Thursday, July 30, 2009

வானில் ”V" வரிசை காதலிகள்.........

மழைப் பெய்து ஓய்ந்த
பொதிபொதியான ஈர பஞ்சு வானில்
“V" வடிவத்தில்
வரிசைக் கலையாது பறக்கும்
பெயர் தெரியாத பறவைகள்
கண்ணில் பட்டு
யாரையோ எங்கோ
காதலித்ததாக நினைவில்
மெல்ல வருட
வரிசைக் கலைந்து
மீண்டும் “V' வடிவத்தில்
கூடும் பறவைகளில்
பெயர் தெரியாத காதலி
கண்ணில் பட்டு
ஏதோ எங்கோ வரிசைக்
கலைந்ததாக நினைவில்
மெல்ல வருட
மீண்டும் ..........


நன்றி:http://www.istockphoto.com

படிக்க கவிதை:

மொறமாமன்-மீன்குழம்பு- கனகா,ரேகா,சீதா

Tuesday, July 28, 2009

விடை பெறுகிறேன்..பிரிவோம்காணவில்லை!சென்னையில் சின்ன வயதில் என் கண்ணில்
பட்டு“விடை பெறுகிறேன்” என்று சொல்லாமல் காணாமல்
போனவர்கள்.
 • காதில் பென்சில் சொருகிய ஹோட்டல் சர்வர்
 • மஞ்சள் துணி உடுத்தி”கோவிந்தோ கோவிந்தோ”என்று சொல்லி புழுதியோடு ரோடில் உருண்டு கொண்டே பிச்சை எடுத்தவர்
 • ”பேமிலி ரூம்” உள்ள ஹோட்டல்
 • பாடையில் பிணத்தை தூக்கிக்கொண்டு் சென்ற நாலு பேர்
 • டெய்லர் கடையில் ”காஜா" எடுத்தப் பையன் (ஸ்டூலில் உட்கார்ந்து)
 • "கண்டிப்பாக ஒரு வாரம் மட்டும் " சினிமா
 • ம.எ. தர்மலிங்கம் .பி.ஏ.எம்.ஏ. லிட் (retd) (In - Out) போர்ட்
 • மாரியாத்தாவுக்கு ”மடி” பிச்சை
 • ஆபிஸ் ஆபிஸாக படியேறி டெலிபோன் துடைத்து ”செண்ட்” போட்டுவிட்டு கையெழுத்து வாங்கிச் சென்ற பெண்கள்
 • ”கொசுறு” கொடுத்த பால்காரர்/பழக்காரர்/மற்றும் பலர்
 • "தலை வார" இருபது பைசா - பார்பர் ஷாப்
 • ”.டிங்.. டாங்...” நேரம் இப்போது ஒன்பது மணி பத்து நிமிடம்.(ரேடியோ-தேன் கிண்ணம்-விவித பாரதி)
 • பத்து நாள் தொடர்ந்து சைக்கிள் விடுபவர்
 • "மஞ்சள் காமாலைக்கு கட்டு கட்டப்படும்" மரத்தடி போர்டு
 • ”.நல்லகாலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது”
 • கோலி சோடா
 • ”பாம்புக்கும் கீரிக்கும்”சண்டை விடு்வதாக சொல்லிக்
கொண்டிருந்தவர்
 • நார்மடி புடவைக் கட்டிய விதவை பிரமாணப் பாட்டிகள்
 • ராப்பிச்சைக்காரர்
 • டிரான்ஸிஸ்டர் கையில் பிடித்து பாடல்கேட்டுக்கொண்டேரோடில் நடந்து சென்ற நரிக்குறவர்கள்
 • ”ஹாண்ட் பம்ப்” இல் ”புஸ்க் புஸ்க்” என்று சைக்கிளுக்கு காற்று அடித்தப் பையன் (முடிந்தவுடன் எச்சிலால் ஒரு பைனல் டச் கொடுப்பார்)
இன்னும் தொலைந்து் போகாமல் இருப்பவர்:

காஸ் சிலிண்டரை ட்ரை ஸைக்கிள் அல்லது சாத ஸைக்கிளில் வைத்துத் தள்ளி வரும் டெலிவரி பாய் (இப்போது யூனிபார்முடன்)


கவிதை படிக்க:

ஆதலினால் காதல் மீண்டும் செய்வீர் !

Monday, July 27, 2009

மொறமாமன்-மீன்குழம்பு- கனகா,ரேகா,சீதாஆசையாகச் சோறாக்கி
கோழி குழம்பும் வைத்து
ரோஸ் புவுடர் அப்பிய முக
முற மாமன் ராமாராஜன்
சாப்பிடுவதை
கலர் கலரான பாவாடைத் தாவணியில்
வைத்த கண் எடுக்காமல்
ஆசையுடன் பார்த்த
கனகா அல்லது சீதா அல்லது
ரேகா அல்லது பானுப்பிரியா அல்லது
நிஷாந்தி அல்லது யாரோ
பார்த்து விட்டு பரிசமும் போட்டு
கல்யாணமும் ஆகி
குழந்தைக் குட்டிகளும் பெற்று
சில பேர் பிரிந்தும் விட்டார்கள்
மடிப்பாக்கம் சுப்ரமணிதான்
கேடீவி,ஜெயா,ராஜ்,ராஜ் பிளஸ்,
ஜீ,விஜய்,பொதிகை டீவிகளில்
மற்றும் இரண்டொரு
லோக்கல் சானல்களிலும்
பல வருடங்களாக
ஒரு மாதத்திற்கொரு முறை
முறமாமன் சாப்பிடுவதை
ஆசையுடன் பார்க்கும்
கனகா அல்லது சீதா அல்லது
ரேகா அல்லது பானுப்பிரியா அல்லது
நிஷாந்தி அல்லது யாரோவைப்
வைத்த கண் எடுக்காமல்
ஆசையுடன்
பார்த்துக்கொண்டிருக்கிறார்
ஐம்பத்திரெண்டு வயதாகியும்
இன்னும் எதுவும் ஆகாமல்

Friday, July 24, 2009

ஜென்சி,நான்,எஸ்.ராமகிருஷ்ணன்

ஜென்சி என்ற பாடகி1979/80களில் தன் வசீகரக் குரலால் இசை ரசிகர்களை அடிமையாக்கி வைத்திருந்தார்.இவர் லதா மங்கேஷ்கரின், அவரைப் போல அல்லாமல்,வேறு ஒரு வசீகர குரல் வளம் உடையவர்.ஜானகியின் வசிகரம் ஒரு டைப் என்றால் ஜென்சி வேறு டைப். "கீச்” இல்லாத வசீகரம்.கர்நாடக இசையில் போடப்பட்ட சில் ஹைபிட்ச் திரைப்பாடல்கள் எதுவும் தமிழில் ஜென்சி பாடவில்லை ஜானகி போல.அது மாதிரி பாடல்கள் இருந்தால் எப்படி பாடியிருப்பார்?


ஆனால் ஜென்சியின் குரல் ஒரு தனி ரகம்.

இவருடைய ஸ்பெஷல் மலையாள மூக்கு ரீங்கார குரல்.அடுத்து உயிர் துடிப்பு.அதுதான் soul stirring.கண்டிப்பாக ஒரு சோகம் இழையோடும்.குறையா? நிறையா? “ர”வை “ற” போல மலையாள உச்சரிப்பு உண்டு.தெய்வீக ”ராகம்” என்பதை “றாகம்”.”மலருங்கள்” என்பதை மல”ற”ங்கள்.

இதை வைத்து சுஜாதா/சசிரேகா இவரிடமிருந்துப் பிரித்து விடலாம்.இவர் ஒரு பாட்டு மலையாளமும் தமிழும் கலந்து (75:25) “பூந்தளிர்” என்ற படத்தில் வரும்.


இப்போது பாடும் ஷரேயா கோஷால்,சாதானா சர்க்கம் போன்றவர்கள் அற்புதமான குரல் வளம் உடையவர்கள் என்றாலும் ஜென்சி வசீகரம் இல்லை.
ஓவராக மழலைத் தட்டும் குரல்கள்.அடுத்து அழுத்தமான தமிழ் உச்சரிப்பு இல்லாமை.


ஜென்சியின் சில பாடல்ளை நேரடியாக வீட்டில் கேட்காமல் எங்கோ வெகு தூரத்தில் காற்றில் மிதந்த வரும் போது கேட்டால் அள்ளிக்கொண்டுப் போகும்.”ஆயிரம் மலர்களே மலருங்கள்” பாடல் ஒரு உதாரணம். அதே மாதிரி ”இதயம் போகுதே”பாட்டில் வரும் ஒரு ..”லாலல்லலா”உள்ளத்தை உருக்கும் குரல்.இரண்டுமே அற்புதமான இசை.


இந்த “ஆயிரம் மலர்களே” பாட்டு இரண்டு பேர் பாடுவது.’”கோடையில் மழைவரும் வசந்தக்காலம் மாறாலாம்” என்ற வரிகளுடன் எஸ்.பி.ஷைலஜா பாட்டின் உள்ளே வருவார்.இவர் குரலில் ஜென்சி வசீகரம் இருக்காது.இவர் குரல் ஒரு தனி ரகம்.


ஜென்சி பின்னணிப் பாடிய நடிகைகள் தீபா/ஷோபா/ராதா/ரதி/படாபட் ஜெயலட்சுமி/ராதிகா/சுஜாதா.இவர் பாடகர் ஜாலி ஆபிராகமின் சகோதரி.


ஒரே கட்டத்தில் ஜென்சி ராஜாவால் ஓரம் கட்டப்பட்டு காணாமல் போனார்.இவர் ஹிட் பாடல்கள் எல்லாம் ராஜாவின் இசைதான்.


எனக்குப் பிடித்த சில பாடல்கள்:


ஒரு சிறந்த உள்ளத்தை உருக்கும் பாடல் ”ஆயிரம் மலர்களே “ பாட்டின் தொடக்க ஹம்மிங்கும் அதைத் தொடர்ந்து வரும் இசையும் மற்றும் “தெய்வீக ராகம்”(உல்லாசப் பறவைகள்) பாட்டும்,”ஞான் ஞான் பாடனும்..நீ.. நீகேட்கனும்”(பூந்தளிர்) காலத்தால் என்னால் மறக்க முடியாது.


 1. “உனக்கெனதானே காத்திருந்தேன்” (பொண்ணு ஊருக்குப் புதுசு)
 2. ”ஞான் ஞான் பாடனும்..நீ.. நீகேட்கனும்”(பூந்தளிர்)
 3. “காதல் ஓவியம் பாடும் காவியம்”(அலைகள் ஓய்வதில்லை)
 4. “தம்தனனம் தனனம்” (புதிய வார்ப்புகள்)
 5. “கீதா சங்கீதா”(அன்பே சங்கீதா)
 6. “அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும்”(முள்ளும் மலரும்)

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது:(”எப்படி படிக்கிறீர்கள்” என்ற் பதிவில்)(http://www.sramakrishnan.com/view.asp?id=284&PS=1)

//வீட்டில் பெரும்பான்மை இரவுகளில் நானே தயார் செய்து தேநீர் குடிப்பேன். பின்னிரவின் அமைதியில் சூடான தேநீரை சிறிது சிறிதாக குடித்தபடியே கணிணியில் ஒரேயொரு பாடல் கேட்பது ரசனைக்குரிய அனுபவம். அந்த ஒரு பாடல் எனக்கு மட்டுமே ஒலிப்பது போல மிக நெருக்கமாக கேட்கும். அப்படி அடிக்கடி கேட்கும் பாடல் ஜென்சி பாடிய ஆயிரம் மலர்களே மலருங்கள். இளையராஜாவின் இசையில் உருவான அந்தப் பாடல் தரும் மயக்கம் சொல்லில் அடங்காதது//


"ஞான் ஞான் பாடனும்..நீ.. நீ..கேட்கனும்”(பூந்தளிர்).(1979)

பாடலின் முன்னணியில் வரும் தபலா இசை ரம்மியமானது. பின்னணி இசையும் சுகந்தம்.

ஆதலினால் காதல் மீண்டும் செய்வீர் !


பார்த்த கணத்தில்
மிரட்சி விழியில்
உறைந்த குத்திட்ட பார்வை


கரைந்தவுடன்
உள்மன குறுகுறுப்புடன்
லேசான புன்முறுவல்
இருவருக்குமே சிவக்கிறது
கன்னம்


தலைகுனிந்து
யோசனையில் உள் கொள்ளும்
அச்சம் கலந்த நாணங்களும்
மெல்லிய புன்னகைகளும்

ஓருவரை ஒருவர் ஏமாற்றி்
பார்க்கும் திருட்டுப் பார்வைகள்
இயல்பாக இருப்பதாக
நகம் கடிக்கும் பாவனைகள்
பரஸ்பரம் இருவருக்குமே


மென் மின்சார காம அலைகளில்
தடம் புரண்டபடி
எதிர் மேல் பர்த்தில் அவளும்
கிழ் பர்த்தில் அவனும்


விடிகாலை பொழுது
எங்கோ ஒரு இடைப்பட்ட
ரயில் நிறுத்தத்தில்
மெதுவாக கையசைத்து
விடைபெறுகிறாள்
விவாகரத்தான
முன்னாள் மனைவிபடிக்க:

டீவி பார்க்கும் போது கவலைகள்

Sunday, July 19, 2009

அனானி கிறுக்கல்கள்/கிறுக்கன்கள்

இப்போதெல்லாம், எல்லா தமிழ் மற்ற மொழி இசைச் சேனல்களில் கிழே ஆங்கில எழுத்துக்கள் ஒடிக்கொண்டிருப்பதைப்(scrolling) பார்க்கலாம்.அது நேயர்கள் தங்கள் காதலன் அல்லது காதலிக்கு “I love you(டா)” அல்லது “ஹாப்பி பர்த் டே” அல்லது “This song is for my love"என்று புறா காலில் கட்டி தூது விடுகிற மாதிரி SMSஇல் இசைச் சேனல்களுக்கு அனுப்புகிறார்கள்.


அது கன்வேயர் பெல்ட் மாதிரி வித வித கலரில் காதல் சின்னங்களோடு ஓடுகிறது.இதையெல்லாம் முகம் தெரிந்த/தெரியாத காதலர்/காதலிக்கும் அனானியால்/உண்மை காதலர்களால் அனுப்ப படுகிறது.சம்பந்தப்பட்டர்கள் உறுமீன் கொக்கு மாதிரி இதற்காகக் காத்திருந்து(கொத்தி) படித்து விட்டு ”ஓகேடா(டீ)”பதில் தூது விடுவார்களா என்பது தெரியவில்லை.


இதைப் பார்த்தவுடன் வேறு ஞாபகம் வந்தது.இதன் வேறு வடிவம் கிழ்வருவது.டெக்னாலஜி இல்லாமல்!


ரூபாய் நோட்டு/கோவில்/மசூதி/சர்ச் மற்றும் புராதனச்சின்னம்/சுற்றுலா தலங்கள் /டாய்லெட்டுகள்/மலைப்பாறைகள்/தூண்கள் /காலேஜ் ஹாஸ்டல்/கல்லூரி சுவர்கள்/திருப்பதி மலை ஏறும் பாதை /குதுப்மினார்/தாஜ்மகால் /நவக்கிரகம்என்று கண்டமேனிக்கு கிறுக்கி இருக்கும்.


ஏன் சில பேர் உள்ளங்கையில் கூட பேனாவால் கிறுக்குவார்கள்.அடுத்து லிப்ட் உள்ளே இருக்கும் கிறுக்கல்கள்.லிப்ட் கிறுக்கல்கள் அந்த அலுவலகம்/பிளாட் சம்பந்தப்பட்ட பெண்கள்/ஆண்கள்.ஆனாலும் அலுவலக லிப்ட் கிறுக்கல்கள் ரொம்ப மோசம்.இதில் பெயிண்டுகளை உதிர்த்து செதுக்குவார்கள் .ரூம் போட்டு யோசிப்பார்கள் போல்.கொரியர்களுக்கும் காதல் வரும்.

இந்த ரூபாய நோட்டு காதல் கிறுக்கல் ரொம்ப சுவராசியமானது.எழுதி சர்குலேஷனில் போய் உங்கள் கையில் மறுபடியும் வந்தால் காதல் ஜெயிக்கும்.அப்போது உங்கள் வயது 108 ஆகி இருக்கும்.


இந்த மாதிரி கிறுக்கல்களை ஆங்கிலத்தில் graffiti என்று சொல்வார்கள். இது ஒரு கலை.ஆனால் இந்த கிறுக்கல்கள் கொலை.இதில் சத்தியமாக சேராது.புராதன சின்னங்களை அவமானப்படுத்துவது/அசிங்கப்படுத்துவது.சுற்றுலா பயணிகளின் முகம் சுளிக்க வைக்கிறது.


கிறுக்குபவர்கள் முக்கால்வாசி இளம் வயதினர்கள்தாம்.கிறுக்கல்கள் எப்படிப்பட்டது.
 1. முக்கால்வாசி காதல்.காதலர்கள் பெயர் நடுவில் மன்மதன் விடும் பானம் இதயத்தைத் துளைப்பது போல்.”என்றும் இணைப்பிரியாத” “மறக்க மாட்டேன்”. ஈர சாக்பீசால்.
 2. "நான் இன்று வந்தேன்" என்று தேதியுடன் நண்பர்கள் பெயர் செதுக்கியிருப்பார்கள்.
 3. சில ஓவியங்கள/பெண் அல்லது ஆண் குறிகள்
 4. நடிகைகளை காதலித்து எழுதும் வாசகங்கள்
 5. ஆபாச/வக்கிர எழுத்துக்கள்.படங்களும் உண்டு.இதில் incestuous எழுத்தும் அதிகம்.ரத்தசம்பந்தமான உறவுகளுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் வக்கிர எழுத்துக்கள்.இது மறைவிட சுவர்களில் அதிகம்.
 6. வாழ்க/வாழ்த்துகிறேன் போன்ற எழுத்துக்கள்
 7. செல்/போன் நம்பர்கள் கொடுத்து வேறு விஷயத்திற்கு அழைப்பது
 8. உங்கள் ஓட்டு
 9. குட்ஸ் வண்டியின் பின்னால்(பாஞ்சாலி-பரஞ்சோதி)
 10. சினிமா டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் குகை கிறுக்கல்கள்
இந்த கிறுக்கல்களுக்கு என்ன அடிப்படைக் காரணம்.

 1. உலகத்திற்கு காட்டுதல் தாங்கள் காதலர்கள் என்பதை.
 2. இதில் 98% ஒரு தலைக் காதல்தான்.கிடைக்காவிட்டாலும் காவியமாக்குவது
 3. காதலியை ரிசர்வ் செய்து வைப்பது யாரும் முந்திவிடாமல்
 4. கல்லூரி மற்றும் கல்லூரி ஹாஸ்டல்களில் அவர்கள் பெயர் அழிய சின்னமாக இருக்க வேண்டும்.பின்னாளில் பார்த்தால் காவியமாகும்.
 5. வக்கிரத்திற்கு ஒரு வடிகால்
 6. புராதனசின்னத்தில் எழுதி தாஙகளும் சரித்திர மதிப்புப் பெறுவது
 7. கோவில் நவக்கிரக கிறுக்கல், சுற்றும் எண்ணிக்கை மறக்காமல் இருக்க
 8. புராதன சின்னங்களின் மேன்மை அறியாமை
 9. சுற்றுலா பயணிகள் பார்த்து அனுதாபப்படுவார்கள்/கவிதை எழுதுவார்கள்
 10. அடுத்தவர் மதச்சின்னங்களை அவமானப்படுத்துவது
 11. நேரில் (சொல்ல பயம்அல்லது status/ஜாதி தடை)சொன்னால் தோல்வி அடைய வாய்ப்புக்கள் அதிகம்.கல்லிலேயே காவியமாக்கி உருகுதல்
 12. ”மீ பஸ்ட்” காதல்
 13. சேடிசம்(sadism)
வுட்லெண்ட்ஸ் டிரைவின் ஹோட்டல் (இப்போது இல்லை) டாய்லெட் சுவரில். Be careful! You are holding your future in your hand!
Friday, July 17, 2009

”அஜித்”கெட்டப்பில் எங்கள் கவுன்சிலர்

கவிதை


பிறந்த நாள் காண்கிறார்
எங்கள் வார்டு கவுன்சிலர்


”தல” அஜித் ஸ்டைலில்
சோபாவில் கோட்சூட்டோடு
ஒரு போஸ்டரில்


இருந்தாலும் ஒரு மனக்குறை


மற்றொன்றில்
சட்டை காலரின் நுனியைக்
கடித்துக்கொண்டு
இளய தளபதி விஜய்யாக


இருந்தாலும் ஒரு மனக்குறை


இன்னொன்றில்
வேகவேகமாக நடந்தபடி்
கும்பிட்டுக்கொண்டே
தூய வெண்ணிற ஜிப்பா குர்தாவில்
சூப்பர் ஸ்டாராக


இருந்தாலும் ஒரு மனக்குறை


இடைப்பட்ட போஸ்டரில்
ஒரு கையில் பேட்டும்
மற்றொன்றில்
மறக்காமல் பெப்சி
20-20 IPL கிரிக்கெட் வீரராக


இருந்தாலும் ஒரு மனக்குறை


கடைசியாக....
பழனி மலை அடிவாரத்தில்
அவரும் அவர் மனைவியும்
கைகள் கூப்பியபடி
தமிழ் பண்பாடு கெட்டப்பில்


இருந்தாலும் ஒரு மனக்குறை


அன்றிரவு கொண்டாட்டத்தி்ல்
போதையில் அழுது புலம்பிவிட்டார்
தன் மனக்குறையை
”வாழ்த்த வயதில்லைத் தலைவா
வணங்குகிறோம் “ தொண்டர்களிடம்


உலகநாயகன் கமலின்
கெட்டப் போட முடியாமல்
கமல் ரசிகர்களின் ஆதரவை
இழந்தவிட்டதாக
குமுறி குமுறி அழுகிறார்

Thursday, July 16, 2009

”ராணி” பத்திரிக்கையும் நானும்

சீப்பு,கத்திரிக்கோல்,கட்டிங் மெஷின்,பிளேடு,கண்ணாடி,பிரஷ் இவைகளோடு”தினத்தந்தி”யும் பார்பர் ஷாப்பில் அத்தியாவசியமான பொருளாக இருக்கிறது.வீணையும் நாதமும், நகமும் சதையும் போல பார்பர் ஷாப்பும் தினத்தந்தியும் என்று சொல்லலாம்.ஒரு காலத்தில் தினத்தந்தி இல்லாத பார்பர்ஷாப்பை கற்பனை செய்து பார்ப்பது கஷ்டம் .இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது.


தினத்தந்தியின் செல்லப் பெண் “ராணி” வாராந்தரி.தினத்தந்தியோடு ஒட்டிக்கொண்டு பிறந்த மாதிரி பார்பர்ஷாப்பில் கிடக்கும்.குடும்பப் பத்திரிக்கை என்று போட்டிருக்கும்.ஆனால் இதைப் படிப்பவர்கள் விளிம்பு நிலைப் பெண்கள்தான் அதிகம்அப்போது.”எக்ஸ்போர்ட்டு கம்பேனி” யில் வேலைச் செய்யும் பெண்கள் தோளில் ஹாண்ட் பாக்கும் கையில் ராணியைச் சுருட்டி வைத்துக்கொண்டு போவதை சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.இல்லாவிட்டால் வட்ட டிபன்பாக்ஸ் with சுருட்டிய ராணி.இவர்கள் “ஹைகிரேடு” என்று மற்றப் பத்திரிக்கைகளைப் (ஆ.வி./குமுதம்/கல்கி)படிக்க மாட்டார்கள்.இப்போது இவர்கள் BPO. ஆனால் கையில் செல்.


பள்ளி பருவத்தில் ரொம்ப நாள் வரை கருப்பு நிறம் உடையவர்கள் படிக்கும் பத்திரிக்கை என்று என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.மேல் தட்டு குடும்பப் பெண்கள் இதைப் படிப்பதை கெளரவக் குறைச்சலாக அப்போது நினைப்பார்கள்.
லோ கிளாஸ் பத்திரிக்கை என்று ஒரு எண்ணம் அப்போது.ஆனால் நான் ரொம்ப விரும்பி படிப்பேன். வீட்டில் வாங்கமாட்டார்கள்.குமுதம்தான் வாங்குவார்கள்.
இது நகைமுரண் அல்லது சூப்பர் காமெடி என்று அப்போது தெரியாது.


முடி வெட்டக் காத்திருக்கும் நேரத்தில் எல்லாம் படித்து விடுவேன்.இல்லாவிட்டால் முடிவெட்டி முடிந்தவுடன் இதற்காகவே உட்கார்ந்துப் படிப்பது வழக்கம்.இந்த படிப்பு அனுபவம் பல சமயங்களில் ‘down to earth" ஆக என்னால் சிறுகதைகளில் எழுத முடிகிறது.இதற்காகவே முடிவெட்டாத நாளிலும் போவதுண்டு. வெளிவரும்போது சட்டையை நன்றாக உதறிவிட்டு வரவேண்டும். இது ஒன்றுதான் பிரச்சனை.இல்லாவிட்டால் வீட்டில் கண்டுப்பிடித்து விடுவார்க்ள்.


அட்டையில் வழக்கமான குமுதம் பாணி பெண் படம்.உள்ளே குரங்கு குசலா,(அன்புள்ள) அல்லி பதில்கள்,பி.டி.சாமி பேய்க் கதை,படக் கதை,சமையல் குறிப்பு,பெண்கள் வெள்ளைப் படுதல்,சிறுவர் பகுதி,கருத்துப் படம்,குடும்பத்தில் சுவையான நிகழ்ச்சி.குறுக்கெழுத்துப் போட்டி,சிரிப்பு,லேகியம் மற்றும் “கடல் கன்னி” கட் பாடி விளம்பரம், பாட்டி வைத்தியம் போன்றவை சாணித்தாளில், கருப்பு மைப் பூசிய எழுத்துக்களில்,கெமிகல் நாற்றம் அடிக்க இருக்கும்.சில படங்கள் தெளிவாகத் தெரியாது.


பாட்டி வைத்தியம் படத்தில் ஒரு பாட்டி காலை நீட்டிக்கொண்டு குட்டி உரலில் மருந்து இடித்துக்கொண்டிருப்பார்.பி.டி.சாமி பேய்க் கதைகள் ரொம்ப விருப்பம்.


”அன்புள்ள அல்லி நான் நடிகை ஜெயசித்ராவுடன் ஸ்கூட்டரில் செல்வதுப் போல கனவு கண்டேன்! பலிக்குமா?”என்று அல்லி கேள்வி பதிலில் ஒருவர் கேட்டிருப்பார்.

அன்புள்ள அல்லி பதில்: ”உங்களோடு போனால் ஜெய்சங்கர் கோபித்துக் கொள்வார்!”


ஒரு ஸ்கூட்டர் படம் போட்டிருக்கும் அதில் ஜெயசித்ரா(சல்வார் கமீஸ் உடை!) ஸ்கூட்டரை ஓட்டுவார். உண்மையான பெரிய முகமும் ஆனால் கைகால்கள் குச்சியாக வ்ரைந்திருக்கும்.பில்லியனில் ஜெயசித்ராவின் இடுப்பைப் பிடித்துக்கொண்டு கேள்வி கேட்ட வாசகர்.அவர் மண்டைக்கு மேலே ஆட்டின் (காதல்)சின்னங்கள்.காதல் மயக்கத்தில் இருப்பார்.“பக்கத்துவீட்டு ரோஜாவை பறிக்கலாம் என்று இருக்கிறேன்.செய்யலாமா?”

அன்புள்ள அல்லி பதில்: “ பாத்து..நேயரே .. முள் குத்திடும்”எல்லா கேள்விகளிலும் “அன்புள்ள அல்லி” என்ற prefix இருக்கும்.இப்போது யோசிக்கிறேன்.இந்த கேள்வி பதிலகளைப் படிக்கும் போது என்ன மாதிரி உணர்வுகள் உள்ளத்தில் அப்போது இருந்திருக்கும்.முக பாவம்?ரசித்திருப்பேனா?
”பக்கத்துவீட்டு ரோஜா”என்று நேயர் சூசகமாக குறிப்பட்டது தெரிந்து் விட்டது என்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் அப்போது.

(இந்த மாதிரி கேள்விகளுக்கு இப்போது இருக்கும் தலைமுறையிடமிருந்து என்ன பதில் வரும் என்று டெஸ்ட் செய்வதற்காக என் பையனிடம் (13) நான் சொன்னேன்.

“டேய்... நேத்து நைட் கனவுல நடிகை அசினோட பைக்ல போற மாதிரி கனவு கண்டேன்டா!”

முதலில் பையன் முகத்தில் வெட்கம் நிழலாடியது. ”சே..லூசுப்பா...ஏதாவது கிராபிக்ஸ்ஸா இருக்கும்!” )

மீண்டும் ராணி.......

ஆண்டிப் பண்டாரம் பாடுகிறார் மாதிரி குரங்கு குசலா பகுதி ஒன்றும் புரியாது.இது கருத்துப் படம் ?.பி.டி.சாமியின் பேய் கதைகள்(பக்கத்துணையுடன் படிக்க)ரொம்ப பிடிக்கும்.இவருக்கு லட்சக்கணக்கில் வாசகர்கள்!குரும்பூர் குப்புசாமி என்பவர் கதைகள் எழுதுவார். எல்லாத் தொடர்கதைகளுக்கும் முன்கதைச் சுருக்கம் உண்டு.முடியும் கடைசிவாரத்தில் கூட முன்கதை சுருக்கம் படித்து புஃல் கதையை தெரிந்துக்கொள்ளலாம். அவ்வளவு செழிப்பானக் கதை!


சினிமா விமர்சனம் வரும்.விமர்சனத்தின் கடைசி வரியில்தான் படம் எப்படி என்று சொல்லுவார்கள். படம் பேர் தெரியவில்லை,அந்த படத்திற்கு கடைசி வரி ”ஒரு முறைப் பார்க்கலாம்” என்பது. சிவாஜி கணேசன் படங்களுக்கு ”சிவாஜியின் நடிப்புக்காக ஒரு முறை பார்க்கலாம்” என்று கட்டாயம் இருக்கும்.


அடுத்து துணுக்குப் பகுதி. வீட்டில் சுவையான சம்பவம் .சுவையாக இருந்தால் பரிசு ரூபாய் பத்து.ஒரு சம்பவம் படித்த ஞாபகம். ஒரு வீட்டில் எல்லோரும் ஊருக்கு கிளம்பும்போது மறந்துப் போய தாத்தாவை வீட்டில் வைத்து பூட்டி விட்டு தெரு முனையில் ஞாபகம் வரும்.தலையில் அடித்துக்கொண்டு திரும்பி வந்து திறப்பதாக.அந்த சம்பவம் இன்னும் மறக்க முடியவில்லை என்று எழுதியிருப்பார்கள்.படித்தவுடன் மனதிற்குள் சந்தேகம் வரும் உண்மையா என்று.


படித்து முடிந்ததும் சம்பவமும் படமும் பொருந்துகிறதா என்று பார்ப்பேன்.படத்தில் பூட்டிய விடும் ஜன்னல் ஊடே தாத்தா ஈசிச் சேரில் தூங்குகிற மாதிரி படம் இருக்கும்.


ரொம்ப வருடங்களுக்குப் பிறகு நேற்று ”ராணி வாரந்திரி” பார்பர்ஷாப்பில் படித்தேன். அதன் ஷேப் ஒரு மாதிரி செவ்வக வடிவத்தில் இருக்கிறது.இப்போது high profile தோற்றம்.
உள்ளே விஷயங்களும் குமுதம்/குங்குமம ரேஞ்ச்.


இப்போது பெரியவனாகி குடியும் குடித்தனமுமாக இருக்கிறேன்.எனக்கு வாங்குவதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது .ஆனால் வாங்குவதில்லை. பெரும்பாலான வீட்டில் இதை இப்போதும் நான் பார்த்ததில்லை. இன்னும் அதை வாங்குவதற்கு தீண்டாமைத் தயக்கம் இருக்கிறது.நடிகர் ராமராஜன் போல் ஒரு இமேஜ்? ஒரு வேளை பெயர் காரணம்.


இப்போதும் அது குடும்பப் பத்திரிக்கை tag உடன்தான் வருகிறது.ராணியின் அக்கா ராணி
முத்துவும் வந்துக்கொண்டிருக்கிறது.நெடுங்கதை எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் சளைக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறார்.


இப்போது அதன் வயது மகுடம்:48 மணி:12.அதன் லோகோ ராணித் தலையில் உள்ள கிரீடம். அது இப்போது காணவில்லை.முன்னெல்லாம் முதல் பக்கத்தில் இருக்கும்.


கால ஓட்டத்தில் குரங்கு குசலா,பி.டி.சாமி,நாஞ்சில்,குரும்பூர் குப்புசாமி,அமுதா கணேசன் எல்லோரும் காலாவதியாகி விட்டார்கள்.உள்ளே பல பழைய விஷயங்கள் போய் புது விஷயங்கள் வந்துவிட்டன.


அப்போது முதல் இப்போதுவரை ராணியில் மகுடமாக மணியாக வந்துக்கொண்டிருப்பவர் சித்தவைத்தியர் சேலம் சிவராஜ்.


என் ”அன்புள்ள அல்லி” இப்போது இல்லை வெறும் அல்லிதான்.

Tuesday, July 14, 2009

வலைக்கு வெளியே வண்ணத்துப்பூச்சி

தினசரிவாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightningஅனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப் படுத்துவதுதான் ஹைகூ.


இது ஒரு நேரடி அனுபவம்.


Haiku only describes, does not prescribe or tell or preach

ஒரு ஹைகூ கவிதைபூந்தோட்டம் விற்கும் நர்சரி
கம்பி வலைக்கு வெளியே
வண்ணத்துப்பூச்சிகள்என் மற்ற ஹைகூ படிக்க:நான் ரசித்த ஹைகூக்கள். ஹைகூக்கள்..Sunday, July 12, 2009

நான் ரசித்த ஹைகூக்கள். ஹைகூக்கள்..

தினசரிவாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightningஅனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப் படுத்துவதுதான் ஹைகூ.ஒரு நேரடி அனுபவம்.

Some of the most thrilling Haiku-poems describe daily situations in a way that gives the reader a brand new experience of a well-known situation.

Haiku only describes, not prescribe or tell

It takes a still photograph of a flash of lightning, in all its beauty, terror and suddenness.

// எதுவும் நான் எழுதியது அல்ல.படித்தது. ரசித்தது.//

படங்கள் சும்மா ஒரு ஜாலிக்காகப் போடப்பட்டது.சில படங்கள் பொருந்தியும் வருகிறது.

இந்த காட்சிகளை அன்றாட வாழ்க்கையில் மின்னல் நேரத்தில் சந்திக்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள்/சலனங்கள்/பிரமிப்புகள்தான் ஹைகூ.


out of its slipper
her bare foot talking
under the table
a dead mynah
with each passing car
its wing flaps
a bee chose
the rose I meant to pluck
empty vase


abandoned church
sunbeam and two squirrels
in the pew

(pew என்றால் மர பெஞ்ச். பக்தர்கள் உட்கார)
weathered scarecrow
a blackbird swoops from his arm
into sweet corn(weathered என்றால் நைந்துப்போன/பிஞ்சு/சாயம்போன)


Thursday, July 9, 2009

டீவி பார்க்கும் போது கவலைகள்

கவிதை


திருட்டுத்தனமாக
டிவி பார்த்து விடுகிறாள்
நான் பாத்ரூம் போய்
குளித்து வெளிவரும்
இடைவெளியில்
என் எட்டு வயது மகள்


ஒவ்வொறு நாளும்
விடும் தடயங்களால்
கையும் களவுமாக பிடிபடுவதை
அவளிடம் சொன்னேன்


ரீமோட் இடம் மாறிவிடுகிறது
“ரயில்வே டைம் டேபிள்” படிக்கிறாள்
தலைக் குனிந்து இளிக்கிறாள்
ஹாலில் வாக்கிங் போகிறாள்
சேனல் மாறியிருக்கிறது
புத்தகங்களை தூசுத் தட்டுகிறாள்
டுயூப் லைட் எரிகிறதா பார்க்கிறாள்
கூப்பிட்டீயா என்கிறாள்
டவல் வேணுமா என்கிறாள்
மூக்குக் கண்ணாடியை
அழுந்தத் துடைக்கிறாள்


ஏதோ ஒரு நாளிலிருந்து
கவலையாகி்விட்டது
தெரியவில்லை
ஒரு தடயமும்


அதே நாளிலிருந்து
அவளுக்கும்
கவலையாகி்விட்டது
நான் சரியாகக் குளிக்கிறேனா
என்பதாக


Wednesday, July 8, 2009

போட்டிச் சிறுகதைகளைப் பற்றி...

ஒரு எழுத்தாளன் தன்னால் எழுதப்படாத ஒரு கதையை விமரிசிக்கும்போது பல அம்சங்கள் விமரிசனத்தின் நேர்மையைக் கலைக்க முற்படுகின்றன.சிறுகதை படிக்கும்போது கதையின் ஆதாரமான செய்தியையும் அமைப்பையும், ஒரு வாசகனைப்போல் கவனிக்காமல், “ இந்த வாக்கியத்தை இப்படி எழுதியிருக்கலாமே, இந்த பாராவை அங்கு அமைத்திருக்கலாமே,கதையை இந்த இடத்தில் முடித்திருக்கலாமே” என்று அடிக்கடி அவன் பாண்டித்யம் குறுக்கிடும்.நான் சந்தித்த பல எழுத்தாளர்கள் மற்றவர்கள் கதையை யோக்கியமாகப் படிக்கிற ஜாதி இல்லை என்பதை அவர்களுடன் பேச்சில் தெரிந்துகொண்டிருக்கிறேன்.
அவர்கள் பொழுது போக்குக்கு தத்தம் சொந்தக் கதைகளையே படித்துக்
கொண்டிருப்பார்கள் என்று தோன்றியது.ஒரு நல்ல எழுத்தாளனாவதற்கு சில சொந்தத் தியாகங்களும் பலிகளும் தவிர்க்க முடியாதவை.அவைகளில் ஒன்று சில துல்யமான வாசகத் தன்மைகளை இழப்பது. நானும் இழந்திருக்கிறேன். இருந்தும் இன்றும் சில நல்ல சிறுகதைகளை என்னை அந்தப்பூர்ணமான வாசக நிலைக்குத் திருப்பி அனுப்புகின்றன.எனவே எழுத்தாளன் என்கிற ரீதியில் எனக்குள்ள பிடிவாதங்களின் கறை இந்தக்கட்டுரையில் பட்டிருக்கலாம். அதைத் தவிர்க்க நான் நிச்சயம் முயற்சித்திருக்கிறேன். என்னை ஒரு வாசகனாகவே ஆக்கிக்கொண்டு இந்தக் கட்டுரையை அமைக்க முற்பட்டிருக்கிறேன். அது பல கதைகளில் சற்று கஷ்டமாகவே இருந்தது. அவை பற்றி அப்புறம்.முதலில் சிறுகதைகளைப் பற்றிக் கொஞ்சம் பொதுவாகச் சொல்கிறேன்.பிறகு இந்தத் தொகுதியின் கதைகளை என் கோணத்திலிருந்து ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துகிறேன்.நான் கடைசியில் அறிமுகப்படுத்தும் கதை இந்தத் தொகுதியில் சிறந்த கதை.சிறுகதை அளவில் சிறியதாக இருக்கவேண்டுமா? இல்லை.அதில் கதை இருக்க வேண்டுமா? தேவை இல்லை. எனவே “சிறுகதை” என்னும் அடையாளப் பெயரை அதன் சரித்திர மதிப்புடன் விட்டுவிடுவோம்.எப்போதோ கதைகளைச் சிறியதாகவும் கதைகளாகவும் எழுதிக் கொண்டிருந்தார்கள்.இப்போது அவ்வண்ணமே விசுவாசமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நவீன படைப்பிலக்கியத்தில் சிறுகதைகள் இந்த ஆதார அமைப்பிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டன.நவீன வாழ்க்கையின் மனச் சிக்கல்கள் நவீன சிறுகதையிலும் பிரதிபலிக்க அது ஒரு பிரத்தியோக வெளிப்பாட்டுச் சாதனமாக மாறி “இதுதான் சிறுகதை” என்று அறுதியிடுவது கஷ்டமாகிறது. முயன்று பார்க்கிறேன்.

சிறுகதை என்பது என்ன? அபிப்ராய பேதம் வேண்டாம் எனில் உரைநடையில் சில பக்கங்கள் எழுதப்பட்ட வார்த்தைகளின் அமைப்பு என்று சொல்லலாம்.அப்படியென்றால் செய்தித்தாள் முழுவதும் சிறுகதைகளே! சிறுகதையின் உரைநடை தனிப்பட்டது என்று சொல்லலாமா?உருவம் உள்ளடக்கம் என்று சிலர் ஜல்லியடிப்பதைப் கேட்டிருக்கிறேன்.டெண்டர் நோட்டிசுக்கும் உருவம் உள்ளடக்கம் உண்டு.பின் சிறுகதை என்பது என்னதான்? கூர்ந்து கவனியுங்கள்.சிறுகதை ஒரு முரண் பாட்டை சித்தரிக்கும் உரைநடை இலக்கியம்.முரண்படுதல் என்பது என்ன? இரண்டு மாறுபட்ட அமைப்புகள் குறுக்கிடும் போது - ஏன் சந்திக்கும் போதுகூட, ஏற்படுவது முரண்பாடு. இந்தப் பொது அர்த்தத்தில் இந்தக் கட்டுரை முழுவதும் இவ்வார்த்தை உபயோகப்பட்டிருக்கிறது. சச்சரவு மோதல் சண்டை போன்ற அர்த்தங்களில் இல்லை.சிறுகதை அதன் நவீன தொனியில் இரண்டு அல்லது மேற்பட்ட நிலைகள் முரண்படும்போது நிகழ்வதை தனிப்பட்ட உரைநடையில் சொல்லும் இலக்கியம் என்று சொல்லலாம்.குழப்பமாக இருக்கிறதா? எனக்கும் அப்படியே! அடுத்த மூன்று பாராக்களில் தெளிவாகிவிடும்.வாக்கியத்தைக் கழற்றிப் பார்க்கலாம்.முரண்பாடு (முரண்பாடு என்பதை ஆர்தர் கோஸ்லர்”ஆக்ட் ஆப் கிரியேஷன்” என்கிற புத்தகத்தில் எல்லா மனித சாதனைகளும் முரண்பாடு ஒரு ஆதார காரணம் என்கிறார்.) ஒரு தனி மனிதனின் மனத்திலேயே இருக்கலாம். அல்லது மனிதனுக்கும் அவன் விதிக்கும் முரண்பாடு இருக்கலாம்.அதனுடைய ஆதர்ச்ங்களுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இருக்கலாம். இரண்டு சமூக மட்டங்களுக்குள் இருக்கலாம். இருவர் அல்லது மேற்பட்டவருள் இருக்கலாம்.

இந்த இருவர் முரண்பாடுகள் கொள்கை வித்தியாசங்களால், வளர்ந்த சூழ்நிலை வித்தியாசங்களால் இருக்கலாம்.

ஒரு சாதாரண குழாய்ச் சண்டையை இலக்கிய நிலைக்கு உயர்த்துவது அதை எழுதுபவனின் நடை, சொல்லும் விதம்,காட்சிகளை வாசிப்பவர்க்கு அறிமுகப்படுத்தும் திற்மை.நியாய அநியாயங்களை கணிக்கும் சுதந்திரம் வாசகனுக்கு தரப்பட வேண்டும்.வாசகன் இரண்டு கட்சிக்களுக்கும் இடம் இருக்கிற்து என்பதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.


இதில்தான் பல சிறு கதைகளின் தரம் போய் விடுகிறது நல்ல சிறுகதையில் பிரச்சாரம் போதனை.கிடையாது.நம் வாழ்கையில் நல்லவை கெட்டவைகள் இரண்டும் கலந்து உள்ளது.ஆதாரமாகவே மனித மன அமைப்பில் முரண்பாடு இருக்கின்றது. வாசகன் ஒரு நல்ல சிறு கதையில் ஒன்றும் போது அவன் தன் மனத்தின் ஆதாரமான முரண்பாடுகளிலேயே மறுபடி வாழ்கிறான்.


எல்லோரிடமும் ஆபாசங்களும்உன்னதங்களும் கலந்தே உள்ளது.


நல்ல சிறுகதை இது நல்லது இது கெட்டது இது கருப்பு இது வெளுப்பு என்று அடாவடித்தனமாகப் பிரிக்காது.வாசகன் மனத்தில் ஞாபக பிம்பங்கள் தோன்றலாம். பச்சாதாபம் எழலாம்.வாழ்வின் அபத்தங்கள் தெரியலாம்.அவலங்கள் அதன் சந்தோஷங்கள் தெரியலாம்.ஆனால் இவைகளைக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டியவன் எழுத்தாளன் அல்ல.

”இதோ பார் வாழ்வின் அபத்தம் இதோ பார் வாழ்வின் சந்தோஷம்” என்று விரல் நீட்டும்போது சிறுகதை தரத்தில் சரிந்துவிடுகிறது.கூடாது.


வாழ்க்கையின் தீர்ப்புகள் அவ்வளவு சுலபமானது அல்ல.


நன்றி:

”மிஸ் தமிழ்தாயே! நமஸ்காரம்!” என்ற புத்தகத்தில் எழுத்தாளர் சுஜாதா எழுதினது. “1974 ஆண்டின் சிறந்த கதைகளைப் பற்றி” என்ற கட்டுரையில்.

அந்த வருடம் அவர் தேர்ந்தெடுத்த சிறந்த சிறுகதை “தனுமை” by வண்ணதாசன்.Monday, July 6, 2009

மேஸ்ட்ரோ ராஜா.! ஒரு ஸ்டைலான பாட்டு

"தம்பி பொண்டாட்டி” என்ற படம் 1992 ஆண்டு வந்தது. ரகுமான்,”நிழல்கள்” ரவி,ரம்யா,சுகன்யா.டைரக்‌ஷன் பஞ்சு அருணாசலம்.படம் ஒடியதா? தெரியவில்லை.


.Click To View Gallery

இசை மேஸ்ட்ரோ இளையராஜா.இந்தப் படத்தில் “என் எண்ணம் எங்கே” என்ற ஒரு பாடல் உள்ளது. பாடியவர் உமா ரமணன்.இவர் பி.சுசிலா மாதிரி் குடும்ப பாங்கு குரல் வளம். Poorman"s Susila என்று சொல்லலாம்.அற்புதமான க்ம்போசிங்.


பாட்டின் பின்னணி இசை...? பாட்டை அழகு படுத்துவதில் இவருக்கு இணை யாரு?ஜீனியஸ். இசைக் கோர்ப்புகளில் எந்த வித அசட்டுத்தனம் இல்லாமல் இருக்கும்.எல்லா வாத்தியங்களின் ஒலியும் அளந்து அளந்து சிக்கனமாகத்தான் வரும். கூடக் குறைய இருக்காது.

அதன் ஊடே இனிமையையும் பின்னிக் கொண்டே வரவேண்டும்.

காஞ்சிபுரம் புடவை நெய்வது மாதிரி துல்லியமான இழை சேர்ப்புகள்.


பாடல் ஆரம்பம் வழக்கமான ராஜாவின் stlyish opening. தவழ்ந்து வரும் இனிமையான இசை.


பிறகு உமா ரமணனின் குரலில் பல்லவி.முடிந்தவுடன் ராஜாவின் innings.


முதல் interludeஇல் வாத்தியங்களிலும் வெளிப்படும் செல்லமான இசை ரகளை/கொஞ்சல்/கெஞ்சல்.மழலையான கோர்ப்புகள்.


பிறகு மீண்டும் உமா ரமணன் இனிமையான குரல்.மறுபடியும் ராஜாவின் 2nd innings.இரண்டாவது interludeல் ஊது வத்தி புகைபோல் தபலாவின் தட்டல்கள் மெதுவாக எழுந்து -புல்லாங்குழல்-வயலின் -ட்ரம்ஸ்-வீணை-கிடார் ஒன்றுகொன்று காதல் செய்தபடி மயக்கும் இசை. எல்லாம் ஒரு கான்பிரன்ஸ் காலில்(conference call) இசை உரையாடல்கள்.


இந்தப் பாட்டு கிழ்வரும் பாடல்களின் சாயல் அடிக்கும்:


1. காதல் கவிதைகள் படித்திடும் நேரம்(கோபுர வாசலிலே)
2.பூங்கதவே தாழ் திறவாய் (நிழல்கள்)
3.அல்லாவின் ஆணைப்படி (சந்திரலேகா)
4.கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா( ஆலய மணி)
5.பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்(பணம் படைத்தவன்)


ஏன்? இந்தப் பாட்டு மாயாமாளவகெளள என்ற கர்நாடக ராகத்தில் லைட்டாக தோய்த்துப் போடபட்டது என்பதாக காரணம். மற்ற நான்கு பாடல்களுக்கும் அடிப்படை இதுதான்.அதன் ஸ்வரங்கள் இருப்பதால் சாயல் அடிக்கிறது.

இளைய தலைமுறை அறிந்துக்கொள்ள வேண்டிய பாட்டு.

நன்றி:

பாடல் கேட்க:


Sunday, July 5, 2009

நித்யா -அருண்சுந்தர் - பத்து நாள் காதல்

பிளாட்பாரத்தில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக இருந்தது.பார்த்தவுடன் எரிச்சல் ஏற்பட்டது அருண்சுந்தருக்கு.வேர்வை கசகசப்பில்”ச்சே...” என்றான்.காலை 8.10 வர வேண்டிய எலக்டிரிக் டிரெயின் பதினைந்து நிமிடம் தாமதமாக வந்தது. வண்டியில் கூட்டம் முண்டியடித்தது.அடித்துப்பிடித்து ஏறினான்.


ஏறிய கம்பார்ட்மெண்ட்டில் சில கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளும் இருந்தார்கள்.கூட்டம் அதிகமாகி விட்டால் பொது கம்பார்ட்மெண்டில் பெண்கள் நிறைய பேர் பார்க்கலாம்.எல்லாம் தினமும் பிளாட்பாரத்தில் பார்க்கும் முகம்தான்.குறிப்பாக அந்த முகத்தை அடிக்கடி பார்க்கத் தோன்றியது அருண் சுந்தருக்கு.புது முகமாக இருந்தது.பிடித்தும் இருந்தது.


ஸ்டேஷனில் இறங்கி விடுவிடுவென சுரங்கபாதையின் வழி கடந்து பஸ் டெர்மினஸைஅடைந்தான். அவன் செல்லும் பஸ் இன்னும் வரவில்லை.அது ஷெட்டிலிருந்து வந்து அங்கிருந்துதான் புறப்படும். எல்லாமே இன்றைக்கு லேட்.ஆபிஸ் இன்று லேட்டாகி விடுமா?மீண்டும் எரிச்சல் ஏற்பட்டு ஆபிஸ் கவலைகளில் ஆழ்ந்தான்.இன்று முக்கியமான மீட்டிங்.போர் அடிப்பார்கள்.பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.


“எக்ஸ்கியூஸ் மி .....”

முதுகின் பின்னால் ஒரு பெண் குரல் கேட்டது.இனிமையாக இருந்தது.திரும்பிப் பார்த்தான். சிநேக பாவத்துடன் சிரித்தாள் அந்தப் பெண்.

“ பஸ் போயிடிச்சா..?

“எந்த பஸ்....”

நம்பர் சொன்னாள். அருண்சுந்தர் பயணிக்கும் பஸ்தான்.

“இல்லையே...”

“தாங்கஸ்”

”நா யூஷுவலா வேற ரூட்லதான் போவேன். இன்னிக்கு இந்த ரூட்ல ட்ரை பண்ணலாம்னுதான் இங்க வந்தேன்”

“இது பெஸ்ட் ரூட்....பிராப்ளம் அவ்வளவா இல்ல”

”வெரி நைஸ்......”


”என் பேர் நித்யா. பஸ்ட் இயர் எம்.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்கிறேன்”

கல்லூரி பெயரையும் சொன்னாள்.

”ஐ ஆம் அருண்சுந்தர்...பிரைவேட் பேங்கல வொர்க் பண்றேன்”


முகத்தில் வடிந்த வேர்வையை துடைத்துக்கொண்டாள்.
துடைத்துவுடன் வில் போல் நீண்ட அடர்த்தியான கரு நிற புருவ முடிகள் வரிசையாக சிலிர்த்து மடங்கின.பவுடருடன் இருந்த செயற்கை அழகு போய் முகத்தில் ஒரு இயற்கை களை சொட்டியது.வேர்வை ஈரஙகள் நெற்றி மற்றும் காதோர முடிகளில் படிந்து சில கற்றை முடிகள் இரு காதருகிலும் கொக்கி மாதிரி விழுந்து மேலும் களையைக் கூட்டியது. காதில் தொங்கிய டிராப்ஸ் மெதுவாக ஆடியது.தன்னை உற்றுப் பார்க்கிறான் என்று தெரிந்தவுடன் தலை கவிழ்ந்தாள். அவனும் உணர்ந்து வேறு பக்கம் பார்வையை செலுத்தினான்.

பார்த்த மாதிரி இருக்கிறதே. யோசித்தவுடன் ஞாபகம் வந்து விட்டது.தான் வந்த மின்சார வண்டியில் இந்த முகத்தைத்தான் பார்த்தான்.அப்போது அவள் புரிந்த புன்னகையை ஏற்றுக்கொண்டு பதில் புன்னகை புரிந்தேனா?அவனுக்கு ஞாபகம் இல்லை.இந்த முகத்திற்க்கு சத்தியமாகப் புன்னகைத்திருக்க வேண்டும்.புரியாதது வன்முறையாகப் பட்டது .


அந்த மின்சார ரயில் காட்சியை மனதில் கொண்டு வந்து மீண்டும் புன்னகை புரிந்தான்.பதிலுக்கு அவளும் புன்னகைத்தாள்.


எதற்கு புரிந்தாள்? யாரோ அவள் பக்கத்தில் இருந்தவர் ரொம்ப சத்தமாக ரயில்வே டிபார்மெண்ட் இயங்கும் விதத்தை தப்பு தப்பான ஆங்கிலத்தில் திட்டியதுதான் காரணம்.அதுவும் ஞாபகம் வந்தது புன்னகைத்து முடித்தவுடன்.


பஸ்ஸிலும் என்றுமில்லாத அளவு கூட்டம் ஏறியது.அவள் முன்பக்கத்தில் முண்டியடித்து சாமர்த்தியமாக ஏறிவிட்டாள்.அவனும் தொடர்ந்து ஏறி பஸ்ஸின் நடுவில் வந்து நின்று கொண்டான்.

அவள் கூட்டத்தில் இடிபடுவது பார்க்க மனசு கஷ்டப்பட்டது.
அவளுக்கு பெண்கள சீட் அருகே கொஞ்சம் இடம் செய்து அவளை தன் முன்னே நிற்க செய்தான்.

”தேங்கஸ்” என்றாள்.”இட்ஸ் ஓகே” என்று புன்னகைத்தான் அருண்.

“நா இது பெஸ்ட் ரூட்ன்னு சொன்ன முகூர்த்தம்......”

அவள் வெகுளியாகச் சிரித்தாள். வெளிப்பட்ட அழகு அவளை மீண்டும் மீண்டும் பார்க்க இழுத்தது.இதெல்லாம் யாருக்கு கிடைக்கப் போகிறது. வருத்தப்பட்டுக் கொண்டே அப்படியும் இபபடியுமாக யோசனை ஓடியது.அவளைப் பார்பதை தவிர்க்க முடியவில்லை.

அவனுடைய முகவாய் கட்டையின் நேர் கிழேதான் அவள் நின்றிருந்தாள்.நல்ல சிவப்பு.இடது கை கைப்பிடியைப் பிடித்திருந்தது. மணிக்கட்டில் வாட்ச்.அதன் டயல் காப்பிக்கொட்டை வடிவத்தில்.ரொம்பவும் கலையம்சத்தோடு ஒரு பூச்சி மாதிரி மணிக்கட்டில் ஒட்டிக்கொண்டிருந்தது.வலது கைமணிக்கட்டில் கறுப்பு வண்ணத்தில் மிகவும் மெல்லிசான மந்திரித்த கயிறு. அலை அலையாக பூனை முடிகள்.தான் ரொம்பவும் சின்ன வயதில் பார்த்த நடிகை ஷோபா மாதிரி ஜாடை.குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் கச்சிதமாக இருந்தாள்.

முடிக்கற்றைகளைப் பக்க வாட்டில் ஒதுக்கும் பாவனையில் அவனை ஒரு முறை முழுவதும் பார்த்து சிநேக பாவத்துடன் புன்முறுவல் செய்தாள்.அவனும் செய்தான்.தான் பார்ப்பதை உள்ளுக்குள் உணர்கிறாளோ.நாகரிகமாகத்தான் அவளை ரசிக்கிறேன்.இதுவும் தெரிந்துதான் இருக்கும் அவளுக்கு.அவளும் தன்னை ரசிக்கிறாளோ?

இருவரும் எதுவும் பேசாமல் மெளனமாக நின்று கொண்டே பிரயாணம் செய்தார்கள்.அருண்சுந்தருக்கு பயணம் முழுவதும் ஒரு மாதிரி விர்ர்ரென்று மேகத்தினுள் பயணிப்பது போல் பிரமை.

கண்டக்டர் “டொப்.. டொப்” என்று தட்டியபடி “டிக்கெட்..டிக்கெட்...என்றார்.

அவன் பணத்தை எடுக்கும் அதே வேளையில் அவளும் எடுத்தாள்.அவள் பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு தன் பணத்தில் இருவருக்கும் டிக்கெட் எடுத்தான்.அவள் டிக்கெட்டையும் மீதி சில்லறையைஅவளின்
சிறிதான உள்ளங்கையில் திணித்தான்.தன் செய்கைக்கு அவள் முகபாவம் மாறினால் போல் தெரியவில்லை.சாந்தமான பாவம்தான்.


அவள் நிறுத்தம் வந்ததும் முகபாவத்திலேயே வரேன் என்றாள்.அவன் குனிந்து அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.அவளுடன் அவளுடைய கல்லூரி நண்பிகள் சேர்ந்து ரோடை கிராஸ்செய்துக்
கொண்டிருந்தார்கள்.திரும்பி குனிந்து பார்த்து
கையசைத்தாள்.அவனும் கையசைத்தான்.

நித்யா அருண்சுந்தர் மெலிதாக முணுமுணுத்தப்படி ஆபிஸில் நுழைந்தான்.


மறு நாள் இருவரும் சொல்லி வைத்தார்போல் டெர்மினஸ்ஸுக்குஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து விட்டார்கள்.இருவரும் மனதிலும் வெடகம் பிடிங்கி தின்றது.இரண்டு பேரும் இருப்பதிலேயே மிக சிறப்பான உடையைதேர்ந்தெடுத்து உடுத்தியிருந்தார்கள்.அவள் டிரெண்டியான சூடிதார் மற்றும் மாட்சிங் துப்பட்டா.அவன் கண்ணேப் பட்டுவிடும் போலிருந்தது. அருண் புது ஜீன்ஸும் டீ ஷ்ர்ட்டும் அணிந்திருந்தான். கச்சிதமாக ஷேவிங் மற்றும் ஹேர் கட் செய்திருந்தான்.

அடுத்த இரண்டு நாள் கிட்ட கவனித்ததில் அவளிடம் எல்லா விஷயத்திலும் ஒரு கலை நேர்த்தி தெரிந்தது. ஒரு ஒழுங்கும் இருந்தது.நாளுக்கு நாள் அவளைப் பிடித்துக் கொண்டேயிருந்தது.
”நேத்திக்கு ஆபிஸ் லேட்டா”

“ஆமாம்..”

“உங்களுக்கு காலேஜ்...”

“லேட்தான்...”

முறுவளித்தாள்.

அடுத்து வரிசையாக வந்த நாட்களில் அழுது வடியும் அந்த பஸ் டெர்மினஸ் களை கட்ட அரம்பித்தது.அவன் முன் வந்தால் அவளுக்கு சீட் போட்டான்.அவள்முன் வந்தால் அவனுக்கு சீட் போட்டான். ஒரே (பொது)சீட்டில் பிரயாணித்தார்கள்.சில நாட்களில் ஸ்டேஷனில் காத்திருந்து உராசியபடி நடந்து பஸ் டெர்மினஸ் அடைந்தார்கள்..இளநீர் குடித்தார்கள்.வ்ழுக்கையை ஒரே மட்டையில் பகிர்ந்துக் கொண்டார்கள். கடைசி ஸ்டாப்பில் இறங்கி மறுபடியும் பஸ் ஏறி வழக்கமான ஸ்டாப்பில் இறங்கினார்கள்.

இது அது என்றில்லாமல் எல்லாவற்றையும் பேசினார்கள்.பேசிக் கொண்டே நடந்தார்கள். பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் மறக்காமல் கையசைத்தார்கள்.
சிரித்துக்கொண்டே கல்லூரிக்குள்ளும் ஆபிசிலும் நுழைந்தார்கள்.எதோ ஒரு இயக்கத்தில் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.

அருண்சுந்தரை பிடித்துத்தான் இருந்தது நித்யாவுக்கு. பழகிய நாட்களில் நாகரிகமாகத்தான் தெரிந்தான்.அவனின் நிறம் குணம் எல்லாம் ஒத்துத்தான் போயிற்று.ஜீன்ஸ் உடுத்தும் நாட்களில் அவனின் தெறிக்கும் அபரிதமான மேன்லினெஸ்.ஹேர் ஸ்டைல்.ஆண் வாசனை.அழகான மீசை.அதிரும் குரல்.வேக நடை.

ஏன் இருவரின் நீள் உயர அகலங்களும் கூட. அன்று அந்த பாஸ்ட் புட் கடையின் ஆள் உயர கண்ணாடியில் பார்த்த போது பொருந்தித்தான் வந்தது.

பத்தாவது நாள் இரவு .......

எல்லாம் சரி.ஆனால் தனைப் பற்றிய விஷயம்?சுரீர் என்றது.நித்யா தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.

எல்லாம் சரியாக இருந்தாலும் கடைசியில் தான் சொல்லப் போகும் விஷயத்தில் முகம் சுருங்கி விடுவான்.வாய் கசக்கும்.“யூ” டேர்ன் எடுத்து அடுத்த நாள் காணாமல் போய் விடுவான்.அவனுக்கு வேறொருத்தி இருப்பாள்.
நித்யாவுக்கு அடுத்த பெரிய அடி.நித்யாவுக்கு அடி வயிறு கலங்கியது.பஸ் ரூட் மாற்றி விடலாமா?

சே... சொல்லிவிட்டு பழகியிருக்க வேண்டுமோ?ஒரே சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்த அடுத்த நாளே சொல்லியிருக்கலாம்.தப்பு பண்ணிவிட்டேன்.அவனும் நெருங்கத் தொடங்குகிறான் என்று தெரிந்த அன்றாவது சொல்லி இருக்கலாம்.


அவனும் காதலிக்கிறானா?கன்பார்ம் செய்து விட்டு சொல்லலாமா? தாங்குவானா?சும்மா நட்பாகத் தெரியவில்லை.நன்றாக தெரிகிறது காதல் என்று.. நடிக்கவில்லை.Look beyond what you see! பழமொழி ஞாபகம் வந்தது. தன் வீட்டைப் பொறுத்தவரை யாரும் தடை கிடையாது. காதல் பிறகு திருமணம்.எல்லாம் ஓகே. ஆனால் என் விஷயம்?


திரும்ப திரும்ப அவன் முகம் நினைவில் வந்து அலையடித்தது.”எனக்கு அவன பிடிச்சிருக்கு....ஆனா” என்று மெலிதாய் முணுமுணுத்து வாய் பிளந்தபடி தூங்கியே போனவள் திடுக்கிட்டு காலை 2மணிக்கு எழுந்தாள்.தீர்மானித்தாள் தன் விஷ்யத்தை அவனிடம் சொல்லி விட வேண்டுமென்று.மீண்டும் தூங்கினாள்.


அடுத்த நாள்...


நித்யா தினமும் ரயிலை விட்டு இறங்கும்போதே சந்தோஷத்துடந்தான் இறங்குவாள்.டெர்மினஸ்ஸை நெருங்கும் போது ஒரு வித குதூகலம் இறக்கைக் கட்டி ஆடும்.அவனைப் பார்த்தவுடன் பிய்த்துக் கொள்ளும்.

இன்று எல்லாம் தலை கிழ்.படபடத்தபடி நடந்தாள்.மினரல் வாட்டர் குடித்தாள்.அடிக்கடி வியர்வையை துடைத்துக் கொண்டாள்.அவளுக்கே தான் ரொமப ஓவர் ஆக்டிங் பண்ணுகிறோம் என்று புரிந்துதான் இருந்தது.தவிர்க்க முடியவில்லை.

வழியில் தினமும் தென்படும் பிள்ளையார் கோவில் விபூதியை சின்னதாக இட்டு வேண்டிக்கொண்டாள்.கொஞ்சம் தெளிவானாள்.

டெர்மினஸ்ஸில் நுழைந்தாள்.அங்கு அருண்சுந்தர் இல்லை.நித்யாவிற்கு உறுத்தியது.சிறிது நேரம் கழித்து நுழைந்தான்.நடையில் வழக்கமான ”விறு விறு” இல்லை.முகத்திலும் வழக்கமான களை இல்லை.ஒரு நாள் தாடி. பழைய சட்டை பாண்ட்.

அருண் தான் நிறைய பேச வேண்டும் என்றான்.நித்யாவும் சம்மதித்தாள்.படபடப்பு கொஞ்சம் கூடியது.லீவு போட்டுவிட்டு சினிமாவுக்குப் போனார்கள்.இருவரும் ரொம்ப பேசிக்கொள்ளவில்லை.நித்யா எப்போதுப் பேசப் போகிறான என்று காத்து காத்து ஏமாந்தாள்.எல்லா இடங்களையும் சுற்றி விட்டு ஒரு இருட்டு ரெஸ்டாரெண்டில் நுழைந்தார்கள்.

”ஏன் ... இன்னிக்கி ஒரு மாதிரி டல்லடிக்கிற? ஏதாவது மேட்டர்”

“மனசு அப்செட்”

“ஏன்?”

“எங்க ஊர்காரங்க நம்ம ரெண்டு பேரையும் ஒண்ண வச்சு ஒரு இடத்தில பாத்து வீட்ல சொல்லீட்டாஙக”

“நல்லதாப் போச்சு.வீட்டுக்கு தெரிஞ்சுதானே ஆகனும் ஒரு நாள்.அதுக்கு என்ன இப்ப?”

“நம்ம மேரேஜ் பண்ண முடியுமான்னு தெரியல...”

“ஏன்...” கலக்கத்துடன் கேடடாள்

“இல்ல ஜாதி...ஸ்டேட்டஸ்... குலம், கோத்ரம் அது இதுன்னு பார்ப்பாங்க....எங்க வீட்ல”

நித்யா உள்ளுக்குள் உடைந்து போனாள்.“யூ” டேர்னுக்கு உண்டான அறிகுறிகள் தெரிந்தன. மெளனமானாள்.

அருண் தொடர்ந்தான்.

“போன பத்து நாளும் ஒரே கிக்குதான். ரொம்ப சுகம்மா இருந்தது.ஐ ரியல்லி என்ஞாய்ட்...காதல அனுபவத்துல தெரிஞ்சுகிட்டேன்.அந்த கிக் நடுவிலும் இது ஒத்து வருமான்னு ஒரு அவநம்பிக்கை நூல் ஒடிட்டே இருந்தது.ஒண்ண ரொம்ப பிடிச்சிருந்தது.அதே சமயத்துல மேரேஜ் நடந்தா சூப்பரா இருக்கும்னு வேற ஆசை ஒரு பக்கம். ஒரே குழப்பம்.எங்க ஊர்காரங்க நம்ம ரெண்டு பேரையும் ஒண்ண வச்சுப் பார்த்ததும் நல்லதாப் போச்சு.”

நித்யாவுக்கு அவன் பேசுவது கசந்து வழிந்தது. அவனை யாரோ மாதிரி பார்த்துக்கொண்டிருந்தாள்.எதுவும் பதில்
பேசவில்லை.பேசவும் பிடிக்கவில்லை.
இரண்டு நிமிடம் ஓடியது.

”ரொம்ப ரொம்ப சாரி நித்யா ....ப்ளிஸ்.....சிட்சுவேஷன புரிஞ்சுகோம்மா..உன்ன ஹ்ண்ட்ரட் பர்செண்டு பிடிச்சிருக்கு..யூ வார் அ வெரி நைஸ் வித் குட் டெம்பரமெண்ட்.யாரா இருந்தாலும் கொடுத்து வச்சுருக்கனும்,, ஆனா நம்ம கல்யாணம் நடக்காது.எனக்கு கொடுத்து வைக்கல. எங்க ஊர்காரங்க பொண்ணு ஒகேயாடிச்சு. கொடுமை என்னென்னா.....”


“கொடுமையா?”

“அவள கல்யாணம் பண்ணிடுவேன்..ஆனா நம்பளோட லவ் மெம்ரீஸ் நாலைஞ்சு வருஷம் போட்டுப் படுத்தி எடுக்கப் போவுது. நினைச்ச பயமா இருக்கு...நித்யா..”

”அப்படியா..?” நித்யா விரக்தியாக சிரித்தாள்.

“ப்ச்” என்றான் அருண்.

“ஆனா எனக்கு இந்த மெம்ரீஸ் சுகமாக இருக்கப்போகிறது..
.வாழ்க்கைல வாங்கின முதல் அடிய இந்த ரெண்டாவது அடி மறக்கச் செய்யும் கொஞ்ச வருஷத்துக்கு...”

“ ஏற்கனவே ஏதாவது காதல் தோல்வியா நித்யா?”

”என்னோட முதல் பிட்டர் எக்ஸ்பீரியன்ஸ் உனக்கு யூஸ்புல்லா இருக்கும் அருண்”

நித்யா குரலில் சோகம் இழையோடியது.

“புரியல நித்யா”

”ஜாதி, பணம் இதெல்லாம் விட ஒரு சூப்பர் காரணம் இருக்கு என்ன வேண்டாம்னு சொல்றதுக்கு அருண்”

நித்யாவின் குரலில் ஒரு அழுத்தம் இருந்தது.

“என்ன காரணம்...நித்யா ”

”நா ஒரு டைவோர்சி. மேரேஜ் ஆகி ஆறாவது மாசத்திலேயே பிரிஞ்சுட்டோம்.கருத்து வேறுபாடு.பின்னாடி டைவோர்ஸ் ஆயிடிச்சி”

அருண் அதிர்ந்து போனான்.புருவங்கள் உயர்த்தி அவளைப் பார்த்தான்.

”உனக்கா....நம்பவே முடியல...ரொம்ப சாரி......நித்யா.உங்க கிட்டேயா கருத்து வேறுபாடு ...அவன் மெண்டலா இருப்பான் போல”

நித்யா அவனையே ஆழ்ந்து பார்த்தாள். கண்களில் நீர் முட்டியது

”நித்யா .. கவலப் படாத.......பேப்பர்ல இந்த விவரத்தெல்லாம் கொடுத்தா, அதே மாதிரி அந்த சைட்லயும் ஈக்குவல மாப்பள கிடைப்பாரு...கல்யாணம் நடக்கும்....”

வாழ்க்கையில் முதல் முதலாம ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது நித்யாவிற்கு.இதற்கு முன் இப்படி சீறியதில்லை.

”நா வெயிட் பண்றேன். கல்யாணம் முடிஞ்சு நீ ஒன்னோட அன்பு பொண்டாடிய டைவோர்ஸ் பண்ணிட்டு வா....ஈக்குவல ஆயிடுவே......கல்யாணம் பண்ணிக்கலாம்.ட்வெண்டி-ட்வெண்டி மாதிரி டைவர்சி-டைவர்சி”

முற்றும்


படிக்க: உயிரோடை சிறுக‌தைப் போட்டிக் கதை (செளமியா மீனா ஒரு புடவை )