Wednesday, August 11, 2010

சில யதார்த்தங்களும் ஏர்டெல் சிங்கர்களும்

ஒளி வட்டம் மேல் விழ, கைத்தட்டல் விண்ணைப் பிளக்க, உள்ளங்கையில் மெடல்களை இருக்கிப்பிடித்தபடி இரு கைகளையும்  மேல் தூக்கி ”எல்லா புகழும் இறைவனுக்கே”  என்று  ஒரு நாள்  சொல்ல வேண்டும்  என்ற Inception கனவுடன் யுவதிகள்/யுவன்கள்  சூப்பர் சிங்கர் போட்டிகளில  அடைஅடையாக தேனீக்கள் போல் கலந்துக் கொள்(ல்)கிறார்கள்.

ஆனால் முக்கால்வாசி பேர் “கிர்ர்ர்ர்ர்ர்ர்”  ரெட் லைட் அடித்து “rejected".சில பேர் பாடுவதைக் கேட்கும்போது “போட்டுதள்ளுed" என்று நான்காவது ஆப்ஷன் வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

பாடுவது என்பது ஒரு நாள் கூத்திற்கு மீசை வைக்கும் வேலை இல்லை.பாடு பட வேண்டும்.பாடுவதற்கு முன் பாட்டைஆறு மாதம் ஆழ்ந்துக்கேட்க வேண்டும்.புதுசு/பழசு எல்லா பாடல்களயும் கேட்க வேண்டும்.முக்கியமாக பழைய பாடல்களைக் கேட்க வேண்டும்.

கேட்டால் மட்டும் போதுமா?

உள் வாங்க வேண்டும்.பிறகு பாட ஆரம்பிக்க வேண்டும். நிறைய பயிற்சி செய்ய வேண்டும்.முக்கியமாக தன்னுடைய குரலின் வகையை தெரிந்துக்கொள்ள வேண்டும்.மிகமுக்கியமாக தாளம் என்ற ஒன்று இருப்பதை கண்டுகொள்ள வேண்டும்.

மிகமிகமிக முக்கியமாக மேடை பயத்தை விட வேண்டும்.

இதையெல்லாம்  சிங்கர்கள் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை.

பெண்கள் எல்லோரும் “ வான்மேகம்” அல்லது “என் மேல் விழுந்த மழை” அல்லது “குழலூதும் கண்ணனுக்கு” அல்லது “வசீகரா” அல்லது “ஜீலை வந்தால்” போன்ற ஸ்டைல் பாடல்களையே பயிற்சி செய்து  பாட  விரும்புவதாக டிவி நண்பர் ஒருவர்  சொன்னார்.
  
நடுவர்கள்  இதை அனுமதிப்பதில்லை.வேறு பாடல்களைப் பாட சொல்லி டெஸ்ட் செய்கிறார்கள்.பாடும் போது சில அடிப்படைகளை கூர்ந்து கவனித்து தேர்வு செய்கிறார்கள.

சரி.. யதார்த்தத்திற்கு வருவோம்.

தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஆனவர் சினிமாவில் நம்பர் ஒன்  ஆக முடியுமா?ஆகவில்லை.

அதே டிவியில் மைக்கை வைத்துக்கொண்டு சீசன் -2/3/4 போட்டியாளர்களை பேட்டி எடுக்கிறார்கள் அல்லது அடிக்கடி(அதே டிவியில்) இசை நிகழ்ச்சிகளில்  தோன்றுகிறார்கள்.வேறு டிவிக்கு ஒப்பந்தம் முடிந்தவுடன்தான் போகலாம்.


ஏ.ஆர்.ரஹமான் இசையில் பாடும் கனவு நிறைவேறாமல் போகிறது.சரி..அவரின் பாடலை மெல்லிசை நிகழ்ச்சியிலும் பாட முடிகிறதா? பாடிய பிரபலங்களே மெல்லிசையிலும் பாடுகிறார்கள்.இவர்களுக்கு வாய்ப்பு அம்பேல்.
 
முன்னால்”சூப்பர் சிங்கர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள்?எவ்வளவு பாட்டு பாடி இருக்கிறார்கள்?

ஆனால் உடை ஹேர்  ஸ்டைல் எல்லாம் மாறி அழகாகிவிடுகிறார்கள்.
 

திரைப்படங்கள் மாறிவிட்டதால் திரைப்பட இசை சூழல் தலைகிழாக மாறிவிட்டது.ஒவ்வொரு படத்திற்கும் தினக்கூலி மாதிரி ஒவ்வொரு புது
இசையமைப்பாளர்கள்.கும்பல் கும்பலாக  புதுப் பாடகர்கள்.

இந்தப் பாடகர்கள் டிவியில் அடிக்கடித் தோன்றி பார்க்க முடிகிறது. பாடிய பாடலை கேட்க முடியவில்லை.

கிழே இருப்பவர்கள் சூப்பர் சிங்கர் ஆகாத பிரபலங்கள்.பாடிய பாடல்களைச் சொல்ல முடியுமா?

சைந்தவி,பிரசன்னா,ரோஷினி,ஹரினி சுதாகர்,மதுமிதா,மகாலஷ்மி ஐயர்,மாலதி
லக்‌ஷமண்,மாதங்கி,பிரஷாந்தி,ராதிகா,ராஜல‌ஷ்மி,ஸ்ரீவர்தினி,உஜ்ஜய்னி,வினயா,சுனிதா சாரதி,தன்வி,சங்கீதா ராஜேஸ்வரன்,காயத்ரி,ஜெயதேவ்,ஷில்பா ராவ் எவ்வளவு பாட்டு பாடி இருக்கிறார்கள்?
 

சூப்பர் சிங்கர்கள் இவர்களோடு முன்னணி சாதனா,ஷிரேயா கோஷால்,மதுஸ்ரீ,கிரிஷ்,ரஞ்சித், மற்றும் பலரோடு போட்டிப் போட வேண்டும்.

இங்கு ஆரம்பிப்பது........


இங்கு முடிந்து விடுகிறது.......


இந்தப் போதைக்குத்தான் நிறைய பேர் அடிமையாகி விடுகிறார்கள்.

Tuesday, August 10, 2010

குறும்படங்கள் -கலைஞர் டிவி-நான்--DUSTER

குறும்படங்கள்:
குறும்படம் என்றால்  ”ZIP File” உடனே எனக்கு ஞாபகம் வருகிறது.பெரிய அல்லது சின்ன கருவை 3 நிமிடம் முதல் 12 நிமிட அவகாசத்தில் அடைத்து  பார்வையாளனுக்கு புரியும் விதத்தில்,சுவராசியமாக  கதையின் ஆத்மா கெடாமல் கொடுக்க வேண்டும் என்பது சவாலான வேலைதான்.

கிட்டத்தட்ட ஒரு பக்க சிறுகதைதான். 20-25 நிமிடத்தில் எடுக்கப்படும் குறும் படங்களை என்னால அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.மாக்சிமம் 10 தான். கொசுறாக 2 நிமிடம் சேர்த்து 12 நிமிடம்.

குறும்படத்தைப் பார்க்கும்  பார்வையாளர் ஒரு வித stressஓடு பார்க்க வேண்டியுள்ளது.ரொம்ப ஷார்ப்பாக இருக்கவேண்டும். கண் காது இரண்டையும் இறுக்கமாக வைத்துக்கொண்டு கவனம் சிதறாமல் பார்க்க வேண்டியுள்ளது.

காராணம்?

நிறைய suggestive shots வரும்.Two minutes Noodles மாதிரி விரைவாக முடிந்துவிடும்.ஒவ்வொரு பிரேமும் முக்கியம்.முழு நீள திரைப்படத்தில் (Feature film) போடும் கோனார் நோட்ஸெல்லாம் இங்கு போட மாட்டார்கள்.
ஹாலிவுட் படம் மாதிரி படம் போகும் போக்கிலேயே புரிந்துக்கொள்ள வேண்டும். கேண்டிட் கேமராவை ஒத்த ஷோ.

முக்கியமாக இயக்குனரின் புத்திசாலித்தனத்தை படத்தில் கண்டுக்கொள்ள வேண்டும்.பார்த்துப் பார்த்து நிறைய பயிற்சி எடுக்கவேண்டும்.கலைஞர் டிவியில் வரும் நடுவர்களே சில சமயம் படம் முடிந்ததும் ஒன்றும் புரியாமல்”திரு திரு”வென விழிப்பதைப் பார்க்கலாம்.

குறும்படம் என்றாலே டாக்குமெண்டரி என்ற நினைப்பிலேயே பாதிபேர் இன்னும் இருக்கிறார்கள்.காரணம் பல குறும்படத்தின் முடிவில் நீதி/போதனை
இருக்கும். நான்  சுத்தமாக ரசிப்பத்தில்லை.

சங்கம் தியேட்டரில் ஹெல்மெட் பற்றியும் சிகரெட் பற்றியும் இரு நகைச்சுவை குறும்படங்கள் காட்டப்படும்போது தியேட்டரே அதிரும்.இதே ஹெல்மெட் பற்றி எடுக்கப்பட்ட  ஒரு குறும்படம் நெட்டில் ரசிக்கும்படியாக எடுக்கவில்லை.

இப்போது மீடியா வளர்ந்துவிட்டதால்  யூ டூப்பில் விதவிதமாக பூந்து விளையாடுகிறார்கள்.ஆனால் நிறைய நீதி போதனை படங்கள்.கொஞ்சகாலம்  முன்பு மாற்றுத் திறனாளிகளை கருவாக வைத்து   குறும்படம் எடுத்து அரைத்தமாவேயே அரைத்தார்கள்.

உதாரணம் 1: ஒருவர் கடையில்  கூலிங்கிளாஸ் நிறைய மாடல்கள் பார்த்து கடைசியில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்து எழுந்து தன் குச்சியில் தட்டி தட்டி நடந்துபோவார்.

உதாரணம் 2:டிவியில் ஒட்டப்பந்தயத்தை ஒருவர் ரொம்ப ஆரவாரமாக விசில் அடித்து ரசிப்பார்.அவரே ஒடுவதுபோல் பிரமிப்பார்.படம் முடிவில் கேமரா அவரை நோக்கித் திரும்போது அவர் வீல் சேரில் உட்கார்ந்தி்ருப்பார்.இது மாதிரி நிறைய தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன்.

சில விளம்பரப் படங்கள் பார்க்கும் போது இவை குறும்படங்கள்தான் என்று தோன்றும்.முடிவு முக்கால்வாசி நகைச்சுவையாக இருக்கும்.

குறும்படத்தில் எனக்குப் பிடித்தது யதார்த்தமான கதாபாத்திரங்கள்.Mood lighting.
வித்தியாசமான கருக்கள்.வளமான கற்பனைகள்.எடுக்கும் விதம்.எந்த வித சமரசங்களும் செய்துக்கொள்ளாமை.புது முகங்கள்.நம்பகத்தன்மை.புது காற்றைச் சுவாசித்தல்.Small is always beautiful.

இவற்றுக்குத்தானே குறும்படமே?

கலைஞர் டிவி:

கலைஞர் டிவியில் கருணைக் கொலை(அம்மா?) பற்றிய ஒரு குறும்படம் ரொம்ப அற்புதமாக இருந்தது. இதில் முக்கியமானது நடித்த நடிகர்கள்.படத்தின் ஆழம். பாரதிராஜா படங்களில் இந்த மாதிரி ஆழமான காட்சிகளைப் பார்க்கலாம்.இயக்குனர்: மகேஷ் பெரியசாமி.அடுத்து “கை” என்ற குறும்படம். இதில் சில குறைகள்இருந்தாலும் வித்தியாசமான கரு.பிறகு நிகழ்கதவு.

(ஒரு கொடுமை:மூன்று மாதம் முன் பார்த்த படங்களைப் பற்றிய draftபதிவு அழிந்துவிட்டது )

குறைகள் என்று பார்த்தால் இயக்குனரின் விடலைத்தனம் மற்றும் stylishஆக எடுக்கிறேன் என்று படத்தின் ஆழத்தைக் கோட்டை விடுவது.நகைச்சுவைக் குறும்படங்கள் எடுக்காமல் இருப்பது.நடிக்கும்  சில பெண்கள் தமிங்லிஷ் (“யேன்ன பாண்ணிட்டிருகீங்க”)பேசுவது.சினேகா பேசும் தமிழ் மாதிரி.உடைந்து உடைந்து வரும்.

சில குறும்படங்கள் quiz programme  மாதிரி எடுத்து ”என்ன சொன்னேன் கண்டுபிடியுங்கள்” ரகம்.மண்டையை கிர் அடிக்க வைக்கும்.
 
நான்:
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு ஒளிபரப்பாகும் குறும்படங்களைப் பார்க்கையில், ஒவ்வொரு முறையும் ஞாபகம் பல வருடங்கள்  பின்னோக்கிப் போகிறது.

நான் பார்த்த முதல் குறும்படம் (டாக்குமெண்டரி)குடும்பக்கட்டுப்பாடு பற்றிய 10 நிமிட அனிமேஷன்.அடுத்தது (இதுவும் அனிமேஷன்) புகை வண்டிதொடரில் அபாயச்சங்கலி அனவசியமாக இழுத்து நிறுத்தினால் ஏற்படும்தொல்லைகளை
விளக்குவது.

ஒரு கிராமத்தான் இழுத்து நிறுத்தும்போது இஞ்சின் பல பெருமூச்சுகளை புகையாக விட்டுக்கொண்டு முகத்தையும் சுருக்கிக்கொண்டு சடாரென்று நிற்கும்.கிராமத்தான் விசிலடித்துக்கொண்டே இறங்கிப்போவார்.இன்னொன்று பொது சொத்துக்களை நாசப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்.

இதெல்லாம் அப்போதைய தூரதர்ஷனில் அடுத்த நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் ஒரு filler ஆகப் போடுவார்கள்.

கிழே 'DUSTER"என்ற குறும்படம் (18 நிமி்டம்?) இரு பகுதிகளாக வருகிறது.பகுதி-2ம்பார்ககவும்.சின்ன குறைகள் இருக்கு.முக்கிய குறை நீளம்.

முதல் பகுதியிலேயே முடித்திருக்கலாம்.நீளத்தையும்
டாக்குமெண்ட்ரித்தனத்தையும் குறைத்திருக்கலாம்.

குழந்தைகள் யாரும் கேமராவைப் பார்க்கதது ஆச்சரியம்!

இரண்டு முக்கியமான விஷயங்களை கொண்டுவந்திருந்தால் படத்தில் எமோஷனல் எபெக்ட் வந்து இருக்கும்.

அது என்ன  இரண்டு விஷயங்கள்? சொல்லுங்கள் பதிவர்களே?


Wednesday, August 4, 2010

ரசித்த படம் - “கபில்தேவ்வின் தொப்பி”

ரொம்ப  ரொம்ப வருடத்திற்கு முன்  சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு 40 நிமிட படம் ஒன்று பார்த்தேன். அது இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.

குத்து மதிப்பாக எழுதி இருக்கிறேன்.கதையின் ஆத்மாவை விடவில்லை.

அந்த படத்தின் தலைப்பு “ கபில்தேவ்வின் தொப்பி”.

ஒரு பெரிய காலனி. அங்கு ஏழை, மத்தியதர, பணக்கார குடுமபங்கள் கலந்துக் கட்டியாக வாழும்  காலனி. அங்கு ஒரு பெரிய விளையாட்டு திடல்.அதில் இங்கு குடி இருக்கும் பள்ளி/கல்லூரி மாணவர்கள் தினமும் எந்த வேற்றுமையின்றி விளையாடுவார்கள்.முக்கியமாக கிரிக்கெட் விளையாடுவார்கள்.

அவர்களின் ரொம்ப கால கனவு நேரடியாக இந்தியா விளையாடும்  கிரிக்கெட் மாட்ச் (5 நாள் மேட்ச்) பார்ப்பது. எல்லோரும் காசு சேர்த்து ஒரு கிரிக்கெட் மாட்சிற்கு  டிக்கெட் வாங்கி உள்ளே போகிறார்கள். பிரமிப்புடன் எல்லாவற்றையும் ரசிக்கிறார்கள்.அன்று விளையாடும் மேட்சில் (நான்காவது நாள்)  இந்தியா ஜெயித்துவிடுகிறது.

மேட்ச் முடிந்தவுடன் இந்திய அணி கபில்தேவ்வின் தலைமையில் மைதானத்தை சுற்றி ஊர்வலம் வருகிறார்கள்.இவர்கள் பக்கம் வரும் போது கபில் தேவ் தன்னுடைய தொப்பியை  தூக்கி வீசுகிறார்.அதை காலனியில் வசிக்கும் பாஸ்கர்(கார்பெண்டரின் மகன்) பிடித்துவைத்துக்கொள்கிறான்.

(மேலுள்ள காட்சியெல்லாம் வசனத்தில் சொல்லப்படுகிறது)

வாழ்நாளில் தான் பிறநத பயனை அடைந்துவிட்டதாக கருதி்னான் பாஸ்கர்.

அன்றிலிருந்து பாஸ்கர் ரொம்ப பூரித்துப் போய் மேகத்தில் உலாவிக்கொண்டிருந்தான்.
தினமும் தன் தலையணை அடியில் வைத்துக்கொண்டுதான் தூங்குவான்.கனவு காணுவான்.அதைப் போட்டுக்கொண்டுதான் விளையாடுவான்.

நண்பர்கள் தொட்டுப்பார்க்கதான் அனுமதிப்பான்.நண்பர்கள் தினமும் பொறாமைத் தீயில் வெந்துகருகினார்கள்.

அதில் சீனு (பணக்கார குடும்பம்) என்பவனுக்கு தொப்பியின் மீ்து வெறி.சீனுவின் அப்பாவிற்கும் இது  தெரியும்.அவன் வீட்டில்தான் பாஸ்கரின் அப்பா வேலை செய்கிறார்.

ஒரு நாள் குடிப்பதற்கு காசு இல்லாத நிலையில் முதலாளியிடம் மருந்து வாங்க காசு கேட்கிறார்.”அந்த தொப்பியைத் தந்தா உனக்கு காசு தரேன்” என்கிறார்.அவனும் அதன் மதிப்பு தெரியாமல் கொடுத்து காசு வாங்கிக் குடிக்கிறார்.

பாஸ்கர் தொப்பியை காணாமல் பதறுகிறான்.மிகுந்த துக்கம் ஆகிறான்.ஸ்கூல் போகவில்லை.அடுத்த நாள் ஜூரம் வந்துப் படுத்துவிடுகிறான். தொப்பிக்கு பின்னால் இருக்கும் தீவிர உணர்ச்சிகளை பாஸ்கரின் தந்தை பிறகுதான் உணர்கிறார்.பாஸ்கர் நார்மல் நிலைக்கு வர வேண்டும் என்றால் தொப்பி மிக அவசியம் என்று உரைக்கிறது. தான் கண்டுபிடித்துத் தருவதாக சத்தியம் செய்கிறார்.உண்மையை சொல்லுகிறார்.

மறுநாள் நார்மல் நிலைக்கு வந்ததும் பாஸ்கரை அழைத்துக்கொண்டு சீனுவின் வீட்டிற்கு செல்கிறார்.சீனுவும் அவன் அப்பாவும் வாசலில்.தொப்பியைக் கேட்கிறார்.அவர்
மறுக்கிறார்.பணத்தை கொடுத்துவிடுவதாக சொல்லி கெஞ்சுகிறார்.இவன் நினைத்தே பார்க்க முடியாத அளவு பணம் கேட்கிறார்.தன்னால் முடியாது என்று மீண்டும் கெஞ்சுகி்றார்.சீனு சிரித்தபடி்யே பார்தது்க்கொண்டிருக்கிறான்.

கடைசியாக தன் பையன் தொப்பி மேல் கொண்டிருக்கும்
பக்தியைச் சொல்லி கெஞ்சுகெஞ்சென்று கெஞ்சுகிறார்.பாஸ்கருக்கு அப்பா கெஞ்சுவது என்னவோ போல் இருக்கிறது.மிகுந்த சோகமாகிறான்.கண்ணில் நீர் முட்டுகிறது.

”அப்பா.. தொப்பி வேண்டாம்ப்பா...அவங்களே வச்சுகிடட்டும்..” என்று கோபத்துடன் சொல்லி அப்பாவை அழைத்துக்கொண்டு விறுவிறுவென்று நடக்கிறான்.படம் முடிகிறது.

Tuesday, August 3, 2010

சைக்கிள் - சிறுகதை

விக்ரம் மாடியிலிருந்து புது சைக்கிளைப் பார்த்தான்.சின்ன அசைவில் சட்டென மிரண்டு தலை தூக்கி பார்க்கும் கலை மான் தோரணையில்  ஸ்டைலாக நின்றிருந்தது.பிராண்ட் நியூ.ரத்த சிவப்பு நிறம் பளபளத்தது.வாசனை கூட போகவில்லை.காம்பவுண்ட் சுவரை எட்டிப் பார்த்தபடி மகள் பூஜாவின் வரவை  எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

பூஜாவும் ஸ்கூலில்  இப்படிஆவலாக எட்டிப்பார்த்தப்படியேதான் இருப்பாள்.

ஜீவன் பீமா நகரின் குண்டும் குழியுமான கொடூரமான ரோட்டிற்கு இந்த  சைக்கிள் பொருத்தமாகவே இல்லை.ரோட்டின் இரண்டு பக்கமும் பூக்கள் உதிர்க்கும் Maple Treeகளுக்கு நடுவே அடர்கருப்பு நிறத்தில் வழுக்கிக்
கொண்டுபோகும்  தார் ரோட்டில்  இந்த சைக்கிளை ஓட்ட வேண்டும் பூஜா.

”வேன்ல போனா ரொம்ப childishஆ இருக்குப்பா” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள் மகள் பூஜா.

சைக்கிளை வாங்குவதற்காகவே  நேற்று ஆபிஸ் மட்டம் போட்டுவிட்டு பூஜா,  மனைவி அர்ச்சனாவுடன்  கடைக்குப்  போனான் விக்ரம். பூஜா தன் தோழிகள் வாங்கிய கடையிலேயே (கடையின் பெயரே ஸ்டைலாக இருந்தது) வாங்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அழைத்துக்கொண்டு போனாள்.

மிகவும் பூரிப்போடு எல்லா சைக்கிளையும் பார்த்த பூஜாவுக்கு  முடிவில் முகம் வாடியது.அவள் தோழிகள் வைத்திருக்கு்ம் பிராண்ட் ஸ்டாக் இல்லை.
மறு நாள்தான் கிடைக்கும் என்றார்கள்.மறுநாளும் லீவ் போட்டு தான் மட்டும் போய்  அதை டெலிவரி எடுதது வீட்டில் நிறுத்தி விட்டான்.

தான்தான் முதலில் ஓட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனாள்.

“சரி..! நீயே இனாகரேட் பண்ணு..நாங்க தொடல”.

 
பூஜா ஸ்கூல் விட்டு வரும் நேரம்.விக்ரமும்  அர்ச்சனாவும்  மாடியிலிருந்து வாசலுக்கு வந்தார்கள்.

“சந்தனம் குங்குமம்  எடுத்துண்டு வரட்டுமா?”

”வேண்டாம் விக்ரம்... அதெல்லாம் அவுட் ஆஃப பேஷன்ம்பா.அவளோடு பேவரைட் ஸ்வாமி அபிராமி.அந்த ஸ்வாமிய  பிராத்தனப் பண்ணிண்டுதான் ஓட்டுவா”

 ”கிரிங்ங்ங்ங்ங்ங்....” அர்ச்சனா  பெல் அடித்து செல்லமாக தொட்டுணர்ந்தாள்.

சின்ன வயதில்   நாட்டார் கடை  சைக்கிள் ஓட்டியது ஞாபகம் வந்தது. இது நாட்டார் கடை  பெல் போல் இல்லை.இது அடித்தவுடன்  தொடர்ந்து சிணுங்குகிறது.அடிக்கும்போது ஏதோ ஒரு இதமான உணர்ச்சி வருகிறது. ரொம்ப அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

 ரொம்ப காதலோடுப் பார்த்துக்கொண்டிருந்தவள் திடீரென்று.....

“விக்ரம்  கொஞ்சம் பக்கத்துல வாங்கோ..” ரொம்ப உற்சாகத்துடன் கூப்பிட்டாள்

பக்கத்தில போய்  நின்றான். அவள் செய்கைகளை புன்னகைத்தப்படி பார்க்க ஆரம்பித்தான்.

திருமாங்கல்யம் மற்றும் அதனோடு சேர்ந்த மற்ற செயின்களை எடுதது  கொத்தாக பிளவுசிற்குள் விட்டுக்கொண்டாள்.புடவையை இடுப்பில் சொருகிக்கொண்டாள். உள் பாவாடையின் பிரில்களுக்கு வெளியே செக்கச்செவேலன கால்கள் தெரிந்தது.முந்தானையை அடக்க ஒடுக்கமாக இடுப்பில் சொருகி கணவனின் தோளைப் பிடித்துக்கொண்டு “விட்ராதேங்கோ”   பேலன்ஸ் செய்து சைக்களிள் ஏறி  மெதுவாக பெடல் செய்ய ஆரம்பித்தாள்.
  
மனைவியின் கனத்தை மனதில் அசைப்போட்டுக்கொண்டே அவள் வீடடைச் சுற்றி ஓட்டுவதை பூரிப்போடு பார்த்தான்.ரொம்ப புதுசாக தெரிந்தாள்.

இரண்டு ரவுண்ட் ஓட்டினாள். மூன்றாவது ரவுண்டில்.....

“எப்படி.. இருக்கு நம்ம ரைடிங்? டபுல்ஸ் வரேளா?”ஏதோ பாட்டை ஹம் செய்தபடியே.

”சர்பர்ரைசிங்..!என்ன கான்பிடன்ஸோட ஓட்டற..!ஆனா சீட்டுக்கு ரெண்டு பககமும் “பம்ஸ்” பொங்கி வழியுது”

”சீ..போ...” என்று சொல்லி பிரேக் அடித்து கணவனின் பின்பக்கத்தில் மோதி  ஸ்டாண்ட் போட்டாள். ஓட்டின சுவடே தெரியாமல் நன்றாகத் துடைத்து
வைத்தாள். இருவரும் கேட்டிற்கு அருகே வர ஸ்கூல் வேன் வந்தது.

 வேன்  வீட்டு வாசலில் நிற்காத நிலையில்  கதவைத் திறந்த பூஜா  தொப்பென்று குதித்து ஓடி வந்தாள்.

”எஸ்... அபிராமி!. ஐ காட் இட்” சைக்கிளைக் கட்டிக்கொண்டாள்.ஹாண்டில் பார் எதேச்சையாக அவள் அசைவில் திரும்பியது.”சாரி....நாளைக்குத்தான் இனாகுரேஷன் .இன்னிக்கு கிடையாது..ஓகே..!.”

”தாங்க்ஸ் அப்பா! தாங்க்ஸ் அம்மா!”மாறி மாறி இருவருக்கும் முத்த மழைப்பொழி்ந்தாள்.
அப்பாவிடம் செல் போன் வாங்கி போட்டோ எடுத்தாள்.தோழிகளுக்குப் போன் செய்து சிரித்தபடி பேசினாள்.

”சரி... டிரெஸ்ஸெல்லாம் கழட்டிட்டு வா.சூடா ரவா உப்புமா பணணித்தரேன்..”

பூஜா சைக்கிளை பார்த்துக்கொண்டே பின் பக்கமாக ஸ்லோமோஷனில் படியேறினாள். அவளுக்கு இணையாக அதே ஸ்லோ மோஷனில் எதேச்சையாக சைக்கிளை ஓட்டிய பூரிப்பில் படியேறிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

மறுநாள காலை.........

சைக்கிளைக் காணவில்லை. பூஜா  மூச்சிரைக்க  படியேறி வந்து அலறினாள்.

விக்ரமும் அர்ச்சனாவும் கிழே ஓடினார்கள். பரக்க பரக்க எல்லா இடத்திலும் தேடினார்கள்.கண்ணில் படவே இல்லை. பூட்டித்தான் இருந்தது.ஆனாலும் திருடு போய்விட்டது.

பூஜா முகம் வாடிப் போய் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.

ஒரு பக்கம் தொலைந்துப் போனது  சொல்ல முடியாத வருத்தம்.இன்னொரு பக்கம்  சைக்கிள் ஓட்டியதை சொல்லாமல் மறைத்தது இப்போது விஸ்வரூபம் எடுத்து துக்கம் தொண்டையை அடைத்தது அர்ச்சனாவிற்கு.  பூஜாவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் குற்ற உணர்ச்சிப் படுத்தி எடுத்தியது.சொல்லிவிடலாமா?

”நான் ஓட்றதப் பார்த்து நீங்க திருஷ்டி போட்டுட்டேளா? அதான் சைக்கிள்  காணாம போயிடுத்தா?” சோகமாகக் கேட்டாள்.

”லூசு மாதிரி பேசாத.நம்ம வீட்டுக்குள்ள வச்சுருக்கணம். ஆறாயிரம் ரூபாய் பணால்.”

விக்ரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தான். அவர்களும் ஏனோதானாவென்று வாங்கிக்கொண்டார்கள்.கண்டுப்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை.கிடைக்கும் என்ற நம்பிக்கையும்  இல்லை.அடிக்கடி திருட்டு நடக்கும் ஏரியா.

பூஜாதான் உடைந்துப் போய் விட்டாள்.மறுபடியும் childishஆ வேன்தானா?

மூன்று பேரும் அடுத்த இரண்டு நாட்களையும்  ஜடமாக சுரத்தே இல்லாமல் நகர்த்தினார்கள்.புது சைக்கிள் வாங்க முடியுமா?
  
மூன்றாவது நாள் இரவு 8 மணி. கம்புயூட்டர் பார்த்துக்கொண்டிருந்த பூஜா திடீரென்று கிச்சனுக்கு ஒடி வந்து அர்ச்சனாவை கட்டிக்கொண்டு.....

”எப்பேர் பட்ட பொய்க்காரி நீ. நீயும் உங்க ஆத்துக்காரரும் என்ன மாதிரி சீன் போட்டீங்க ..” சந்தோஷம் பொங்க அம்மாவை உலுக்கிச் சிரித்தாள்.

”என்னடி பூஜ்..?” மகளின் பிரகாச முகத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தாள்.

”ரொம்ப குஷியா இருக்கேம்மா. ரெண்டு நாள் துக்கம் ஆவியா போயிடுத்து. ஐ ஆம் ஓகே நவ்..! வா.., காட்றேன்” அழைத்துக்கொண்டுப் போய் கம்புயூட்டர் முன் உட்கார வைத்தாள். எதையோ கிளிக் செய்தாள். ” பாரு ..உன்னோட லவ்விங் ஆத்துக்காரார்  எடுத்தத...!”

21 இன்ச் கம்புயூட்டர் திரையில் ....

”விக்ரம் கொஞ்சம் பக்கத்துல வாங்கோ”வில் ஆரம்பித்து   “”சீ..போ..” அர்ச்சனா கணவனை வீலால்  இடித்து ஸ்டாண்ட் போட்டு முடித்தவுடன் காட்சி ஓடி திரை பிளாங் ஆகியது.பூஜா திரையை மூட டெஸ்க் டாப்பில் புது சைக்கிள் படம் இருந்தது.

அர்ச்சனாவுக்கு  வருத்தம் இரண்டு மடங்கு ஆகியது.


                               முற்றும்

குறிப்பு:
(பக்கத்து காம்பவுண்டில்  குடி இருக்கும் விக்ரமின் அக்கா  தெரியாமல் வீடியோ எடுத்து பின்னர் விக்ரமிடம் கொடுத்தது)