Saturday, October 24, 2009

மொட்டை மாடி நிலவு - கவிதை








மொட்டை மாடியில்
நிலவு காட்டி
உனக்கொரு வாய்
அதுக்கொருவாய் என
அம்மா அன்புடன் 
சாதம் ஊட்டுகையில்
 நிலவைஉரசிக்கொண்டு
கடக்கும்
மேகங்களில் 
ஒட்டிக்கொண்டுப்போகும்
சில பருக்கைகள் பார்த்து
வாய் துடைக்கிறது
குழந்தை

Thursday, October 22, 2009

காதல் அசடுகள் - கவிதை



திடீரென
ஏதோ ஒரு நாள
அசட்டுத்தனமாக காதலித்தோம்

அசட்டுத்தனமாகவே
பிரிந்து விட்டோம்
அதே திடீரென

ஆவேசமாக
அடுக்கியும் விட்டோம்
உன் பங்கு என் பங்கு என
ஆயிரம் காரணங்களை
அதே அசட்டுத்தனத்துடன்

சொச்சம் இருக்கிறது
கொஞ்சம் அசட்டுத்தனம்

வைத்துக்கொள்வோம்
புத்திசாலித்தனமாக

மீண்டும் சேர்வதற்கும்
சேராமல் இருப்பதற்கும்


படிக்க:

ஆனந்த விகடன் தீபாவளி மலர் - விமர்சனம்

Tuesday, October 20, 2009

சுஜாதா,வடிவேல்,லீனா மணிமேகலை

போன வெள்ளிக்கிழமை. ஹிந்து தினசரி பேப்பரில் டீவி நிகழ்ச்சிகள் பகுதி.பொதிகை டீவியில் (முன்னாள் தூரதர்ஷன்)இரவு 7.30 மணிக்கு “ஒளியும் ஒலியும்”சினிமா பாடல்கள்.”ஆமா...இத எங்கேயோ கேள்விப்பட்டு இருக்கிறோமே?இன்னும் வருகிறதா?.உடனே”எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” னும் ஞாபகம் வந்தது.

________________________________________________________________________


தமிழ் சினிமாவில் நகைச்சுவை.வறட்சிதான்.நகைச்சுவைக் காட்சிக்கென்று சிலவிதி முறைகள் உள்ளன.முடிக்கவேண்டிய இடத்தில் ஷார்ப்பாகமுடிக்க வேண்டும்.காட்சியின் நோக்கமான குபீர் சிரிப்பு வந்தவுடனசட்டென முடிதது விடவேண்டும்.முடிந்தவுடன் அறுக்கக்கூடாது அல்லது காட்சிக்கு நோட்ஸ் போட கூடாது. இப்படி அறுப்பது தமிழ் சினிமாவில் நிறைய.அதுவும் வடிவேலு காமெடியில்.

ஷார்ப்பாக முடிக்காத காமெடி: வடிவேலு டீக்கடையில் பெஞ்சில்எதிரில் இருப்பவர் மாதிரி ஒவ்வொரு சைகையும் செய்யும்படி உசுப்பேத்துவார ஒருவர்.
கடைசியில் அவர் மாதிரி சாய்ந்து உட்கார பின்னாடி சாக்கடையில ்விழுவார்.
விழுந்தவுடன் காமெடி முடிகிறது.புரிந்தும் விட்டது.சிரிப்பும் வந்துவிட்டது.ஆனால் அவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு வசனம் பேசி விளக்கம் கொடுப்பார்.காமெடி
நீர்த்து விடுகிறது.

ஷார்ப்பாக முடிந்த காமெடி: வடிவேல் பெண் பார்க்கப்போன இடத்தில்,பெண் தனியாக பேச அழைத்து வசனங்கள் காமெடியாகப போய்கொண்டிருக்க கடைசிஅடியாக “உங்க வீட்ல வேலக்காரங்க இருக்காங்களா...”கேட்க உடனே வடிவேல் கத்த காமெடி ஷார்ப்பாக முடியும்.(அப்புறம் வசனம் பேசி கோனார் நோட்ஸ் அறுவை இல்லை)

சமீபத்தில் பார்த்த வித்தியாசமான  மற்றும் fresh காமெடி.சார்லியின மாடுவாங்கும் காமெடி. சார்லி அசத்துவார். படம்....ராமகிருஷ்ணா.?

________________________________________________________________________

டெல்லியில் ஸ்கூட்டரில் திரும்பி வந்து கொண்டிருந்த போது சாலையின நடுவே வயதான ஒருவர் கிடந்தார்.நான் நிறுத்திப் பார்த்ததில் அவர் மிகவும் இறந்திருந்தார்.போகிற வருகிற கார்கள் எல்லாம் சற்றுத் தயங்கி அந்த உடலை
மரியாதையாகத் தவிர்த்து வளைந்து சென்று மறுபடி வேகம் பிடித்த மறைகின்றன.ஒருவரும் நிற்கவில்லை. நிற்பதில்லை.எதிர்வீட்டின் டெலிபோன் பீங்கான்களைப் பார்த்து அங்கே செய்தி சொன்னதற்கு “நீ ஏன் கவலைப் படுகிறாய்” அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று உபதேசம் கிடைத்தது.

யார் அந்த அவர்கள்........?


நன்றி - சுஜாதா  “மிஸ் தமிழ்த்தாயே நம்ஸ்காரம்”

_________________________________________________________________

ரசித்த கவிதை:

எல்லா
எண்ணங்களும்
நினைவுகளாகும்
திறன் இல்லாதவை

ஆழமான காயங்களுக்கு
மட்டுமே
வடுக்கள்
சாத்தியம்

நன்றி-லீனா மணிமேகலை “ஒற்றையிலையென”

Monday, October 19, 2009

ஜகன் மோகினியும் அதிஷாவும் பின்னே ஞானும்

அதிஷாவின் பிளாக்கில் ”ஜகன்மோகினி” சினிமா விமர்சனம் எழுதிஇருக்கிறார்.அதில் அவர் ஒரு வரி எழுதி இருக்கிறார். அது திரைப்படத்தை சிறுவயதிலிருந்து ஒவ்வொருமுறைபார்க்கும் போதும் நிச்சயம் என்னை திருப்திப்படுத்தியிருக்கிறது” (பழைய ஜ.மோ)படம் மகா மொக்கையாக இருந்தாலும் IT JUST ENTERTAINING)”





என்னை இந்த பதிவு எழுத தூண்டிய அதிஷாவுக்கு நன்றி.நான் இந்த படம் பார்க்கவில்லை.”ஈரம்” படம் போனபோது ”ஜகன்மோகினி” ட்ரெய்லர் பார்த்தேன்.அப்போது என் மகன் அடித்த கமெண்டும் இந்த பதிவு எழுத காரணம்.

சும்மா ஒரு அனாலிஸிஸ். அதிஷாவைக் கவர்ந்தது போல் என்னையும்  சிறு வயதில் ஒரு மாதிரி கவர்ந்த படம்.இப்போது ஏன்அதிஷாவுக்குப்பிடிக்கவில்லை அ(ஆத்தா)திஷா வயதுக்கு(பேராண்மை) வந்து விட்டார்.யாக்கை கதை கூட எழுதுகிறார்.


படம் எடுப்பவர்கள் எடுக்கும் முன்   சுத்தமாக ஹோம் ஓர்க் செய்வதே இல்லை.







பழைய ஜகன்மோகினியின்(1978)  தெலுங்கு டப்பிங் வெற்றி பார்முலா:

1.கவர்ச்சி (கவர்ச்சி கிங்காங் ஜெயமாலினி)."பெத்தாங்களா ஆர்டர் கொடுத்து செய்தார்களா" என்று அப்போது கமெண்ட் அடிப்பார்கள்.

2.குழந்தைத்தனமான மாயஜாலம்

3.சமுகப்படங்களுக்கு ஒரு மாற்றாக வந்தது.

4.விட்டாலாசாரியருக்கு ஒரு மவுசு உண்டு இங்கே அப்போது .

5.டீவியின் ஆதிக்கம் கம்மி (எல்லா தரப்பினரும் தியேட்டர் போனார்கள்)

 
இப்போது (31 வருடங்களில்) அதே ஆர்டரில் பார்க்கலாம்:

1.கவர்ச்சி-சினிமா கதாநாயகியிலிருந்து ஆரம்பித்து ஏர்டெல்ஜுனியர் சூப்பர் சிங்கர் வரை கவர்ச்சி வந்துவிட்டது.காட்டவும் செய்கிறார்கள்.

2.மாயஜாலம் - இதற்கு தாத்தா கிராபிக்ஸ்ஸெல்லாம் வந்துவிட்டது. (டீவியிலும் சினிமாவிலும்)(அம்மன் படங்கள்,குட்டிசாத்தான்,அனகோண்டா,ஜூராசிக்,டெர்மினேட்டர் படங்கள்,ராமாயணம்,மகாபாரதம்)

3.மாற்று-ஆங்கிலம் தமிழில் எல்லாம் இது மாதிரி படங்கள் வந்து விட்டது.

4.விட்டாலாசாரியருக்கு கொள்ளுப்பேரன்கள் வந்துவிட்டார்கள்.

5.நிறைய சேனல்கள் விதவிதமான சினிமா படங்கள்/சீரியலகள் வித் மாயஜாலம்/அதிரடி ஆக்‌ஷன்.மொழிமாற்று படங்களை பாமரமக்களே பார்க்கிறார்கள்.
 

5.அப்போது தியேட்டருக்குப் போன தரப்பினரில் 50% இப்போது போவதே இல்லை.

இந்த லேட்டஸ்ட் படம் நமீதாவின் கவர்ச்சியை வைத்துதான்.


இசை?”இசை இளையராஜா.. பாவம் இவரு.. இருக்க இருக்கு ஷகிலா படத்துக்கு கூட மியுசிக் போட்டு பேர கெடுத்துக்குவாரு போலருக்கு.---அதிஷா

அடுத்து கிராபிக்ஸ்.அதுவும் கவுத்து விட்டது.”அம்மன் திரைப்படம் வெளியாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது , அதை விட கேவலமான கிராபிக்ஸ். டிஷ்னி சானலில் இதைவிட நல்ல கிராபிக்ஸ் வருகிறது”---அதிஷா

”ஜகன்மோகினி” ட்ரெய்லர் பார்த்து என் மகன் (14)அடித்த கமெண்ட்:”ரொம்ப குழந்தைத்தனமாக(childish) இருக்கு கிராபிக்ஸ்”



Tuesday, October 13, 2009

ஆனந்த விகடன் தீபாவளி மலர் - விமர்சனம்

ஒரு காலத்தில் தீபாவளிக்கு வாங்கும் அயிட்டங்களில் லேகியத்திற்க்கு அடுத்து தீபாவளி மலர்களும் அடக்கம். தீபாவளி மலரை, தீபாவளி அன்றுதான் படிப்பேன்.கங்கா ஸ்நானம் செய்து, பட்டாசு எல்லாம் வெடித்துவிட்டு காலையில் எழுந்த கண் எரிச்சலில் தடித்துப் போய் சாப்பாடு முடித்துப் படிப்பேன். மீதி பேர் தூங்கிவிட்டுப் படிப்பார்கள்.அதைப் படிப்பதும் தீபாவளி விழாக்கால கொண்டாட்டம்தான்.ஒரு ஹோம்லி பீலிங்.

ஆனால் இப்போது எல்லா சேனல்களிலும் “நடுவர் அவர்களே” “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்” ”சிந்து மேனனின் “ஈரம்” மான தீபாவளிப் பேட்டி”போன்ற அத்தியாவசியமானவைகள் வந்து மலர்களின் முக்கியத்துவம் போய்விட்டது.


இந்த வருடம் எனக்குப் பதிவு போடுவதற்கு ஒரு வாய்ப்பு.மலரும் ரொம்ப சீக்கிரம் வந்துவிட்டது.இதுதவிரகலைமகள்,அமுதசுரபி,குண்டூசி,கல்கி,தீபம்என்று வேறு மலர்கள் வரும் அப்போது.பண்டமாற்று முறையில் வாங்கி படித்து புளகாங்கிதம் அடைவது உண்டு.இப்போது உண்டா?


இந்த வருடஆவி மலரின் விலை பேட்டா செருப்பு மாதிரி 99/-(பைசா கிடையாது).லாப் டாப் மாதிரி கனம்.பழைய மலர் மாதிரி கனம் ரொம்ப இல்லை.பழைய மலர்களை மடியில் வைத்து தான் படிக்கமுடியும்.


இனி உள்ளே போவோம்.........


<தீபாவளி மலர்களில் ஒரு வசதி உள்ளது.  அ   முதல் ஃ  வரை  விஷயங்களை கவர் பண்ணலாம்.எதுவும் விட்டுப்போகாது.


அட்டைப்படம் சினேகா.முந்தியெல்லாம்  கோபுலு கார்டூன் ஜோக் வரும்.ஒரு தலைத் தீபாவளி ஜோக் இருக்கும். படிப்பவர்களுக்கு வசதியாக விளம்பரதாரர் மற்றும் உள்ளடக்கம் இண்டெக்ஸ் இருக்கிறது.பக்கங்களில் கம்பூயட்டர் மாதிரி ட்ராப் டெளன் மெனு  படம் இருக்கிறது.


சிறுகதைகள்: இதில் எழுத்தாளர்களின் மனைவிகளின் கதைகள் எழுதி இருக்கிறார்கள். சாந்தி(ப்.கோ.பிரபாகர்),ஜெயந்தி-யசோதா(சுபா) கமலா(ராகி
ரங்கராஜன்),விஜயலட்சுமி,(பாக்கியம் ராமாசாமி), னலட்சுமி(ராஜேஷ்குமார்) பிராங்க் பென்னட்(கீதா பென்னட்) சுந்தரம்(வாஸந்தி.இதில் விஜயலட்சுமி,கமலாவின் கதைகள் நல்லா இருக்கு.மீதி சுமார்.ரொம்ப நாளைக்குப்பிறகு ஒரு கதைக்கு ஓவியர் மாருதியின் படம். சூப்பர்.

கட்டுரைகள்:பஸ்ஸில் பள்ளி கூடம்,செல்லப்பிள்ளையார்,கையெழுத்து (எழுத்தாளர்கள்)நல்லா இருக்கு.நா.பார்த்தசாரதியின் கையெழுத்துதான் பெஸ்டாம்.டெல்லியில் தெரு குழந்தைகளுக்கு பஸ்ஸில் வந்து கல்வி கொடுக்கிறார்கள்.


சினிமா:காத்தாடி ராமமூர்த்தி,”பசங்க”பாண்டிராஜ்.சமுத்ரகனி (நாடோடிகள்)பற்றிய கட்டுரைகள்  நன்றாக இருந்தது.


”If I Get It"  என்ற நாடகத்தில் கார்டூனிஸ்ட் கேரக்டர்.பெயர் “காத்தாடி”.அதுவே நிலைத்து விட்டதாம்.சமுத்ரகனி ”பார்வைகள்”ன்னு சிலுக்கு ஸ்மிதாவை வைத்து சீரியல்செய்திருக்கிறாரம்.அண்ணி,ஜன்னல்,பந்தயம் சீரியல்கள் செம்ம ஹிட்.

சகாப்தம்:கக்கன், அண்ணா பற்றிய கட்டுரைகள்.கக்கன் எளிமையானவர்எனபது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.உள்துறை அமைச்சராக இருந்தபோது அவர் சம்பளம் 1500/.இதில் டிரைவர்க்குக் கொடுப்பது 300/-.இவரைப் பற்றிப் படிக்கும் போது நல்ல கண்ணு ஞாபகம் வருகிறது.


பயணம்:ஆந்திராவில் இருக்கும் மிரட்டும் குகைகள்,நாகாலாந்து,டென்மார்க்,மற்றும் வைசாலி பற்றி கட்டுரைகள்.”


உலகத்திலேயே மகிழ்ச்சியாக வாழ்பவர்கள்” டென்மார்க் மக்கள்தானாம்.ஏன் இருக்காது?சுற்று சுழல் மாசு கிடையாது.சுத்தமான நகரம்,சுறுசுறுப்பான மக்கள்.குழந்தை/முதியவர்களுக்கு அரசு தரும் மான்யம்.மக்கள் தொகை குறைவாக இருப்பதால்குழந்தைப்பெற்றுக்கொள்ள அரசு உதவித்தொகை வழங்குகிறது.நாகாலாந்தில் நாய் கறி கிடைக்குமாம்.


மொழிபெயர்ப்பு கதைகள்: கடல்கன்னி,நீதிபதியின் மனைவி,இரவு உணவு.மொழிபெயர்த்தவர்கள் சாரு,அமர்ந்தா,சி,மோகன். 

எனக்குப் பிடித்த கதைடெடுயூஸ் ப்ரோவ்ஸ்கி(சி,மோகன்) எழுதிய “இரவு உணவு”.ஒரு நாஜி பற்றிய ஹாலிவுட் படம் பார்ப்பது போல் action packed. சூப்பர்.

ஜோக்குகள்:
விகடன் ஜோக்குகளுக்குப் பெயர் போன பத்திரிக்கை.தரமாகவும் இருக்கு.


ஆன்மீகம்:பெரிய சங்க்ராச்சாரியார் இளமைகால அபூர்வ படங்கள்.அடுத்து ஐயனார் சிலைகள் பற்றி,ஆச்சரியமான விவரங்கள்.ஐயனார் என்றால் நிலம்,நீர்,காற்று,நெருப்பு,

ஆகாயம் என்கிற ஐந்தும் இணைந்ததுதான் உலகம். இந்த ஐந்திறனையும் கண்டுபிடித்ததால்தான் அவருக்கு ஐயனார் என்ற பெயராம்.ஆதிகவி வால்மீகி பற்றி ஆருர்தாஸ்.

சந்திப்பு:தீபாவளி சீர்,சாலமன் பாப்பையா,காபி வித் அனு,வி.ஐ.பி.பொக்கிஷம் தலைப்பில் அனுபவங்கள்.ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி தனக்கு எழுதிய கடிதத்தை பொக்கிஷமாகப் பாதுகாக்கிறாரம் வெ.இறையன்பு.


கலை: தீபாவளி மலர் என்றதும் உடனே நினைவுக்கு வருபவர் ஓவியர் சிற்பி.இவரின் சித்திரங்கள் இல்லாமல் தீபாவளி மலர் ஏது அந்த காலத்தில்.நான் சிறுவானக இருந்தபோது வியந்திருக்கிறேன்.இவர் இயர்பெயர் பி.எம். சீனிவாசன்.

அடுத்து “ஆண் சலங்கை”.28 வருடமாக சூர்ய நாராயண மூர்த்தி பரதம் ஆடுகிறார்.ஆண்கள் ஆடுவதற்கு அவ்வளவு மரியாதை மற்றும் சான்ஸ் கொடுப்பதில்லை என்று வருத்தப்படுகிறார்.

கடவுளர்களின் கலர் கலரான மேக்கப் போட்டு(அனுமார்,ராமர்,சீதை, இலட்சுமணன்) வீடுதோறும் வாசலில் நின்று பாட்டுக்கள் பாடிகாசு பெறுவது.”பகல்வேடம்” என்று அழைக்கப்படும்  இந்த கலை ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்திருக்கிறது.மக்கள் இந்த புராண கேரக்டர்களை அருகில் பார்ப்பதால் ஒரு மரியாதை மகிழ்ச்சி உண்டாவுதுதான சைக்காலஜி.


க்ளிக்:கறுப்பு ராஜாக்கள் என்ற கட்டுரை யானையைப் பற்றி.சுவராஸ்யமான கட்டுரை.யானைக்கு ஜீரண சக்தி குறைவாம்.அதனால்தான் கோவில் மற்றும் சர்க்கஸ் யானைகள் தலையாட்டிகொண்டே இருக்கிறது. தன் உணவை ஜீரணிப்பதற்கு இப்படி செய்கிறதாம்.இல்லாவிட்டால் 35 கி.மி. நடக்கவேண்டுமாம்.காட்டுயானைக்குத்தான் இது சாத்தியம்.


போட்டோகிராபராக 40 ஆண்டுகாலம் இருக்கும் யோகா எடுத்த படங்கள். எல்லாம் கலைஞரின் படங்கள். லுங்கியோடு மற்றும் கம்புயூட்டர் மவுஸ் பிடித்தபடி...வித்தியாசமான போஸ்கள்.
இதைத் தவிர கவிதைகளும் இருக்கிறது.எல்லாம் சுமார் ரகம்.ஒவ்வொரு இண்டெக்ஸில் இருக்கும் எல்லாவற்றிலும் சாம்பிள்தான் கொடுத்துள்ளேன்.

இன்னும் நிறைய இருக்கிறது.மொத்தம் 400 பக்கம் விளம்பரங்களும் சேர்த்து.

அடுத்து வழக்கமான (தீபாவளி மலர்) இந்த வார விகடனும் கொஞ்சம் குண்டு சைசில். 99 ரூபாய் கொடுத்து வாங்க முடியாதவர்களுக்கு ரெண்டு சாதா கம்பி மத்தாப்புப் போல.




Wednesday, October 7, 2009

அது............!




நான்
உன்னை சந்தித்த
அந்த முதல் கணத்தில்தான்
”அது” நிகழ்ந்தது
எனக்கு மட்டும்





அதற்கு பிறகும்
நிறைய நடந்து விட்டது
உனக்கான உன் திருமணமும்
எனக்கான என் திருமணமும்

மீண்டும் ஒரு நாள்
உன்னை சந்திக்கப்போகும்
அந்த முதல் கணத்தை
அடி வயிற்றுக் கிலியோடு
தவிர்க்கிறேன்

அந்த முதல் கணத்தில்

நலம் விசாரித்து
உரையாடல்களினூடே
கசியப்போகும் உன் புன்னகையில்
தெரிந்துவிடும்

உனக்கும் நிகழ்ந்த அது

Tuesday, October 6, 2009

நிறை குடத்தில் பாப்கார்ன்கள் தளும்பாது



தியேட்டருக்கு
எப்போது சென்றாலும்
காட்சியின் இடைவேளையில்
சில்லிடும் படிக்கட்டில்
உதிரி மல்லிகைப் பூக்களாய்
சிதறி கிடக்கும்
பாப்கார்ன் துண்டுகளை
பார்த்துப் பழகிவிட்டேன்
மிகை குடத்தை
நிறை குடமாக்கி
தளும்பாமல் எடுத்து வர
வாங்கியவுடன்
ஒரு கைப்பிடி
வாயில் திணித்தபடி

Monday, October 5, 2009

செளமியாவின் உருக்கும் பாட்டு..மித்ரா

ரொம்ப நாளைக்குப் பிறகு கேட்ட ஒரு haunting melody.கோடம்பாக்கத்தில் கோயம்பேடு காய்கறி மூட்டைக் கணக்காய் கும்பல் கும்பலாய் கொட்டப்படும் பாடல்களில் அடியில் மாட்டிக்கொண்டு காணாமல் போனப் பாட்டுக்களில் இது ஒன்று.இன்னும் எவ்வளவு இருக்கோ?

போனவாரம்தான் கேட்டேன் ஒரு ரெடிமேட் துணிக்கடையில்.

ஆஹா! வித்தியாசமான  பாட்டு. இந்த படம் பார்க்கவில்லை.

படம்; அச்சமுண்டு அச்சமுண்டு
பாடியவர்:  செளமியா (கர்நாடக இசைப் பாடகி)
எழுதியவர்:  ஆண்டாள் ப்ரியதர்ஷிணி
இசை:  கார்த்திக் ராஜா

 Kannil Dhagam


பாடலின் சிறப்பு:

வித்தியாசமான வரிகள்.விரகதாபம்/சோகம் கலந்த கலவை.இதில் காதலனை நண்பனாக(மித்ரா .....மித்ரா....) விளித்துப் பாடுவது அழகு கூடுகிறது.அடுத்து சில்லிடும் தமிழ் சொற்களை கூடும் வடமொழி சொற்கள் (வண்ணத்தில் இருக்கும்) பாடலின் விரகதாப உணர்ச்சியை இசைக்கிறது.”ஏதோ ஒரு படபடப்பு” என்ற வரிகள் முதல் முதலாக பாட்டில் போட்ட மாதிரி இருக்கிறது.இதற்கு முன் வந்திருக்கா?தெரியவில்லை.

செளமியா பாடலின் வரிகளில் உள்ள உணர்ச்சிகளை குரலில் இனிமையாக வெளிப்படுத்துகிறார்.ஒருஇடத்தில் ஐயர் மாமிஉச்சரிப்பு “ஷொல்லும்”
(சொல்லும்).கார்த்திக்ராஜா கவனிக்கவில்லை?.

கார்த்திக்ராஜா பாடலின் மூடுக்கேற்றார் போல் பின்னணியை சோகமாகப் பிண்ணியிருக்கிறார்.இசைக்கருவிகளும் விரகதாபம் + சோகம் கலந்த கலவையை பாடலுக்கு பின் அழகாக தொடர்கிறது.சத்தம் சற்று குறைத்திருக்கலாம்.அப்பாவின் சாயல் இசைக்கோர்ப்பில்.

பாடலின் கவுண்ட் 0.51ல் மெல்லிய தட்டல்களோடு டிரம்ஸ் சேருவதும் 1.01ல் வேறு இசைகருவிகள் பின்னணியில் மெலிதாக படர்வதும் சுகந்தம். அடுத்து 1.17ல் முதல் 1.42 வரை (வயலின்?வீணை?) கொஞ்சிக்குலாவுகிறது.2.20 - 2.52 வயலின்/கீபோர்டின் மீட்டல்கள் இனிமை.

கிழ் வரும் வரிகளை அற்புதமாகப் பாடி இருக்கிறார். Hats off Sowmya!

// ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர் தேடும் உயிர் தேடும் 
ஒரு கூடல் செய்வாய் நண்பா// 


ACHCHAMUNDU ACHCHAMUNDU




தரவிறக்கம் செய்ய:
கண்ணில் தாகம்-download


பாடல் கேட்க:
கண்ணில் தாகம்
அல்லது இங்கு கேட்க
கண்ணில் தாகம் தீருமோ

இனி பாடல் வரிகள்:
கண்ணில் தாகம் தீருமோ
மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் மாறுமோ
மித்ரா மித்ரா
கண்ணில் தாகம் கூடுமோ .........மித்ரா மித்ரா

கோபங்கள் பேசும்போது வேதனை கூடும்
ப்ரேமைகள் பேசும் போது மோகம் கூடும்
மெளனம்தான் பாடலா
வலி எல்லாம் தரும் ஊடலா
இதுபோதும் இது போதும்.
ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர் தேடும் உயிர் தேடும் 
ஒரு கூடல் செய்வாய் நண்பா 
கண்ணில் தாகம் தீருமோ ............மித்ரா மித்ரா

வீட்டின் தனிமையிலே
தீண்டி  என்னை சுகிப்பவனே 
கொஞ்சம் விலகிவிட்டால் 
முத்தம் பல பறிப்பவனே 
சோலை பூவெல்லாம் 
ஆடையாய் சூடிபார்ப்பவன் 
மாமழை நேரங்கள் 
ஈரமாய் என்னை சேர்பவன்
நீயா நீயா 
தனிமையில் செல்கிறாய் 
மனம் களைந்து சிரித்திட
கண்ணில் தாகம் தீருமோ ............மித்ரா மித்ரா
வீட்டின் தனிமையிலே

ஏதோ ஒரு பெருநெருப்பு 
பூவின் அசைவினிலே 
ஏதோ ஒரு படபடப்பு
சொல்லும்வார்த்தைகள் 
காற்றிலே தேய்ந்து போகுதே 
சிநேகம் வேறில்லை
புன்னகை நெஞ்சம் வேண்டுதே
கண்கள் மீண்டும் .......வலிகளும் போதுமே
இனி விடியலை நினைத்திடு
நெஞ்சில் அச்சம் பொங்குதே 

ஏனோ ஏனோ 
கண்ணீர் மிச்சம் தங்குதே 
ஏனோ ஏனோ

Saturday, October 3, 2009

உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்

என் விமர்சனத்திற்காகத்தான் கமலும் ரோன்னி ஸ்கூரூவாலாவும் நகத்தைக் கடித்துக்கொண்டு காத்திருப்பதாக ஒரு செய்தி வந்ததால் நானும் எழுதி விட்டேன்.நான் ஒரு ”காமன் மேன்” ஆதலால் சம்பளம் வந்துதான் குடும்பத்தோடு இப்போதுதான் பார்க்க முடிந்தது.காமன் மேனுக்கு டிக்கெட் செலவு 500/-.ரூபாய் 500/-செலவழிக்கும் நான் உன்னைப் போல் ஒருவனா?.தியேட்டர் சூப்பராச்சே!நான் ஒரு பொதுபுத்தி காமன் மேன்.

எப்போதுப் பார்த்தாலும் தீவரவாதத்தால் பாதிக்கப்படும் ஒரு பொது ஜனம் நொந்து போய் அதே தீவரவாதத்தை கையில் எடுத்து தீவரவாதிகளை தன் சுண்டுவிரல் கூடப்படாமல் ரீமோட் கண்ட்ரோல் செயல்கள் மூலம் கொல்லுகிறார்.(அதற்கு முன் சில இடங்களில் குண்டு வைத்து விடுகிறார்.) கொன்று வீட்டு காய்கறிப்பையோடு வீட்டுக்குப் போகிறார்.கதை ஒரு நாள் காலை ஆரம்பித்து மாலை காமன் மேன்/விமன்கள் சாமிக்கு விளக்கு வைக்கும் நேரத்தில்  படம் முடிகிறது.





கதை மதங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் கமலுக்கு கத்தி மேல் நடக்கும் சமாச்சாரம். அவரவர் மத கோணத்தில் பார்த்தால் Win-Lose அல்லது Lose-Win ந்தான் பார்ப்பார்கள் என்பதால் கமல் Win-Win சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.அதாவது கமலின் மெட்ராஸ் பாஷையில் சொன்னால் ”உனுக்கும் இல்ல எனக்கும் இல்ல.அல்லாரையும் கவர் பண்ணிட்டேன்”.

ஏன்?மீன் பிசினஸ்,புடவை பிசினஸ் போல் கமல் இருப்பது சினிமா பிசினஸ்.உள்ளதை உள்ளதுபடி சொல்லவது சினிமாவில் கஷ்டம்.

கமலைக் கஷ்டப்பட்டுதான் உன்னைப் போல் ஒருவனாக ஒத்துக்கொள்கிறோம்.காரணம் அவரின் பல வருட கதாநாயக பிம்பம் மனதில் உறைந்து கிடக்கிறது.நடிப்பு அவருக்குச் சொல்லித் தரவேண்டாம்.மிளிர்கிறார்.

வலை விமர்சனங்களில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கலாம் நாசர் நடித்திருக்கலாம்,என்று சொல்கிறார்கள். இது அபத்தம். இவர்களுக்கு வில்லன் என்ற பிம்பம் இல்லையா? காமன் மேனின் அப்பாவித்தனம் போய் ஒரு வித வில்லத்தனம் தெரியும் இவர்கள் நடிக்கையில்/ செய்கையில்.

நாசரின் வில்லத்தனமான மூக்கே அவருக்கு வில்லன் கேரக்டர்கள் வாங்கிக்கொடுத்திருக்கிறது.மோகன்லால் நமக்கு ரொம்ப பரிச்சியம் இல்லாத ஆள் அடுத்து அவரின் நடிப்பு அவரின் பிம்பத்தை மறைத்து விடுகிறது.ஒரு மலையாளத்தான் போலீஸ் ஆபிசர் என்ற ரீதியில்.


பல பாரதிராஜா,பாலசந்தர் படங்கள் வெற்றிக்கு காரணம் புதுமுகங்கள்.ரொம்ப வருடத்திற்கு முன் வந்த “சோட்டி-சி-பாத்” என்ற படம் காமன் மேன் அமோல் பாலேகர் நடித்ததினால் பல நாட்கள் ஓடியது.இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ”ஈரம்” படத்தின் நாயகி ‘காமன் கேர்ள்”தான்.அதனால்தான் மனதில் ஒட்டுகிறார்.லட்சுமி, பாரதிக்கு பதிலாகக் கூட புதுமுகங்கள் போட்டிருக்கலாம்.

படம் எந்த வித குழப்பம் இல்லாமல் வழுக்கிக்கொண்டுச்செல்கிறது.பத்துப்பக்க சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை படிப்பது மாதிரி.நேர்கோட்டு திரைகதை

மொட்டை மாடி லொகேஷன் அபாரம்.கேமராவும் சூப்பர்தான்.மோகன்லாலுக்கு அதிகாரம் இருந்தும்  தன்னுடைய இயலாமையை  வசனங்கள் மூலம் வெளிபடுத்தும் திரைக்கதை.அலட்டிக்கொள்ளாமல் அற்புதமாகச் செய்திருக்கிறார்.போலீஸ் ஆபிசராக வரும் ஆரிப்பும்  நம்மை கவர்கிறார்.லட்சுமியும் மோகன்லாலும் மோதிக்கொள்ளும் இடங்களில் வரும் வசனங்கள் ஷார்ப்.போலீஸ்காரர் (சிவாஜிராவ்)கடைசியில் கட்சி மாறுவது (இந்த ஸ்கெட்ச் கமல் இல்லை) யதார்த்தம்.

 ஆங்கில படம் போல கடைசி காட்சியும் யதார்த்தம்.

எல்லா காட்சிகளும் நம் கண் முன்னே நடக்கும் பிரமையை கேமரா கொண்டு வந்துள்ளது.ரொம்ப மென்மையான வித்தியாசமான இசை.ஸ்ருதி ஹாசனுக்குப் பாராட்டுக்கள்.

கமல் மொட்டை மாடியில் சகல விதமான டெக்னாலாஜியுடன் உட்கார்ந்துக்கொண்டு ஒரு மாஜிக் போல் செய்யும் செயல்கள் சற்று யதார்த்தமாக இல்லை.அதுவும் அந்த காமன்மேன் இந்த ஒன் டைம் வேலையை எந்த வித nervousness இல்லாமல்செய்வது.

குறைகள்:
கமிஷனர் ஆபிசில் கையில் பேக்குடன் எந்த வித கேள்வி இல்லாமல் கமல் நுழைவது.தண்ணீ வராத டாய்லெட்(அதுவும் கமிஷனர் அலுவலகத்தில்)அங்கு பாஸ்கர் பற்றிய சுஜாத்தாத்தனமான அபத்த காமெடிகள்.டீவி சேனல் பெண் கமிஷனர் முன் சிகரெட் பிடிக்கலாமா என்று கேட்பது படு அபத்தம்.அதுவும் பொது அறிவு இல்லாத டீவி சேனல் பெண்.



படிக்க திரைவிமர்சனம்:

“ஈரம்” படம் - முதுகு தண்டில் “சில்”