Friday, August 7, 2009

”பர்மிஷன் சேகர்” கேட்ட சாவு துக்கம்

விடி காலையில் செய்தி வந்தது.வைத்தியநாதய்யர் இறந்துவிட்டதாக.உடனே சோமசேகர், யாருக்கோ போன் செய்து ஆபிசுக்கு லேட்டாக வருவதாக சொல்லி பர்மிஷன் வாங்கி விட்டான்.போகாவிட்டால் மனசு என்னவோ மாதிரி ஆகிவிடும்.சம்பிரதாயமோ அல்லது துக்கமோ அல்லது வேறொன்றோ இதுக்கெல்லாம் குறை வைக்க மாட்டான்.தன்னுடைய உருவம் அங்கு இருக்கவேண்டும்.தன்னுடைய சொந்தம் என்றால் கொஞ்சம் மெனக்கெடுவான்.


போகும் இடத்திலும் காரியம் எல்லாம் இழுத்து விட்டுக்கொள்ள மாட்டான்.எல்லா விஷயத்தையும் கேட்டுக்கொள்வான்.அரை அல்லது ஒரு மணி நேரம்தான் கணக்கு.அரசியல் பொதுவிஷயம் என்று பேசி விட்டு இடத்தை காலி செய்துவிடுவான்.
முழு மனதோடு ஈடுபாடு கிடையாது.


இது பற்றி அவன் மனைவி கீதாவுக்கு ரொம்ப நாளாக மனத்தாங்கல் உண்டு. மனைவி வழி சொந்தம் என்றால் ஏதோ ஒரு கணக்குப் போட்டு ”எடுக்கும்” நேரத்தில் தலைக் காட்டிவிட்டு எப்படியாவது அட்ஜஸ்ட்டு செய்து ஆபிஸ் போய்விடுவான்.மற்ற சுபகாரியங்களிலும் “தலைகாட்டி” விட்டு வீட்டில் போய் டீவி பார்த்துக்கொண்டிருப்பான்.தன் ஆபிசில் அப்படி அட்ஜஸ்ட் பண்ணி “எடுக்கும்” நேரத்தில் தலைக் காட்ட முடியாது.இது மாதிரி பார்மாலிட்டி கீதாவுக்கு சுத்தமாக பிடிப்பதும் இல்லை.சேகர் திருந்துவது மாதிரியும் தெரியவில்லை.


அடுத்த வழக்கமான மனத்தாங்கல், பிறப்பிலிருந்து இறப்பு வரை எந்த காரியமும் மாதத்தின் முதல் வாரமாக இருந்துவிடக்கூடாது. இவளுக்குப் பிடிக்காத ஒன்று.மூச்சு விட நேரமிருக்காது.முதல் வாரத்தில்தான் ஆபிசில் வேலை பிச்சு பிடுங்கும் அல்லது பிடுங்குற மாதிரி நடிக்கும் .போகும் இடத்தில் ஆபிஸ் நினைப்புதான்.அடிக்கடி போன் செய்து ”என்னாச்சு அது “ இது என்னாச்சு” என்று கேட்டுக்கொண்டேயிருப்பாள்.இந்த செல்போனை இதற்காகவே கண்டுபிடித்தாற் போல் பயன் படுத்துவாள்.வாங்குகிற சம்பளத்திற்கு வேலையும் சரிசமமாகத்தான் இருந்தது.


இது பற்றி பல தடவை சோமசேகர் இவளிடம் சண்டைப் போட்டிருக்கிறான். கீதா தன் வேலையைப் பற்றி ”ஓவர் பில்டப்” கொடுப்பதாகவும் கீதாவுக்கே இது ”ஒவராகத்” தெரியாமல் அலட்டுவதாகவும்.”


”ஆமா...எங்க ஆபிசப் பத்தி உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது “ என்று ஒற்றை வார்த்தையைத்தான் எப்போதும் எரிச்சலாகச் சொல்லுவாள்.


”வயசான நிறைஞ்ச சாவுதானே.சுபகாரியம் மாதிரி ஆத்துக்காரி ஏன் வரலென்னு யாரும் கேட்க மாட்டா.நா வேணா வேற நாளைக்கு போய் துக்கம் கேட்டுடறேனே..?முக்கியமா வேல டென்ஷன் இல்லாம இருக்கலாம்.எனக்கு மனச இருத்தி துக்கம் கேட்கணும்.”(பத்து ஒருவாரம் கழித்துதான் வருகிறது என்று காலண்டரில் பார்த்து செக் செய்துக் கொண்டாள்)


“அதெல்லாம் சரி வராது... நீ வந்தாதான் லக்‌ஷணமா இருக்கும்.அவருக்குன்னு யார் இருக்கா நம்மள விட்டா “


“ஆஹா என்ன கரிசனம்!வைத்தியநாதய்யர் சொந்த பிள்ளைக்குக் கூட இவ்வளவு கரிசனம் இருக்காது. நீங்க என்ன கொள்ளியா போடப்போறேள்.சும்மா கையக் கட்டி நின்னூட்டு துக்கத்துக்கு ”பிரசண்ட்” ஆயிட்டேன்னு காட்றதுக்குதானே.உங்காத்துக்காராளும், தூரத்து உறவானாலும் விட்டுக்கொடுக்கமா வந்துட்டான்னு ஒரு” பில்டப்”பை இதில் காட்டுவேள்! அரைமணி நேரம் ஆனதும் அரிச்சு எடுத்து கிளம்பிடுவேள்.எதுக்கும் ஒரு முறை இருக்கு.சுத்தமா தெரியாம காமாசோமான்னு இருக்கேளே?உங்க ஆபிசல “பர்மிஷன் சேகர்”ன்னு பேர் கூட வச்சுட்டா”


சோமசேகர் எதையும் காதில் வாங்காமல் டீவிப் பார்த்துக்கொண்டிருந்தான்.


ஒரு வழியாக அவளும் பர்மிஷன் வாங்கினாள்.அழகு காட்டிவிட்டு கிச்சனில் புகுந்தாள்.குழந்தைகள் இருவரும் சண்டையைப் பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு பள்ளிக்கு கிளம்பினார்கள்.


கீதாவும் சோமசேகரும் காரில் கிளம்பினார்கள்.


கீதாவுக்கு பார்த்தவுடன் அவளை அறியாமல் துக்கம் படர்ந்தது.

((AVV சார்) ஆலங்குடி வெங்கட்ராமன் வைத்தியநாதய்யர் ஃபிரிசர் பாக்சில் நெடுஞ்சான்கிடையாகக் படுத்திருந்தார். மூக்கில் பஞ்சு வைக்கப்பட்டு தாடையும் தலையும் ஒரு வெள்ளைத்துணியால் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. கால் கட்டை விரல்களும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது.வெள்ளை வெளேரென நெற்றியிலும் கைகளிலும் வீபுதிப் பட்டைகள்.


விர்ர்ர்” ரென ஃபிரிசர் ஓடும் சத்தம். அதன் பக்கத்தில் அவாத்து மாமி பெரிய மங்களா. சற்றி தள்ளி வேலைக்காரி செல்வி துக்க முகத்தோடு எதன் மீதும் படாமல் ஒரு மாதிரி நின்றிருந்தாள்.துக்கம் கேட்க வந்தவர்கள் நிறைய பேர் வீட்டின் பின் பக்கத்தில் கிணற்றுடிக்குப் பக்கத்தில் இருந்தார்கள்


இவருக்கென்று சொந்த பந்தங்கள் நிறைய கிடையாது. இரண்டு பெண்கள்தான்.பழி சண்டை.அவர்களும் பேச்சு வார்த்தை இல்லை. யாரும் வரவும் இல்லை.ஆசைப்பட்ட சொத்து வராமல் இடம் பெயர்ந்தார்கள்.அவருடைய கடைசித் தம்பி பையன் ராமனாதந்தான் எல்லா காரியமும் செய்யப் போவதாக ரகு மாமா சொன்னார்.ராமனாதனை உள்ளே நுழையும்போது பார்த்தான். சோகமாக புன்னகைத்து தோளைத்தொட்டான்.


”நேத்திக்குக்கூட உன்னப்பத்தியெல்லாம் கூட கேட்டார்.சோமசேகர் ஆம்படையா வேலைக்குப் போறாளா இல்ல ஆத்துலதான் இருக்காளான்னு.”


சோமசேகர் சோகமாக “பச்” என்றான்.


“நேத்திக்கு ராத்திரிப் பூரா நன்னா பேசிண்டு ஜோக்கெல்லாம் அடிஞ்சுண்டுதான் படுக்கப்போனார்.என் கண்ணே திருஷ்டிப் பட்றும் போல இருந்தது.விடிகாத்தல என்னை எழுப்பி “ஏப்ப ஏப்பமா வருது.. குடிக்க ஜீரா ஜலம் குடு “ன்னு எழுப்பினார். கொண்டு வந்து குடுக்கரத்துக்குள்ள படுத்துண்டார். பேச்சே இல்லே.பிராணன் போயிடுத்து. ”


யாரோ ஒருவர் ஆட்டோவை வெயிட்டிங்கில் விட்டு அர்ஜெண்டாக துக்கம் கேட்டு விட்டு அதே ஆட்டோவில் திரும்பிப் போய்விட்டார்.அடுத்து வேறு யாரோ மூன்று பேர் கொஞ்ச நேரம் சோகமாக நின்று விட்டு வீட்டின் பின்பக்கம் சென்றார்கள்.அதற்கு பிறகு யாரோ ஒரு மாமி விசித்துக்கொண்டே வந்து மாமி பக்கத்தில் உட்கார்ந்து கட்டிக்கொண்டார்.


மாமியைப் பார்க்க பாவமாக இருந்தது.துக்கத்தினால் அல்ல.துக்கம் கேடக வருவோர் போவோர்கெல்லாம் திருப்பித் திருப்பி “நேத்திக்கு ராத்திருப் பூரா” என்ற கதையைச் சொல்லித் தொண்டை வறண்டுப் போயிருந்தாள்.அர்ஜெண்டாக துக்கம் ஆட்டோவில் வந்தவர்க்கும் அதே வேகத்தில் சொல்லி முடித்தாள்.அவளிமிடருந்து டேக் ஓவர் பண்ணுவதற்கும் ஆள் இல்லை.மாமியையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.


மாமி நல்ல சிவப்பு நிறம்.அகல நெற்றி.பழுத்த சுமங்கலி .புஷ்டியான தேகம்.மடிசார் புடவை பக்கப் பதிய மாமியின் சரிரீரத்திற்குப் பொருந்தி வந்தது.இறந்துபோனவர் ஒரு குறையும் வைக்காமல் மாமியைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.காது,மூக்கு,கழுத்து,கைகள் என பளபளவென நகைகள். இன்னும் சில தினங்களில் மூளியாக காட்சியளிப்பார்.காணச்சகிக்காது.
பேருக்கு சில நகைகள் உடம்பிலும் மீதி நகைகள் எல்லாம் பங்கிடப்படும் அல்லது பணமாக்கப்படும்.

கொஞ்ச நேரம் இருந்து விட்டு சோமசேகர் கிணற்றடிக்கு போனான்.அங்கு காபி கடை ஓடிக்கொண்டிருந்தது. ரமணி மாமா பிளாஸ்டிக் கப்பை “கர்சிக்கு பிர்சிக்கு”என்ற சத்தமிட கசக்கி எறிந்து விட்டு அவனைப் பார்த்து புன்னகைத்தார்.ட்ரேயில் சேகருக்கும் காபி வந்தது.கீதா வேண்டாம் என்றாள். பிடிக்கவில்லை.துக்கமா அல்லது அபத்தமா?ரமணி மாமாவுடன் கதைப் பேச ஆரம்பித்தான்.


காபிக்காரன் இன்னொரு டம்ளர் காபி கொடுத்துவிட்டு விசிட்டிங்கார்டும் கொடுத்தான். “அசுப, சுப காரியத்திற்க்கும் நன்னா சமைச்சு பர்பெக்ட் சர்வீஸ் கொடுப்போம்....பாடி எடுத்தவுடனே மத்தியானம் டிபன் உண்டு.சாப்பிட்டு சொல்லுங்கோ.....”


சேகர் வாங்கிக்கொண்டான்.யாரோ ஒருவர் காலேஜ் பேமேண்ட் சீட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.கீதா அடிக்கடி செல்லில்கொஞ்சம் தள்ளிப் போய் ரகசிய குரலில் பேசிக்கொண்டிருந்தாள்.சேகருக்கு கீதாவின் ஆபிஸ் பிடுங்கல் வருத்தமாகத்தான் இருந்தது.


சேகருக்கு ”தலைக்காட்டும்” நேரம் முடிந்து விட்டதால் வீட்டிற்குப்போகும் பரபரப்பு அரிக்க ஆரம்பித்தது.கீதாவை நொடிக்கொருதரம் ஜாடையாகப் பார்த்தான்.அதை அவள் கவனிக்காமல் யாரோ ஒரு பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.சரியென்று கொஞ்சம் நேரம் கழித்து கீதாவைக் கூப்பிடலாம் என்று வாசலுக்கு வந்தான்.


வாசலில் கொஞ்சம் பரபரப்புக் காணப்பட்டது.புரோகிதரோடு நிறையபேர் ஏதோ கவலையோடுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.சற்று தள்ளி சில பேர் முடிச்சு முடிச்சாக நின்றுக்கொண்டு குசுகுசுத்துக்கொண்டிருந்தார்கள்.சேகர் எதிலும் பட்டுக்கொள்ளாமல் மறுபடியும் பின்பக்கம் வந்தான்.


கீதா ரெடியாக இருந்தாள்.கிளம்பலாம் என்று முகஜாடைக் காட்டினாள்.கிணற்றடியிலிருந்து உள்ளேப் பார்த்தான்.புரோகிதர் மங்களா மாமியுடன் பேசிக்கொண்டிருந்தார்.மங்களா மாமி பின்பக்கம் சேகரைக் காட்டி ஏதோ சொன்னாள்.புரோகிதர் சேகரை நோக்கி வந்தார்.

”நீங்கதான் சோமசேகரா?”

“ஆமாம்”

“சித்த உள்ள வாங்கோ....வைத்தியநாதய்யராத்து மாமி கூப்பிடறா”

சேகரும் கீதாவும் உள்ளே போனார்கள்.இருவரையும் ஒரு தனி ரூமுக்கு புரோகிதர் அழைத்துச்சென்றார்.அங்கு மங்களா மாமியும் வந்தாள்.


”கோந்தே... நீ மாட்டேன்னு சொல்லிடாதே...என்னோட பொறக்காத புத்ரன் மாதிரி.புண்யத்தில மகா புண்யம்...இந்த ஜென்மால யாருக்கும் கெடைக்காது...எங்காத்து மாமாவுக்கு நீதான் கொள்ளிப்போட்டு, பதிமூணு நாள் காரியமும் பண்ணனும் .எப்படியாவது அட்ஜஸ்ட பண்ணி ஆபிசுக்கு லீவு போட்டுறு“


“நானா..?”அதிர்ச்சியடைந்து..”உங்க மச்சினர் பையன் ..ராமனாதன் இல்லையா?”


“அவர் அப்பா மதுரைல தவறிப் போயிட்டார்...இப்பதான் நீயுஸ் வந்தது..அவன் போயிட்டான்.”புரோகிதர் சொன்னார்


சேகர் கீதாவைப் பார்த்தான்.


”எங்காத்து மாமா வழி சொந்தம்தான்.புள்ள மாதிரிதான்.அவர் என்ன அனாதயா?...மூணாவது மனுஷா கொள்ளிப்போடறதுக்கு?....சரின்னு சொன்னாதான் கையை விடுவேன்” என்று கீதாவின் கையை பாசத்தோடு பிடித்துக்கொண்டாள் மாமி.கீதா ஒன்றும் தெரியாமல் முழித்தாள்.


சோமசேகர் துக்கம் நெஞ்சை அடைக்க கிணற்றடிக்குச் சென்றான்.


முற்றும்


படிக்க:

கவிதை எதைப் பற்றி.... சஸ்பென்ஸ்








15 comments:

  1. நன்றி தண்டோரா.

    ReplyDelete
  2. அசந்துட்டேன் ரவிஜி.என்ன அருமையான நடை.நல்ல observation.அழகான presentation."சோமசேகர் துக்கம் நெஞ்சை அடைக்க கிணற்றடிக்கு போனான்"படித்ததும்,எனை அறியாது வாய் விட்டு சிரித்துவிட்டேன்.

    ReplyDelete
  3. ரவி சார்... சூப்பர்...
    இயல்பான நகைச்சுவை இழையோடக் காட்சிகள் கண் முன்னே நிகழ்கிறது...
    எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது சார்..
    இவ்வளவு நல்ல கதைக்கு ரெண்டே கமெண்ட்டுதானா? :-((

    ReplyDelete
  4. //யாரோ ஒருவர் ஆட்டோவை வெயிட்டிங்கில் விட்டு அர்ஜெண்டாக துக்கம் கேட்டு விட்டு அதே ஆட்டோவில் திரும்பிப் போய்விட்டார்.//

    :-)

    சோகமான பேக் ட்ராப்பில் நகைச்சுவை இழையோடும் கதை அமைத்திருப்பது ரசிக்கத்தக்கது.

    - சத்யராஜ்குமார்

    ReplyDelete
  5. துக்க வீட்டில் காமெடி என்பதுபோல் ஏதேனும் பன்ச் டைட்டில் வைக்கப்புடாதோ? ( உரையாடல்கள் இயல்பு) . நல்ல கதை ரவி சார். நீளம் கொஞ்சம் ஜாஸ்தியோ?

    ReplyDelete
  6. பா.ராஜாராம் said...

    //அசந்துட்டேன் ரவிஜி.என்ன அருமையான நடை.நல்ல observation.அழகான presentation."சோமசேகர் துக்கம் நெஞ்சை அடைக்க கிணற்றடிக்கு போனான்"படித்ததும்//

    நன்றி ராஜாராம்ஜி.

    ReplyDelete
  7. தமிழ்ப்பறவை said...
    //ரவி சார்... சூப்பர்...//
    நன்றி தமிழ்ப்பறவை.

    //இவ்வளவு நல்ல கதைக்கு ரெண்டே கமெண்ட்டுதானா? :-((//
    படிப்பவரெல்லாம் கமெண்ட் போடுவதில்லை.

    ReplyDelete
  8. sathyarajkumar said...

    முதல் வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி.
    //சோகமான பேக் ட்ராப்பில் நகைச்சுவை இழையோடும் கதை அமைத்திருப்பது ரசிக்கத்தக்கது. - சத்யராஜ்குமார்//
    நிறைய வாசிப்பு அனுபவம்.எதையுமே right perspectiveல் உள் வாங்குவது. அடுத்து சரியாக வரும்வரை அடித்து அடித்து சோம்பேறித் தனம் இல்லாமல் எழுதுவது.

    உங்களுக்குத் தெரியாததா?

    ReplyDelete
  9. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  10. இயல்பான எழுத்துநடையில் காட்சிகள் கண்முன்.

    முடிவு எதிர்பாராதது.

    ReplyDelete
  11. துபாய் ராஜா said...

    //இயல்பான எழுத்துநடையில் காட்சிகள் கண்முன்.
    முடிவு எதிர்பாராதது.//

    நன்றி ராஜா.

    ReplyDelete
  12. superb, i like the narration and humour sense.- varagi

    ReplyDelete
  13. நன்றி varagi.வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  14. நல்ல இயல்பான நடையில், அழகான சிறுகதை.

    “நேத்திக்கு ராத்திரிப் பூரா நன்னா பேசிண்டு ஜோக்கெல்லாம் அடிஞ்சுண்டுதான் படுக்கப்போனார்.என் கண்ணே திருஷ்டிப் பட்றும் போல இருந்தது.விடிகாத்தல என்னை எழுப்பி “ஏப்ப ஏப்பமா வருது.. குடிக்க ஜீரா ஜலம் குடு “ன்னு எழுப்பினார். கொண்டு வந்து குடுக்கரத்துக்குள்ள படுத்துண்டார். பேச்சே இல்லே.பிராணன் போயிடுத்து. ”

    ஒவ்வொரு துக்க வீட்டிலும் திரும்ப திரும்ப அலுப்புடன் (அல்லது அலுக்காமல்) சொல்வதற்கு இது போல் ஒரு கதை இருக்கும். வருகிறவர்களும் விட்டால்தானே? “எப்படிங்க ஆச்சு?” என்று ஒரு பிட்டைப் போட்டு வைக்கிறார்களே!

    ReplyDelete
  15. ரொம்ப நன்றி சித்ரன்.உங்கள் புரோபைல் பார்த்தேன்.
    நீங்கள் பெரிய எழுத்தாளர் என்று தெரிகிறது.
    பத்திரிக்கைகளில் பார்த்தாக புகைமூட்டமாக ஞாபகம்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!