Tuesday, August 18, 2009

கூட்ஸ் வண்டியும்,நானும் -அனுபவம்

கூட்ஸ் வண்டி! இதை ஓடும்போது பார்ப்பது பிடித்தமான ஒன்று.அதுவும் சின்ன வயதில் இதைப் பார்ப்பது இன்னும் சுவராஸ்யம். அதிசயம்.


நகர் புறங்களில் பார்பபதை விட கிராமங்களில் இதன் அழகு கூடுவது மாதிரி ஒரு உணர்வு.வளைவுகளில் அல்லது மலை முகடுகளில் புகை வண்டி நீராவியைக் கக்கியபடி நெளிந்து செல்லும்போது ஒரு வசீகரமானத் தோற்றம் உண்டு. அயல் நாடுகளில் பெட்டிகள் இன்னும் அழகு.




(கார்டுக்கும் டிரைவருக்கும் சரியா “கெமிஸ்ட்ரி” ஒர்க் அவுட் ஆகுமா?)


வரிசைக் கலையாமல்,அதன் சக்கரங்கள் தண்டவாளத்தில் வழுக்கியபடி ”தடக் தடக்” என்ற பெருஞ்சத்தத்துடன் ஒவ்வொருப் பெட்டியும் மெதுவாக நம்மைக் கடக்கும்.எந்த ஊருக்குப் போகிறது? தெரியாது.


அடுத்த சுவராஸ்யம் பெட்டிகளை எண்ணுவது.


ஒன்று,இரண்டு,மூன்று என்று அதன் ஓடும் வேகத்தில் எண்ண ஆரம்பித்து, ஒரே மாதிரி அமைப்பால்,நடுவில் எண்ணிக்கைத் தவறி, விட்ட இடம் அடையாளம் தெரியாமல், எண்ணிக்கை விட்டுப் போவதுண்டு.கடக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்று சிலர் வாட்சில் டைம் பார்ப்பதைக்கூட நான பார்த்திருக்கிறேன்.


வழக்கமானப் பெட்டிகளை தவிர இதில் பெரிய உருளையான ஆயில் டாங்கர்களும் ,பாதி திறந்த பெட்டிகளும் (நிலக்கரி) நடுவில் இணைக்கப்பட்டு திடீர் என்று கண்ணில் பட்டு மரவடடைப் போல் ஊர்ந்துப் போவதுண்டு.சில சமயம் குதிரைகள் பெட்டிகளில் தென்படும். சில பெட்டிகளில் மொழி கடந்த காதலி/காதலன் பெயர்கள் கிறுக்கப்பட்டிருக்கும்.


இதற்கு போதிய மரியாதை கிடைப்பதில்லை. பயணிகள் ரயில்களுக்கு சிக்னலில் முன்னுரிமை அளிக்கப்படும். அதுவரை அங்காங்கே ஒன்றும் புரியாமல் அனாதையாக இவைகள் நிற்கும்.


இதில் கடைசிப்பெட்டி எனக்குப் பிடித்த ஒன்று.எப்போது வரும் என்று எதிர்பார்க்க வைக்கும்.கடைசி திறந்த வெளிப் பெட்டி கடக்கும் போது ஒரு கவிதையுடன் கடப்பது மாதிரி இருக்கும்.அதில் தேவதைப் போல் ஒரு உடையில் கார்டு தன் கையில் சிவப்பு அல்லது பச்சைக் கொடியை அசைத்தப்படி இருக்க கடக்கும் கடைசிப் பெட்டி. தண்டவாளம் வெறிச்சோடிப்போய் வெகுதூரத்தில் “தடக் தடக்’ என்ற சத்தம் மட்டும் காற்றில் அலைய கூட்ஸ் வண்டி கண்ணில் படாமல் எங்கோ பயணிக்கும்.


இதே மாதிரி நடு ஜாமத்தில் ஏதோ ஒரு இடத்தில் “கார்டின்” விசிலும், சிக்னலுக்காக விளக்கை ஆட்டுவதும்,அடுத்த நிமிடம் வண்டி புறப்படுவதும் அமானுஷ்யம்.


சின்ன வயதில் கூட்ஸ் வண்டியின் கடைசிப்பெட்டியால வசீகரிக்கப்பட்டு, பிற்காலத்தில் நான் கூட்ஸ் டிரெயின் “கார்டு” ஆகவேண்டும் என ஆசைப்பட்டது உண்டு.ஜாலியாக நமக்கென்று ஒரு தனிப் பெட்டி.சுதந்திரமாக உலவலாம். நிறையப் புத்தகங்கள் படிக்கலாம்.பாட்டு கேட்கலாம்.எல்லா ஊரும் பார்க்கலாம்.கட் அடிக்கலாம்.முக்கியமான ஸ்டேஷன் வந்தால் மட்டும் வெளி வந்து கொடியை ஆட்டி விட்டு உள்ளே போய் தூங்கலாம் என்று ஒரு கணக்கு.


அந்த காலத்தில் சினிமாகாரர்களுக்கும் இந்த கூட்ஸ் வண்டிகளின் மேல் ஒரு கிரேஸ் உண்டு.வில்லன் துரத்தலினால அண்ணன் தம்பி (அல்லது அப்பா மகன்)பிரிந்து,அண்ணன் கூட்ஸ் வண்டியிலும்,தம்பி பாஸஞ்சர் வண்டியிலும் ஏறி பிற்காலத்தில் சென்னையில் சந்திப்பார்கள்.டுயட் பாடுவதும் உண்டு.”கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல்” என்ற பாட்டும் உண்டு.சண்டைக்காட்சிகளும் உண்டு.திருட்டு ரயில் ஏறி வெளியூர் போகும் கதாநாயகனும் காண்பதுண்டு.


”அழியாத கோலங்கள்” படத்தில் சிறுவர்கள் கேட்டின் மீது உட்கார்ந்து, அதன் ஒட்டததிற்கு ஏற்றார் போல்,தலையை அசைத்து அசைத்துப் பார்பார்கள்.

ஹாலிவுட் படங்களில் அட்டகாசமாகக் காட்டுவார்கள்.

எங்காவது லேட்டாகப் போய் சேர்ந்தால் “என்ன கூட்ஸ் வண்டி மாதிரி மெதுவா வந்து சேர்றீங்க” என்று ஒரு சொலவடை உண்டு.


பிரயாணிகள் வண்டியும் இந்த கூட்ஸ் வண்டியும் சில சமயம் ஒன்றாக ரேஸ் மாதிரி இணையாக ஓடும்.சில சமயம் நாம் கடக்கும் ரயில்வே கிராசிங்கில் இவை நந்தி மாதிரி சிக்னலுக்காக நின்று பாடாய்ப் படுத்தும்.


இப்பொழுதெல்லாம் லோகோமோட்டீவ் என்ஜின்தான் இழுக்கிறது.ஒரு காலத்தில் கரி என்ஜின் இழுத்துக்கொண்டுப் போகும்.ரொம்ப நீளம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.கார்டு விசில்அடித்து கொடி காட்டுவார்,அடுத்த வினாடி டிரைவர் புரிந்து வண்டியை எடுப்பார்.இருவருக்கும் இடையில் நல்ல ”மானாட மயிலாட” போல் நல்ல ”கெமிஸ்டரி”


நல்ல வேளை நான் “கார்டு” ஆகவில்லை.சின்ன வயதில் கற்பனைச் செய்தது போல் அல்ல இந்த வேலை. பொறுப்பு அதிகம்.வாழ்க்கையே வெறுத்துவிடும். டிரைவரை விட இவருக்கு வேலை ஜாஸ்தி.




26 comments:

  1. ஒன்று,இரண்டு,மூன்று என்று அதன் ஓடும் வேகத்தில் எண்ண ஆரம்பித்து, ஒரே மாதிரி அமைப்பால்,நடுவில் எண்ணிக்கைத் தவறி, விட்ட இடம் அடையாளம் தெரியாமல், எண்ணிக்கை விட்டுப் போவதுண்டு.கடக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்று சிலர் வாட்சில் டைம் பார்ப்பதைக்கூட நான பார்த்திருக்கிறேன்//




    ஆஹா ! நான் வேகவேகமாக தலை ஆட்டி எண்ணுவேன். கோவில்பட்டி ரயில் நிலையம் தான் எனக்கு பொழுதுபோக்கு இடமே. வகுப்பறை போகாவிட்டால் அல்லது சாயுங்காலம் நேரங்களிலும் இங்கயே தான் உக்காந்திருப்பேன். ரயில் கிளம்புபோது அதில் ஏறிவிட்டு இறங்குவது திகிலான அனுபவம்.

    ஜாலியான பதிவு ரவி சார் .மீண்டும் மீ தி பர்ஸ்டு

    ReplyDelete
  2. இன்னொரு ஜீவனும இந்த கூட்ஸ் வண்டியை ரசித்து
    உள்ளார் என்பது சந்தோஷமாக உள்ளது.

    நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  3. ஷங்கரலிங்கம் said...

    //As usual brilliant//

    நன்றி ஷங்கரலிங்கம்.

    ReplyDelete
  4. சூப்பர் சார், ரொம்ப நல்லா வந்துருக்கு ... பழய நாட்களுக்கு கொண்டு சென்றது ..காலையில் கூகிள் தமிழ் வேலை செய்யல

    ReplyDelete
  5. அது ஒரு கனாக் காலம் said...

    // சூப்பர் சார், ரொம்ப நல்லா வந்துருக்கு ... பழய நாட்களுக்கு கொண்டு சென்றது ..காலையில் கூகிள் தமிழ் வேலை செய்யல//

    நன்றி அது ஒரு கனாக்காலம்.

    ReplyDelete
  6. கூட்ஸ் வண்டியென்றால் எனக்கு என் பால்ய கால(ஒன்றாவது வகுப்பு) காதலிகள் நினைவுக்கு வருகிறார்கள்.

    ReplyDelete
  7. ^^காதில்களின் பருமனை வைத்து இப்படியா கேலி செய்வது ?

    ReplyDelete
  8. என்.விநாயகமுருகன் said...

    //கூட்ஸ் வண்டியென்றால் எனக்கு என் பால்ய கால(ஒன்றாவது வகுப்பு) காதலிகள் நினைவுக்கு வருகிறார்கள்//

    நன்றி விநாயகமுருகன்.

    ReplyDelete
  9. Prakash said...

    //^^காதில்களின் பருமனை வைத்து இப்படியா கேலி செய்வது ?//

    ”சரக்கு”(brainy)ள்ளக் காதலிகள்?

    ReplyDelete
  10. //.. கே.ரவிஷங்கர் said...
    இன்னொரு ஜீவனும இந்த கூட்ஸ் வண்டியை ரசித்து உள்ளார் என்பது சந்தோஷமாக உள்ளது. ..//

    நானும்தான்..

    ReplyDelete
  11. பட்டிக்காட்டான்.. said...

    // நானும்தான்..//

    அப்படியா ரொம்ப சந்தோஷம்.

    ReplyDelete
  12. கூட்ஸ் வண்டிகளுக்கு இந்தியா முழுக்கவும் தனி வரவேற்பு உள்ளது. மலரும் நினைவுகளில் ’பெருசுகளின்’ அடையாளச்சின்னங்களில் ஒன்று கூட்ஸ் வண்டி.

    //கடைசி திறந்த வெளிப் பெட்டி கடக்கும் போது ஒரு கவிதையுடன் கடப்பது மாதிரி இருக்கும்.//

    எனக்கு ஒரு நீண்ட வெறுமையை கொடுத்துட்டு போன ஒரு எஃபெக்ட் இருக்கும். தூரமா கேக்குற ரயில் சத்தத்தை விட தாண்டிப்போன பிறகு கிடைக்கும் சத்தம் கொஞ்சம் வலிக்குறா மாதிரி இருக்கும். ஏதோ உறவு ஒண்ணு பிரிஞ்சா மாதிரி..

    ReplyDelete
  13. சென்ஷி said...

    //எனக்கு ஒரு நீண்ட வெறுமையை கொடுத்துட்டு போன ஒரு எஃபெக்ட் இருக்கும். தூரமா கேக்குற ரயில் சத்தத்தை விட தாண்டிப்போன பிறகு கிடைக்கும் சத்தம் கொஞ்சம் வலிக்குறா மாதிரி இருக்கும். ஏதோ உறவு ஒண்ணு பிரிஞ்சா மாதிரி..//

    எல்லோரையும் பாதித்து இருக்கிறது இந்த கூட்ஸ் வண்டி.நன்றி சென்ஷி.

    ReplyDelete
  14. நல்ல கட்டுரை ரவிசார்.. எனக்கு கூட்ஸ் வண்டிகள் அவ்வளவு பரிச்சயமில்லை.. சினிமாவில்தான்...
    ‘நந்தலாலா’ படத்தில் ‘மெள்ள ஊர்ந்து ஊர்ந்து’ கேட்டுப்பாருங்கள்...

    ReplyDelete
  15. தமிழ்ப்பறவை said...

    // நல்ல கட்டுரை ரவிசார்.. எனக்கு கூட்ஸ் வண்டிகள் அவ்வளவு பரிச்சயமில்லை.. சினிமாவில்தான்...
    ‘நந்தலாலா’ படத்தில் ‘மெள்ள ஊர்ந்து ஊர்ந்து’ கேட்டுப்பாருங்கள்...//

    நன்றி.கேட்கிறேன்.

    ReplyDelete
  16. August 20, 2009 1:02 AM
    " உழவன் " " Uzhavan " said...

    // அழகான பகிர்வு //

    நன்றி.

    ReplyDelete
  17. ஆகா! ரொம்பவும் அனுபவித்து அழகாக எழுதியிருக்கிறீர்கள்! படிக்கிற யாரும் இதற்கு முன்னால் தாம் பார்த்துப் பழகிய கூட்ஸ் வண்டியை நினைவில் கொண்டுவருகிற மாதிரி,
    அல்லது சாதாரணமாகப் பார்த்த இதில் இவ்வளவு அழகு இருக்கிறதா என்று நினைத்துக் கொள்கிற மாதிரி கூட்ஸ் வண்டி பற்றி எல்லாவற்றையும் எழுதிவிட்டீர்கள்.. எதுவும் பாக்கி வைக்காமல் எல்லாவற்றையுமே..

    ReplyDelete
  18. வாங்க ஜீவி சார்.கருத்துக்கு நன்றி. உங்களுக்கு பின்னூட்டம் போடுகையில் ஒரு முறை உங்களை என் வலைக்கு அழைத்தேன். என் சிறுகதைகளைப் படித்து உங்கள் கருத்து அறிய.அது எனக்கே மறந்து விட்டது.

    ReplyDelete
  19. //அது எனக்கே மறந்து விட்டது.//

    இனி அடிக்கடி வருவேன். எல்லாம் இந்த எழுத்தின் வசீகரம் படுத்தும் பாடு.

    ReplyDelete
  20. ஜீவி said...

    //இனி அடிக்கடி வருவேன். எல்லாம் இந்த எழுத்தின் வசீகரம் படுத்தும் பாடு//

    வாங்க சார்.நிறை குறைகளைச் சொல்லுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  21. இறந்த கால நினைவுகளை மீண்டும் தட்டியெழுப்பிய பதிவு. நானும் இதெயல்லாம் செய்திருந்தாலும், நாமும் இரயில் வண்டியில் பயணிக்கும் போது, நாம் இதனை கடக்கும்போதோ அல்லது முந்தும் போதோ எண்ணுவதுதான் கவிதை படிப்பது போன்ற ஒரு உணர்வை தோற்றுவிக்கும். சமீபத்திலும் இப்படி செய்தபோது ஏற்பட்ட உணர்வை வார்த்தையில் பதிக்க முடியாது.

    நன்றி.

    ReplyDelete
  22. வருகைக்கு நன்றி சார். கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!