Saturday, October 16, 2010

சினிமா இசை மேதைகளின் Romantic Interludes

 படத்தில் பாட்டு வந்தால்,தமிழ் நாட்டு ரசிகர்கள்  “தம்” அடிக்க தியேட்டருக்கு வெளியே போய் விடுகிற  பாரம்பரியம் இருந்தது ஒரு காலத்தில்.ஆனால் பாதி கதவின் வழியே “தம்” அடித்தப்படி பாட்டைப் பார்ப்பார்கள்.

லாஜிக்  இல்லாவிட்டாலும் இந்திய  சினிமாக்களில் பாடல்கள் என்பது  தவிர்க்க முடியாத அம்சம் ஆகிவிட்டது. அதுவும் காதல் டூயட் கட்டாயம் இருக்கும்.டூயட் என்ற சொல்லிற்கு சரியான தமிழ்ச் சொல் இருக்கிறதா?


இந்த டூயடின் முன்னோடி சங்கஇலக்கியங்கள்,புராணங்கள்,கிராம கதைகள்,தெருக் கூத்துக்கள்,குறவஞ்சிப் பாடல்கள்,பாணர்கள் இதில் குறத்தி குறவன்/தலைவி/தலைவன் அல்லது நாயகி/நாயகன்,God/Goddessகளின் காதல் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பதாக பாட்டுக்கள் புனையப்படும். 

பின்னணியில் மெலிதான இசையும் உண்டு.


இப்போதும் அதே காதல் உணர்ச்சிகள்தான்.ஆனால் அதன் பின்னணி இசை?

சினிமா விஷூவல் மீடியம் ஆதலால் காதலர்களை விட்டுவிட்டு புறக் காட்சிகளுக்கு ஏற்ப இசையும் கொடுக்க வேண்டும். அதுவும் பாடும் காதலர்களின் காதல் உணர்ச்சிகளை பிரதிபலிக்க வேண்டும்.
 
பின்னணியில் இருந்த மெலிதான இசை இப்போது பலவித உருமாற்றம் அடைந்து தாளத்தோடு மற்ற இசைக்கருவிகளும் இசைந்து பாட்டிற்கு ஒரு romantic moodஐ கொடுக்கிறது. சில சமயம் காதலர்கள் ஒரு மூடில் பாட இடையிசை வேறு மூடில் இருக்கிறது. 


எதற்கு இடையிசை(interlude) ?

 காதலர்கள் மூச்சு விடாமல்  பாடிக்கொண்டிருந்தால் எப்படி?அவர்கள் ஆசுவாசிப்படுத்திக்கொண்டு முதல் பல்லவி இரண்டாம் பல்லவி முதல் சரணம் இரண்டாவது சரணம் என்று இடைவெளி விட்டு அதன் சடுதியில்
 “ஸ்டார்ட் மியூஜிக்”.அதிலும் romantic moodஐ கொண்டுவர வேண்டாமா?

நம்ம பழைய இசை மேதைகள் எப்படி இந்த romantic moodஐ  காதலர்கள் அவர்கள் பார்ட் முடிந்து ஆசுவாசுப் படுத்திக்கொண்டிருக்கும் இடைவெளியில் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்?


ஒரு வருத்தம் என்னவென்றால் எல்லாம்  எம் எஸ் வி போட்ட templateல் வரும்.இருந்தாலும் எல்லாம்  very simple orchestration.சிக்கலே கிடையாது.

அடுத்து வரப்போவதை யூகிக்கலாம்.

டூயட் இல்லாமல் காதலி அல்லது காதலன் ஒருவரை ஒருவர் வர்ணித்துப் பாடும்  பாட்டுக்களும் உண்டு. பின் வரும் romantic interludeகளில் 90% புல்லாங்குழல் நாதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாகவே இதை அதிகம காணலாம்.ஏன்? காதல் ரசம்? வேணுகானம்?

பின் வரும் ஆடியோக்களில் பாடல் வராது. வெறும் இடையிசைதான் (Interlude)வரும்.இவைகள் மிஞ்சி மிஞ்சிப் போனால்ஒரு நிமிடத்திற்க்குள் முடிந்துவிடும். சிரமப்படாமல் கேட்கலாம்.

படம்:சொல்லத்தான் நினைக்கிறேன் (1974) பாடல்: சொல்லத்தான் நினைக்கிறேன் இசை:MSV

கிடார்+வயலின்+புல்லாங்குழல் காம்பினேஷன் அற்புதம்.முடிவில் கொஞ்சும் புல்லாங்குழல் அருமை.

 

படம்:வீர அபிமன்யூ(1965) பாடல்: பார்த்தேன் ரசித்தேன்:கே.வி.மகாதேவன்

இதில் வீணையில் சஹானா ராகத்தில் ரொமாண்டிக் மூட் மீட்டெடுக்கப்பட்டுப் புல்லாங்குழல் நாதம் அதை வாங்கி முடிக்கிறது. புராண கால ரொமன்ஸ் என்பதால் வீணை நாதம் நிறைய வரும்
 
 
 படம்:ஆலயமணி (1962)பாடல்: கல்லெல்லாம் இசை:MSV


 ”உண்டென்று சொல்வது உன் கண்ணல்லவா... இல்லையென்று சொல்வது உன் இடையல்லவா?”


எல்.ஆர்.ஈஸ்வரி  ஹம்மிங் soul stirring.புல்லாங்குழல் எல்.ஆர்.ஈஸ்வரி நாதத்தின் முன் ஒன்றுமில்லாமல் ஆகிறது.இது முடிந்ததும் take offக்கு ரெடியாக நிற்கிறார் TMS.



படம்:அவளுக்கென்று ஓர் மனம் (1971)பாடல்: உன்னிடத்தில் என்னை இசை:MSV
  

பாட்டின் நாயகியின் காதல் உணர்ச்சிகளுக்கு இதமாக வயலினும் நாகஸ்வரமும் (ஷெனாய்?)உருகுகிறது.அட்டகாசம்.

படம்:நந்தா என் நிலா(1977) பாடல்: நந்தா  நீ என் நிலா இசை:வி.தட்சிணாமூர்த்தி 
 
இது காதலன்  காதலாகி கசிந்து உருகி பாடும் பாடல்.வீணையும் வயலினும் புல்லாங்குழலும்  very very romantic mood.

வாழ்வு  முடிவதற்கு முன் இந்தப் பாடலைக் கேட்டே ஆக வேண்டும்.
 
 
படம்:மதன மாளிகை(1976) பாடல்: ஏரியிலே ஒரு இசை:எம்.பி.ஸ்ரீனிவாசன்
  
 அமீர் கல்யாணி ராகம்?

 இதுவும் ஒரு அருமையான ரொமாண்டிக் கானம்.ஆனால் சுசீலாவின் குரலில் வசீகரம்/ரொமான்ஸ் இல்லை.ஜானகி ஹம்மிங் கொடுத்திருந்தால் இன்னும்  ரொமாண்டிக் பீலிங் கொண்டு வந்திருப்பார்.

 

படம்:தூண்டில் மீன்(1977) பாடல்: உன்னோடு என்னென்னவோ இசை:வி.குமார்

இசையில் கொஞ்சம் நவீனம் தெரிகிறது.பாடல் ரொம்ப ஸ்டைலாக ஆரம்பிக்கும். ரொமான்ஸ் கொஞ்சம் கம்மிதான்.

இந்தப் பட டைரக்டர் யார் தெரியுமா? ரா.சங்கரன்.”மெளன ராகம்” படத்தில் ரேவதிக்கு அப்பாவாக வருபவர்.



படம்:எங்கம்மா சபதம் (1973) பாடல்: அன்பு மேகமே இசை:விஜய பாஸ்கர்


விஜய பாஸ்கர்? சம்சாரம் என்பது வீணை( மயங்குகிறாள் ஒரு மாது) பாட்டைக் கம்போஸ் செய்தவர்.

இதுவும் ஒரு அருமையான காதல் இடையிசை.0.12-0.19 வித்தியாசமான எமோஷன்.அதில் 0.12 -0.13யும் அருமை.





படம்:கண்ணன் என் காதலன் (1968)பாடல்: பாடுவோர் பாடினால்இசை:MSV



இதில் பியானோவும் வயலினும் ஒரு romantic chat.அடுத்து 0.15-0.19ல் ட்ரம்ஸ்ஸும் பியானோவும்  romantic chat.



  எம். எஸ். விஸ்வநாதான் சார்..!  0.15-0.19  ட்ரம்ஸ் stunning!



படம்:மீண்ட சொர்க்கம் (1960) பாடல்: கலையே என் வாழ்க்கை இசை:டி.சலபதி ராவ்
 தேவதாஸ் டைப் புலம்பல் காதல் பாடல். இதுவும் சிம்பிள் ஆபோகி ராக ரொமாண்டிக் இண்டர்லூட்.




படம்:திருடாதே(1961)  பாடல்: என்னருகே நீ இருந்தால் இசை:எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

ஒரு ஒற்றை வயலினும் ஒரு புல்லாங்குழலும் அந்தக் காலத்திற்கு ஏற்றார் போல்.அருமை.




படம்:பொண்ணுக்கு தங்க மனசு(1973)  பாடல்: தேன் சிந்துதே வானம் இசை:ஜி.கே.வெங்கடேஷ்

ரொம்ப மென்மையான இசைக்கோர்ப்பு.பின் வரப் போகும் பாடலும் ரொம்ப மென்மை அண்ட் சிம்பிள். ராஜாவின் 0.07-0.08ல் டச் தெரியும்.அடுத்து 0.09-0.17க்குள்  விணையில் பலவித  நாதம் .   


விரைவில் “இளையராஜா King of Romantic Interludes"

ஒரு சாம்பிள்  stunning romantic interlude






Monday, October 11, 2010

குறும்பட விமர்சனம்/நாளைய இயக்குனர்/ (10-10-10)

இந்த வாரம் ஆரம்பிக்கும் போதே  நடுவர்கள்,  எடுக்கும் குறும்படங்களில்“out of box thinking" "lateral thinking, இருக்கனும் என்று ஆரம்பித்தார்கள். ஆனால் படங்கள் படு சொதப்பல். ஒன்றைத் தவிர மீதி குறும்படங்கள் ”வெத்து” படங்கள் ஆகிவிட்டது.
 


போன வாரம் 3-10-10

படம்: “காதல் கடிதம்” இயக்குனர்:சரத் ஜோதி

அருணுக்கு மது மேல் காதல். காதலைச் சொல்ல குறுஞ்செய்தி/இமெயில்/ பேஸ் புக் போன்றவைகளை பயன்படுத்தாமல் தாளில் தன் கைப்பட கடிதம் எழுதி காதலை தெரிவுபடுத்துவதுதான் காதலின் மதிப்பு என்று நினைத்து எழுதுகிறான்.

எழுதிமுடித்தவுடன் கடிதம் ஜன்னல் வழியாக பறந்துபோய்விடுகிறது. மிகுந்த வருத்தமடைகிறான். அப்படியே பறந்து  ஒரு சிறுவன்/சிறுமி/கோணி விற்பவன்/பூக்காரி/ மதுவின் அம்மா   மூலமாக மதுவின் பெட்ரூம் டேபிளுக்கு வருகிற்து.( பூ வாங்க வரும்  மதுவின் அம்மாவிற்கு பூக்காரி அதில் பூவை வைத்து கொடுப்பதால்).அப்போது அவளும் தன் காதலைச் சொல்ல ஒரு கடிதம் தன் கைப்பட எழுதிக்கொண்டிருக்கிறாள்.

இடையில் அதைப் பார்த்துவிட்டு இன்ப அதிர்ச்சியாகி தன் கடிதத்தை கசக்கி விடுகிறாள். நேரில் பார்த்து தகவலைச் சொல்கிறாள்.தன் காதலையும் சொல்கிறாள். அவனும் இன்ப அதிர்ச்சி. காதல்தான் கைக்கூடி விட்டதே என்று கடிதத்தை “பொக்கிஷமாக” பாதுகாக்காமல்  ரோடில் குப்பையாக போட்டுவிட்டு கைக்கோத்து நடக்கிறார்கள்.

காதல் கடிதம் சாதல் கடிதம் ஆகிவிடுகிறது.

குறுஞ் செய்தி காலத்தில் காதல், கடிதத்தில் சொல்லப்படுவது புதுமை. ஒரு ஐடியல் அல்லது பெண்டசி சம்பவத்தைச் சொன்ன விதம் நன்றாக இருந்தது.
இசையும் அருமை.

கிராபிக்ஸ்ஸில் கடிதம் பறப்பது செயற்கையாக இருந்தது.கிராபிக்ஸ்ஸால் யதார்த்தம் நீர்க்கிறது.படிக்கும் போது  கடிதத்தில் முகம் தெரிவது எல்லாம் 1965ல் வந்துவிட்டது.

 பிடித்திருந்தது.

இதுதான் இந்த வார சிறப்புப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

 படம்: “யமுனா” இயக்குனர்:அருண்வரதன்

ஒரு பாலியல் தொழிலாளியின் காதல். கதை புரியவில்லை.சொதப்பல் இயக்கம்.மட்டமான திரைக் கதை.மலையாள இயக்குனர். கேரக்டர்கள் மலையாளத்தில் முணகுகிறார்கள்.செட்டிங்ஸ் நன்று.

பாலியல் தொழிலாளி என்றாலே வாயில் வெத்தலபாக்கு குதப்பனமா?

படம்: “பூஜ்யம் ஒன்று” இயக்குனர்:எம்.எஸ்.ஸ்ரீகாந்த்

இது எந்திரன் காதல்? ஹரிஷ் பிரியாவைக் காதலிக்க ஆனால் அவள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.தான் உருவாக்கிய “ஹல்” என்ற பெயருடைய பேசும் கம்புயூட்டரை  ப்ரியாவை எப்படி கவருவது என்று கேட்கிறான். அவளுக்கு காதல் கவிதைகள் பிடிக்கும் எழுதிக் கொடு என்கிறது.

ஆனால் இவனுக்கும் கவிதைக்கும் 1000 மைல் இடைவெளி.அதனால் அதுவே எழுதிக் கொடுக்கிறது.தான் எழுதிய கவிதையாக கொடுக்கிறான். படித்துவிட்டு  காதலாகிறாள் ஹரிஷ் மீது.

தினமும் கவிதை எழுதிக்கொடுத்து ஒரு கட்டத்தில்  இதுவும் ப்ரியா மேல் காதல் கொள்கிறது.அவன் திருமணம் செய்துக்கொள்ள உத்தேசித்தவுடன் இது தன்னை ஷார்ட் சர்க்கீயூட் செய்து விட்டு காதல் தோல்வியில் இறந்து
விடுகிறது ஹல்.எந்திரன் மனிதனை திருமணம் செய்ய முடியாது என்பதால்.

இறப்பதற்கு முன்  500 கவிதைகள் எழுதிக்கொடுத்துச் சாகிறது.ஹரிஷ் சொச்ச நாளை ஓட்டுவதற்கு?அவளுக்கு பொய் சொன்னால் பிடிக்காதாம்?தெரிந்தால் ஹரீஷ்   ஆல்சோ ஷார்ட் சர்க்கீயூட்?

ஓகே ரகம்.  சுட்டுவிட்டதாக நடுவர் பிரதாப் சொன்னார்

ஹரிஷ் காதல் முயற்சி செய்யும்  கட்டத்தில் “வர வர உன் மேல கோபம் கூட வர மாட்டேங்குது” என்று ப்ரியா சொல்வது யதார்த்தமான நகைச்சுவை.

 படம்: “மன்னிப்பாயா” இயக்குனர்:பாலா

சர்ச்சில்தான் காதல் ஆரம்பிக்கிறது.நாயகன்  கரோலின் (?) என்ற பெண்ணைக் காதலிக்கிறான்.அவளும் ஓகே.  (இருவரும் கிறிஸ்துவர்கள்). ஆனால் அவள் வீட்டில் நாட் ஓகே.அதனால் அவளுக்கு வேறு இடத்தில் திருமணம்.

இரண்டு வருடம்  கழித்து  அதே சர்ச்சில் சந்திக்கிறார்கள்.மறுபடியும் ஐ லவ் யூ என்கிறான். ஏன் என்றால் அவன்  “மனதில் பட்டதைச் சொல்பவனாம்”.
இன்னும் அவளை காதலிக்கிறானாம். Do you want chicklets? என்கிறாள். படம் முடிகிறது.

கோயில் பிரகாரத்தில்  நிறைய காதல் பார்த்தாயிற்று.இதில் சர்ச் பிரகாரம்.அருமை அண்ட் வித்தியாசம்.படபிடிப்பு நன்றாக இருந்தது.இசை நன்று.

மனதில் படம் ஒட்டவில்லை.படத்தில் சுத்தமாக ஆழம் இல்லை.எமோஷன்ஸ் இல்லை.நாயகி வசனத்தை ஓப்பிக்கிறார்.கதாநாயகன் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார்.ஆனால் சிகரெட் பழக்கம் உண்டாம். காதலிக்கு சிகரெட் பிடிக்காது ஆனால் அவள் சூயிங்கம் மெல்லுகிறாள்.

கதாநாயகன் ரொமப spontaneousஆம். அதைச் சுற்றி கதை? பரம மண்டலத்தில் இருக்கும் பரம பிதாவே இவர்களை மன்னியுங்கள்!

படம் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டது.

Monday, October 4, 2010

குறும்படம்/நாளைய இயக்குனர்/ (3-10-10)

இந்த வாரத்திலிருந்து போட்டி ரவுண்ட்  ஆரம்பிக்கிறது.

இந்த வாரத் தலைப்பு ”காதல்”.  இயக்குனர்கள் எல்லோருக்கும் பிடித்த Genre. காரணம் எல்லோரும் இளைஞர்கள்.இப்படி இளைஞர்களாக இருப்பதால் “மேன்சன்/பிகரு/தண்ணீ/சிகரெட்/லூசுத்தனமான  விடலைக் காமெடி” என்று கதைகள் சுற்றி வருவதும் அடிக்கடி நடக்கிறது.

சில விஷயங்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.


 போன வாரம்-1
 போன வாரம்:-2



இந்த வார ஆரம்பப்  படமே அசத்தல்.

படம்: கல்லறை இயக்குனர்: தமிழ் சீனு

காதலில் தகவல் இடைவெளி (communication gap) வந்து ஒரு காதலையும் ஒரு நணபனையும் இழக்கிறான் ஒரு இளைஞன்.இதுதான் கதை.

விஜய்க்கு தன் ஆபிசில் வேலைப் பார்க்கும் சுஜியின் மேல் காதல். அவள் பிறந்த நாள் அன்று ஒரு பூச்செண்டுடன் அதை அவளிடம்  சொல்ல அவள் வரும் வழியில் நிற்கிறான். ஆனால்  அதற்கு முன் அவன் நெருங்கிய நண்பன் மது அதே வழியில் மோட்டர் சைக்கிளில் வந்து  அவளுக்கு பூச்செண்டு கொடுத்து பில்லியனின் ஏற்றிக்கொள்கிறான்.

சுஜி சிரித்தபடி ஏறிக்கொள்கிறாள்.பார்த்துவிட்டு விஜய்  ”முடிஞ்சது” என்று நொந்து போகிறான்.காதல் தோல்வி.

ஆனால் கதை வேறு.மது ஒரு பிரெண்டாகத்தான் பூச்செண்டைக் கொடுக்கிறான். சுஜிக்கும் விஜய் மேல் காதல்.இரண்டு நாள் கழித்து சுஜி இதை விஜய்யிடம் தெரிவிக்குமாறு மதுவிடம் சொல்கிறான். மது ரொம்ப ஆசையாக ரயில்வே டிராக் அருகே  விஜய்யைப் பார்த்து “ டேய்... ஒரு முக்கியமான விஷயம். மது..” என்று ஆரம்பித்து முடிக்காமல்  ஒரு ரயில் மோதி மது சாகிறான்.

அவன் காதலைத்தான் ஆசையுடன் சொல்ல வந்து செத்ததாக நம்புகிறான் விஜய்.மதுவின் கல்லறையில் பூச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்திஒரு வசனம் (எனக்கு மறந்தவிட்டது) பேசுகிறான். நண்பன் மது ஆசைப்பட்டு
விட்டதால் சுஜி மேல் காதல் இல்லை என்பது மாதிரி வசனம்.அதே சமயத்தில் பூச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்த வரும் சுஜியின் காதில் இது மட்டும் விழுகிறது. அவளும் தன் காதல் தோல்வி என்று எண்ணுகிறாள்.

காதலும் கல்லறைக்குப் போகிறது தகவல் இடைவெளியால்.

கேமராவில் சொல்லப்பட்ட ஒரு காதல் கவிதை கல்லறை. ஓபனிங் ஷாட்டே அருமை.லோகேஷனே கதையில் ஒன்ற வைக்கிறது.அபூர்வமாக ஆபிஸ் காதல் கதை.குழப்பமில்லாமல் தெளிவான கதைச் சொல்லல்.இசையும் அருமை.நடித்தவர்களும் அருமை.

காதல் வெற்றியை விட காதல் தோல்விதான் சுவராசியமோ?

ரயில் விபத்துதான் சற்று செயற்கையாக இருந்தது போல ஒரு நெருடல்.வேறு விபத்து வைத்திருக்கலாம். முடிந்தவுடன் டைட்டில் கார்டில் ஓடும் இயக்குனரின் பாரதிராஜா டைப் வரிகள் எதற்கு? 

இந்தப் படம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

படம்: என் அப்பாவின் காதல் இயக்குனர்:மகேஷ் பெரியசாமி

ஒரு காதலி,  முன்னாள் விளையாட்டுக் காதலை, இன்னாள் காதலினிடம் சொல்ல இன்னாள் 'get lost" இனிமே என் கண்ணில் முழிக்காதே என்று காதலை கட் செய்துவிடுகிறான்.

தன் அப்பாவிடமும் சொல்கிறான்.

தன் அம்மாவும் முன்னாள் காதல் ஒன்று இருந்து அது சந்தர்ப்பவசத்தால் தோல்வியாகி அப்பாவை கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலை என்று  தன் அப்பாவின் மூலம் தெரியவருகிறது. அதிர்கிறான்.எப்படி பொறுத்துக்
கொண்டீர்கள் என்கிறான்?

தான் இன்னும் அவளைக் காதலித்துக்கொண்டிருப்பதால் என்கிறார் அப்பா.

தன் தவறை உணர்ந்து காதலிக்கு போன் செய்து மீண்டும் காதல் தொடரும் என்கிறான்.

இதுவும் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது.(அம்மா போன் பேசும்போது கதவை மூடும் இடம்) சில நடிகர்கள் சின்னத் திரையில் பார்த்தவர்கள்.அப்பாவாக நடித்தவர் அருமை.

எனக்குப் பிடித்திருந்தது.அம்மாவின் காதல் என்று இல்லாமல் அப்பாவின் காதல் டைட்டில் அருமை.

குறும்படத்திற்கு எதற்கு professional நடிகர்கள்?

படம்:காதலுக்குப் பொய அழகு இயக்குனர்:பிரின்ஸ்

உண்மைச் சொன்னால் காதலிக்க முடியாது என்று,காதலுக்குப் பொய அழகு” என்று பொய் சொல்லி இளைஞன் நிறைய பெண்களை காதலிக்கிறான்.அவன் சொல்லும் பொய்கள் “தண்ணீ அடிக்க மாட்டேன்” “ சிகரெட் குடிக்க மாட்டேன்”என்பன.

இதையேதான்(????) எல்லாம் பெண்களும் கேட்டுக் காதலிக்கிறார்கள்.சாயம் வெளுத்தவுடன் அறைகிறார்கள்.

“காசு நாந்தான் கொடுக்கனமோ?” என்ற இடமும் அடுத்து அவன் நண்பன் மேல் அறை விழுவதும் ரசிக்க வைக்கும் நகைச்சுவை.லூசுத்தனமான நகைச்சுவையை விட்டு கொஞ்சம் புத்திசாலித்தனமான நகைச்சுவை யோசிக்கலாம்.

ஓகே ரகம்.நடுவர்களால் கடுமையாக ஒதுக்கப்பட்டப் படம்.

படம்:சார்... கதை கிடச்சாச்சு இயக்குனர்:மணிவண்ணன்

பட சான்சுக்குகாக ஒரு துணை இயக்குனர் பல காதல் கதைகள் சொல்லி எல்லாம் ரிஜெக்ட் ஆகி கடைசியில் தன் சொந்தக் கதையை சொல்கிறான் ஒரு தயாரிப்பாளரிடம்.தன்னை யாராவது காதலிக்க வேண்டும் என்று பின்நவினத்துவமாக “ பார்க்கில் அழுதபடி” இருக்க ஒரு பெண் பரிதாபம் கொண்டு விவரம் கேட்கிறாள்.அவனுக்கு கவுன்சிலிங் பண்ணி முடித்தவுடன் ஐ லவ் யூ என்கிறான். சொன்னவுடன் அவள் “Chase your dreams not girls" என்று கிளம்பியவுடன்  இவனுக்கு love at first speechஆகி விடுகிறது.

 தயாரிப்பாளருக்குப் பிடித்துப் போய் ஓகே என்கிறார். ஆனால் கதை பாசீட்டீவ் ஆக முடிக்க வேண்டும் என்கிறார்.எப்படி முடிப்பது என்று யோசிக்கையில் “முடிக்கலாம்” என்று வெளியே வருகிறாள். அவள் இந்த தயாரிப்பாளர் மகள்.

”சார்... கதை கிடச்சாச்சு” என்கிறான்.ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.

எனக்குப்பிடித்தது. முடிவை சுலபமாக யூகிக்கலாம். பழைய குமுதம் கதை.

பின்னணியில்  இவர் குரலில் கதை சொல்ல இப்படத்தின் விஷுவலாக ஓடுகிறது. பெரிய கொடுமை ஆடியோ சரியாகவே இல்லை.இயக்குனரே ஹீரோவாக நடிக்கிறார்.

விஷுவலாக படத்தைச் சொல்லத் தெரியாதவர்கள்தான் பின்னணியில்   கதை சொல்லுவார்கள் என்று நடுவர் பிரதாப் போத்தன் ஒரு அடி அடித்தார்.

Friday, October 1, 2010

அவன்,அவர்கள், அது....குறும்படம்-26-09-10

போன வார (26-09-10)  குறும்பட விமர்சனத்தில்  திடீர் பவர்கட்டினால் ஒரு படம் பார்க்காமல் போய்விட்டது. அது இப்போது யூ டூப்பில் ஏற்றப்பட்டு விட்டதால் அதைப் பார்த்து எழுதும்படி இயக்குனர் ஆர்.ரவிக்குமாரின் நண்பர் எனக்கு பின்னூட்டம்  அந்த விமர்சனப் பதிவில் இட்டிருந்தார்.

 அந்த பின்னூட்டம்:

 ARK.SARAVAN said...(1-10-10)11.53 a.m.
 Nenga miss panuna Helmet Padam youtubela  
vanthuruku pathutu vimarsanam podunga.  
athu en nanbarina padam than nanri..

இனி விமர்சனம்:

படம்: அவன்,அவர்கள், அது இயக்குனர்: ஆர்.ரவிக்குமார்

(இது ஒரு பிரபல (கே.ஹெச்.கே.கோரி) எழுத்தாளரின் கதை.அவர் அனுமதியுடன் சுருக்கப்பட்டு எடுக்கப்பட்டதாக தகவல்)
 
வீடியோ இணைத்திருப்பதால்  வழக்கம் போல  விலாவாரியாக கதைச் சுருக்கத்தைத் தரவில்லை.
 
ஹரி என்ற இளைஞனுக்கு “ஆவி மற்றும் ஆவியுடன் பேசுதல்” போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகம். அவன் தன் நணபர்களை அவர்கள் ரூமில் சந்தித்து ஆவியுடன் எப்படி பேசுவது என்று ஒரு ஷீட்டை வைத்து முக்கால் வாசி விளக்கும் போது நிறுத்தி,சினிமா டிக்கெட்டை (அன்றைய ஈவினிங் ஷோ) மறந்து விட்டது ஞாபம வந்து, எடுத்துவர கிளம்புகிறான்.

அவன் வரும் வரைக்கும்  இதை எதுவும் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

ஆனால் நண்பர்கள் ஆர்வத்தில் அதை தொடருகிறார்கள். பயம் கலந்த ஆர்வத்துடன் அதே ரூமில் இருக்கும் ஆவியுடன், செத்த நேரம்,எப்படி செத்தது,ஏன் செத்தது என்று வருகையில் கடைசியில் ஆவியின் பெயர் கேட்க “ H..A..R..I" என்ற எழுத்துகளில் நகர்ந்து நின்றதும் அதிர்கிறார்கள்.

ஆமாம் ஹரிதான். டிக்கெட் எடுக்கப் போன ஹரி  மோட்டர் சைக்கிள் விபத்தில் இறந்துவிடுகிறான்.

இனி என் விமர்சனம்:

ஆரம்பிக்கும் முன் தொகுப்பாளினி கீர்த்தி முந்திரிக்கொட்டையாக படத்தின் டைட்டில் பற்றி இயக்குனரிடம் கேட்டதை விட வேண்டும்.  ஏன்? பார்ப்பவர்களை influence செய்யும்.சுவராசியம் போய்விடும்.

ஒரு குறும்படத்திற்கென்றே அற்புதமான வித்தியாசமான கதை.திகில்,ச்ஸ்பென்ஸ்.திருப்பம் நிறைந்த கதை.கச்சிதமாக சுருக்கப்பட்டுள்ளது.

டைட்டிலே வித்தியாசமாகக் காட்டப்படுகிறது. ரூமில் தொங்கும் காற்றில் கிணுகிணுக்கும் மணியும் ஒரு பாத்திரமாக வருவது அருமை. சொல்லப்படும் (narration)விதமும் நன்றாக இருந்தது.இசையும் நன்று.

ஷேவ் செய்துக்கொண்டே கேட்கும் நணபன் வெட்டுப்படுவது,ஹரி கிணுகிணு மணியைத் தட்டிக்கொண்டே உள்ளே வருவது, முதலில் மோட்டர் சைக்கிள் பொம்மையைக் காட்டுவது......நன்று.

குறைகள்:

நண்பர்கள் பேசும் வசனங்களில் உயிரோட்டமே இல்லை.ஒப்பிக்கிறார்கள்.ஸ்கூல் டிராமா முக பாவங்கள்.ஓட்டதில் உயிர் குறைகிறது.ஒலிப்பதிவு இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமோ?சில வசனங்கள் புரியவில்லை. யூ டூப் காரணம்?

இதில் ஹெல்மெட்  திருப்பம் கம் சஸ்பென்ஸ்.இங்கு நிறைய ஹோம் வொர்க் தேவை.

அதை கடைசியில் காட்டி இருக்கலாம்.யூகிக்க விடாமல் கடைசி வரை  பார்ப்பவர்களை tender hookல் வைத்திருக்கலாம்.ரூமை விட்டுப் போகும் ஹரி  திருமப வந்து நண்பர்களை ரொம்ப பலமாக (”டேய் ரூமில் ஆவி இருக்கு... பாத்து”) எச்சரிப்பதாக டயலாக வைத்திருக்கலாம். இதுவும் “ரூமில்தான் ஏதோ நடக்கப்போகிறது” ”இவர்கள் ஏடா கூடாமாக மாட்டப்போகிறார்கள்” என்று திசைத் திருப்ப உதவும்.

ஹரிக்கு போன் செய்யும் போது ”நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர்  தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்”.இதுதான்  புத்திசாலித்தனமான  கடைசி ஷாட். ஆனால் இதன் ஆடியோ  பளிச்சென்று இல்லை.பெரிய குறை.

படத்தின் லிங்க்:

அவன்,அவர்கள், அது....குறும்படம்-26-09-10