Thursday, August 27, 2009

மதன் பாப் - வாள மீன் - ராஜாபார்வை









”வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும்” என்ற பாட்டைப் பாடியவர் கானா உலக நாதன்.பாட்டு ”சித்திரம் பேசுதடி” என்ற படம்.பாட்டு ஓவர் நை ஹிட்.உலக நாதன் ஓவர் நைட் செலிபரைடி.

ஒசாமா பின் லேடன் தோன்றும் ”அல் ஜஸீரா”(Al Jazeera)சானல் தவிர மீதி எல்லா சானல்களிலும் 24 மணி நேரமும் போட்டு துவைத்து எடுத்தார்கள் இந்தப் பாட்டை எல்லா FMகளிலும் போட்டுத்தாக்கினார்கள். தமிழகத்தில் ஓடும் எல்லா PT வண்டிகளிலும் இதேதான். அடுத்து எல்லா பாட்டு நிகழ்ச்சி சேனல்களிலும் மைக் பிடித்துக்கொண்டு நடுவர் ஆனார். சினிமாவில் தோன்றினார்.

இப்போது அவர் எங்கே?

_____________________________________________________________________





ராஜபார்வை(கமலின் 100 வது படம்) என்ற திரைப்படம் எனக்கு தெரிந்து கடந்த 20 வருடமாக எந்த சேனலிலும் போடப்படுவதில்லை. கமலின் சொந்த்ப்படம் இது.
என்ன காரணம்?

____________________________________________________________________








மதன் பாப் என்ற காமெடி நடிகரின் பாணி மூக்கை மேல் நோக்கி இழுத்து பல்லைக் காட்டிக்கொண்டு ”ஹி..ஹி..”சிரிப்பது.அவருக்கென்ற சில வேறு சில காமெடித் திறமைகள் உண்டு.எஸ்.வி.சேகரின் நாடகங்களில் வருவார் முன்னொரு காலத்தில். அதெல்லாம் இல்லாமல் இந்த “மூ.மே.நோ.இ.ப.கா.கொ” பாணியை அவர் மேல் திணித்து” மவனே...உனக்கு ஆயுசுக்கும் இதாண்டா” என்று ஆக்கியது பரிதாபம்.


அவரும் வேறு வழியில்லாமல் .....?

____________________________________________________________________

அம்பானி முதல் ஆண்டி வரை எல்லோரும் கூலிக்குத்தான் மாராடிக்கிறோம்.இந்த எப் எம் (FM) தொகுப்பாளினிகளும் அதே. பாவ்ல கேள்விகளும், பாசாங்கு சிரிப்புகளும்,கொஞ்சி பேசும் பேச்சுக்களும், சேனலுக்கு சேனல் பார்க்கலாம்.


நிகழ்ச்சியில் நேயர்களோடு பேசும் பேச்சு வழிசலோ வழிச்சல். FM நேயர்கள் விடும் ஜொல்கள் தாங்கமுடியவில்லை.


ஒரு சேனலில் அந்த இழுத்து இழுத்துச் சிரித்து பேசுவது soft porno தான்.


“உங்கள்ட்ட பேசனம்னு மூன்று மாசாமா முயற்சிக்கிறேன். இன்னிக்கித்தான் லைன் கிடைச்சுது.” இது ரூம் போட்டு வழிதல்.


படிக்க:


"டிஸ்கி” போடாமல் விட்ட கமலா






”பூவண்ணம்” ஷோபாவுடன் நடந்தவாறு.......

பழைய சினிமா பாட்டுக்கள் கேட்பது என்பது நம்மின் பழைய பிளாக் & வொயிட் போட்டோ ஆல்பத்தைப் பார்ப்பது போல் ஒரு சுகம்.இந்த பாடல்களில் தூசுபோல் படிந்திருக்கும் நம் வெகுளியான இளமை நினைவுகள்.
”தேன் சிந்துதே வானம்..” இந்தப் பாட்டைக் கேட்குபோது கூடவே பள்ளியின் மதியத்தின் முதல் பீரியட் ஞாபகம் வரும். டீச்சர் யாரும் வராததால் “கட்” அடித்து விட்டு பல்லாவரம் ஜனதா தியேட்டரில் படம். டிக்கெட் விலை 1.05 பைசா.
அடுத்து பழைய சினிமா பாடல்களில் உள்ள கவிதை நயம் அற்புதம்.சிம்பிள் மெட்டு.இனிமையான இசை.தமிழ் உச்சரிப்பு.
எனக்குப் பிடித்த பழைய பாடலகள் நிறைய இருக்கிறது.இப்போதைக்குச் சில பாடல்கள்.
_____________________________________________________________

.”பூ வண்ணம் போல நெஞ்சம்..”
அழியாத கோலங்கள் -1979-சலீல் செளத்ரி-ஜெயசந்திரன்-சுசிலா

ராஜாவின் முன்னோடி சலீல் செளத்ரி.Colourful music.


கல்லூரிக் காலத்தில் இந்த பாடலில் பிரதாப்பை வெட்டிவிட்டு நான உள்ளே போய் பாடல் முழுவதும் ஷோபாவுடன் நடந்து வந்திருக்கிறேன்.கால் வலிக்கிறது.

ஷோபா! செக்சியான மூக்குத்தி குத்திய முகம்.(காட்டன்?) புடவையில் ஒரு தேவதைப் போல் நடந்து வருவார்.(காட்டன்) புடவை புடவைதான்!ஒரு அடுத்தவீட்டுப்பெண் லுக் ஷோபாவிற்கு.


திருஷ்டி அசட்டுப் பிரதாப்போத்தன்.



அற்புதமான பின்னணி இசை. பட காட்சியும் பாடலும் இணைந்து போகும்.
பாலுமகேந்திரா.....................வாச்சே!

ஆடியோ



வீடியோ

________________________________________________

”ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது ”
மதன மாளிகை-1976 -எம்.பி.சீனுவாசன் -ஜேசுதாஸ்-சுசிலா

One of my favourite song!

ஜேசுதாஸ் சூப்பர்.ஜேசுதாசின் இனிமை சுசிலாவிடம் இல்லை.எம்.பி.சீனுவாசன் திறமையான இசையமைப்பாளர்.ஆனால் பிரகாசிக்கவில்லை.

ஏரியிலே ஒரு காஷ்மீர்

________________________________________________

2. “காதலின் பொன்வீதியில் காதலன் பண் பாடினான்”
பூக்காரி-1973- MSV-ஜானகி-டிஎம்எஸ்
பாட்டின் கவிதை நயம் பாருங்கள்.நல்ல இசை.பாட்டினோடு தொடர்ந்து வரும் மிருதங்கம்.இனிமையான ஹம்மிங். எல்லாம் பொருந்திவருகிறது.
ஜானகி- ஒரு மாதிரி கீச் இனிமை.
________________________________________________



3.”தேன் சிந்துதே வானம்.....”
பொண்ணு தங்க மனசு-1973-SPB-ஜானகி- ஜி.கே.வெங்கடேஷ்

இனிமையான சிம்பிள் மெட்டு.இசைஞானி ராஜாவிற்கு இந்தப் பாட்டின் கம்போசிங்கில் முக்கிய பங்கு உண்டு. ராஜாவின் மணத்தை இந்தப் பாட்டில் உணரலாம்.ராஜா ஜி.கே.வெங்கடேஷூக்கு அப்போ ”அசிஸ்டெண்ட்”.




________________________________________________



"அன்பு மேகமே இங்கு ஓடிவா”
எங்கம்மா சபதம் -1973-வாணி-SPB-விஜய பாஸ்கர்

வாணியின் குரல் இனிமை.விஜய பாஸ்கர் நல்ல இசையமைப்பாளர்.




________________________________________________

"உன்னோடு என்னொன்னவோ ரகசியம்”
தூண்டில் மீன் - 1977 - வி.குமார் -ஜெயசந்திரன்,சசிரேகா

அற்புதமான பின்னணி இசை.கவிதை நயம்.




________________________________________________

சந்தாவோ ஓ சந்தா (Chanda o Chanda)-1971-லதா-ஆர்.டி.பர்மன்


ஒரு இந்தி பாட்டு. எங்கோ ஒரு லவுட் ஸ்பீக்கரிலிருந்து காற்றில் மிதந்து வந்து சின்ன வயதில் மனதை பாதித்தது.இருபது வருடங்கள் கழித்துதான் விவரங்கள் தெரியும்.ஆச்சரியம். இது 1968 வெளி வந்த பாலசந்தரின் ”எதிர் நீச்சல்” படத்தின் ரீமேக்.இந்த பாட்டு “தாமரைக் கன்னங்கள்...தேன் மலர்”..இன் இந்தி பதிப்பு.அதில் டூயட் இதில் சோலோ.

வீடியோவில் அந்த காட்சியில் ஒருவர் பேப்பர் படிக்கிறார். தமிழில் மேஜர் பேப்பர் படிப்பார்.


இதில் பல்லவி முடிந்து அற்புதமான கிடாரின் strumming அடுத்து ராஜா டைப் புல்லாங்குழல். எப்படி? Inspiration? Coincidence?

________________________________________________

”கங்கை நதியோரம் ராமன் நடந்தான்”
வரப்பிரசாதம்-1976-ஆர்.கோவர்த்தன் -வாணி-ஜேசுதாஸ்

கவிதை நயம். இனிமையான குரல்கள்.



________________________________________________

"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்”-நான் ஏன் பிறந்தேன் - 1972-TMS
இசை-சங்கர் கணேஷ்

TMS இன் குரல்.

இந்தக் கால “நான் பாடும் மெளனராகம் கேட்கவில்லையா”.

தமிழ் உச்சரிப்புப் பாருங்கள். இதில் கவிதை நயம் பாருங்கள்.


என் பள்ளிகூட நோட்டில் எழுதி வைத்து அடிக்கடி படிப்பேன் அப்போது.
________________________________________________

Monday, August 24, 2009

"டிஸ்கி” போடாமல் விட்ட கமலா













காலையில் எழுந்ததிலிருந்து கமலாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.போன் அருகில் போவாள்.ரிசீவரை எடுப்பாள்.போன் எதுவும் செய்யாமல் வைத்து விடுவாள்.சற்று நேரம் கழித்து மறுபடியும் ரிசீவரை எடுப்பாள்.அதே போல் எதுவும் செய்யாமல் வைத்து விடுவாள். எதுவும் ஒடவில்லை.ஒன்றும் புரியாமல் பைத்தியமாய் ஆனாள். அதே நினைவு சுழற்றி சுழற்றி அடித்தது.


சே! பட்டும் படாமல் சொல்லி இருக்கலாம்.எல்லாம் தெரிந்தாற் போல் சொன்னது மகா அசட்டுத்தனம். இப்போது போன் செய்தால் அதை விட அபத்தம் வேறு இல்லை.மனது கனக்க பல் தேய்க்கக் கிளம்பினாள்.


இரண்டு நாளாக இப்படித்தான் இருக்கிறாள்.அவளுக்கே அவள் மீது கோபம் கோபமாக வந்தது. இரண்டாவது நாளிலிருந்து தன் நிலையை குடும்பத்தார் கவனிக்கத்தொடங்கி விட்டார்கள் என்பதை உணர்ந்தாள்.


ஏனோதானோவென குளித்துவிட்டு பூஜை ரூமுக்கு வந்து உட்கார்ந்தாள்.


”அம்மா !அம்மா !.....என்னாச்சு உனக்கு?”


”ம்” கமலாவிடம் சுரத்தில்லை.


ஸ்வேதா அம்மாவிடமிருந்து தீக்குச்சியைப் பிடிங்கினாள்.


“மாட்ச் ஸ்டிக்க உரசமாலேயே குத்து விளக்குத்திரிகிட்ட காட்டிட்டிருக்க ”சம்திங் பேசிகல்லி மிஸ்ஸிங்ம்மா...” என்று சொல்லிக்கொண்டே குத்துவிளக்கைப் பற்ற வைத்தாள் ஸ்வேதா.


”ஒண்ணுமில்லடி.... ஏதோ ஒரு மூட்ல” எழுந்து கிச்சனுக்குள் சென்றாள்.


”சத்தியமா சம்திங் மிஸ்ஸிங்ம்மா.... நா இடது கைல விளக்கப் பத்த வச்சேன்...கண்டுக்கவேயில்லை. மத்த நாள்ன போட்டுத் தள்ளிடுவ.....”


”ஒண்ணுமில்லடி...”என்றாள் அம்மா மறுபடியும்.



ஸ்வேதா அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.


“ஓ...கடவுளே! எவரிதிங் மிஸ்ஸிங்ம்மா..! நா குளிக்காம உன்ன கட்டிக்கிட்டேன்.நீ வள்ளுன்னு விழலயே ?” பெரிதாகச் சத்தம் போட்டுச் சிரித்தாள் ஸ்வேதா.


கமலா எதுவும் பேசவில்லை. உணர்ச்சியற்று ஸ்வேதாவைப் பார்த்து புன்னகைப் புரிந்தாள்.அதில் சவக்களைத் தட்டியது.


மகள் தன்னை கவனிக்கத் தொடங்கியதும் ,இயல்பு நிலைக்கு பிடிவாதமாக தன்னைத் தள்ள தள்ள ,ஆனால் அந்த நினைவு வேறு பக்கம் தரதரவென பிடித்து இழுத்தது.


கமலா நேற்று தன்னுடைய பழைய காலேஜ் மேட் கீதாவை ஏதேச்சையாக தன் பிளாட் காம்பளக்சில் பார்த்தாள்.தொடர்பெல்லாம் விட்டுப்போய் எவ்வளவு வருடம் கழித்துப் பார்க்கிறார்கள். இருவருக்கும் பூரிப்புத் தாங்கவில்லை.இருவரும் கட்டிக்கொண்டார்கள்.
வீட்டிற்கு அழைத்துப் போனாள் கமலா.


‘என் பொண்ணு அகல்யாக்கு...மாப்பிள்ளைப் பார்த்திருக்கேன்...உங்க பிளாட் “சி” பிளாக்ல எட்டாம் நம்பர் இருக்கிற பையன்....ஆனந்த்...எம்.பி.ஏ...”


"நல்ல தங்கமான பையன்.தைரியமா சம்பந்தம் பண்ணிக்கலாம்.டீசண்டான குடும்பம்.”சட்டென்று பதிலளித்தாள் கமலா.


கொஞ்சம் நேரம் பேசி விட்டு கீதா கிளம்பிவிட்டாள்.


இதுதான் இரண்டு நாளாய் கமலாவைப் போட்டு பிறாண்டி எடுத்தது.ஆனந்தைப் பற்றி என்ன தெரியும் எனக்கு?ஏதோ போகும் போதும் வரும் போதும் எப்போவாவது கண்ணில் படுவான். ”தைரியமா சம்பந்தம் பண்ணிக்கலாம்” இதை வேறு குடுகுடுவென முந்திரிக்கொட்டையாய் சொல்லித் தொலைத்து விட்டோம். கீதா போனவுடன்தான் இந்த முந்திரிக்கொட்டைத்தனம் உறைத்தது.பையன் குடும்பமும் அவ்வளவாக பரிச்சியம் கிடையாது.


பட்டும் படாமலும் “எனக்குத் தெரிஞ்சவரை’ நல்ல குடும்பம் என பொத்தம் பொதுவாக சொல்லியிருக்கலாம்.அதுதானே உண்மை?கீதா வேறு அவள் வார்த்தையை நம்பித்தான் பாக்கு வெத்தலை மாற்றப்போவதாகச் சொன்னாள்.
இதைத்தான் கமலாவால் தாஙகவே முடியவில்லை.படுத்தி எடுத்தது.


அந்த பெண்ணின் நல்ல வாழ்க்கைக்கு நான் தான் பொறுப்பா?சரியாக இல்லாவிட்டால்...?வாழ்க்கையில் எதற்கெல்லாம் பயந்து நடுங்குவது.அவரவர் தலைவிதிப் படிதான் எல்லாம் என்றாலும் தன் ரூபத்தில்தான் அந்த பெண்ணின் தலவிதி நிச்சியக்கப்பட்டுவிட்டதாக மனது பிசைய ஆரம்பித்தது.


ஆனால் அப்போது வெகுளித்தனமாகத்தான் சொன்னோம் என்று நினைத்தவுடன் மனது அழுதது.இது யாருக்குத் தெரியப்போகிறது.


வீட்டில் மகளிடம் மட்டும் சொல்லி தன் பாரத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டாள் கமலா .ஸ்வேதா “இந்த சில்லி மேட்டருக்குப் போயா...இதையெல்லாம் போட்டுக்குழப்பிக்காத”என்று அம்மாவை முறைத்தாள்.


திருமண நாளும் வந்தது.மண்டபத்தில்முதல் வரிசையில் உட்கார்ந்துக்கொண்டு ஆனந்தை அடிக்கடி உற்று பார்த்து “நல்ல பையன்” மாதிரிதான் தெரிகிறது என்று மனதை சமதானப்படுத்திக்கொண்டாள்.மறுபக்கம் அகல்யா-ஆனந்த் பெயர் பொருத்தத்தில் ஆரம்பித்து களையான முகம்,உயரம்,நிறம்,உடம்பு வாகு,...அப்படிப் பொருந்தியிருந்தது.சே! தன் கண்ணே பட்டு விடும் போல் இருந்தது. அபூவர்மான ஜோடி!இப்படி பொருந்திவருவதில் திருஷ்டி விழாமல் இருக்க வேண்டுமே! மனசு படபடத்தது.


தாலிக்கட்டும் சமயத்தில் தான் ஆசிர்வதித்த மாதிரி இந்த உலகத்தில் யாரும் மணமக்களை இப்படி ஆசிர்வதித்திருக்க மாட்டார்கள் என்று நினைத்துக்
கொண்டாள்.வீடு திரும்பினாள்.


மாலை வீட்டில் -


“என்னம்மா!முகம் பிரைட்டா..ஆ.!இப்பத்தான் என் ஒரிஜனல் அம்மா..கல்யாணம் எப்படி? ஆனந்த கால்ல விழுந்திட்டயா..!“ மகள் காலேஜ் விட்டு வந்ததும் எதுவும் செய்யாமல் முதல் வேலையாக அம்மாவிடம்தான் பேசினாள்.


“முஹுர்த்த ஆசிர்வாதம் செய்த கையோட....இந்த ஜோடி ஒரு குறையும் இல்லாம நல்லா இருக்கனம்...அதுக்கு திருப்பதிக்கு நடந்தே வரேன்... என்னால எப்ப முடிஞ்சுதோ....அப்பன்னு வேண்டிகிட்டேன்.... பாரம் போயிடுச்சு”


முற்றும்


இந்த கதையில் கொஞ்சம் பெப்பர் அண்ட் சால்ட் தூவி, இழுத்து ஒரு ட்ரமாடிக் டிவிஸ்ட்கொடுத்தால் -

முடிவு -2


கால ஓட்டத்தில் கமலா,ஆனந்த், கீதா எல்லோரும் ஏரியா மாறி மாறி ஒருத்தகொருத்தர் தொடர்பு இல்லாமல் இருந்தார்கள்.வேணுமென்றே கமலா அவர்களைத் தவிர்த்தாள்.

கமலா ஐந்து வருடம் கழித்து ஒரு நாள் கீதாவின் வீட்டு போன் நம்பர் கண்டிப்பிடித்து மிகுந்த ஆர்வத்துடன்.....

”ஹலோ,,,கீதா வீடா?’

“ஆமாம். .."

"யாரு பேசறீங்க?’

”அவங்க சன்-இன்-லா சுந்தர்ராமன் பேசறேன்...”

சுந்தர்ராமன்னா.... அகல்யாவோட.....”

“என்னோட வொய்ப்தான்.
அகல்யா அவங்க அம்மாவோட ஷாப்பிங்க் போய் இருக்காங்க”

“நீங்க யாருங்க.......?”

கமலா விறுவிறுத்து போய் எதுவும் பேசாமல் பொட்டென்று போனை வைத்துவிட்டு அவசர அவசரமாக ஆனந்தின் நம்பரை பேய் மாதிரிஅரை மணி நேரம் தேடி கண்டுபிடித்து டயல் செய்தாள்.


“ஆனந்த் வீடா...? ”


“ஆமாங்க...”


“நீங்க யாருங்க பேசறீங்க?”


“ஆனந்த் வொய்ப் அர்ச்சனா பேசறேன்...”


“சாரி...ராங்க் நம்பர்....” கமலா அவசரமாகப் போனை வைத்தாள். கை சற்று நடுங்கியது.


முற்றும்



Tuesday, August 18, 2009

கூட்ஸ் வண்டியும்,நானும் -அனுபவம்

கூட்ஸ் வண்டி! இதை ஓடும்போது பார்ப்பது பிடித்தமான ஒன்று.அதுவும் சின்ன வயதில் இதைப் பார்ப்பது இன்னும் சுவராஸ்யம். அதிசயம்.


நகர் புறங்களில் பார்பபதை விட கிராமங்களில் இதன் அழகு கூடுவது மாதிரி ஒரு உணர்வு.வளைவுகளில் அல்லது மலை முகடுகளில் புகை வண்டி நீராவியைக் கக்கியபடி நெளிந்து செல்லும்போது ஒரு வசீகரமானத் தோற்றம் உண்டு. அயல் நாடுகளில் பெட்டிகள் இன்னும் அழகு.




(கார்டுக்கும் டிரைவருக்கும் சரியா “கெமிஸ்ட்ரி” ஒர்க் அவுட் ஆகுமா?)


வரிசைக் கலையாமல்,அதன் சக்கரங்கள் தண்டவாளத்தில் வழுக்கியபடி ”தடக் தடக்” என்ற பெருஞ்சத்தத்துடன் ஒவ்வொருப் பெட்டியும் மெதுவாக நம்மைக் கடக்கும்.எந்த ஊருக்குப் போகிறது? தெரியாது.


அடுத்த சுவராஸ்யம் பெட்டிகளை எண்ணுவது.


ஒன்று,இரண்டு,மூன்று என்று அதன் ஓடும் வேகத்தில் எண்ண ஆரம்பித்து, ஒரே மாதிரி அமைப்பால்,நடுவில் எண்ணிக்கைத் தவறி, விட்ட இடம் அடையாளம் தெரியாமல், எண்ணிக்கை விட்டுப் போவதுண்டு.கடக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்று சிலர் வாட்சில் டைம் பார்ப்பதைக்கூட நான பார்த்திருக்கிறேன்.


வழக்கமானப் பெட்டிகளை தவிர இதில் பெரிய உருளையான ஆயில் டாங்கர்களும் ,பாதி திறந்த பெட்டிகளும் (நிலக்கரி) நடுவில் இணைக்கப்பட்டு திடீர் என்று கண்ணில் பட்டு மரவடடைப் போல் ஊர்ந்துப் போவதுண்டு.சில சமயம் குதிரைகள் பெட்டிகளில் தென்படும். சில பெட்டிகளில் மொழி கடந்த காதலி/காதலன் பெயர்கள் கிறுக்கப்பட்டிருக்கும்.


இதற்கு போதிய மரியாதை கிடைப்பதில்லை. பயணிகள் ரயில்களுக்கு சிக்னலில் முன்னுரிமை அளிக்கப்படும். அதுவரை அங்காங்கே ஒன்றும் புரியாமல் அனாதையாக இவைகள் நிற்கும்.


இதில் கடைசிப்பெட்டி எனக்குப் பிடித்த ஒன்று.எப்போது வரும் என்று எதிர்பார்க்க வைக்கும்.கடைசி திறந்த வெளிப் பெட்டி கடக்கும் போது ஒரு கவிதையுடன் கடப்பது மாதிரி இருக்கும்.அதில் தேவதைப் போல் ஒரு உடையில் கார்டு தன் கையில் சிவப்பு அல்லது பச்சைக் கொடியை அசைத்தப்படி இருக்க கடக்கும் கடைசிப் பெட்டி. தண்டவாளம் வெறிச்சோடிப்போய் வெகுதூரத்தில் “தடக் தடக்’ என்ற சத்தம் மட்டும் காற்றில் அலைய கூட்ஸ் வண்டி கண்ணில் படாமல் எங்கோ பயணிக்கும்.


இதே மாதிரி நடு ஜாமத்தில் ஏதோ ஒரு இடத்தில் “கார்டின்” விசிலும், சிக்னலுக்காக விளக்கை ஆட்டுவதும்,அடுத்த நிமிடம் வண்டி புறப்படுவதும் அமானுஷ்யம்.


சின்ன வயதில் கூட்ஸ் வண்டியின் கடைசிப்பெட்டியால வசீகரிக்கப்பட்டு, பிற்காலத்தில் நான் கூட்ஸ் டிரெயின் “கார்டு” ஆகவேண்டும் என ஆசைப்பட்டது உண்டு.ஜாலியாக நமக்கென்று ஒரு தனிப் பெட்டி.சுதந்திரமாக உலவலாம். நிறையப் புத்தகங்கள் படிக்கலாம்.பாட்டு கேட்கலாம்.எல்லா ஊரும் பார்க்கலாம்.கட் அடிக்கலாம்.முக்கியமான ஸ்டேஷன் வந்தால் மட்டும் வெளி வந்து கொடியை ஆட்டி விட்டு உள்ளே போய் தூங்கலாம் என்று ஒரு கணக்கு.


அந்த காலத்தில் சினிமாகாரர்களுக்கும் இந்த கூட்ஸ் வண்டிகளின் மேல் ஒரு கிரேஸ் உண்டு.வில்லன் துரத்தலினால அண்ணன் தம்பி (அல்லது அப்பா மகன்)பிரிந்து,அண்ணன் கூட்ஸ் வண்டியிலும்,தம்பி பாஸஞ்சர் வண்டியிலும் ஏறி பிற்காலத்தில் சென்னையில் சந்திப்பார்கள்.டுயட் பாடுவதும் உண்டு.”கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல்” என்ற பாட்டும் உண்டு.சண்டைக்காட்சிகளும் உண்டு.திருட்டு ரயில் ஏறி வெளியூர் போகும் கதாநாயகனும் காண்பதுண்டு.


”அழியாத கோலங்கள்” படத்தில் சிறுவர்கள் கேட்டின் மீது உட்கார்ந்து, அதன் ஒட்டததிற்கு ஏற்றார் போல்,தலையை அசைத்து அசைத்துப் பார்பார்கள்.

ஹாலிவுட் படங்களில் அட்டகாசமாகக் காட்டுவார்கள்.

எங்காவது லேட்டாகப் போய் சேர்ந்தால் “என்ன கூட்ஸ் வண்டி மாதிரி மெதுவா வந்து சேர்றீங்க” என்று ஒரு சொலவடை உண்டு.


பிரயாணிகள் வண்டியும் இந்த கூட்ஸ் வண்டியும் சில சமயம் ஒன்றாக ரேஸ் மாதிரி இணையாக ஓடும்.சில சமயம் நாம் கடக்கும் ரயில்வே கிராசிங்கில் இவை நந்தி மாதிரி சிக்னலுக்காக நின்று பாடாய்ப் படுத்தும்.


இப்பொழுதெல்லாம் லோகோமோட்டீவ் என்ஜின்தான் இழுக்கிறது.ஒரு காலத்தில் கரி என்ஜின் இழுத்துக்கொண்டுப் போகும்.ரொம்ப நீளம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.கார்டு விசில்அடித்து கொடி காட்டுவார்,அடுத்த வினாடி டிரைவர் புரிந்து வண்டியை எடுப்பார்.இருவருக்கும் இடையில் நல்ல ”மானாட மயிலாட” போல் நல்ல ”கெமிஸ்டரி”


நல்ல வேளை நான் “கார்டு” ஆகவில்லை.சின்ன வயதில் கற்பனைச் செய்தது போல் அல்ல இந்த வேலை. பொறுப்பு அதிகம்.வாழ்க்கையே வெறுத்துவிடும். டிரைவரை விட இவருக்கு வேலை ஜாஸ்தி.




Friday, August 14, 2009

நமுத்துப்போன அம்மா - கவிதை



திடீரென்று ஏதோ ஆசை
சுட்ட அப்பளம் சாப்பிட
பள்ளிச்செல்லும் அவசரத்தில்
கேட்டப் பையனுக்கு
அப்பளம் சுட்டுப் போடாமல்
திட்டி அனுப்பி விட்டாள்
அமமா
மனம் பொருக்காமல்
பாறங்கல்லாய் கனக்க
அவசரமாக இரண்டு சுட்டு
சின்ன டப்பாவில் போட்டு
பெரிய சிபாரிசில்
பள்ளி உள்ளே போன டப்பா
அடக்கமுடியாத ஆர்வத்தில்
வகுப்பு பாடங்களுனூடே
திறக்கப்படும்போதும்
மூடப்படும்போதும்
பையனின் முகத்திலும்
டப்பாவின் உள்ளேயுமாய்
கூடுவிட்டு கூடு பாய்ந்து
பார்க்கப்பட்ட அம்மா
மதிய உணவு இடைவேளையில்
சாப்பிட மறக்கப்பட்டு
நமுத்தேப் போனாள்
மாலை பள்ளிவிட்ட அவசரத்தில்
மனம் பொருக்காமல்
பாறங்கல்லாய் கனக்க
நமுத்துப் போன அம்மாவின்
சில தூள் அம்மாக்களை
மட்டும் கவனமாக
டப்பாவில் போட்டு
மீதி அம்மாவை குப்பைத்
தொட்டியில் கொட்டி
ஒரு முறை குலுக்கிப்
பார்த்து கொண்டான் மறக்காமல்
வீட்டில் இருக்கும் அம்மாவிற்கு
காட்ட



படிக்க சிறுகதை:

”பர்மிஷன் சேகர்” கேட்ட சாவு துக்கம்







Wednesday, August 12, 2009

அய்யோ!.சூப்பர்!..சினிமா வசனங்கள்..

சிறு வயதில் நான் பார்த்த சினிமாக்களில் அடிக்கடி வரும் வசனங்களை இப்போது நினைத்தால் அய்யோ....அம்மா! ஆனால் அதே சமயத்தில் ஒரு வெட்கம் கலந்த சிரிப்பு வருகிறது.ஏன்?அப்போது மக்குத்தனமாக ரசித்தது.ஆம்!அப்போதைய “பஞ்ச்” டயலக்குகள்.

இப்போது உள்ள தலைமுறைத் தப்பிவிட்டது.

கிழே சில சாம்பிள்கள்:-

  • “போன்னு சொல்லிட்ட இல்ல..பெத்த தகப்பனயே..!போறேன்...ஆனா போவறத்துக்கு முன்னாடி ஒன்னு சொல்லிட்டுப்போறேன்....(கதவுக்கு அருகில் நின்று 5 நிமிட வசனம்.கடைசியில் துண்டை உதறித் “தூத்தேறி”)
(சிவாஜி தன் கன்னக்கதுப்புகள் துடிக்க,கண்களில் நீர் தளும்பு வசனம் பேசுவார். நாங்கள் கைத்தட்டுவோம்)
  • ”முள்ளுல சேல விழுந்தாலும், சேலல முள் விழுந்தாலும் நஷ்டம் ொட்டச்சிக்குதான்.ஆம்பிளைங்க உதறிட்டுப் போயிடுவாங்க”
  • ”ஒண்ணு சொல்றேன்..நீங்க பணக்காரங்க.....மேல் படில இருக்கீங்க..ஆட்டம் போட்டு தவறி விழுந்தா அடிபடறது நீங்கதான்...ஆனா நாங்க ஏழைங்க எங்க கால் எப்போதுமே இந்த பூமித்தாய் மேலதான்.விழுந்தாலும் காயம் ஒண்ணும் படாது”
  • ”அவ இப்படித்தான் துள்ளிக்கிட்டு திரிவா.... ஒருத்தன் வந்து மூக்கணாம் கயிறு போட்டு அடக்கின தெரியும் இவளோட திமிறு.பொட்டிப்பாம்பா அடங்குவா”
  • (மகள்)”பால் திரிஞ்சு போச்சும்மா.... திரிஞ்சு போச்சு..நான் எதுக்குமே லாயக்கில்ல”.(அம்மா) என்னடி..சொல்ற..! (மகள்)ஆமாம்மா...நா எச்சில் மாங்கா ஆயிட்டேன்....கெட்டுப் போயிட்டேம்மா....கெட்டுப் போயிட்டேன்.
  • ” ஒரு குடும்பத்துல ஆம்பிள கெட்டுப் போவறது,வீட்லேந்து வெளில எச்சி துப்பற மாதிரி, அதே பொம்பள கெட்டுப் போவறது,தன் மேலேயே தானே எச்சில் துப்பக்கிற மாதிரிம்மா ... மாதிரிம்மா.... .(குடும்பத்தில் வாயைப் பொத்திக்கொண்டு (பன்றிக் காய்ச்சல் வந்த மாதிரி)அழுவார்கள்.(செந்தாமரை வசனம்?)
  • ”நீ ஒருத்தனுக்கு முந்தானை விரிச்சா தாய்யா இருந்தா.இப்படிப் பண்ணுவியா!”
  • ”நீ வயசுக்கு வந்தப் பொண்ணும்மா...! பொழுது சாய்ந்து விளக்கு வச்சப்பறம் வீட்ட விட்டு தாண்டாக்கூடாது...ஊர்க்காரங்க சும்மா இருக்க மாட்டாங்க ...ஆமா சொல்லிபுட்டேன்”
  • ”ஒரு குடும்பத்துல அம்மாங்கிறவ மாட்டுவண்டியில சக்கரத்தில இருக்கிற “அச்சு” மாதிரி.அவதான் ஆதாரம்.அச்சு கழண்டுப்போச்சுன்னா வண்டி கொடச் சாஞ்சுடும்....”
  • ”பணப்பித்துப்பிடிச்ச நாகலிங்கம்!எவ்வளவுதான் பங்களா,தோட்டம்,தொறவுன்னு சொத்து சேத்தாலும்..எதுவும் கைல எடுத்திட்டுப் போக முடியாது.மனுஷனுக்கு ஆறு அடிதான் சொந்தம்”

  • “என்னதான் இருந்தாலும் அவன் உன்ன தொட்டுத் தாலிகட்டி மூணு முடிச்சுப் போட்டவன்.அவன் எது சொன்னாலும் பொறுத்துக்கம்மா...”

தாய் மாமன்/வில்லன்/பண்ணையார்/தாலியைப் பிடித்துக்கொண்டு பேசும் வசனங்கள் என்று நிறைய உண்டு. யாராவது எழுதலாம்.

தெலுங்கு டப்பிங் பட வசனங்களும் சூப்பரா இருக்கும்.



லேட்டஸ்ட் வசனம்: “ஏய்.. செல்லம்! கனவுல டெய்லி வாடா! என்னக் கட்டிப் பிடிச்சு முத்தம் குடுடா!” ( பொழுது சாய்ந்து விளக்கு வச்சப்பறம் பேசுகிறார்)



Tuesday, August 11, 2009

உரையாடல் போட்டி-பரிசு பெறாதவர்கள்

பிள்ளையார் சதுர்த்தி அன்று தெருவில் நோக்குமிடங்களெல்லாம் கலர் கலரான குடைகள் தெரிவது மாதிரி எங்கு நோக்கினும் உரையாடல்...
உரையாடல்...உரையாடல்...உரையாடல்...

சரி.. நாமும் ஒரு பதிவு போட்டுட்டா என்ன என்பதாக இந்தப் பதிவு.

யாரோ ஒருவர் ஏர்டெல் சூப்பர் சிங்கரில் ”not selected" என்று நடுவர்கள் கிர்ர்ர்ர்ரென்று பஸ்ஸரில் அடித்து சிவப்பு லைட்எரிந்தும் பிடிவாதம் பிடித்துக்கொண்டு போகாமல் அங்கேயே நிற்கிறார்.

சிலர் பரிசுக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காரப்பாக்கத்தில்
(unapproved)அரைக்கிரெளவுண்டுக்கு அட்வான்ஸும்,செளபாக்கியா வெட் கிரைண்டருக்கு முன் பணமும் கொடுத்ததாகக் கேள்வி.ஆனால் பரிசு கிடைக்காமல் புலம்பல்கள்.

சில பேர் சில கதைகளை சிபாரிசு செய்கிறார்கள் பரிசுக்காக. அவர்களும் மற்ற எல்லாக் கதைகளை படித்துப் பார்த்து சிபாரிசு செய்தார்களா?

பரிசு பெறாத பதிவர்கள்,பரிசு பெற்ற 20 கதைகளைத் தவிர இவர்கள் பரிசு பெறாத எல்லோர்க் கதைகளையும் படித்தார்களா? அதே மாதிரி பரிசு பெற்றவர்களும் படித்தார்களா?நான் 197 கதைகளை முழுமையாகப் படித்தேன்.மீதிக் கதைகள் முதல் இரண்டாவது பாராவிலேயே முடிவு தெரிந்து விட்டது.இது அனுபவம் கொடுத்த பழக்கம்.

நடுவர்கள் பொறுமையாக 250 கதைகளைப் படித்து தரம் பிரித்து பரிசுக்குரியவை அல்லாதவையாக பிரித்து ரிசல்ட் வெளியிட்டார்கள்.அவர்களுக்கு எவ்வளவு அனுபவம் வந்திருக்கும் யோசித்துப் பாருங்கள்.நமக்கும் வர வேண்டாமா? அது மட்டுமா?இப்படிப் படிப்பது நிச்சயமாக அடுத்தப் போடிக்கான நெட் பிராக்டீஸ்.

ஏன் படிக்க வேண்டும்?முதலில், தம் கதைதான் உலகத்திலேயே சிறந்த சிறுகதை என்று குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டாமல் வெளிவர.

  • வாசிப்பு அனுபவம்
  • நடுவர்கள் அளவுகோல் அடிப்படை என்னவென்று தெரிய
  • நம்மைவிட ஜாம்பவான்கள் இருக்கிறார்கள் என்பது அறிய
  • நம்மைவிடமட்டமானவர்களும் இருக்கிறார்கள் என்பதும் அறிய
  • வித்தியாசமான கருக்கள்
  • அற்புதமாக எழுதும் first time எழுத்தாளர்கள்
  • எழுத்தின் flow
  • எப்படியெல்லாம் எழுதலாம்
  • என்ன மாதிரியெல்லாம் எழுதலாம்
  • அடுத்தக் கட்ட புது முயற்சிகள்
  • எங்கு தப்புச் செய்தோம் என உணர்தல்
  • எப்படியெல்லாம் முடிக்கலாம்
  • தவறுகளைத் தவிர்க்க
  • அப்பட்டமான “சிறுவர் மலர்” கதைகளைத் தவிர்க்க
இனி படித்தக் கதைகளைப் பற்றி.(இதில் வெற்றிப் பெற்ற கதைகளும் அடக்கம்.)

நிறைகள்:

  • அற்புதமாக எழுதும் first time எழுத்தாளர்கள். நம்பவே முடியவில்லை.
  • சில வித்தியாசமான கருக்கள்
  • அற்புதமான வரிகள்/வர்ணனைகள்
  • சில யதார்த்தமான கதா பாத்திரங்கள்
குறைகள்(நிறைய)
  • 1920 வருட கதை உத்திகள்.அதுவும் செயற்கைத்தனமாக.
  • கதையின் கதாப் பாத்திரங்களை வேணுமென்றே கஷ்டப்படவைத்து நடுவர்களின் அனுதாபத்தைப் பெற்று பரிசு வாங்கி விடலாம் என்பதாக.(பள்ளியில் விடைத்தாளில் ரூபாய் நோட்டை பின் செய்து கவருவதுப் போல)
  • மெலோடிராமவான அதிர்ச்சி முடிவுகள் அதுவும் லாஜிக் இல்லாமல்
  • பாசாங்குத்தனமாக சமுதாயச் சாடல்
  • கதை என்ற பேரில் கட்டுரைகள்
  • விஞ்ஞான சிறுகதைகள் என்ற பேரில் தனக்கும் புரியாமல் படிப்பவனுக்கும் புரியாமல் கஷ்டப்படுத்துவது.இதிலும் பம்மாத்து பாசாங்குத்தனம்.
  • மேகத்தில் உலவும் கதாப் பாத்திரங்கள்
  • கதைச்சொல்லியின் சொந்த ரசனைகள் கதையில் வந்து இயல்பு இல்லாமல் போவது.
  • கதைச்சொல்லி கதைக்குள்ளே வ்ந்து மைக் பிடித்து பிரசாரம்/அறிவுரை சொல்வது.இதனால கதை டாகுமெண்டரி ஆகிவிடுகிறது.
  • ஓவர் யதார்த்தம் என்ற பேரில் அறுவைகள்/அருவருப்புகள்
  • கதை முடிக்க வேண்டிய இடத்தில் முடிக்காமல் கதைச்சொல்லி கடைசியில்கருத்துச் சொல்லிப் போதால்
  • சில கதைகள் பள்ளிப் போட்டிக்கு எழுதப்பட்டவை
  • கதாபாத்திரங்களின் வயதுக்கேற்ற வசனங்கள் இல்லாமை
  • கதையின் மூட் எகிறுதல்
  • கதையின் மூட் தெரியாமல் எழுதுவது
  • நகைச்சுவை சுத்தமாக இல்லை.
  • வெளி உலகம் தெரியாமல் எழுதப்பட்ட வெகுளித்தனமான கதைகள்
  • அமெச்சூர் நெடி
  • பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கதைகள்
  • பாசாங்குத்தனமான கவித்துவங்கள்
கடைசியாக :-

சமுதாயச் சாடலை டாக்குமெண்டரியாகச் சொல்லாமல் கதையின் ஓட்டத்திலேயே சொல்லி அதிர்வுகளை ஏற்படுத்தலாம்.அதற்கு வாசிப்பனுபவம் இருந்தால் நன்று.

ரசித்தக் கதைகளைப் பற்றி:-

”மலைகளில் காணாமல் போனதேவதை”(தமிழன்- கறுப்பி)கதை.
சிறப்பு:
ஒரு வசீகரமான நடை.ஒரு பெண்டசி கதை.ஈழ வட்டார வழக்கு.இதுக்கும் திறமை வேண்டும்.உ
_____________________________________

எவனோ ஒருவனின் பரிசு பெறாத “சின்ன மனசு” கதை.
ஒரு சிறுவன் வீட்டை விட்டு ஓடி ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று பயந்துப் போய் வீடு திரும்புகிறான்.
சிறப்பு:
அவன் பார்வை/எண்ணங்களோடு லாஜிக்கலாகச் சொல்லப்பட்டக்கதை.
அசட்டுத்தனம் இல்லை.
__________________________________

சரவணனின் “காத்திருத்தல்கள்”(பரிசுப் பெற்றக் கதை)
சிறப்பு:
கதைத் தெப்பகுளத்தில் ஆரம்பித்து தெப்பக் குளத்தில் முடிகிறது.
உரையாடல்கள் இல்லை.மெல்லிய உணர்வுகள் மனதைத் தொடுகிற்து. கதைச்சொல்லியின் சொந்த ரசனைகள் குறுக்கிடாமல் மேகத்தில் அனுவசியமாக உலவாமல் தரையிலேயே உலவுகிறார்கள்.
_____________________________________


பிரசன்னம் (யோசிப்பவர்).(பெரிய எழுத்தாளர்?)
சிறப்பு:
தெளிவாகச் சொல்லப்பட்ட திரில்லர் கம் விஞ்ஞானச்(?) சிறுகதை.
அடுத்தது என்ன என்ற சுவாரஸ்யம்.அனவாசியமான பாசாங்குத்தனம் இல்லை.

ஊஞ்சல் -
Bee\'morgan .(but...story teller missed a lot in narration)
சிறப்பு:
வித்தியாசமான கரு


யோசனை:

முதலில் ஒரு நான்கு ஐந்து மாதங்கள் ஒரு அல்லது ஒண்ணரைப் பக்கம் எழுதிப் பழகலாம்.

Friday, August 7, 2009

மலைக் கோவிலில் சூடிதார் பெண்கள்






















நானும் என் அக்காவும்
செருப்பை விடுகிறோம்
மலைக் கோவில்
அடிவாரப் பூக்கடையில்

கலர் கலரான சூடிதார்
கல்லூரி மாணவிகளும்
செருப்பை விடுகிறார்கள்
அதே பூக்கடையில்தான்

எங்கள் செருப்புகளுக்கு
கடைக்காரி காவல்
பூ பழம் தேங்காய் வாங்கியதால்

கல்லூரி மாணவிகளின்
செருப்புகளுக்குக் காவலாய்
இவர்களின் சூடிதார்காரி ஒருத்தி
செருப்புகளுக்கு மட்டுமல்ல
புத்தகமூட்டைகளுக்கும்தான்

தூங்கிடாதடி செக்யூரிட்டி

செல்லமாக முகம் சிணுங்கி
கை ஓங்குகிறாள்
சூடிதார் செக்யூரிட்டி

முதல் படி ஏறியதும்
ஒருத்தி காதில் இன்னொருத்தி
ஏதோ சொல்ல மற்றொருத்தி
தலையில் அடித்துச் சிரிக்கிறாள்

ஒவ்வொருவர் காதுக்கும்
இது போகிறது
வரிசையாக முறைவைத்துக்கொண்டு
எல்லோரும் சிரிக்கிறார்கள்
துப்பட்டாவால் அடித்துக்கொள்கிறார்கள்

ரசித்தப்படி நானும்

என் அக்காவும்
இவர்களைப் பின் தொடருகிறோம்

படிக்குப்படி சூர்யாவைப்
பற்றி பேச்சுக்கள்
அயன் காலர் டியூன்கள்
பரிமாற்றங்கள் கலாய்ப்புகள்

அழகு காட்டுகிறார்கள்
குறுக்கேச் சென்று கலைக்கிறார்கள்
துப்பட்டாவினால் மூடிக்கொள்கிறார்கள்
போஸ் கொடுக்கிறார்கள்
செல்போன் கேமரா
செல்போன் வீடியோ
கலாய்ப்புகள் கலாட்டாக்கள்
முடிந்து கோவிலின் உச்சி

தலை கவிழ்ந்து
குந்திக்கொண்டிருக்கும்
பெண்ணை
நானும் என் அக்காவும்
பார்க்கிறோம்

அவளும் வந்திருக்கலாம்
அவளும் வந்திருக்கலாம்
அவளும் வந்திருக்கலாம்
என் நினைவில்
விடாமல் அவளும்
வருகிறாள்


நீ வரமா போய்ட்டடி
You missed a lot yaar..!!
செம்ம்ம்ம்ம்......ம கலாட்டாடி
செம்ம்ம்ம்ம்......ம கும்மிடி
என்பார்கள் இவர்கள்
இறங்கியதும்
முதல் வேலையாக



படிக்க கவிதை:

சிலந்தியை சுமந்த நீர்க் குமிழிகள்....






”பர்மிஷன் சேகர்” கேட்ட சாவு துக்கம்

விடி காலையில் செய்தி வந்தது.வைத்தியநாதய்யர் இறந்துவிட்டதாக.உடனே சோமசேகர், யாருக்கோ போன் செய்து ஆபிசுக்கு லேட்டாக வருவதாக சொல்லி பர்மிஷன் வாங்கி விட்டான்.போகாவிட்டால் மனசு என்னவோ மாதிரி ஆகிவிடும்.சம்பிரதாயமோ அல்லது துக்கமோ அல்லது வேறொன்றோ இதுக்கெல்லாம் குறை வைக்க மாட்டான்.தன்னுடைய உருவம் அங்கு இருக்கவேண்டும்.தன்னுடைய சொந்தம் என்றால் கொஞ்சம் மெனக்கெடுவான்.


போகும் இடத்திலும் காரியம் எல்லாம் இழுத்து விட்டுக்கொள்ள மாட்டான்.எல்லா விஷயத்தையும் கேட்டுக்கொள்வான்.அரை அல்லது ஒரு மணி நேரம்தான் கணக்கு.அரசியல் பொதுவிஷயம் என்று பேசி விட்டு இடத்தை காலி செய்துவிடுவான்.
முழு மனதோடு ஈடுபாடு கிடையாது.


இது பற்றி அவன் மனைவி கீதாவுக்கு ரொம்ப நாளாக மனத்தாங்கல் உண்டு. மனைவி வழி சொந்தம் என்றால் ஏதோ ஒரு கணக்குப் போட்டு ”எடுக்கும்” நேரத்தில் தலைக் காட்டிவிட்டு எப்படியாவது அட்ஜஸ்ட்டு செய்து ஆபிஸ் போய்விடுவான்.மற்ற சுபகாரியங்களிலும் “தலைகாட்டி” விட்டு வீட்டில் போய் டீவி பார்த்துக்கொண்டிருப்பான்.தன் ஆபிசில் அப்படி அட்ஜஸ்ட் பண்ணி “எடுக்கும்” நேரத்தில் தலைக் காட்ட முடியாது.இது மாதிரி பார்மாலிட்டி கீதாவுக்கு சுத்தமாக பிடிப்பதும் இல்லை.சேகர் திருந்துவது மாதிரியும் தெரியவில்லை.


அடுத்த வழக்கமான மனத்தாங்கல், பிறப்பிலிருந்து இறப்பு வரை எந்த காரியமும் மாதத்தின் முதல் வாரமாக இருந்துவிடக்கூடாது. இவளுக்குப் பிடிக்காத ஒன்று.மூச்சு விட நேரமிருக்காது.முதல் வாரத்தில்தான் ஆபிசில் வேலை பிச்சு பிடுங்கும் அல்லது பிடுங்குற மாதிரி நடிக்கும் .போகும் இடத்தில் ஆபிஸ் நினைப்புதான்.அடிக்கடி போன் செய்து ”என்னாச்சு அது “ இது என்னாச்சு” என்று கேட்டுக்கொண்டேயிருப்பாள்.இந்த செல்போனை இதற்காகவே கண்டுபிடித்தாற் போல் பயன் படுத்துவாள்.வாங்குகிற சம்பளத்திற்கு வேலையும் சரிசமமாகத்தான் இருந்தது.


இது பற்றி பல தடவை சோமசேகர் இவளிடம் சண்டைப் போட்டிருக்கிறான். கீதா தன் வேலையைப் பற்றி ”ஓவர் பில்டப்” கொடுப்பதாகவும் கீதாவுக்கே இது ”ஒவராகத்” தெரியாமல் அலட்டுவதாகவும்.”


”ஆமா...எங்க ஆபிசப் பத்தி உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது “ என்று ஒற்றை வார்த்தையைத்தான் எப்போதும் எரிச்சலாகச் சொல்லுவாள்.


”வயசான நிறைஞ்ச சாவுதானே.சுபகாரியம் மாதிரி ஆத்துக்காரி ஏன் வரலென்னு யாரும் கேட்க மாட்டா.நா வேணா வேற நாளைக்கு போய் துக்கம் கேட்டுடறேனே..?முக்கியமா வேல டென்ஷன் இல்லாம இருக்கலாம்.எனக்கு மனச இருத்தி துக்கம் கேட்கணும்.”(பத்து ஒருவாரம் கழித்துதான் வருகிறது என்று காலண்டரில் பார்த்து செக் செய்துக் கொண்டாள்)


“அதெல்லாம் சரி வராது... நீ வந்தாதான் லக்‌ஷணமா இருக்கும்.அவருக்குன்னு யார் இருக்கா நம்மள விட்டா “


“ஆஹா என்ன கரிசனம்!வைத்தியநாதய்யர் சொந்த பிள்ளைக்குக் கூட இவ்வளவு கரிசனம் இருக்காது. நீங்க என்ன கொள்ளியா போடப்போறேள்.சும்மா கையக் கட்டி நின்னூட்டு துக்கத்துக்கு ”பிரசண்ட்” ஆயிட்டேன்னு காட்றதுக்குதானே.உங்காத்துக்காராளும், தூரத்து உறவானாலும் விட்டுக்கொடுக்கமா வந்துட்டான்னு ஒரு” பில்டப்”பை இதில் காட்டுவேள்! அரைமணி நேரம் ஆனதும் அரிச்சு எடுத்து கிளம்பிடுவேள்.எதுக்கும் ஒரு முறை இருக்கு.சுத்தமா தெரியாம காமாசோமான்னு இருக்கேளே?உங்க ஆபிசல “பர்மிஷன் சேகர்”ன்னு பேர் கூட வச்சுட்டா”


சோமசேகர் எதையும் காதில் வாங்காமல் டீவிப் பார்த்துக்கொண்டிருந்தான்.


ஒரு வழியாக அவளும் பர்மிஷன் வாங்கினாள்.அழகு காட்டிவிட்டு கிச்சனில் புகுந்தாள்.குழந்தைகள் இருவரும் சண்டையைப் பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு பள்ளிக்கு கிளம்பினார்கள்.


கீதாவும் சோமசேகரும் காரில் கிளம்பினார்கள்.


கீதாவுக்கு பார்த்தவுடன் அவளை அறியாமல் துக்கம் படர்ந்தது.

((AVV சார்) ஆலங்குடி வெங்கட்ராமன் வைத்தியநாதய்யர் ஃபிரிசர் பாக்சில் நெடுஞ்சான்கிடையாகக் படுத்திருந்தார். மூக்கில் பஞ்சு வைக்கப்பட்டு தாடையும் தலையும் ஒரு வெள்ளைத்துணியால் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. கால் கட்டை விரல்களும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது.வெள்ளை வெளேரென நெற்றியிலும் கைகளிலும் வீபுதிப் பட்டைகள்.


விர்ர்ர்” ரென ஃபிரிசர் ஓடும் சத்தம். அதன் பக்கத்தில் அவாத்து மாமி பெரிய மங்களா. சற்றி தள்ளி வேலைக்காரி செல்வி துக்க முகத்தோடு எதன் மீதும் படாமல் ஒரு மாதிரி நின்றிருந்தாள்.துக்கம் கேட்க வந்தவர்கள் நிறைய பேர் வீட்டின் பின் பக்கத்தில் கிணற்றுடிக்குப் பக்கத்தில் இருந்தார்கள்


இவருக்கென்று சொந்த பந்தங்கள் நிறைய கிடையாது. இரண்டு பெண்கள்தான்.பழி சண்டை.அவர்களும் பேச்சு வார்த்தை இல்லை. யாரும் வரவும் இல்லை.ஆசைப்பட்ட சொத்து வராமல் இடம் பெயர்ந்தார்கள்.அவருடைய கடைசித் தம்பி பையன் ராமனாதந்தான் எல்லா காரியமும் செய்யப் போவதாக ரகு மாமா சொன்னார்.ராமனாதனை உள்ளே நுழையும்போது பார்த்தான். சோகமாக புன்னகைத்து தோளைத்தொட்டான்.


”நேத்திக்குக்கூட உன்னப்பத்தியெல்லாம் கூட கேட்டார்.சோமசேகர் ஆம்படையா வேலைக்குப் போறாளா இல்ல ஆத்துலதான் இருக்காளான்னு.”


சோமசேகர் சோகமாக “பச்” என்றான்.


“நேத்திக்கு ராத்திரிப் பூரா நன்னா பேசிண்டு ஜோக்கெல்லாம் அடிஞ்சுண்டுதான் படுக்கப்போனார்.என் கண்ணே திருஷ்டிப் பட்றும் போல இருந்தது.விடிகாத்தல என்னை எழுப்பி “ஏப்ப ஏப்பமா வருது.. குடிக்க ஜீரா ஜலம் குடு “ன்னு எழுப்பினார். கொண்டு வந்து குடுக்கரத்துக்குள்ள படுத்துண்டார். பேச்சே இல்லே.பிராணன் போயிடுத்து. ”


யாரோ ஒருவர் ஆட்டோவை வெயிட்டிங்கில் விட்டு அர்ஜெண்டாக துக்கம் கேட்டு விட்டு அதே ஆட்டோவில் திரும்பிப் போய்விட்டார்.அடுத்து வேறு யாரோ மூன்று பேர் கொஞ்ச நேரம் சோகமாக நின்று விட்டு வீட்டின் பின்பக்கம் சென்றார்கள்.அதற்கு பிறகு யாரோ ஒரு மாமி விசித்துக்கொண்டே வந்து மாமி பக்கத்தில் உட்கார்ந்து கட்டிக்கொண்டார்.


மாமியைப் பார்க்க பாவமாக இருந்தது.துக்கத்தினால் அல்ல.துக்கம் கேடக வருவோர் போவோர்கெல்லாம் திருப்பித் திருப்பி “நேத்திக்கு ராத்திருப் பூரா” என்ற கதையைச் சொல்லித் தொண்டை வறண்டுப் போயிருந்தாள்.அர்ஜெண்டாக துக்கம் ஆட்டோவில் வந்தவர்க்கும் அதே வேகத்தில் சொல்லி முடித்தாள்.அவளிமிடருந்து டேக் ஓவர் பண்ணுவதற்கும் ஆள் இல்லை.மாமியையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.


மாமி நல்ல சிவப்பு நிறம்.அகல நெற்றி.பழுத்த சுமங்கலி .புஷ்டியான தேகம்.மடிசார் புடவை பக்கப் பதிய மாமியின் சரிரீரத்திற்குப் பொருந்தி வந்தது.இறந்துபோனவர் ஒரு குறையும் வைக்காமல் மாமியைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.காது,மூக்கு,கழுத்து,கைகள் என பளபளவென நகைகள். இன்னும் சில தினங்களில் மூளியாக காட்சியளிப்பார்.காணச்சகிக்காது.
பேருக்கு சில நகைகள் உடம்பிலும் மீதி நகைகள் எல்லாம் பங்கிடப்படும் அல்லது பணமாக்கப்படும்.

கொஞ்ச நேரம் இருந்து விட்டு சோமசேகர் கிணற்றடிக்கு போனான்.அங்கு காபி கடை ஓடிக்கொண்டிருந்தது. ரமணி மாமா பிளாஸ்டிக் கப்பை “கர்சிக்கு பிர்சிக்கு”என்ற சத்தமிட கசக்கி எறிந்து விட்டு அவனைப் பார்த்து புன்னகைத்தார்.ட்ரேயில் சேகருக்கும் காபி வந்தது.கீதா வேண்டாம் என்றாள். பிடிக்கவில்லை.துக்கமா அல்லது அபத்தமா?ரமணி மாமாவுடன் கதைப் பேச ஆரம்பித்தான்.


காபிக்காரன் இன்னொரு டம்ளர் காபி கொடுத்துவிட்டு விசிட்டிங்கார்டும் கொடுத்தான். “அசுப, சுப காரியத்திற்க்கும் நன்னா சமைச்சு பர்பெக்ட் சர்வீஸ் கொடுப்போம்....பாடி எடுத்தவுடனே மத்தியானம் டிபன் உண்டு.சாப்பிட்டு சொல்லுங்கோ.....”


சேகர் வாங்கிக்கொண்டான்.யாரோ ஒருவர் காலேஜ் பேமேண்ட் சீட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.கீதா அடிக்கடி செல்லில்கொஞ்சம் தள்ளிப் போய் ரகசிய குரலில் பேசிக்கொண்டிருந்தாள்.சேகருக்கு கீதாவின் ஆபிஸ் பிடுங்கல் வருத்தமாகத்தான் இருந்தது.


சேகருக்கு ”தலைக்காட்டும்” நேரம் முடிந்து விட்டதால் வீட்டிற்குப்போகும் பரபரப்பு அரிக்க ஆரம்பித்தது.கீதாவை நொடிக்கொருதரம் ஜாடையாகப் பார்த்தான்.அதை அவள் கவனிக்காமல் யாரோ ஒரு பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.சரியென்று கொஞ்சம் நேரம் கழித்து கீதாவைக் கூப்பிடலாம் என்று வாசலுக்கு வந்தான்.


வாசலில் கொஞ்சம் பரபரப்புக் காணப்பட்டது.புரோகிதரோடு நிறையபேர் ஏதோ கவலையோடுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.சற்று தள்ளி சில பேர் முடிச்சு முடிச்சாக நின்றுக்கொண்டு குசுகுசுத்துக்கொண்டிருந்தார்கள்.சேகர் எதிலும் பட்டுக்கொள்ளாமல் மறுபடியும் பின்பக்கம் வந்தான்.


கீதா ரெடியாக இருந்தாள்.கிளம்பலாம் என்று முகஜாடைக் காட்டினாள்.கிணற்றடியிலிருந்து உள்ளேப் பார்த்தான்.புரோகிதர் மங்களா மாமியுடன் பேசிக்கொண்டிருந்தார்.மங்களா மாமி பின்பக்கம் சேகரைக் காட்டி ஏதோ சொன்னாள்.புரோகிதர் சேகரை நோக்கி வந்தார்.

”நீங்கதான் சோமசேகரா?”

“ஆமாம்”

“சித்த உள்ள வாங்கோ....வைத்தியநாதய்யராத்து மாமி கூப்பிடறா”

சேகரும் கீதாவும் உள்ளே போனார்கள்.இருவரையும் ஒரு தனி ரூமுக்கு புரோகிதர் அழைத்துச்சென்றார்.அங்கு மங்களா மாமியும் வந்தாள்.


”கோந்தே... நீ மாட்டேன்னு சொல்லிடாதே...என்னோட பொறக்காத புத்ரன் மாதிரி.புண்யத்தில மகா புண்யம்...இந்த ஜென்மால யாருக்கும் கெடைக்காது...எங்காத்து மாமாவுக்கு நீதான் கொள்ளிப்போட்டு, பதிமூணு நாள் காரியமும் பண்ணனும் .எப்படியாவது அட்ஜஸ்ட பண்ணி ஆபிசுக்கு லீவு போட்டுறு“


“நானா..?”அதிர்ச்சியடைந்து..”உங்க மச்சினர் பையன் ..ராமனாதன் இல்லையா?”


“அவர் அப்பா மதுரைல தவறிப் போயிட்டார்...இப்பதான் நீயுஸ் வந்தது..அவன் போயிட்டான்.”புரோகிதர் சொன்னார்


சேகர் கீதாவைப் பார்த்தான்.


”எங்காத்து மாமா வழி சொந்தம்தான்.புள்ள மாதிரிதான்.அவர் என்ன அனாதயா?...மூணாவது மனுஷா கொள்ளிப்போடறதுக்கு?....சரின்னு சொன்னாதான் கையை விடுவேன்” என்று கீதாவின் கையை பாசத்தோடு பிடித்துக்கொண்டாள் மாமி.கீதா ஒன்றும் தெரியாமல் முழித்தாள்.


சோமசேகர் துக்கம் நெஞ்சை அடைக்க கிணற்றடிக்குச் சென்றான்.


முற்றும்


படிக்க:

கவிதை எதைப் பற்றி.... சஸ்பென்ஸ்








Wednesday, August 5, 2009

சிலந்தியை சுமந்த நீர்க் குமிழிகள்.....

























யார் யாரோ
தண்ணீர் மொள்கிறார்கள்
பப்பிள் டாப்பில்

அதிர்வுடன் மேல் நோக்கி
புடைத்துவரும் நீர் குமிழ்கள்

உள்ளேயே உடைந்துப் போய்
சலனமற்ற வெற்றிடம்
ஒவ்வொரு முறையும்

டமளரில் பிடித்தத் தண்ணீரை
குடிக்காமல் சுவற்றை நோக்கி வீசுகிறார்
யாரோ ஒருவர்

தரையில் வழிந்தோடும் தண்ணீரில்
மிதந்தபடி வலையும் சிலந்தியும்
அதைத் தொடர்ந்து போகும்
சில நீர்க் குமிழிகளும்



படிக்க:

ஜென்சி,நான்,எஸ்.ராமகிருஷ்ணன்





Saturday, August 1, 2009

கவிதை எதைப் பற்றி.... சஸ்பென்ஸ்






























இந்த கவிதை எதைப் பற்றி. அதுதான் சஸ்பென்ஸ்... கண்டுபிடியுங்கள்


கவிதைக்கு போவதற்கு முன்

இரவு.கரு மேகங்களில் தோன்றி மறைந்து திரியும் நிலவு.ஒரு பாழடைந்த வீடு. வீட்டின் பக்கவாட்டில் உடைந்த கருங்கல் படிகளால் செய்த மாடி . செடிகளும் கொடிகளும் படர்ந்து..... வாசலில் தலை விரித்த மரம். அதன் பெரிய நிழல் வீட்டின் முன். வீட்டிலிருந்து புறப்பட்ட ஒரு ஒத்தையடிப் பாதை, எங்கோ வளைந்து போய் மறைகிறது. நாய் குரைக்கும் சத்தம்.

இனி கவிதை...........


குதிரை வீரன்

கொளக்.... கொளக்... கொளக்......

குளம்பொலி சத்தம்

ஒரு குதிரை வீரன்

அந்த வீட்டின் முன்

வந்து நிற்கிறான்

குதிரை திமிறுகிறது

லகானன பிடிக்ககனைக்கிறது

முன்னம் கால்களை தூக்கி

யாராது வீட்டில் இருக்கிறீர்களா

கேட்கிறான் குதிரை வீரன்

யாராது வீட்டில் இருக்கிறீர்களா

காற்றில் எதிரொலி

மயான அமைதிக்கு - பிறகு

ஏதோ கிசு கிசுப்புகள்....

குறுக்கும் நெடுக்குமாக

அலையும் கால் ஒலிகள்

செல்லரித்தக் கதவு துளைகளிள்

தெரியும் கண்கள்

பின் கதவு தாளிடப்படும்

ஒசைகள் - வீட்டினுள்ளே

நிலவு மறைந்து போய்

உலகமே இருண்டது போல்

ஆக......................

வீட்டின் பக்கவாட்டில்

வருகிறான் குதிரை வீரன்

யாராவது வீட்டில் இருக்கிறீர்களா

பதில் இல்லை

எதிரொலியும் இல்லை

உங்களைத்தான்....உங்களுக்காக

ஒரு பரிசு பொருள் - மன்னர்

அன்பாக கொடுத்துள்ளார்

வாங்கிக்கொள்ளுங்கள்

உலகமே ஒடுங்கின அமைதி

தயவு செய்து கதவைத்திறங்கள்

................................................

................................................

மன்னித்து விடுங்கள்

கிளம்புகிறேன் நேரமாகிவிட்டது

வெகு தூரத்தில்.............

கொளக்.... கொளக்... கொளக்

.

என்ன சஸ்பென்ஸ்?


இந்த கவிதை குதிரை வீரன் அல்லது வீட்டில் உள்ள கதாபாத்திரங்களைப் பற்றியோ மற்ற பொருள்களை பற்றியோ அல்ல.



அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்ற ஒரு மூன்று அல்லது நான்கு நிமிட திகில் மட்டும். இதை உணர்ந்தால் கவிதைக்கு வெற்றி. .

.

இது VI th std. (CBSE) English lessonஇல் வரும் poem.சில மாற்றங்களுடன் எழுதியுள்ளேன்


இது ஒரு மறுபிரசுரம்