Monday, October 24, 2011

இளையராஜா டப்பிங்- ராஜ் டிவிக்கு 10 தலை- மட சாம்பிராணி

ராஜ் டிவி தேன் குடித்த நரி மாதிரி ஆகிவிட்டது. அதற்கும் “இந்தியத் தொலைகாட்சிகளிலேயே” ஜுரம் வந்து பத்து தலை முளைத்துவிட்டது.தீபாவளி அன்று ராஜ்ஜில் “ராவணன்” படம்.டப்பா படம்.ஒரு மாதமாக விளம்பரம் போட்டுத் தாக்குகிறது.தலை(பத்து?) தாங்க
முடியவில்லை.


இந்த வருடம் தீபாவளிக்கு நிறைய சேனல்களில் “இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே” ஹிட் படங்கள் திரையிடப்பட உள்ளது. இதற்கு முன் வருடங்கள் எல்லாம் ”ஹிட்” படங்களை சன் டிவி ஆக்கிரமித்து ”அட்டு” படங்களை மற்ற சேனல்கள் போடும். காட்சி மாறிவிட்டது.

When Cat is away(out!) Rats are happyயா! அல்லது வேறா?


மட சாம்பிராணி

இதைப் பற்ற வைக்க ரொம்ப நேரம் பிடிக்கும். அது மாதிரி சொல்வதைப் புரிந்துக்கொள்ளாது முழிக்கும் மனிதர்களை “ சரியான மட சாம்பிராணி” என்று சொல்லும் வழக்கம் உண்டு.டியூப் லைட்?

தலையில் பச்சைத் துணிக்கட்டு,தாடி,கையில் ஒரு தட்டு அதில் சாம்பிராணி தூப ஸ்டாண்ட்,மறு கையில் மயில் பீலியுடன் கடை கடையாக ஏறி சாம்பிராணி புகை போடும் முஸ்லீம் அன்பர்களைப் பார்த்திருக்கலாம்.
பில்லிசூனியம்,திருஷ்டி,ஜலதோஷம்,பூச்சி,ஐஸ்வர்யம் போன்றவைகளுக்கு போடப்படுகிறது.

மேலும் இதில் “தெய்வீக மணம்” வீசுவதால் எந்த மதத்தவரும் எதிர்ப்பதில்லை.


        
நன்றி: பாரத்ஸ்டூடண்ட்.காம்
        
ரொம்ப வருடம் முன்பு நடந்தது.

ஒரு துணிக்கடைக்கு வழக்கமாக ஒரு முஸ்லீம் பெரியவர்(வீடியோவில் வருபவர் அல்ல) மூன்று நாளுக்கு ஒரு முறை வருவார்.ஒரு நாள் (பெரிய கடை) இருக்கும்போது இவரிடம் கேட்டேன் “நீங்க ஒரு நாளைக்கு நிறைய ஏரியா உங்க பசங்களோடு போய் பிரிச்சுகிட்டு நிறைய சம்பாதிக்கலாமே. ஏன் நீங்க மட்டும்தான் அதுவும் கொஞ்ச ஏரியாத்தான் போறீங்க?”
        
”எனக்கு வர்ற காசு போதும். பிசினஸ்ஸா பண்ணல.புகைப் போடும்போது இவங்க நல்லா இருக்கனம்னுதான் போடறேன்.என்ன மாதிரி எவ்வளவோ பேர் இருப்பாங்க.தம்பி, நீங்க ”சம்பாதிக்கலாமே”ன்னு கேட்கும்போதே மதிப்பு போயிடுது.என் குணத்தப் பாத்துதான் என்னோட இரண்டு பசங்க இதே ஏரியாவுல் துணி கடைல சூப்பர்வைஸ்ஸரா இருக்காங்க.அடுத்தவங்க நல்லா இருக்க புகைப்போட்டது நமக்கு நல்லது நடக்க வச்சுட்டாரு அல்லா”

கேட்டவுடன் எனக்கு மந்திரித்துவிட்டார் போல் இருந்தது.
        
ஸ்ரீ ராம ராஜ்யம் சினிமா


தெலுங்கில் ரிலீசாகப்போகும் படம். பாலகிருஷ்ணா நயந்தாரா நடிக்கிறார்கள்.இசை இசைஞானிஇளையராஜா.பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆந்திராவில்.இதற்கு ரீரிகார்டிங்கிற்கு ராஜா ரொம்பவும் சிரத்தை எடுத்துக்கொள்வதாக செய்திக்குறிப்புகள் கூறுகிறது. அது:

// Ilayaraja usually does re-recording with two keyboards. But for this film, he opted to use live instruments, with 70 musicians. He refused to go down the beaten track set by previous mythology based movies, and did something new & unique, almost like he re-did the screenplay with his rerecording. Producer says IR did the rerecording as if he was doing research in music.//


படங்கள்:









Friday, October 14, 2011

திருந்துங்கடா டேய்!

யார் யாரோ மினி டெம்போவில் கழுத்தைச் சுற்றி கலர் துணியுடன் இறங்கி வீடுவீடாக படியேறி கைக்கூப்பி ஓட்டு கேட்கிறார்கள்.பொத்தம் பொதுவாக ஏரியா பிரச்சனைகளை உடனடியாக தீர்த்துவிடுவதாக உறுதி அளிக்கிறார்கள்.

உள்ளாட்சி தேர்தல் பிரசாரங்கள் தெருக்களில் காதைப்
பிளக்கிறது.கைவிசிறி,fan,விளக்கு, முறம்,சைக்கிள்,பம்பரம்,நாற்காலி,கொடை,ஸ்டவ் என்று வீட்டு தட்டுமுட்டு சாமான்கள் சின்னமாக போஸ்டரில் தெரிகிறது.நகரம் ஆனாதால் யாரும் காலில் விழுவதில்லை.நகரத்தில் தன்னுடைய வார்டு மெம்பர் யார் என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்.

குப்பைக் கூளங்கள், சாக்கடைகள், மேடு பள்ளங்கள், ஆடு மாடு நாய்கள் உலாத்தும் ரோடுகள்,ஆக்கிரமிப்புகள் இவைகளிடையேதான் இந்தப் பிரசாரம் நடக்கிறது.

கவுன்சிலர்கள் வேலை செய்யாமல் இல்லை. ஏதோ செய்கிறார்கள் ஆனால் மீண்டும் குப்பை கூளங்கள், சாக்கடைகள், மேடு பள்ளங்கள், ஆடு மாடு நாய்கள் உலாத்தும் ரோடுகள்,ஆக்கிரமிப்புகள்..........

கட்சி சாராத வேட்பாளர்கள் கும்பல் கும்பலாக நிற்கிறார்கள்.”பொன்னான” வாக்குகளை “சிந்தாமல் சிதறாமல்”  போடச்சொல்லி "பணிவன்புடன்”
கேட்டுக்கொள்கிறார்கள்.

கட்சி சாராத வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு ஒரு முன் திட்டமோ,strategy,சிட்டிங் கவுன்சிலரின் குறைகளை உயர்த்திக் காட்டுதல்(highlight),வாக்களர்களை முன்னமே தெரிந்து வைத்துக்கொள்ளுதல் போன்றவைகள் ஏனோதானோ என்றுதான் இருக்கிறது.சுத்தமாக சிரத்தை இல்லை.

திருந்துங்கடா டேய்!
___________________________________________________________

வீட்டில் சுவற்றில் சாதாரண ஒரு பல்ப் ஹோல்டர் போடுவதற்கு கட்டணம் 65 ரூபாயாம்.காரணம் டிரில்லிங் மெஷின் வாடகை 30 ரூபாயாம்.90ன் இறுதியிலேயே டிரில்லிங் மெஷின் வந்துவிட்டது.”வெட்ரூம்பு” காலம் மலையேறி விட்டது.மார்வலிக்க”வெட்ரூம்பு”  வைத்து சுவற்றில் அடித்து ஓட்டைப்போட்ட எலக்ட்ரிஷியன்கள் பாவம் கிழவனாகி விட்டார்கள்.
என் எலக்ட்ரிஷியன் அவருடைய சொந்த மெஷினயே வாடகையாக காட்டி என் வேலையை முடித்தார்.சரி என்ஜாய் என்று விட்டுவிட்டேன்.

இப்போதெல்லாம் எலக்ட்ரிஷியன்(சென்னை) என்றாலே அவரின் அடிப்படை ஆயுதம் டிரில்லிங் மெஷின்.

திருந்துங்கடா டேய்!
___________________________________________________________

”செய்யும் தொழிலே தெய்வம் அதில் நமது திறமையே செல்வம்” என்று ஒரு சொலவடை உண்டு. என் பேண்டின் zip வேலை செய்யாததால் ஒரு டெய்லரிடம் கொடுத்து(காலை 9 மணி) மாற்றச்சொன்னேன். கூலி 40 ரூபாய் என்று சொல்லி மதியம் மூன்று மணிக்கு வரச் சொன்னார்.

ஆனால் சொன்னபடி தயார் ஆகவில்லை. மீண்டும் நாளை வரச்சொன்னார்.இப்படியே மூன்று நாள் ஆகிவிட்டது.கோபத்தில் திருப்பிக் கொடுத்துவிடும்படி சொன்னேன்.கொடுக்கும்போது “ பழைய துணி எடுத்தால் இதுதான் பிரச்சனை” என்று முணகியபடியே கொடுத்தார்.ஆனால் பேண்ட் இடுப்பில் எல்லா தையல்களும் பிரித்துப் போட்டபடி இருந்தது.ஒன்றும் சொல்லாமல் வாங்கி வந்துவிட்டேன்.

ஏன் இந்த சோம்பேறித்தனம்/அசிரத்தை?

1. பழைய துணி எடுக்க மாட்டோம் என்று முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும்.(கூட்டம் அதிகம் கிடையாது)
2.பழைய துணி என்றால் ஒரு அகெளரவம்
3.அகெளரவத்தால் அலட்சியம்
4.அலட்சியத்தால் அசிரத்தை/சோம்பேறித்தனம்/
5.அதனால் டெலிவரி லேட்/வேலை அரைகுறை
6.இவரிடம் வேலை செய்யும் கூலி டெய்லர்கள் ஓனரை மதிக்காமை(பழைய துணி எடுத்ததால்).ஒனர் இதில் தெளிவாக இல்லை.

திருந்துங்கடா டேய்!

Thursday, October 6, 2011

எங்கேயும் எப்போதும்....

எங்கேயும் எப்போதும் - சினிமா விமர்சனம்

தமிழ் சினிமா வரலாற்றில் பட முடிவில் 99% “சுபம்” போட்டுத்தான் முடிப்பார்கள்.பொழுதுபோக்க வரும் வெகுஜனங்கள் அதைத்தான் விரும்புவார்கள்.மக்கள் விரும்பாத சோகத்தோடு முடித்தப் படங்களின்  கடைசிக் காட்சிகளை “சுபமாக” எடுத்து இணைத்து வெளியிட்டும் உள்ளார்கள்.

ரொம்ப வருடத்திற்க்குப் பிறகு சோகத்தோடு முடியும் அதுவும் முக்கியமாக ஸ்டார் ஆகிவிட்ட நடிகை/நடிகர்களை வைத்து சோகத்தோடு முடிப்பது தைரியம் வேண்டும். அது “எங்கேயும் எப்போதும்” படம்.

எங்கேயும் எப்போதும் நல்லதும் கெட்டதும் நடப்பதற்கு
வெயிட்டிங் லிஸ்டில் காத்துக்கொண்டிருக்கிறது.அன்னியராக நேருக்கு நேர் பழகிய தருணங்கள்  முடிந்து பிரிந்து  நினைவு பொதிகளாகி நெஞ்சத்தில் மிதந்து ஒரு ஓரத்தில் காதல் சாரல் அடிக்க ஆரம்பிக்கிறது அமுதாவிற்கும் கெளதமமுக்கும்.அதைச் சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் அவரவர் ஊரில் தேடி அலைந்து கிடைக்காமல் ஏமாந்து எதிரெதிர் திசையில் பஸ்ஸில் பயணிக்க, பஸ்கள்  நேருக்கு நேர் கோரமாக மோதி விபத்தாகி நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

 தவிர இவர்களுடன் பிரயாணம் செய்த மற்ற பிரயாணிகளின் கனவுகள் ஆசைகள் திட்டங்கள் கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் சின்னபின்னமாக்கிவிடுகிறது இந்த நேருக்கு நேர் மோதல் விபத்து.இதில் மற்றொரு காதல் ஜோடியும் அடக்கம்.

 
படத்தின் முக்கியமான விஷயம் கதையின் freshness.விபத்தின் பின்னணியில்  சொல்லப்பட்ட காதல் கதை.அதுவும் சென்னை பிசி ரோடில்இருவரும்
சர்வ சாதாரணமாக (அனன்யா /சர்வா) நடந்தபடி  பிரயாணித்தபடி கதையை நடத்திச் செல்வது இன்னும் fresh.அந்தப் பக்கம் திருச்சியில் அஞ்சலியும் ஜெய்யும்.

இடை இடையே வீடியோ கோச் பஸ் விர் விர்ரென்று நெடுஞ்சாலையில் பறப்பதைக் காட்டுவது speed படத்தை நினைவூட்டுகிறது.சாகும் தருவாயில் தன் காதலன் பெயரைத் தெரிந்துக்கொள்ள முனகி கேட்பதும் பிறகு கண்ணீர் துளி வழிவதும் ரொம்ப டச்சிங்.

சொல்ல வந்த விஷயத்தை சுவராசியமாக சொன்னாலே வெற்றிதான்.

முக்கிய பாத்திரங்களாக வரும் நான்குபேரும்
அனன்யா(அமுதா), அஞ்சலி(மணிமேகலை), ஜெய்(கதிரேசன்), கெளதம்(சர்வா) பின்னி இருக்கிறார்கள்.
முன் ஜாக்கிரதை முத்தம்மாக்களாக வரும் அஞ்சலி மற்றும் அனன்யா நடிப்பு அருமை.

Anjali has killing look. Ananya has சமத்துப் பெண் look.

படம் முடிந்து வீடு திரும்பிய பிறகும் நான்கு பேரும் நினைவில் சுழன்று சுழன்று அடிக்கிறார்கள்.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. விபத்தை முதலிலேயே cut shot மூலம் சொல்லாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தால் கிளைமாக்ஸில் தாக்கம் அதிகம் இருந்திருக்கும். உடல் உறுப்புக்களை தானம் செய்வதில் ஆர்வம் காட்டும் குணம் உள்ள  அஞ்சலி கதிரேசனின் சம்பளப் பணத்தை இப்படித் தண்ணீராக செலவு செய்வது நெருடுகிறது.

B.E. படித்த அமுதா (அனன்யா) ரொம்ப உஷாராக இருப்பது ஓவர்.

படத்தின் மிகப் பெரிய மைனஸ் பின்னணி இசை.