Sunday, May 31, 2009

வருக..வருக..வருக..என வரவேற்பு!


                                
                        


                                      
பெட்ரூம் பரணில் ஏறிய கிருஷ்ணசாமிக்கு அதைப் பார்த்தவுடன் குஷி. பொடியை எடுத்து  மூக்கில் வைத்து இழுத்தார்.எதற்கு ஏறினாரோ அதை மறந்தார்.குந்திக்கொண்டிருந்தவர் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்.மறந்தே போன விஷயம்.எதிரே பார்க்கவில்லை.பார்க்க பார்க்க குஷி அதிகமாயிற்று. 

ஆனால் அன்று?

மூச்சு முட்டி  வேர்த்து  விறுவிறுத்து விட்டார்.இப்போது ஒண்ணும் தெரியாத பாப்பா போல் படுத்திருந்தது.அந்த பிளேகார்டை (placard) கையில் எடுத்தார். அந்த ”வேர்த்து விறுத்து”  சம்பவம் பழசாகி விட்டாலும் பிளேகார்டு  புதுசாகவே இருக்கிறது.அதில் ஒட்டியிருந்த பேப்பர்தான் மக்கி போய்விட்டது.


”ராஜேஷ் அகர்வால்” என்ற பெயர் ஆங்கிலத்தில் அந்த கட்டையில் எழுதியிருந்தது.கருப்பு இங்க மார்க்கர் பேனாவால் . கையெழுத்தும் ரொம்ப அழகாக கொட்டை எழுத்துக்களில்.பெரிய மகள் ராஜேஸ்வரி கையெழுத்து. அந்த கட்டையை செல்லமாக அணைத்துக் கொண்டுச்சிரித்தார்.


”என்னப்பா... சிரிச்சுட்டு இருக்க.. மேல க்ரப்பான்பூச்சி ஜோக்கடிக்குதா?”


சின்னப் பெண் லட்சுமி கேட்டாள.கிருஷ்ணசாமி மேலிருந்து அந்த போர்டைத் தூக்கிப் பிடித்தார்.அது சிலுவை போல் ஆங்கில எழுத்து "T" வடிவத்தில் இருந்தது.மரம் நல்ல அகலத்தோடு பட்டையாக இருந்தது.”ராஜேஷ் அகர்வால்” என்று படித்து...


’இது என்னப்பா ?”


“இது பிளேகார்டு(placard) முன்ன பின்னத் தெரியாதவங்க ரயிலிலோ, ஏர்போர்டிலோ வந்தாங்கன்னா அங்கன போய் இது பிடிச்சிட்டு நிக்கனம்.வரவங்க இந்த் போர்டல இருக்கிற அவங்க பேரப் பாத்துட்டு அடையாளம் கண்டுகிட்டு கூட போவாஙக.நிறைய கார் டிரைவருங்க இது பிடிச்சுட்டு நிப்பாங்க.அடையாளம் கண்டுகிட்டவுடன் கார்ல அழைச்சுட்டு போவாங்க. ஹோட்டலோ ஆபிஸோ..கெஸ்ட் அவுஸோ”


பரணில் இருந்தபடியே பழைய நினைவுகளில் முழுகினார்.அப்போது செல்போன் கிடையாது. தகவல் தொடர்பு வளர்ச்சி கம்மிதான்.வீடுகளிலேயே டெலிபோன் அங்கொன்றும் இங்கொன்றுமாக.தன் வீட்டிலும் கிடையாது.இப்போது இருக்கும் அசுர வளர்ச்சி அப்போது இருந்திருந்தால்?பாடாய்ப் பட்டிருக்க மாட்டார். 
 

”அட்லாஸ்ட் வீ ஆர் மீட்டிங்”.....ஒரு நாள் போனில் திடீரென்று பேசினார் ஜெனரல் மேனஜர் ராஜேஷ் அகர்வால் . டெல்லியிலிருந்து போன்.அவர் ரயிலில் வருவதாகவும் சென்னை சென்டரலில் பிக் அப் செய்யச் சொன்னார். ஒப்புக் கொண்டார் கிருஷ்ணசாமி.செகண்ட் கிளாஸ்தான்.


வீட்டில் வந்ததும்தான் ஞாபகம் வந்தது. பெர்த் நம்பர் கோச் நம்பர் குறித்துக்கொண்ட பேப்பரைத் தேடினார்.காணவில்லை.தொலைந்து விட்டது.இன்னேரம் வண்டி ஏறியிருப்பார்.நாளை சண்டே.ஆபிஸ் லீவ்.
போனில்தான் பழக்கம்.மானம் போகுமே?தவிர சென்னை கம்பனி கிளையின் மானமும் போகும்.புவர் பிளானிங் என்று ஏய்த்துக்காட்டுவார்.இந்த கறை போக ரொம்ப நாளாகும்.


ஆள் நேரில் எப்படி இருப்பார்.எப்படி அவரைக் கண்டுப்பிடிப்பது?சிவப்பு நிறம், மார்பு நிறைய முடி, பான் பராக்,பைஜாமா குர்த்தா?நொந்து போய் டென்ஷன் ஆனார்.ஒன்றும் ஓடவில்லை.


கம்பெனி கார் டிரைவர்தான் பிளேகார்டைப் பற்றிச் சொன்னான்.பெயர் எழுதி ஸ்டேஷனில் போய்ப் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும் என்று.அவனைக் கட்டிக்கொண்டார். டென்ஷன் சற்று குறைந்தது.


இதை எப்படி தயார் செய்வது...?புது அனுபவம்.அடுத்த டென்ஷன்.


தேடியதில் மகள் லட்சுமியின் பரீட்சை அட்டைக் கிடைத்தது.கிளிப்பைப் பிய்த்துப் போட்டுவிட்டு சரிபாதியாக உடைத்தார்.சரிபாதியாகத்தான் பிடித்தார்.மனதிலும் நினைத்துக்கொண்டார். ஆனால் பாளபாளமாக உடைந்தது.கிடைத்து விட்டது என்ற ஆர்வத்தில் உடைத்திருக்க வேண்டாம்.


அடுத்து ஒன்று அட்டையில் தயார் செய்தார்.பார்க்கும்படியாக இல்லை.”இங்கு நீர் மோர் கிடைக்கும்” என்ற பெட்டிக் கடை போர்டு மாதிரி இருந்தது.தூரே நின்று பார்த்தால் ஒன்றுமே தெரியவில்லை.ஆள்தான் பெரிசாகத் தெரிகிறது.


கடைசியாக கண்டுப்பிடித்தார்.இதே பரணில்தான்.இரண்டு பட்டையான கட்டைகள்.சந்தனமா? தேக்கா? அல்லது வேறு ஏதாவதா? தெரியவில்லை.பார்க்க லட்சணமாக இருந்தது.அதை "T" வடிவத்தில் வைத்து ஆணி அடித்தார்.
பேப்பரை ஒட்டினார்.”ராஜேஷ் அகர்வால்”பெயர் மகள் எழுதினாள்.


சந்தோஷம் பிடிபடவில்லை.வாழ் நாள் சிற்பத்தை வடித்த சிற்பி போல் ஒரு மிதப்பு.பார்வீகமாக அமைந்து விட்டது.பிடித்துக் கொண்டு நின்றார்.பெரிய நிலைக் கண்ணாடியில் பார்த்தார்.தெளிவாக தெரிந்தது.ரொமப தூரத்திலிருந்தே ராஜேஷ் அகர்வால் கண்டுப் பிடித்து விடுவார். 


வீட்டிலும் எல்லோருக்கும் ரொம்ப பிடித்து போய் விட்டது.  ஆளாளுக்கு குழந்தை போல் வாங்கிக்கொண்டு நின்று ”ராஜேஷ் அகர்வாலை” வரவேற்றார்கள். 
செல்லம் கொஞ்சினார்கள்.மனைவி உள்ளங்கையில் தட்டிப் பார்த்து “ரொம்ப ஸ்ட்ராங்” என்றாள்.வேலைக்காரி கூட எல்லோரும் பார்த்தபிறகு அதை ஆசையுடன் வாங்கி அப்படியும் இப்படியும் பிடித்துப் பார்த்துச் சிரித்துக்
கொண்டாள்.


பிளேகார்டுக்கு மேட்சிங்காக பாண்ட் சட்டை போட்டுக்கொண்டார்.ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றிதான் எடுத்துக்கொண்டுப் போனார்.வாழ்கையில் என்ன மாதிரியான அனுபவங்கள் நேரிடுகிறது.

முதலில் கஷ்டத்தைக் கொடுத்து பின்னர் அனுபவி.இலவச அனுபவம் இல்லை.சிரித்தக்கொண்டார்.பிடித்துக்கொண்டு நிற்கும் போது ஏற்படப் போகும் குஷி சொல்லி மாளாப் போவதில்லை.


செண்ட்ரல் ஸ்டேஷன்.நான்காவது பிளாட்பாரம் .பக்கத்தில் இருந்த சரக்கு டிராலியில் பிளேகார்டை வைத்தார்.வண்டி வர இன்னும் அரை மணி நேரம் இருந்தது.தாகமாக இருந்ததால் பக்கத்தில் உள்ள ஸ்டாலில் ரோஸ் மில்க் குடிக்கப் போனார்.குடித்துவிட்டு வந்து பார்த்தப்போது டிராலி காணவில்லை. “பக்”கென்றது.அங்கும் இங்கும் தேடினார்.இரண்டொரு போர்டர்களிடம் விசாரித்தார்.எங்குபோயிருக்கும்?கையிலேயே வைத்துக்கொண்டிருக்கலாம்.
சே!


எப்படிஅதற்குள் மாயமாய் மறைந்தது?மெதுவாக மனசு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.லேசான நடுக்கம் இருந்தது.என்ன செயவது?புது அனுபவத்திற்கு இன்னொரு புது அனுபவம்.அங்கும் இங்கும் கண்ணால் தேடியபடி இருந்தார்.


கொஞ்சம் கொஞ்சமாக பிளாட்பாரத்தில் கூட்டம் சேர ஆரம்பித்தவுடன் கலக்கம் கூடியது ஓடிப்போய் அந்தப் பக்கம்  நின்று கொண்டிருக்கும் ரயில் அடியில் 
கூட குனிந்தும் பார்தது விட்டார். பெட்டிகளிலும் ஏறிப் பார்த்து தேடினார்.  


கிடைக்கவில்லை.

வண்டி வர இன்னும் பத்து நிமிடம் இருந்தது.யாரிடம் கேட்பது?
வண்டி லேட்டாக வரக்கூடாதா?இன்னிக்கென்று சரியான டைமுக்கு வருகிறது.டென்ஷன் அதிகரித்து படபடத்தது.வியர்த்துக்கொட்டியது.
பீடை எங்குப் போயிற்று.

பெர்த் நம்பர் கோச் நம்பர் பேப்பரை தொலைத்தது எவ்வளவு பெரிய முட்டாளதனம் என்று இப்போது பூதாகரமாக உறைத்தது.என்ன பொய் சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்.


பிளாட்பாரம் பரபரக்க ஆரம்பித்தது.வண்டி பெரும் சத்தத்துடன் பூதாகரமாக நுழைய ஆரம்பித்தது.ட்ராலி சத்தம் கேட்கும் திசையெல்லாம் ஓடிப் போய் பார்த்தார்.பெட்டியின் ரிசர்வேஷன் சார்ட்டெல்லாம் மழையில் நனைந்து கிழிந்து கிடந்தது.முக்கால்வாசி பெட்டியில் பிசிறு பிசிறாக கோந்து சுவடுதான் தெரிந்தது.சே..என்ன இப்படி ஆகிறது.தலையில் அடித்துக்கொண்டார்.
ஓடி ஓடி தேடிக்கொண்டே பெட்டிகள் உள்ளேப் பார்த்தார்.


பிரயாணிகள் பிளாட்பாரத்தில் நிற்பதும் போவதுமாக இருந்தார்கள்.எந்த வட இந்தியரைப் பார்த்தாலும் அவரைப் போலவே இருந்தார்கள்.கடைசி பெட்டிக்கு வந்தார். அங்கே ஒருவர் தன்னுடைய பிளேகார்டைப் பிடித்தபடி  நின்று கொண்டிருந்தார்.அதிர்ச்சி.இவரிடம் எப்படி இது? குழப்பத்துடன் அவரை நெருங்கினார்.


“சார்... உங்க கிட்ட எப்படி இந்த போர்ட்.....”


“நான் ராஜேஷ் அகர்வால்.மிஸ்டர் கிருஷ்ணசாமிக்கு வெயிட் பண்றேன்(ஆங்கிலத்தில் பேசினார்) “

அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒரு சேர தாக்கியது.நாந்தான் கிருஷ்ணசாமி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அசடு வழிய கைக்கொடுத்தார்.அடுத்து என்ன நடக்கப்போகிறதோ மனதில் பயம் பரவியது.

”சார்... உங்களிடம் இது எப்படி...?’(உரையாடல் ஆங்கிலத்தில் தொடர்ந்தது)


“நான் இறங்குற பெட்டிக்கு நேர ஒரு டிராலி இருந்தது.அதில் இந்த போர்டு கிடந்தது. அதன் விவரம் கேட்கறத்துக்குள்ள ஒரு ஆள் போர்டைக் கைல கொடுத்துட்டு ஓடிட்டான்.ஒண்ணும் புரியல.ஆள காணும்.நா பிடிச்சிட்டு நிப்பதற்க்குதான் இத கொடுத்தான் போலிருக்குன்னு...பிடிச்சிட்டு நின்னேன்.
நீங்க வந்துட்டிங்க.என்ன பாத்துட்டிங்க.ஓவர்”


கிருஷ்ணசாமி எல்லா விவரத்தையும் சொனனார்.சொல்லி முடிக்கும் வரை மன்னிப்பு கோரும் முக பாவம்தான்.... ”ரொம்ப ரொம்ப சாரி சார்” என்றார்.


”நோ பிராப்ளம் கிருஷ்ணசாமி.எதுவும் நம்ம கைல இல்ல.இது மாதிரி சில சமயம் நடக்கும்”

பரவசத்துடன் அவரைப் பார்த்தார். மனசு லேசாயிற்று.


”உங்களுக்கு அந்த யோகம் இருக்கு சார் .....ஆசைப்பட்டு  செஞ்சத பிடிச்சுட்டு நிக்க எனக்கு யோகம் இல்ல.”


ராஜேஷ் அகர்வால் “டேக் இட் ஈசி” என்று தோளில் தட்டினார்.
 
 
முற்றும்
Friday, May 29, 2009

ஸ்பேஸ் விட்டு உடனே அழுங்கள்

அம்மா பாட்டி
தங்கை தம்பி
அண்ணன் அண்ணி
மனைவி சமையல்கார மாமி
எல்லோரும் கண்களிலும்
நீர் முட்டுகிறது


யாரோ இரண்டு பேர்
விசும்புகிறார்கள்


சமையல்கார மாமி
புடவைத் தலைப்பால்
நைசாக கண்ணீரை
யாரும் அறியாமல்
துடைத்துக்கொள்கிறாள்


ரொம்ப எதிர்பார்த்து
ஏமாற்றமாகி விட்டது
தாங்கமுடியவில்லை
சே!என்ன கொடுமை
வேண்டிய தெய்வம் 
கைவிட்டு விட்டது


தோற்றுவிட்டாளாம்
தொலைக்காட்சி
சூப்பர் சிங்கரில் 
அவர்கள் கட்சிப் 
பெண் 
Thursday, May 28, 2009

நான் ரசித்த ஹைகூக்கள்..ஹைகூக்கள்..

Haiku doesn't tell a story - it takes a still photograph of a flash of lightning, in all its beauty, terror and suddenness. Some of the most thrilling Haiku-poems describe daily situations in a way that gives the reader a brand new experience of a well-known situation.

நான் ரசித்த ஜப்பானிய ஹைகூக்கள்:-

I kill an ant
and realize my three children
have been watching.

____________________

A sudden shower falls
and naked I am riding
on a naked horse!

___________________

Night, and the moon!
My neighbor, playing on his flute -
out of tune!

___________________

A giant firefly:
that way, this way, that way, this -
and it passes by.

___________________

First autumn morning:
the mirror I stare into
shows my father's face.

___________________

After killing
a spider, how lonely I feel
in the cold of night!

_____________________

The summer river:
although there is a bridge, my horse
goes through the water.

____________________

No blossoms and no moon,
and he is drinking sake
all alone!

____________________

Won't you come and see
loneliness? Just one leaf
from the 
kiri tree.

படிக்க:

காதல் வைரஸ் நெகடிவ் - கவிதைகள்


Wednesday, May 27, 2009

பேச்சுத் தமிழில் சினிமா டைட்டில்கள்

என்னுடைய பழைய டைரியை எடுத்துப்பார்த்தேன்.
அதில் ‘பேச்சுத் தமிழில் சினிமா டைட்டில்கள்” என்று
ஒரு பதிவு இருந்தது.

இதை ஏன் எழுதினேன் என்று யோசித்தேன்..

ஒரு முறை டெல்லியிலிருந்து ஒரு உறவுக்காரர் 
வந்திருந்தார்.அவரை சினிமாவுக்கு அழைத்தோம்.அவர் 
சினிமா பார்த்து பழக்கமில்லை. வாழ்க்கையில் இரண்டு 
அல்லது மூன்று படங்கள்தான் பார்த்திருப்பார். 
பத்திரிக்கைப் படிக்கும் வழக்கமும் அவ்வளவு 
இல்லை.

வலுக்கட்டயாமாக அவரை அழைத்தோம்.

கடைசியாக ஒப்புக்கொண்டார்.படத்தின் பெயரைக் கேட்டு 
சிரி சிரி என்று சிரித்தார்.“இது நம்ம ஆளு”.நம்பவே இல்லை.
அவர்க்கு பரிச்சியமான டைட்டில்கள்.”பாவை விளக்கு” “தாயே நீ
தெய்வம்” “அன்னையின் ஆனை” “நந்தனார்” போன்றவை..

சினிமா பார்த்த பிறகு வீட்டிற்கு வந்து பேச்சுத் தமிழில் 
வந்த சினிமா டைட்டில்களை டைரியில் எழுதி காட்டினேன்.
சிரி சிரி என்று சிரித்தார்.

"காதுல பூ” டைட்டிலை இன்னும் நம்பவில்லை. காதுல பூ 
என்றுதான் நினைத்தார்.

என் டைரியில் இருப்பது.

டப்பிங் பட டைட்டிலகள் சேர்க்கவில்லை.
 1. கோழி கூவுது
 2. கொக்கரக்கோ
 3. பொழுது விடிஞ்சாச்சு
 4. முறை பொண்ணு
 5. ராமாயி வயசுக்கு வந்துட்டா
 6. பொண்ணு பாக்க போறோம்
 7. பொண்ணு பிடிச்சிருக்கு
 8. பாக்கு வெத்தல
 9. விடிஞ்சா கல்யாணம்
 10. மேளம் கொட்டு தாலி கட்டு
 11. பொண்ணு வீட்டுக்காரன்
 12. வாங்க மாப்பிள வாங்க
 13. பொண்ணுக்கேத்த புருசன்
 14. லட்சுமி வந்தாச்சு
 15. சாந்தி முகூர்த்தம்
 16. என்ன முதலாளி செளக்கியமா
 17. பரீட்சைக்கு நேரமாச்சு
 18. தூறல் நின்னு போச்சு
 19. வெளிச்சத்துக்கு வாங்க
 20. நேரம் வந்தாச்சு
 21. வா இந்த பக்கம்
 22. தில்லு முல்லு
 23. இது எங்க பூமி
 24. காதுல பூ
 25. தம்பிக்கு எந்த ஊரு
 26. இது நம்ம ஆளு
 27. நம்ம ஊரு நல்ல ஊரு
 28. பாரு பாரு பட்டணம் பாரு
 29. நான் உன்ன நெனச்சேன்
இது எப்படி இருக்கு?  

இதுவும் ஒரு படஙக. 
சரி இதையும் லிஸ்டல சேர்த்துடலாம்.

30.இது எப்படி இருக்கு?

Monday, May 25, 2009

காதல் வைரஸ் நெகடிவ் - கவிதைகள்

காதல் வைரஸ் நெகடிவ்

ஒரு காதல்
 
நிராகரிக்கப்படும்போது
ரணங்கள்
வலிகள்
வேதனைகள்
காயங்கள்
கவிதைகள் எனறு
பல பல.....
எனக்கு எதுவும் இல்லை
இன்றுவரை

_____________________________


பூக்கள்

மரத்தின் கிழ்
உதிர்ந்துக் கிடக்கும்
பூக்கள்
எல்லோருக்கும்தான்

_____________________________


Cheer leaders

லிப்டிலோ
டிரெயினிலோ
சினிமா தியேட்டரிலோ
பாப்கார்ன் வாங்கும்போதோ
கோவில் கூட்டத்திலோ
ஷேர் ஆட்டோவிலோ
பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்போதோ
கல்யாண ஊர்வலத்திலோ
வீட்டிலோ தூக்கத்திலோ
முன் பக்கமோ 
பின் பக்கமோ
உரசித்தான் போகிறது
திரும்பிப் பார்க்கவும்
செய்கிறார்கள்
வெட்கத்துடன் 

_______________________

பேப்பர் பிணங்கள்

சேனல் சேனலாகப் பிணங்கள்
உருட்டி விடப்படுகிறது
நடு ஹாலுக்கு 

பிடிக்கவில்லை

டீசண்டாக சிரித்த முகத்துடன்
சில பிணங்கள் இருக்கிறது
நீத்தார் அஞ்சலி போட்டோவில்

பிடித்திருக்கிறது


Friday, May 22, 2009

மாவு மிஷினில் பைனல் டச் - அனுபவம்

என் சின்ன வயது மாவு மிஷின் அனுபவங்கள் மறக்க முடியாது.அப்போது ஆறு அல்லது ஏழு வயது.


வீட்டில் சொல்லி அனுப்பிவிடுவார்கள்.குழம்பு அல்லது ரசப்பொடி மசாலா கலக்காமல் ”மடி”யாக அரைக்கவேண்டும் என்று. மசாலா வாசனைப் பொருட்கள் நெடி எதுவும் இருக்கக்கூடாது. முன்னவர் (திராவிடர்அரைத்த நெடி ஆரியர் மாவில் வந்துவிடக் கூடாது). அதற்காக கடைத் திறப்பதற்கு முன்னேயே கடையின் மாவடைந்த ஷட்டர் அருகே நிற்க வேண்டும்.


பள்ளி நண்பர்கள் என்னைப் பார்த்து இளித்துக்கொண்டே போவார்கள்.வெட்கம் பிடிங்கி திங்கும்.மானம் போகும்.சிரிப்பது பையைப் பார்த்துதான்.தாத்தாப் பைகள்.


தனிததனியாக இரண்டு துணிப்பைகள்.கஞ்சி மாவு,கோதுமை 
மாவு,அரிசி மாவு என்று வெவ்வேறு அயிட்டஙக்ள்.மறக்கக்கூடாது.(இதெல்லாம் ஒரு life skill தான்.இப்போது நினைத்துப்பார்க்கும் போது)அரைக்க் கூலி காசுகள் அதிலேயே புதைந்திருக்கும்.


நுழைந்தவுடன் தும்மல் வரும்.மாவு மெஷின்.மாவுமெஷின் தான்.கடை ஷட்டரிலிருந்து ஆரம்பித்து எல்லாம் மாவு மாவாக இருக்கும்.((சீகக்காய் மிஷன் தவிர) Fan.ஸ்விட்ச் போர்டு.கலர் பல்புகள்.தரை.மிஷின்கள்.மிஷின் கிழ் இருக்கும் தகர டின்.நட்டு போல்டு.ஒட்டடை.பல்லி.மிஷன் பெல்டுகள்.ஓனரின் மரடேபிள்.அதனுள் இருக்கும் சில்லறைகள்.தொங்கும் திருஷ்டி படிகார பொம்மை.உத்திரம்.பழைய மகா லஷ்மி கேலண்டர்.கடைசாவி. 


மாவரைப்பவர் மாவோடு மாவாக மாவித்திரிக்கா லட்சணத்தோடு மாவரைத்துக் கொண்டிருப்பார்.தேசிய பண்டிகளில் சில பேர் உடம்பெல்லாம் வெள்ளை பெயிண்ட் அடித்துக் கொண்டு காந்தி வேஷத்தில் வருவார்கள்.அவர்கள் ஞாபகம் வரும்.ஓனரும் மாவுதான்.


நாந்தான் முதல்.

”இன்னென்ன அயிட்டம்........”’
”..............................”
”கிருஸ்ன மூர்த்தி அய்யிரு வூடா?”
”..............................”
’எத்தினாம் கிளாஸ் படிக்கிற”
”..............................”
”துட்ட பை உள்ளாரந்து எடுத்துட்டியா?”
”..............................”
 

இது மாதிரி கேள்விகள்.மிஷன் சத்தத்தினூடே கேட்கப்படுவதால் சில கேள்விகள் காதிலேயே விழாது.விழுந்தார்போல் காட்டிக்கொள்வேன்.இடையிடையே தும்முவேன்.


“அய்யரே....கவுச்சி துண்ணு .....பலம் வரும்... தும்ம மாட்ட” என்பார்.

என் முறை வரும்.தகர டின்னில் ஐயிட்டத்தைக் கொட்டி மெஷினில் கொட்டுவார்.டின்னைத் தட்டுவார்.சதுரமான இடத்தில் கைவைத்து நுரைக்காக surfஐ அளைவதுப் போல தானியங்களை அளைவார்.அரைவைச் சத்தம் அதிகமாகும்.

யானையின் துதிக்கைப் போல வளைந்த இடத்தில் ஒரு தொளதொளவென்று ஒரு துணிப்பை சூம்பிப் போய் கோமணத் துணித் தொங்கும்.”மடி” மாவுக்காக அதை தட்டி தட்டி சுத்தம் செய்து வைப்பேன். கானல் நீரைத் துரத்தும் விலங்குகள் போல. ஆனாலும் மாவு தூசு வந்துக்கொண்டே இருக்கும்.வீட்டிற்கு பயந்து பயந்துதான் இதெல்லாம் செய்வது.தும்மல் வேறு தாங்க முடியாது.


ரெண்டாவது ரவுண்ட் கொட்டுவார்.டின்னை தட்டுவார்.ஸ்கேலால் தட்டுவார். என் பையில் பிடித்துக் கொள்ள நான் குனிவேன்.அப்போது ஒரு கொடுமை நடக்கும்.


“கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று ஒரு பைனல்அழுத்து அந்த கை ஸ்டீரியிங்கில் அழுத்துவார்.முடியப்போகிறது என்று பார்த்தால் “கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...மெதுவாக நிறுத்தி மறுபடியும் ஒரு ‘கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....((final touch?) .என்னை வெறுப்பேற்றுவது போலிருக்கும். காது நார் நாராக கிழியும்.காதை முடுவதா மாவைப் பிடிப்பதா?தும்முவதா?

பைகள் கொதிக்கும் .வெளியே வரும் போது நானும் “மாவுத்திரிக்கா” லட்சணத்தோடு வெளியே வருவேன்.தட்டிக்கொள்வேன். பார்பர் ஷாப் ஞாபகம் வரும்.

எல்லாம் முடிந்து ஒரு சின்ன ரெஸ்ட் எடுக்க வெளியே வந்து பொடி போடுவார்.ரெண்டு ராட்ச்ச தும்மல் தும்மி (யேங்ங் அச்சு....யேங்ங் அச்சு) விட்டு உள்ளே போவார்.


பிற்காலத்தில் எங்கள் கம்பெனியில் இந்த "FIVE  S"  "KAIZEN" போன்ற மேனஜ்மெண்ட் முறைகளை (management initiative) அறிமுகப்படுத்தும் போது இந்த “ஆண்டாள் மாவு மெஷின்” அடிக்கடி ஞாபகம் வரும்.


Thursday, May 21, 2009

ஆனந்த விகடனில் வந்த கவிதைகள்

போன வாரம் ஆனந்த விகடன் 20-05-09  
(நடிகை ஷ்ரேயா அட்டைப் படம்)  
(27ம் பக்கம்) வெளியான கவிதைகள்

கவிதை - 1

நாய் குட்டிக்கு அம்மா வேணும்

புசுபுசுவென 
ஒரு செல்ல நாய் குட்டி
வளர்க்க வேண்டும் 
அடம் பிடித்தாள்
என் சின்ன மகள்

யார் கவனித்துக்கொள்வது 
சாத்தியமில்லை என்றேன்
வேலைக்குப் போகும்
அம்மாவும் அப்பாவும்
இருக்கும் வீட்டில்

அம்மாவை ரிசைன்
பண்ணிவிட்டு
கவனித்துக் கொள்ளச் சொன்னாள்
மனமில்லை அவளுக்கு
கிரெஷ்ஷில் விட


கவிதை - 2

வழித்து வார்த்த கடைசி தோசை

கிச்சனுக்கும் ஹாலுக்குமாய்
அடிக்கடி நடந்து
எல்லோருக்கும் 
வேண்டிய தோசைகளை
சுட சுட வார்த்து
அவரவர் இடத்தில்
கொண்டு போய் பரிமாறி
சட்னியும் மிளகாய் பொடியும்
அவ்வப்போது தண்ணிரும்
குழந்தைகளுக்கும்
கணவர்களுக்கும்
கொடுத்து விட்டு
தனியாக தோசை சாப்பிடும்
அம்மாக்கள்  வழக்கத்தை
கண்டிப்புடன் மாற்றிய மனைவி
அடுப்படியில் பரவுகிறது
தோசை திருப்பப்படும் 
ஓசையும் மணமும்!


Wednesday, May 20, 2009

பதிவர் Follower கவிதைகள் - 1ஒரு பூச்செண்டுகாலை எழுந்தவுடன்
ஜன்னலின் வட்ட சதுரத்தில்
ஒரு அழகான 
புது பூச்செண்டு
Follower__________________________


சப்தபதிவலைப்பெண்களை
பின் தொடர ஆரம்பித்த 
நாள் முதல்
என்னை விடாமல் 
பின் தொடரும் Follower
மனைவி


__________________________கவலையில்லை
எண்ணிப்பார்க்கிறேன்

ஒன்று குறைகிறது
மறுபடியும் எண்ணுகிறேன்
குறைகிறது
அப்பாடா நிம்மதி
போனது ஆண் தான்
பெண் Follower அல்ல

__________________________