்டப் போகும்

பச்சைக் கலர் சீட்டை

இரும்பில் நுழைத்து சுத்தித் தட்டினான்

ஜிகினா குஞ்சலங்களோடு ரெடியாயிற்று

ஹேண்டில் பார் – நான் எதிர்பார்த்த

எனக்கான சின்ன சிம்மாசனமும் தயார்

மற்றும் சில உதிரி பாகங்களையும்

ஒட்ட வைத்துக் கடைசியில் 

காற்றும் அடிக்க அடிக்க

உயிர் வந்து நிமிர்ந்துப் படைக்கப்ட்ட 

சைக்கிளின் பள பள மணி

டிங் டிங் என்று அடிக்காமல்

கிர்ர்ர்ரிங் கிர்ர்ர்ரிங் அடித்துப்

பார்த்து மகிழ்ந்த போது எங்களுக்கு

படைத்த சைக்கிளை  யாரோ

அவசரமாக வந்த ஒரு சேல்ஸ் டாக்ஸ் 

ஆபிசருக்கு அவசரமாக படைத்து

விட்டான் சைக்கிள்காரன்

சைக்கிள் கடையின் உள்ளே

அப்பா வாங்கப் போகும்

சைக்கிள் இல்லை

சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி - சிறுகதை


புது ஊர்.ஒரு வழியாக வீடு மாற்றியாகிவிட்டது.ப்ளாட் நன்றாக செட் ஆகி இருந்தது.தலையை உலுப்பியவாறு அவசரமாக முடி வெட்டிக்கொள்ள கிளம்பினேன்.சாந்தி பியூட்டி சலூன்.போர்டில் ரஜினி படம்.கண்,நெற்றியில் ரஜினி ஜாடை.ஆனால் கன்னங்கள் உப்பி போய் வேறு மாதிரி இருந்தார்.I say one time, but it is 100 times said என்று ரஜினியின் தலைக்கு மேல் எழுதியிருந்தது.

”வாங்க சார்....இப்ப முடிஞ்சுடும்”சலூன் ஓனர்.உள்ளே மூன்று நபர்கள் இருந்தார்கள்.சின்ன இடம்.ஷேர் ஆட்டோவில் உட்காருவது மாதிரி நெருக்கித்தான் உட்கார முடிந்தது.பிரில் கிரீம் சவரக்கட்டி நாற்றம் அடித்தது.அதற்குள் அடுத்த நபர் உள்ளே நுழைந்தார்.அவரையும் ”வாங்க சார்.. இப்ப முடிஞ்சுடும்“ என்று அழைத்தான்.சலூனை நோட்டம் விட்டேன்.சுவரெல்லாம் காரைப்படிந்து ஈரிச்சுப்போய் இருந்தது.

பக்கத்தில் இருந்தவர் என்னையே கால் முதல் தலை வரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.அவரை முறைத்துவிட்டு விலைப்பட்டியலைப் பார்க்க ஆரம்பித்தேன்.

“சார்... அது சொம்ம.. போட்டு வச்சுக்கறோம்.அந்த அமவுண்ட் வாங்கறதில்ல.சங்கம் கொடுத்தது”.

”நீங்க ஊருக்கு புச்ச சார்?’

தலையசைத்தேன்.

மறுபடியும் நோட்டம் விட ஆரம்பித்தேன்.அதிர்ஷ்டசக்கரத்தகடு பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது.உள்ளே கரப்பான் பூச்சிகள்.என்னைப் பார் யோகம் வரும் கழுதைப் போட்டோ.ரேடியோ.சதுரவடிவமாக டெல்லி செட் போல் இருந்தது.நிறைய திருகு சுவிட்சுகள் இருந்தது.FMல் யாரோ ஒரு பெண் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தாள்.
வாய் ஓய்ந்தவுடன் ”அடியே.. கொல்லுதே” பாட்டை யாருக்கோ டெடிகேட் செய்து பாட ஆரம்பித்தது.

என் முறை வந்த்து.ரெக்சின் சீட்டை தட்டி அழைத்தார்.உட்காரந்தவுடன் சுகமாக இருந்தது.பொன்னாடைப் போத்தினார்.

”கட்டிங்... மீடியமா?”

”எஸ்”

“ஆ பாத்தாவே தெரிது சார்.”

எப்போதும் மிடியம்தான்.க்ளோஸ் கட்டிங் புது மனவி கவிதாவிற்குப் பிடிப்பதில்லை.“லூசு” மாதிரி இருக்கு என்பாள்.‘கர்சிக் கர்சிக்” வெட்ட ஆரம்பித்து சீக்கிரமே முடித்து விட்டான்.அடுத்து ஷேவிங்.தலையை குனிய வைத்து அழுத்தியபடி ஷேவிங்கை ஆரம்பித்தான்.“என்னம்மா
உள்ள வாங்க”வாசலைப் பார்த்துக் கேட்டபடி வெளியே போனான்.

”பையனுக்கு முடிவெட்டனுமா?” 

”ஆமாம்” ஒரு பெண் குரல் கேட்டது.

“ஏரியாக்கு புச்சா இருக்கீங்க.அடுத்தது பாஸ்டா முடி வெட்டிடறேன்.”

என்னை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தவன் என்னைவிட்டு விட்டு வெளியே தலையை நீட்டிப்பார்க்க ஆரம்பித்தான்.

அவள் தயங்கிய மாதிரி தெரிந்தது.கண்ணாடியில் சின்னப் பையன் உருவம்தான் தெரிந்தது.அவள் உருவம் தெரியவில்லை.வெளியே போய் ஏதோ பேசிவிட்டு வந்தான்.துண்டுப் பேப்பரில் ஒரு செல் நம்பர் எழுதி இருந்தது.அவள் போய்விட்டாள்.

ஒரு வழியாக எனக்கு முடித்தான்.கண்ணாடியில் பார்த்தேன்.அவன் மேல் கடுப்பு ஏற்பட்டது.சின்னப்பையனை அழைத்தான்.சலூன்காரனைப் பார்த்து மிரண்டுப் போய்“அம்மா”என்று அழ ஆரம்பித்தான்.எல்லோரும்
சமாதனப் படுத்தமுயன்று தோற்றுப்போனார்கள்.

”பாவம்.. இந்த லேடிஸ்ஸூ...வூட்ல ஜெண்ட்ஸ்..என்ன வெட்டி முறிக்கிற வேல”என்னை முறைத்துப்பார்த்தவன்.இவன் என்ன வெட்டி முறிக்கிறான்?

நானும் அந்தக் குட்டிப்பையனைப் பார்த்தேன்.அழகாக துறுதுறுவென இருந்தான்.என் அப்செட் மூட் சர்ர்ரென்று இறங்கி காணாமல்போனது.சந்தோஷம் படர்ந்தது.

”வாட்  இஸ் யுவர் நேம்?”

“அபிலாஷ்”

“வாட்ஸ் யுவர் ஸ்கூல் நேம்?’

“சின்மயா”

”டாடி ஆபிஸ் போயிட்டாரா?

“தெரியாது”

”டாடி பேர் என்ன?”

“தெரியாது”. 

எல்லோரும் சிரித்தார்கள்.எனக்குக் கோபம் வந்தது.அவனுடன் கெஞ்சலாகப் பேசிப் பேசிஒரு வழியாக சமாதானமானான்.அவனுக்கு மிரண்டா பாட்டில் வாங்கிக் கொடுத்தேன்.

“இங்க சாப்பிடக் கூடாது.ம்ம்மிக் கிட்ட கேட்டுத்தான் இத சாப்பிடனும். என்ன ஒகேயா?”முகத்தில் பிரகாசத்தோடு பாட்டிலை அணைத்துக்கொண்டான்.சீட்டில் உட்கார வைத்து முத்தம் கொடுத்து “பை” சொல்லி கிளம்பினேன்.

மீண்டும் அழ ஆரம்பித்தான்.தயங்கினேன்.

“சார்... முடி வெட்டற வரைக்கும் இருங்க ..அவங்க அம்மா வந்துருவாங்க.”

சம்மதித்தேன்.

”உங்க தோலு சிவப்பு தோலு சார்.குழந்த டிரிக் வேற தெரிஞ்சு வச்சுக்கினுக்குறீங்க”

“அதெல்லாம் இல்லீங்க ..மிரண்டா பண்ற வேலதான்..”

அபிலாஷூக்கும் கட்டிங் முடிந்தது.முடிவெட்டியவுடன் ரொம்ப குட்டியாகத் தெரிந்தான்.முடித்துகள்களை தட்டிவிட்டு முத்தமிட்டேன்.அபிலாஷ் முகம் சிவந்து வெட்கப்பட்டான்.திரும்பி

வாசலைப் பார்த்து “அம்மா” என்று ஓடினான்.வாசலைப்பார்த்து
அதிர்த்தேன்.மகேஸ்வரி.அவள் முகம் சிவந்து கோபமாக சிறுவனைப் பார்த்தாள்.

”உனக்குத் தெரியாத ஆளுங்கக்கிட்ட போக கூடாதுன்னு..எவ்வளவு தடவச் சொல்லியிருக்கேன்... இடியட்..”குழந்தையை இழுத்தாள்.
மிரண்டா பாட்டில் கிழே விழுந்தது.

மகேஸ்வரியுடன் திருமணமாகி நான்காவது மாதத்திலேயே கருத்து வேற்றுமை வந்து அபத்தமாக தினமும் சண்டைப் போட்டோம்.சில மாதங்கள் பிரிந்தோம்.அடுத்த வருடம் விவாகரத்து.அப்போது அவள் கருவுற்றிருந்தாள்.ஐந்து வருடம் ஒடி விட்டது.

அபிலாஷ் என் பையனா?

“அங்கிள்... டாட்டா..”திரும்பிப் பார்த்து கையசைத்தான் அபிலாஷ்.

                         முற்றும்
 

Monday, January 19, 2009

உள்ளங்கையில் மருதாணி - கவிதை

                                              
            மருதாணி
    
        இரவு தூங்கும் போது

        யார் மீதும் கைகள் 

        பட்டுச் சிதறாமல்
        
        கொசுக் கடிக்கும் 

        கை ஆட்டாமல்
        
        கலவிக்கு நெருங்கிய

        கணவனையும் ஒதுக்கி

         தூங்கி   விடிகாலை 

        எழுந்ததும்
                                                                
        முதல் வேலையாக
                                                                
உள்ளங்கைகளை
                                                              
தெரு ஓர குழாயில்
                                                                
லேசாகக் கழுவித் துடைத்து
                                                                
விரைந்தாள் -  தெரு 
                                                               
விளக்குக்கு கீழே 
                                                                
அழகாக வட்ட வடிவமாக
                                                               
  பிசிறில்லாமல்தான்
                                                                
கருஞ்சிவப்பு வர்ணத்தில்
                                                               
  மருதாணிப் பற்றியிருப்பது 
                                                              
மகிழ்ச்சிதான்
                                                                
        குஷ்டரோகிப் பெண்ணுக்கு                               
                                                           

Saturday, January 17, 2009

கலைஞர்,தயாளு,ராஜாத்தி,கனிமொழி,ஸ்டாலின்

                           துணைவி -  மனைவி

ஒரு நாள் மனைவி, நான்,  என் பத்து வயது மகனும் கலைஞர் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தோம்.அது தி.மு.க பற்றிய ஒரு விழா நிகழ்ச்சி.மேடையில் கலைஞரும் அவர் மனைவி தயாளு அம்மா,ஸ்டாலின் அமர்ந்திருந்தார்கள். மேடைக்குக் கிழே ராஜாத்தியும் அவர் மகள் கனிமொழியும் அமர்ந்திருந்தார்கள்.

நான் “கனிமொழி அம்மா இவங்கதான் ”என்று ராஜாத்தி அம்மாவைக்காட்டிச் சொன்னேன். “அப்போ அவங்க யாரு” என்று தயாளு அம்மாவை காட்டிக் கேட்டான்.

”அவங்க ஸ்டாலின் அம்மா” என்று சொன்னேன்.

“ஒரு பேமிலில ரெண்டு அம்மாவா...எப்படி?” என்றான்.

நானும் என் மனைவியும் சில கணங்கள் ”திரு திரு” என விழித்து விட்டு,

“மேடைல இருப்பவங்க ம்னைவி.கீழ இருப்பவங்க துணைவி என்றேன். இது கலைஞர் எப்பவோ சொன்ன பதிலைத்தான் அவனுக்குச் சொன்னேன்.

“புரியலப்பா..” என்றான்.

அவருக்கு ரெண்டு மனைவி என்றும் தயாளு முதல் என்றும் ராஜாத்தி இரண்டாவது என்றும் சொன்னேன்.

“அய்யய்யோ...கவர்மெண்டல இவரப் பத்தித் தப்பா ...நெனைக்கமாட்டாங்க?” 
என்று ஒரு போடுப் போட்டான்.

நல்ல வேளை மேடையில் மு.க.முத்து இல்லை.

 

Friday, January 16, 2009

புத்தகக் கண்காட்சியும் - நான் -செலவு Rs.2,70,010


புத்தகக் கண்காட்சியும் - நான் -செலவு Rs.2,70,010

புத்தகக் கண்காட்சிக்கு போவதற்கு என்று சில SOP(standard operating procedure)வைத்திருக்கிறேன்.குடும்பத்தோடு போவதைத் தவிர்ப்பது.அவர்கள் இலக்கு மொத்தம் ஐந்தோ ஆறு ஸ்டால்கள்தான்.அடுத்த இலக்கு பேல் பூரி,மிளகாய் பஜ்ஜி,பாப் கார்ன்.அந்த ஐந்தோ ஆறில் இவர்கள் தேடுவது வழக்கமான ”மனசே please, அக்னிச் சிறகுகள்,உணவே மருந்து,சுஜாதா.அர்த்தமுள்ள இந்துமதம்.(சிவசங்கரி,அனுராதா இவர்களை பத்து வருடமாக மறந்தேப் போய்விட்டார்கள்).

இவர்களுக்காக இரண்டு நாள் விஜயம் ஏற்படுத்திக்கொண்டேன்.முதல் நாள் இவர்களோடு ஒரு நெட் பிராக்டீஸ். அடுத்த நாள் ரியல் கேம்.அந்த நெட் பிராக்டீஸ்ஸில் இவர்கள் செலவில் நான்கு புத்தகம் நைஸாகத் தேற்றி விட்டேன்.

அடுத்து பு.கண்காட்சி நடக்கும் மூன்று மாதம் முன்பே என் டைரியில் வாங்க வேண்டிய புத்தங்களைப் பற்றிய குறிப்பு எடுக்க ஆரம்பித்தல்.வாங்கிய புத்தகங்களேயே வாங்காமல் இருத்தல்.பெரிய நல்லி பை எடுத்துக் கொண்டு செல்லல்.முக்கியமான ஸ்டால்களின் பெயர்களைக் குறித்துக் கொள்ளுதல்.எடுத்தவுடனேயே வாங்கி விடாமல் சற்று யோசித்து வாங்குதல்.சப்தபதிப் போல் அடிமேல் அடி வைத்து எல்லா ஸ்டால்லயும் பார்த்து விடுவது.தூக்க முடியாத கனம் சேர்ந்தவுடன் “எஸ்யூஸ்மி” கேட்டுக்கொண்டு வெளியேப் போய் வண்டியில் வைத்துவிட்டு அடுத்த ரவுண்டுக்கு ரெடியாதல். 

முதலில் வழக்கமான புத்தக நிலையங்கள்.அடுத்த ரவுண்டில் மற்ற நிலையங்கள்.

கிழக்குப் பதிப்பகம் மணிமேகலை பிரசுரம் போல்(மருதாணி இட்டுக் கொள்வது எப்படி?) 
ஆகி விட்டது.அம்பானி முதல் லூஸூ பையன் வரை புத்தகம் போட்டிருக்கிறார்கள்.அடுத்து நீதான் பாஸ் No.1 Blogger போன்ற தலைப்பில் ஒரு புத்தகம் வரலாம்.எக்கசக்கமான புத்தங்கள்.அடுத்து நீயு சென்சுரி புக் ஹவுஸ்.இங்கும் நிறைய புத்தங்கள்.நல்ல வெரைட்டி.RBI,98.30 Radio Mirchi,Insurance 
co ஸ்டால்கள்.எதற்கு Insurance co,ஸ்டால்? அடுத்து கலர் நீர் குமிழிகள் விட்டுக்கொண்டு
குழந்தைக்களுக்கான நீர் குமிழி பேனா விற்கிறார் ஒருவர்.இது ஹோம் லைப் எக்சிபிஷ்னா?
அடுத்த வருடம் பொய் மீசை விற்பார் ஒருத்தர்.  


உயிர்மை,காலச்சுவடு இளைஞ்சர் கூட்டம் அலை மோதுகிறது.புது புத்தகங்கள் நிறைய வந்துள்ளது.பார்த்திபன் ஸ்டால் காணவில்லை.அவர் போல் இன்னொருவர் கவிதை எழுதி
ஸ்டால் போட்டுள்ளார்.தபு சங்கர் டைப் கவிதைகள்.நமக்கு அலர்ஜி.கூட்டம் இல்லை.
பல ஸ்டாலகளில் கல்யாணத் தேங்காய் பைப் போல் அழகான சணல் அல்லது காகிதப் பை தருகிறார்கள்.இது வாங்கும் புத்தக அளவைப் பொறுத்தது.

வானதி பதிப்பகத்திலும் கூட்டம் அம்முகிறது.அர்த்தமுள்ள இந்து மதம் எல்லா பாகங்களும் ஒரு pack ஆகக் கிடைக்கிறது.Blaft Publications ஸ்டால் ஒரு boutique மாதிரி இருக்கிறது.கூட்டம் இல்லை.இவர்கள் தமிழில் வந்த Subha, Rajesh Kumar, Vidya Subramaniam, Indra Soundararajan, Ramanichandran,Pattukottai Prabhakar போன்றவர்களுடைய கதைகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிறார்கள்.

தமிழினி,காந்தளகம்,கிழைக்காற்று,க்ரியா,பாரதி புத்தகாலயம்,அம்பேத்கர்,அம்ருதா,சாகித்ய அகாடமி இங்கெல்லாம் இலக்கிய ரசனை உள்ள புத்தகங்கள் கிடைக்கின்றன.


இளைப்பாறுவதற்கு நடுவே உணவகங்கள்.என்கொயரியில் ஒரு பெண் அழைப்பாளினி “உங்க’ல்” நண்பர் முருகேசன் உங்க”லு”க்காக”இங்கு இருக்கிறார்.நீங்க”ல்” வரவும் என கூப்பிடுகிறார்.ஒரு எலக்ட்ரிஷியனை ரொம்ப நேரம் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.அவன்
வந்தானா?

இரண்டு மணி நேரத்தில் பல கடைகளை பார்த்தாகி விட்டதால் கால் கடுக்கிறது.ஒரு 50 புத்தக்ங்கள் வாங்கினேன்.லிஸ்ட் வேண்டாம்.

சும்மா ஒரு கணக்கு. ஒரு ஸ்டாலுக்கு ஆறு புத்தகம் என்ற கணக்காக 450 ஸ்டால்களில் புத்தகம் வாங்கினால் மொத்த புத்தகம் 2700. ஒன்றின் விலை 100 என்றால் மொத்த கணக்கு 450*6*100 = Rs,2,70,000/-. 50 ரூபாய் என்றால் Rs.1,35,000/-

ஒரு நாளைக்கு நான்கு புத்தகம் படிப்பதாக இருந்தால் மொத்தம் 675நாட்கள் ஆகும். 


வாங்கிமுடித்து விட்டு வெளியே வந்து பிளாட்பாரக் கடையில் பத்து ரூபாய்க்குபி.டி.சாமியின் (ஒரு மக்கி போன பேப்பர்) மர்ம-திகில் நாவல் வாங்கினேன்.(பக்கத்துணையுடன் படிக்க).

மொத்த செலவு Rs.2,70,000 + 10 = Rs.2,70,010/-
  

Tuesday, January 13, 2009

ஹைகூக்கள்...ஹைகூக்கள்...ஹைகூக்கள்

ஹைகூ என்பது ஒரு சின்ன மலர் மொட்டு போன்ற ஒரு 
குட்டி கவிதை வடிவம்.  மின்னல் அல்லது ஒரு snap shot
அல்லது ஒரு “சடக்” என்ற ஒரு நேரடி அனுபவத்தை மூன்று வரிகளில் பிடித்து நிறுத்தி “அட” என்று சொல்ல வைப்பதுதான்.

மனதில் ஏற்பட்ட நேரடி flash அனுபவம் என்று சொல்லலாம்.

கிழ் உள்ளது உண்மையான ஜப்பான் ஹைகூ ரகம் அல்ல. 


ஹைகூக்கள்...ஹைகூக்கள்...ஹைகூக்கள்


நமீதாவின் தொடையை
இழுத்துத் தின்றது மாடு
வால் போஸ்டர்


நீண்ட நேரம் தேடி தேர்வு செய்து
அணிகிறார் கறுப்பு கண்ணாடி
பார்வையற்றவர்


யார் மூடுகையில் இறந்தது 
கதவிடுக்கில் நசுங்கிய
பல்லி


தயவு செய்து கதவை முடவும்
தமிழ் ஆங்கிலம் மாறி மாறி கெஞ்சும்
லிப்ட்


உறையும் குளிரில் கம்பளியில்லாமல்
தூங்குகிறார் அப்பா
Freezer Box


பால்காரி பெண் தலையில்
என் வீட்டில் பூத்த முதல்
ரோஜா 


எங்கு போய் சிக்கப் போகிறது
வானத்தை பார்க்கிறார்கள்
அறுந்த பட்டம்


காலியான ரயில் கம்பார்ட்மெண்டில்
குதித்து ஆட்டம் போட்டன
கைப்பிடிகள்


நடைபாதையில் தூங்கும்
பிச்சைக்காரனுக்கு துணை 
நிலவு


இறக்கை இல்லாமல்
நீண்ட வாலுடன் பறக்கிறது
பட்டம்