Wednesday, July 14, 2010

டைப்ரைட்டரில் Pack my box with ......

கிண்டி அருகே “ஹால்டா” பஸ் நிறுத்தம் ஒன்று அப்போது (இப்போது?) உண்டு.அதை கடக்கும் போதெல்லாம் Pack my box with five dozen liquor jugs என்ற சின்ன சொற்றொடரை பல முறை டைப்ரைட்டரில் டைப் செய்த நினைவுகள்  ”டிச்சு...டிச்சு...டிச்சு...” என்ற ஒலியுடன் மனதில் ஓடும்.

ஹால்டா என்பது டைப்ரைட்டர் தயாரிக்கும் பெரிய நிறுவனம்.அது தயாரிக்கும் 
டைப்ரைட்டர் பெயரும் ”ஹால்டா”.

ஹால்டா குழுமம் மூடி பல வருடம் ஆகி விட்டது.

ஆனால் என் டைப்ரைட்டிங் அனுபவம்?இன்னும் திறந்தேதான் இருக்கிறது.
ஜுராசிக் படத்தில் குட்டி டைனோசர்கள் ஓடிக்கொண்டிக்கும்போது திடீரென்று ஒரு பிரம்மாண்ட டைனோசர் குறுக்கே ஓடி வந்து பெரும் சத்தத்துடன் கவ்விக்கொள்ளும்.அது மாதிரி டைப்ரைட்டரை கம்புயூட்டர் ராட்ஷ்சன் ஒரே கவ்வாக கவ்வி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டது.


பள்ளி, காலேஜ் போல டைப்ரைட்டிங் இன்ஸ்டிடீயுட்டும் மறக்க முடியாத அனுபவம்.


குரோம்பேட்டையும் அதைச் சுற்றியும் பல இன்ஸ்டிடீயுட்டுகள் உண்டு.
முக்கால்வாசி இன்ஸ்டிடீயுட் பெயர்களில் படிப்பு சம்பந்தப்பட்ட “வாணி”“விஜயலஷ்மி” ”சரஸ்வதி’ ”கலைவாணி” பெயர்கள இருக்கும்.நான் ப(அ)டித்தது ராதா நகரில்.இதன் ஓனர்(மாஸ்டர்) “பசி” நாராயணன் போல் இருப்பார்.டைப்ரைட்டர் ஸ்டூலை விட கொஞ்சம் உயரம்.இங்கு மாதக் கட்டணம் ரூபாய் 10அல்லது15.இங்கு தமிழ்,ஆங்கிலம் இரண்டும் உண்டு.
ஆங்கிலம்தான் நிறைய பேர் சேருவார்கள். தமிழ் டைப்ரைட்டிங் கற்றுக்கொண்டால் தமிழ் நாட்டை விட்டு வெளியே வேலை கிடைக்காது.ஆங்கிலம் படித்தால் டெல்லியில் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி டைப்பிஸ்ட் கம் கிளர்க் அல்லது “கிளார்க்” ஆகலாம்.பல இந்திய கம்பெனிகளில் வாய்ப்புக்கள் அதிகம். 


ஒரு சுபயோக சுப தினத்தில் டைப்ரைட்டிங் சேர்ந்து அதன் அக்காவான ஷார்ட்ஹாண்டிலும் சேர்ந்தேன்.அதன் பெயர் மாதிரியே ஷார்ஹாண்டை  கற்க முடியாமல் அற்ப ஆயுசில் விட்டுவிட்டேன் 


இதில் சேருபவர்கள் முக்கால்வாசி ஆண்கள் SSLC லீவ் அல்லது PUCலீவில் சேருவார்கள்.இல்லாவிட்டால் காலேஜ் முடித்து விட்டு வேலை கிடைக்கும் வரை இருக்கும் நாட்களில் பொழுதுபோக்குக்காக சேருவார்கள்.எதுவும் சேராமல் வெட்டியாக இருப்பவர்கள் CA அல்லது ICWA சேரப்போகிறேன் என்று பீலா விடுவார்கள்.பெண்கள் SSLC முடித்தவுடன் சேர்ந்து விடுவார்கள்.மேற்படிப்பு படிக்க வசதி இருக்காது.

நான் டைப்ரைட்டிங் சேர்ந்தது வெட்டியாக இருப்பதன் பினாமியாக.படித்து முடித்தவுடன் கோர்ட் வாசலில் கொட்டகைப் போட்டு பத்திரம் டைப் அடிக்கப் போய்விடுவேனோ என்று அடிவயிற்றில் எப்போதும் பயம் உண்டு.

கல்யாணத்திற்கு நிற்கும் பெண்களுக்கு டைப்பிங் ஹையர்(45 wpm)தமிழ்+ஆங்கிலம்)+ ஷார்ஹாண்ட் இருந்தால் மவுசு ஜாஸ்தி.மாப்பிள்ளை வீட்டில் இஷ்டபட்டால் வேலைக்கு போகலாம்.

மதியம்/சாயங்கால வேளைகளில் கையில் ஒரு பேப்பரைச் சுருட்டியபடி நிறைய பெண்கள் தெருவில் தென்படுவார்கள்.பையன்களும் தெரு முக்கில் பேப்பரைச் சுருட்டியபடி தலையை நொடிக்கொருத் தடவை வாரியபடி நிற்பார்கள்.

அந்த இன்ஸ்டிடீயூட் ஓனர் (மாஸ்டர்)எல்லா டைப்ரைட்டருக்கும் ஊதுவத்தி காட்டிவிட்டுதான் இன்ஸ்டிடீயூட்டை காலை-மாலை ஆரம்பிப்பார்.நாங்கள் டைப்பிங் நேரம் எடுப்பது சினிமா போவதற்கு வசதியாக; ”சைட்” அல்லது “டாவ்” அடிப்பதற்கு; பக்கத்தில் உட்காரப்போகும் பாவாடைத்தாவணிப்பெண்களின் நேரத்தைப் பொறுத்து.

(ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் கொடுத்து நேரத்தை மாற்றிக்கொள்ளலாம்) டைப்பிங்கை முடித்துவிட்டு குரோம்பேட்டை ஸ்டேஷினில் நின்று வைணஷ்வா கல்லூரி மாணவிகளை “சைட்” அடிப்பத்தற்கும் நேரத்தை “டை அப்” செய்வது உண்டு.
 

மொத்தத்தில் டெல்லி போவதற்கு அல்ல.

இங்கு அண்டர்வுட்,ஹால்டா,ரெமிங்டன் மற்றும் பாசிட் மெஷின்கள் இருக்கும்.கத்துக்குட்டிகளுக்கு அண்டர்வுட் அல்லது ஹால்டா கொடுப்பார்கள். ஹால்டா கிழடு தட்டி இருக்கும். இதில் உள்ள கீக்கள் ”புல்புல்தாரா” போல் தோற்றம் அளிக்கும்.நல்ல பயிற்சி வந்தால்தான் ரெமிங்டன் கிடைக்கும்.பாசிட் என்ற மிஷன் மெதுவாக நகரும். ரெமிங்டன் வேகமாக நகரும்.


உட்காரும் ஸ்டூல் டைலர் கடையில் காஜா எடுக்கும் பையன் உட்காரும் ஸ்டூல் போல் இருக்கும்.90 டிகிரியில் உட்கார்ந்து டைப் அடிக்க வேண்டும்.

முதலில் asdfgf ;lkjhj அடித்து பழக வேண்டும். தூங்கிக்கொண்டிருக்கும் எழுத்துக் கம்பிகளை உற்றுப்பார்த்தப்படி தேடித் தேடி ”பச்சக்கு பச்சக்கு” என்று அடித்து எழுப்ப வேண்டும்.சில சமயம் நாலைந்து மொத்தையாக ஒட்டியபடி எழுந்து நிற்கும். அவற்றை வாழைப்பூ ஆய்வது மாதிரி ஆய்ந்து பிரிக்க வேண்டும்.கையில் கருப்பு மை ஒட்டிக்கொள்ளும்.பலமில்லாத சுண்டு விரலால் “z" ஐ அடிப்பதால் அது  எழும்பவே எழும்பாது. 


திமுக கொடி கலரில் இருக்கும் ரிப்பனை spoolலில் சுத்தி இருப்பார்கள்.அது கலரின் ஆழம் இல்லாம வெளுத்துக் கிடக்கும்.சுத்தாவிட்டால் கையால் சுற்றி ஓட விட வேண்டும்.சில சமயம் ரிப்பன் அறுந்து தொங்கும்.சில மாதங்களில் டைப்பிங்கை விட சின்ன மெக்கானிக் வேலைகளைக் கற்றுக்கொள்ளலாம்.

மாஸ்டர்  ”ரெவிஜங்கர்... பைய அடிக்கனும்! கீபோர்ட்பாக்கக்கூடாது ” உள்ளே இருந்து குரல் கொடுப்பார் மாஸ்டர். பக்கத்தில் உள்ள “எங்க ஆள்” நமுட்டு சிரிப்பு சிரிக்கும். டைப்ரைட்டர் சத்தம் தவிர எந்த சத்தமும் வரக்கூடாது என்பதில் மாஸ்டர் உறுதியாக இருப்பார்.அற்புதமாகச் சொல்லி தருவார்.
அதனால் இவர் இன்ஸ்டிடீயுட்டில்கூட்டம் அலைப்பாயும். 

நேரம் முடிந்தவுடன் பேப்பரை ஹோட்டல் கல்லா மாதிரி டேபிள் சேர் போட்டு உட்கார்ந்திருக்கும் மாஸ்டரிடம் காட்டவேண்டும்.”என்ன.. அடிச்சு கிழிச்சிட்டாப் போல...” பேப்பரில் இருக்கும் ஊசி ஓட்டைகளைப் பார்த்தபடி திருத்துவார்.


பயிற்சியின் ஒரு கட்டத்தில் Pack my box with five dozen liquor jugs என்று இம்போசிஷன் எழுதுவது போல பல தடவை தட்டச்ச வேண்டும். இதில் ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களும் இருக்கிறது. நமக்கும் எல்லா (key)விசைகளும் பழக்கமாக ஒரு வித பயிற்சி. 


கடைசியில் தேர்வு ஏதோ ஒரு பள்ளியில் பெரிய ஹாலில் நடக்கும். மாஸ்டரின் பின்னால் ”நாங்க ரொம்ப நெருக்கம்” என்ற ரீதியில் ஒரு கும்பல் சுத்தும்.காரணம் தேர்வு முடிந்தவுடன் TNPSCல் இவர் சேர்த்துவிடுவார் என்ற நம்பிக்கையில். Campus recruitment?


தேர்வு ஹாலில் 100 பேர் டைப்ரைட்டரை அடைகாத்தபடி உட்கார்ந்திருப்பார்கள். “ஸ்டார்ட்” என்றதும் அடை மழைப் பெய்வது போல் “டிச்சி டிச்சி”என்று ஒலி சும்மா அதிரும். ‘ஸ்டாப்’ என்றதும் நிறுத்துவார்கள். சிலர் திருட்டுக்கொட்டுத்தனமாக ஒரு விரலால் விட்டதை அடித்து முடிப்பார்கள்

இதே 
திருட்டுக்கொட்டுத்தனமாக  “ஸ்டார்ட்” சொல்லாது முன்னும் ஒரு விரலால் டைப் அடிப்பார்கள் சிலர். ”ஒரு விரல்” kகிருஷ்ணராவ் டைப்பிஸ்ட்டுகள்


இப்படியாக டைப் அடித்து லோயர் கிரேட் பாஸ் செய்து  மற்றும் ஹையர் கிரேடும் பாஸ் செய்து  சந்தோஷமாக வெளி வந்தேன்.

நான் கற்ற 45 wpm  டைப்ரைட்டிங் வேகத்தை வைத்து கணக்கற்ற வேலைக்கான அப்ளிகேஷன் அடித்திருக்கிறேன். ஒவ்வொரு அப்ளிகேஷனிலும் “If  I am given a opportunity , I will  serve to the entire satisfaction of my Superiors"  சுதேசி அடிமை போல் கெஞ்சி கையெழுத்துப்போட்டு  அனுப்புவேன். எந்த சுப்பீரியரும்  ஒன்றரை வருடம் வேலையே தரவில்லை. டெல்லியிலும் யாரும் இழுத்துவிடவில்லை.வெட்டியாக சுத்தினேன்.

கடைசியில்  ஒரு இத்துப்போன கம்பெனியில் வேலைக் கிடைத்தது.அதில் சேர்ந்து முதலில் இண்டர் ஆபிஸ் மெமோவில் முதன் முதலில் சந்தோஷமாக  டைப் அடித்தேன்.Enclosed please find the following........ (1+4copies)

  

28 comments:

 1. Very interesting post!
  Enjoyed reading it.
  //ஒவ்வொரு அப்ளிகேஷனிலும் “If I am given a opportunity , I will serve to the entire satisfaction of my Superiors" சுதேசி அடிமை போல் கெஞ்சி கையெழுத்துப்போட்டு அனுப்புவேன். // :)))))))

  ReplyDelete
 2. Another one like "pack my box..."
  The quick brown fox jumps over the lazy dog.

  ReplyDelete
 3. ennai pazhaya natkalukku kondu sendru vitteer... Ama ... ippo enna panrappala...

  ReplyDelete
 4. வாங்க தீபா.கருத்துக்கு நன்றி.

  //The quick brown fox jumps over the lazy dog//

  ஆமாம் இதிலும் 24 ஆங்கில எழுத்துக்கள் வந்து விடுகிறது.

  ReplyDelete
 5. Nostalgic!

  தொடர்புடைய ஜீவா மற்றும் பாராவின் இடுகைகளை ஒரு எட்டு எட்டிப் பார்த்து விடவும்!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

  ReplyDelete
 6. Blogger KANTHANAAR said...

  // ennai pazhaya natkalukku kondu sendru vitteer... Ama ... ippo enna panrappala...//

  முதல் வருகைக்கு நன்றி.பிசினஸ்.

  ReplyDelete
 7. //The quick brown fox jumps over the lazy dog//
  The quick brown fox jumped over the lazy dog has all 26 letters - These type of sentences are called Pangrams

  Regards
  Venkatramanan

  ReplyDelete
 8. எனக்கு டிச்சிக் டிச்சிக் என்று டைப் அடிப்பதைவிட அடுத்தவரிக்குக் கொண்டுவர அந்த லீவரைப் பிடித்து டிச்ச்சாங் என்று வலதுபக்கம் இழுத்துவிடுவது ரொம்ப பிடிக்கும்.

  மற்றபடி அரை குறையாக கற்றுக்கொண்ட டைப் ரைட்டிங்க் எதற்கும் உதவவில்லை. கம்ப்யூட்டர் டைப்பிங் தானாக கற்றுக்கொண்டு ஸ்பீடும் அபாரமாய் வந்துவிட்டது.

  நல்ல நோஸ்டாலஜி பதிவு.

  ReplyDelete
 9. venkatramanan said...
  //Nostalgic!//

  நீங்கள் கொடுத்த இரண்டு சுட்டிகளையும் படித்தேன்.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவம்.ரசித்தேன். நன்றி.

  பதிவில் 24ஐ 26 என்று திருத்தி
  விட்டேன்.தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

  ReplyDelete
 10. சித்ரன் said...
  //அடுத்தவரிக்குக் கொண்டுவர அந்த லீவரைப் பிடித்து டிச்ச்சாங் என்று வலதுபக்கம் இழுத்துவிடுவது ரொம்ப பிடிக்கும்//

  ஆமாம்.சுகமே தனி.

  // கம்ப்யூட்டர் டைப்பிங் தானாக கற்றுக்கொண்டு ஸ்பீடும் அபாரமாய் வந்துவிட்டது//

  மானிட்டரை ”டிச்ச்சாங்” செய்ய வேண்டாம்.

  ReplyDelete
 11. Zக்கு சுண்டு விரலா? மோதிர விரல்தானே எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க?

  டைப்பிங் கத்துகிட்டதால abcdஐ zyxwvu என்று தலைகீழாக வேகமாக இப்பவும் சொல்வேன்.

  டைப்பிங் இன்னமும் யூஸாகுது. ஷார்ட்ஹேண்ட் ம்ஹூம்.

  ReplyDelete
 12. இடுகை என்னையும் பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றது

  ReplyDelete
 13. Blogger ஜ்யோவ்ராம் சுந்தர் said...

  //Zக்கு சுண்டு விரலா? மோதிர விரல்தானே எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க?//
  இருக்கலாம்.ஆனால் நான் சுண்டு விரலில்தான் முயற்சி செய்தேன்.

  நன்றி சுந்தர்.

  ReplyDelete
 14. நன்றி சுல்தான்.

  ReplyDelete
 15. நாங்கள் விலைப்பட்டியல் / அட்டவணை / இருப்பு நிலை தாள் அடித்துவிட்டு அளவுகோல் உதவியுடன் பென்சிலால் கோடு இடுவதற்குப் பதிலாக ரிப்பன் வழிநடத்தியில் உள்ள ஓட்டை வழியாக உருளையைச் சுற்றியபடி தாளில் கோடு போடுவோம். அந்த உருளையைச் சுற்றும் சத்தம் எப்படித்தான் எங்கள் ஆசிரியருக்குக் கேட்கும் என்று தெரியவில்லை. உடனே அவர் அப்படி எல்லாம் கோடு இடக்கூடாது என்பார் - உருளை தேய்ந்து விடுமாம் :-)))

  ReplyDelete
 16. வெகு சுவாரஸ்யமான அசை போடல்கள்...
  நான் ஏழு,எட்டு,ஒன்பது வகுப்பு முழு விடும்றை நாட்களில் சென்றேன்.
  ‘கலைவாணி தட்டெழுத்துப் பள்ளி’
  கறுப்பு சிவப்பு ரிப்பன் இருக்க மெஷின்ல அடிக்கணும்னு ஆசை..விடமாட்டாங்க(அப்போ திமுக அபிமானி)...
  ஹால்டா மிஷின் தெரியாது..’கோத்ரெஜ்’ தான் அடிச்சிருக்கேன்...
  ஒவ்வொரு முறையும் 'asdf' ல ஆரம்பிச்சு, abc நேர், தலைகீழ் வரை அடிப்பேன். எக்ஸாம் போனதில்லை...
  ஃபிங்கரிங் மட்டும் வந்தது. அது இப்போ நல்லா யூஸ்ஃபுல்லா இருக்குது....

  ReplyDelete
 17. //Pack my box with five dozen liquor jugs //

  எனக்கு தட்டச்சு பழகிய இல்லாததால் இதைப் பார்த்தவுடன் அசோகமித்திரனின் ஒற்றன் நாவல்தான் நினைவுக்கு வந்தது. அதில் இப்படி தட்டச்சை வாங்கி இந்த வசனத்தை அடித்துப் பார்ப்பது போலவரும்..
  உங்கள் நினைவுப் பகிர்வும் மிக சுவாரசியமான நடையுடன் இருக்கிறது

  ReplyDelete
 18. பாலராஜன்கீதா said...

  //அந்த உருளையைச் சுற்றும் சத்தம் எப்படித்தான் எங்கள் ஆசிரியருக்குக் கேட்கும் என்று தெரியவில்லை. உடனே அவர் அப்படி எல்லாம் கோடு இடக்கூடாது என்பார் - உருளை தேய்ந்து விடுமாம் //

  எத்தனை விதமான அனுபவங்கள்.
  வருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 19. Blogger தமிழ்ப்பறவை said...

  // நான் ஏழு,எட்டு,ஒன்பது வகுப்பு முழு விடும்றை நாட்களில் சென்றேன்.
  ‘கலைவாணி தட்டெழுத்துப் பள்ளி’//

  ரொம்ப அட்வான்ஸாக போய் சேர்ந்துவிட்டீர்கள்.அனுபவமும் ரசிக்கும்படி உள்ளது.

  ReplyDelete
 20. Blogger கே.ரவிஷங்கர் said...

  நன்றி அருண்மொழிவர்மன்

  ReplyDelete
 21. நீங்க சொல்றதைப் பார்த்தால் கண்டிப்பாக 20 வருஷங்கள் முன்னாடி இருந்திருக்கும்! அப்போதெல்லாம் ஷார்ட் ஹேண்ட் படிக்காமல் டைப்பிஸ்ட் வேலை கிடப்பது கஷ்டமாச்சே? எப்படி படிக்காமல் விட்டீர்கள்?

  நான் அதையெல்லாம் ஒரு கை பார்த்துவிட்டுத் தான் கம்ப்யூட்டர் ஃபீல்டுக்கு வந்தேனாக்கும்!

  ReplyDelete
 22. Blogger ரவிஷா said...

  // அப்போதெல்லாம் ஷார்ட் ஹேண்ட் படிக்காமல் டைப்பிஸ்ட் வேலை கிடப்பது கஷ்டமாச்சே? எப்படி படிக்காமல் விட்டீர்கள்?//
  நீங்கள் சொல்வது ஆங்கிலம் தெரிந்த உயர் அதிகாரிகள் இருக்கும் பெரிய கம்பெனிகள்.அதில்தான் இரண்டும் தேவை.சாதாரண் கொட்டேஷன்,
  இன்வாய்ஸ்,ஸ்டேட்மெண்ட்,ரொட்டீன்லெட்டர்ஸ்ஸூக்குத் தேவையில்லை.

  // நான் அதையெல்லாம் ஒரு கை பார்த்துவிட்டுத் தான் கம்ப்யூட்டர் ஃபீல்டுக்கு வந்தேனாக்கும்!//

  அப்போதைய காலகட்டம் அப்படி ரவிஷா.

  நன்றி.

  ReplyDelete
 23. அருமையா எழுதிருக்கீங்க ரவிஷங்கர்ஜி,
  ராதா நகர் நான் நன்கு சுற்றிய இடம்,அங்கே தான் ஆரல் மணி டுடோரியலில் 10வதுக்கு ட்யூஷன் படித்தேன்,[1994]நான் டைப்பிங் எல்லாம் படிக்கலை,ஆனா டைப்ரைட்டிங் இன்ச்டிட்யூட் முன்பு நின்று சைட் அடிச்சிருக்கேன்.நான் பல்லாவரத்திலிருந்து ரயில்வே கேட் ஒட்டிய ரோடுவழியாக ராதாநகர் சைக்கிளில் வருவேன்.அங்கு கூட ஒரு வீட்டின் மாடியில் லாரி வடிவ நீர்தொட்டி உண்டு.

  ReplyDelete
 24. Blogger |கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

  வாங்க கீதப்ப்ரியன்(கார்த்திகேயேன்).

  // ராதா நகர் நான் நன்கு சுற்றிய இடம்,அங்கே தான் ஆரல் மணி டுடோரியலில் 10வதுக்கு ட்யூஷன் படித்தேன்,[1994]//
  தெரியும்.ஆனால் இந்தக் காலகட்டத்தில் நான் அங்கு இல்லை.

  //அங்கு கூட ஒரு வீட்டின் மாடியில் லாரி வடிவ நீர்தொட்டி உண்டு//

  ஆமாம்.மின்சார ரயிலில் போகும்போது பார்ப்பேன்.நன்றி கீதப்பிரியன்.

  ReplyDelete
 25. அதெப்படி ஐயா, எல்லா ஊர்களிலும் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யுட்கள் நீங்கள் சொன்னதைப்போலவே இருந்திருக்கின்றது!

  என் வாழ்க்கையில் பெங்களூரில் உள்ள‌ என் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யுட் நீங்கா நினைவில் உள்ளது. 16‍‍ இல் இருந்து 18 வயதிற்குள் ஜூனியர் மற்றும் சீனியர் டைப்பிங் மற்றும் ஷார்ட் ஹாண்ட் முடித்து, அதே டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யுட்டில் இன்ஸ்ட்ரக்டராக, ப்ரின்சிபாலாக வேலை செய்து, டைப்ரைட்டிங் ஷார்ட் ஹாண்டால் கடைசி 30 வருடங்களாக கர்நாடக சட்டப்பேரவையில் ரிப்போர்ட்டர், எடிட்டராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று, மீண்டும் டைப்ரைட்டிங் ஷார்ட் ஹாண்டினால் லா பர்ம் ஒன்றில் ஸ்டெனோவாக (இரட்டை சம்பளம்‍ ரூ. 60 ஆயிரம்) வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன். என் நண்பர்கள் இன்னும் என் சம்பளம் குறித்து மலைத்துபோயிருக்கிறார்கள். இன்னும் டைப்ரைட்டிங் ஷார்ட் ஹாண்டிற்கு மதிப்பு இருக்கிறது. ஆனால் கற்கும் ஆர்வம் மட்டும் இன்றைய தலைமுறையினற்கு குறைந்துக்கொண்டே வருகின்றது. - J P இரவிச்சந்திரன், Bangalore.

  ReplyDelete
 26. //இன்னும் டைப்ரைட்டிங் ஷார்ட் ஹாண்டிற்கு மதிப்பு இருக்கிறது//

  இது ரொம்ப ஆச்சரியம் அளிக்கிறது.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வந்தவாசி ஜகதீச பாகவதர்.

  ReplyDelete
 27. சேம் ப்ளட் :)

  பழைய நினைவுகளை மீட்டெடுக்கச் செய்து விட்டீர்கள்.

  ReplyDelete
 28. ☼ வெயிலான் said...

  //சேம் ப்ளட் :)பழைய நினைவுகளை மீட்டெடுக்கச் செய்து விட்டீர்கள்.//

  வருகைக்கு நன்றிங்க.க்ருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!