Wednesday, July 28, 2010

இளையராஜா - -King of Musical Stunners-2

 இது (இளையராஜா King of Musical Stunners) பாகம்-2.  இங்கே பாகம் -1.

முன் பதிவு சுருக்கம்(பாகம்-1):

மேஸ்ட்ரோவின் பாடல்கள்  பிரமிப்புக்கள் (stunners) பொதிந்தது.வழக்கமான ”சாதா” பிரமிப்புகளிடையே ஒரு ”ஸ்பெஷல்” இசை பிரமிப்பு ஒன்று பாட்டின் இடையே இசைப்பார். எதிர்பார்க்கவே மாட்டோம்.அப்படியே வாயடைத்து stun ஆகிவிடுவோம.அதைப்பற்றி மேலும் பார்ப்போம்.

படங்கள் வெளியான வருடம் கொடுக்கக் காரணம்  இதெல்லாம் எப்பவோ செய்துவிட்டார் ஞானி என்பதாக.
  
பாடல்: அந்திவரும் நேரம் படம்: முந்தானை முடிச்சு-1983
 
ஆரம்ப இசை முடிந்து 0.36-0.47  “அந்தி வரும் நேரம்” என ஜானகி பாட்டை (பின்னணியில் மிருதங்கம்) எடுக்கும் இடம்  அற்புதம். ராஜாவால் ஆழப்படுத்தப்பட்டு  மனதில் தாக்கத்தைக் கொடுக்கிறது.
  
பாடல்: உனக்கெனதானே படம்:பொண்ணு ஊருக்குப் புதுசு-1979

இந்தப் பாட்டில் பிரமிப்பு,இளையராஜா-சரளா(ஷைலஜா?) குரல்கள் காற்றில் அலைந்து அலைந்து (காட்சி அப்படி) வருகிறது.பெண் குரல் வசீகரமாக இருக்கிறது.பாட்டின் பேச்சுத் தமிழ் மெட்டு அருமை.1.02-1.16லும் பி்ரமிப்பு.

நடுவில் வரும் மாட்டு வண்டி டயலக் அருமை.இதில் சில விஷயங்கள் புதைந்து இருக்கு.கண்டுப் பிடியுங்கள்.


பாடல்: பாரதி படம்: எதிலும்  இங்கு-2000

தெய்வீக மணம் கமழும் இசை.0.58ல் பாட்டின் போக்கில் ஒத்தப்படும்  புல்லாங்குழல் நாதம் பாட்டை  ஒரு தூக்கு தூக்குகிறது.ஊதுவத்தி  மணம். 2.23 மற்றும் 4.08 ல் கருணை சுரக்கும் வயலின் நாதம் eternal bliss! கிளாசிகல் நாதத்தை மெல்லிசையில் இணைப்பது அபாரம்.

எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா!

1.19ல் பாட்டின் தாளம்  வேறு ஒரு தாளத்திற்கு கவித்துவமாக நழுவுகிறது.

வரி வடிவத்தில் குறிப்புக்கள் எழுதினாலும் ஒலி வடிவத்தில் இப்படி இசைக்கப்போகிறது என்று எப்படி விஷுவலைஸ் செய்கிறார்?

பாடல்: நிலா காயுது நேரம் படம்: சகலகலாவல்லவன்-1982


பாட்டு கிராமிய மணம் என்றுதான் வெளியே தோன்றும்.கிராமிய போர்வையில் வெஸ்டர்ன் கிளாசிகல் 00.00-0.11 & 1.17-1.23 & 1.35-1.40 வாசிக்கப்பட்டு இருக்கிறது.1.23-1.31  வயலின் அருமை.

கிராமிய மெட்டு+மத்யமாவதி ராகம்+வெஸ்டர்ன் கிளாசிகல் கலவை.

”நான் ஒரு பொன்னோவியம் ” - கண்ணில் தெரியும் கதைகள் -1980
பாட்டின் லட்சணமே பிரமிப்பு.அடுத்து பிரமிப்பு .-2.49 - -2.23.இடையில் வரும் இனிமை ஹம்மிங் நீளம்.இது மாதிரி நீள ஹம்மிங் வேறு பாட்டில் உண்டா.

கோரஸ் வித்தியாசமாக கையாளப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இசை ஜி.கே.வெங்கடேஷ்,டி.ஆர்.பாப்பா,கே.வி.மகாதேவன்,சங்கர்-கணேஷ் , இளையராஜா என்ற அஞ்சு பேர்.கணேஷ் , இளையராஜா தவிர எல்லோரும் இறந்துவிட்டார்கள்.


பாடல்: அந்தரங்கம் யாவுமே படம்:ஆயிரம் நிலவே வா-1983


1.04-1.16ல் மேல் உள்ள drums மற்றும் வட்டவடிமான தட்டுக்களில்(cymbals) ரொம்பவும்  நளினமாக அறையப்பட்டு (slapping).நாதம் ரம்யமாக இருக்கிறது. ஒரு மினி பிரமிப்பு 1.07-1.09.மேற்கத்திய இசைதான். வேறு ஒரு மணத்தில் கொடுக்கிறார்.

பாடல்: கோயில்புறா படம்:அழகே தமிழே -1981

ஆனால் 1.45-1.58ல் முன்னணி மற்றும் பின்னணி என இரண்டு நாதஸ்வரங்கள் இரண்டு வித நாதங்களை இசைக்கிறது.மேற்கத்திய (lead/base) என்ற ரீதியில் இசைத்துள்ளார்.கவுண்டர்பாயிண்ட் டெக்னிக்கும் தெரிகிறது.

உள்ளே இவ்வளவு .ஆனால் வெளியே
“ஹோம்லி”அண்ட்”கிளாசிகல்”.நாதஸ்வரத்தின் மங்களகரத்தையும் மெயிண்டெயின் செய்கிறார்.

பாடல்: யாரைக் கேட்டு நீர் படம்: என் உயிர் கண்ணம்மா-1988


1.11 - 1.17.  இசை மிகவும் காதல்படுத்தப்படுகிறது(romanticize).அடுத்த பிரமிப்பு சிவரஞ்சனி ராகம் வித்தியாசமான இசைக்கோர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

 பாடல்: மேகம் கொட்டட்டும் படம்: எனக்குள் ஒருவன்-1984



1.08 -1.28 அட்டகாசம். 1.08-1.12ஐ கூர்ந்து கவனியுங்கள்."பாரதி” பாட்டில் வரும்  அதே புல்லாங்குழல்(?) இங்கு எப்படி இசைக்கப்படுகிறது! The real stunner.

பாடல்: மலர்களே படம்: கிழக்கே போகும் ரயில்-1978

பாட்டில் அழகு சொட்டுகிறது.இசைக் கருவிகளின் கலவை பிரமிப்பு.சற்று உற்று கவனித்தால் மலேசியா வாசுதேவன் சில இடங்களில் சுருதி விலகி பாடுவது தெரியும்.


பாடல்: மாலை சூடும் வேளை படம்: நான் மகான் அல்ல-1984


1.07-1.21.
இதெல்லாம் என்ன மாதிரியான இசை?இதையெல்லாம் எதில் வகைப்படுத்த முடியும்?உச்சக்கட்ட பிரமிப்பு.


பாடல்:எங்கெங்கோ செல்லும் படம்:பட்டாகத்தி பைரவன்


Engenkosellem | Music Codes

31 வருடங்களுக்கு முன்பு கம்போஸ் செய்தது.இதற்கு இணையாக ராஜாவைத் தவிர வேறு பாட்டு இருக்கிறதா?சத்தியமாகக் கிடையாது

ஜானகியின் மூன்று ஹம்மிங்கும் அதன் எதிரொலியும் 1.39 - 1.46
1அங்கும்ம்...........ம்ம்ம்ம்ம்ம் 

2.இங்கும்ம்..........ம்ம்ம்ம்ம்ம் 

3.எங்கும்......ம்ம்ம்ம்ம்
மூன்றும் ஒரே மாதிரி ஹம்மவில்லை.பாட்டின் இண்டு இடுக்கெல்லாம்  அழகுப் படுத்தி பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ!

பாடலின் காட்சியில் 56 வயது யுவனும் 26 வயது யுவதியும் தோன்றுகிறார்கள்.Real stunner!

பாடல்: ராமனின் மோகனம் படம்: நெற்றிகண்-1981

ஆடியோ “ராமனின் மோக” என்று இடத்தில் நின்று விடுகிறது. இண்டிகேட்டர் வட்டத்தை மவுசால் இழுத்து கேட்க வேண்டிய கவுண்டில் வைத்து ஆன் செய்யவும்.



0.16-0.29ல் ஊமை மொழியில் ஒரு நாதம் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. என்ன இசைக்கருவி?சிந்த்? 1.32க்கு பிறகு 1.33-1.43 பாட்டின் emotion அப்படியே தலைகிழாய் மாறுகிறது.பாட்டே அற்புதமான கம்போசிங்.

பாடல்: மணமாலையும் படம்: வாத்தியார் வீட்டுப் பிள்ளை-1989


சிவாஜி நடித்த “பாசமலர்” படத்தின் “”மலர்களைப்போல் தங்கை” பாட்டின் 1989 வெர்ஷன் என்று சொல்லலாம்.அண்ணனின் தங்கை பாசத்தை அற்புதமான இசைக்கோர்ப்பில் குழைத்துக் கொடுத்துள்ளார்.1.21-1.47இசையில் அன்பு வழிகிறது.


பாடல்: என்னுள்ளில் எங்கோ படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி-1979

ராஜாவின் இசை வானில்  மினுமினுத்துக்கொண்டே இருக்கும் நட்சத்திரம்.
2.24 - 2.49 புதுவிதமான இசை.2.50ல்  அடுத்த இசைக்கு மாறுவது அபாரம்.
இசையின் ஒவ்வொரு துளியும்  fully emotion packed.

Monday, July 26, 2010

குலதெய்வம் - திக் திக் திகில்கதை

ஈஸ்வரியின் காதல் கல்யாணம் வெகு விமர்சையாக  நடந்தது.குறை எதுவும் யாருக்கும் இல்லை. இவள் குலதெய்வத்திற்க்குதான் குறை ஏற்பட்டு விடுகிறது.

கல்யாணம் என்றாலே அடுத்தது சாவு என்று மாற்றிவிட்டது குல தெய்வம்.

நினைத்தவுடன் குலை நடுங்கியது ஈஸ்வரியின் அம்மா சீதாவுக்கு.

இதற்கு முன் நடந்த கல்யாணங்களின் தொடர்ச்சியாக சீதா தன் கணவனை இழந்தது.முதல் பெண்ணின் கணவன் விபத்தில் இறந்தது.அவளின் இரண்டாவது கணவனும் மகா கோரமாக இறந்தது.இரண்டாவது பையனுக்கு பிறந்த குழந்தைகள் இறந்தது. இரண்டாவது பெண்ணின் தொட்ட காரியங்கள் எல்லாம் தடங்கல்.

திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்தப்போது மிகப் பெரிய விபரீதம் நடக்கும். இந்த கல்யாணம் வேண்டாம் என்று ஜோசியர் சொன்னார்.சீதாவும் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.ஈஸ்வரிதான் பிடிவாதமாக நின்றாள். காதலித்தவனயே கைப்பிடித்தாள்.

”மாப்பிள.... என் பொண்ணு கொடுத்து வச்சவ..ரெண்டு பேரும் சீரும் சிறப்புமும எந்த குறையும் இல்லாம வாழனும்”

”எல்லா நல்லா நடக்கும்ங்க....கடவுளோட ஆசிர்வாதம் இருக்கு..”

”நம்ம தெய்வம்தான் குத்திக் கொல்லுதே.கல்யாணம் ஆன கையோட
பிரார்த்தனய முடிக்கனும். அதுவும் ஈஸ்வரியோட முதல் தீட்டு முடிஞ்ச பிறகு ஏழாவது நாள்ல முடிக்கனும்”

”எந்த ஊர்ல இருக்கு உங்க குல தெய்வம்?”

”மாயவரத்துக்கிட்ட ஏதோ ஒரு குக்கிராமம்.பேரு பட்டினம்காப்பு. அங்க அரிசாமின்னு ஒரு ஆம்பள சாமி... ஆனா..” சீதா கேவினாள்.

“என்னம்மா  ஆச்சு...” ஈஸ்வரி அம்மாவின் கையை ஆறுதலாகப் பிடித்தாள்.

”எங்களுக்கு வந்து வாச்ச சாபம் மாப்பிள.பிரார்த்தனைய வீர்யமா முடிச்சாலும் அவல்ங்கள் நடக்கும்.பிரார்த்தனைய. ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்..! போ..சனியனேன்னு விடரதுக்கும் பயமா இருக்கு.யாரோ நடுவுல ஏதோ தப்புப் பண்ணிட்டாங்க.”

”பிராத்தனைய முடிச்சுட்டு  அந்த ஊர் பெரியவங்க கிட்ட கேட்டுப் பார்த்து முடிவு எடுப்போம்..”மகாதேவன் ஆறுதல் சொன்னான்

“முக்கியமா ஈஸ்வரியோட முதல் தீட்டு முடிஞ்ச பிறகு ஏழாவது நாள்ல.....”
 
மாமியார் சாமி விவரங்கள அடங்கிய பெட்டியை கொடுத்தாள்.வாங்கும் போது திகிலாகத்தான் இருந்தது மகாதேவனுக்கு.இடது கையால் வேறு வாங்கினோமே.

உள்ளே துரு ஏறின தகட்டில் முட்டிக்கால் போட்டபடி நிற்கும் சாமிதான் அரிசாமி பட்டினம்காப்பு. அது தவிர உளுத்துப் போன காகிதங்களும் அதில் மந்தரங்களும் அப்புறம் சில ருத்திராட்ச மாலைகளும்.

பட்டினம்காப்பு பூசாரிக்கு லெட்டர் போட்டுப் பத்து நாள் ஆகியும் பதில் இல்லை.ஆரம்பமே அபசகுனமாக மகாவுக்கும் ஈஸ்வரிக்கும் கவலை வாட்டியது. சீதா சுரத்தே இல்லாமல் வீட்டிற்க்குள் நடமாடிக்கொண்டிருந்தாள்.

இருவரும்  கிளம்பி போய்  அங்கேயே பூசாரியை பார்த்துப் பிராத்தனையை  நிறைவேற்றுவதாக  கிளம்பினார்கள்.

அங்கு(மாயவரம்) பெரிய ஹோட்டலில் ரூம் எடுத்தார்கள்.குளிக்கப்போன அடுத்த நிமிடம் கெய்சரில் ஷாக் அடிப்பதாக மகாதேவன் கவலையோடு வெளியே வந்தான்.ஈஸ்வரி பதறிப் போய் உட்கார்ந்துவிட்டாள்.

பச்சைத் தண்ணீரில் குளித்து முடித்தார்கள்.பதறுவாள் என்று அம்மாவிடம் சொல்லவில்லை.

"நம்ம பிராத்தனைய முடிப்போம் முதல்ல...யாரு சாமின்னு அப்புறம் பாக்கலாம் .” பயத்துடன் சொன்னாள் ஈஸ்வரி.மகா தலையாட்டினான்.

சாப்பிட்டு விட்டு அந்த குக்கிராமத்தைப் பற்றி ரூம் பாயிடம் விசாரித்தார்கள்.

”அந்த ஊரா.....? அரிசாமியா? டிராவல்ஸ் அரேஞ் பண்ணித் தரேன். ஆனா எல்லைல விட்டுட்டு போய்டுவான் டிரைவர். உள்ள வரமாட்டான்..!  சரியா...?”

இருவரும் சுரத்தில்லாமல் தலையாட்டினார்கள்.கேட்காமலே இருந்திருக்கலாமோ?

”நீங்க சொல்ற பூசாரி எங்க சொந்தகாரர்தான்.இருபது நாளுக்கு முன்னாடி  இறந்துட்டாரே? ”கார் டிரைவர் வண்டியை ஓட்டியபடி பேசினான்.

கேட்டதும் இருவரும் அதிர்ந்தார்கள்.

”இறந்த நாள் சொல்ல முடியுமா?”

“ஆக்சிடெண்ட்டு.ஏதோ லெட்டர் வந்திருக்குன்னு போஸ்ட் ஆபிசுக்கு போகும்போது லாரிகாரன் அடிச்சுட்டான். ஒரு 12 மணி இருக்கும்..!”தேதியும் சொன்னான்.

ஈஸ்வரிக்கு திக்கென்றது.என் லெட்டரை வாங்கப் போனாரா?நடப்பதெல்லாம் தற்செயலா? ஒரே போடாகப் போடப்போகிறது இந்த சாமி.

கந்தசஷ்டி கவசத்தை முணுமுணுத்தாள்.

மாதந்திர பிரியட் எப்படியும் ஹோட்டலில் கழிந்து புறப்படலாம் என்பது நடக்கவில்லை.அது வேறு கவலையை வாட்டியது.என்ன தைரியத்தில் புறப்பட்டோம்.  இனம் புரியாத பயத்தோடு ஜன்னல் வழியே  விர் விர்ரென்று ஓடும் காட்சியையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நாலு மணி நேர பயணத்தில் நாலு தடவை வண்டி  ரிப்பேர் ஆகி நின்றது. எதிர்படும் கோவிலில் எல்லாம்  டிரைவர் நின்று சாமிக்கும்பிட்டு  பிரயாணத்தைத்  தொடர்ந்தான்.

மாலை நேரம்.ஊரைத் தொட இன்னும்  ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

”பசுமாடு ஒண்ணு செத்துக்கிடக்குது. இனிமே வண்டி எடுக்க மாட்டேன். திரும்பி போய்டலாம்.இல்லேன்னா நீங்க இறங்கி நடந்துபோங்க. செல்லுல என் நம்பரை கூப்பிடுங்க. வரும்போது இங்க பிக்-அப் பண்றேன்.”

”என்னங்க இப்படி சொல்றீங்க...? உங்கள நம்பிதானே வந்தோம்.இது எல்லை மாதிரி தெரியலையே?”

“வண்டிய எடுக்கும்போதே சொன்னேன்.எல்லைவரைதான்னு.வாக்க காப்பாத்திட்டேன்.இதுதான் எல்லை”
”இது சரி இல்லீங்க....” ஈஸ்வரி கோபத்துடன் சொன்னாள்.

“பயப்படாதீங்க.எல்லாம் நல்ல படியாய் நடக்கும்.உங்க முகத்துல ஏதோ கடாட்சம் தெரியுது. சார்தான் டல்லா இருக்கார்..அதோ தெரியுது பாருங்க பெரிய வீடு.அங்க  மாசானம் பிள்ளைன்னு ஒத்தரு இருப்பாரு.அவரு எல்லாம் ஏற்பாடும் செய்வாரு..”

இறக்கிவிட்டு அவன் பாட்டிற்கு போய்விட்டான்.

”மாடு லாரில அடிப்பட்டு செத்துருக்கு..” மகாதேவன் சொல்ல ஈஸ்வரி தலையாட்டினாள்.

லேசாக இருட்ட ஆரம்பித்தது. கிராமம் ” ஹோ” என்று வெறிச்சோடி அங்கும் இங்குமாக சில கூரை வீடுகள். வயல்கள்.தோப்புகள்.எங்கோ ஒரு வீட்டில் புகை வந்துக்கொண்டிருந்தது.

நடக்கையில்  குலதெய்வத்தின் மண்டிப் போட்ட உருவம்  ஈஸ்வரியின் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது.போகும் வழியில் தற்செயலாகப் கண்ணில் பட்டுவிடுமோ? பயத்துடன் துப்பட்டாவை எடுத்து முகத்தில் போர்த்திக்கொண்டாள்.ஆராய்ச்சியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.பிராத்தனையை முடித்துவிட்டு கிளம்ப வேண்டியதுதான்.

காதல் வாழ்க்கை எவ்வளவு ஜாலியாக இருந்தது.ஹனிமூன் போய் அனுபவிக்க வேண்டிய பொழுதில் இக்கிராமத்தில்...?   சே.. ! இது என்ன  வாழ்க்கை?.இருவரும் ஒட்டியபடி முன்னும் பின்னும் பார்த்தபடியே தொடர்ந்தார்கள்.மகாவின் முகம் இறுகி இருந்தது.

எங்கோ டூரிங்  டாக்கீசில் “மாரியம்மா” என்று பாட்டு காற்றில் அலைந்து வந்தது.

வழியில் ஒரு உருவத்தைப் பார்த்து மிரண்டு ஈஸ்வரிக்கு வயிற்றை வலிக்க ஆரம்பித்தது. அது சோளக் கொல்லை பொம்மை என்று மகாதேவன் தேற்றினான்.

மாசானம் பிள்ளை வீட்டை அடைந்தார்கள்.இவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார் மாசானம்.விவரம் சொன்னார்கள்.

“வர வழில சாமி எதுவும் பாக்கல.. இல்ல?”

இருவரும் பயத்துடன் இல்லை தலையாட்டினார்கள்.

“நல்லது.. முதல்ல சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க”
 
வீட்டுப் பெண்கள் முகமலர்ச்சியோடு வரவேற்றார்கள்.வயிற்று வலியைப் பற்றிச் சொன்னதும் அதிர்ந்தார்கள்.

”உங்க சொந்த பூமில முடிச்சிட்டு வந்திருக்கலாமே. சரி! எல்லாம் நல்ல படியா நடக்கும். இங்கதான் பிராத்தனைக்கு வரவங்க தங்கி நேர்த்திக்கடன நிறவேத்துவாங்க. சுத்துபத்திய நிறைய சாமிங்க இருக்கு.” அவளுக்கு தனி அறை ஒன்றைக் கொடுத்து உபசரித்தார்கள்.

சாப்பிடுகையில் எல்லா விவரங்களையும் ஒரு வரிவிடாமல் மகாதேவன்  அவரிடம் சொன்னான்.கவலையுடன் கேட்டுக்கொண்டார்.மூன்று நாள் வெளியில் எங்கும் போகாமால் வீட்டிலேயே கழித்தார்கள்.

நாலாவது நாள்...

” பூசாரி செத்துட்டதால.... புது பூசாரிக்கு பட்டம் கட்டல.இவங்க வேற தீட்ட இருக்காங்க.எப்படி பட்டம் கட்டறது.உங்க குடும்பத்துல வேற நிறைய துர் சம்பங்கள் நடக்குது.இங்க நாங்க மதிக்கிற  கிராமப் பெரிசு. ஒருத்தரு... வயசு 99.அவருகிட்ட கேட்டு செய்வோம்.ஆனா திடீர்ன்னு நெனவு இல்லாத போய்டுவாரு.நெனவு வர சமயத்தில புடிக்கனும்.சொன்னார்ன்னா...! அதான் வேத வாக்கு! வேத வாக்கு கேட்டு கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆச்சு”

கேட்டதும் ஈஸ்வரி ரொமப கவலையானாள்.வழக்கமான பிராத்தனையைக் கூட முடிக்க முடியாதுப் போல இருக்கே.இன்னும் ஒரு நாள்தான்இருக்கிறது.
அம்மாவிடம் எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருப்பதாக செல்லில் தகவல் சொல்லிக்கொண்டிருந்தாள்.

காலை 12 மணி.மகா தேவனும் ஈஸ்வரியும் டென்ஷனோடு வாசலையேப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது மாசானம் பிள்ளை ஓடிவந்தார்.

”வாங்க... வாங்க... நீங்க அதிர்ஷடம் செஞ்சவங்க...ஊர் வேத வாக்கு பெரிசு நினவு வந்து பேசறாரு. குல தெய்வப்பெட்டியை ஈஸ்வரி எடுத்துக்கொண்டாள்.

மாட்டு வண்டி குலுங்கி குலுங்கி மெயின் ரோடு வந்ததும் வேகம் பிடித்தது. பெட்டிக்குள் ஏதோ ஊர்வது போல் நினைப்பு வந்து திகிலுடன் அழுத்திப் பிடித்து அதயேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.அரை மணி நேரத்தில் வேதவாக்கு பெரியவரின் வீடு வந்தது. வெளியில் ஸ்ரீகண்ட முதலியார் அவர்கள் இல்லம் என்று போட்டிருந்தது.

கிராமத்து சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.ஈஸ்வரியைப் பார்த்து மெலிதாக சிரித்து பக்கத்தில் உட்காரச்சொன்னார்.

இருவரும் நமஸ்கரித்து பொட்டியை அவர் கையில் கொடுத்தாள்.விவரங்களைச் சொன்னார்கள்.

பழுத்துப்போன காகிதத்தை கண்ணாடிப்போட்டபடி படித்தார்.அரிசாமி தகடையும் பார்த்தார். மீண்டும் படித்துவிட்டு பார்த்தார். தகடைத் தள்ளி வைத்து விட்டு ஈஸ்வரியைப் பார்த்துப் புன்னகைப் புரிந்தார்.

“புது பூசாரிய வச்சு பிரார்த்தனய நிறவேத்திடலாமா... டைம் ஷார்டா இருக்கு” ஆர்வத்துடன் கேட்டாள்.

”உங்களுக்கு குல சாமியும் கிடையாது,பிரார்த்தனயும் கிடையாது.உங்களுக்கு நீங்கதான் சாமி. உங்கள நீங்களே கும்பிட்டுக்கனும்.புதுச கல்யாணம் ஆனா அர்த்த நாரி சாமின்ற பாவனை. பொண்டாட்டியும் புருசனும் சரி சமம்.புள்ளயார் படத்துக்கு முன்னாடி பெரிய கோலத்துப்போட்டுட்டு முன்னால நின்னு மாலைய மாத்திட்டு நமஸ்காரம் செஞ்சிட்டு வாழ்க்கைய தொடங்குங்க” சிரித்தார்.

”அப்போ பட்டினம் காப்பு அரிசாமி?” மாசானம்  கேட்டார்.

”இனிமே அரிசாமிக்கு ஒண்ணும் கிடைக்காது.கிடைக்கனும்னா குலதெய்....”
முடிக்காமல் நினைவிழந்தார்,

Tuesday, July 20, 2010

கலைஞர்ஜி -குமுதம் கேள்வி-பதில்

முதலமைச்சர் கலைஞரின்  87வது பிறந்த நாள் தொட்டு கலைஞரிடம் 87 கேள்விகள் கேட்டு அவரின் பதிலை குமுதம் பிரசுரித்திருந்தது. ரொம்ப வருடம் முன்பு வேறு ஒரு ஊடகமும் 60/70 வயது பிறந்த நாள் போது 60/70 கேள்விகள் கேட்டு பிரசுரித்திருந்தது.

அப்போதும் சரி இப்போதும் சரி அவரின் சில பிடித்த விஷயங்கள் மாறவில்லை. வங்கத்தில் உறங்கும் அண்ணா-தாய் காவியம்-பொன்னர் சங்கர்-திருக்குவளை-அய்யன் வள்ளுவர்-கண்ணகி-பெரியார்-முரசொலி மாறன்.எல்லா கால கட்ட பதில்களிலும் இருக்கும்.

சில பதில்கள் சொல்லும்போது கேள்வியையே திருப்பிப் போட்டு “வெடுக்” என்று பதில் அளிக்கிறார். சில பதில்களில் நகைச்சுவை உணர்வோடு இருக்கிறது.வழக்கமாக ஜெயலலிதாவை ஒரு வாரு வாரும் பதில்களும் உண்டு.

கேள்விகளும் அதற்கென்றேஉருவாக்கப்பட்டிருக்கும்.

வழக்கமாக அவரைச் செல்லம் கொஞ்சும் கேள்விகளும் உண்டு. உதாரணமாக..” நினைவாற்றல்” “இந்த வயதிலும் சுறுசுறுப்பு”  “நகைச்சுவை டைமிங்”.

ஆனால் அவரின்  90% ரசனைகள் சமகால சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதில்லை.  அது ஏன்? உதாரணமாக அவரின் பதில்கள்:

பிடித்த நடிகை அப்போது “அஸ்வத்தம்மா”. இப்போது “அங்க முத்து”(இடுப்பை வளைத்து நடப்பது இவரின் ஸ்டைல்). இவர்களுக்குப் பிறகு  எவ்வளவு நடிகைகள் இருக்கிறார்கள்.ரஹ்மானின் ”செம்மொழியாம் தமிழ் மொழியாம்” பிறகு  பிடித்த இன்னோரு ரஹ்மான் பாடல் “வந்தே மாதரம்”. ரஹ்மானின் சினிமா  மெலடி பாடல்களில் ஒன்றைக் குறிப்பிடலாமே.



அஸ்வத்தாம்மா(கன்னட நடிகை)

”வடிவேலின்  காமெடி ரசிப்பீர்களாமே?” என்றால் ”காமெடி என்றால் ரசித்துதானே ஆக வேண்டும்” என்கிறார். வடிவேலின் ஏதாவொரு படத்தின் காமெடியை சொல்லலாமே.

சிவாஜிதான் இன்று வரையில் எனக்குப் பிடிக்கும் என்கிறார். முன்னும்,அவரின் காலத்திலும், அவருக்கு பிறகும் நிறைய நடிகை நடிகர்கள் தங்கள் ஸ்டைலில் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள்.

அடுத்து கம்புயூட்டர்,பிரெளசிங் போன்ற ஆன்லைன் விஷயங்களில் சுத்தமாக ஆர்வம் இல்லை என்கிறார். வம்பு வராமல் எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் ரெய்னா என்கிறார்.

கட்டபொம்மன்,மனோகரா, பராசக்தி போன்ற படங்ளை இப்போது பார்ப்பது அபூர்வம் என்கிறார்.இந்த பதில் அதிர்ச்சி!

 இலக்கிய விஷயங்களில் புதுமை பித்தன் முதல் இமயம் வரை யாரையுமே குறிப்பிட்டதில்லை.எல்லாமே சங்க காலம் அல்லது வேறு ஏதாவது  இவர் எழுதிய சரித்திர நாவல்கள்.அவரின் கோபாலபுரம் வரவேற்பறையில் கண்ணாடி கேசில் நிறைய புத்தகங்கள் தென்படும்.
 
ரசித்த பதில்:
 கேள்வி: உங்கள் வீட்டில் மதுரை ஆட்சியா சிதம்பரம் ஆட்சியா?
பதில்: கலைஞர் ஆட்சி

(இதை விட  இவர் அடித்த சூப்பர் ஜோக்: வட இந்திய சாமியார் ஒருவர் கலைஞரின் தலையை சீவி விடுவேன் என்று உறுமியதற்கு இவர் பதில்:”நானும் பல வருடமாய் என் தலையை சீவ கஷ்டப் படுகிறேன் முடியவில்லை. அவனாவது அதைச் செய்யட்டும்” )

அதிர்ச்சி அடைந்த பதில்:

கேள்வி:கலைஞர் டி.வி.யில் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி?

பதில்: செய்திகள்!



அவரின் சம கால மகிழ்ச்சி “பிறப்பொக்கும்’ பாடலை எழுதி அதை சிறப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துக் கேட்டதுதான் என்கிறார் ஒரு கேள்விக்கு.

எப்போதும் மக்கள் தொடர்பில் இருக்கவே விரும்பும் கலைஞர்  தன்னுடைய சமகாலத்திய ரசனைகளைப் பகிர்ந்துக்கொள்ளாதது ஆச்சரியமான விஷயம்.பொது மக்கள் விரும்புவதைத்தான் நானும் விரும்புகிறேன் என்று காட்டிக்கொள்வதும் இல்லை.

Monday, July 19, 2010

பாவாடை தாவணி கதாநாயகிகள் சிலர்

1980/1990 களில்  நிறைய கதாநாயகிகள் திரையில் தோன்றி ஒன்றோ இரண்டோ படங்களில் தலைக் காட்டிவிட்டு காணாமல் போய் இருக்கிறார்கள்.

முக்கியமாக பாவடை தாவணி கதாநாயகிகள்.காணாமல் போனாலும் இவர்களின் சிலர் அழகு முகம் மறக்காமல் போனது உண்டு.

அந்தக் காலகட்ட படங்களின் பாடல்களைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது பழைய நினைவைக் கிளறுவார்கள்.படம் பெயரை யோசிக்கத் தோன்றும்.

அந்தப் பாவடை தாவணி கதாநாயகிகளை வலையின் உதவியுடன் “ஸ்டாக் டேக்கிங்”எடுத்த போது .......


”கீதாஞ்சலி”- பவ்யா - 1985
                                                                     







”துள்ளியெழுந்தது பாட்டு”
______________________________________
 ”வைதேகி காத்திருந்தாள்”பெயர் பரிமளம்-1984.இவர் பெண்  கன்னடசினிமா நட்சத்திரம் மேக்னா ராஜ்( பார்க்க ஆ.விகடன் 21-7-10 பக்கம் -12)
                               
Vaithehi kaaththirunthaal - Raasaave onna - Ilaiyaraaja

______________________________________
”சின்ன தாயி-1992 -பதமாஸ்ரீ











______________________________________

”பயணங்கள் முடிவதில்லை””பரீட்சைக்கு நேரமாச்சு””சிவப்பு ரோஜாக்கள்” ரஜனி.கதாநாயகியை விட “பளிச்”சென்று இருப்பார்.இவர்விஜய் டிவியின்”லொள்ளு சபா” காமெடி சீரியலில் நடித்தவர்.



______________________________________

சிம்புவின் அம்மா உஷா கூட  ஒரு படத்தில் கதாநாயகியின் தோழியாக வந்து நன்றாக நடிப்பார்.பின்னால் கதாநாயகி தோன்றியவுடன் அவ்வளவாக சார்ம் இல்லை.

______________________________________

நடிகை ஸ்ரீஜா (இவர் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மாட்டுப்பெண் ஆகிவிட்டார்) நடித்த ஒரே படம்: செவ்வந்தி (செம்மீனே.... செம்மீனே....)


______________________________________
இவர் மோனிஷா உன்னி. ”சேச்சி”யாக்கும். கார் விபத்தில் இறந்துவிட்டார் (வயது-21).”மூன்றாவது கண்” “உன்ன நினேச்சேன் பாட்டு படிச்சேன்”

”அதே மாதிரி அந்த பிரியட் கதாநாயகர்கள் பற்றியும் எழுதுங்க சார்!”
“ ஆமா  நாட்டுக்கு ரொம்ப முக்கியம்,? வேலய பாருங்கப்பா”

Wednesday, July 14, 2010

டைப்ரைட்டரில் Pack my box with ......

கிண்டி அருகே “ஹால்டா” பஸ் நிறுத்தம் ஒன்று அப்போது (இப்போது?) உண்டு.அதை கடக்கும் போதெல்லாம் Pack my box with five dozen liquor jugs என்ற சின்ன சொற்றொடரை பல முறை டைப்ரைட்டரில் டைப் செய்த நினைவுகள்  ”டிச்சு...டிச்சு...டிச்சு...” என்ற ஒலியுடன் மனதில் ஓடும்.

ஹால்டா என்பது டைப்ரைட்டர் தயாரிக்கும் பெரிய நிறுவனம்.அது தயாரிக்கும் 
டைப்ரைட்டர் பெயரும் ”ஹால்டா”.

ஹால்டா குழுமம் மூடி பல வருடம் ஆகி விட்டது.

ஆனால் என் டைப்ரைட்டிங் அனுபவம்?இன்னும் திறந்தேதான் இருக்கிறது.
ஜுராசிக் படத்தில் குட்டி டைனோசர்கள் ஓடிக்கொண்டிக்கும்போது திடீரென்று ஒரு பிரம்மாண்ட டைனோசர் குறுக்கே ஓடி வந்து பெரும் சத்தத்துடன் கவ்விக்கொள்ளும்.அது மாதிரி டைப்ரைட்டரை கம்புயூட்டர் ராட்ஷ்சன் ஒரே கவ்வாக கவ்வி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டது.


பள்ளி, காலேஜ் போல டைப்ரைட்டிங் இன்ஸ்டிடீயுட்டும் மறக்க முடியாத அனுபவம்.


குரோம்பேட்டையும் அதைச் சுற்றியும் பல இன்ஸ்டிடீயுட்டுகள் உண்டு.
முக்கால்வாசி இன்ஸ்டிடீயுட் பெயர்களில் படிப்பு சம்பந்தப்பட்ட “வாணி”“விஜயலஷ்மி” ”சரஸ்வதி’ ”கலைவாணி” பெயர்கள இருக்கும்.நான் ப(அ)டித்தது ராதா நகரில்.இதன் ஓனர்(மாஸ்டர்) “பசி” நாராயணன் போல் இருப்பார்.டைப்ரைட்டர் ஸ்டூலை விட கொஞ்சம் உயரம்.இங்கு மாதக் கட்டணம் ரூபாய் 10அல்லது15.இங்கு தமிழ்,ஆங்கிலம் இரண்டும் உண்டு.
ஆங்கிலம்தான் நிறைய பேர் சேருவார்கள். 



தமிழ் டைப்ரைட்டிங் கற்றுக்கொண்டால் தமிழ் நாட்டை விட்டு வெளியே வேலை கிடைக்காது.ஆங்கிலம் படித்தால் டெல்லியில் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி டைப்பிஸ்ட் கம் கிளர்க் அல்லது “கிளார்க்” ஆகலாம்.பல இந்திய கம்பெனிகளில் வாய்ப்புக்கள் அதிகம். 


ஒரு சுபயோக சுப தினத்தில் டைப்ரைட்டிங் சேர்ந்து அதன் அக்காவான ஷார்ட்ஹாண்டிலும் சேர்ந்தேன்.அதன் பெயர் மாதிரியே ஷார்ஹாண்டை  கற்க முடியாமல் அற்ப ஆயுசில் விட்டுவிட்டேன் 


இதில் சேருபவர்கள் முக்கால்வாசி ஆண்கள் SSLC லீவ் அல்லது PUCலீவில் சேருவார்கள்.இல்லாவிட்டால் காலேஜ் முடித்து விட்டு வேலை கிடைக்கும் வரை இருக்கும் நாட்களில் பொழுதுபோக்குக்காக சேருவார்கள்.எதுவும் சேராமல் வெட்டியாக இருப்பவர்கள் CA அல்லது ICWA சேரப்போகிறேன் என்று பீலா விடுவார்கள்.பெண்கள் SSLC முடித்தவுடன் சேர்ந்து விடுவார்கள்.மேற்படிப்பு படிக்க வசதி இருக்காது.

நான் டைப்ரைட்டிங் சேர்ந்தது வெட்டியாக இருப்பதன் பினாமியாக.படித்து முடித்தவுடன் கோர்ட் வாசலில் கொட்டகைப் போட்டு பத்திரம் டைப் அடிக்கப் போய்விடுவேனோ என்று அடிவயிற்றில் எப்போதும் பயம் உண்டு.

கல்யாணத்திற்கு நிற்கும் பெண்களுக்கு டைப்பிங் ஹையர்(45 wpm)தமிழ்+ஆங்கிலம்)+ ஷார்ஹாண்ட் இருந்தால் மவுசு ஜாஸ்தி.மாப்பிள்ளை வீட்டில் இஷ்டபட்டால் வேலைக்கு போகலாம்.

மதியம்/சாயங்கால வேளைகளில் கையில் ஒரு பேப்பரைச் சுருட்டியபடி நிறைய பெண்கள் தெருவில் தென்படுவார்கள்.பையன்களும் தெரு முக்கில் பேப்பரைச் சுருட்டியபடி தலையை நொடிக்கொருத் தடவை வாரியபடி நிற்பார்கள்.

அந்த இன்ஸ்டிடீயூட் ஓனர் (மாஸ்டர்)எல்லா டைப்ரைட்டருக்கும் ஊதுவத்தி காட்டிவிட்டுதான் இன்ஸ்டிடீயூட்டை காலை-மாலை ஆரம்பிப்பார்.நாங்கள் டைப்பிங் நேரம் எடுப்பது சினிமா போவதற்கு வசதியாக; ”சைட்” அல்லது “டாவ்” அடிப்பதற்கு; பக்கத்தில் உட்காரப்போகும் பாவாடைத்தாவணிப்பெண்களின் நேரத்தைப் பொறுத்து.

(ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் கொடுத்து நேரத்தை மாற்றிக்கொள்ளலாம்) டைப்பிங்கை முடித்துவிட்டு குரோம்பேட்டை ஸ்டேஷினில் நின்று வைணஷ்வா கல்லூரி மாணவிகளை “சைட்” அடிப்பத்தற்கும் நேரத்தை “டை அப்” செய்வது உண்டு.
 

மொத்தத்தில் டெல்லி போவதற்கு அல்ல.

இங்கு அண்டர்வுட்,ஹால்டா,ரெமிங்டன் மற்றும் பாசிட் மெஷின்கள் இருக்கும்.கத்துக்குட்டிகளுக்கு அண்டர்வுட் அல்லது ஹால்டா கொடுப்பார்கள். ஹால்டா கிழடு தட்டி இருக்கும். இதில் உள்ள கீக்கள் ”புல்புல்தாரா” போல் தோற்றம் அளிக்கும்.நல்ல பயிற்சி வந்தால்தான் ரெமிங்டன் கிடைக்கும்.பாசிட் என்ற மிஷன் மெதுவாக நகரும். ரெமிங்டன் வேகமாக நகரும்.


உட்காரும் ஸ்டூல் டைலர் கடையில் காஜா எடுக்கும் பையன் உட்காரும் ஸ்டூல் போல் இருக்கும்.90 டிகிரியில் உட்கார்ந்து டைப் அடிக்க வேண்டும்.

முதலில் asdfgf ;lkjhj அடித்து பழக வேண்டும். தூங்கிக்கொண்டிருக்கும் எழுத்துக் கம்பிகளை உற்றுப்பார்த்தப்படி தேடித் தேடி ”பச்சக்கு பச்சக்கு” என்று அடித்து எழுப்ப வேண்டும்.சில சமயம் நாலைந்து மொத்தையாக ஒட்டியபடி எழுந்து நிற்கும். அவற்றை வாழைப்பூ ஆய்வது மாதிரி ஆய்ந்து பிரிக்க வேண்டும்.கையில் கருப்பு மை ஒட்டிக்கொள்ளும்.பலமில்லாத சுண்டு விரலால் “z" ஐ அடிப்பதால் அது  எழும்பவே எழும்பாது. 


திமுக கொடி கலரில் இருக்கும் ரிப்பனை spoolலில் சுத்தி இருப்பார்கள்.அது கலரின் ஆழம் இல்லாம வெளுத்துக் கிடக்கும்.சுத்தாவிட்டால் கையால் சுற்றி ஓட விட வேண்டும்.சில சமயம் ரிப்பன் அறுந்து தொங்கும்.சில மாதங்களில் டைப்பிங்கை விட சின்ன மெக்கானிக் வேலைகளைக் கற்றுக்கொள்ளலாம்.

மாஸ்டர்  ”ரெவிஜங்கர்... பைய அடிக்கனும்! கீபோர்ட்பாக்கக்கூடாது ” உள்ளே இருந்து குரல் கொடுப்பார் மாஸ்டர். பக்கத்தில் உள்ள “எங்க ஆள்” நமுட்டு சிரிப்பு சிரிக்கும். டைப்ரைட்டர் சத்தம் தவிர எந்த சத்தமும் வரக்கூடாது என்பதில் மாஸ்டர் உறுதியாக இருப்பார்.அற்புதமாகச் சொல்லி தருவார்.
அதனால் இவர் இன்ஸ்டிடீயுட்டில்கூட்டம் அலைப்பாயும். 

நேரம் முடிந்தவுடன் பேப்பரை ஹோட்டல் கல்லா மாதிரி டேபிள் சேர் போட்டு உட்கார்ந்திருக்கும் மாஸ்டரிடம் காட்டவேண்டும்.”என்ன.. அடிச்சு கிழிச்சிட்டாப் போல...” பேப்பரில் இருக்கும் ஊசி ஓட்டைகளைப் பார்த்தபடி திருத்துவார்.


பயிற்சியின் ஒரு கட்டத்தில் Pack my box with five dozen liquor jugs என்று இம்போசிஷன் எழுதுவது போல பல தடவை தட்டச்ச வேண்டும். இதில் ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களும் இருக்கிறது. நமக்கும் எல்லா (key)விசைகளும் பழக்கமாக ஒரு வித பயிற்சி. 


கடைசியில் தேர்வு ஏதோ ஒரு பள்ளியில் பெரிய ஹாலில் நடக்கும். மாஸ்டரின் பின்னால் ”நாங்க ரொம்ப நெருக்கம்” என்ற ரீதியில் ஒரு கும்பல் சுத்தும்.காரணம் தேர்வு முடிந்தவுடன் TNPSCல் இவர் சேர்த்துவிடுவார் என்ற நம்பிக்கையில். Campus recruitment?


தேர்வு ஹாலில் 100 பேர் டைப்ரைட்டரை அடைகாத்தபடி உட்கார்ந்திருப்பார்கள். “ஸ்டார்ட்” என்றதும் அடை மழைப் பெய்வது போல் “டிச்சி டிச்சி”என்று ஒலி சும்மா அதிரும். ‘ஸ்டாப்’ என்றதும் நிறுத்துவார்கள். சிலர் திருட்டுக்கொட்டுத்தனமாக ஒரு விரலால் விட்டதை அடித்து முடிப்பார்கள்

இதே 
திருட்டுக்கொட்டுத்தனமாக  “ஸ்டார்ட்” சொல்லாது முன்னும் ஒரு விரலால் டைப் அடிப்பார்கள் சிலர். ”ஒரு விரல்” kகிருஷ்ணராவ் டைப்பிஸ்ட்டுகள்


இப்படியாக டைப் அடித்து லோயர் கிரேட் பாஸ் செய்து  மற்றும் ஹையர் கிரேடும் பாஸ் செய்து  சந்தோஷமாக வெளி வந்தேன்.

நான் கற்ற 45 wpm  டைப்ரைட்டிங் வேகத்தை வைத்து கணக்கற்ற வேலைக்கான அப்ளிகேஷன் அடித்திருக்கிறேன். ஒவ்வொரு அப்ளிகேஷனிலும் “If  I am given a opportunity , I will  serve to the entire satisfaction of my Superiors"  சுதேசி அடிமை போல் கெஞ்சி கையெழுத்துப்போட்டு  அனுப்புவேன். எந்த சுப்பீரியரும்  ஒன்றரை வருடம் வேலையே தரவில்லை. டெல்லியிலும் யாரும் இழுத்துவிடவில்லை.வெட்டியாக சுத்தினேன்.

கடைசியில்  ஒரு இத்துப்போன கம்பெனியில் வேலைக் கிடைத்தது.அதில் சேர்ந்து முதலில் இண்டர் ஆபிஸ் மெமோவில் முதன் முதலில் சந்தோஷமாக  டைப் அடித்தேன்.Enclosed please find the following........ (1+4copies)





  

Saturday, July 10, 2010

வி.தக்க்ஷிணாமூர்த்தி-எஸ்.பி.பி/செளமியா-கார்த்திக்ராஜா

வி.தக்க்ஷிணா மூர்த்தி என்பவர் பழம் பெரும் இசையமைப்பாளர்.மலையாளத்தில் நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இவர் பல இசையமைப்பாளர்களுக்கு(தமிழ்/கன்னடம்/தெலுங்கு)/பாடகர்களுக்கு குரு.இளையராஜாவும் அடக்கம்.கேரளாவில் மிகவும் உன்னதமாக மதிக்கப்படுபவர்.இப்போது கேரளாவில் வசிக்கிறார்.


தமிழில் இவர் இசையமைத்தது கொஞ்சம்தான்.அவர் இசையமைத்த “நந்தா என் நிலா”(1977) என்ற படத்தில் “நந்தா என் நிலா” என்ற பாட்டு ஹிட்.மதுவந்தி ராகத்தில் போடப்பட்டுள்ளது.



இந்தப் பாட்டில் ........

1. பாலுவின் உயிர் துடிப்பான குரல்/உச்சரிப்பு. அட்டகாசம்.
2.பாடல் வரிகள்
3. சிம்பிளான கிளாசிகல் டச் இசை
4. வீணை/ புல்லாங்குழல் அழகாக பிளெண்ட் செய்யப்பட்டுள்ளது.
5. பழைய பிளாக் அண்ட் வெயிட் போட்டோ பார்ப்பது போல் ஒரு பீலிங்

2010 -1977 = 33 வருடங்கள். இன்னும் என் உணர்வில் இருக்கிறது.
__________________________________________________________

பின் வரும் பாடல் கார்த்திக் ராஜா இசையமைத்தது. பல வெட்டி/ வேகாத பாட்டு கும்பலில் காணாமல் போன அருமையான பாட்டு. படம் “அச்சமுண்டு அச்சமுண்டு”. பாடல் “கண்ணில் தாகம் ஏனோ”.பாடகி எஸ்.செளமியா.

ஷாம்பு பாக்கெட் போல் தொங்கிக்கொண்டிருக்கும் எந்த FMம்மிலும் அல்லது டீவி சேனல்களிலும் போடப்படுவிதில்லை.வருத்தம்.





இந்தப் பாடலின் சிறப்பு என்ன?. முதலில் இசையை கூர்ந்து கேளுங்கள். பாடலுக்கு வேண்டிய ஆழமான எமோஷனை கொடுக்கிறது.அடுத்து கிளாசிக்கல் டச்.செயற்கைத்தனமாக கருவிகளை உருட்டாமல் இசையை வரைந்திருக்கிறார் கார்த்திக் ராஜா. பின்னணி இசை 0 .55 -1.00 ல் ஒரு
உயிர்துடிப்புப் பெறுகிறது..

பாட்டின் மெட்டு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.ஆண்டாள் ப்ரியதர்ஷினியின் பாடல் வரிகள்.வித்தியாசமான சொற்கள்.

செளமியாவிடம்  கர்நாடக இசைத் திறமை இருப்பதால் பாட்டின் வரிகளை ஆழமாக உள் வாங்கி உருக்கமாக பாடி இருக்கிறார்.தாய் மொழி தமிழ் என்பதால் உணர்வோடு உச்சரிக்கிறார்.ஷ்ரேயா கோஷால் மற்றும் சாதனா சர்க்கம் போல் ”கிளிப்பிள்ளை” உச்சரிப்பு மற்றும் பிளாஸ்டிக் உணர்ச்சி இல்லை.

கார்த்திக் ராஜாவிறகு திறமை இருந்தும் முன்னுக்கு வரமுடியவில்லை.காரணம் கிளாசிக்கல் டச் இங்கு எடுபடுவதில்லை.

Friday, July 9, 2010

இளையராஜா - King of Musical Stunners

மேஸ்ட்ரோ இளையராஜாவின் பாடல்களின் ஒவ்வொரு இசைத்துளியும் ரசிக்கத்தக்கவை. முக்கியமாக பிரமிப்புக்கள் (stunners) பொதிந்தது.வழக்கமான ”சாதா” பிரமிப்புகளிடையே ஒரு ”ஸ்பெஷல்” இசை பிரமிப்பு ஒன்று பாட்டின் இடையே இசைப்பார். எதிர்பார்க்கவே மாட்டோம்.அப்படியே வாயடைத்து stun ஆகிவிடுவோம..

இப்படி இவரை இசைப் பேய் பிடித்து ஒரு உலு உலுக்கும்.மழையாய் பொழிவார்.சாரல்தெறிக்கும். தென்றல் வீசும். கீழ் வானில் மின்னல் வெட்டும்.
வானவில் ஜில்லிடும்.வண்ண மத்தாப்பு பொறிகள் உதிரும்.மொட்டுகள் மலரும்.

இப்படி மேதமையை “ஒரு காட்டு காட்டுதல்”லுக்கு காரணம்.


யாருப்பா இவரு? ஆளே இல்லாத டீக்கடையில பியானோ வாசிக்கிறாரு?

1.புது முயற்சி
2.இசையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துதல்
3.அமானுஷ்ய இசைக் கற்பனை
4.பாட்டின் உணர்ச்சிகளை வேறு கருவிகளில் முயல்தல்
5.பல வித இசைகளை இணைத்தல்
6.இசையை உன்னதப்படுத்துதல்

கிழ் வரும் உதாரணப் பாடல்களோடு வாழ்ந்திருந்தால் இந்த இசை ஜாலங்களை மற்றும் பிரமிப்பு மேதமையை அனுபவிக்கலாம்.

படம்: இவன் பாடல்: அப்படி பாக்கிரதுன்னா- 2002


3.44 - 4.00 வயலின் இசை ராக்கெட் ஒன்று நெளிந்து நெளிந்து வண்ணங்களை உதிர்த்தபடி.மேல் நோக்கி போய் அந்தரத்தில் நிற்கிறது.ராஜா “பில்ட் அப்” கொடுக்கவில்லை.பாடலின் எமோஷன் கலையாமல் இசையோடு ஒட்டிப்போகிறது.Real Stunner!


படம்:அவள் அப்படித்தான் பாடல்:வாழ்க்கை ஓடம் - 1978


1.48 - 2.03 நடுவில் இரண்டு வயலின்கள் வாசிக்கப்படவில்லை.ஒரு வித வலியோடுஉரையாடுகிறது.இடையில் வேறு ஒரு இசையும்(தண்ணீரில் முழுகுவது போல்) மனதை பிழிகிறது.புது கருவியில் உணர்ச்சி.புது முயற்சி.

முதல் இடை இசையில் புல்லாங்குழலில் வலி.ஆனால் இரண்டாவது இடை இசையில்புல்லாங்குழலை தவிர்த்து வித்தியாசமாக வயலினின் வலியைகொடுக்கிறார்.அவருக்கு அவரே சவால் விட்டுக்கொண்டு கம்போஸ் செய்கிறார். ரத்தமும் சதையுமாக பாடலைக் கண் முன் விட்டிருக்கிறார்.

படம்:தர்மத்தின் தலைவன் பாடல்:முத்தமிழ் கவியே - 1988



0.16-0.27 இடையில் ஐந்து தடவை “விக்கல்”   வந்த மாதிரி இசை வருகிறது.வேறு இடத்திலும் வருகிறது. சில்லரைத்தனமாக இல்லாமல் அழகுணர்ச்சி பொதிந்த கற்பனை இசைத் துளி.உன்னிப்பாகக் கேட்டு பிரமிக்கலாம்.

படம்:உதய கீதம் பாடல்:சங்கீத மேகம் - 1985



0.07 -0.34  பிரமிப்பு. இதில் Trombone (0.17-0.34 )என்னும் இசைக் கருவி வாசிக்கப்பட்டிருக்கிறது.இதை முழுவதும் வாசிக்காமல்  0.07 -0.16ல் வேறு ஒரு மென்மையான ரிதம்  கொடுத்துவிட்டு அதுவும்வித்தியாசமாக
/மேதமைத்தன்மையுடன். அப்புறம்  Tromboneல் பட்டையைக் கிளப்புகிறார்.ராஜ(ஜா) கம்பீரத்துடன் பாட்டு திறக்கிறது.பத்தோடு ஒன்று பதினொன்றாக மேடைப் பாட்டை இசைக்கவில்லை.
மைக் மோகனுக்கு எட்டுல குரு.


                                                        Trombone

படம்: ஷத்ரியன் பாடல்:மாலையில் யாரோ-1991


0.00-0.16 இசையைப் பாருங்கள். ரீபிட் செய்து பார்த்தால் ஒரு காட்சியில் நெருப்புப் பூச்சியும் மற்றும் பச்சை சிவப்பு கலந்த ஒரு விரிப்பு விரிந்துக்கொண்டே போகும்.

படம்: ராஜாபார்வை பாடல்: வயலின் சோலோ -1981



ஆரம்பம் சிலிர்ப்பு/பிரமிப்பு.இரண்டு(1.09 & 1.15) இடங்களில் புல்லாங்குழல் நாதம் மொட்டு அவிழ்கிறது.


படம்:விருமாண்டி - பாடல்: உன்னைவிட-2004

3.52 - 4.02 ல் வரும் இசை உச்சக்கட்ட பிரமிப்பு. 3.519999999ல் கூட இசைக் கடவுள் கலைவாணிக்குக் கூட தெரியாது. அடுத்து என்ன பிரமிப்பு வரப்போகிறது என்று.ஒரு காட்டு காட்டுகிறார்.


சாதாரண ஒரு டூயட்டை சிம்பனி லெவலுக்கு இசையமைத்து இருக்கிறார்.

படம்:பூந்தளிர்:  பாடல்: ஞான் ஞான் பாடனும்- 1979

இந்தப் பாடல் முழுவதும் எனக்கு பிரமிப்பு.இசை பூத்து குலுங்கும். முகர்ந்தால் மணக்கும்.இந்தப் பாடலுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தால் நான்தான் Life Member.இதன் இசையை உற்று கவனியுங்கள்.

Out of the world இசைக் கற்பனை.Kaleidoscope view composition.


படம்: வைதேகி காத்திருந்தாள் பாடல்:ராசாத்தி உன்ன -1982

0.16 - 0.20 ”அவள் அப்படித்தான்” வலி வயலின் இங்கு ”செல்லோ”வுடன் சேர்ந்து மேற்கத்திய சாயலை மழுப்பி “கிராமிய” மணம் கொடுக்கப்படுகிறது.அடுத்து 2.44 - 3.05  இதில் 2.44 - 2-51 அண்ட் 2.52 - 3.05 இடையில் கசியும் உணர்ச்சிகளை கவனியுங்கள்.

காட்சியில் இவ்வளவு உக்கிரம் வெளிப்படுகிறதா? படுகிறது.பாடலின் இசைக்கோர்ப்பு பாமரர்களை அறியாமல் காட்சியில் ஒன்ற வைக்கிறது.
அதுதான் மேஸ்ட்ரோ.


2.44 - 2-51 வரும் இசைக்கு இந்த உஞ்சல ஆடுவது காட்டப்படுகிறது.
வழக்கமாக ”டொய்ங்க்...டொய்ங்க்” சோக ஷெனாய்/வயலின் இசைத்துவிட்டுப் மூட்டையைக் கட்டி இருக்கலாம். செய்யாமல் அடுத்தக் கட்டத்திறக்கு நகர்த்தி இருக்கிறார். 

படம்: விக்ரம் பாடல்: வனிதா மணி -1986


1.08 - 1.26 ஸ்டைலோ ஸ்டைல் பிரமிப்பு. 


படம்:நினைவெல்லாம் நித்யா பாடல்: பனிவிழும்- 1982


1.11ல் ஆரம்பித்து பு.குழலும் வீணையும் பேசுவதை பிரமித்துக்கொண்டே வருகையில் 1.29 ல்இரண்டையும் சுத்தமாக ஓரம் கட்டிவிட்டு1.30 - 1.38 வயலின்களைப் காதலிக்க (பிரமிக்க)விடுகிறார்.அட்டகாசம்.

பாட்டிற்க்குள் பலவித இசைக்கருவிளைக்கொண்டு வந்து உன்னதப்படுத்துகிறார். வருடம் 1982.இன்னும் பசுமையாக இருக்கிறது.

பாலுகாரு இல்லாமல் இந்தப் பாடலை கற்பனைச் செய்ய முடியுமா?இந்தப் பாடலை “இசை புயல்” ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெடிகேட் செய்கிறேன்.

Monday, July 5, 2010

T.ராஜேந்தர் இளைஞர்களை மிரட்டப்போகிறார்

பத்திரிக்கை உலகம் “டல்” அடிக்கும் சமயங்களில் பத்திரிக்கையாளர்கள் சில விவகாரமான ஆட்களைப் பேட்டிக் கண்டு நிமிண்டி விடுவார்கள்.ஆட்கள் காரமாகவோ அல்லது லூசுத்தனமாகவோஅல்லதுஅரைவேக்காட்டுத்தனமாகவோ அல்லது புத்திசாலித்தனமாகவோ பேசி விவகாரமாகி அது ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் ஓடும்.வாசகர்களுக்கும் பொழுதுபோகும்.

அந்த லிஸ்டில்.....

T.ராஜேந்தர்,இளையராஜா,சு.சாமி,சோ,இளங்கோவன்,
ஜெயகாந்தன்,விவேக்,கலைஞர் மற்றும் சிலர் இதில் அடங்குவார்கள்.இப்போது T.ராஜேந்தர்.

அவர் விகடனுக்கு அளித்த பேட்டியில்வழக்கமாக “நான் எம்.ஜி.யார்,கலைஞர்,ஜெயலலிதான்னு மூணு பேரோடு மோதினவன்” என்று 1,00,008 தடவையாகச் சொல்லிவிட்டு “தமிழ் நாடே மிரளும்,காதல்ல உருளும்.காதல்தான் கதை.படத்தில் ஏ டு இசட் இசை மழை.அதில் வரும் ஏழு பாடல்கள் தான் இனிமே இளைஞர்களோட சொத்து.” என்று தன்னுடைய அடுத்தப்படத்தைப் பற்றி தன்னம்பிக்கையோடு சொல்கிறார்.

அண்ணா இதெல்லாம் ஒவரா தெரியலீங்களாண்ணா?

T.ராஜேந்தர் என்றாலே தன்னம்பிக்கையின் பிரதிநிதி என்று
சொல்லுவார்கள்.அவர் முதலில் தன்னையும் பிறகு சாகா வரம் பெற்றக் காதலையும்,(எகிப்து மம்மி செட் போட்டு டூயட்டில் பின்னுவார்) மீதியில் தங்கச்சிகளையும் நம்பி  படம் எடுத்து வெற்றிப்பெற்றவர்.

ஆனால் அது முன்னொரு காலத்தில்.Once upon a time.அவர் காலத்திய ”காதல் அழிவதில்லை” தாடி இளைஞர் ரசிர்களுக்கு ரிட்டையர்மெண்டுக்கு நாலோ அல்லது ஐந்து வருடம்தான் இருக்கிறது.ஒரு வேளைஅவர்களை மிரள வைப்பாரோ?

லேட்டஸ்ட் இளைஞர்கள் இவரின் ”வீராசாமி” (14 பாடல்கள்) என்ற படத்தைப் பார்த்துவிட்டு  மிரண்டு போய் வீட்டை விட்டு வெளியே  ஒரு வாரம் வராமல் இருந்தார்கள்.

அண்ணா ஏற்கனவே எடுத்த “சொன்னால்தான் காதலா” ”காதல் அழிவதில்லை”தமிழகம் மிரண்டதான்னா..? காதலில் புரண்டதான்னா?"ஏழு பாடல்கள் தான் இனிமே இளைஞர்களோட சொத்து " இதுவரை போட்டதெல்லாம் செத்தச்சா சொத்தச்சான்னா?

போங்கண்ணா,,, தட்டிப் பார்த்த கொட்டாங்குச்சிண்ணா! நீங்க ரொம்ப குறும்புங்கண்ணா.இது மாதிரி பேசின ஜனங்க ஒத்துக்க மாட்டாங்கண்ணா..!

Sunday, July 4, 2010

செல் பேசிக்கொண்டே இருங்கள்..!



நின்றுக் கொண்டு பேசுங்கள்
ஓட்டிக் கொண்டே பேசுங்கள்
நடந்துக் கொண்டே பேசுங்கள்
உட்கார்ந்தபடி பேசுங்கள்
புணர்ந்துக் கொண்டே பேசுங்கள்
மூச்சா, ஆய் போய்க் கொண்டே பேசுங்கள்
செல் பேசிக்கொண்டே
இன்னொரு செல்லில் பேசுங்கள்
ICU வில் படுத்தப்படி பேசுங்கள்
உட்கார்ந்தப்படி பேசுங்கள்
கடன் வாங்கிப் பேசுங்கள்
தியேட்டரில் பேசுங்கள்
மீட்டிங்கில் பேசுங்கள்
சாப்பிடும் போது பேசுங்கள்
இந்தக் கவிதையை
திட்டிக் கொண்டுப் பேசுங்கள்
கியூவில் நிற்கும்போது பேசுங்கள்
லேண்ட் லைனில் பேசிக்கொண்டே
செல்லிலும் பேசுங்கள்
பிளாக் எழுதிக் கொண்டே பேசுங்கள்
பின்னூட்டம் போட்டுக்கொண்டே பேசுங்கள்
டாஸ்மாக்கில் பேசுங்கள்
பாடையை சுமந்துக் கொண்டே பேசுங்கள்
சிக்னலில் பேசுங்கள்
சார்ஜ் வைத்துக் கொண்டே பேசுங்கள்

இராவணனிடம் பத்துத் தலைகளும்
துர்க்கையிடம் சொல்லி பத்துக் கைகள்
வாங்கித் தருகிறேன்
பேசிக் கொண்டே இருங்கள்

இறந்த பிறகு நெற்றியில்
ஒரு ரூபாய்க்குப் பதிலாக
”சிம்” மை ஒட்டிக்கொள்ளுங்கள்
மூக்கில் பஞ்சுக்குப் பதிலாக
இரண்டு செல்லை நுழைத்துக்கொள்ளுங்கள்
மறு பிறப்பில் தொப்புள் கொடியில்
தொங்கியபடி பேசிக்கொண்டே வந்து
மறுபடியும் பேச ஆரம்பியுங்கள்