Friday, December 2, 2011

எலுமிச்சம் பழம் - சிறுகதை

சாந்தகுமார் உடம்பு முழுவதும் திருநூறு அப்பிக்கொண்டு கைகட்டி பவ்யமாக சாமியாரின் முன் நின்றுக் கொண்டிருந்தான்.தொல்லை எல்லாம் நிவர்த்தி ஆகிவிடும் என்ற நம்பிக்கையில்.

“இன்னித்தோட கஸ்டல்லாம் ஓய்யிது.ஒன்னோட புது சலூனுக்கு எந்த திருஸ்டியும் அண்டாது” கையில் கொத்தாக இருந்த எலுமிச்சம் பழங்களை அப்படியும் இப்படியுமாக கசக்கிப் பிழிந்து தூர எறிந்தார் சாந்தகுமாரின் குடும்ப சாமியார்.

ஒரு பழம் மட்டும் எதுவும் ஆகாமல் கையில் இருந்து உருண்டு ஓடியது.சாமியார் அதைப் பார்த்து மிரண்டார்.அபசகுனமா?சாந்தகுமாரும் மிரண்டான்.

“ஏதோ ஒரு பீடை உன்ன உத்துப் பாக்குது.நீ திரும்பிப் பார்க்காத மெட்ராஸ் கிளம்பு.நான் அந்தப் பீடையைச் சுடுகாட்டுக்கு ஓட்றேன்”

சாந்தகுமார் பிடித்த ஓட்டத்தில் சென்னை வந்துதான் நின்றான்.திரும்பியே பார்க்கவில்லை.பீடை உற்றுப் பார்த்தால் எப்படி திரும்பிப்பார்க்க முடியும்.

சென்னை திருவல்லிக்கேணி.

அடுத்த இரண்டு நாளும் நசுங்காத எலுமிச்சம் பழம் இவனையே உற்றுப்பார்ப்பது போல் இருந்தது.மூன்றாவது நாள்தான் கடையைத் திறந்தான்.

”யாரு இப்படி பாக்கறாங்க நம்மள?”கையில் கத்திரிக்கோலும் சீப்புமாக வெளி வந்தான் சாந்தகுமார். இரைச்சலுடன் கடை எதிர் சைடில் நின்ற பஸ்ஸிலிருந்து ஒருவர் ஜன்னல் சீட் வழியாக சாந்தகுமாரின் பள பள ”தனுஷ் சலூனை” உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.அவரின் சிவப்புச் சட்டை எடுப்பாகத் தெரிந்தது.

யோசித்தவாறே சாந்தகுமார் உள்ளே போய் கஸ்டமருக்கு தலை முடியை வெட்டியவாறே குனிந்து மீண்டும் பார்த்தான்.பஸ்காரர் அதேபோல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.இப்போது பஸ்கார் (பஸ்காரர்)சலூனைத் துழாவிப் பார்ப்பது போல் இருந்தது.

சாந்தகுமார் சற்று டென்ஷன் ஆனான்.

எச்சைத் துப்புவது போல் வெளியே வந்து மீண்டும் ஜன்னலை உற்று நோக்கினான்.பதிலாக பஸ்காரும் உற்று நோக்குவது போல் இருந்தது.பஸ்ஸு ஏன் இவ்வளவு நேரம் இங்க நிக்குது.அதுவும் ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில் பஸ் நின்று ஒருவர் ரொம்ப நேரம் உற்று நோக்குகிறார் என்றால் ஏதோ தீய சக்திதான்.அதான் எலுமிச்சம் பழம் நசுங்கவில்லை.

 ரொம்ப விசனமாகி உள்ளே போய் விட்ட வேலையைத்
தொடர்ந்தபடி மீண்டும் குனிந்துப்பார்த்தான்.பஸ்காரரும் அப்படியேதான் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.


சாமியார் சொன்ன பீடையா?கலவரமாகி கையில் இருந்து கத்திரிக்கோல் நழுவ சுதாகரித்துப் பிடித்துக்கொண்டான்.

சாந்தகுமாரரின் நடவடிக்கையில் கவனம் ஈர்க்கப்பட்டு
கஸ்டமரும் சேரில் அமர்ந்தபடி சாந்தகுமாரனுடன் தலைக்
குனிந்துப் பார்த்தார்.ம்ம்ம் என்று பெருமூச்சுவிட்டபடி சாந்தகுமாரை விழித்துப் பார்த்தார்.கஸ்டமரின் விழி பீதியைக் கிளப்பியது.

சாந்தகுமார்அரண்டுபோய் ”பேய்” வேகத்தில் கட்டிங் மற்றும் சேவிங் செய்து முடித்து அவரை அனுப்பினான்.சலூன் புதுப்பித்து முதல் கஸ்டமர் இவர்தான்.

சேவிங் துணியை கையில் பிடித்து உதறுகையில் கையில் ஏதோ பிசுபிசுத்தது.ரத்தம்.ஷேவ் செய்யும்போது இது இல்லையே? மிகுந்த டென்ஷானகி இதயம் படபடத்தது.

வழுவழுப்பாக உருண்டையாக ஏதோ உள்ளங்காலில் தட்டுப்பட்டது.நல்ல குண்டுக்கட்டான எலுமிச்சம் பழம்.குனிந்துபார்த்தால் பாதத்தின் கிழ் ஒன்றும் தட்டுப்படவில்லை.சே! பிரமை.

சே! கடையை அப்படியே பழசாக விட்டுருக்கலாமோ? ஏன் லட்சம் செலவிட்டு புதுப்பித்தோம்.பழசு ஸ்ரீதேவி போய் புதுசு பீடை நம்மைப் பிடிக்கிறதோ.நம்மையே பிடிக்க உற்றுப் பார்க்கிறதோ.

பஸ் போய்விட்டதா?பீடை இருக்கிறதா?மீண்டும் ஏதோ அவனைப் படுத்தியது.

கண்ணாடியை வாசல் நோக்கிக் காட்டிப் பிடித்து கண்ணாடியைப் கவனமாக சற்று பயத்துடன் பார்த்தான்.பஸ் அங்கேயே இருந்தது.என்னாச்சு பஸ்ஸூக்கு.வெளியே போக பயமாக இருந்தது.

லைட் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு கதவை ஒருக்களித்து மீண்டும் பார்த்தான்.பீடை இங்கேயேதான் பார்த்துக்கொண்டிருந்தது.சற்றுத் தள்ளி பக்கத்துக் கடையில் எலுமிச்சம் மூன்று வாங்கினான்.கடைக்கு எதிரே நின்று சூடம் காட்டி கண்ணை மூடி ஏதோ வேண்டினான்,யார் யாரையோ சபித்தான்.

சூடம் அணைந்ததும் பழங்களை காலால் அமுக்கிப் பிய்த்து மூலைக்கொன்றாக மூன்று முறை சுத்தி இடது வலது பின் எறிந்தான்.ஒன்று பஸ்ஸின் அடியில் விழுந்தது.பரம திருப்தியானன்.பெரிய பழம் ஒன்று எடுத்து கிழே வைத்து காலால் அழுத்தி சப்பை ஆக்கினான்.பழம் சக்கைகள் தெரிய கிழிந்து சாறு பீச்சியது.மனம் ஒரு நிலைக்கு வந்தது.

விறுவிறுவென்று கடையை மூடினான்.பஸ்ஸில் ஏறி ”பீடை”யின் பக்கத்தில் நின்று அது பீடையா அல்லது சாதா பஸ் பிரயாண மனிதனா என்று கண்காணித்து ஏதாவது நிவர்த்திச் செய்ய வேண்டும் என்று எதிர்பக்கம் கிராஸ் செய்து பஸ்ஸில் ஏறினான்.

பஸ் ஏதோ கோளாறால் நின்றிருந்தது.உள்ளே வந்தான்.ஆனால் “பீடை” உட்கார்ந்திருந்த சீட் காலியாக இருந்தது.

பஸ்ஸின் உட்புறம் எல்லா இடத்திலும் தேடி குனிந்தவாறு எதிர் திசையைப் பார்த்தான்.அதே சிவப்புச்சட்டைகாரர் தன் கடையின் எதிரில் நின்றுக்கொண்டு கடையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு திடிரென்று பக்கத்து காய்கறி கடைக்கு விறுவிறு என்று நடந்தார்.

அங்கு அவர் ஒரு எலுமிச்சம் வாங்கிக்கொண்டு திரும்பும் தருணம்  பஸ் புறப்பட்டு அடுத்த சந்தில் திரும்பியது.”நல்ல வேளை மறக்காமல் எலுமிச்சம் பழம் வாங்கினோமே” வீட்டை நோக்கி நடந்தார் சிவப்புச்சட்டை.
                                 
                               முற்றும்



6 comments:

  1. சார், இத நான் படிக்கையில மணி எட்டு. இனி நான் எப்படித் தூங்குவேன் சார்? உங்களுக்கு ஏன் சார் இந்த கொலைவெறி? நான் இனி எந்த சாமியாரத்தேடுவேன்?

    ReplyDelete
  2. கதையை விட படம் படுத்திய பாடு இருக்கே!....
    நான் அதை அரைகுறையாக ஒரு மாதிரி பார்த்த உடனெ, விருக்கென கிழே ஸ்க்ரால் செய்து மிச்சத்தை படிக்க வேண்டியதாயிற்று.

    எலுமிச்சம் பழம் வாங்க இவர் கடையை ஏன் அப்படி உத்துப் பார்த்தார் சிவப்பு சட்டைக் காரர் என்பது கொஞ்சம் உதைக்கிறது. pre occupation I suppose!

    சாந்தகுமாரன் மூன்று பழங்களை வாங்கி பிழிந்து தூர எரிந்தது சற்றே புன்னகைக்க வைக்கிறது. ஆனால் அந்தப் மலர இருந்த புன்னகையையும் அந்த கருப்புப் படம் வந்து பயமுறுத்தி கெடுத்து விடுகிறது :(

    ReplyDelete
  3. //உங்களுக்கு ஏன் சார் இந்த கொலைவெறி? //

    ஹா ஹா ஹா ஹா!

    நன்றி டாக்டர் கந்தசாமி.

    ReplyDelete
  4. //எலுமிச்சம் பழம் வாங்க இவர் கடையை ஏன் அப்படி உத்துப் பார்த்தார் சிவப்பு சட்டைக் காரர் என்பது கொஞ்சம் உதைக்கிறது. pre occupation I suppose!
    //

    எனக்கே தெரியவில்லை(?????)

    நன்றி ஷக்திபிரபா

    ReplyDelete
  5. எலுமிச்சம் பழங்கள் மனிதரை விட்டபாடாக இல்லை.:)

    ReplyDelete
  6. விறுவிறுப்பான நடை. நல்ல கதை:)!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!