"வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்.தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்
தாளகதி வேணும்....”என்ற கிழக்கு வாசல் பாடலில் சொன்ன தாளகதி (beats)பற்றித்தான் இப்பதிவு.
மேஸ்ட்ரோவின் பாட்டுக்களில் இசைக்கப்படும் “தாளங்கள்” துடிப்பானவை.சிக்கலானவை.புதுமையானவை சோதனை முயற்சிகள் உண்டு.சில தாளக்கட்டுக்கள் பிரமிக்க வைப்பவை.
லேத் பட்டறையில் அடிப்பதுப் போல் தாளங்களை அடிப்பது இல்லை.வெண்ட் கிரைண்டர் போல் “டடக்டடக்டடக்டடக்டடக்” என்று ரிதத்தை போட்டுவிட்டு பாட்டை நுழைப்பது இல்லை.வித விதமான தாளங்கள்.புத்திசாலித்தனம் நிறைந்தது.
பாங்கோ ( bongo drums)
இந்த மாதிரி மெட்டுக்கு இந்த மாதிரி தாளக்கட்டுதான் என்பது தாளக்கட்டில் விதிகள் இருக்கிறது..கர்நாடக இசையில் ஆதி ,மிச்ர சாப்பு,கண்டசாபு,அட,ரூபகம் என்று உள்ளது.முக்கால் வாசி கேள்விஞானம்.கால்வாசி படித்தது.
பாமரத்தனமாக சொல்லப்போனால்......
”செண்பகமே செண்பகமே” என்று பாடிக்கொண்டே மேஜையில் கையால் இதற்குத் தாளம் போடுங்கள் அல்லது தொடையில் தட்டுங்கள் அதே மாதிரி
“ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு” ”என் வானிலே ஒரே வெண்ணிலா” க்கும் போடுங்கள். விரல் மடக்கி அடிப்பது (beats) அல்லது தொடை தட்டல் மாறும். அதாவது தாளக்கட்டு மாறும்.ஒரே மாதிரி வராது.ஏன்? பாட்டின் மெட்டு மாறுகிறது.இதைத்தான் பிரித்து தாளத்திற்கு பெயர் வைத்தார்கள்
விரல் மடக்கி மற்றும் உள்ளங்கை மேஜையில் அடிக்கும் போது அடிகளை (beat)கவனியுங்கள். எண்ணுங்கள். 4 அல்லது 5 அல்லது 6 என அடிகள் மாறும்.ஆனால் இந்த அடிகள் மறுபடி மறுபடி வந்துக்கொண்டே இருக்கும்.நீங்கள் மாற்ற முடியாது. மாற்றினால் பாட்டு ஒரு பக்கமும் தாளம் ஒரு பக்கமும் திரிந்துக்கொண்டிருக்கும். அபசுரம் தட்டும்.
பாட்டுக்கு ஏற்றாற் போல்தான் தாளம் இருக்க வேண்டும்.
ஆனால் மேஸ்ட்ரோ புத்திசாலித்தனமாக மாற்றுவார்.
சில தாளகட்டுகளின் தட்டலை குறைத்தும் நீட்டியும் பிரமிக்க வைப்பார்.போட்டு குமுறுவார்.
தாளக்கட்டில் இந்திய,மேற்கத்திய,இந்துஸ்தானி,ஆப்பிரிக்கா போன்ற எதையும் விட்டுவைக்கவில்லை.தன்னைச்சுற்றி விதவிதமான எவர்சிலவர் ட்ப்பாவில் வாசனையாக எதை எதையோ எடுத்துத் தடவிக் கொடுக்கும் பான் வாலா போல் வித விதமான ரிதங்கள்.
அதனால்தான் மேஸ்ட்ரோ
"The King of Beats"
ராஜாவின் நிறைய பாடல்கள் Triple Beat கொண்டது.
இவருக்கு பிரசாத்(தபலா),புருஷோத்தமன்,சிவமணி(டிரம்ஸ்),போன்றவர்கள் வாசித்துள்ளார்கள்.
காங்கா(கோ?) டிரம்ஸ்(conga drums)
"அடி..! ராக்காயி..மூக்காயி..குப்பாயி..??????????, கஸ்தூரி, மீனாட்சி,தங்கபல்காரய்யா ...லெட் ஸ்டார்ட் தி மேஸ்ட்ரோ பீட்ஸ்....”சுத்தச் சம்பா..பச்ச நெல்லு குத்தத்தான் வேணும்...”
அன்னக்கிளி -”மச்சானைப் பாத்தீங்களா”
எம்எஸ்வி தாக்கம் இல்லாமல் ரொம்ப பிரஷ்.மூணு flavour கொடுக்கிறார்.டீசண்ட் குத்துப்பாட்டு+கல்யாண குஷி மூட்+கிராமியம்.அடித்த அடியில் தமிழ்நாடு அதிர்ந்தது.
இதில வரும் மேளம்+ஜால்ரா+நாதஸ்வரம் மேள கட்டுகள் வர வேண்டிய இடத்தில் (குஷி) வந்து அசத்தி விட்டுப் போகும். ஆச்சரியமான விஷயம்,முதல் சரணம் (வெள்ளிசரம் புன்னகையில்) ,பல்லவிக்கு பின் ரொமப சீக்கிரமாக வருகிறது.
கரகாட்டக்காரன் - “முந்தி முந்தி”
கிராம திருவிழா மேள தாளக்கட்டுக்கள்.
ஆனந்தராகம் - “ஒரு ராகம் பாடலோடு”
ஆரம்ப தாளக்கட்டிலேயே புலம்பல். குமுறல் உணர்ச்சித் தாளக்கட்டு .இதன் புலம்பலில் ஜானகி,புல்லாங்குழல் பிணைந்து மனசைப் பிசைகிறது.அற்புதம்..எப்படி முடிகிறது ராஜாவால்?நடுவில் பாய்மர கப்பல் பீட் வரும்.நெய்தல் நில இசை?.
ஈரமான ரோஜாவே-”கலகலக்கும் மணி ஓசை”
மேஸ்ட்ரோவின் அற்புதமான தாளக்கட்டு கற்பனை.ஹை ஸ்டைல்தான்.
0.34ல் புல்லாங்குழலைத் தொடர்ந்து வரும் Triple conga drum அசத்தல் அண்ட் majestic.தட்டல்களை கவனியுங்கள். இவைகள் 1.59ல் சாதுவான தபலா ரிதம் ஆகிவிடும்.மீண்டும் 2.38ல் Triple conga வால்தனம்.கேசட் கடையில்((அந்த காலத்தில்) ஸ்டிரீயோவில்கேட்டு பிரமிப்போம்.
வெள்ளை ரோஜா -சோலைப்பூவில்
”சோலைப்பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்”.பெரிய சந்தம். 0.28ல் ஆரம்பித்து 0.32ல் முடிகிறது..இதைப் பின் தொடரும் தாளக்கட்டு multiple beat ( 6? 8? beats)கொண்ட நீள தாளக்கட்டு.சும்மா கடனே என்று பீட்டாமல் அதிலும் நீள..................வெரைட்டி. அதனால்தான் இவரை prolific composer என்கிறார்கள்."துடும் துடும் துடும்” இசையைத் வித்தியாசமாக தொடர்வது புதுமை.ஆச்சரியம்!
கையால் மேஜையில் தட்டுங்கள்.எவ்வளவு beat என்று பாருங்கள்.
தென்றலே என்னைத்தொடு-”கவிதை பாடு”
ராஜாவின் இசைகோர்ப்பில் அடுத்து என்ன என்பது யூகிப்பது கஷ்டம்.ஆச்சரியங்களை வாரியிறைத்துக்கொண்டே போவார்.இந்த பாட்டில் 0.27 - 0.34 வரை ஒரு வருடு வருடிவிட்டு திடீரென ஒரு "U" turn எடுத்து வேறு தாளக்கட்டில் அதிர வைப்பார். நமக்கு ஜுரம் வரும்.
மூன்றாம் பிறை - “பொன்மேனி உருகுதே”
மேஸ்ட்ரோ இதில் “வுடு கட்டி” சிலம்பாட்டம்.அற்புதமான
stylish அரேஜ்மென்ட்ஸ்.ராஜா .0.40 க்கு மேல் படத்தில்(3) இருக்கும் ஆப்ரிக்கன் ட்ரம்ஸ் வித் மூங்கில் குச்சிகள் மாதிரி ஏதோ நாதம்.முதல் interlude முடிந்து 1.59 ல் மீண்டும் ட்ரம்ஸ் அண்ட் கோ ஸ்டைலாக உள்ளே வந்து பிறகு ஜானகி ஆரம்பிப்பது அசத்தல்.2.52ல் தாளத்திற்கும் மற்ற கருவிகளுக்கும் நடக்கும் உரையாடல் சூப்பர்.
கொச்சு கொச்சு சந்தோஷங்கள் -”கான ஷியாமா”
ஒரு கிருஷ்ண பக்தி பாடல்.முதலில் ஒரு சாதாரண மேற்கத்திய ரிதத்தோடு ஆரம்பிக்கும் 0.32ல் ஒரு யூ டர்ன் எடுத்து ஸ்ரீகிருஷ்ணாவின் பிருந்தாவனத்திற்கே கொண்டு போவார். இதில் ஹிந்துஸ்தானி தாளமும் மேற்கத்திய தாளமும் மாறி மாறி அற்புதமாக பின்னியபடிவிளையாட்டுக்
காட்டுவார். 1.31 -1.39 வரும் ஹிந்துஸ்தானின்தாளக்கட்டுகளை கவனியுங்கள்.முடிந்தவுடன் வெஸ்டர்ன் - ஹிந்துஸ்தானி-வெஸ்டர்ன் என்று வழுக்கிக்கொண்டே போகும்.
இந்தப் பாட்டின் கிளைமாக்ஸில் ராஜா
full blast! 3.52 -4.21ல் ஹிந்து + மேற்கு இரண்டும் கைக்கோத்துக்கொண்டே வேறு ஒரு தளத்தில் உலவும்.4.22 ல் ஒரு தூக்கு தூக்கி வேறு தளம். 4.31ல் இன்னும் ஒரு தூக்கு தூக்கி விஸ்வரூபம் எடுத்து கடைசியில் சுபம். வெயிட் பண்ணினால் ஸ்ரீகிருஷ்ணனை நேரிலேயேப் பார்க்கலாம்.It is absolutely divine!
இந்தப் பாட்டின் கோபிகைகள் டான்ஸ் காட்சியில் தாளத்திற்கேற்ப மாறி மாறி காட்டுவார்கள்.பச்சைப்புடவை-லட்சுமி (தபலா ரிதம்) ,சிவப்பு புடவை-பானுப்ரியா (டிரம்ஸ் ரிதம்) இரண்டும் சேர்ந்தால் மிக்ஸ்ட் ரிதம்.யூ டூப் பார்க்க.
மூன்றாம் பிறை - “பூங்காற்று”
0.58 -1.14 தபலாவில் கொஞ்சும் மழலைரிதம்.ஸ்ரீதேவிக்காக “லூசு” இசை.
ராசா மகன் -”காத்திருந்தேன் தனியே”
இதில் வரும் தாளம் என்ன ஒரு ஸ்டைல்.ஆரம்பமே கிராண்ட் ஓபனிங்.இதன் தாளக்கட்டு 7 beat cyle என்றும் மிச்ரா சாபு தாளக் கட்டு என்றும் ரவி நட்ராஜன் என்னும் ராஜாவின் இசை ரசிகர் சொல்கிறார். இது ஒரு கஷடமான முயற்சி என்றும் தெரிகிறது.
இதில் ஒவ்வொரு சைக்கிளுக்கும் வரும் ஏழு ட்ரம்ஸ் தட்டலை எண்ண முடிகிறதா? மேஜையில் தட்டுங்கள். நான் எஸ்கேப்....!
சலங்கை ஒலி - “தகிடதகிட”
மிருதங்கம் பிறகு வரும் தபலா அல்லது தோலக் சூப்பர்.
புதுப்பாட்டு- “நேத்து ஒருத்தரு”
இந்தப் பாடல் பதிவின் போது வடபழனியில் ரிக்டர் ஸ்கேலில் 7.8 புள்ளி நிலஅதிர்ச்சி இருந்ததாம்.தாளக்கட்டுகளின் பேச்சுகள் அட்டகாசம்.தாளக்கட்டுகளின் இடையே கிடார்,சிந்த்,ட்ரம்பெட் போன்றவை அதுவும் ஒரு தாளகட்டுப்போல வந்து அழகுப் படுத்துவது வளமான கற்பனை.
குத்துப்பாட்டு என்றாலும் அதில் ஒரு “லட்சணம்” இருக்கும்.புத்திசாலித்தனம் இருக்கும்.கொஞ்சம் யோசித்தால் இது ஆராய்ச்சிக்கு உட்பட்ட இசைக்கோர்ப்புகள் என்று தோன்றும்.நான் முதலில் சொன்னது போல் “லேத் பட்டறை” தட்டல்கள் இல்லை.
வண்ண வண்ண பூக்கள்--”இள நெஞ்சே வா”
தாளக்கட்டுகளின் தனி ஆவர்த்தனம்.இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்.பின்னி விட்டார் ராஜா.அற்புதமான மெட்டு.ஜேசுதாஸ் பின்னிவிட்டார்.
காட்டின் அழகை புல்லரித்துக்கொண்டே பாடும் பாட்டில் வித்தியசமான ரிதம்.
வீரம்,கம்பீரம்,உறுமல்தான் தோல் கருவிகளின் பிரதான உணர்ச்சி.”புளகாங்கித மன நிலையை”தோல் கருவிகளில் எழுப்பிக்கொண்டுவருவது ஒரு சவாலான முயற்சி. Hats off Maestro!
கொச்சு கொச்சு மாதிரி இங்கும் (மேற்கத்திய +இந்திய )தாளக்கட்டுக்கள்.மாறி மாறி இதில் ஒரு தட்டு அதில் ஒரு தட்டு.ஆச்சரியமான விஷயம்,தட்டலின் போது இனிமையை கோட்டை விடாமல் மெயிட்டன் செய்வது.
1.30 முதல் 1.51 வரை வானவில்லின் வர்ணஜால தாளங்கள்.ரேஷன் கார்டு
வைத்துத் தட்டுகிறார்?அவ்வளவு தாள மாத்திரைகள்?
ஒவ்வொன்றும் ஒவ்வொரு எமோஷனில் உரையாடுகிறது.
wonderstruck.அதுவும் 1.41-1.45 வரும் நாதம்
It is highly divine!
3.23 -3.50 ராஜாவின் வர்ண மத்தாப்புகள்/புஸ்வாணங்கள்.மாஸ்டர் ஆஃப் வெரைட்டி.
1.30 வரை மேற்கத்திய ரிதம்தான்.முதல் சரணம்,(பச்சை புல்)இரண்டாவது சரணம்(அற்புதம் என்ன) பின் வரும் தாளம் மாறி மாறி தபலாவின் கிழே இறங்கி மீண்டும் டிரம்ஸில் மேல் வரும்.அட்டகாசம்.
R&D பண்ணும் அளவுக்கு தாளக்கட்டுக்கள்.
இளையாராஜா என்னும் இசை மேதை வாழும் காலத்திலேயே நாமும் வாழ்வது நமக்குப் பெருமை.
இன்னும் நிறையப் பாட்டு இருக்கு.பிரமிச்சு பிரமிச்சு களைத்துவிட்டதால் பின்னால் தொடரலாம்.
படிக்க:
இளையராஜாவின் -நாத உரையாடல்கள்