Tuesday, January 22, 2013

டெல்லி கேங் ரேப்பும் சினிமா சிங்கிள் ரேப்பும்

டெல்லி கேங்ரேப் கொடூரமானது.நாடே ரெளத்திரமாகி சமூக அக்கறையோடு பொங்கி எழுந்தது.ஆனால் எழுபது  அல்லது எண்பதுகளில் (90களில் கூட??)வந்த சில  இந்திய சினிமாக்களில்  கற்பழிப்புக் காட்சிகள்  கொஞ்சம் கூட சமூக அக்கறை இல்லாமல் வேணுமென்றே திணிக்கப்பட்டு  காமத்தில் காய்ந்துகிடக்கும் ரசிகர்களை வெறியேற்றியது.சென்சார் அதை கலைக்கண்ணோடு பார்த்து சர்டிபிகேட் வேறு கொடுத்தது.எல்லாம் ஒரு காலகட்டம்.

வித விதமான ரேப் சீன்கள்.இந்தியனின் மூளையை வித வித கேங் ரேப் செய்து வக்கிரத்தை பீச்சிவிட்டுப் போய் இருக்கிறார்கள்.இப்போது நினைத்தால் வெட்ககேடாக இருக்கிறது நானும் ரசித்தவன் என்பதில்.


ஒரு படத்தில் கர்ப்பிணிப்பெண்ணை பல பேர் கற்பழிக்க முயல்வதாக காட்டப்பட்டது.வேறொரு படத்தில் இம்சை செய்ய நெருங்குபவனை “ஆணையிட்டேன் நெருங்காதே” என்று டைம்ங்காக பாட்டுப்பாடுவார் கதாநாயகி.


போஸ்டர்களில் வில்லன் புடவையின் முந்தானையை பிடித்து இழுத்தப்படி இருக்க பெண்  தன் புடைத்து நிற்கும் மார்ப்பின் குறுக்கே இரு கையையும் எக்ஸ் வடிவத்தில் வைத்து மறைத்தப்படி பீதியுடன் பார்ப்பார்.ஒரு காலத்தில் டிரெண்டாகவே இருந்தது.ஏன் செண்டிமெண்டாக கூட இருந்தது.
கதாநாயகிகள்  நேர்காணலின்  போது “நீங்கள் கற்பழிப்புக் காட்சிகளில் நடிக்க ஆட்சேபம் தெரிவிப்பீர்களா?” என்று கேட்டால் பதில் “ கதைக்குத் தேவைப்பட்டால் நடிப்பேன்” பதில் என்று வரும்.


அப்போதையஅப்பாவியான புதுமுகங்கள் இதில் இரையாக்கப்படுவார்கள்.வூடு கட்டி கதற கதற கற்பழிப்பார்கள் (வன்புணர்வார்கள்).அப்போதைய தியேட்டர் வரும் ரசிகர்கள் முக்கால்வாசி பெண்கள் என்பதால் இப்படி பெண்கள் வதைப்படுவதை அனுதாபத்தோடுப் பார்த்து படத்தை ஓட விடுவார்கள்.பார்முலாபடி ராமதாஸ்,அசோகன்,மனோகர்,கண்ணன்,சங்கிலி முருகன்,நம்பியார்(சபரிக்கு மாலை போட்டுக்கொண்டால் தவிர்ப்பார்),தேங்காய் சீனுவாசன்,எம்.ஆர்.ஆர்.வாசு போன்ற வில்லன்கள்  வழக்கமாக இந்த வேலையை செய்வார்கள் என்று இல்லை.எம்ஜியார்,சிவாஜி,முத்துராமன்,கமல்,ரஜினி,ஏவிஎம் ராஜன்,ஜெய்சங்கர்,மம்முட்டி,விஜயகுமார்,ஜெய்கணேஷ் போன்ற கதாநாயகர்களும் புடவையைப் பிடித்து இழுத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த கதாநாயகர்கள் ரொம்ப நல்லவர்கள்.போதையிலோ,மனநிலை பிழன்ற நிலையில் தெரியத்தனமாகதான் இந்தத் தப்பை செய்வார்கள்.பின்னால் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள்.

சில சமயம் இரட்டையராக இருந்து அதில் ஒருவன் கெட்டவனாக இருந்து இதைச் செய்வார்.

சில முன்னணி கதாநாயகர்கள் டுயூட் காட்சிகளைப் பார்க்கும்போது கேங் ரேப்பே  பெட்டர் என்று தோன்றும். 

இதில் மாபெரும் அதிர்ச்சி குடும்பப் படம் என்ற லேபிளில் இவ்வகையான காட்சிகள் இடையே திணிக்கப்பட்டிருக்கும்..


நடிகர் ஸ்ரீகாந்த் இதில் கோல்ட் மெடல் வாங்கி “நவீன துச்சாதனன்” என்ற பட்டமும் இவருக்கு உண்டு.


ஹிந்தியில் தோரஹா என்ற படம்தான் கற்பழிப்புக் காட்சிகளுக்கு முன்னோடி என்று நினைக்கிறேன்.அது தமிழில் “அவள்” என்று  கற்பழிப்புக் காட்சிக்காகவே ரீமேக் செய்யப்பட்டு படம் பணால் ஆகியது.இதை அடுத்து ஜரூரத் என்ற படத்தில் கூட ரேப் சீன் இருந்ததாக கேள்வி.

பெண்களின் இந்திய தேசிய உடையான இந்தப்புடவை  இருக்கிறதே கற்பழிப்புக்கு ரொம்ப user friendlyயாக  (தோதாக) இன்ச் பை இன்சாக ரசிகர்களை உசுப்பேற்றும்.100% உசுப்பேற்றியாயிற்றா என்று கன்பேர்ம் செய்து விட்டுதான் கதாநாயகன் காப்பாற்றுவதற்கு வருவார்.

ரேப்பை மையமாக வைத்து கதை புனைந்த படங்கள் என்று ஒரு சீசன் இருந்தது.