Thursday, May 17, 2012

ஏன் கேட்கிறது? ஏன் வாட்டுது? ஆனால் அதுவும்...


இளையராஜாவின் இசை மொழி ஆத்மார்த்தமானது.ஆழமாக மனதை உழுவுபவை.நினைவுகளில் அலையடித்துக்கொண்டே இருக்கும்.

இப்படியாக என்னை  உணர்வுபூர்வமாக உலுக்கி எடுத்தப்பாடல் “என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்”  படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி -1979.பாடியவர்: வாணிஜெயராம.பாடல்: கங்கை அமரன் டைரக்டர்: தேவராஜ் மோகன.

பாடலைக் காட்சியாக்கியவரையும் சற்று உலுக்கத்தான் செய்திருக்கிறது.பாடலை உள்வாங்கிக்கொண்டு காட்சிப்படுத்தப்பட்ட ராஜாவின் பாடல்கள் வெகு வெகு வெகு சொற்பம். தீபாவின் கொழுகொழு வளர்த்தியை ஆபாசப்படுத்தாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.பாடலின் ஆன்மா காட்சியில் புகுத்தப்பட்டிருக்கிறது.

சாதாரண கிராமத்து பெண்ணின் மோகத்தை சலனத்தை மோட்டர்பைக் பயணத்தில்  இலக்கிய தரத்திற்கு கொண்டு போய் இருக்கிறார். 
பாடல் காட்சி: 
திருமணமான கிராமத்துப் பெண் வேற ஒரு ஆணுடன் (அந்த ஊர் மைனர்)”என் உள்ளில் ஏதோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது....ஏன் வாட்டுது” என்று சலனித்தப்படி “ஆனால் அதுவும் ஆனந்தம்" என்று ஆனந்தத்தில் மிதந்தவாறே வெறிச்சோடிய  கிராம இயற்கை சூழ்நிலையில் பைக்கில் பயணித்து பாடலின் முடிவில் அப்பாவித்தனமாக  தன்னை இழக்கிறாள்.

இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்த இசையின் அடி நாதம் இதில் வரும் இரு கதாபாத்திரங்கள் பயணம் செய்தபடியே மெளனமாக பேசும் மொழி.இளையராஜா சிலுப்பி சிலுப்பி உணர்ச்சிகளை  எடுத்து  மொழிந்துள்ளார்.

பாடலும் காட்சிக்கு ஏற்றவாரு புனையப்பட்டுள்ளது.இசையுடன் இணைந்து மொழியை பேசுகிறது. காட்சியும் ஒன்றி போகிறது.பாடல்  இதமான  தபலா தாளத்துடன்   பைக்கில் இருவருடன்  பயணிக்கிறது. தாளம் பயணிக்கும் உணர்வைத் தருகிறது.எதையோ நோக்கி வெறிச்சோடிய  மத்தியான வேளையில் புரிந்தும் புரியாமுலும் ஒரு பயணம்.தீபா "நாட்டுப்புறத்து” மிட்டாய் கலர் உடையுடன்  (சிவச்சந்திரனும் அவ்வாறே இம்மி பிசாகமல்) பில்லியனில் தள்ளியே ஒரு மாதிரி ஒட்டாமல்  பயணிக்கிறார். பிறகு அணைத்துக்கொள்ளும்போது (1.20 -1.33 )சாரங்கி ஓலமிடுகிறது.ஏதோ ஒரு காம வலி மேல் பூச்சாக ஓடுவதை உணரமுடிகிறது.

அடுத்து 2.50 - 3.15 காட்சியும் இசையின் மொழியும் ஒன்றை ஒன்று போட்டி போடுகிறது.விட்டு விட்டு ஒளிரும் மர நிழல்களின் ஊடே பயணிக்கும் பைக்கும் பயணிப்பவர்களின் உடல் மொழியும் பின்னணியில் அமானுஷ்யமான இசை மொழியும் உயிர் துடிப்பானது.சற்று திகிலாகவும் இருக்கிறது.

மேற்சொன்ன மொழி தமிழ் திரை இசைக்குப்புதிது.

இப்படி போய்க்கொண்டிருக்கும் இசையின் மொழி........

3.16 -3.30ல் அமானுஷ்ய இசை மொழி சகஜமாகி சிதார்-வயலின் -சிதார்-வயலின் -சிதார்-வயலின் மாறி மாறி  பின்னிப் பிணைந்து குழைந்து வர காட்சியில்  பெயர் தெரியாத  மணமில்லாத பூத்திருக்கும் காட்டுச்செடிகளிடையே ரோசாப்பூ ரவிக்கைக்காரி நடந்துவருவது கவிதை.

ஒளிப்பதிவாளருக்குப் பாராட்டுக்கள்.இந்தப் பாடல் “மதுவந்தி” என்ற ராகத்தில் புனையப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.வாணிஜெயராம் உணர்ச்சிகளைக் குழைத்துப்பாடி உள்ளார்.

”மஞ்சளை பூசிய மேகங்களே” வரிகள் வரும்போது  உடனே  காட்சி மஞ்சள் ஆவதுதான்  ரொம்ப  ”லோக்கல்”.அடுத்து முதலில் வரும் சேவல்-கோழி  தவிர்த்திருக்கலாம்.பாலச்சந்தர் பட சிம்பாலிக் காட்சியாக சற்று அமெச்சூராக இருக்கிறது.

32 வருடங்களுக்கு முன்  குட்டி ரேடியோவில் விரும்பிக் கேட்ட பல நேயர்களுடன் நானும் ஒரு நேயர்.அதுவும் இரவு நேரத்தில் தனிமையில கேட்டது. பிறகு  பாடலின் இசைமொழி ஏற்படுத்திய தாக்கம்  எதையோ யாரையோ தரிசித்தது போல ஒரு உணர்வு.ஒரு ஏக்க ஒரு தொலைந்துபோன உணர்வு.

முதல் ஐந்து வருடங்களில்(1979-84)  வயது காராணமாய் தாக்கிய பாடலின் இசைமொழி தெரியாமல்  ”ரொம்ப  சாஃப்ட் மெலடி” என்றுதான் மனதிற்குள் நினைத்துக்கொள்வேன்.பின்னாளில் தெரியவந்தது இதன் விஸ்வரூபம்.


டெயில் பீஸ்: 
இப்போது பல வித இசைத் தளங்களை கடந்து வந்துள்ளோம்.அதில் ராஜாவின் இசையிலேயே பல வித கட்டங்களை கடந்தும் வந்தாயிற்று.யோசித்துப் பாருங்கள் 31 வருடங்களுக்கு முன் மேற்கண்ட பாடலின் இசை என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று.