Wednesday, April 6, 2011

பிண்டம் - திக் திக் திகில் கதை


”ஒருவா காப்பி சாப்பாடறேளா மாமா”? கஸ்தூரி மன்னி கேட்டாள்.

”வேண்டாம்மா.காத்தல ஒரு தடவதான்”முத்துசாமி சாஸ்திரிகள் கிளம்ப ஆயுத்தமானார்.

“இன்னிக்கு கொஞ்சம் மின்னலாயே வந்துட்டேள் போலருக்கு” கணபதியும் எழுந்தார்.

”வாஸ்துவம்.பனங்கா ஏரி ரூட்ட அடைச்சுட்டா இன்னிக்கு.நாளைக்குத்தான் தொறப்பா.இருக்கறது ஈஸ்வரி நகர் பாழ் கெணறுதான்.ஜலம் நிறைய இருக்கும்.அது அறுபது அடி ஆழம்.அதுவும் ஒரு மணிக்குள்ள பிண்ட சாதத்த கெணத்துல தூக்கிப் போட்டுன்னம்”

“ ராகுகாலமா?”

“சொல்றேன்.பயப்படமாட்டேள்ளயா?”

“சொல்லுங்கோ”

”மத்தியானம் ஒரு மணிலேந்து அங்க ஈ காக்கா நடமாட்டம் இருக்காது.வெறிச்சோடிப் போயிடும்.பிரேத ரூபத்துல மரிச்சவாள்ளாம் ஜலத்துல இருக்களாம்.போடற பிண்ட சாதத்துக்கு அலையறாளாம்.அங்க யாருமே போறதில்ல”

“மனுஷாளுக்கு வேற வேல இல்ல.எதையாவது கெளப்பிவுடுவா.வேணும்னா எக்ஸ்ட்ரா பிண்டம் எடுத்துண்டுப் போறேன்” கணபதி.

அப்பாவிற்குண்டான பிண்ட சாதம் ரெடியாக இருந்தது.பெரிய வெள்ளை வேஷ்டியில் மூட்டையாக முடிந்து வைக்கப்பட்டிருந்தது.பார்த்தவுடன் மனது கலங்கிப்போனது. முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

”அங்க போயிட்டு கிணத்துக்கு முதுக காட்னாப்பில நின்னுண்டு அப்படியே அலக்க தூக்கிப் போடுங்கோ.சைட்ல விழாம பாத்துக்குங்கோ.நட்ட நடுல பொத்துனு தண்ணீல விழறா மாதிரி.விழுந்த நமக்கும் திருப்தி.உங்கப்பாவுக்கும் திருப்தி.போட்டப்பறம்  பின்னால திரும்பிப் பார்க்காதேங்கோ”

கணபதி சைக்கிளில் கிளம்பினார்.வெயில் கொளுத்தி எடுத்தது.ஒரு மணிக்குள் போக வேண்டும். ”படக்... படக்...” செயின் சத்தமிட  அழுத்தமாக மிதித்தார்.

ஈஸ்வரி நகரில் அந்தப் பாழும் கிணறை நெருங்க நெருங்க ஊர்
ஆரவாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அமுங்க ஆரம்பித்தது.முடிவில் காற்றின் ஓசைதான் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.

எட்டத்தில் நின்று அந்தப் பெரிய வட்டமான பாழும் கிணற்றைப் பார்த்தார்.”வா..வா சீக்கிரம் பிண்டத்தப்போடு...” வாயைத் பொளந்து கேட்பது மாதிரி தோற்றம். லேசான பயம் உடம்பில் ஊர ஆரம்பித்தது.

”ஈஸ்வரா” முணகியபடி கிணற்றருகில் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார்.ஏதோ பிரார்த்தனை செய்தார்.கிணற்றை நெருங்கினார்.

கிணற்றைச்சுற்றி மரங்கள் சற்றுத் தலைத் தொங்கி
கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது.உச்சிக் கிளைஇலைகள் இரண்டு மூன்று அசைந்துக்கொண்டிருந்தது.நெருக்கத்தில் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. தட்டாம் பூச்சிகள் விர்விர்ரென்று அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தது.கருங்கல் கிராமத்து சாமிகள் இரண்டு மூன்று கிணற்றை ஒட்டி இருந்தது.வலது பக்க சுவரில் நிறைய புல் பூண்டுகள் முளைத்து விளிம்பு வரை வளர்ந்திருந்தது.

அருகே இருந்த ஒரு காட்டுச்செடியில் மஞ்சள் நிறப் பூவைக் கிள்ளி முகர்கையில் யாரோ நடந்து வருவது மாதிரி ஆள் அரவம் கேட்டது.

“யாரு?”உரத்தக் குரலில் கேட்டார். சைக்கிள் அருகே சென்று மணியை அடித்தார். ”யாராவது இருக்கேளா”மீண்டும் மணியை
அடித்தார்.பதிலில்லை.யாரோ பார்த்துவிட்டு ஓடி ஓடி ஒளிவது மாதிரி மனதில் பட்டுக்கொண்டே இருந்தது.

பத்து நிமிடத்திற்குப் பிறகு ஒன்றும் கேட்கவில்லை.பிரமை என்று விட்டுவிட்டு மீண்டும் கிணற்றை நெருங்கிப் பார்த்தார்.தண்ணீர் கிட்டதட்ட பத்து அடிக்குக் கிழ் இருந்தது.ஆழம் அறுபது அடியா?முகத்தருகில் கைகளைக் குவித்து கிணற்றை உற்றுப் பார்த்தார்.பிராணனை விட்ட பிரேத  ரூப ஜீவன்கள் பிண்டத்திற்காக பாதாள லோகத்தில் பாம்பு மாதிரி ஊர்ந்துக்கொண்டிருக்கிறதோ?

கைகளை எடுத்துவிட்டு சுற்றி ஒரு பார்வைப் பார்த்தார்.ஆள் நடமாட்டமே இல்லை.

பெரிய கிணறுதான்.உட் சுற்று செங்கற்கள் பாசிப் படிந்து பச்சைப்பூத்திருந்தது.எல்லா இடங்களிலும் செடிகளும் கொடிகளும் அங்கங்கு  படர்ந்து முனைகள் சூரியனை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தன.ஏதோ ஒரு தண்டு தடித்த மரம் வேறு கிளைவிட்டுத் துருத்திக்கொண்டிருந்தது.சிமெண்டுப் படிகள்  எல்லாம் தூர்ந்துபோய் உடைந்திருந்தது.

ஒரு படியின் அருகே இரண்டு ஓணான்கள் தலைத் தூக்கி இடுக்கு வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தது.தவளைகள் பாசியோடு பாசியாய் சுவற்றில் அப்பிக்கொண்டிருந்தன.

இறங்கி உள்ளேப் போக வாகாகவே இல்லை.பல வருடங்களுக்கு இதை பயன்படுத்திய அரவமே இல்லை.எங்காவது ஒற்றையடிப் பாதை தெரிகிறதா என்று பார்த்தார் கிணற்றைச் சுற்றி வரும் போது மீண்டும் யாரோ நடக்கும் அரவம் கேட்டது.

முழுவதும் சுற்றி வந்து  ஒரு பார்வைப் பார்த்தார்.சிறு கற்களை எடுத்து பம்ப் செட் தோற்றத்தில் இருந்த குட்டிச்சுவர் பக்கம் எறிந்தார்.அங்கு போவதற்கு சற்று பயமாக இருந்தது.

பச்...வந்த வேலையை விட்டுவிட்டு என்ன இது .....அவசரமாக சைக்கிளை நெருங்கினார்.

பிண்ட மூட்டையை எடுத்தார். குத்துமதிப்பாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். முதுகைக்காட்டியவாறு நின்று, அப்பாவை நினைத்து பிரார்த்தித்து பின் பக்கமாக இருகைகளிலும் ஏந்தித் தூக்கிப்போட்டார்.

தண்ணீரை மோதி ”பொச்சு” என்று சத்தம் வரவேண்டுமே.வேறு
சத்தம் வந்ததே?பார்க்கலாமா? திரும்பிப் பார்க்காமல் நடக்க வேண்டுமே?

கிணறை எட்டிப்பார்த்தார்.பிண்ட மூட்டை ஒரு அடர் காட்டுக்கொடியில் ஏடாகூடாமாக மாட்டிக்கொண்டு ஒரு மாதிரி பொத்தென்று உட்கார்ந்திருந்தது.அடர் பச்சையின் நடுவே பிண்ட மூட்டை வெள்ளை வெளீர் என்று காட்டியது.

கைக்கெட்டாத மூட்டையைக் கொலைப் பசியுடன் வெறித்துக்கொண்டு  அப்பாவின் பிரேதம்.தலையை உலுக்கிக்கொண்டு கண்ணை விழித்துப் பார்த்தார்.கிணறு  எந்த சலனமில்லாமல் இருந்தது.காய்ந்த இலைகள் மிதந்துக்கொண்டிருந்தன.பிரமை?

சே ..நேராகாவே பார்த்துப் போட்டிருக்கலாம்.அப்படியே அதை விட்டுவர மனசு கேட்கவில்லை.

கொடியை பலமாக அசைத்து உலுக்கினால் தொப்பென்று விழுந்துவிடும்.நீள கயிறு இருந்தால் ஏதாவது செய்யலாம்.ஆனால் கயிறு? அவருக்கு  நீச்சல் தெரியும். ஆனால் ஏறி வருவதற்கு தோதாக எதுவும் இல்லை.

பக்கத்தில் கிடந்த புள்ளையார் எறும்பு மண் கட்டிகளை எடுத்து கொடியின் மேல் விட்டெறிந்தார். கொடியில் மோதி உதிர்ந்து மண்ணாகி ஒரு அசைவும் ஏற்படுத்தவில்லை.

இந்த களேபரத்தில் ஆள் அரவ பயம் கொஞ்சம் மறைந்துப்போய் இருந்தது.

தேடிப்பிடித்து நீள வலுவானக் குச்சிகள் மூன்றை எடுத்து
சேர்த்துக்கட்டி நீளமாக்கினார்.துருப்பிடித்தக் கம்பி சிலவற்றைத் தேடி  ஒன்றாக முறுக்கி குச்சியில் பிணைத்து   முனையில் கொக்கி மாதிரி செய்தார்.

 இதைச் செய்யும் போதெல்லாம் ஏதோ அரவம் கேட்டுக்கொண்டே இருந்தது.

கைப்பிடிச்சுவரில் குனிந்து  குச்சியைத் தாழ்த்தி  மூட்டையின் முடிச்சருகே தொங்கவைக்கும்போது காலருகே மண்ணை உருவுவது மாதிரி...

உடம்பு வியர்க்க கால்களை பலமாக ஊன்றி  சுற்றி முற்றிப் பார்த்தார்.எதுவும் இல்லை.

முடிச்சருகே கொக்கியைத் தாழ்த்தி பிண்ட முட்டையை தூக்கும்போது இரண்டு மூன்று நீள  பாம்புகள் நெளிந்துத் தண்ணீருக்குள் நழுவியது.கை நடுங்கியவாறு மெதுவாக தூக்க பிண்ட மூட்டை கிணறின் உள்சுவரை உரசியவாறு மேலே  இன்ச் பை இன்சாக  எழும்பி வர அடியிலிருந்து இலைகளும் தழைகளும் உதிர்ந்தன.

கைப்பிடிச் சுவர் அருகில் வந்ததும் குனிந்து அப்படியே லாவகமாகப் பிடித்து இடது கையில் வாங்கிக்கொண்டார்.முகத்தில் சந்தோஷமும்  உடம்புபூராக வியர்வையும் நடுக்கமும் பரவ  சைக்கிள் அருகே வந்தார்.

இரண்டு நிமிடம் ஆசுவாசுப்படுத்திக்கொண்டார். அருகேயே முதுகைக்காட்டியவாறு நின்று மூட்டையை கிணற்றுக்குள் போட்டார்.விழுந்த கணத்தில் தண்ணீரை மோதி ”பொச்சக்” என்ற சத்தம் வரக் காணோமே.சரியாகத்தானே போட்டோம்.

இதயம் படபடக்க மெதுவாக திரும்பி கிணற்றை எட்டிப்பார்த்தார்.

                                     முற்றும்


4 comments:

  1. full form la இருக்கீங்க... கதை நல்லா இருக்கு சார்...பிடிச்சிருந்தது.
    பகல்வேளையின் அரவமற்ற சூழல்கூட வித்தியாசமான திகில்தான்...

    ReplyDelete
  2. நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!