Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, June 1, 2015

மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொள்ளுதல்




முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளுதல்


அது ஒரு கலை
அந்த முகம் அழகு
வெளிப்படும் உடல்மொழி
நடனத்திற்கோ இசைக்கோ ஒப்பானது
உயிரோட்டமான குறும்படம்
பெண்களுக்கான வரம்

இவரும் தூக்கி வைத்துக்கொண்டுள்ளார்

கோபத்தில் ரப்பர்பேண்டை அவிழ்த்து
முடியை முன் தள்ளிவிட்டார்
விளக்கை அணைத்து
ஜன்னல் ஓரம் அமர்ந்துவிட்டார்
நிலைகுத்திய பார்வை
கால் அளவு தூக்கிய 
திரைச்சீலையின் ஊடேதான்
வெளி உலகம் என பிடிவாதத்தில்
விரல்களை முட்டுக்கொடுத்துள்ளார்
இவை எல்லாம் கவித்துவமான
பிளாக் அண்ட் வொயிட்டில்
சித்திரமாக தீட்டி உள்ளார்

இவ்வளவு இருந்தும்
இவர் வித்தியாசமானவர்
இவர் மேலும் இதை அழகுப்படுத்தி இருக்கிறார்
தூக்கி வைத்துக்கொண்ட மாதிரியும் தெரிகிறது
தூக்கி வைத்துக்கொள்ளாத மாதிரியும் தெரிகிறது

Sunday, June 16, 2013

ஆறாவது பூதம்


ஆறாவது பூதம்

ஆகாயத்திலிருந்து
தொப்பென்று விழுந்து
புழுதி கிளப்பி
தொடுவானத்தைக் குத்தியபடி
படுத்திருக்கிறது ஒரு தண்டவாளம்


கூர் முனையில் பிரம்மராட்சஸ்
தலைவிரிக்கோலத்துடன் தோன்றக்கூடும்
கோளங்கள்  தீப்பிடித்து உருண்டு வரலாம்
கடல் கொந்தளித்து ஊழி தாண்டவம்
ஆடலாம்

இது சீரியஸ் கவிதையாகையால்
தமிழ்ப் படகாதலர்கள்
பின்னணி கோரஸ் ஹம்மிங்கூடன்
கைகோத்து வர சாத்தியமில்லை

பலபேர் கண்சுருக்கி
எல்லைவரை பார்த்தார்கள்
சில பேர் தண்டவாளத்தில்
காதுவைத்துப்பார்த்தார்கள்

நெட்டுக்குத்தாக ஏணியாக்கி
சொர்க்கத்திற்கு போகலாமா
யோசித்தார்கள்

இரண்டொருவர்
ஜல்லி கற்களை விட்டெறிந்தார்கள்
கற்கள் திரும்பி வரவே இல்லை

நாட்கள் நகருகிறது
பருவங்கள் மாறுகிறது
யுகங்கள் பிரம்மாண்டமாய் பெரிய நிழல்களுடன்
கடக்கிறது

எதுவும் நடக்கவில்லை

அப்படியே உறைந்துபோய்
ஆறாவது பூதமாகிறது
என் டெஸ்க்டாப்பில்









Monday, February 13, 2012

பார்க்காமலே ஒரு காதல் delete





ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்த
ஹேன்னா ஸோய்ஸ்
400 மில்லியன் டாலர்
சொத்துடன்
என்னைக்காதலிப்பதாக சொல்லி
மெயில் செய்தாள்
தவிர்க்கமுடியாத காரணங்களால்
அவள் காதலை
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
டெலீட் செய்யும்போது
அவள் மீது கொஞ்சம் காதல்
இருக்கத்தான் செய்தது

Wednesday, December 21, 2011

ரொம்ப தூரத்து உறவு - கவிதை


எப்பவோ பார்த்திருந்த
தூரத்து உறவு அத்தைப் பாட்டி
இறந்துவிட்டதாக தகவல் வருகிறது

பண்டரிபாய் போல்
முகம் இருந்திருக்கிறது
நெய்வேத்தியம் செய்வதற்கு
முன்னமே ஒரு வடை கொடுத்திருக்கிறார்
சமத்தா படி என்று
வாஞ்சையாக கன்னத்தைக்
கிள்ளி இருக்கிறார்
ஈரத்தலையைத் துவட்டி விட்டிருக்கிறார்
சினிமாவுக்கு அழைத்துப் போயிருக்கிறார்
ரயில் ஜன்னல் ஒரத்தில்
உட்கார அனுமதித்திருக்கிறார்
அம்மா அடிக்கும்போது தடுத்திருக்கிறார்

இப்படியாக
அன்பு சுரந்து முடிகையில்
அவரே வீட்டிற்க்கு வருகிறார்

இறந்தது அவர் இல்லை
வேறு யாரோ ஒரு தூரத்து உறவு


பண்டரிபாய் போல்
முகம் இருக்கவில்லை
நெய்வேத்தியம் செய்வதற்கு
முன்னமே ஒரு வடை கொடுக்கவில்லை
அல்லது சமத்தா படி என்று
வாஞ்சையாக கன்னத்தைக்
கிள்ளி விடவில்லை
ஈரத்தலையைத் துவட்டி விடவில்லை
சினிமாவுக்கு அழைத்துப் போகவில்லை
ரயில் ஜன்னல் ஒரத்தில்
உட்கார அனுமதித்ததில்லை
அம்மா அடிக்கும்போது தடுக்கவில்லை

அந்த இறந்துப் போன
வேறு யாரோ ஒரு தூரத்து உறவின் மேல்
அன்பு சுரக்கிறது

அத்தைப் பாட்டிக்குச் சுரந்ததை விட
இரண்டு படி அதிகமாகவே சுரக்கிறது


Wednesday, November 30, 2011

ஹாலில் பெய்த மழை -கவிதை



நடு ஹாலில் கொட்டும் மழைக்கு
குடை விரித்த குழந்தை
விரித்துப்போட்டபடி தூங்கிவிடுகிறது

அம்மா அப்பா அண்ணன் தாத்தா பாட்டி
அத்தை மாமா சித்தி சித்தப்பா
பெரியம்மா பெரியப்பா பொம்மைகள்
எதிர்வீடு பக்கத்து வீட்டு குழந்தைகள்
கை நீட்டிப் பார்க்கிறார்கள்

மழை நின்று விட்டது

ஒருவர் பின் ஒருவராக
சத்தம் போடாமல்
குடைக்குள் இருந்து கிளம்புகிறார்கள்

Wednesday, August 3, 2011

09.10.57ல் நின்ற பிரபஞ்சம்


டிக்... டிக்... டிக்... டிக்...
அலாரம் டைம்பீஸின்
பிரபஞ்ச இயக்கத்தைக்
கேட்ட குழந்தை
பேட்டரிகளைக்  கழட்டி
09.10.57 ல் பிரபஞ்சத்தை நிறுத்திவிடுகிறது

மீண்டும் பாட்டரி பொருத்தியும்
டிக்... டிக்... டிக்... டிக்...இயக்கம் இல்லை
பிரபஞ்சத்தின் கைகள்
09.10.57 ல்லை விட்டு அசையவில்லை

அப்படியும் இப்படியும்
குலுக்கிப் பார்த்தும்
பிரபஞ்சம் அசையவில்லை

பிரபஞ்சத்தை அப்படியே
வைத்துவிட்டு அடுத்த
விளையாட்டுக்குப் போய்விடுகிறது
குழந்தை

பிரபஞ்சத்தின்
கோடானு கோடி கோடி கோடி ஜீவராசிகள்
கட்டிலுக்கடியில்   உருண்டுபோய்
கிடக்கும் இன்னொரு பாட்டரியின்
மேல் கண்கள் குத்திட்டு
உறைந்து நிற்கின்றன

Sunday, July 24, 2011

மொட்டை -கவிதை

நடு தூக்கத்தில்
கண் விழித்த குழந்தை
மொட்டைப் போட்டு
மீசை வழித்த
அப்பாவைப் பார்க்கிறது
இது அப்பா இல்லை
இது அப்பாதான்
இது அப்பா இல்லை
இது அப்பாதான்
இது அப்பா இல்லை
இது அப்பாதான்
இது அப்பா இல்லை
இது அப்பாதான்
மீண்டும் தூக்கத்தில் போய்
அப்பாவின்
காணாமல் போன முடிகளை
தேடத் தொடங்குகிறது
தன் மொட்டைத் தலையை
தடவியபடி

Wednesday, July 20, 2011

காணவில்லை - கவிதை

நடு தூக்கத்தில்
கண் விழித்த குழந்தை
மொட்டைப் போட்டு
மீசை வழித்த
அப்பாவைப் பார்க்கிறது
இது அப்பா இல்லை
இது அப்பாதான்
இது அப்பா இல்லை
இது அப்பாதான்
இது அப்பா இல்லை
இது அப்பாதான்
இது அப்பா இல்லை
இது அப்பாதான்
மீண்டும் தூக்கத்தில் போய்
அப்பாவின்
காணாமல் போன முடிகளை
தேடத் தொடங்குகிறது
தன் மொட்டைத் தலையை
தடவியபடி

Friday, May 20, 2011

ஒரு குழந்தையும் அமலா பாலும் -கவிதை


அன்னபூரணி போட்டோ
ஸ்டூடியோ ஷோகேசில்
போஸ்கார்ட் சைசில்
ஒரு குட்டிக் குழந்தை
என்னுடன் சினேகமானது


என் வரவுக்காக தினமும் காத்திருக்கும்

எனக்கும் குழந்தைக்கும் இடையில்
ஒரு விளையாட்டு உண்டு

யாருக்கும் தெரியாத விளையாட்டு

முதலில் குழந்தையை
புன்னகையுடன் உற்றுப்பார்ப்பேன்
குழந்தையும் உற்றுப்பார்க்கும் புன்னகையுடன்

இப்படியும் அப்படியும் நகர்வேன்

எந்த திசையில் நகர்ந்தாலும்
என்னைப் பார்த்து  நகராமல் புன்னகைக்கும்

இதுதான் கடைசி என்று
மீண்டும் மீண்டும் மாறி மாறி
விளையாடுவோம்

ஐந்துவருட சினேகத்தில்
மெயின் ரோட் முழுவதும் புன்னகைகள்
இறைந்துக்கிடக்கிறது

இன்றும் புன்னகை விளையாட்டைத்
தொடர அங்கு சென்றேன்

குழந்தையின் இடத்தில்
நடிகை அமலா பால்

எங்களின் விளையாட்டு தெரிந்துவிட்டது

எந்த திசை நகர்ந்தாலும்
என்னைப் பார்த்து  நகராமல்
அமலாவும் புன்னகைக்கிறார்

.

Saturday, May 7, 2011

கன்னித்தீவை தேடி சலூனில்- கவிதை




சி-18072



கண்ணாடிக்குள் கண்ணாடி கண்ணாடிக்குள் 
கண்ணாடி கண்ணாடிக்குள் கண்ணாடி கண்ணாடிக்குள்
கண்ணாடி கன்னித்தீவு போய்கொண்டே இருக்கிறது

வாடிக்கையாளர்களும்  நேர் கண்ணாடி எதிர் கண்ணாடி
கண்ணாடிக்குள் கண்ணாடி கண்ணாடிக்குள் 
கண்ணாடி கண்ணாடிக்குள் கண்ணாடி கண்ணாடிக்குள்
கண்ணாடி மாறி மாறி தொலைகிறார்கள்

கன்னித்தீவு கதை மாந்தர்கள் 
எங்கு முடி வெட்டிக்கொள்கிறார்கள்
என்று யாருக்கும் தெரிவதில்லை

சலூன் உரிமையாளர்கள் 
எதைப் பற்றியும் கவலைப்படாமல்
முடிவெட்டிக்கொண்டே இருக்கிறார்கள் 




Wednesday, February 23, 2011

உதிர்ந்த இலையும் பஞ்சபூதங்களும்


உதிர்ந்த இலையும் பஞ்சபூதங்களும்
பெயர் தெரியாத பறவை ஒன்று
கிளையை விட்டு
ரகசியமாய் ஒரு இலை உதிர்த்து
விருட்டென்று பறக்கையில்
சிறகின் படபடப்பில்
பஞ்சபூதம் விழித்தெழுந்து
ரெளத்ரம் கொள்கிறது

சாட்சியான நான்
பெயர் தெரிந்தப் பறவையை
பெயர் தெரியாதப் பறவை என்று
கவிதையின் முதல் வரியில்
மாற்றி எழுதி தப்பித்து விடுகிறேன்
___________________________

பட்டர்ஃப்ளை எஃப்க்ட் அல்லது கேயாஸ் தியரி
ஒரு ஒழுங்கில்லாத
புற நகர் மொட்டை மாடியும்
நடு வானத்தில்  'V" வடிவத்தில்
பறக்கும் பறவைகளும்
ஒரு குழந்தையின் அழுகையும்
தேவைப்படுகிறது
எப்பவோ மறந்துப் போன
ஒரு பாட்டின் முதல் அடியை
பிடிப்பதற்கு

Wednesday, February 2, 2011

ஒரு இறகைக் கொன்றுவிட்டேன் -கவிதை

அதன் போக்கில் அதை
ரசித்தப்படி இருந்திருக்கலாம்

ஒரு கவிதை எழுதிவிட்டு
போய் இருக்கலாம்
தூரிகையில் வரைந்திருக்கலாம்
அல்லது படம் பிடித்திருக்கலாம்

அல்லது நான்  என் வேலையைப்
பார்த்துக்கொண்டுப்போய் இருக்கலாம்


பிரபஞ்சத்தின் இசைக்கு 
ஏகாந்தமாய் நடனமாடிக்கொண்டிருந்த
ஒரு மெல்லிய இறகை
உள்ளங்கையில் வாங்கி
வாயால் ஊதி இருக்கக் கூடாது


.

Monday, January 24, 2011

நித்ய கல்யாணி படிக்காத காதல் கடிதம்- கவிதை

நித்ய கல்யாணி படிக்காத காதல் கடிதம்

இரண்டாவது குறுக்குத் தெரு
தினமும்  எதிர்படும் நித்ய கல்யாணி
என்றுமில்லாமல் வித்தியாசமாக
புன்னகைத்தாள் இன்று

23-05-1974 ல் கொடுத்த
காதல் கடிதத்தை
இன்றுதான் படித்திருப்பாளோ

தயவு செய்து கதவை மூடவும்

ஊதுவத்தியா
பெர்ஃப்யூமா
மேல் வீட்டு கணேசனின்
தலைமுடி எண்ணெய்யா
மேல் நாட்டு பழமா
பவுடரா
ஆரெம்கேவியின் புதுப் புடவையா
வாசனைக் கட்டியா
விபூதியா

பிராணயாமம் செய்தபடி 
ஐந்தாவதில் இருந்து
ஒன்றுக்கு வந்து
கதவைத் திறந்து யோசிக்கையில்

தயவு செய்து கதவை மூடவும்
தயவு செய்து கதவை மூடவும்
தயவு செய்து கதவை மூடவும்
தயவு செய்து கதவை மூடவும்
தயவு செய்து கதவை மூடவும்
 
உன் வாசனையாகவே
இருந்துத் தொலையட்டும்
கதவை மூடினேன்

காக்க காக்க மாவு காக்க
பூட்டிய வீட்டில்
பாத்திரத்திலிருந்து
பொங்கி வழிந்துக்கொண்டிருக்கிறது
இட்லிமாவு
காக்கும் கடவுள் விஷ்ணுவுக்கு
இன்று வேலை அதிகம்
தூங்கிவிட்டார்

 .

Monday, January 10, 2011

புறாக்களும் சித்த வைத்தியமும் -கவிதை

சமயலறைப் புறாக்கள்
தினமும்  ஜன்னலில்
புறாக்கள் வந்துபோய்க்
கொண்டிருக்கின்றன
ரொமப நாள் பழக்கம்
அவைகள் இஷ்டம் போல்
இருக்கிறது

ஒன்றும் சொல்வதில்லை

குக்கர் விசில் எண்ணிக்கைகளில்
என்றாவது குழப்பம் வந்தால்
அவைகளிடம் கேட்டு வைப்பேன்

சித்த வைத்தியர்
ரொம்ப நாளாக
தலைமறைவாகித்
தப்பிக்கொண்டிருந்தேன்
நேற்று இவரின்
முழுப் பேச்சையும்
கேட்டுவிட்டேன்
தொலைக்காட்சியில்

ஒரு  பயம்தான்

இல்லாவிட்டால்
கை கால் நடுக்கம்
கண் எரிச்சல்
தூக்கமின்மை
தகுந்த நேரத்தில் முடியாமை
சக்தி சிறுநீரில் கலந்து போகுதல்
இவைகளில் எதையாவது
ஒன்றைச் சொல்லி
சபித்துவிட்டால்

.

Friday, January 7, 2011

முலையில் தேங்கிய விழிகள் - கவிதை

முலையில் தேங்கிய விழிகள்
அன்றைய முடிவில்
புத்தம் புது முலையில்
நிறைய விழிகள் படிந்துவிட்டது

எல்லாவற்றையும் உதிர்த்து
கைகளில் போட்டுக் குலுக்கினாள்
கண்ணாடி கோலிகுண்டுகளாய்
ஒலியெழுப்பிக் குலுங்கியது
உற்றுப் பார்த்து தேடினாள்

சிலது வழுக்கி மறைந்தது
மரணவிழிகள் விழித்து
பலது மூடிக்கொண்டது
சில பெண்கள் குழந்தைகள்
அடியில் சில குருட்டுக் கண்கள்
அதற்கடியில் குடும்பக் கண்கள்

மீண்டும் குலுக்கினாள்
முலைக் காம்புகள் விறைக்க
தேடிய ஜோடி பயத்துடன்
வெளிவந்தது

நினைவாக
பனிக்கட்டியாய்
உறைந்த ராட்ஷச அருவிகள்
குளியலறை குழாயில்
விட்டு விட்டு சொட்டும்
நீர் துளிகளில்

பாஸ்போர்ட் சைசில் இறந்தவர்கள்
இறந்த பிறகு சிரித்தபடி
போஸ் கொடுக்கமுடிவதில்லை
முதலிலேயே பாஸ்போர்ட் சைசில்
சிரித்துவிடுகிறார்கள்

அரை சதவிதம்  அதிக வட்டிக்காரர்கள்
நிறைய இறந்திருக்கிறார்கள்

ஸ்கேன் செய்து பார்த்ததில்
சில பேர் தாங்கள் இறந்துவிட்டதாகவும்
சிலபேர் இறைவனடி சேர்ந்ததாகவும்
யாரோ சிலர் யூ டர்ன் எடுக்க
முயல்தாகவும்
உறுதி செய்துக்கொள்ள
இப்போதே பாஸ்போர்ட் சைஸ்
தயார் செய்துக்கொள்ளுமாறு
பிரிண்ட் அவுட் சொல்கிறது
.

Monday, January 3, 2011

காலண்டர் கவிதைகள்

வடக்கே சூலம்
பழைய காலண்டர்
விட்டுச்சென்ற
வெற்றுச் செவ்வகத்தில்
புதுக் காலண்டர் பொருந்தாமல்
வடக்கேயும் தெற்கேயும்
சூலங்கள் துருத்திக்கொண்டு
எட்டிப்பார்க்கிறது

பூட்டிய வீட்டில் காதல்
பூட்டிய வாசல்கதவைத்
திறக்கும்போதெல்லாம்
காலண்டரும் சுவர் கடியாரமும்
பேச்சை நிறுத்தி
மெளனமாகின்றன
காதலன் யார் காதலி யார்
என்று புரியாமல்
ஒவ்வொரு நாளும்
யோசித்தப்படி நானும் மெளனமாகிறேன்

பால்கணக்கு
டைரியைப் போல்
ரகசியம் ஏதும் இல்லை
காலண்டர்களுக்கு






365 நாட்களும் கடந்து போகும்
முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள்
அலுப்பாக இருக்கிறது
காலண்டர்களுக்கு

பிரம்மானந்தம்
மின்விசிறி காற்றில்
தோகை விரித்து
ஆடிக்கொண்டிருக்கிறது
காலண்டர்

.

Saturday, January 1, 2011

செருப்பு... ஒரு கணக்கு..-கவிதை

 செருப்பு

உரிமையாளர்கள் உள்ளே
போய் இருக்கிறார்கள்

நடந்து வந்த களைப்பில்
கோணல்மானலாக உருண்டு
தூங்குகிறோம்

யாரோ ஒருவர் காலால்
எட்டி உதைத்து எங்களை
ஒரு பக்கம் தள்ளுகிறார்
நாங்கள் தடுமாறி
பாதி தூக்கம் கலைய
அடுத்த பயணத்திற்கு தயாராகிறோம்

ஒரு கணக்கு

ஆவின்பால் லாண்டரி
தள்ளிப்போன நாள்
கழிக்க வேண்டியது
கேஸ் புக்கிங்
பப்பிள் டாப் டெலிவரி
கணக்கு வழக்குகள் முடிக்க
காலண்டருக்கு
ஒரு மாதம் கூடுதலாக
ஆயுள் கிடைத்துவிடுகிறது


.

Sunday, November 14, 2010

மொட்டை மாடி - கவிதை




படம் நன்றி:http://anandvinay1.blogspot.com/2010/11/blog-post.html

எல்லா
மொட்டை மாடிகளும்
பிரபஞ்சத்திற்கு
அருகில்தான் இருக்கிறது

இரவில்
ரொம்பவும் அருகே
வந்துவிடுகிறது
படுத்துக்கொண்டுப் பார்த்தால்
கைக்கெட்டிய தூரம்தான்

அருகில் இருக்கும் வசதியால்
மேகங்களில் தெரியும்
காதலிகளுடன் பேசுவதற்கு
மொட்டை மாடியோடு
பிரபஞ்சத்தையும்
நகர்த்தி இருக்கிறேன்

கடவுள் முகம் சுளிக்கி இருக்கிறார்

எதிர்படும் பித்ருக்களை
வடாம் துணி போர்த்தி
சமாளித்திருக்கிறேன்

எங்கெங்கோ
அலைந்துத் திரிந்து
இடம் கிடைக்காமல்
லேசாக தூறல் போடஆரம்பித்து
காதலியும் தொலைந்து
பிரபஞ்சமும் தொலைந்து
மீண்டும் மொட்டை மாடிக்கே
வந்துவிட்டேன் கையில்
வடாம் துணியுடன்



-------

Tuesday, November 9, 2010

குடைக்குள்ளும் வெளியிலும் சில கவிதைகள்


சில குடைகள்
மழைக்குப் பிடிக்கப்படாமலேயே
பார்மசிகளிலும்
ஊத்துகுளி வெண்ணைக் கடைகளிலும்
காபிப்பொடி கடைகளிலும்
பட்டாணி கடைகளிலும்
சாத்திவைத்தபடி
மறதியில் தொலைந்துவிடுகிறது
____________________________________

மழை பெய்யும் இரவுகளில்
யாருக்கோ எப்பொழுதோ
கொடுக்க இருந்த 
காதல் கடிதங்கள் 
நனைந்துவிடுகிறது
பிழிந்துவிட்டு மீண்டும்
எல்லாவற்றையும் எழுதுகிறேன்
____________________________________

இப்போதெல்லாம்
எந்த பூகோள டீச்சரும்
வெய்யிலுக்கு குடை
பிடித்தப்படி பள்ளிக்கு
வருவதே இல்லை
____________________________________

குடையைப்
பிரிப்பதற்கு முன்
சட்டென மழைப் பெய்துவிட
வேண்டாம்
நனைந்த பிறகு
விரித்த குடையின்
தெறிக்க போகும் சாரலில்
இருக்கும் கவிதையை
ரசிக்க முடிவதில்லை
____________________________________






பாட்டிகளுக்குக்
குடையே கிடையாது
எல்லாம் தாத்தா குடைகள்தான்












e