Thursday, December 30, 2010

கவிதையான வயலின்கள்...

கவிதையான வயலின்கள்.. சுட்டியை சொடுக்குக..

http://raviaditya.blogspot.com/2010/12/king-of-enchanting-violins.html

இளையராஜா- King of Enchanting Violins-1

இந்தப் பிரபஞ்சத்தில் வயலின் என்ற மேல் நாட்டு இசைக்கருவியை இந்த அளவுக்கு விதவிதமாக,கலர்கலராக, பலவித இசைக் கலவைகளில்,விதவிதமான நாதங்களில்,ராகங்களில்,வேறு இசைக்கருவிகளையும் சேர்த்து பாடலுக்கிடையே அழகுப்படுத்திக் கொடுத்தவர் மேஸ்ட்ரோ இளையராஜா மட்டும்தான் இருக்கும்.


கொஞ்சம் யோசித்தால் Violin is maestro"s delightஓ என்று படுகிறது.இது வெஸ்டர்ன் கிளாசிக்கலுக்கு ரொம்ப தோதான கருவி. இசைஞானியும் வெஸ்டர்ன் கிளாசிகல் அபிமானி. இவருடைய இசையிலும் மேற்கத்திய நாதங்கள் விரவிக் கிடக்கும்.

சாஸ்தீரிய சங்கீதத்தில் இல்லாத சுதந்திரம் திரை இசை வயலினுக்கு நிறைய உண்டு.இளையராஜா புகுந்து விளையாடி இருக்கிறார்.இதை தனியாகவும் இசைக்கலாம். கோராஸ்ஸாகவும் இசைக்கலாம். இதோடு தொடர்புடைய செல்லோ, வயோலாவும் வயலின் குடும்பத்தைச் சேர்ந்துதான்.

இதன் நாதம் இசைக்கோர்ப்புக்கு ஒத்து வருவது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இது கறிவேப்பலை மாதிரி எல்லா உணர்ச்சிகளுக்கும் தூவலாம்.

மேல் நாட்டு இசை ரசிகர்கள் யாராவது கிழே கொடுத்துள்ள வயலின் இசைத் துண்டுகள் சிலவற்றைக் கேட்டால் தமிழ் இசைத்திரைப்பாடலகள் இடையே இசைக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்பவே மாட்டார்கள்.

படம் பின்னணியிலும் நிறைய இதை இசைக்கிறார். ஏக்கம்,தனிமை,சோகம்,துக்கம் மற்றும் இனம் புரியாத ஆழ் மன உணர்ச்சிகளை கிளறுகிறது. இதயம் படத்தில் மின்னல் கீற்றாக வயலின் தீற்றல்கள் நிறைய வரும. முரளியின் காதல் ஏக்கத்தை வெளிப்படுத்தும்.

எம் எஸ்வி அவர்கள் புதிய பறவை என்ற படத்தில் “எங்கே நிம்மதி” என்ற பாட்டிற்கு 100 வயலின்கள் பயன்படுத்தி பாட்டிற்கு ஒரு களேபர உணர்ச்சிகரத்தைக் கொடுத்திருப்பார்.

பின் வரும் இசைக் கோர்ப்புகளில் வழக்கமான இனிமை,புத்திசாலித்தனம்,Professional touch,முக்கியமாக ...மிக மிக முக்கியமாக “ஆத்மா” இருக்கிறது.

அடுத்து சில (பல?)இசைக்கோர்ப்புகளில் finishing touchஐ கவனியுங்கள்!

நான் அடிக்கடி சொல்வது,இவரின் இசை நாத இணைப்புகளில் “ஒட்டு” மற்றும் “அசட்டுத்தனம்” இல்லாமல் இருக்கும்.

ஒரு கட்டத்தில் வயலின் நாதத்தை சிந்தசைசர் என்ற எலெக்ட்ரானிக் கருவியில் உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.காலத்தின் கோலம்.

 மொத்தத்தில் வயலின் தன் பிறவிப் பயனை அடைந்துவிட்டது.

பின் வரும் ஆடியோக்களில் இசைத்துளிகள் மட்டும்தான்.முழுப்பாட்டு கிடையாது. வயலின் நாதத்திற்க்கு முன்னே அல்லது பின்னே வேறு இசைக்கருவிகளின் நாதமும் வரும். காரணம் ஒரு முழுமைக்காகதான்.


எல்லாமே ஒரு பாமர ரசிகனின் பார்வையில்தான் வைக்கப்படுகிறது.தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.


இனி இசை ஜகதலப்பிரதாபன் இளையராஜாவின் mindblowing and enchanting violins.....


அன்னக்கிளி (1975) -அன்னக்கிளி உன்ன தேடுது
(முதல் படம்.வித்தியாசமான தீற்றல்கள்.ராஜாவின் இயல்பான 1.துரிதகதியில் நாதப்பின்னல் 2.பல வித இசைக்கருவி3.மேற்கத்திய இசை கலவை 4.நாதங்களை ரிபீட் செய்யாமை.அப்போதைய டிரெண்டை காப்பி அடிக்காமல் செய்த வயலின் நாதங்கள் அருமை.கிராமிய மணம் மாறாமல் மேற்கத்திய சாயல் வாசிக்கப்படுகிறது)
Violin-1-Annakiliunna.mp3

காதல் ஓவியம்(1982)-பூவில் வந்து கூடும்  
(இனிமையான தனி வயலின்)

 Violin-1-Poovilvandu.mp3

பகல் நிலவு(1985)-பூமாலையே தோள் சேரவா
(துள்ளல் கோரஸ் வயலின். 0.14 பிறகு வயலினுக்குள் நடக்கும் உரையாடல் இனிமை.நம்முடனும் உரையாடுகிறது)
Violin-1-Poomaaliye.mp3

 அஜந்தா(2007) -யாருக்கு யார் என்று
( இது தமிழ்ப் பட இசையா? 0.19 பிறகு full style)
Violin-1-Ajantha.mp3
 

டிக் டிக் டிக் (1981)-  பூ மலர்ந்திட
Violin-1-poomalarinth.mp3

கர்ஜனை(1981) - என்ன சுகமான உலகம்
(இதில் துடிப்புடன் வரும் நாதம் 0.16ல் மெதுவாக மாறி வித்தியாசமாக அமுங்குகிறது.0.34-0.45ல் வயலினுக்கு கிடார் தாளமாக இசைக்கப்படுகிறது.

அட்டகாசம்..!)
Violin-1- Ennasugamaana.mp3
 

புவனா ஒரு கேள்வி குறி(1977)-விழியிலே மலர்ந்தது 
(அப்போது பிரமிக்க வைத்த இசைக் கோர்வைகள். 1980ல்தான் தீவிரமாக கவனிக்க முடிந்தது)
 


Violin-1-Vizhiyilae.mp3
 

அலைகள் ஓய்வதில்லை(1981)-புத்தம் புது காலை
(எனக்கு மிகவும் பிடித்த இசைத் துண்டு.மிகவும் ரம்யமான வயலின்..!வயலினில் புத்தம் புது காலையை காட்டுகிறாரோ?ஆச்சரியப்படுத்துகிறார்)
Violin-1-PuthamPuthu.mp3

சூரக்கோட்டை சிங்கக் குட்டி(1983)-காளிதாசன் கண்ணதாசன்
Violin-1-Kalidasan.mp3

கிழக்கே போகும் ரயில்(1978)-பூவரசம்பூ பூத்தாச்சு
(வயலின் நாதத்தோடு பின்னால் ஒரு புல்லாங்குழல் அழகுப்படுத்துகிறது.பாஞ்சாலிக்காக தலை சுற்றும் வயலின்)

Violin-1-Poovarasum.mp3

பூந்தோட்ட காவல்காரன்(1988)-சிந்திய வெண்மனி
(உணர்ச்சிகரமான வயலின்.பாட்டின் ஹோம்லி மூடைச் சொல்கிறது ) 

Violin-1-SinthiyaVenmani-PKaval.mp3


ஜானி(1980) காற்றில் எந்தன் கீதம்
(கோரஸ் வயலின்கள் உண்டாக்கும் உணர்ச்சிகள் புதுசு.பிரமிக்க வைக்கிறது.இது ஒரு தமிழ் திரை இசைப் பாடல் இடையே வருகிறது என்று வெளியாட்கள் நம்புவார்களா?உள் ஆட்களே நம்ப மாட்டார்கள்)
Violin-1-Katrilenthen.mp3

 
அவள் அப்படித்தான்(1978) வாழ்க்கை ஓடம் செல்ல

 Violin-1-Vazhkaioodam.mp3


மெட்டி(1982) மெட்டி ஒலி
Violin-1-MettiOli.mp3

பன்னீர் புஷ்பங்கள்(1981)-ஆனந்த ராகம் கேட்கும்
(இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்.கிளாசிகல்(சிம்மேந்திர மத்யமம் ராகம்) வயலின்   பிரவாகம் எடுத்து  குறுக்கும் நெடுக்குமாக ஓடுகிறது.0.26 ஆரம்பிக்கும் வயலினை உற்றுக் கேளுங்கள் ஒரு வித வலியுடன் உரையாடுகிறது.குறுக்கே ஷெனாய்யும் வலியுடன்.கவுண்டர் பாயிண்ட்.Musical riot..! Stunning..!)
  Violin-1-Anandaraagam.mp3

 
எங்க ஊரு பாட்டுக்காரன்(1987) மதுர மாரிக்கொழுந்து
(பெண்கள் ஹ்ம்மிங்கிறகு எப்படி பதிலலிக்கிறது பாருங்கள்.இரண்டு ஹ்ம்மிங்கிற்கும் இரண்டுவிதமான வயலின் தீற்றல்கள்)
Violin-1-Madhuramari.mp3

உறவாடும் நெஞ்சம்(1976)- ஒரு நாள் உன்னோடு 
(finishing touchஐ கவனியுங்கள்.அட்டகாசம்)
Violin-1-OruNaalUnnodl.mp3

முந்தானை முடிச்சு(1983)-அந்தி வரும் நேரம் 
(இதிலும் வித்தியாசமான நாதங்கள்)
Violin-1-Andhivarum.mp3

மண் வாசனை(1985)-பொத்தி வச்ச மல்லிகைமொட்டு

Violin-1-PotthiVech.mp3

நிழல்கள்(1980)-இது ஒரு பொன்மாலைப் பொழுது
(ஞானியின் செல்லமான வெஸ்டர்ன் கிளாசிகல் தீற்றல்கள்.0.51 முடிகிறது என்று முடிவு செய்தால் 0.52-0.53 அழகான finishing touch கொடுத்து முடிக்கிறார்)
Violin-1-Ithuoruponfinal.mp3

தென்றலே என்னைத் தொடு(1985)-தென்றல் வந்து என்னை
  Violin-1-ThendlVanEnnaiThodum.mp3


ஆராதனை(1981)- இளம்பனி துளிர்விடும் நேரம்
Violin-1-Ilampanithuli.mp3

பூந்தளிர்(1979)-ஞான் ஞான் பாடனும் 
(ஓற்றை வயலின்  அதன் சம்பிரதாயமான நாதத்தில்.அற்புதமாக அமைக்கப்பட்ட 0.15-0.19.புல்லாங்குழலுடன் உரையாடல்.)
Violin-1-Jnan jnan.mp3

அவதாரம்(1995)-தென்றல் வந்து தீண்டும்போது
(உள்ளே ஊடுபாவாக போகும் வயலின் ஆத்மாவை தீண்டுகிறது)
Violin-1-Avatharam-Then.mp3


மெட்டி(1982)-சந்தக்கவிகள் பாடிடும்
(00.00-0.09/0.13-0.20/0.27-0.29/0.47-.053 விதவிதமான soulful வயலின்கள்(செல்லோ?ஆரபி ராகத்தில் கிளாசிக்கலாக ஆரம்பித்து ........பாட்டை எப்படியெல்லாம் அழகுப்படுத்துகிறது)
Violin-1-Sandakavigal.mp3

வள்ளி(1993)-என்னுள்ளே என்னுள்ளே
Violin-1-EnnulleEnnul.mp3அரங்கேற்றவேளை(1990)- ஆகாய வெண்ணிலாவே
(கானடா ராகத்தில் லீடில் ஒரு சுணுங்கியபடி தனி வயலினும் அதை தொடரும் கோரஸ்(?) வயலினும் 0.06ல் சேரும் தபலாவும் 0.20ல் மாறும் வயலின் நாதமும் அதன் உரையாடலும். அட்டகாசம்.Highly Divine!Hats of Maestro!.தபலாவை ஏன் 0.06ல் சேர்க்கிறார்?)
Violin-1-Aagayavennilave.mp3

நினைவெல்லாம் நித்யா(1982)-பனிவிழும் மலர்வனம்
(வித்தியாசமான கலவை/மணம்/உரையாடல்)

Violin-1-PaniVizhMal.mp3

.படிக்க: பகுதி-2
 
http://raviaditya.blogspot.com/2011/01/king-of-enchanting-violins-2.html

Monday, December 20, 2010

விழா/மழையே போ/சுஜாதா/மன்மத அன்பு/தீம் சாங்

சென்னையில் கிட்டத்தட்ட இரண்டு மாதமாக வானம் ஒரு மாதிரி அழுதுவடிந்துக்கொண்டிருக்கிறது.யோசித்து யோசித்து மழைத் தூறுகிறது.பெய்கிறது.அடிக்கிறது.குளிர்கிறது.ரூம்
போட்டு யோசித்து கொசுறாக வெய்யில்அடிக்கிறது.
துணிக்காயப்போட்டால் மீண்டும் தூறுகிறது.துணிகளை எடுத்தால் நின்று விடுகிறது.

வருண பகவான் சார் ஒன்னியுமே புர்ல? ஓன் பாடில  தொண்டி விழுந்து   மெர்சல் ஆயி கோபமா?
_____________________________

இப்போதெல்லாம் பாடல்கள் வெளியீட்டு விழா என்று
சேனலுக்கு சேனல் போட்டிக்கொண்டு ஒளிப்பரப்புகிறார்கள்.
வழக்கம்போல பேசுபவர்கள் பின்னால் இடுக்கு வழியே சினிமா PROக்கள் தலை நீட்டிக்கொண்டு எட்டிப்பார்க்கிறார்கள்.

பாடல்களை மக்கள் போட்டிக்கொண்டு கேட்கிறார்களா? மக்கள் கேட்பதைவிட நிறைய (வீடியோ) பார்க்கிறார்கள்.படத்தில் பாடல்களுக்கான மவுசு குறைந்துவிட்டதா? பாடல்கள் இல்லாவிட்டால் ரசிகன் என்னோவோ போல் ஆகிறான்.

மன்மதன் அன்பு பாடல் கேட்டேன்.பாடல்களை எல்லோரும் சுருதியோடு பாடுவார்கள். கமல் மட்டும் சுருதியோடு பேசுவார்.இதில் கமல் எப்படி?

கமலின் நீல வானம் பாட்டை ரசிக்க முடிகிறது.வயலின் அருமை.”பன்னீர் புஷ்பங்களே”(அவள் அப்படித்தான்) குரல் ஞாபகம் வருகிறது.ரொமாண்டிக் தலைப்பு உள்ள படத்தில் இன்னும் கூட romantic interludes கொடுத்திருக்கலாமே?
ரஹ்மான் பட பாடல் போல திடீரென்று சம்பந்தமே இல்லாமல் கோரஸ் குரல்கள் எதற்கு?
 
கமல் கவிதைப் படிக்கிறார்.”கடவுள் பாதி மிருகம் பாதி” டெம்பிளேட் குரலில்.அதை விடவில்லை.”கலவி””ஆணுறை” என்று புரட்சி செய்திருக்கிறார்.வழக்கமாக அவர் பார்ட் டைமாக செய்யும் “இந்து” மத கிண்டல்.புல் டைம்மாக செய்தால் படம் போணியாகது என்று கமலுக்குத் தெரியும்.த்ரிஷா தமிழ் பேசி புரட்சி செய்திருக்கிறார்.
_____________________________ 

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கிழே வீழ்த்தினான்.அதை சுமந்துக்கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம்  தமிழ் சினிமா சாங்குகளைப் பற்றிச் சொல்லிவிட்டு எள்ளி நகைத்து“விக்கிரமா ..  தீம் சாங் என்று  ஒன்று  காணப்படுகிறது எல்லா தமிழ் பட ஆல்பங்களிலும் . அது என்ன? அதன் தாத்பர்யம் என்ன?சொல்ல விட்டால் உன் மண்டை சுக்கு நூறாக வெடித்துவிடும்” என்றது.
_____________________________ 

உலகத்திலேயே சின்னஞ்சிறு கதை ஒன்று தான் படித்ததாக  சுஜாதா எழுதியதாக ஞாபகம்: (நினைவிலிருந்து)அது:

பிரபஞ்சமே அழிந்து  கடைசியில் ஒரே ஒரு மனிதன் சாத்திய  அறையில் கவலையுடன் சேரில் உட்கார்ந்திருக்க  கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது.

”கதவின் தாழ்ப்பாள் இறுக சாத்தப்பட்டு பூட்டப்படுகிறது” என்று இருந்தால் இன்னும் திகில் கூடும் என்று சுஜாதா எழுதி இருந்தார்.

நான் இதற்கு வைத்த முடிவு:

அவனுக்கு ஒரு SMS வருகிறது. அதில் “இன்று நாள் எப்படி? ராசிபலனுக்கு 125க்கு டயல் செய்யவும்.கட்டணம் கிடையாது”
_____________________________


 (ஆண்டாள் அல்ல மதுரை மீனாட்சி போஸ்)

பொதிகையில் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஆண்டாள் திருப்பாவை நாட்டிய நாடகம் ஒளிபரப்பினார்கள். ரொம்ப பழசு என்று நினைக்கிறேன்.பத்மா சுப்ரமணியம் குழுவினர் செய்தது.

பாடல்கள் வித்தியாசமான ராகங்களில் மற்றும் மெட்டுக்களும்.அபிநயங்களும் வித்தியாசமான பாவங்களில்.


.

Thursday, December 16, 2010

நான் -வாலி-மாலி-ஜாலி

கவிஞர் வாலி என்றதும் என் பள்ளிவயது நிகழ்வு ஒன்று உடனே ஞாபகம் வரும்.எம்ஜியார் ரசிகர் மன்ற நூலகத்தில் அவரின் கொள்கைப்பாடல்கள்,காதல்பாடல்கள்
தத்துவப்பாடல்கள் அடங்கிய பாட்டுப்புத்தகம் படித்ததுதான். அதில் எம்ஜியாருக்காக வாலி “நான்” என்று தொடங்கும் நிறைய பாடல்கள் எழுதியிருப்பார்.1. நான் காற்று வாங்க போனேன்(கலங்கரை விளக்கம்)
2.நான் ஆணையிட்டால்(எங்க வீட்டு பிள்ளை)
3.நான் பார்த்ததிலே உன்(அன்பே வா)
4.நான் உங்கள் வீட்டுப் பிள்ளை(நான் ஆணையிட்டால்)
5.நான் ஏன் பிறந்தேன் (நான் ஏன் பிறந்தேன்)
6.நான் பாடும் பாடல் (நான் ஏன் பிறந்தேன்)
7.நான் மாந்தோப்பில் (எங்க வீட்டு பிள்ளை)
8.நான் ஒரு குழந்தை நீ (படக்கோட்டி)
9.நான் அளவோடு எதையுமே ரசிப்பவன்(எங்கள் தங்கம்)
10.நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்(நான் ஆணையிட்டால்)

இவரைப் பின்பற்றி வேறு சில கவிஞர்களும்

“நான் செத்துப்பொழச்சவண்டா”
”நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்”
“நான் யார் நீ யார் தெரியார்”

என்று வேறு எழுதியதாக கேள்வி.

எதற்கு இந்த ”நான்” ???? சும்மா ஒரு ஹீரோ பில்ட் அப்தான்.”நான்”தான் உலகத்தில் நடக்கும் எல்லா அநியாங்களையும் தட்டிக்கேட்பேன்.அங்கெல்லாம்  தோன்றி துஷ்டர்களை வதைப்பேன்.என்னைவிட்டால் வேறு யாரும் கிடையாது என்கிற ஒரு ஈகோதான். வாத்தியாரின் விசிலடிச்சான் குஞ்சுகள் கிக் ஆகிவிடுவார்கள்.

“நான் உங்கள் வீட்டுப் பிள்ளை.. இது ஊரறிந்த உண்மை ” என்று பாட்டு ஆரம்பித்ததும் விசில் பறக்கும்.

அது ஒரு காலம்.இப்ப பஞ்ச் டயலாக் மாதிரி அப்போ.

வாலி நன்றாக படம் வரைவாராம்.அப்போது விகடனில் மாலி என்பவர் இருந்ததால் இவர் வாலி என்று வைத்துக்கொண்டாராம் இந்த ரங்கராஜன்.அன்று ஆரம்பித்து இன்று ”விருதகிரி” வரை still batting not out.

இவரைப் பற்றி சில ஆச்சிரியங்கள்:

1.கண்ணதாசன் கோட்டையை உடைத்து உள்ளே நுழைந்தது.
2.இவ்வளவுகோபக்காரனாக இருந்தும் இன்னும் எப்படித் தாக்குப்பிடிக்கிறார்.
3.இவர் கூட வந்தவர்கள் எல்லாம் காலாவதி ஆகியும் இவர் இன்னும் பாட்டெழுதுகிறார்.

இவர் கஷ்டப்பட்டு எழுதிய பாடல்களை கண்ணதாசன் என்று நினைத்த காலமும் உண்டு.காரணம் பாட்டில் கண்ணதாசன் பாதிப்பு.

இவர் அருமையான பாடல்கள் எழுதி இருக்கிறார். அதே சமயத்தில் வார்த்தை ஜால கவிதை காவியம் மற்றும் சில ரசிக்க முடியாத பாடல்களும்  உண்டு.

இவர் ஒரு ஆல் ரவுண்ட் கவிஞர். ”அடுத்தாத்து அம்புஜத்தப்பார்த்தேளா” “வா வாத்தியாரே ஊட்டாண்டே” “முக்காபுலா முக்காபுலா”"நிலா காயுது”எழுதினார்.

ஆளுங்கட்சிக்கு வழக்கமாக இவர் போடும் “பின் பாட்டு”ம் தாங்க முடியாத ஒன்று. ”அழகிரி நீ ஒரு ஜாங்கிரி”. காலத்தின் கோலம்.சினிமா உலகத்தின் சாமுத்திரிகா லட்சணம்.

என் உள்ளம் தொட்ட பாடல்கள்:(இசை அமைத்தவர்களுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு.

கவித்துவமான பாடல்களை நல்ல உச்சரிப்புடன் பாடகிகள்,பாடகர்கள் பாடிஉயிர்க்
கொடுத்தார்கள்.அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

1.பவழக்கொடியிலே முத்துக்கள் (பணம் படைத்தவன்)எம் எஸ் வி
2.நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி (உயர்ந்த மனிதன்)
3.நான் பாடும் பாடல் (நான் ஏன் பிறந்தேன்)சங்கர் கணேஷ்
4.புத்தன் ஏசு காந்தி பிறந்தது(சந்திரோதயம்) எம் எஸ் வி
5.நாம் ஒருவரை ஒருவர் (குமரிக்கோட்டம்)எம் எஸ் வி
6.உன்னிடம் மயங்குகிறேன்(தேன் சிந்துதே வானம்) வி.குமார்
7.அன்புள்ள மான் விழியே (குழந்தையும் தெய்வமும்)எம் எஸ் வி
8.மன்றம் வந்த தென்றலுக்கு (மெளன ராகம்) இளையராஜா
9.மெதுவா மெதுவா ஒரு (அண்ணா நகர் முதல் தெரு) சந்திரபோஸ்
10.முன்பே வா அன்பே வா (ஜில்லுனு ஒரு காதல் ) ஏ.ஆர்.ரஹ்மான்
11.ஆகாய வெண்ணிலாவே தரை மீது (அரங்கேற்ற வேளை)இளையராஜா
12.கொஞ்ச நாள் பொறு தலைவா (ஆசை) தேவா
13. என்னுள்ளே என்னுள்ளே பல (வள்ளி)இளையராஜா

இன்னும் நிறைய இருக்கிறது. என் ஞாபகத்தில் வந்ததை எழுதினேன்.

எனக்கு தெரிந்து இவர் எழுதிய இரண்டு அருமையான பக்திப் பாடல்கள் 

1.கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் (டி.எம்.எஸ்)

2. கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் (பூஷணி கல்யாண ராமான்)

பவளக்கொடியிலே முத்துக்கள் (பணம் படைத்தவன்)பாடல் வரிகள்:

பவழக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண் மயில் என்றே பேராகும்

பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல
சொல்லிய வார்த்தைப் பண்ணாகும்
காலடித்தாமரை நாலடி நகர்ந்தால்
காதலன் உள்ளம் புண்ணாகும்

இந்த காதலன் உள்ளம் புண்ணாகும்

பவழக்கொடியிலே.........

ஆடைகள் அழகை மூடியபோதும்
ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்
மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால்
வாழ்ந்திடும் காலம் நூறாகும்
இங்கு வாழ்ந்திடும் காலம் நூறாகும்

பவழக்கொடியிலே.........Wednesday, December 8, 2010

பொண்டாட்டியை தேடிய ஜொள்ளர்கள்

கூகுளிள் நிறைய பேர் பொண்டாட்டியைத் தேடுகிறார்கள். வருங்கால பொண்டாட்டியையா? இல்லை. பக்கத்துவீட்டு பொண்டாட்டியை அல்லது அடுத்த வீட்டு ஆன்டியை.பொண்டாட்டி கிடைக்கிறார்களோ இல்லையோ தேடிவிட்டுப் போகும்போது நிறைய ஹிட்ஸ்களை வாரி வழங்கிவிட்டுப் போகிறார்கள்.

கூகுள் வழங்கும் பிளாக் ஹிட் விவர statisticsல் என்னுடைய “ ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி” என்ற ஒரு அருமையான கிராமத்து செவி வழி கதை ஒன்றுக்கு all time pageview recordஆக 894 pageviews வந்திருக்கிறது.அதாவது பிளாக் ஆரம்பித்திலிருந்து இன்று வரை. இதில் 35% நேரடியாக பிளாக்கிலோ அல்லது திரட்டிகளிலோ அல்லது சுட்டிகள் மூலமாகவோ அந்த கதையைப் படித்திருப்பார்கள்.மீதி 65% “பொண்டாட்டி” என்ற குறி(?) சொல்லைப் போட்டு வந்திருக்கிறார்கள்.  நோக்கம் அதே “குறி”தான்?

இந்த 35%ல் எவ்வளவு பேர் தலைப்பைப் பார்த்து நுழைந்தார்களோ?

All time page viewவில் நான் முதுகு வலிக்க எழுதிய சிறுகதைகள் எதுவும் இல்லை.ஆனால் “ ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி” என்ற புத்தகத்திலிருந்து எடுத்தப்போட்டக் கதைக்கு இவ்வளவு ”அடிகள்”.(ஹிட்ஸ்).

இந்தக் கதையும் அடுத்தவன் பொண்டாட்டிக் கதைதான். ஆனால் வந்தவர்கள் எதிர்பார்க்கும் “கிக்” இல்லை இந்த பொண்டாட்டியில்.இலக்கியத் தரமான கிராமத்து வட்டார வழக்குக் கதை.பாவாடை தாவணி ஆறாவது இடத்தில் இருக்கிறது. டீன் ஏஜ் குறி சொல் மூலம் என் கவிதைக்கு வந்து அப்படியே ஓடிப்போய்விட்டதும் நடந்திருக்கிறது.

சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு எப்பவுமே ஹிட்ஸ் அதிகம்.அதையும் மீறி இது வந்திருக்கிறது.

சாதாரண வலைவாசிக்கே இப்படி என்றால், அசைவ பதிவுகள்,ஜோக்ஸ் எழுதும் பிரபல வலைவாசிகளுக்கு எவ்வளவு ஹிட்ஸ் வரும். 

எனக்கு நிறைய ஹிட்ஸ்களை வழங்கும் இளையராஜாவே பொண்டாட்டிக்கு அடுத்துதான் வருகிறார். எட்டு ரன் வித்தியாசம். போதாது இளையராஜா அவர்களே! இன்னும் உழைக்க வேண்டும்.

வலையில் அள்ள அள்ள குறையாமல் வித விதமாக கொட்டிக்கிடக்கிறது ஆபாச பாலியல் பக்கங்கள். இதில் “பொண்டாட்டி” தேடுவது உளவியில் ரீதியாக நேட்டிவிட்டிக்கா? (மண்ணின் மனம்).திருட்டு மாங்கவிற்கு ருசி அதிகம் என்று சொல்லுவார்கள்.

நானும் ஏன் முதல் வரியில் வரும் ஒரு ஊர்ல ஒரு புருஷன்னு தலைப்பு வைக்காமா ஏன் ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டின்னு வச்சேன்? சத்தியமாக ஹிட்டுக்கு வைக்கவில்லை.அந்த சமயத்தில் தோன்றியதுதான்.


ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி...

.

Tuesday, December 7, 2010

ஹரியுடன் நானும் பின்னே டிவி சமையலும்

சாப்பிட (மட்டும்)வாங்க:

சில நேரங்களில் டிவி சேனலை மாற்றும் போது பெண்களோ ஆண்களோ ஏதோ ஒன்றை அடுப்பில் கிளறியபடி பேசிக்கொண்டு சமையல் நிகழ்ச்சிகள் கண்ணில்படும்.பக்கத்தில் ஒரு தொகுப்பாளினி நின்றுகொண்டு “ஓகோ அப்படியா” என்றபடி அவர் செய்வதையே திருப்பி சொல்லிக்கொண்டு இருப்பார்.முடித்தவுடன் “ரொம்ப சூப்பரா இருக்கு” என்றபடி டிஷ்ஷை வாயில் போட்டபடி போஸ் கொடுப்பார்.

இது வழக்கமான வடிவம்.ஆனால் இதெல்லாம் மாறி வேறு வடிவங்களும் வந்து அடுப்பில் கிளறுகிறார்கள்.

ரூபாய் நோட்டில் இருக்கும் எல்லா மொழிகளிலும் வரும் இந்த நிகழ்ச்சிகளை ஒரு சுவராஸ்யத்திற்காக (ருசிக்காக?)பார்ப்பதுண்டு.

அவர்கள் சொல்லும் சமையல் ஐட்டங்களை பார்வையாளர்கள் எவ்வளவு பேர் செய்துபார்ப்பார்கள்? காரணம் சில சாப்பாட்டு/சிற்றுண்டி ஐட்டங்கள் பெரிய ப்ராஜெக்ட் மாதிரி போகிறது. இதில் முன்னேற்பாடுகளே பெண்டு எடுக்கும்.  அடுத்து செய்வது. அதற்கடுத்து பின்னேற்பாடுகள். உதவியாளர்கள் இல்லாமல் இதில் நுழையமுடியாது.அடுத்து டேஸ்ட்.

ஒரு தடவை ரொம்ப மெனக்கெட்டு (சைவம்) ஒன்றை செய்துப்பார்த்து சாப்பிட்ட யாருக்கும் சுத்தமாக பிடிக்காமல் ஆனால் பட்ட கஷ்டத்திற்காக (நானும் பட்டேன்)வெளியில் பிடித்தமாதிரி காட்டிக்கொண்டு வாயிலேயே ரொம்ப நேரம் மென்று கடைசியில் தண்ணீர் குடித்து உள்ளே தள்ளினோம்.

பல நேரங்களில் ஒரு டிஷ்ஷே பெயர் மாத்தி வருகிறது.நிறைய அவசர டிபன்கள் கற்றுக்கொள்ளமுடிகிறது. மாற்றுச் செய்முறைகளும் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

குடும்பத்தினர் சிலர் வழக்கமான உப்புமா,தோசை,இட்லி,பொங்கல் வகையறாக்களிலிருந்து வெளியே வர மறுப்பதால் தாய்குலங்கள் வேறு முயற்சிப்பதில்லை.

தான் தனியாக செயத புதுவித சமையல்/சிற்றுண்டி வகைகளை குடும்பத்தார்  சாப்பிட்டு மகிழ்வதைக் காண்பதும் வாழ்வில் ஒரு ருசி.

முன்னொரு காலத்தில் பாட்டி என்றொருவர் வீட்டில் இருந்தார் அவர்தான் வழிவழியாக கற்றுக்கொண்டதை விதவிதமாக சமையல் செய்வார்.அவர் எங்கே போனார்?

ஷரத்துடன் நான்: 

ஜெயா தொலைக்காட்சியில் “ஹரியுடன் நான்” என்ற பாடகர் தேர்வு நிகழ்ச்சியில் ஷரத் என்னும் மலையாள இசையமைப்பாளர் நடுவராக வருகிறார்.இவர் தன் இயல்பான நகைச்சுவையால் நிகழ்ச்சியை கலகலக்க வைக்கிறார்.

Spike ஹேர் ஸ்டைலில்(எண்ணெய் தடவி குச்சிகுச்சியாக முடிகள் மேல் நோக்கி நீட்டி இருக்கும்) வந்த பாடகரிடம் “என்ன தலைல ஷாக் அடிச்சிடிச்சா?”

" டயர்டா...?பல்லவிலேயே ரொமப நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு சரணம் வந்தீங்களே?”


அடுத்து இவர் சில சமயம் நிறைய தமிழ் சொற்களை தன் பேச்சினிடையே பயன்படுத்தி ஆச்சரியபடுத்துகிறார். “இசை ஆசிரியர்” “வியப்பா இருந்தது” “கோர்வையா” ”செவிக்கு இனிமையா”.

.

Wednesday, December 1, 2010

நந்தலாலாவும் இளையராஜவும் பின்னணியும்

படத்தை வெறும் ஜடமாக பார்த்து அதற்கு பின்னணி என்ற உயிர் கொடுத்து நம் முன் உலவ விடுவது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை.எவ்வளவு விதமான உணர்ச்சிகள் படம் முழுவதும்?

ஒரு படத்திற்கு பாடல் கம்போசிங்கை விட அந்த படத்திற்க்கு பின்னணி இசைப்பதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை என்று எல்லா இசையமைப்பாளர்களின் ஒட்டு மொத்த கருத்து.

யாராவது இறந்தால் ஷெனாயும்,போலீஸ் என்றால் ரோட்டரி ட்ரம்மில் வாசிப்பும்,காமெடின்னா கொய்ங்... கொய்ங்..,மலைப்பிரதேசம் என்றால் சிதாரும்,கோவிலில் அர்ச்சனை என்றால வீணையும், வயல் என்றால் புல்லாங்குழலும் இருந்த காலத்தில் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டார் ராஜா.

இளையராஜா பின்னணிக்கு ஒரு பரிமாணம் கொடுத்தார்.அதை ஒரு கதாபாத்திரமாக ஆக்கினார்.

கண்ணால் பார்ப்பதை காதால் உணரவும் செய்தார்.

கமல், ரஜினிக்கு விசிலடித்த ரசிகன் ராஜாவின் பின்னணிக்கும் (சி.ரோஜா.டிக் டிக் டிக்,நெ.கிள்ளாதே)விசிலடிக்க ஆரம்பித்தான்.மிக முக்கியமாக வெஸ்டர்ன் கிளாசிகள் வயலின் தீற்றல்கள் பின்னணிக்கு கொடுத்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு உணர்ச்சிகளை கொண்டு வந்தார்.


        (ஹேராம் படத்திற்கு பின்னணி)

தமிழ்திரையில் பார்த்திராத உணர்ச்சிகளை பல இசைக்கருவி கலவைகளில் இசைத்து வழியவிட்டார்.பல வித மணங்கள் கொடுத்தார்.உள்ளே ஒடும் ஆதமாவை கலைக்காமல். கலவைகள் மொன்னையாக உருத்தி  துருத்திக்
கொண்டு நாராசாரமாக இல்லாமல் மனதிற்கு இதமாக இருந்தது.

கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட படங்கள்.எத்தனை விதமான பின்னணிகள். ஒரே விதமான உணர்ச்சிகளுக்கு எத்தனைவிதமான பின்னணிகள்.அலுத்துவிடும். 

நெஞ்சத்தைக் கிள்ளாதே (1981) டைட்டில் இசை

பல வித flavour கொடுக்கப்பட்டு கடைசியில் மேஸ்ட்ரோ வெஸ்டர்ன் கிளாசிகளில் பினிஷிங் டச் (1.48-2.13) கொடுப்பார்.அலைகள் ஓய்வதில்லை(1981) பின்னணி இசைபாரதிராஜா & கோ பின்னணி டைப்புகளை ஒரு கட்டத்தில் நிறுத்தினார்.அதற்கேற்றார் போல் சினிமாக்களும் மாறியது.
மகேந்திரன்,பா.மகேந்திரா ம.ரத்னம் போன்றவர்கள் வந்தார்கள்.வருடத்திற்கு வருடம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வந்தார்.இசைக்கருவிகளும் மாறியது.

மகேந்திரன் பாலுமகேந்திரா படங்களில் பின்னணியில் அமைதியாக இருந்தார். 

ராஜாவின் பாடல்களில் பின்னணி இசைக்கான கூறுகளும் பின்னணி இசையில் பாடல்களுக்கான கூறுகளும் இருக்கும்.

இப்போது அடுத்தக்கட்டத்திற்க்கு கொஞ்சம் தாவி இருக்கிறார்.

இதை நந்தாலாலாவில் பார்க்கலாம்.இளையராஜா இதில் தன்னுடைய heart & soul போட்டிருக்கிறார்.இது ஒரு வித்தியாசமான கரு.பொதுவாகவே ராஜாவின் இசை உணர்வுகளை ஊடுரவுக்கூடியது.பின்னணியில் கசியும் உணர்ச்சிகள் வித்தியாசமானது.உலகத்தரமானது.

சில பின்னணிகள் டிரைலரில்தான் இருக்கிறது.படத்தில் இல்லை

அகி அம்மாவை ஓடி ஓடி வீடு விடாக தேடும் காட்சி(படம்)

மனதைப் பிசையும் உணர்ச்சிகளை வயலின் தீற்றிக்கொண்டே பையனை பின் தொடர்ந்து போகிறது இசை. இதன் நடுவே வரும் சிறுவனின் குரல் படுத்துகிறது. எனக்குப்பிடித்த ஒன்று.உலுக்கிவிட்டது என்று சொல்லலாம்.டிரைலர்(இதுவும் நான் ரசித்த ஒன்று).என்ன விதமான உணர்ச்சிக்கலவை? Awesome Maestro!லாங்ஷாட்டில் கார் வரும் காட்சி (டிரைலர்).ஹாலிவுட்டேயே மிஞ்சியது.


பிரயாணம் ஆரம்பிக்கிறது (நன்றி: சுரேஷ்குமார்)


பிரயாணம் தொடர்கிறது (நன்றி: சுரேஷ்குமார்)டிரைலர்அடிக்கடி படத்தில் வரும் பின்னணிமன நலகாப்பகத்தில் டாப் ஆங்கிளில் மரம் காட்டப்பட்டு படிப்படியாக காமிரா தரைக்குப்போகும் காட்சி


டிரைலர் (கருணை சுரக்கிறது)மிஸ்கின் பதைபதைப்படும் ஓடும் சீன்(டிரைலர்)


ஜிப்சி (டிரைலர்)பாட்டு

நந்தலாலா - பட விமர்சனம்

.

Sunday, November 28, 2010

நந்தலாலா - விமர்சனம்

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் பயணித்து நேற்றுதான் தியேட்டருக்கு வந்தது இந்த பயணப் படம் நந்தலாலா.

பாம்பே டு கோவா, மெட்றாஸ் டு பாண்டிச்சேரி என்று பயணத்தை மூலமாக வைத்து படங்கள் வந்தது.இதிலெல்லாம் ஒரு குறிகோளோ அர்த்தமோ இல்லாமல் ஒரு ஜாலி டிரிப் நோக்கத்தில் இருக்கும். சமீபத்தில் வந்தப் படத்தில் ஒரு குறிகோள் உண்டு.அது குவார்ட்டர் கட்டிங் அதற்காக ஒரு இரவு பயணம்.

நந்தலாலாவும் ஒரு பயணப்படம்தான்.

இதில் முன் திட்டம்,முன்பதிவு,முன்யோசனை எதுவும் இல்லாமல் குருட்டாம் போக்கில் பயணம். ஆனால் இது ஒரு வித்தியாசமான பயணம்.தொப்புள்கொடி ஊடே பயணித்து முன்பின் பார்த்திராத அம்மாவைத் தேடும் பயணம். அம்மாவைத் தேடி ஒரு ஆறு(ஏழு/) வயது பள்ளிச் சிறுவனும்,மனநிலை சரி இல்லாத ஒரு குழந்தை இளைஞனும் “அன்ன வாசல்” தாய்வாசல்”  என்று தம் தம் ஊருக்கு செல்லுகிறார்கள்.

இருவர் இடையே உள்ள அம்மா பாசத்திற்கு ஏங்கித் தவிக்கும் கெமிஸ்டரியில் நெடுஞ்சாலையில் பயணித்து கடைசியில் அந்த கிராமங்களுக்கு போய் சேருகிறார்கள். முடிவில் அம்மாவைப் பார்த்தார்களா? திரையில் பார்த்துத் தெரிந்துக்கொள்ளவும்.

இதில் வரும் அம்மாக்கள் வழக்கமான சினிமா அம்மாக்கள் அல்ல.அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை மறுக்க ஊனம்,மனநலம்,கள்ளக்காதல் இன்னபிற பல காரணங்கள்.

முன்னே மகேஷ் முத்துசாமி (காமிரா) பின்னே இளையராஜா தொடர இருவரும் ரத்தமும் சதையுமாக பயணிக்கிறார்கள்.இடையில் நிறைய விளிம்பு நிலை மனிதர்களை சந்தித்தபடி போகிறார்கள். 95% லாஜிக்கோடு பயணம்.
இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தை செதுக்கி உள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.அவரே மன நலம் சரியில்லாத இளைஞனாக பாத்திரம் ஏற்று வாழ்ந்திருக்கிறார். பாலுமகேந்திரா வசதியாக குளிர் மலைப் பிரதேசத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வது போல் இவர் பச்சை பசேல் நெடுஞ்சாலை.

இரண்டரை மணி நேர பாசங்குத்தனங்கள் மிகவும் கம்மியான குறும்படம் அல்லது பத்துப்பக்க குறுநாவல்.

முதல் காட்சியே, பள்ளி முடிந்து பல குழந்தைகளும் தத்தம் அம்மாக்களோடு வீடு திருமபிப் போக இவன் மட்டும தனக்கு அம்மா இல்லாத தாழ்வு மனப்பான்மையில் தலை குனிந்திருப்போதோடு ஆரம்பிக்கிறது. படம் முழுவதும் வசனங்களைவிட காட்சிகள்தான் பேசுகிறது.

முதலில் மெதுவாக தொடரும் பயணம் ஒரு கட்டத்தில் சூடுபிடிக்கிறது.ஒரு கட்டத்தில் சோகம் அப்ப ஆரம்பிக்கிறது.

சிறுவன் நடிக்கும் அஸ்வத்ராம் தாரே ஜமீன் பர் படத்தில் நடித்தவனாம்.மிகை இல்லாமல் முகத்தில் அம்மா வருத்தத்தோடு வாழ்த்திருக்கிறார்.பாலியல் தொழிலாளியாக வரும் ஸ்னிக்தா அகோல்கர் ஒல்லிக்குச்சியாக பொருந்திவருகிறார். ரோகிணியும் அம்மாவாக வருகிறார்.இது தவிர சில அம்மாக்கள். தோன்றும் மூன்று பெண்களும்(வேலைக்காரி/அம்மா/ஸ்னிக்தா) ஒரே மாதிரி தோற்றத்தில் இருந்து சற்று குழப்புகிறார்கள்.


இப்போது பள்ளி சிறுவன் கடத்தல் சீசன். அதனால் சிறுவன் சரியாகப் போய் சேருவானா என்று ஒரு பதைபதைப்பு உள்ளுக்குள் படம் பார்க்கும்போது ஏற்படுகிறது.

தன்னிடம் பயணிக்கும் இளைஞனை “மாமா” என்று விளிக்க ஆரம்பிப்பது ஒரு குறியீடு. தான் தேடிப்போகும் “அம்மா”வின் உடன்பிறந்தவனாக நெருங்கிப்
போவது அருமை. ஜாதிகலவரத்தில் உன் ஜாதி என்ன என்று யாரோ கேட்க இளைஞன் “மெண்டல்” என்று சொல்வதும் அருமை.
அரை படம் முழுவதும் தொளதொளப் பேண்ட்டின் இடுப்புப்பட்டையை பிடித்தப்படி இருக்க ஸ்னிக்தா சரி செய்து இடுப்பில் கயிறு கட்டிவிடுவது சூப்பர் டச். இப்படிப்பிடிக்காமல் இருந்திருந்தால் பாத்திரத்தின் லூசுத்தனம் அவ்வளவுவாக வெளிப்பட்டிருக்காதோ?டைட்டில் முதலிலேயே இசை இளையராஜா என்று போடப்படுகிறது.

இசை லாலா ராஜா.(லாலா என்றால் பெரியண்ணன் என்ற அர்த்தமும் உண்டு)இந்தப் படத்தின் ஒவ்வொரு திசுக்களுக்கும் ராஜாவின் இசை ஆக்ஸிஜன் எடுத்துச்செல்கிறது.ரொமப நாளைக்குப் பிறகு இளையராஜாவிற்கு Full Meals.
அதுவும் “அம்மா” கதை ஆச்சே “சும்மா” விடுவாரா? ஸ்டார்ட் மீயூசிக்தான்.


படத்தின் அமைதியிலும் ராஜா இருக்கிறார்.ராமாராஜன்/ராஜ்
கிரண்களுக்குத்தான்  அம்மா பாட்டு.இங்கும் எதற்கு ஸ்டிரியோ டைப் அம்மா பாட்டு. படம் முழுவதும்தான் இதேதானே ஓடுகிறது?


ஹாஸ்பிடல் சீன்/ வீடுவிடாக தன் அம்மாவைத் தேடும் சீன் ராஜா  பின்னணியில் அசத்துகிறார்.

குறைகள்:

படத்தின் நீளம்.காட்சி ஊடம்தான் சினிமா என்றாலும் அதற்காக சில இடங்களில் பாத்திரங்கள் அடைப்படை வசனம் கூட பேசாது ரோபோ மாதிரி இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்வதோடு படத்தை முடித்திருக்கலாம்.தாக்கம் இருக்கும்.

மொத்தத்தில் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் படம்.


Sunday, November 21, 2010

நான் யார்? - முல்லாவின் கதை

முல்லாவுக்கு அடிக்கடி ஞாபக மறதி வரும்.

ஒரு நாள் கடை வீதிக்கு சென்றார்.அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.ஏதேதோ பொருள்கள் வாங்கியபடி இருந்தார்கள் மக்கள்.அம்மிய கூட்டத்தில் ”தான் யார்” என்பதை மறந்துத் தொலைத்துவிட்டார்.

எப்படி தன்னை அறிந்துக்கொள்வது.தமக்கு தெரிந்த யாராவது கடை வீதியில் தென்படுகிறார்களா என்று நோட்டம் விட்டபடி இருந்தார். ஒருவரும் தென்படவில்லை.நேற்றே எல்லா பொருள்களும் வாங்கிப் போய்விட்டார்களா?

முல்லாவிற்கு ரொமப சோதனையாகப் போய்விட்டது. ஏதோ தீர்மானித்து பக்கத்தில் குதிரைக்கு கொள்ளு விற்கும் கடைக்குள் நுழைந்தார்.


கடைக்காரன் “ அய்யா.. உங்களுக்கு எவ்வளவு கொள்ளு வேண்டும்” என்று கேட்டான்.

”கடைக்காரரே நான் இப்போது உங்கள் கடைக்குள் நுழைவதைப் பார்த்தீர்களா?”

”ஆமாம், நீங்கள் வந்ததைப் பார்த்தேன்”

“ இதற்கு முன் என்னை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?”

“இல்லை”

”இல்லை என்கிறீர்கள்.ஆனால் நாந்தான்  உங்கள் கடைக்குள் வந்தேன் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்”

கடைக்காரன் முழித்தான்.

--------------------------------------------------------
ஒரு புத்தகத்தில் படித்த கதை

Saturday, November 20, 2010

கொஞ்ச தூரம்தான்....(திக் திக் திகில் கதை)

இரவு 11.48.

"சார்.. வீடு கொஞ்ச தூரம்தான் ” பிபிஓ கம்பெனி சுமோ டிரைவர்.

கீர்த்திவாசன் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்து மெதுவாக இறங்கினான்.காற்றுச் சில்லிட்டது.

டிரைவர் நமுட்டு சிரிப்பு சிரித்தபடி வண்டியை விர்ர்ரென்று ரிவர்ஸ் எடுத்துப் பறந்தான்.

கும்மிருட்டில் தட்டுதடுமாறி தெருவைப் பார்த்தான்.தவளைகளின் கோரஸ்.பெரிய பள்ளம்.ரொம்ப நீளத்திற்கு வெட்டி இருந்தார்கள். இரண்டு பக்கமும் வெட்டிய மண்.மழையில் சேரும் சகதியுமாக. தடுப்பு பலகைகள் தாறு மாறாக கிடந்தன. ஒரு பக்கம் ஜல்லி குவியல்கள்.தெருவின் முக்கால் கிலோ மீட்டர் இதே சேறும் சகதியுமாக சில இடங்களில் குப்பையும் சத்தையுமாக.

தெருவை மீண்டும் பார்த்தான். அடப்பாவி..! இது வழக்கமாக டிராப் செய்யும் இடம் அல்ல.வழக்கமான இடம் இங்கிருந்து சுற்றிப் போக வேண்டும். ஜனங்கள் இந்த வழியை அவ்வளவாக உபயோகப்படுத்துவது இல்லை.பயம் கவ்வியது.

டிரைவர் ஏன் இங்கே இறக்கிவிட்டான்?

பாக்கெட்டைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான்.ஏடிஎம்மில் எடுத்த ஆறாயிரம் ரூபாய்.பத்திரமாக இருந்தது. எடுக்கும்போது டிரைவர் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.இவன் மீது நிறைய கம்பளைண்ட் உண்டு.


அவனை சபித்துக்கொண்டே சுமாரான வெளிச்சம் தேடி காலை வைத்தான். இடது கால் பொத்தென்று சேறில் சிக்கி தடுமாறினான்.செல்போன் எகிறி பக்கத்தில் எங்கோ சொத்தென்று தண்ணீரில் விழும் சத்தம்.சே... கடவுளே என்ன கொடுமை.?இதயம் அடித்துக்கொண்டது.

ஆசுவாசுப்படுத்திக்கொண்டு வலது காலை பலமாக ஊணி இடதுகாலை இழுத்தான்.தண்ணீர் உள்ளே போய் ஷூ தொளதொளத்தது.ஒரு வழியாக காலை எடுத்து ஒரு ஒரமாக வந்தான்.

செல் போச்சே.எங்கே தேடுவது.அங்கு பெரிய பள்ளமோ?நொந்துபோனான்.டிரைவரை சும்மா விடக்கூடாது.ஆப்பு வைக்க வேண்டும்.பாஸ்டர்ட்.

ரோடின் ஓரத்தை காலால் தடவி உற்றுப்பார்த்தான்.மக்கி போன குப்பைச் சத்தைகளூம்,பீர்/விஸ்கி/ரம் பாட்டிகளும்,பிளாஸ்டிக் கப்புகளும்,பிளேட்டுகளும்,எலும்பு துண்டுகளும் நடுவே ஒரு ஆட்டின் தலையும் கிடந்தது.நாற்றம் தாங்க முடியவில்லை. அருகில் டாஸ்மாக்?

இது பாம்புகள் நடமாடும் இடம் என்று வேறு கேள்வி.நினைத்தவுடன் குலை நடுங்கியது.மெதுவாக அடிமேல் அடி வைத்து நகர பின்னால் ஒளிவட்டம் அடிக்க திரும்பிப் பார்த்தான்.தன்னை டிராப் செய்த இடத்தில் ஒரு சுமோ நின்றது. யாரோ இறங்கினார்கள். அடுத்த வினாடி ரிவர்ஸ் எடுத்து விர்ர்ரென்று பறந்தது.அதே சுமோவா?

குத்துமதிப்பாக மெதுவாக நகர்ந்தவாரே அந்த மரங்கள் சூழ்ந்த பெரிய விட்டைப்பார்த்தான்.டிம் விளக்கில் காம்பெளண்ட் அருகே ஆளின் தலை மாதிரி ஒன்று தெரிந்தது.சார்...சார்... என்று கூப்பிட்டு கையாட்டினான். உடனே அந்த தலை மறைந்தது.விளக்கும் அணைந்துவிட்டது.உண்மையிலேயே ஆளா?

டிபன் பையை கிராஸாக மாட்டிக்கொண்டான்.பாண்ட்பாக்கெட் பணத்தை கெட்டியாக பிடித்தவாறு மெதுவாக நகர்ந்தான்.

அந்த வீடும் அதை ஒட்டிய சின்ன வீடும் சொத்து தகராறில் மாட்டி பூட்டிக்கிடப்பதாக கேள்வி.”எவனுக்குமே இந்த வீடுகள் கிடையாது. பேய்க்குத்தான் பாக்கியம்” என்று இதன் உரிமையாளர் மகன்களை சபித்துவிட்டு இறந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறான்.இன்றைக்குத்தான் இதையெல்லாம் உற்றுப்பார்க்கிறான்.

சாதாரண நாளில் இதெல்லாம் என்றுமே நினைவுக்கு வந்ததில்லை.இப்போது சட் சட்டென்று வருகிறது.ஓ ஷிட்..

செல்போன் கவலை, பாம்பு பயம்,பேய் வீடு எல்லாம் போட்டு வாட்டி வதக்க பித்துப் பிடித்தாற்போல் சேற்றில் கால்வைத்து மெதுவாக அடுத்த அடி வைத்தான்.மெதுவாக தூற ஆரம்பித்து சிறிது நேரத்தில் வலுத்தது.

தட்டு தடுமாறி கொஞ்ச தூரம் நடந்ததில் கைகால்கள் விட்டுப்போய் இருந்தது.கால்கள் ஈர்ச்சிப்போய் மரக்க தொடங்கியது.நிதானித்து அடுத்த அடி வைக்க எதிரில் கருப்பாக பெரிய உருவம். அடி வயிறு கலக்கியபடி உற்றுப்பார்த்தான். எருமை மாடு படுத்திருந்தது வாலை ஆட்டியபடி.

அதை விட்டு தள்ளி மெதுவாக நடந்தபோது யாரோ கட்டையால் தட்டும் ஓசைக் கேட்டது.ரொம்ப ஈனஸ்வரத்தில் முனகும் ஓசையும் கூடவே வந்தது. தவளையின் கோரஸ்ஸில் இது அமுங்கிதான் கேட்க முடிந்தது.

சுற்றிப்பார்த்தான்.மீண்டும் அந்த வீட்டில் தலை தெரிந்தது.கற்குவியலில் மறைந்துகொண்டுப் பார்த்தான்.இப்போது இல்லை.ஆனால் ஒரு பெண் முக்காடுப் போட்டுக்கொண்டு வேகமாக உள்ளே ஓடினாள்.டிம் லைட் அணைந்தது.

மீண்டும் தட்டும் சத்தம்.ஆனால் ஓசை அங்கிருந்து வரவில்லை.மெதுவாக ஜல்லி குவியலில் ஏறி குத்து மதிப்பாக தடுப்பு கட்டையில் கால்வைத்து அந்தப்பக்கம் தாவினான்.இது கூட அந்த தலை தெரிந்த வீட்டின் டிம் லைட்டில்
பார்த்து வைத்துக்கொண்டது. மெதுவாக ஊர்ந்தான். மீண்டும் குரல்.பெண்ணின் குரல்தான்.கூடவே தண்ணீரில் கல் அல்லது சேறு விழும் சத்தம்.பயத்தில் உடம்பு உதறியது.தூரலில் தெப்பலாக நனைந்து குளிர் எடுக்க ஆரம்பித்தது.  மணி பார்த்தான். 12.45.சத்தம் நின்றிருந்தது.

வழுக்கி வழுக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.ஒரளவுக்கு பாதை சுமராக இருந்தது. அடுத்த அடி வைக்கையில் உற்றுப்பார்த்தான். பெரிய பள்ளம்.கட்டைகள்.ஜல்லி குவிப்பு. சேறு சகதி. மெதுவாக ஊர்ந்தான். மீண்டும் பெண்ணின் குரல். மீண்டும் தண்ணீரில் கல் விழும் சத்தம். இங்கு தவளைகளின் இரைச்சல் ஜாஸ்தியாக இருந்தது.

குரல் வரும் திசைப் பக்கம் போகாமல் எதிர் திசையில் கவனமாக அடிவைத்து ஜல்லி குவியிலின் மேல் நடக்க நடக்க பாதையின் போக்கு தெரிய ஆரம்பித்தது.சேறு அவ்வளவாக இல்லை. வேகமாக நடந்தான். கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஓட ஆரம்பித்தான்.பாதை சீராக இருந்தது.தன் வீட்டை நெருங்கி நின்று பின்னால் பார்த்தான்.அநத சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. ஒரே ஓட்டமாக தன் வீட்டிற்குள் ஓடினான்.

அந்த பெரிய வீட்டிற்கு எதிரே.....

மைத்ரேயி ஒரு கையால் பள்ளத்தில் தொங்கிக்கொண்டிருந்தாள். ஒரு கையால் கையில் கிடைத்த கற்களையும் சேற்றையும் குட்டையில் அடித்தும் யாரும் வர காணோம். குரல் எழுப்பியும் ஓன்றும் ஆகவில்லை.

சற்று ஆக்ரோஷத்தோடு துழாவியதில் ஒரு மக்கிப்போன கட்டைக் கிடைத்தது. கட்டையை சேற்றில் குத்தி பாலன்ஸ் செய்து மேலே எக்கினாள். வேறு ஒரு கட்டை பிடிமானம் கிடைத்தது. ஒரு எக்கு எக்கினாள்.வழுக்கியது. மீண்டும் எக்கினாள்.அப்படியே அந்தப் பக்கம் போய் விழுந்தாள். உடம்பு முழுவதும் சேறும் சகதியுமாய் அப்பி எழுந்து உட்கார முடியாமல வழுக்கியது.

சமாளித்து உட்காரும்போது காலில் தன் கைப்பைத் தட்டுப்பட்டது.மகிழ்ச்சியோடு ஜிப்பைத் திறந்து செல்லை எடுத்தாள். நிறைய மிஸ்டு கால்கள். போன் செய்தாள்.

பெரிய வீட்டின் டிம் லைட் எரிந்தது. ஒரு மத்திய வயதில் ஒரு ஆணும் பெண்ணும் ஓடி வந்தார்கள்.

“ஓ ....அப்பா... ஓ அம்மா... நா இங்க இருக்கேன். டார்ச் கொண்டாங்க..” மைத்ரேயி தொண்டை வறள கமறினாள்.குளிரில் உடம்பு வெடவெடத்தது.

கொண்டு வந்து டார்ச் அடித்தார்கள். அதே வெளிச்சத்தில் பாதையை தொடர்ந்து மெதுவாக தட்டுத் தடுமாறி வீட்டை அடைந்தாள்..அம்மாவைக்கட்டிக்கொண்டாள். அப்பா அவளைப் பார்த்து அதிர்ச்சியானர்.

”ஏண்டி கண்ணு இப்படி? என்னடா காணலயேன்னு நானும் இவளும்  மூணு நாலு தடவ வெளில வந்துப்பாத்துட்டு போயிட்டோம்.”உள்ளே போனார்கள்.

“கரெக்ட் டைம்முக்கு வந்துட்டேம்மா.சேறு வழுக்கி அந்த பள்ளத்துல விழுந்துட்டேன்.அதிலேயே தொங்கிட்டு கத்தினேன்.கல்ல தண்ணீர்ல போட்டுசத்தம் ஏற்படுத்தினேன். யாரோ கிட்ட வர மாதிரி இருந்துச்சு. ஆனா அப்புறம் ஒண்ணும் கேட்கல.ஒரு வழியா வெளிவந்துடேன்.தைரியமும் வில் பவரும்தான் ரீசன்.”

”முதல்ல இந்த பிபிஓ வேலய உட்டு வேற வேலய பாரு.அடிவயத்துல புலிய கரைக்குர டென்ஷன் தாங்க முடியல”  அம்மா.

                                  முற்றும்

Wednesday, November 17, 2010

ஐ லவ் யூ கீதாலஷ்மி

”சாயந்தரம் மூணு மணிக்கு ப்ரோகிராம் ஆரம்பிக்கும்.
மறக்காத வந்துரு.சும்மா பேசி அசத்து”சித்தார்த்

”ஓகேடா..கிளம்பிட்டு இருக்கேன்.கட்டாயமா வரேன்.”அரவிந்த்.

அரவிந்த் அழைப்பை கட் செய்து முடித்து அடுத்த நிமிடத்தில் மீண்டும் அழைப்பு.மீண்டும் நண்பன் சித்தார்த்.

“டேய் மன்மதா.. நிறைய பொண்ணுங்க கலந்துக்கிற டாக்‌ஷோ.மிஸ் பண்ணாத”

“ஓகே.. ஓகே...” கட் செய்துவிட்டு மெலிதாகப் புன்னகைத்தான்.

“என்னாடா ஒரே ஸ்மைலியாக இருக்க..” அரவிந்த் அம்மா

” நான் மன்மதனாம்”

“ஆமாண்டா.இன்னிக்கு இந்த புது ஷர்ட்டும் பேண்டும்.ஒரு தூக்கு தூக்குது வழக்கத்தவிட”

கண்ணாடியில் பார்த்தான்.உடை கச்சிதமாக பொருந்தி வந்தது.அப்பாவைப் போல் அகல தோள்கள்.அதே உயரம்.சட்டையை மீறி வெளியே துருத்திக்
கொண்டிருக்கும் முடி.அடர்த்தி மீசை.ஆண்தனமான முகம்.அதிரும் மெட்டாலிக் குரல்.

இந்தத் தோற்றத்திற்காகவே கல்லூரி காலத்தில் நிறைய பெண்கள் துரத்தினார்கள்.புன்னகையுடன் எல்லோரையும் கடந்தான்.இதற்காகவே மிச்சம் மீதி பெண்களும் துரத்தினார்கள்.தலையில் எந்தவித கீரிடமோ குறுகுறுப்போ இல்லாமல்தான் கடந்தான்.

எதற்காக துரத்தினார்களோ அதில் இவனுக்கு ஆர்வமில்லை.பட்டுக்கொண்டதும் இல்லை.தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றபடி இருந்தான்.அவனை அப்நார்மல் என்றார்கள்.படிப்பில் ரொம்ப கவனமாக இருந்தான்.உண்மையாகவே ஒரு மாணவனாக படிக்கவும் செய்தான்.

கடைசிவரை அதே புன்னகையுடன் எல்லா பெண்களையும் கடந்து கல்லூரிக்கு வெளியே வந்து நல்ல சம்பளத்தில் வேலையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
__________________________________

சித்தார்த் அழைத்த இடத்தை நோக்கி காரை செலுத்தினான்.

காலரி போல் இருந்த இடத்தில் உட்கார்ந்தான்.டாக் ஷோ ஆரம்பிக்க நிறைய நேரம் இருந்தது.உள்ளே நுழைந்த கீதாலஷ்மியும் இவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.ஹலோ சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

முதல் பார்வையிலேயே அவனை ரொம்ப பிடித்துப்போனதும் நெருங்கி உடகார்ந்தாள். வலிய பேசினாலும் அவன் ஒரிரு வார்த்தைகள்தான் பேசினான்.வந்திருந்த ஆண்களும் பெண்களும் இவர்களேயே அடிக்கடிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அதையும் பாக்கியமாக ரசித்தாள்.

டாக் ஷோ ஆரம்பித்தது.தன் சைடு வாதங்களை அருமையாக பேசினான்.இவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது கீதாவுக்குப் பெருமை பிடிபடவில்லை. கைத்தட்டல் வாங்கும்போதெல்லாம் அவள் இவனின் உள்ளங்கையால் தன் உள்ளங்கையால் தட்டினாள்.

நேரம் கூட கூட வாதங்களும் பிரதிவாதங்களும் பெரிதான சிரிப்புக்களும் கைத்தட்டல்களும் கத்தல்களும் காதில் விழாமல் சுருங்கி ஒரு புள்ளியாக கீதாலஷ்மி அரவிந்தை காதலிக்கத் தொடங்கினாள்.அவனின் உடல் மொழியும் தனக்கு இணையாக இருப்பதாக நினைத்து மீண்டும் பூரித்தாள்.

டாக் ஷோ முடிந்ததும் அதே பூரிப்பில்......

“ ஏய் அரவிந்த்.நாம ஜெயிச்சத கொண்டாடலாம். ஹாவ் டின்னர் அண்ட் கோ” ரொம்ப உரிமையாக.

”சாரி... கீதாலஷ்மி..இன்னொரு நாள். பட் ஐ ஹேட் வெரி நைஸ் டைம் வித் யூ”

பல வருடங்களுக்குப் பிறகு முதன்முதலாக தன் முழுப்பெயரைச் சொல்லி அரவிந்த்துதான் கூப்பிடுகிறான்.அதில் திளைத்துக்கொண்டிருந்தபோது அவன் கிளம்பிவிட்டான்.”பை” சொன்னது கூட காதில் விழவில்லை.

அப்படி கூப்பிடாமல் இருந்திருந்தால் தான் விடாப்பிடியாக அவனை அழைத்திருப்பேன்.யோசித்தப்படி காரை ஸ்டார்ட் செய்தாள்.டாக்‌ஷோவில் கலந்துகொண்டதை பெரும் பாக்கியமாக கருதினாள்.
_______________

அடுத்த ஒரு வாரத்தில் அவளிடமிருந்து நிறைய குறுஞ்செய்திகளும் மறைமுகமாக காதல் வாழ்த்து அட்டைகளும் நேர் பேச்சுகளும் அரவிந்தைத் தாக்கியபடி இருந்தது.எல்லாவற்றையும் புன்னகையுடன் கடந்தான்.இவனை எதுவும் பாதித்ததாக தெரியவில்லை.

அவனிமிருந்து ஒரு மறு காதல் மறுமொழியும் இல்லை இருந்தாலும் எல்லாம் பொதுவாக இருந்தது.

கீதாலஷ்மியும் ஒன்றும் புரியாமல் தவித்தாள். காதலிக்கப்படுவதற்கு  இவ்வளவு கஷ்டபடவேண்டியது புது அனுபவமாக இருந்து ஹிம்சையானாள்.வெளியேறுவது எப்படி என்று புரியாமல் முழித்தாள்.ஏன் அந்த டாக் ஷோக்கு போனோம் என்று முதல் முதலாக நொந்துக்கொண்டாள்.

இதற்கிடையில் ஒரு ப்ராஜெக்ட்டுக்காக பிரான்ஸ் சென்றாள்.இவளின் குறுஞ்செய்திகளும் மறைமுகமாக காதல் வாழ்த்து அட்டைகளும் நேர் பேச்சுகளும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.ஆனால் முன்போல அவ்வளவு  தீவிரம் இல்லை.குறையவும் செய்தது.அவனும் அதே சமயத்தில் அவன் ஆபீஸ் விஷயமாக வெளிநாடு சென்றான்.

கிட்டத்தட்ட நான்குமாத இடைவெளிக்கு பிறகு ஒரு நாள்---------

“அரவிந்த் ..திஸ் இஸ் கீதா... கீதாலஷ்மி. எப்படி இருக்கே?”

“ நல்லா இருக்கேன். கீதாலஷ்மி. நீ?”

“நல்லா இருக்கேன். இப்போ பெங்களூரு ஷிப்ட் ஆயிட்டேன். இப்ப சென்னைல ஒரு ஹோட்டல்ல தங்கி இருக்கேன்.நான் உங்கிட்ட பேசனும். தி இஸ் அபொட் மை மேரேஜ்”

“வாழ்த்துக்கள் கீதா..”

“தாங்கஸ்.நேர்ல வா.. சொல்றேன்.கட்டாயம் வந்தே ஆகணும்”

கீதாலஷ்மிக்கு விரைவில் திருமணம்! போனை வைத்தவுடன் மனசு கனத்தது.வழக்கமான புன்னகை எங்கே போயிற்று? பார்த்தே ஆக வேண்டும் என்று மனசு வாட்டி எடுத்தது.

ஜிஆர்டி கிராண்ட் டேய்ஸ். ரூம் நம்பர் 218..

”எஸ் அரவிந்த்.. கம் இன்”  உள்ளே நுழைந்தான்.

“இஸ் இட் ஓகே” தன் உடையைக் காட்டிக் கேட்டாள்.

” நோ பிராபளம்” என்று சொல்லி கையில் கொண்டுவந்திருந்த பூங்கொத்தைக் கொடுத்து”வாழ்த்துக்கள்” என்றான்.பதிலுக்கு சிரித்து வாங்கிக்கொண்டாள்.

முதன்முதலாக அவளை உற்று நோக்குகிறான்.

லூசான கட்டம் போட்ட டி ஷர்ட்டும் அதன் கிழே தொளதொள பேண்டும் அணிந்து பளிச்சென்று இருந்தாள்.கையில் ஏதோ பேஷன் வளையல்கள். ஒரு காலில் மட்டும் மெல்லிதான கொலுசு.காலில் ரூம் செருப்பு.இருந்தாலும் கண்ணியமான தோற்றம்.


நடக்கப்போகும் அவளின் திருமணத்தை விவரத்தைப் பற்றி ரொம்ப சந்தோஷமாக சொன்னாள்.கணவன் அவர்கள் குடும்ப போட்டோக்கள் எல்லாவற்றையும் காட்டினாள்.


அவள் தன் பின்னணி படித்த காலேஜ் குடும்பம் எல்லாவற்றையும் முதல்முறையாகப் பகிர்ந்துக்கொண்டாள்.பிரான்ஸ் பற்றி விவரித்தாள்.தன் பல வித போட்டோக்களை காட்டி நிறைய ஜோக் அடித்தாள். பேச்சில் நேர்மை இருந்தது.விகல்பம் இல்லாமல் பேசினாள்.நிறைய சிரித்தாள்.தன் காதல் தோற்றதுப்பற்றி முகத்திலோ பேச்சிலோ எந்தவித தடயமும் இல்லை,

இதையெல்லாம் இவ்வளவு நாள் கவனிக்க தவறியது மனதை ரணமாக்கியது.

பேச்சின் இடையே தான் அடிக்கடி உதிர்த்த வழக்கமான புன்னகைகள் கூட அதன் வீரியத்தை இழந்துவிட்டதாக நினைத்தான்.

பேச்சின் முடிந்து கிளம்பும்போது அவளை ரொம்ப பிடித்துப்போயிருந்தது. மனதிற்குள் சொல்லிக்கொண்டான் -

“ஐ லவ் யூ கீதாலஷ்மி”


                        முற்றும்


---

Sunday, November 14, 2010

மொட்டை மாடி - கவிதை
படம் நன்றி:http://anandvinay1.blogspot.com/2010/11/blog-post.html

எல்லா
மொட்டை மாடிகளும்
பிரபஞ்சத்திற்கு
அருகில்தான் இருக்கிறது

இரவில்
ரொம்பவும் அருகே
வந்துவிடுகிறது
படுத்துக்கொண்டுப் பார்த்தால்
கைக்கெட்டிய தூரம்தான்

அருகில் இருக்கும் வசதியால்
மேகங்களில் தெரியும்
காதலிகளுடன் பேசுவதற்கு
மொட்டை மாடியோடு
பிரபஞ்சத்தையும்
நகர்த்தி இருக்கிறேன்

கடவுள் முகம் சுளிக்கி இருக்கிறார்

எதிர்படும் பித்ருக்களை
வடாம் துணி போர்த்தி
சமாளித்திருக்கிறேன்

எங்கெங்கோ
அலைந்துத் திரிந்து
இடம் கிடைக்காமல்
லேசாக தூறல் போடஆரம்பித்து
காதலியும் தொலைந்து
பிரபஞ்சமும் தொலைந்து
மீண்டும் மொட்டை மாடிக்கே
வந்துவிட்டேன் கையில்
வடாம் துணியுடன்-------

Friday, November 12, 2010

இளையராஜா- King of Musical Call & Response

இளையராஜாவின் பாடல்களில் நுனி முதல் அடிவரை எங்கும் அழகுணர்ச்சி மிளிரும்.அதில் ஒரு துளியைத் தொட்டு நாக்கில் வைத்தால் இனிக்கும்.அதில் ஒன்றுதான் Call & Response

இது ஒரு வகை இசைக்கோர்பு.தமிழில் மொழிபெயர்த்தால் அழைப்பும் மறுமொழியும் அதாவது இசைஅழைப்பு அதற்கு இசையிலேயே மறுமொழி.இந்த அழைப்பு & மறுமொழி பல்லவி-1, சரணம்-1,பல்லவி-2, சரணம்-2,Interlude-1,Interlude-2 எங்கு வேண்டுமானாலும் வரலாம்.

இது மேஸ்ட்ரோவே நினைத்து செய்ததா என்று கேட்டால் என்னிடம் பதில் கிடையாது.இசையின் ஒரு வகையா? தெரியாது.

இதை ஒரு வகை ரசனையாக உள்வாங்கி இசையை ரசித்தால் வரும் அனுபவம் புதுமை. 

இதை நான் தெரிந்துகொண்டது எப்படி?

கானடா வாழும் இளையராஜாவின் தீவிர ரசிகர் திரு ரவி நடராஜன் அவர்களின்http://geniusraja.blogspot.com/  பதிவில் காணப்பட்டது.அவர் இசை ஆராய்ச்சி விஞ்ஞானி லெவலுக்கு ராஜாவின் இசையை அலசி ஆராய்கிறார். அவர் இந்த மாதிரி நாதத்துளிகளை இப்படித்தான் குறிப்பிட்டிருந்தார்.

அவர் சொன்னதை வைத்து கிழே உள்ளே இசைத்துளிகளைக் கேட்ட போது சரியாக பொருந்தி வந்தது. அவர் சொன்னதை ஒரு பாமர ரசிகனாக உள் வாங்கிக்கொண்டு இப்பதிவைத் தொடர்கிறேன்.


நண்பர் ரவி நடராஜனுக்கு நன்றிகள் கோடி.

கிழே கொடுத்த பாட்டின் உதாரணங்கள் என்னுடைய சொந்த தேர்வுகளே.இதற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த பிரபஞ்சத்தில் முதல் முதலாக இந்த நாத அழைப்பு/மறுமொழியை இசைத்தவர்கள் யார்? காட்டுவாழ் மிருகங்கள்தான்.முக்கியமாக பறவைகள்.

அதன் கூவல்கள் எதிர் கூவல்கள்தான், எல்லா இசை மேதைகளுக்கும் பின்புலம் என்பது என் யூகம்.இந்த கூவல்கள் முக்கியமாக காதல் செய்ய கூவப்படுகிறது.

ஆனால் நவீனத்தில்மனித உணர்வு ஆலாபனைகளும் அதற்கு மறுமொழியாக இசைக்கருவிகளின் ஆலாபனைகளும் இசைக்கப்படுகிறது.
அதைக் காதால் கேட்போம்.

உதாரணம் -1

ஏ... மச்சான...!(அன்னக்கிளி-1975) என்று ஜானகி ஆலாபித்து
(call ) முடிந்தவுடன் புல்லாங்குழலில் வழியும் நாத மறுமொழி(response).கடைசியில் வரும் அழைப்பு ”மச்சானப் பார்த்தீங்களா” இதற்கு வரும் புல்லாங்குழல் மறுமொழி குறும்புத்தனமாக.
CR Machanapaarthinka.mp3

உதாரணம் -2  

பாடும் வானம்பாடி....ஆ..(நான் பாடும் பாடல்1984)என்று எஸ்பிபி இதமாக அழைக்க(call ) அதற்கு வீணையில் மறுமொழி (response) செல்லம் கொஞ்சியபடி வருகிறது.
CRPaadumVanamPaadi.mp3

ராஜாவின் தனித்தன்மை என்ன? மாத்தி யோசி கான்செப்ட்தான்.
That"s all folks. Now let"s start  diving   in Maestros"  call & response நாத வெள்ளம்


கீரவாணி...(பாடும் பறவைகள்).இரவிலே... பகலிலே... பாடவா நீ. ஒவ்வொன்றுக்கும் உடனடி ரெஸ்பான்ஸ் சிதாரில்(??.துறுதுறுவென ரொம்ப சுட்டித்தனம் நிறைந்தது.
CRKeeravani.mp3

ஆற்றில் ஓடம் செல்ல(அவள் அப்படித்தான்-1978).எனக்குத் தெரிந்து இந்திய திரை இசையில் இது மாதிரி கேட்டதில்லை.பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ!High voltage emotion!
CRVazhaioodam.mp3

பூந்தளிர் ஆட (பன்னீர் புஷ்பங்கள்-1981).எஸ்பிபி ரொமப குழைந்து அழைக்கிறார்.உற்றுகேளுங்கள்.ரெண்டுவிதமான ஹம்மிங் ரெஸ்பான்ஸ்.பாட்டிலேயே ஐந்துவிதமான ஹம்மிங் வரும்.மாத்தியோசி.
CRPoonAada.mp3

நீ பாதி நான் பாதி...(கேளடி கண்மனி-1990).அருமை.
CRNeePathi.mp3


தென்றல் வந்து என்னை(ஒரு ஓடை நதியாகிறது-1983.
CRThendralEnnai-Oru oodai.mp3

ராக்கம்மா கையத்தட்டு(தளபதி-1991).எஸ்.பி.பி. நாலு அழைப்பு அதற்கு நாலு மறுமொழி.3ம்4ம் இசைக்கருவிகள்+மனிதகுரல் சேர்ந்து வருகிறது.ஆனால் இதிலேயே குரல்கள்(3,4) வித்தியாசமாக வருகிறது. இது சுவர்ணலதாவுக்கும் ரிப்பீட் ஆகிறது.5வதுக்கு மெல்லிய வேறு மறுமொழி.
CRRakkam.mp3

உறவுகள் தொடர்கதை.....(அவள் அப்படித்தான்-1978)
CR Uravugal.mp3


பள்ளியறைக்குள் மல்லிகையை(பால நாகம்மா-1981)
CRPalliyarikkul.mp3


நான ஏரிக்கரை மேலிருந்து (சின்னத்தாயி-1992).புல்லாங்குழல் ரொம்ப stylishஆக இசைக்கப்படுகிறது.ரம்யம்.
CRNaanYerikarai.mp3

உன்னவிட உலகத்தில யாரு(விருமாண்டி-2004)இதில் வரும் 0.16-0.19 அன்ட் 0.36-0.39 மறுமொழி எமோஷன் stunning!
CROnnaVida.mp3

இது ஒரு பொன் மாலைப் பொழுது(நிழல்கள்-1980).இதில் வரும் புல்லாங்குழல் மறுமொழி தெரியாதவர் தமிழ்நாட்டில் யாராவது உண்டா?
CRlIthuOruPon.mp3

வனிதாமணி(விக்ரம்-1986).கிடார் தீற்றல்கள் சம்பிராதயமாக இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது.
CRVanithaMani.mp3

கலகலக்கும் மணியோசை(ஈரமான ரோஜாவே-1991)
CRKalaKalakkum.mp3

நீ பார்த்தப் பார்வைக்கொரு நன்றி(ஹேராம்-2000).

இதில் அழைப்புக்கும் மறுமொழிக்கும் இருக்கும் கெமிஸ்டரி made for each other.0.20-0.28 இசையை கவனியுங்கள்.புல்லாங்குழலோடு பினைந்துவரும்  ஹம்மிங்கில் ஒரு விகிதம் இருக்கிறது.நான்கு ஹம்மிங். இதில் மூன்று மென்மை ஒரு பினிஷிங் ஹம்மிங்(3:1).கவிதை.

பிரமிக்கவைக்கிறார் இசைஞானி.பாட்டைக் கேட்க கூடாது.உள்ளே குதித்து ஆழ் நீச்சல் அடிக்கவேண்டும்.You have to live with the song.
CRNeepaartha.mp3

வா வா பக்கம் வா(தங்கமகன்-1983)
CRVaVaPa.mp3

சின்ன ராசாவே சித்தெறும்பு உன்ன(வால்டர் வெற்றிவேல்-1993).இது ஒரு freakout response.அஜால் குஜால்.
CRChinna Raasave.mp3

தெய்வீக ராகம் தெவிட்டாத(உல்லாசப் பறவைகள்-1980)
CRDeivigaRagam.mp3

மீட்டாத வீணை (பூந்தோட்டம்-1998).(கிடாரில் கவிதை மறுமொழி.ரித கெளள ராக சுவரங்கள் தெறிக்கிறது.
CRVarudal-MeetVeenai-Poon.mp3

Tuesday, November 9, 2010

குடைக்குள்ளும் வெளியிலும் சில கவிதைகள்


சில குடைகள்
மழைக்குப் பிடிக்கப்படாமலேயே
பார்மசிகளிலும்
ஊத்துகுளி வெண்ணைக் கடைகளிலும்
காபிப்பொடி கடைகளிலும்
பட்டாணி கடைகளிலும்
சாத்திவைத்தபடி
மறதியில் தொலைந்துவிடுகிறது
____________________________________

மழை பெய்யும் இரவுகளில்
யாருக்கோ எப்பொழுதோ
கொடுக்க இருந்த 
காதல் கடிதங்கள் 
நனைந்துவிடுகிறது
பிழிந்துவிட்டு மீண்டும்
எல்லாவற்றையும் எழுதுகிறேன்
____________________________________

இப்போதெல்லாம்
எந்த பூகோள டீச்சரும்
வெய்யிலுக்கு குடை
பிடித்தப்படி பள்ளிக்கு
வருவதே இல்லை
____________________________________

குடையைப்
பிரிப்பதற்கு முன்
சட்டென மழைப் பெய்துவிட
வேண்டாம்
நனைந்த பிறகு
விரித்த குடையின்
தெறிக்க போகும் சாரலில்
இருக்கும் கவிதையை
ரசிக்க முடிவதில்லை
____________________________________


பாட்டிகளுக்குக்
குடையே கிடையாது
எல்லாம் தாத்தா குடைகள்தான்
e

Monday, November 8, 2010

குறும்பட விமர்சனம்-7-11-10-கலைஞர் டிவி

கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர்  நிகழ்ச்சியில் இந்தவாரமும் கல்லூரிக் கதைகள்.

ஒவ்வொரு குறும்பட முடிவிலும் நடுவர் பிரதாப்போத்தன் என்ன சொல்லி கிழிக்கப் போகிறார் என்ற பீதி இயக்குனரின் முகத்தில் தென்படுவது சுவராஸ்யம்.

குறும்படங்கள் ஒன்றுக்கொன்று சவாலானதாக இருப்பது வரவர குறைந்துவிட்டது.

போனவாரம் 31-10-10


படம்:Samaritan இயக்குனர்: தீபன்

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை என்று தலைப்பில் போடப்படுகிறது.

கல்லூரி மெஸ்ஸில் வேலை செய்யும் ஒரு இளைஞன் தன் சுய முயற்சியால் படித்து பட்டம் வாங்கினவன்.தன் அப்பாவிற்கும் படிப்பு சொல்லிக்கொடுத்தவன். அதே மாதிரி ஏழைகள் முதியோர்களுக்கு படிப்புச்சொல்லித்தர ரொம்ப ஆர்வமாக இருக்கிறான்.முதலில் கல்லூரி மாணவர்களுக்கு கிளாஸ் எடுக்கிறான்.அவனுடைய ஆர்வப்பொறி அந்த கல்லூரி மாணவர்களுக்கும் பற்றிக்கொள்கிறது.அவர்கள் முதியோர் மற்றும் ஏழைகளுக்கு கல்வி கற்றுத் தர தொடங்குகிறார்கள்.கல்லூரி நிர்வாகம் சந்தோஷப்படுகிறது.

அந்த பையனுக்கு Good Samaritan விருது வழங்கப்படுகிறது.

அருமையான படபிடிப்பு.உறுத்தாத நடிப்பு.கல்லூரி வாழ்க்கையில் பாசிட்டீவ் எண்ணங்கள்.வாழ்த்துக்கள்!

கதை?ஆவணப்படம்?

மாணவர்கள் ஏழைகளுக்கு படிப்பறிவு கொடுப்பதை முதலில் காட்டி இந்தப் பொறி இவனிமிருந்துதான் வந்தது என்று கடைசியில் மெஸ் பையனைக் காட்டி இருக்கலாமோ?

Good Samaritan என்பவர்  கஷ்டத்தில் இருக்கும் முன்பின் தெரியாத ஒருவருக்கு தன்னிச்சையாக உதவி புரிபவர்.இதில் சுயநலம் கிடையாது.இது பைபிளில் வருகிறது.

ஆனால் இந்தக் கதைக்கு இந்த டைட்டில் பொருந்தவில்லையே?

படம்:என் இனிய பொன் நிலவே இயக்குனர்:அருண் ராஜா காமராஜ்

அரசு பள்ளியில் தமிழ் மீடியம் படித்த திக்குவாய் பிரச்சனை உள்ள ஒரு இளைஞன் கல்லூரியில் சேருகிறான்.பாடங்கள் புரியவில்லை.ஆசிரியர்கள் பேசும் ஆங்கிலத்தைப் பின்பற்ற முடியவில்லை.படிப்பு ஏறவில்லை  என்ற தாழ்வு மனப்பான்மை அவனை குடிக்கொள்கிறது.

அதற்காக தினமும் படிப்பதற்க்கு கல்லூரி நூலகத்திற்க்குச் செல்கிறான். அங்கு ஒரு அழகான பெண்ணை சந்திக்கிறான்.தேவதை மாதிரி இருக்கிறாள்.
அவளும் அவனிடம்  தினமும் பேசுகிறாள்.படிப்பு வரா விட்டாலும் காதல் வந்துவிடுகிறது.

அவள் உடுத்தும் உடைகள் சரோஜா தேவி காலத்து  உடைகள்.ஏன் என்று புரியவில்லை.

தன் காதலை ஒரு நாள் அவளிடம் சொல்கிறான்.அவள் சிரிக்கிறாள்.தனக்கு குறை இருப்பதால்தான் அவள் காதலிக்க விரும்பவில்லை என்று உரக்கச் சொல்கிறான்.அவள் மறுபடியும் சிரிக்கிறாள்.அப்போது நூலக மேலாளர் “என்னப்பா தனியா பேசிட்டு இருக்கே” என்று கேட்க.” சார்.. இங்க ஒரு பொண்ணு இருக்காங்களே..” என்று சொல்ல மேலாளர் அதிர்கிறார்.

இப்போது நூலகம் இருக்கும் இடத்தில் 40 வருடத்திற்கு முன்பு ஒரு மருத்துவமனை இருந்ததாகவும் நூலக இடத்தில் மார்சுவரி(பிண கிடங்கு)இருந்ததாகவும் சொல்கிறார்.நூலகத்தில் ஆவி நடமாட்டம் இருப்பதாகவும் சொல்கிறார்.

சொல்லிய விதம் அருமை.இசையும் அருமை.திக்குவாய் பையனாக நடித்த மணிகண்டன்  நடிப்பு சூப்பர்.அங்காடித் தெரு மகேஷ் சாயல்.படத்தில் இவர் பெயர் மகேஷ்.இவர்தான் வசனமும் எழுதினாராம்.

பாலச்சந்தருக்கு இவரை ரொமப பிடித்துப் போய் இவரை சந்திக்க வேண்டும் என்றார்.

ஆவியை ஒரு தேவதைப் பெண்ணாக காட்டி இருப்பது புதுமை.அந்தப்பெண் வரும் காட்சிகளில் புகை மூட்டத்தில் காட்டி அன்னியப்படுத்தி இருக்கவேண்டாம்.க்ளிஷே?

கடைசி வசனத்தில் திக்கு வாய் போய்விடுவதாக மதன் சொன்னார். நான் கவனிக்கவில்லை.முடிவு செயற்கையோ?

Birds of the same feather flock tegether.(இனம் இனத்தைதான் சேரும் ?) இதற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம்.ஆட்டோ பின்னால் எழுதப்படும் அசட்டு வாசகம் போல்?

படம்:வசந்தி இயக்குனர்:சுப்பராஜ்

பேராசிரியர் வசந்தி  கண்டிப்பானவர்.கையில் பிரம்புதான் இல்லை.தன் மாணவர் கொடுக்கும் பிராஜெக்ட் அவன் சுயமாக செய்தது இல்லை என்று கண்டுகொள்கிறாள். அவன் அப்பாவை வரவழைக்கிறாள்.அவர் வசந்தியின் முன்னாள் காதலன்.

வீட்டோடு மாப்பிள்ளை மற்றும் தன் பிராஜெக்ட் முடிக்கும் வரை திருமணம் கிடையாது என்பதால் அவரின் காதல் கைக்கூடவில்லை. அந்த பழைய பிராஜெக்ட்தான் மகனுக்குக் கொடுத்தது.அவளுக்கு அந்த பிராஜெக்ட் பிடித்து விடுகிறது.

மிச்சமிருக்கும்  காதல் ஹாங் ஓவர் துளிகளினால் அதிரடி அனுமதி கிடைக்கிறது.மகிழ்ச்சி பிரவாகமாக ஓடுகிறது.

ஆனால் வெளியில் மாணவனிடம் கைக்குலுக்கிய பெண்ணிடம் சீறுகிறாள்.அவள் அப்படித்தான்?அந்தப் பெண் வசந்தியின் தங்கை?

ஓகே ரகம்.வணிக பத்திரிக்கைக் கதைபோல் இருக்கிறது.வசந்தியின் நடிப்பில் நாடகத்தனம். இசை  வசனங்களை இம்சை படுத்தியது.காதலர்கள் சந்தித்தால் பின்னணியில் ” சங்கத்தில் காணாத கவிதை” பாட்டு.காதல் மறுக்கப்பட்டதும் ”என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு”.இறந்துபோனால் “வீடுவரை உறவு காடுவரை”யா? டி.ராஜேந்தர் & பாக்கியராஜ் அசட்டுத்தனம்.

மாத்தி யோசிங்கப்பா? இது ”நாளைய” இயக்குனர. ”நேற்றைய” இயக்குனர அல்ல.எல்லாம் வசந்திதான் என்ற வகையில் “வசந்தி” தலைப்பு ஒரு அழுத்தமான குறியீடு.

படம்:பூமராங் இயக்குனர்:அருண் பிரசாத்

தன் வினை தன்னையே சுடும்.மூல சூடு பேராசரியருக்கு ஒரு மாணவன் செய்யும் வினை திரும்ப அவன் மேலே பூமராங் ஆகிறது.அவன் செய்வது அப்படி ஒன்றும் பெரிய வினை மாதிரி தெரியவில்லை.

கடைசியில் புரியவில்லை.இன்னும் கூட நன்றாக கன்வின்சிங்காக சொல்லி இருக்கலாம்.மையம் அழுத்தமாக இல்லை.ஓகே ரகம்.

ஆச்சரியம் ஒன்று.இதில் பேராசிரியராக நடித்தவர் “பதினாறு வயதினிலே” படத்தில் டாக்டராக வரும் சத்யஜித். பாத்திரத்திற்கு பொருந்துகிறார். இன்னும் அதே தமிழ்தான் பேசுகிறார்.வட இந்திய பேராசிரியர் ?

சிற்ப்பு படம்: என் இனிய பொன் நிலாவே.எந்த படமும்  இந்த வாரம் வெளியேற்றப்படவில்லை.

Saturday, November 6, 2010

வ குவார்ட்டர் கட்டிங் - பட விமர்சனம்

மதுபான விளம்பரத்திற்குத் தடை என்று வந்ததும் King Fisher மினரல் வாட்டர்,Haywards/Bagpiper சோடா,Smironoff காசெட்டுகள்,Teacher"s
சாதனை விருதுகள் மற்றும் Royal Challenge கிளாஸ் டம்ளர்கள் என்று மறைமுகமாக(surrogate ad)விளம்பரம் கொடுத்து”டகால்டி”செய்தார்கள்.
ஆனால் இதையும் அரசாங்கம்  தடை செய்தது.

அதே மாதிரிதான் டைட்டிலில் “வ குவார்ட்டர் கட்டிங்”.டைட்டிலுக்கே சப் டைட்டிலாம்.படத்தில் கண்டமேனிக்கு எல்லோரையும் கலாய்ப்பது போல் டைட்டிலிலும் கலாய்ப்பா?உள்ளே மவுண்ட்ரோடு,மெட்ராஸ்..?

சுந்தர்ராஜன்(சிவா)என்கிற சுரா(சுரா என்று கூப்பிட்டால்தான் அவனுக்குப் பிடிக்கும்)கோயம்பத்தூரிலிருந்து சவுதிக்குப் போக சென்னை வந்து தன் வருங்கால மாமா(சரண்)(அக்காவை காதலிப்பவர்)ரூமில் தங்குகிறான்.

சரண் ஒரு மாட்டு டாக்டர்.

மறுநாள் காலை நாலு மணிக்கு விமானம்.அன்று இரவு ஒரு குவார்ட்டர் கட்டிங்(XXX)போட்டுதான் விமான ஏறுவது என்று லட்சியமாக் கொண்டு கட்டிங்த் தேடி மாமாவுடன் தருமமிகு சென்னையில் அலைகிறான்.
தேர்தல் நாள் வருவதால் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் கிடையாது.நொந்து போகிறான்.

கட்டிங்கைத் தேடி ஓடுகிறான்...ஓடுகிறான்...
வாழ்க்கையின் ஓரத்திற்க்கே ஓடுகிறான்.அவன் லட்சியத்திற்குக் குறுக்காக நிறைய இடையூறுகள்...சவால்கள்...கடைசியில் அவன் கட்டிங் லட்சியம்நிறைவேறுகிறதா.? படம் பார்க்கவும்.
 
இதுதான் வ குவார்ட்டர் கட்டிங்கின் சரக்கு(கதை.
கதை ஒரே இரவில் நடக்கிறது.சீரியஸ்னெஸ் இல்லாத கதை.ஆனால் நிறைய சிரிக்க வைக்கிறார்கள்.நடுவில் நமுத்த அப்பளம் போல் கதை சுவராசியம் இல்லாமல் போய் பின்னால்  1/24 அளவு விறுவிறுப்பு கூடுகிறது.சில இடங்களில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி பார்ப்பது போல் லாஜிக்கே இல்லை.
கடைசியில் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்து  கூரையைப் பிச்சிட்டு கொடுப்பது நல்ல டிவிஸ்ட்.

வித்தியாசமான கேமரா ஒளியில் சொல்லப்பட்டு ரசிக்க முடிகிறது. 

தமிழ்ப்படத்தின் ஹாங்க் ஓவர்கள் அங்கங்கு தெரிகிறது.ரசிகர்களும் அதே ஹாங்க் ஓவரில்தான் படத்திற்கு வந்திருப்பார்களோ?டைட்டில் குவார்ட்டர் கட்டிங் ஆச்சே?

கதாநாயகன் சிவா வழக்கமான எஸ்வி சேகர்த்தனமான காமெடி.இது அவருக்குப் பொருந்தி வருகிறது.நன்றாக செய்திருக்கிறார்.ஆனால் அதே தமிழ்ப்பட வாய்ஸ் மாடூலேஷன் காமெடி.இது மாதிரியே தொடர்ந்தால் மேஜர் சுந்தராஜன் ஆகி விடுவார்.மாமாவாக வரும் சரண் நன்றாக செய்திருக்கிறார்.இவர் மனதில் நிற்கிறார்.வித்தியாசமான கேரக்டர்.
         டைரக்டர் காயத்ரி-புஷ்கர்

கதாநாயகி(?)லேகா வாஷிங்டன் ஜோடி அல்ல.கட்டிங் லட்சியத்தின் குறுக்கே வந்துபோகும் ஒரு மக்குப் பெண்.அவரும் நன்றாக செய்திருக்கிறார்.

செட்டிங்குகள் ஏன் சைனீஸ் ரெஸ்டாரெண்டுபோல் சிவப்பு நிறத்தில்?நைட் எபெக்ட்டா?இசை ஜி.வி.பிரகாஷ்.சுமார்.லேகா பாடும் பாட்டின் நடன அமைப்பு நன்றாக இருக்கிறது.”உன்னைக் கண் தேடுதே” பழையப் பாட்டு ரிமிக்ஸ் வேறு உண்டு.கொடுமை.

மறு நாள் 4 மணிக்கு விமான ஏறப்போவதின் சீரியஸ்னெஸ் இல்லாமல் குவார்ட்டருக்கு அலைவது ஒரு கட்டத்தில் அபத்தம்.வசனங்களில் மட்டுமில்லாமல் பின்னணி,உடை,சக நடிகர்கள் முகங்கள்,ஆங்கிலோ இந்தியர்கள் பேசும்தமிழ்,வாகனங்கள் என்று நகைச்சுவையை கொண்டுவந்திருக்கிறார்கள்.

சொன்ன கதை குழப்பில்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.படபிடிப்பு அருமை(நிரவ் ஷா).

ரசித்த ஜோக்குகள்:

(பாலத்தில் தற்கொலைக்கு முயலும் பெண்ணை காப்பாற்ற தூக்கும்போது)”சாவற்த்துக்கு முன்னேமே பொணம் கனம் கனக்கற”.

சரண் அணிந்திருக்கும் சட்டைப் பாண்ட்டைப் பார்த்து “மூணு மொட்டை மாடில திருடினா மாதிரி இருக்கு”

படத்தில் இன்னும் கூட புல் கதைக்கொண்டு வந்து சுவராஸ்யம் கொண்டு வந்திருக்கலாம்.