Tuesday, August 9, 2011

திருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் - சிறுகதை


ஒரு நாள் எட்டாவது படிக்கும் கோபால்  ஸ்கூல் முதல் பிரியட் தொடங்கும்போது  "திடுதிப்"பென்று சக மாணவி கிருஷ்ணவேணியை காதலிக்க ஆரம்பித்தான்.ஏன் இந்த ”திடுதிப்” என்று அவனுக்கே புரியவில்லை.மதியம்வரைப் புல்லரித்துக் கொண்டே இருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் பூமியில் மேல்  உதிரும் நட்சத்திரம் போல காதல் தேவதை எதையோ தன் மேல்  உதிர்த்து விட்டு போய் இருப்பதால் காதல் அங்கீகரிக்கப்பட்டுவிடும் என்று  பலமாக நம்பினான்.

அன்று வகுப்பில் இவனை எல்லோரும் ஒரு மாதிரியாகவே பார்த்ததாக இவன் நினைத்துக்கொண்டான்.ஆச்சரியமாக இவனை இந்த “ஒரு மாதிரி”க்கு கேலி ஆட்டவில்லை.ஆச்சரியத்திலும் ஆச்சரியம் இவனுடைய நெருங்கிய நண்பர்கள் காசி மற்றும் குணசீலன்  அன்று முழுவதும் வாயே திறக்கவில்லை.தள்ளி நின்று  பார்த்தவாறு போனார்கள். இது அவனை மேலும் புல்லரிக்க வைத்தது.

உயிர் நண்பர்கள் காசி, குணசீலன் இருவரிடமும் தன் திடீர்
திடுதிப்காதலைப் பற்றி மிகவும் வெட்கத்துடன் சொன்னான்.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு மெளனமானர்கள்.பொறாமையாகக் கூட இருந்தது இருவருக்கும்.

காதல், கடிதம் மூலம்தான் சொல்லப்படவேண்டும்.அதில்தான் ஒரு நிதானம் இருக்கும். போகிறபோக்கில் அவளிடம் ஐ லவ் யூ சொல்வதில் ஒரு அவமரியாதை மற்றும் அலட்சியம் இருக்கிறது.கடிதத்தில்தான் மனதை திறந்து காட்டலாம்.ஒரு புரிதலும் இருக்கும்  என்று அவர்களிடம்  சொன்னான்.அவர்களும் தலையாட்டினார்கள்.

அடுத்து ஒரு பக்கத்திற்கு காதல் கடிதம் ஒன்று தயார் செய்யப்பட்டது.

நண்பர்கள் இருவரும் படித்தார்கள்.ஏதாவது மிஸ்டேக் இருக்கிறதா என்று கேட்டதற்கு “ சீக்கிரம் சொல்லிவிடு”  என்பதில் அதிகார தொனி இருப்பதாகவும் அதை “யோசித்து நல்ல பதில் சொல்” என்று மாற்ற சொன்னார்கள். அப்படியே செய்தான்.குணசீலன் மேலே  புள்ளையார் சுழி போட்டான்.

மூன்றாவது வரிசை இரண்டாவது டெஸ்க்கில்  ரீசஸ் பிரியடில் வைப்பதாக முடிவாயிற்று.காசிதான் வைத்தான்.

ரீசஸ் பிரியட் முடிந்து  உள்ளே நுழைந்து இரண்டாவது டெஸ்கைப் பார்த்தவாறே நடக்கும்போது மூவர் உடலிலும் ஒரு குறுகுறுப்பு இருந்தது.

கிருஷ்ணவேணி மூவரையும் பார்த்து புன்னகைப் புரிந்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.தனக்கும் அவளுக்கும் காதல் முடிச்சு விழுந்துவிட்டதாக கோபால் கை நடுங்க ஆரம்பித்து டெஸ்க்கில் கைவிட்டு மறைத்துக்
கொண்டான்.

வகுப்பு நடந்துக்கொண்டிருக்கும் போது, திடீரென  PT(விளையாட்டு) மாஸ்டர் உள்ளே நுழைந்து,வாலிபால் போட்டிப் பயிற்ச்சிக்கு  சூபர்வைஸ் செய்ய பெண் குரூப்புக்கு ஒரு கேப்டனும் ஆண் குரூப்புக்கு ஒரு கேப்டனும் தேவை என்று கேட்க  கிருஷ்ணவேனி பெண் குரூப்புக்கு கைத்தூக்க  அதைப்பார்த்த குணசீலன் சட்டென்று ஆண் குரூப்புக்கு புன்முறுவல் பூத்தபடி கைத்தூக்கினான்.

அவனைப் பார்த்து கிருஷ்ணவேணி புன்னகைத்தாள்.குணசீலன் மேகத்தில் மிதந்தான்.

கோபாலின் புல்லரிப்புகள் திடுதிப்பென்று நின்றது.காசி முகம் சிறுத்தான். 

அடுத்த நாள்  காசி மேகத்தில் மிதந்தான்.

அன்று விமலா டீச்சர் கிருஷ்ணவேணியையும் காசியையும்  காலையில் தன் ரூமுக்கு வரவழைத்து புது புத்தகங்களை அடுக்கிக் கட்டி கிளாசுக்கு எடுத்து வர பணித்தாள்.அடிக்கடி காசி அவளிடம்  புத்தகங்களை அடுக்குவதுப் பற்றி “டவுட்” கேட்டு புத்தகங்களை கட்டினான்.அவளும் சிரித்துக்கொண்டே  ”டவுட்” டுகளுக்குப் பதில் சொன்னாள்.

இருவரும் புன்னகைத்தப்படியே கிளாசில் நுழைந்து ”இந்தா முதல்ல உன் புக்கை எடுத்துக்கோ” புத்தகத்தின் நடுவே வாசனைப் பிடித்துவிட்டு அவளிடம் கொடுத்தது கோபாலுக்கும் குணாவுக்கும் எரிச்சல் ஊட்டியது.

கோபால் தனக்கும்  இது மாதிரி ஒரு சான்ஸ் வரும் என்று அடுத்த வாரம் முழுவதுமாக ஏங்கி இளைத்துப்போனான்.

ஒரு மாதம் அவளிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. அவளின் மர்ம புன்னகை மட்டும் தொடர்ந்தது.அடுத்த பத்து நாளும் ஒன்றும் நடக்கவில்லை.அதே மர்ம புன்னகை. கோபால் சற்று கலவரமானான். மறுநாள் கடிதத்தை திருப்பி வாங்கிவிட துடித்தான்.இருவருக்கும் தெரியாமல் அவளிடம் கேட்டு வாங்கிவிடவேண்டும் மனதில் எண்ணிக்கொண்டான்.

மறு நாள் காசியும், குணசீலனும் அவளை வழிமறித்து  ஏதோ கேட்பதும் அவள் முடியாது என்று விடுவிடுவென்று கோபத்துடன் நடப்பதை மறைந்திருந்த பார்த்தான் கோபால். திரும்பி வரும்போது இருவர்  முகத்திலும் இனம் புரியாத  பய ரேகைகள் ஓடுவதை கோபால் உணர்ந்தான்.

 ”என்னடா... கேட்டீங்க அவள்ட? அவ ஏன் டென்சன் ஆவரா?”

“ லெட்டர திருப்பி குடுன்னு கேட்டோம். மாட்டேன்டா”

கோபால் பீதி அடைந்து முகம் வெளுத்தது. மாட்டி விடுவாளா? பயந்தபடியே  ஒவ்வொரு நாளும் கோபால் நாட்களை ஓட்டினான்.

அடுத்த மூன்று வாரங்கள் மூன்று பேரும் பேசிக்கொள்ளவில்லை.வெவ்வேறு இடத்தில் மாறி உட்கார்ந்தார்கள்.
  
அடுத்த வருடம்  காசியும் கோபாலும் வகுப்பு மாறினார்கள்.இது வரை ஒன்றும் நடக்காதது சற்று பீதி குறைந்தது. கிருஷ்ணவேனியை இழந்துவிட்டோம் என்ற நினைப்பு மட்டும் மாறாமல் கோபாலை எல்லா வகுப்பிலும் தொடர்ந்தது.

பள்ளியின் கடைசி நாள் அன்று ஒரு செய்தி கேள்விப்பட்டு அதிர்ந்தான் கோபால். தான் கொடுத்த அதே நாளில் குணாவும் காசியும் அவளுக்கு காதல் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

கடைசி நாளில் மூவரும்  சேர்ந்து அவளிடம் அந்த காதல் கடிதங்களை கேட்கையில் தர முடியாது என்ற்படி விறுவிறுவென்று நடந்தாள்.

பள்ளி முடிந்து எல்லோரும் மூலைக்கொன்றாக சிதறினார்கள். சிதறினாலும் லெட்டர் திருப்பி வாங்க முடியாமல் போனது உறுத்திக்கொண்டுதான் இருந்தது மூவருக்கும்.

பல  பல வருடங்களுக்குப் பிறகு....

புதுகுமரன்புதூர் காந்தி-காமராஜ் ஹை ஸ்கூல் அலுமினி  என்ற வெப் சைட்டில்...
 
ஹாய்! நான் கிருஷ்ணவேணி மாதவன்உன்னி. 1975 பாட்ச்.கோபால்,குணா, காசி, நிர்மலா,சாந்தி எங்க இருக்கீங்க?நான் கணவர், ரெண்டு குழந்தைகளோட திருச்சில இருக்கேன்.

பழைய பள்ளி  நினைவுகளுக்காக இந்த வெப் சைட்.மறக்க முடியாத நாட்கள்.

யாரை மறந்தாலும் கோபால்,குணா, காசி மூணு பேரையும் மறக்கவே மாட்டேன்.ஒரு நாள்ல மூணு பேரும்  மூணு லவ் லெட்டர் கொடுத்தாங்க. மிரண்டுப் போய்விட்டேன் .ஆனா  ரொம்ப பிடிச்சுருந்தது. இன்னும் பத்திரமா வச்சிருக்கேன்.

இங்க கிளிக் பண்ணினா ஸ்கேன் பண்ண காப்பிய பார்க்கலாம்.

என்னைத் தொடர்பு கொண்டால் குடும்பத்தோடு சந்திக்க ரொம்ப ஆர்வம்.

சத்தியமா உங்க  லவ் லெட்டர்களை திருப்பிக்கொடுத்துவிடுகிறேன்.(ஹா ஹா ஹா ஹா)
            
(தினமும் கிருஷ்ணவேணி  கமெண்ட் பாக்ஸை பார்ப்பது வழக்கம். பத்து வருடமாக ”0 comments"   என்று வெறிச்சோடிக் கிடக்கிறது)
           
             முற்றும்




8 comments:

  1. சூப்பரா இருக்கு சார்...இதுவரைக்கும் யாரும் படிக்கலையா...?
    //சத்தியமா உங்க லவ் லெட்டர்களை திருப்பிக்கொடுத்துவிடுகிறேன்.(ஹா ஹா ஹா ஹா)//
    ஆங்காங்கு ஒற்றுப் பிழைகள் மட்டுமே இடித்தன...

    தேவையில்லாத இடங்களில் ‘ட்’ ,’ப்’ போட்டு விட்டீர்கள்..தேவையான இடங்களில் விட்டுவிட்டீர்கள்...

    ReplyDelete
  2. /இங்க கிளிக் பண்ணினா ஸ்கேன் பண்ண காப்பிய பார்க்கலாம்./

    Link Sariya Work Agalai! Click Panni Click Panni Parthen! :(

    ReplyDelete
  3. //தேவையில்லாத இடங்களில் ‘ட்’ ,’ப்’ போட்டு விட்டீர்கள்..தேவையான இடங்களில் விட்டுவிட்டீர்கள்... //

    ஒற்றுகள் எந்த இடங்களில் வரும் என்று ஒரு காமன் சென்ஸ் அனுபவத்தில் போடுகிறேன்.இலக்கணப்படி விதிகள் இருக்கிறது.
    இதில் மிகும் மிகா இடங்கள் இருக்கிறது.பார்த்துச் செய்ய வேண்டும்.

    //..இதுவரைக்கும் யாரும் படிக்கலையா...?//
    பதிவைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.படித்திருப்பார்கள்.பின்னூட்டம் போடாமல் போய் இருக்கலாம்.யார் கண்டது? நான் சாத பதிவர்தானே?

    ReplyDelete
  4. //ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்//

    //இரு பெயரொட்டுப் பண்புத்தொகை// இங்கெல்லாம் மிகும். இவற்றைக் இதைக் கண்டுகொள்வது எப்படி?

    ReplyDelete
  5. நன்றி அருணையடி.

    ReplyDelete
  6. நன்றி குடிமகன்.

    ReplyDelete
  7. Nice story....! Connection to Facebook is Abaram! :)

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!